
“பாரதி விஜயம் “ என்ற நூலைப் பத்திரிகையாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் பதிப்பித்துள்ளார். இதில் பாரதியின் மனைவி (செல்லம்மா), இரு மகள்கள் (சகுந்தலா, தங்கம்மா), அவரது தம்பி (சி.விஸ்வநாத ஐயர்), அண்டை வீட்டார், நண்பர்கள், பாரதிதாசன், பாரதியை மாமா என்றழைக்கும் வ. உ. சி, தொழிற்சங்கத் தலைவர் சக்கரை செட்டியார், பாரதி ஓவியத்தை வரைந்த ஆர்யா, யதுகிரி அம்மாள், பத்திரிகை நடத்தியவர், அங்கு கடைநிலை பணியாளராக இருந்தவர், தம்பி என்று பாரதி அழைத்த பரலி.சு. நெல்லையப்பர் எனக் கிட்டத்தட்ட எழுபது பேர் பாரதி பற்றிய தமது நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். இவை 1926 முதல் 1982 வரை பல்வேறு காலகட்டங்களில், பல இதழ்களில் வெளிவந்தவை. இதன் மூலம் பாரதி குறித்த சரியான சித்திரத்தை நாம் பெறமுடியும். இது மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள். இதனை பாரதியின் அதிகாரப்பூர்வ வரலாற்று நூலாகக் கருதமுடியும்.
பாரதி ஒரு மிகச்சிறந்த பத்திரிகையாளர். உலக அளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை அவதானித்து உடனுக்குடன் அது குறித்துப் பத்திரிகைகளில் எழுதியவர். இந்தக் காலகட்டத்தில் இவர் வரவழைத்துப் படித்த பத்திரிகைகளைப் பார்த்தாலே இவருடைய ஞானம் நமக்குப் புலப்படும். ‘சுயராஜ்ய தினத்தை’ இவர் சென்னையில் 1908 -இல் கொண்டாடியவர். (அதே சமயம் வ.உ.சி. தூத்துக்குடியில் கொண்டாடுகிறார். இதற்கு 22 ஆண்டுகளுக்குப் பின்புதான், 1930 – இல் காங்கிரஸ் கட்சி சுயராஜ்யம் கோரி தீர்மானம் போடுகிறது.) சுதேசிக் கப்பல் விட்டதற்காகத் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் வ.உ.சி.யையும், சுப்பிரமணிய சிவாவையும் பாரதி சந்திக்கிறார். இவர்மீது ஆங்கிலேய அரசுக்குக் கோபம் வந்ததில் வியப்பில்லை. இதனையொட்டிய நிகழ்வுகளால் பாரதி பாண்டிச்சேரியில் பத்து ஆண்டுகள் தஞ்சம் அடைகிறார்.
பாரதியின் கவிதைகள் பற்றியும், அது உருவான சூழல் பற்றியும் பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு பழகிய, பேசிய, வேலை செய்த நபர்கள் வழியாகப் பாரதியின் முழுச் சித்திரத்தை நாம் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் நினைவுகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லியதில் தென்படும் பிழைகளைக் குறிப்பிட்டு, அதன் வழியாகப் பாரதியின் வரலாற்றைச் செம்மைப்படுத்தி இருக்கிறார் பதிப்பாசிரியர். மதுரை, பாண்டிச்சேரி, சென்னை, திருநெல்வேலி என பாரதி எங்கெல்லாம் இருந்தாரோ அங்கிருந்தெல்லாம் இவரைப் பற்றி யாராவது எழுதியிருக்கிறார்கள். கட்டுரையாளர்களின் சுயகுறிப்புகளை முப்பது பக்கங்களில் சுவையாகப் பிற்சேர்க்கையில் கொடுத்துள்ளார் ஆய்வாளரான கடற்கரய்.
பாரதியின் வரலாற்றை யாராவது ஒரே நூலில் கொண்டுவரலாம்.இதற்குப் பல்கலைக்கழகங்களோ, தமிழக அரசோ ஆவன செய்யவேண்டும். ஏனெனில் பாரதியின் வரலாற்று நூல் என்று தனியாக ஒன்று வந்ததாகத் தெரியவில்லை.
திருவல்லிக்கேணியில் மதம் பிடித்த யானை இவரைக் கீழே தள்ளியதால் இறந்துபோனார் என்றுதான் ஜனரஞ்சகமாக நம்பப்படுகிறது. யானை கீழே தள்ளிய ஓரிரு நாள்களில், தனது வேலைகளைப் பழையபடி பாரதியார் செய்ய ஆரம்பித்துவிட்டார். சில ஊர்களில் பிரசங்கமும் செய்திருக்கிறார். இது நடந்து சில மாதங்கள் கழித்துத்தான், அதாவது செப்டம்பர் மாதம் 12 ஆம் நாள்தான் (11 ஆம் நாள் அன்று, 12 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு) வயிற்றுக் கடுப்பின் காரணமாக இறந்திருக்கிறார். அவரது நண்பர் வற்புறுத்தியும் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்பது இந்த நூல் மூலம் தெரியவருகிறது. ‘யானை மிதித்து இறந்தார் என்று சொல்லுவது ஒரு புரட்டு’ என்று சொல்கிறார் பதிப்பாசிரியர்.
பாரதியின் சொந்தக்காரர்கள் திருநெல்வேலியில் இருக்கிறார்கள்; அவரது பத்திரிகை அலுவலகத்தில் இருந்தவர்களுக்குக்கூட அவர் இறந்தது தெரியாது; ஏனெனில் அப்போது தொலைபேசி வசதி இல்லை. அவர் இறந்தது தெரிந்து, அன்று மதியத்திற்கு மேல் அரைநாள் சுதேசமித்திரன் அலுவலகத்திற்கு விடுமுறை விடுகிறார்கள். அவர் பார்ப்பன ஜாதி என்பதால் உடனடியாக இறுதிச் சடங்கு செய்துவிடுகிறார்கள். இது தெரியாமல் அவரது ‘இறுதி ஊர்வலத்திற்குக் கூட்டம் வரவில்லை’, ‘தமிழில் பாடியவனை இந்தச் சமூகம் அங்கீகரிக்கவில்லை’ என்று முழங்குகிறார்கள்.
பாரதி நன்றாகச் சம்பாதித்து இருக்கிறார். அவர் பாண்டிச்சேரியில் இருக்கும்போது சுதேசமித்திரன் அலுவலகத்திலிருந்து மாதந்தோறும் 40 ரூபாய் பணம் வந்துகொண்டிருந்தது. அந்தக் காலத்தில் (1908-1918) இது நல்ல தொகை. அவருடைய பெருமை அறிந்து பலர், பல வழிகளிலும் உதவி புரிந்திருக்கிறார்கள். ஒரு முறை இவரது கவிதைக்காக ஜெர்மனியில் இருந்து 600 ரூபாய் வந்திருக்கிறது. ஆனால் இவர் பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வாரி வழங்குகிறார். இதுபோன்ற பல தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. இதைக் கதைபோலப் படிக்கலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். கடற்கரய்யின் நெடிய முன்னுரை (75 பக்கம்) அவரது உழைப்பைச் சொல்கிறது. இந்த ஆய்வாளர்மீது மரியாதை கொள்ளவைக்கிறது.
அனைத்தையும் ஒருங்கே பார்க்கும்போது பாரதியின் மனோபாவம் நமக்குத் தெரியவரும். கவிதை வேறு, வாழ்க்கை வேறு என அவன் வாழவில்லை. தன் மகளுக்குத் திருமணம் செய்விக்கப் போதிய வயது வரவேண்டும் என்கிறான்.
1035 பக்கங்கள் உள்ள இந்த நூலைப் பாரதி அன்பர்கள் எளிதாகப் படிக்க முடியும்.சுவாரசியமாக உள்ளது. இந்த நூலை வெளியிட்டதன் மூலம் சந்தியா பதிப்பகம் மகத்தான சேவை செய்துள்ளது.
இந்த நூல் அகராதியைப்போல பெரிதாக உள்ளது; கையில் எடுத்துச் செல்வதுபோல அடக்கமாக இருந்திருக்கலாம்.
“பலரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கடைவீதி நடுவே முஸ்லீம் கடையில் தேநீர் வாங்கி அருந்துவார்” என்று கூறுகிறார் இவரது சீடரான பாரதிதாசன்.
1907 ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைத் தலைவராக லஜபதிராயை தேர்வுசெய்யச் செய்வதற்காக, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அநேக பிரதிநிதிகளைக் கூட்டிக்கொண்டு, ஸ்பெஷல் ரயிலில் பாரதியோடு சென்ற அனுபவத்தை எழுதியுள்ளார் வ உ சி. அப்படியென்றால் காங்கிரஸ் மகாசபையின் போக்கை, அதாவது பிரிட்டிஷ் இந்தியாவின் போக்கை நிர்ணயம் செய்யும் சுக்கான்போலத் தமிழ்நாடு இருந்திருக்கிறது என்று நாம் பொருள் கொள்ளவேண்டும். வ.உ.சி.தான் பாரதிக்குத் துப்புக்கொடுத்து, சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்று வசிக்க ஆலோசனை சொன்னவர்.
பாண்டிச்சேரியில் இருந்து இந்தியா பத்திரிகையை வெளியிடுகிறார். என். நாகஸாமி போன்ற இளைஞர்கள் இதற்காகப் பாண்டி வந்து உழைக்கிறார்கள். பாண்டிச்சேரியில் இருந்தாலும் ஆங்கில ரகசியப் போலீசார் நெருக்கடி கொடுக்கிறார்கள். பிரெஞ்சு போலீசாருடன் சேர்ந்து என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதெல்லாம் காவல் துறையின் “நிறம் மாறாக் குணத்தைச்” சொல்லும்.
‘காங்கிரஸ் மகா சரித்திரத்தை முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்ததாக’ அவரது மகள் சகுந்தலா குறிப்பிடுகிறார். ‘கண்ணன் என் சேவகன்’ கவிதையில் வரும் குவளை கிருஷ்ணமாச்சாரியார் பாண்டிச்சேரியிலும் இருக்கிறார்; திருவல்லிக்கேணியிலும் பாரதியைப் பின்தொடர்கிறார்.
‘விவிலிய வேதத்தை நூதன முறையில் மொழிபெயர்க்க’ பாரதி உத்தேசித்து இருந்தார் என்கிறார் தொழிற்சங்கத் தலைவரான சக்கரை செட்டியார். நடு சாமத்தில் எழுப்பி உணர்ச்சியோடு கவிதை பாடிக் காரைக்குடி ரயிலைப் பிடிக்கச்சென்ற பாரதியைப் பற்றி நாமக்கல் கவிஞர் கூறுகிறார். கி.ஆ.பெ. பாரதியைத் திருச்சியில் சந்தித்ததாகச் சொன்னதும் அதிலுள்ள முரண்பாடுகளைச் சொல்லும் கட்டுரையும் இதில் உண்டு.
பாரதியாரால் உபநயனம் செய்விக்கப்பட்டு, மெஸொபொடேமியாவில் இராணுவச் சேவைக்குச் சென்ற ரா. கனகலிங்கம், தன் சாதியாராலும் பார்ப்பன சாதியாராலும் ஏற்றுக்கொள்ளப்படாத கதையைச் சொல்லுகிறார்.
பாரதியைப் பற்றி அனைவரும் எழுதியிருப்பதால் சில சமயங்களில் ‘கூறியது கூறல்’ வருகிறது. இது தவிர்க்க இயலாதது. பாரதி அன்பர்கள் தமது அனுபவத்திற்கு ஏற்பப் பொருள் கொள்ளமுடியும். நூலைப் படித்தபின்பு, கடற்கரய்யின் முன்னுரையை மீண்டும் படிக்கவேண்டும்.
***
புத்தக விவரம்:
பாரதி விஜயம்
ஆசிரியர்: கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
சந்தியா பதிப்பகம்
1035 பக்கங்கள்
நல்ல ஒரு நூலறிமுகக் கட்டுரை. வாழ்த்துக்கள்.