பாண்டி(த்ய)ஆட்டம்

‘பாண்டியாட்டம்’ – புத்தக வாசிப்பு அனுபவம்

பாண்டியாட்டம் நம்பி கிருஷ்ணன் கட்டுரைகள் பதாகை-யாவரும் வெளியீடு

சிறு வயதில் பகல் நேரப் பேருந்துப் பயணங்களில் தொலைவில் தெரியும் மலைகளை ஏறிக் கடப்பது சுலபம் எனத் தோன்றியிருக்கிறது. அருகே  நெருங்க நெருங்க பிரமிப்புத் தட்டும். இப்போதும் அதே மனநிலைதான்.

கவிச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படும் கம்பரே இராம காதையில், தம்மைப் பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனையுடன் ஒப்பிட்டுக் கொண்டார் என்றால் நான் எம்மாத்திரம்? நம்பி கிருஷ்ணன் முன்னுரையில், “I am no prophet – and here’s no great matter” என்று எலியட்டை அழைத்து வந்தாலும், இக்கட்டுரைகள்  சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந்த நூற்றாண்டிலும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தந்த அமெரிக்க ஆங்கில இலக்கியங்களைப் பற்றிய நல்ல அறிமுகத்தையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் தருகின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை. கட்டுரைகளில் பொறிகள் அமைத்து அதன்மூலம் வாசகர் அந்தந்த ஆசிரியரை நாடவேண்டும் எனும் கருத்துடன் சுவாரஸ்யமான ஒரு வலைப் பின்னலைப் பார்க்கிறோம். யாரைப் பற்றி இவர் எழுதுகிறாரோ அவரது பாணியும் அதில் இடம்பெறுவதால், நாம் பல்வேறு வகைமைகளை, ஓர் ஆரத்தில் கோர்த்த நவரத்தினங்களைப்போல் கண்டு பரவசமடைகிறோம்.

பாப்லோ நெரூதா, இவருக்கு  மேற்கோளின் மூலம் அறிமுகப்படுத்திய கொர்த்தாஸாருடன் துவங்குகிறது பாண்டி ஆட்டம். நாமனைவரும் கொர்த்தாஸாரை  வாசித்து முதுமை எய்த வேண்டுமாம்! யதார்த்தத்தின் மெய்யான ஆய்வு என்பது அதன் விதிகளை அறிவதன்று, விலக்குகளை அறிவதே என்ற நம்பிக்கைதான், அவரை, இயல்பாக நடப்பவைகளைச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அசாதாரணமான ஒன்றை இயல்பாகவே அமைத்துக் கதைகளை நடத்த வைத்திருக்கிறது. இதன் எடுத்துக்காட்டாக அவரது Southern Thruway என்ற கதையைப் பற்றி நம்பி கிருஷ்ணன் எழுதுகிறார். மேலும் சில சிறுகதைகளைப் பற்றியும் நாவலைக் குறிப்பிட்டும் வந்திருக்கும் கட்டுரையில் போர்ஹெஸ் சொன்ன சுவைகூட்டும் இந்த வாக்கியம்: “காலம்- நாம் எதைக்கொண்டு படைக்கப்பட்டிருக்கிறோமோ அதனுடன் இவர் விளையாடுகிறார்.”

சொற்களுடன் அன்பும் பதிந்த அந்தப் புத்தகத்தின் முன்னட்டையின் மறைவில் இருக்கும் அந்த ஜீவ சொற்களைத் தனக்கெனப் பெற்றவர்கள் அதிர்ஷ்டமிக்கவர்கள்; அது பிறழ்காமமென உணரப்பட்டால் அப்படித்தான் இருக்கட்டுமே! ஆசை, தனக்கென்று தனித்துவம் கொண்ட முரணணிகளை அணிந்துகொள்ளும். ‘வாசிப்பின் லட்டைட்டிய இன்பங்கள்’ என்ற கட்டுரை புத்தகத் தொடுகையைப் பற்றிப் பரவசமாகப் பேசுகிறது. புத்தகம் கண்களைப் பரவசப்படுத்தி, அதன் பிரத்யேக வாசனையை உணர்த்தி, விரல்களால் வருடப்பட்டு நெஞ்சோடு அணைக்கப்படும் அனுபவத்தை நாம் அடைந்திருப்போம்; பாவம், காதுகள். பாடப் புத்தகங்கள் இதில் சேராது! இக்கட்டுரையில் எத்தனை எழுத்தாளர்களைப் பற்றி இவர் சொல்கிறார் – போர்ஹெஸ், மார்கேஸ், அக்டாவியோ பாஸ், வில்லியம் காஸ், ஹெலன் ஹான்ஃப், எலியாஸ் கனெட்டி, உம்பர்ட்டோ எக்கோ, போதலேர். இக்கட்டுரையில் நம்மைப் புரட்டிப்போடுவது புத்தகங்களை அழிக்கும் மனோபாவம். உயிரற்ற புத்தகங்களுக்கு வலியிருக்காது என்பதற்கு என்ன ஆதாரம்? ஏனோ, யாழ்ப்பாணத்தில் தீயிட்டு அழிக்கப்பட்ட புத்தகங்களைப் பற்றி இக்கட்டுரை குறிப்பிடவில்லை.

தன்னுடைய பாதாள உலகத்தைத் திறந்து அதில் நம்மைச் செலுத்தும் தாஸ்தயெவ்ஸ்கி பகுத்தறிவு, அகங்காரத்தின் இதயமான நாத்திகம், பயன் தகவுடைமை என்ற மூன்றின் கலவைகளைக்கொண்டு தன் அடிப்படைகளை அமைக்கிறார். கட்டுரையாளர் The Demons  குறித்து எழுதியுள்ள விதம் நம்மை அலைக்கழிக்கிறது – அந்த பயங்கர வசீகரமான உண்மை நம்மை ஏய்த்துக்கொண்டே ஈர்க்கிறது; ஆன்ம அக்கறையின்மையோ அல்லது ஆன்ம இன்மையோ, எதுவாயினும், இறை நம்பிக்கையை இழப்பினும் சாத்தானின் இருப்பை நம்பக்கூடும்; என்னிலிருந்து பெருக்கெடுத்தது என்ன இன்மையா அல்லது அதுவும் இல்லையா? மனதின் சந்து பொந்துகளில் புகுந்து, பாத்திரப் படைப்புகளில்  அது நான்தானோ என்று நம்மைப் பற்றி நாம் பார்க்க விரும்பாத கோணத்தில் வீசும் சாட்டையடிகள். அதிலும் நம் ஈடுபாடுதான் அதி விசித்திரம். அந்தப் பார்வையைத் திறம்படத் தருகிறது இக்கட்டுரை.

ஒரு மையம், பல வட்டங்கள், அவை ஒன்றையொன்று சந்திக்கும் பகுதிகளில் இருப்பது அதன் பிரத்யேக வண்ணங்களா, மற்றொன்றின் தொடர் நிகழ்வா? அத்தனை வட்டங்களையும் தன்னுள் கொள்ளும்  பின்ச்சனிய வட்டம் என்ன சொல்கிறது? காஃப்காவைத் துணை கொள்கிறது. புண்ணியம், பாவம் என்ற இருமைகளைத் தவிர மறக்கப்பட்டவர்களின் கதியை, வரையறை செய்யப்படாத எதிர்காலம் கொண்டவர்களைப் பொருட்டெனக் கொள்கிறது; இதில் இரு நிலைகள் – அதிகாரம் இவர்களைக் கண்டுகொள்ளாது; எனவே அறியாமையின் ஆனந்தத்தில் திளைக்கலாம்; தேடிச் சோறு நிதம் தின்று வேடிக்கை மனிதர்களாக வாழலாம்; இது தன் அடையாளங்கள் இல்லாமல் செய்துவிடும். நம் ஆளுமையை இழக்க நேரிட்டுவிடும். கிராவிட்டிஸ் ரெயின்போ பற்றிய இந்தப் பதிவு அதைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

க்ரையிங் ஆஃப் லாட் 49ன் கதாநாயகி ஈடிபா, மாக்ஸ்வெல் பூதத்தின் புனைவுலக உருவம் என்பது எவ்வளவு சுவாரஸ்யம்! அறிவியலின் விதிகளுடன் ஒரு ட்ரெஷர் ஹன்ட் அல்லது மாயமான் வேட்டை. ஆனாலும், அவள் இறுதிப் போராட்டம் வரை செல்கிறாள்; லாட் 49-ன் ஏலத்திற்காகக் காத்திருக்கிறாள்.

சால் பெல்லோவின் குறும் படைப்புகளைப் பற்றிய கட்டுரை டி. எஸ். எலியட்டின் அருமையான வரிகளோடுத் தொடங்குகிறது.

‘உறக்கத்தில் இருக்கும் வேர்களை
வசந்தத்தின் மழை உயிர்ப்பிக்க,
மலட்டு மண்ணிலிருந்து
நினைவுகளையும், ஆசைகளையும் கலந்து
இளமூதாக்கள்…’

பின்புறத் தகவல்களின் நிழலும் நிஜமும் கலந்த தோற்றம் ‘Zetland: By a Character Witness’ சில் வரையப்படுகிறது. மேகத்தில் முகம் புதைத்துக்கொண்ட ஐசாக், பெல்லோவின் நட்பு வட்டத்தில் முக்கியமானவர். இன்றும்கூட மிக எதிர்பார்ப்புகள் கொடுப்பவர், காலத்தின் பிடியில் ஒன்றுமற்றுப் போவதைப் பார்க்கிறோம்; புல்லாங்குழல் மாலி – இன்னுமே அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கக்கூடும் அல்லவா? சில அரசியல்வாதிகள் நினைவிற்கு வருகிறார்கள் – ஆனால், சொல்லப்போவதில்லை. பெல்லோவின் எழுத்து நிஜ மனிதர்களைக் காட்டுவதில் வெற்றிபெறுகிறது. நம் இயக்குனர் கே. பாலசந்தர், மீண்டும் மீண்டும் அறிவு ஈடாக இல்லாத துணைகள் வேறொன்றைத் தேடும் அவஸ்தையை வெவ்வேறு படங்களில் வெவ்வேறு விதமாகக் காட்டிக்கொண்டிருந்தார். வாழ்க்கையின் விபரீத நகைப்பென்றுதான் சொல்லவேண்டும். இறந்து பிறக்கும் பூனைக் குட்டிகள், அதற்கான குமுறலும் அழுகையும் – இது வானில் பிடிக்கும் வேர். அதை அப்புறப்படுத்தும் யதார்த்தம் மண்ணின் வேர். வேறென்ன சொல்ல? Seize the Day பற்றி கட்டுரை தெளிவாகப் பேசுகிறது. பெரும்பாலும் அறிவிற்கும் உணர்விற்குமான இழுபறிகள். வாழ்வு ஒரு தொழில்; அதில் தனக்கே உரிய ஆன்மாவின் சுமையைத் தாங்குவது என்பதை அறிபவன் மாறுபட்டவன்தான். பெல்லோ உடல் உருவைச் சித்திரிக்கும் விதத்தை நம்பி கிருஷ்ணன் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார் – புதர் போன்ற புருவங்கள் – அறிவுத் தருவில் பிறந்த கம்பளிப் பூச்சிகள் போலிருந்தன. மரணம் என்பது எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட தொடர் வரிசையின் பல பதங்களில் ஒன்றே. ‘டாங்க்லிங் மேன்’, ‘விக்டிம்’, ‘த அட்வெஞ்சர்ஸ் ஆஃப் ஆகி மார்ச்’ பற்றிய இவரது கருத்துக்கள் படித்து உணரப்படவேண்டியவை. ‘ஹெர்ஸாக்’ நாவலின் முழுமை இந்த வரிகளில் கிடைத்துவிடுகிறது – “வாழ்வின் முட்களில் வீழ்தல்.” திரும்பத் திரும்பத் தொடர்ந்து அத்தனை காயப்பட்டபின் வரும் “அந்த அழகின் எதிர்பாராத அத்து மீறல்.”  ‘மிஸ்டர் சாம்லர்ஸ் பிளானெட்’ நாவல் சொல்லும் அந்த வாக்கியம் என்னை மிகவும் கவர்ந்தது – கலாசாரம், வரலாறு போன்றவை அளிக்கும் உதவி இல்லாமல், இருப்பின் மதிப்பு சுயமானது, அது நாமறிந்தது. ‘ஹம்போல்ட்ஸ் கிஃப்ட்’, ‘ராவல்ஸ்டீன்’ நாவல்கள் பற்றிச் சுவையான அறிமுகமும் கிடைக்கிறது. கட்டுரையின் இறுதியில், ஓர் இளம் பெண்ணின் பாவத்தில் இவர் எழுதியிருக்கும் கடிதம்  பெல்லோ என்னும் எழுத்தாள மனிதரைச் சரியாகப் படம்பிடிக்கிறது. இளம் பெண்ணின் கையைக்கொண்டு வலிக்காமல் குட்டியிருக்கிறார்.

வெளியினூடு ஓர் உடலாய், காலத்தினூடு ஒரு மனமாய் விரைபவன், வெனிஸ்சுக்கும் டாஞ்சியர்ஸுக்கும் ட்ரியெஸ்டேவுக்கும் அல்ஜியர்சுக்கும் ஜெருசலத்துக்கும் பார்சிலோனாவுக்கும் பெய்ரூட்டுக்கும் இன்னும் பல இடங்களுக்குப் பயணிப்பதும் மீலானிலிருந்து ரோம் பயணிப்பதும் ஒன்றென்பதுபோல் பூகோள வம்புகளாய் வரலாற்றைப் பேசும் மத்தியஸ் எனார் அமைத்த தொடர் வண்டியைப் பற்றிய கட்டுரை. எல்லோருக்கும் எப்போதும் நிகழும் காலமின்மை ஜோன் ஆக உருவெடுத்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள மோதல் இந்த நாவலில் 517 பக்கங்களில் மனவோட்டமாகக் காட்டப்படுகிறது. ஒற்றை வாக்கிய நாவல், முற்றுப்புள்ளியே இல்லை! வரலாறு என்பது காலம் சார்ந்தது இல்லை, வெளி சார்ந்தது எனச்சொன்ன நாவல். இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள பேட்டியில் ‘Twelfth Night’  வரிகள் இடம் பெற்றுள்ளது ஓர் அற்புதம். எனாரைப் படிக்கிறோமோ இல்லையோ, இக்கட்டுரையை அது சுட்டும் செய்திகளுக்காக, பட்டியில் பிணைக்கப்பட்ட அந்தக் கைப்பெட்டிக்காக, தொடர் நினைவுகளில் இடம்பெறும் தனி மனிதனுக்காகப் படிக்க வேண்டும்.

பாஸ்டனைப் பார்க்காவிட்டால் என்ன? பிறழ்வச்சத்தின் ஆரங்களைப் படித்தாலே போதும். டான் டலிலோ தன் ‘அண்டர்வர்ல்ட்’ டில் ‘உலகெங்கும் ஒலித்த ஷாட்’ டைக் காட்டுகிறார். நமக்கு 1983-ல் நாம் முதன் முறையாக கிரிக்கெட்டில் வென்ற உலகக் கோப்பை நினைவிற்கு வருகிறது. அரசியலும் அழகியலும்  சொல்லப்படுகின்றன. இதில் அற்புதமாகவும், ஆழச் சிந்திக்கச் சொல்லியும் ஒரு காட்சி வருகிறது. மைதானத்தில் கடலை விற்கும் ஒரு கறுப்பரின் வருகையால் “இனம் தெரியாத அச்சுறுத்தல்” ஒன்றின் உணர்வுபெற்று, கடலை விற்பவர் வரும்வரை தான் புலப்படாமல் இருந்தது குறித்தும், அவர்களின் ‘பொது நிறம்’ அவர்களுக்கு இடையே இருந்த வெளியைத் தாவிக் கடந்தது எவ்வாறு என்றும் அவன் சிந்திக்கிறான். பொது வெளியில், ஒரு நிகழ்வில், அனைவருடன் பங்கேற்கச் செல்கையில் உடல் தோற்றத்தினால் மருகி, தன்னை இடைவெளியில் புதைத்துக் கொள்பவர், தன்னைப் போன்ற மற்றவரைக் காணும்போது அடையும் உணர்வுகள் நாம் அறிந்தவைதானே? கதாநாயகனான நிக் கழிவுப் பொருட்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவன். அதற்கு மிகச் சிறப்பளித்துப் போற்றுகிறான். ஆம், உண்மைதான்; நாம் மேம்போக்காக நிராகரித்தவைகள் அதீத மேன்மையுடன் திரும்புகின்றன.

ஜார்ஜ் பெரெக்கின் நாவல்களைப் பற்றி பிறகு பார்க்கலாம் நாம். நம்பியின் நூலகம் குறித்த விவரணை நம்மை மயக்கத்தில் ஆழ்த்துகிறது – ஐகியா புக் கேஸ், கிடைக்கும் இடங்களிலெல்லாம் அமரும் புத்தகங்கள், அறிவியல், நகைச்சுவை, ட்ராஜிடிஸ், ஐரோப்பிய புனைவுகள், தமிழ் இலக்கியப் புத்தகங்கள்; கோயில்போல ஒரு வாசிப்பறை, அதில் கண்ணுறும் பல தெய்வங்களைப்போலப் பல புத்தகங்கள்.

பெரெக்கின் இரு நாவல்களை இதில் இவர் எடுத்துக்கொள்கிறார் – ‘திங்க்ஸ்’ மற்றும் ‘எ மேன் அஸ்லீப்’. தொன்மத்தினால் ஆட்டுவிக்கப்பட்ட நுகர்வு; நுகர்வுக் கலாசாரங்கள் இயல்பில் உள்ளபடியே  நம்மை ஓர் அதிருப்தியில் வைத்துவிடுகின்றன. ஆனாலும் அது பெரும் ஈர்ப்பு விசை கொண்டது. ‘திங்க்ஸ்’ நுகர்வுக் கலாசாரத்தைப் ‘பார்த்’தின் கோணத்தில் அரவணைக்கிறது. இடைவிடாத நுகர்வு அழைப்பால், அசூயைப்பட்டு விலகும் கதா நாயகன் ‘எ மேன் அஸ்லீப்’பில் வருகிறான். ‘திங்க்ஸ்’, ஆசைகளுக்கு அடங்காத குறுகிய வெளியில் தொடங்கி, ஆசைகளால் நிறைவுறாத வெளியில் வந்து அயர்கிறார்கள் மனிதர்கள் என்று காட்டுகிறது; ‘எ மேன் அஸ்லீப்’ கால வெளியை ஏற்றுக்கொள்ளாமல் இதே அயர்ச்சியில் வந்து நிற்பவரைச் சொல்கிறது. தொலை நினைவுகளின் ஈரமற்ற வாசம்தான் – வெறுமையை வகைப்படுத்துவது வேறு எவ்விதம்? ‘W’ Or The Memory of Childhood – இந்த நாவலைப் பற்றி ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால், ‘x’ என்பது அறியப்படாததென்றால், தன் இழந்த அடையாளத்தை நாவலைக்கொண்டு மீட்டெடுக்கும் முயற்சிதான் அது; ‘x’ னுள் ‘W’ வைப் பொருத்தும் புதிர் விளையாட்டு. பெரெக் சொல்கிறார்: ‘ ஒரு நாவலை அணுகச் சிறந்த வழி அதை ஒரு புதிர்போல் எடுத்துக்கொண்டு அதனுடன் விளையாடுவதாகும்.’

எதை உன்னதம் என்போம்? அது மனதிற்கினிய உயர்ந்த பொருளா அல்லது எட்மண்ட் பர்க் சொல்வதுபோல் இருண்மையான, நிலையற்ற பயங்கரமா? அது ஃபிராய்டின் உளப் பகுப்பாய்வியலில் ‘உன்னதமயமாக்கம்’ என்று ஆகிவிட்டதா? இந்த கேள்விகளுடன் நம்பி கிருஷ்ணன் பாரதியை ‘பேயவள் காண் எங்கள் அன்னை’ என்று இணைக்கிறார். அப்படியாகப்பட்ட உன்னதம் ஸ்டீவென்ஸ்சுக்கு ஆத்மாவில் இறங்கி வருகிறது. ‘தன்னளவில் ஒன்றுமில்லாதவன், சொற்ப இலைகளின் ஓசையில் எந்தத் துயரையும் நினையாதொழிய, அங்கில்லாதது ஒன்றுமில்லை, உள்ளது இல்லாதது’. வாலஸ் ஸ்டீவென்ஸ் கட்டுரையில் பாரதி, ஷெல்லி, கீட்ஸ், விட்மன், குறுந்தொகை, ரிக் வேதம் அனைவரும் பொருத்தமாக இடம்பெறுகிறார்கள். விதியின் இயற்கைச் சுழற்சியைத் தலைகீழாக்கும் உன்னதம் காணக்கிடைக்கிறது.

தன் பெயரைச்சொல்லி அறிமுகமாகும் ரூத் என்ன சொல்லவருகிறார்? தன் பெயரை எவரும் அழைப்பதில்லை என்றா? விவிலியம், 19-ம் நூற்றாண்டின் அமெரிக்க இலக்கியம் முதலியவற்றை எளிதாகக் கையாண்டு ஆண்-மைய மரபுகளைக் கவிழ்த்துப் பெண்-மைய நோக்காக மாற்றும் மரிலின் ராபின்சனின் ‘ஹவுஸ் கீப்பிங்’ பற்றி சிலாகிக்கிறது இந்தக் கட்டுரை. இழப்பின் மீதான தியானங்கள் அவரவர் வழிகளில். இல்லாமையை ஒரு முழுமையான இருப்பாய்க் கற்பனை செய்வது மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.

‘தேவையென்பது அதற்குகந்த அத்தனையும் ஈடளிப்பதாய் மலரலாம். பொருளும் அதன் நிழலும் போன்றவை வேட்டலும் கொள்ளலும்.’ வீட்டைவிட்டு வெளியேறுதல்  என்பதும் வீட்டைச் சுமந்து அலைவதுதானோ அல்லது வீடு பேறடைவதோ?

வி.எஸ். நைபாலைப் பற்றி ஆங்கில நூல்களைப் படிக்கும் இந்தியர் பலரே முழுதும் அறிந்திருக்கவில்லை. இதுகூட ‘எ வே இன் த வர்ல்ட்’தான். நதிகளில் வளைவுகள் இல்லையெனில் அது இயல்பாக இருக்குமா? அறிவுத் தனிமை, சாதிப்பதற்குத் தேவையெனத்தான் தோன்றுகிறது. நாவலின் கதாநாயகன் சொல்கிறான்: ‘அறிவுக்கு அறிவு சேர்க்க வேண்டும், என்னைக்கொண்டு உருப்படியாய் ஏதோ ஒன்று செய்திருக்க வேண்டும்.’ ஆனால், கனவுகள் செயல்களாக அனைவருக்கும் உருவெடுக்குமெனில், உலகில் காவியங்களுக்கு இடமில்லை. நைபால், உலகம் கண்டுகொள்ளாத இடத்தில் இருக்கும் கண்டுகொள்ளப்படாத மக்கள் திரளை முன்னிலைப்படுத்தியவர். செறிவான இரட்டைப் பார்வையை உணர்த்தக்கூடியவர். இந்தக் கட்டுரை  நினைவுகளால் பின்னப்பட்ட ஊஞ்சல். ஆற்றோர மர ஊஞ்சலோ, வீட்டுக் கூடத்தின் சங்கிலி தரித்த ஊஞ்சலோ, தங்கும் விடுதிகளின் வலை ஊஞ்சலோ, ஆகாயப் பந்தலின் பொன் ஊஞ்சலோ, அவரவர் நினைவின்படி ஆடலாம்.

ஒரு நாவலின் சாத்தியங்கள் என்னென்ன? அதற்குக் குறிப்பிட்ட இலக்கு, வழி எல்லாம் இருக்கிறதா? பார்த் 1980-இன் பிப்ரவரி மாதத்தில் ஒரு வேன் மோதி தூக்கி வீசப்படுகிறார். இந்த விபத்தை விசாரிக்கும் ஜாக் பெயா என்ற உளவுத்துறை அதிகாரி, செமியாலஜி விரிவுரையாளரான சிமோன் ஹெர்ஸாக்கின் உதவியை நாடுகிறார். பார்த் மரணமடைகையில் கையில் வைத்திருந்த மர்ம ஆவணம் ஏழாவது  மொழிச் செயற்பாடு குறித்துச் சிந்தனையைக் கிளறுகிறது. பிரெஞ்ச் விமர்சன மரபின் பலர் இதில் பாத்திரங்களாக இடம் பெறுகிறார்கள். மிகப் பரபரப்பாக, நகைச்சுவை கலந்து பரிமாறப்பட்ட விருந்து என இந்த நாவலைச் சொல்லலாம். இதை எழுதும்போது (அசட்டுத்தனம்தான்- ஆனால், அதுவும் என்னில் ஒரு பகுதிதானே – ஜூன் 10,2019-ல் பதாகை வெளியிட்ட ‘இறுகின முடிச்சு’ என்ற சிறுகதையில் ‘அந்நியனின்’ (ஆல்பெர் காம்யு) அன்னையும், ‘மெர்சோ: மறுவிசாரணை’யின் (காமெல் தாவுத்) அன்னையும் சந்தித்து அந்தக் கொலைகளைப் பற்றியும், தம் மகன்களைப் பற்றியும் உரையாடுவதாகக் கற்பனையில் அந்த நாவல்களின் வாக்கியங்களைப் பெரும்பாலும் கையாண்டே எழுதியிருந்தேன்.)

ப்ராஸ்ட்டின் ‘த ரோட் நாட் டேக்கன்’ பார்த்தின் மேற்கோளைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறது இக்கட்டுரை. ஆசிரியன் நாசமாகப் போகட்டும், பிரதி மட்டுமே நீடிக்கும். ரொபெர்த்தோ பொலான்யோ நினைவிற்கு வருகிறார். ஒரு சிறு கவிதை, வாசிப்பில் வாதனைகள் நிகழ்த்தும் அத்தனையையும் நம்பி கிருஷ்ணன் திறம்பட இதில் சுட்டியுள்ளார். புற்கள் செழித்துச் சிதையாத ஒரு பாதை, மற்றொன்றும் அதே போன்று பாதம் படாத இலைகளால் மூடப்பட்ட ஒன்று; கடந்த காலத்தைப் பெருமூச்சுடன் எதிர் காலத்தில் பார்ப்பது எனக் கவிதையை வாசிக்கலாம்; வேறொரு பாதையைத் தேர்வு செய்திருந்தால் எந்த வாதையைத் தவிர்த்திருக்கலாம் என்பது  ஏக்கமாகப் பரிணமிக்கலாம். இங்கு மிகப் பொருத்தமாக விஜய் நம்பீசனின் கவிதை இடம்பெறுகிறது – ‘எங்கு வேண்டப்படவில்லை என்பதை அறிந்து  நம் வேண்டப்படாமையை வேறெங்கோ எடுத்துச் செல்ல.’

ஸீபால்டை ஏழு பகுதிகளாகப் பிரித்துத் தொடர்புப்படுத்திச் சொல்லும் அபாரமான கட்டுரை இது. உன்னதமான இலக்கிய முயற்சியென்பது எப்படி இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலாக ஸீபால்டைச் சொல்ல, நம்பி கிருஷ்ணன் ‘வெர்டிகோ’ நாவலைப் படிக்கத் தொடங்குவதே புனைவின் அழகோடு இருக்கிறது. பின்னர் பியானோவில்  இவரது மகன் வாசிக்கும் கிளாசிக்கல் இசை, கே. வி. நாராயணசாமியும், எம்.எஸ். அனந்தராமனும் இணைந்து வழங்கிய ஆரபியின் சுகமான நினைவுகளைக் கொண்டுவருகிறது. ஊடாக பாரன்போயிம் (பியானோ கலைஞர்), அவரது மனைவி ஜாக்லின் டூப்ரே (செல்லோ கலைஞர்) வாழ்வும் இசையும் அது தரும் ஞானமும் சொல்லப்படுகிறது. ஆர்ச் டியூக் டிரையோபோல வெர்டிகோவும் ஒரு ட்ரியோ என அறிகிறோம். ஸீபால்ட்டை ஒத்த கதைசொல்பவர், ஸ்தெண்டால், ஃப்ரான்ஸ் காஃப்கா ஆகியோர்தான் அந்த மூவர்.  நினைவின் திரிதலும், அது செய்யும் இருட்டடிப்பும் ஸ்தெண்டால் பாத்திரத்தால் கிட்டுகிறது. ஆயிரக்கணக்கான உப்புப் படிகங்கள்  கொண்ட மரக்குச்சி, ஆன்மச் சுரங்கத்தில் காதலின் வளர்ச்சிக்கான படிமமெனக் காட்டப்படுகிறது. கால ஓட்டத்தின்மீது சாய்ந்துகொண்டு எண்ணும் என்ணம், தாழச் சரிந்திருக்கும் நிலம், கடற்புறக் காட்சியென உருமாறுகிறது. மொழி, தன் கட்டுப்பாட்டினை விட்டுவிட்டால் வெளிப்படும் அழகும் சொல்லப்படுகிறது. நகலிப்பவை, நிஜத்துடன் பொருந்தி, நாம் கனவுகளில் பரிச்சியப்படுத்திக் கொண்டவற்றைப் பெருக்கித் தலைசுற்ற வைப்பது வெர்டிகோ எனச் சொல்லலாம். கடந்த காலங்களைத் தன்னளவில் மீட்டெடுக்க மீட்டெடுக்க அவற்றின் புதிர்கள் கூடிக்கொண்டே போகின்றன.

ஸீபால்டின் பிரதிபலிக்கும் வளையங்களைச் சுற்றித் தாமஸ் ப்ரெளனின் வளையங்கள் சுழல்வதாக ஆரம்பிக்கிறார் கட்டுரையாசிரியர். மீள் சுழற்சியின் விதியெனத் துவங்கிய இடத்திலியே நாவல் முடிவுக்கும் வருகிறது. தொலைந்துபோவதின் ஆசை, இடையறாது பயிலும் நடையில் உள்ளீடாகக் காணப்படுகிறது. பிரதிப்படுத்தாமல் எவ்வாறு நிதர்சனத்தின் உண்மையை தக்க வைத்துக்கொள்ள முடியும்? ஆனாலும், உருக் குலையும் கண்ணாடிகள்!

இந்தக் கட்டுரைத் தொகுப்பு நமக்கு அறிமுகம் செய்யும் எழுத்தாளர்கள் பலர். அவர்களைப் பற்றிய சித்திரத்துடன், நாம் கட்டுரையாளர் பற்றிய சில செய்திகளையும் அறிகிறோம். இலக்கிய தாகம் மிகுந்த நகுல் வசன், இளமையின் பொக்கிஷமென ராதையை நினைக்கும் கண்ணன், சகோதரியைப் பற்றிச் சொல்கையில் சுபத்ராவின் அண்ணன், மகனின் இசையில் ஆழும் தசரதன், தேன்நிலவுக் காலத்தில் படித்த நைபாலை மனைவிக்கு நினைவூட்டி அதன் சுவையில் புன்னகைக்கும் கணவன்;

பெரும் வாக்கியங்களை அமைத்து உரைநடையில் ஒரு சிடுக்கை அமைக்கிறார் என்பது மட்டுமில்லை, நாம் புரிந்துகொள்ள அதில் வழியும் அமைக்கிறார் இவர்.

“புனைவின் மாயமும் மோகமும் அதன் இறுதி முடிவுகளின் மயக்கத்துக்குக் கொண்டுசெல்லாமல், மெய்மையின் போதம் ஒரு வசீகரமாய், இருப்பின் உன்னதம் ஒரு வசியமாய், எங்கோ தொலைவில் ஒளிர்ந்து கொண்டிருப்பதை தரிசனமாய் அளிப்பதெனில், அது நுண்மைகள் நிறந்திருக்கும், பன்மைகள் மிகுந்திருக்கும், பிறிதறியாத அணைப்புக் கொண்டிருக்கும்; அதன் அனுபவ உண்மைகள் அரைக்கணம் மட்டுமே மெய்யெனினும் தற்காலிகத் திறப்புகளையும் நித்தியமாக்கும்.” இக்கட்டுரைகளைப் பற்றி ந.பாஸ்கர் சொன்னதைவிட வேறென்ன சொல்ல வேண்டும்? சிறந்த கோட்டோவியங்கள் ( ஓவியர் கோவை ஜீவா) அறிவிற்கு அழகும் சேர்க்கின்றன. பதிப்பகத்தாருக்கு ஒரு வேண்டுகோள்: இரு முறை புரட்டினாலே தாள்கள் பிரிந்து வந்துவிடுகின்றன. சற்றுக் கவனிக்கவும்.

3 Replies to “பாண்டி(த்ய)ஆட்டம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.