தமிழில்: உத்ரா
இங்கிலிஷ் மூலம்: ரேச்செல் டொனாடியோ
[மூலம்: த அட்லாண்டிக் பத்திரிகையில் வந்த கட்டுரை]

இதாலியின் கால் பெருவிரலெனப் புவியியல் ரீதியாக அமைந்திருக்கும் காலாப்றியாவில் (Calabria) 1970 –ல் கட்டப்பட்ட லமேசியா டெர்மி (Lamezia Terme) அழகில்லாமல் இருக்கிறது. வட்டப் பெரும் ஜல்லிகள்கொண்ட சிமென்ட் முகப்பு, இதமற்ற நடைபாதை, முடிவுறாத ஒரு கோபுரம், விளம்பரப் பதாகை எனச் சலிப்பைக் கொடுக்கிறது. மையக் காலாப்றியாவின் நெடுங்குன்றில் கதன் ஸாரோ (Catanzaro) என்ற நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றும் நிகோலோ கிராட்டேரியைச் (Nicola Gratteri) சந்திக்க வந்துள்ளேன். முப்பது ஆண்டுகளாக இதாலியின் சக்தி மிகுந்த, செல்வம் நிறைந்த, இரகசிய குற்றக் குழுவான ‘இண்ட்ராங்கெட்டா’வின் (‘Ndrangheta- இனி ‘N’ என்று குறிப்பிடுவோம்) குற்றச் செயல்களுக்கு எதிராகச் சளைக்காமல் போராடுபவர் இவர். நகைமுரணாக, அந்த அமைப்பின் பெயர் ‘கௌரவ மனிதர்கள்’ எனப் பொருள்படும்.
‘காட்ஃபாதர்’ படங்கள் ஸிச்சிலியின் (Sicily) கோஸா நோஸ்ட்ராவை (Cosa Nostra) நேப்பிள்ஸ் நகரத்தவரின் (Neapolitan) ‘கெமோர்ரா’வை, (Camorra) ‘கொமோரா’ (Gomorrah)வெனக் காட்சிப்படுத்தியதை நாம் அறிவோம். ஆனால், பகட்டு வெளிச்சம் படாமலும், தொலைக்காட்சியில் தென்படாமலும் இருக்கும் ‘N’ மாஃபியா மிக ஆக்ரோஷமானது. அரசின் கட்டுமான ஒப்பந்தங்கள் பலவற்றைப் பெற்றுச் செல்வவளம் மிகுந்த வட இதாலியிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்த்ரேலியா போன்ற 31 நாடுகளைத் தன் கொடுக்குகள் மூலம் பற்றியிருக்கிறது. இதாலிக்கு வெளியே டொரான்டோ இதன் புறக்காவலாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்காவின் குற்றச் செயல் கும்பல்களுடன் நல்ல நட்பைப் பேணும் இது மிக அதிக அளவில் கொகெய்னை அங்கிருந்து இறக்குமதி செய்கிறது. ஐரோப்பாவின் கொகெய்ன் சந்தை பாதிக்கு மேல் இவர்கள் வசம். இந்தப் பெருந்தொற்று நேரத்தை இவர்கள் வீணடிக்கவில்லை. தொழிலும் பணமும் அற்ற பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் மற்றும் சில குற்றக் குழுக்களுக்கும் உதவிக் கரம் நீட்டினர். அன்னை இட்ட தீ அடிவயிற்றிலல்லவா? வேலை இல்லாதவர்களுக்குப் பணப்பைகூடத் தரப்பட்டது. காலாப்றியாவின் பொது நல நிதியைச் சுரண்டி அதன் சமூக நலத்தையே இவர்கள் பெருமளவில் பாதித்துள்ளனர் என்று ‘பைனான்ஸியல் டைம்ஸ்’ எழுதியுள்ளது.
நிலைத்த உறுதிப்பாட்டோடு கிராட்டேரி இந்தக் குழுவைக் கண்காணிக்கிறார். ‘புதுப் பாலம்’ என்று சங்கேதக் குறியோடு 2014-ல் இவர் வடிவமைத்த ஆற்றல் முனைச் செயல்பாடுகள் (Sting Operations) மூன்று கண்டங்களில் ‘N’ நின் போதை மருந்து வணிகத்தில் தேக்கத்தைக் கொண்டுவந்தது. 1000 பவுன்ட் தூய கொகெய்ன் கைபற்றப்பட்டது. டிச 2019-ல், இவர் ஒருங்கமைத்த வழியில் – வழக்கறிஞர்கள், வர்த்தகர்கள், கணக்காளர்கள், ஒரு தலைமைக் காவலதிகாரி, காலாப்றியாவின் நகரத் தந்தைக் கூட்டமைப்பின் தலைவர், முன்னாள் இதாலியின் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 334 பேரை, ‘N’ செயல்பாடுகளான கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் போன்றவற்றில் சம்பந்தப்பட்டவர்களாக வளைத்துப் பிடித்தனர். இவர்கள் அனைவரின் மீதான (470க்கும் மேற்பட்ட மனிதர்கள்) முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்தனை பிரதிவாதிகளும் அவர்களின் வழக்கறிஞர்களும் இருப்பதால், இந்தப் பெரும் வழக்கு ரோமிலிருந்து காலாப்றியாவில் அமைக்கப்பட்டு வரும் பெரிய நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது.
நான் விமான நிலைய வெளிப்புறத்தில் கிராட்டேரிக்காகக் காத்திருக்கையில், மஃப்டியில் அதிகாரிகள் பின்தொடர அவர் காரில் வேகமாக வந்து இறங்கினார். சாதாரணப் பயணிகள்போல ஜீன்ஸ்ஸும் காலணிகளும் அணிந்திருந்த அவர்கள் கைகளில் தோல் பை இருந்தது. அனேகமாக அவைகளில் துப்பாகி இருக்கலாம். காரைவிட்டு இறங்கியவர் வேகமாக என்னருகே வந்து என் கைப்பயை வாங்கித் தன்னுடன் வந்த ஒருவரிடம் கொடுத்தார். இவர் இறக்க வேண்டும் எனப் பலர் விரும்புவதால், டிசம்பரில் நடந்த கைதுகளுக்குப் பிறகு, அரசு இவருக்குக் கவசக் காரைக் கொடுத்துள்ளது.
அப்போதும் இப்போதும் ‘N’ நிறைந்துள்ள ஜெராச்சி (Gerace) என்ற ஊரில் 1958-ல் இவர் பிறந்திருக்கிறார். ஐந்து குழந்தைகளில் மூன்றாமவர். அப்பாவும் அம்மாவும் அதிகம் படிக்காதவர்கள்; அப்பா ஒரு பலசரக்குக் கடை வைத்திருந்தார், அம்மா குடும்பத்தைக் கவனித்தார். ஒரு முறை லிஃப்ட் கேட்டு பள்ளிக்குச் செல்கையில் இறந்த உடல் ஒன்று தெருவில் கிடப்பதைப் பார்த்தார். உலகின் இந்த மூலையில் ஏதோ சரியில்லை எனத் தோன்றியது.
ஊடுருவும் கண்கள், சிறிய உடலமைப்பு, கால்களைச் சற்றே சில நேரங்களில் சாய்த்து நடப்பது என்பனவற்றைக் கவனித்தேன். காலாப்றியாவின் குன்றுச் சுரங்கங்களில், நீண்ட இருண்ட பாதைகளில், திடீரென நால்வழிப் பாதை இரண்டாகக் குறுகும் இடங்களிலும்கூட மிக வேகமாகக் காரை ஓட்டுகிறார். வடக்கில் 360 மைல் தொலைவிலுள்ள ரோமுக்குச் சென்று கொண்டிருக்கிறோம். தனக்கு விடுதலை உணர்வை அளிப்பதால், விமானத்தில் செல்வதைவிடக் கார் ஓட்டுவதை விரும்புவதாகச் சொன்னார். இந்தக் கார் பயணத்தால், நாங்கள் பேசிக்கொண்டே செல்ல முடிந்தது. நாம் பயணிக்கும் பாதையின் ஒவ்வொரு அங்குலமும் ‘N’ அல்லது ‘கெமோர்ரா’வினரால் கண்காணிக்கப்படும் என்பதை அவர் அறிந்திருப்பார் என நான் சொன்னதை அவர் ஒப்புக்கொண்டார்.
மற்றொரு உரையாடலின்போது, அவர் தான் பிறந்த குடும்பம் நன்னெறிகளால் அமைந்தது தனது அதிர்ஷ்டமென்றார். “எங்கள் பள்ளியின் முன்னால், ‘N’ குழுமக் குடும்பக் குழந்தைகள் (சிறிய ‘N’கள்) வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதைப் பார்க்கையில், அது என்னால் சகிக்க முடியாததாக இருந்தது; நான் பெரியவனாகையில், மாற்றங்கள் கொண்டுவர வேண்டுமென நினைத்தேன்.” கத்தானியா (Catania) பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த பிறகு, 1986-ல் கடினமான அரசுத் தேர்வை எழுதி இவர் நீதிபதியாகப் (Magistrate) பணியில் சேர்ந்தார்.
லாக்ரி என்ற ஊரில் (காலாப்றியாவில் உள்ளது) கிடப்பில் போடப்பட்ட வழக்குகளைக் கையில் எடுத்தார். 1989-ல் உள்ளூர் வணிகர் ஒருவர் கொலையுண்டதன் பின்னணியை ஆராயத் தொடங்கினார். பல அரசியல்வாதிகள் கலந்துகொண்ட தனி விருந்து ஒன்றில் பங்கேற்ற பின்னர்தான் வணிகர் கொலைசெய்யப்பட்டுள்ளார். நீரற்ற ஏரியில் பாலம் கட்ட (குடி மராமத்துப் பணிகளோ, கிணறு காணவில்லை என்று வடிவேலு அளித்த புகாரோ நினைவிற்கு வருகிறதா?) ஒப்பந்தம் பெற்ற அவர் எந்தக் காரணத்தாலோ அரசியல்வாதிகளின் நட்பில் பிழைபட்டு உயிரைத் தந்திருக்கிறார். மற்றொரு உண்மை என்பது அந்தப் பாலம் கட்டப் பொது ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படவில்லை. (இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன் – வந்தே பாரத் என்ற உன்னதமான தொடர்வண்டி குறுகிய காலத்தில் திறமையாக வடிவமைக்கப்பட்டு, வெள்ளோட்டம் விடப்பட்டுச் செயல்படுகிறது. அதற்கான சில பொருட்களின் கொள்முதலுக்கான பொது ஏலத்தில் சில விதிமுறைகள் மீறப்பட்டதாகத் தேசியப் புலனாய்வுத் துறையில் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை நடைபெற்று, முதன்மைப் பொறியாளர் உட்பட அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும், முதன்மைப் பொறியாளருக்குப் பதவி உயர்விற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை; மேலும் இழிவுசெய்யும் விதமாகத் துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன எனச் செய்திகளைப் படிக்கையில், விதிகளை மட்டுமே கவனித்துச் செயல்களைப் புறக்கணிக்கிறோமோ எனத் தோன்றிவிட்டது. இலக்கும் சரி, அதை எய்தும் வழியும் சரி நேர்மையாக இருக்க வேண்டும்; அதில் இரு கருத்தில்லை. ஆனால், கையூட்டுப் பெறவில்லை, தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தவில்லை, கால தாமதமில்லை, சேதம் ஏதும் ஏற்படவில்லை என்னும்போது யாரையும் எதற்காகவும் திறம்படச் செயல்புரிய விடப்போவதில்லை இந்தியா என்று புரிந்துவிட்டது.)

நீரற்ற ஏரியில் பாலம் கட்டும் விந்தையை இவர் கண்டறிந்த பிறகு இவரது தோழியின் வீட்டு ஜன்னலில் யாரோ துப்பாக்கியால் சுட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அந்தப் பெண் அவரைத் திருமணம் செய்துகொண்டாள். ஆனால், தன் செயல்களைப் பற்றித் தன் குடும்பத்தில் இவர் பகிர்வதில்லை. அவர்களும் இவரைப்போலவே காவல் துறை பாதுகாப்பில் உள்ளனர். அவர்களுடைய பாதுகாப்பு முக்கியமானது.
1992-ல், பாலேர்மோவில், (Palermo) மாஃபியாவிற்கு எதிராகச் செயல்பட்ட வழக்கறிஞர்கள், ஜியொவான்னி ஃபால்கோனெ, (Giovanni Falcone) பவுல் போர்ஸெல்லீனோ (Paalo Borsellino) இருவரும் சில வார இடைவெளிகளில், கார் குண்டுவெடிப்பின் மூலம் கொல்லப்பட்டனர். அவர்களது பாதுகாவலர்கள் மற்றும் முதலாமவரின் மனைவியும்கூட இதில் இறந்தனர். இதாலியின் போருக்குப் பின்னான வரலாற்றில் இக்கொலைகள் மிகவும் கொடூரமானவை. அதிர்ச்சியடையாமல் இவற்றைப் பற்றிப் படிக்க இயலாது. அவர்கள் இருவரும் 1986-ல் தொடங்கிய மிகப் பெரும் வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள். 366 பிரதிவாதிகள் கும்பலாகக் குழுமிய நீதிமன்றக் காட்சி மிகப் பிரபலம். நூற்றுக்கணக்கான மாஃபியர்கள் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் இரகசியச் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் கறுப்பு – வெள்ளைப் புகைப்படம், இதாலியின் இலஞ்ச ஒழிப்புத் துறையின் இலச்சினை ஆயிற்று.
அந்தப் படுகொலைகள் இதாலியின் சூழலைப் பற்றிக் கிராட்டேரியிடம் ஏதேனும் மாற்றம் கொண்டுவந்ததா என நான் கேட்டேன். அவர் சொன்னார்: “கோஸா நோஸ்ட்ரா ஒரு பெரும் தவறைச் செய்தனர். யாரும் எதிர்பார்க்காத, அரசின் இருப்பையே அசைத்துப் பார்க்கும் விதமான அதிக சக்தி மிக்க கூட்டமைப்பாக அது தன்னை வெளிக்காட்டிவிட்டது. ஸிசிலிக்குப் படைகள் அனுப்பப்பட்டன. அரசுக்கு எதிரான முழு வீச்சுப் போர், அவர்களின் முடிவின் தொடக்கமாக அமைந்தது; புது ‘கோஸா’ தொடங்கியது. மௌனச் செயல்பாடுகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோரைக் கொல்வதைவிட அமைப்புகளில் ஊடுருவுதல் சிலாக்கியம் என நினைத்தவர்கள் இந்தக் குற்றக் கூட்டணியாளர்கள்.
‘N’ களும் புதுப்பாடம் கற்றார்கள். அவர்கள் கொலை செய்தார்கள், அதிகாரிகளை நேரே பகைப்பதில்லை. ஒத்துப்போகும் பொதுப் புள்ளியில் அவர்கள் நிறுவனத்திடமும் பொது மக்களிடமும் உறவை ஏற்படுத்திக் கொண்டார்கள். (அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் தொழில்முனையும் பெரு நிறுவனங்கள் வன்முறையாளர்களுக்குக் கப்பம் செலுத்தியதும் முன்னர் ஜம்மு – காஷ்மீரத்தில் செயல்பட்ட வங்கிகள் ‘வாடிக்கையாளரை அறிவோம்’ மற்றும் ‘பெருந்தொகை வரவை ரிசர்வ் வங்கிக்குத் தெரியப்படுத்தக் கூடாது’ என்பது போன்ற மிரட்டல்களை எதிர்கொண்டதையும் குத்து மதிப்பாக நாம் அறிவோம்.) இப்படித்தான் ஊட்டம் பெறுகிறார்கள். இதாலியின் பொருளாதாரத்திலும் அதன் அரசியலிலும் இவர்கள் ஆற்றல் மிக்க சக்தி. இதாலியின் தெற்குப் பகுதியில் தேர்தலில் நிற்பவர்கள், பிரதி பலனுக்காகக் குற்றத்தில் ஈடுபடுவோரிடம் ஊகிக்கக்கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள் – அது மக்களிடம் தகுதி வாய்ந்த தமக்கு வாக்களிக்கச் செய்வதுதான். இது தெற்கில் மட்டுமில்லை; தொலைதூர வடக்கில் – ரிவேரா வரை பார்க்கலாம். நகர உள்ளாட்சி மன்றங்கள் ‘N’ ஊடுருவி இடம் பெற்றுள்ளதால் கலைக்கப்பட்டு அரசின் நிர்வாகத்தின்கீழ் வந்துள்ளன.
‘N’ நின் கட்டமைப்பு குருதி பந்தமெனச் சொல்லலாம்; இந்தக் காரணத்தால் அவர்களின் குற்றங்களை நிரூபிப்பது கடினமான ஒன்று. மற்ற குற்றக் குழுக்களில் நிர்வாக அமைப்பு உறுதியாக இல்லை, எந்நேரமும் பிரியலாம் என்ற வகையில் உள்ளது. வரலாற்றின்படி, தங்கள் குடும்பத்திற்குத் துரோகம் இழைத்த ‘N’ அங்கத்தினர் குறைவானவர்களே. அரசின் சார்பாக, குற்றங்களைப் பற்றி சாட்சி சொன்ன ஆயிரத்தில் ‘N’ 150 பேர் மட்டுமே. டிசம்பரில் அதிக எண்ணிக்கையில் நபர்கள் கைதானதை வைத்து, இந்த நிலை மாறிவருகிறது எனச் சொல்லலாம்; உள் அந்தரங்கள் அறிந்தவர்கள்தான் தெளிவாகச் சொல்ல முடியுமல்லவா? தங்கள் வாக்குறுதியை, தங்கள் குடும்பத்தின் மீதுள்ள பற்றாலோ, உயிர் பயத்தாலோ ‘N’ கள் மீறுகிறார்கள் என கிராட்டேரி சொன்னார். இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் முழுவதையும் சிறையில் கழிக்க விரும்பவில்லை – அவர்களுக்காக மனைவி அல்லது பெண் தோழியர் வெளியில் காத்திருக்கலாம்; அல்லது தகவல் தெரிவிப்பவர், தம் குழந்தைகளின் நன்மையைக் கருதி, ‘N’களின் செயல்பாடுகளைப் பற்றி தெரியப்படுத்தலாம். ஆயினும், பெரும்பாலும் ‘N’கள் விஸ்வாசமாக இருக்கிறார்கள்.
19-ம் நூற்றாண்டில் ‘N’ தோன்றியது காலாப்றியாவில் முதலாளித்துவ சக்திகளால், நிலக்கிழார்கள் பாதிப்படைந்த சமயத்தில். தொடக்கத்தில் இதன் அங்கத்தினர்கள் வழிப்பறி, திருடு போன்றவற்றில் ஈடுபட்டார்கள். பின்னர், கள்ளக் கடத்தல், ஆள் கடத்தல், ஈட்டுப் பணம் கேட்டல் என்று குற்ற சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்கள். நூற்றுக்கணக்கான அவர்களது ஆள் கடத்தலில் மிகப் பரவலாக அறியப்பட்ட ஒன்று – 1973-ல் ஜே. பால் கெட்டி ஜூனியரைக் (J. Paual Getty III) கடத்தியது. முதலில் மீட்புப்பணம் கொடுக்கத் தயங்கிய குடும்பத்தினர், அவரது வெட்டப்பட்ட காது தபாலில் வந்தபோது கிட்டத்தட்ட $3 மில்லியன் கொடுத்தார்கள். நவீன ‘N’ 1980 களில் பிறந்தார்கள் – அதிக இலாபம் தரும் கொகெய்ன் வணிகத்தைத் தாம் எடுத்துக்கொண்டு ஹெராயின் வணிகத்தை கோஸாவிற்கு விட்டுவிட்டு!
இதாலியில் ‘N’ கள் கொகெய்னை அல்பேனியன், நைஜீரியன் குற்றக்குழுக்களுக்கு விற்கிறார்கள் – அவர்கள் தெருவில் அதை விற்றுவிடுகிறார்கள். இது சிறு வணிகச் சிக்கலிலிருந்து இவர்களை விடுவிக்கறது; ‘N’கள், நூதனமான வழிகளில், விவசாயத்திற்கும் கட்டமைப்புகளுக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு வழங்கும் நிதிகளை, அபகரித்துத் தங்களை மேலும் செழிப்பாக்கிக் கொள்கிறார்கள். மேலும், ‘இதாலியருக்கே இதாலி’ என்ற கூப்பாடிடும், புலம் பெயர்ந்து வருவோரை எதிர்க்கும் வலதுசாரி கட்சியினர், அயல் நாட்டவர், தெருக்களில் கொகெய்ன் விற்பதை எடுத்துக்காட்டியே புகழடைகிறார்கள்.
இருந்தும், குற்றக்கறை படிகிறது. ‘N’ களுக்கு எதிராகக் காவல் துறைக்கு உதவிய பெண்ணைக் கொன்றதற்காக ஆறு ஆண்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. (அந்தப் பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொன்று அவள் உடலையும் எரித்தார்கள்). ‘N’ களின் எளிய கோட்பாடு துரோகம் அல்லது காட்டிக்கொடுத்தல் மன்னிக்கப்பட மாட்டாது என்பதே. 2015-இல் எதிரணியைச் சேர்ந்த ‘N’ குழுமத் தலைவருடன் உறவில் இருந்ததற்காக, தன் அன்னையையே கொலை செய்யப் பணித்த 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்.
‘N’ குழுவின் மீது எப்படி ஒரு வழக்கைக் கொண்டுவருவது என்று நான் கிராட்டேரியைக் கேட்டேன். குற்றம், கைது, தண்டனை, மேல்முறையீடு, ஆளுமைகள், உள் தொடர்புகள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை அவர் பல்லாண்டுகளாகப் பயின்று வந்திருக்கிறார். அவர் மூளையில் இந்தக் குழுவைப் பற்றிய கலைக்களஞ்சியம் பதிந்துள்ளது. டிசம்பரில் நடந்த பெரும் கைதுகளுக்கான சாட்சியங்களை இவரும் இவரது குழுவும் நான்கு வருடங்களாகச் சேகரித்து வந்துள்ளார்கள். சில வழிமுறைகளைப் பற்றிச் சொன்னார்: ‘தொலைபேசியை ஒட்டுக்கேட்பது, புவிக்கிடங்குகளை அம்பலப்படுத்தும் வெப்பப் படிமம், உலகம் முழுதும் உள்ள சட்ட ஒழுங்கு அமைப்புகளுடன் உள்ள தொடர்பு, குற்றக் குழுவின் விதிகள் மற்றும் சடங்குகள், புதிய தொழில் நுட்பத்தையும் புதிய முதலீடுகளையும் (க்ரிப்டோ கரன்ஸி போன்றவை) அவர்கள் பயன்படுத்தும் நுட்பத்தைப் பற்றி நாம் அடையாளம் கண்டு உணர்வது போன்றவை.’ ‘இந்தக் குற்றச்சாட்டுகள் முன்னாளைய இருபது ‘N’ களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன; இவர்கள் 20 நபராக அரசின் சார்பில் வழக்கில் வந்துள்ளதே மிகப் பெரிய பதிவெண்ணிக்கையாகும்.
வெளிநாடுகளில் இயங்கும் ‘N’களைச் சட்ட வலைக்குள் கொண்டுவருவது கடினம். ஒருங்கமைப்பட்ட குற்றக் குழுக்களுக்கு எதிராகச் செயல்பட கிராட்டேரி போன்ற வழக்கறிஞர்களுக்கு இதாலி அரசு சிறந்த உபகரணங்களை வழங்கியுள்ளது. மாஃபியா கூட்டமைப்பில் உள்ளதாகக் குற்றம் சாட்டப்படுபவரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் இதாலியில் நடைமுறையில் உள்ளது; யூரோப் உட்பட வேறெங்கும் இத்தகைய பரவலான அதிகாரமில்லை.
இவருக்கு மனிதர்களைக் கேள்வி கேட்பது பிடித்திருக்கிறது; அதற்கான இனிய முறைமையும் இவரிடம் உள்ளது; அமைதி, கவனக் குவிப்பு, மரியாதையுடன் துருவுதல்; இவர் குற்றவாளிகளின் நம்பிக்கையை எப்படியோ பெற்றுவிடுகிறார். ஒரு யுட்யூப் காணொலியில், இவரது வழக்கறிஞர் தொழிலில் இவர் பிடித்த திமிங்கிலத்துடனான உரையாடலைப் பார்த்தேன்: ரொபெர்த்தோ பானன்ஸி (Roberto Pannunzi) கொலம்பியாவின் மெடெலீன் (Medell’in) கூட்டமைப்புடன், ‘N’ஐக் கூட்டுச் சேர்த்த பெருமை மிக்கவர்.
ரொபெர்த்தோ பானன்ஸி 1994-ல் போதை மருந்துக் கடத்தல் குற்றத்திற்காகக் கொலம்பியாவில் கைது செய்யப்பட்டார்; அவரைச் சில நேரங்களில் இதாலியின் Pablo Escobar என்று சொல்கிறார்கள். இதாலிக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, உடல் நிலையைக் காரணம் காட்டி நாட்டைவிட்டே தப்பி ஓடிவிட்டார். 2004-ல் ஸ்பெயினில் அவரை அதிகாரிகள் கண்டடைந்தனர். அவரை இதாலியிடம் ஒப்படைத்தார்கள்; அவரை கிராட்டேரி சென்று பார்த்தார். அவரிடம் சொன்னார்: “ நீங்கள் முப்பது ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும்; இதைக் குறித்து நீங்கள் எதுவும் செய்ய முடியாது.” ‘இல்லை, நண்பரே, நான் வெளியேறி விடுவேன்; உங்களை, இந்தக் காவலாளியை நான் பணத்தாலேயே புதைத்து விடுவேன்.’ உண்மையாகவே 2010-ல் இதயக்கோளாறு எனச் சொல்லி மருத்துவ விடுதிக்குச் சென்று நோயாளியாக நடித்து அங்கிருந்தே பறந்தோடிவிட்டார். (உலகெங்கும் ஏமாற்றுக்காரர்களுக்கு இதய நோய்தான் வருகிறது!)
இதாலிய அதிகாரிகள் 2013-ல் கொலம்பியாவில் அவரைக் கண்டுபிடித்தனர். அவரை மீண்டும் இதாலியிடம் ஒப்படைத்தார்கள். அவரை எதிர்கொள்ள கிராட்டேரி ரோமிற்கு விமானத்தில் சென்றார். ‘வந்தனம், தோழரே, நலமா?’ என்று கேட்டார் அவர். இதை நினைவுகூர்ந்த கிராட்டேரி சொன்னார்:
“நான் கேட்டேன்; உங்களை நன்றாக நடத்தினார்களா?” என்று. ‘ஆம்; நன்றாக நடத்தினார்கள்; இனிய பயணம்’ என்று பதில் சொன்னார்.” பழைய நண்பர்கள் பேசிக்கொள்வதைப்போல அந்தக் காட்சி இருந்தது. அதை யாரோ படம்பிடித்து, நிகழ் நிலையில் வெளியிட்டும் விட்டார்கள்.
ஒருவரை ஒருவர் அணுக்கமாக அறிந்த அவர்களுக்காக நான் அந்தக் காணொலியை மீள மீளப் பார்த்தேன். கிராட்டேரி காலாப்றியாவில் வளர்ந்ததால் அவருக்கு அந்த வட்டாரத்தின் இயல்பு தெளிவாகப் புரிந்துள்ளது. “என் அதிகாரத்தை அவர் அறிந்துள்ளார்” என்று கிராட்டேரி என்னிடம் குறிப்பிட்டார்.
சுற்றுச் சுவர்கள் உள்ள, கேமராக்கள் பொதிந்துள்ள, காவலாட்கள் நிறைந்துள்ள வசிப்பிடத்தில் இருக்கிறார் இவர். தன் காவல் துணையுடன் தன் இயக்கங்கள் பற்றிப் பகிர்ந்துகொள்ளும் இவர் தன் இல்லத் துணைக்கு மிகக் குறைந்த அளவிலேயே செய்திகள் சொல்கிறார். இதாலி முழுதும், ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலும் பயணம் செய்துகொண்டே இருக்கிறார். இரவு 10 மணிக்கு உறங்கச் செல்லும் இவர் அதிகாலை 2.30க்குத் தம் பணிகளைத் துவக்குகிறார்.
அவரது நீதிமன்ற வளாகத்திற்கு ஒருமுறை சென்றேன். குண்டு துளைக்காத கதவை மனிதர்கள் வந்து தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். திரையில் அவர்களைப் பார்த்த பின்னர் அனுமதிக்கிறார். இந்தப் புதுப் பெருங்குற்றச்சாட்டு வழக்கு இங்கிருந்துதான் அவரால் திறம்பட அமைக்கப்பட்டது. பாலேர்மோ வழக்கு எவ்வாறு கோஸோவினரை பெருமளவில் சட்டத்தின் பிடிக்குக் கொண்டுவந்ததோ, அதைப்போலவே ‘N’களின் அமைப்பு வடிவம், அவர்களுக்கு இதாலிய அரசியல்வாதிகளுடன், நிறுவனங்களுடன், பொருளாதார ஆர்வங்களுடன், சமூகத்தின் மற்ற கூறுகளுடன் இருக்கும் இணைப்பு போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாக வெளிக் கொணரவேண்டுமென இவர் நினைக்கிறார். ‘சமூக வலைப் பின்னலின் மூலம் சமூக முதலீடு செய்வதால் குற்றக் குழுக்கள் வெளியிலிருந்தே பலம் பெறுகின்றனர்,’ என்று அந்தோனியோ நிகாசியோ (Antonio Nicasio) என்னிடம் சொன்னார்; அவர் ‘N’ களைப் பற்றி அறிந்த திறமையாளர்; கானடாவில் ஆண்டாரியோ மாநிலத்தில் ‘க்வீன்ஸ்’ பல்கலையில் ஆசிரியராகப் பணிசெய்கிறார்; கிராட்டேரியுடன் இணைந்து 14 புத்தகங்கள் எழுதியுள்ளார். இந்தப் பெரும் வழக்கு உலகெங்குமுள்ள சட்ட ஒழுங்குத் துறையைச் சார்ந்தவர்களுக்குப் புலனாய்வு செய்வதில் ஒரு முன்மாதிரியாக இருக்கலாம்.
நாங்கள் ரோமை அன்று நெருங்கிக் கொண்டிருக்கையில், நான் அவரிடம் சொன்னேன்: ‘சில வருடங்களுக்கு முன் காலாப்றியாவின் ஒரு நீதிபதி, தான், குற்றக் குழுக்களைவிட இதாலியில் இருக்கும் அதன் எதிர்ப்பாளர்கள் சிலரை மிகவும் அஞ்சுவதாகச் சொன்னார்.’ போகிற போக்கில் சொன்ன அந்த வாக்கியம் என்னுடனே தங்கிவிட்டது. அதன் பொருள், இதாலி இருட்டில் உள்ளது; ஒரு பக்கத்தைச் சார்ந்தவர் என்று நீங்கள் நினைக்கும் நபர், உண்மையில், கண்களுக்குப் புலப்படாமல் மாற்றானுக்கு உதவி செய்துகொண்டிருப்பார். ‘N’ கள், மங்கலாகப் புலப்பட்டாலும் நியாயாதிபதிகளின் மேல் செல்வாக்கு செலுத்துவார்கள் என்பது கிராட்டேரிக்குத் தெரியும். நீதித் துறையிலிருந்த இவரது சில சகாக்கள், இவருக்குச் சொன்னதை இவர் அறிவுரையென இளமையில் நினைத்திருக்கிறார். ஆனால், ‘வரம்பு மீறாதே, கண்டு கொள்ளாதே’ என்று மெலிதாக ஒலித்த எச்சரிக்கை அது எனப் பின்னர் புரிந்தது.
ஒவ்வொரு நாளும், உயிருக்கு ஆபத்து என்ற இப்பணியை இவரைச் செய்யத் தூண்டுவது எது எனக் கேட்டேன். ‘அனைத்திற்கும் விலை இருக்கிறது’ என்று தத்துவார்த்தமாகக் குறிப்பிட்டார். 1989க்குப் பிறகு காவலர்கள் இல்லாமல் வெளியே எங்கும் செல்வதில்லை. 30 வருடங்களாகத் திரைப்படம் பார்க்கவில்லை. ‘பிக் ப்ரதர்’ போல எப்போதும் கண்காணிக்கப்படும் கோட்டை இவரது வீடு. ஆனால், சுவற்றிற்கு உள்ளே ஒரு காய்கறித் தோட்டம் இருக்கிறது. தக்காளி, கத்திரி, ஓமம் போன்றவற்றைப் பயிரிடுகிறார். தன் குழந்தைகளின் பெயரைச் சொல்லும் தகப்பனைப்போல அவ்வளவு மென்மையாகக் காய்கறிகளின் பெயர்களைச் சொல்கிறார்.
‘பெருங்குற்ற வழக்கில் உள்ள பிரதிவாதியைப்போல நானும் கூண்டுக்குள் இருக்கிறேன். ஆனால், மனதில் நான் ஒரு சுதந்திர மனிதன்.’ தன் நெற்றிப் பொட்டில் விரலை வைத்துக்கொண்டு சொன்னார்: ‘என் தேர்வுகளில் எனக்குச் சுதந்திரம் இருக்கிறது; என் முடிவுகள் சுதந்திரமானவை; நான் விடுதலையுணர்வுடன் சிந்திக்க முடியும்; நான் நினைப்பதைச் சொல்லமுடியும்; தங்கள் செயல்பாடுகள் ஒழுக்கம் சார்ந்து இல்லாததால், தங்கள் உள்ளத்திலுள்ளதைப் பேச முடியாத சிலரைப் போன்ற நிலை எனக்கில்லை; ஏனெனில், அவர்களை மிரட்ட முடியும்; ஏனெனில், அவர்கள் பயந்தவர்கள்; ஏனெனில், அவர்கள் கோழைகள்.’
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
அண்மையில் கிரேக்க நாட்டில், தீவிர வலதுசாரிக் கட்சியினரை (தங்க உதயம் என்று பெயர்) இத்தகைய குற்றக் குழுக்களின் அமைப்பாளர்கள் என்று சொல்லித் தண்டனை வழங்கிய தீர்ப்பு முக்கியமானது. அக்கட்சியைச் சேர்ந்த அதன் முதன்மைத் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைக் குற்றக் குழுக்களை நடத்தும் குற்றவாளிகள் என்று அந்தத் தீர்ப்பு சொன்னது. இதை உலகம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில் தாது மணற் கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது. இந்த மணல், சட்டத்திற்குப் புறம்பாகப் பல வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகிறது. குற்றக் குழுக்களை முழுதும் அடையாளம் காணவில்லை. வழக்குகள் பதியப்பட்டும் நிவாரணம் என ஒன்றும் தெரியவில்லை. தங்கக் கடத்தல், சிலை கடத்தல் போன்றவை நிர்வாக ஒழுங்கமைப்போடு நடக்கின்றன. போதை மருந்துகள் பள்ளி, கல்லூரி வளாகங்கள் வரை பரவிவிட்டன. சில நாள்கள் மட்டும் பரபரப்பாகப் பேசப்படும் மேற்கூறிய விஷயங்கள் பின்னர் நீர்த்துப் போகின்றன அல்லது மக்களின் கவனத்தில் இருப்பதில்லை. போதைப் பொருள் கடத்தும் குழுக்களும் இந்தியத் திரை உலகும் மிகவும் நெருக்கமாக இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அரசு சாரா நிறுவனங்கள் சில இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட அன்னிய நாட்டினர் நிதி அளித்து உதவுவதாகவும் ஐயங்கள் இருக்கின்றன. முறையாக வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி நிதிபெற்று முறையற்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மூளைச் சலவை செய்து, இளைஞர்களை மதம், மொழி, ஜாதி என்ற பிரிவினையை இறுகப் பற்றும்படி செய்வதில் சில குற்றக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. சிறிய விரிசலைக் கவனிக்காது போனால், ஆடை கிழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. கவனம் தேவை.
“கண்ணிலாக் குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்.” பாரதி அன்றே எச்சரித்து விட்டார். அவர் புதிய ஆத்திசூடியில் சொன்னதுபோல் தீயோருக்கு அஞ்சாமல், கொடுமைகளை எதிர்த்துக் குன்றென நிமிர வேண்டும்.
[கட்டுரைக்கு ஆதாரம்: Putting the ’Ndrangheta, Italy’s Most Powerful Crime Syndicate, on Trial – The Atlantic
Article by Rachel Donadio. She is a Paris based contributing writer at The Atlantic covering politics &culture across Europe.
தமிழாக்கியவர் : உத்ரா ]
***