
சில சமயங்களில் நமக்குப் பிடித்தமான இசையைப் பலமுறை கேட்டால் ஒருவிதமான அலுப்பு (?) ஏற்பட்டு விடுகிறது. தற்காலத்தில் நமது இளைய தலைமுறை இசைக் கலைஞர்கள் பலவிதமான புதுமைகளைப் புகுத்தி இவ்விசையை வழங்கினாலும்கூட, இன்னும் நாம் செய்ய வேண்டியது ஏதோ ஒன்று இருக்கத்தான் இருக்கிறது எனத் தோன்றுகிறது!
நீண்ட நாள்கள் முன்பு இலங்கை வானொலியில், ‘இசையும் கதையும்’ எனும் தலைப்பில், இணைப்பாளர் தன் விருப்பப்படி ஒரு கதையை எழுதி, திரைப்படப் பாடல்களை அதற்கேற்பப் பொருத்தி சுவாரசியமாக வழங்குவார். தென்னிந்திய இசையான சம்பிரதாய (கர்நாடக இசை எனும் சொல்லைக் கூற விருப்பமில்லை! வேறு பெயர் இருந்தால் சொல்லுங்களேன்!) இசையிலும் அந்நாள்களிலேயே இப்புதுமையைப் புகுத்தியவர் தியாகராஜ சுவாமி அவர்களே! நௌகா சரித்திரம், ப்ரஹ்லாத பக்தி விஜயம் ஆகிய இரு இசை நாடக வடிவங்களை அழகழகான ராகங்களில் அமைந்த பாடல்களுடன் நமக்களித்துள்ளார். இதுவே தென்னிந்திய இசையின் ‘ஆபரா’ (Opera) வடிவம் எனலாம். இசை – நாடக வடிவங்களாக, பரத நாட்டியக் கலைஞர்கள் நீண்ட நாள்களாகவே பல புதுமைகளைச் செய்து வருவதனைக் கண்கூடாகக் காண்கிறோம். நீங்கள் இக்கட்டுரையைப் படிக்கும் முன்பே இங்கு இவற்றைக் கூறியதற்குக் காரணம், நான் இதையெல்லாம் அறியாமல் கீழேகாணும் ‘எனது ஆராய்ச்சியில்’ ஈடுபட்டுவிட்டதாக நீங்கள் கருதிவிடக்கூடாது எனும் தற்காப்பிற்காகவே!
இசையும் அதன் தொடர்பான ராகங்களும் ஒரு கதை சொன்னால் எவ்வாறு இருக்கும்? சொற்களேயற்ற ஓர் இசை வடிவம், பலவிதமான ராகங்களின் தொகுப்பாக – ராகமாலிகை என்று வைத்துக் கொள்ளுங்களேன்! கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டேன்.
நாமோ இந்தக் கொரோனா வைரஸால் வீட்டில் அடைந்து கிடக்கிறோம். நம் பொழுதைப் பயனுள்ளதாக, சுவாரசியமுள்ளதாகக் கழிக்க என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் ஒரு சிந்தனை எழுந்தது. வழக்கமான தென்னிந்தியச் சம்பிரதாய இசைக்குப் பதிலாக மேற்கத்திய சாஸ்திரீய இசை வடிவங்களான ‘ஆபரா’, ‘ஆபரெட்டா’ (Operetta), இசைக் கதை வடிவங்கள் (Incidental music) எனச் சேர்த்து வைத்திருந்தவைகளைக் கேட்கலாம் என முடிவுகட்டி அவற்றைக் குடையத் துவங்கியபோதில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் வாங்கிச் சேமித்திருந்த ஒரு மேற்கத்திய இசை ஆல்பம் கண்ணில்பட்டது – பெயர்: சாவித்ரி. இதன் இசையை 2002ம் ஆண்டு மேற்கத்திய சங்கீத வடிவில் எழுதி, வடிவமைத்து இசைப்பதிவும் செய்திருந்தவர்கள் பாமெலா, ராண்டி கோபஸ் (Pamela & Randy Copus) என்பவர்கள். அற்புதமான இசை வடிவம் இது! ஆம்! நமதே நமதான சாவித்ரி- சத்யவான் கதைதான்! என்ன? திகைப்பாக உள்ளதா?[1]
மஹாபாரதத்தில் காணும் சாவித்ரி – சத்யவான் கதை, ஸ்ரீ அரவிந்தரின் ‘சாவித்ரி’ எனும் நூல் ஆகியவையே இந்தப் படைப்புக்கான உத்வேகத்தைத் தங்களுக்கு அளித்தன எனக் கூறுகிறார்கள் இவர்கள்.
ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்: ‘மஹாபாரதத்திலுள்ள சாவித்ரி -சத்யவான் கதை, கணவன் – மனைவி இடையேயான ஆழ்ந்த அன்பு எவ்வாறு மரணத்தையும் வென்று நிற்கிறது என விளக்கும் கதை. ஆனால், வேதங்களின் பலவிதமான உட்கருத்துகளை மறைமுகமாகவும் இந்தக் கதை எடுத்துரைக்கிறது.’ அது ஒரு ஆத்மசோதனை போலும் ஆராய்ச்சி! நாம் கட்டாயமாக இப்போது இதனுள் போகப் போவதில்லை.
ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணங்களுக்கேற்ப சாவித்ரி -சத்யவான் கதையானது, பிறப்பு – இறப்பு, காதல் – கனவு, வெற்றி – தோல்வி, அன்பு – ஆதாரம் என வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் தன்னுள் கொண்டும் இன்னும் பல பரிமாணங்கள் கொண்ட தத்துவ வேதாந்தக் கருத்துக்களின் வடிவாகவும் விளங்குகிறது.
புராண சாவித்ரியின் கதை சில மேற்கத்திய இசையமைப்பாளர்களை வசீகரித்து, இசை வடிவாக்கவும் தூண்டி, மிகவும் ஆழமான, புதிர் பொதிந்த, தனித்துவம் வாய்ந்த இசை வடிவங்களைப் படைக்கத் துணை நின்றுள்ளது என்றால் வியப்பாக இல்லை? ‘சாவித்ரி’யின் கதையை மூன்றே மூன்று பாத்திரங்கள் கொண்ட (சாவித்ரி – சத்யவான் – இறப்பின் கடவுள்) ஓரங்க ‘ஆபரா’வாக குஸ்டாவ் ஹோல்ஸ்ட் (Gustav Holst) என்பவர் முன்பே 1916-ல் படைத்துள்ளார். [2]
இப்போது என் எண்ணம், நாமும் இவ்வாறான இசையை, ஒரு கதை சொல்லும் இசையை நமது ராகங்களின் துணைகொண்டு ஏன் படைக்கவில்லை என்றுதான். இந்த இசை வடிவத்தை ரசிக்க, அவர்கள் கொடுத்துள்ள கதைச் சுருக்கம் துணைபுரிகிறது. சாவித்திரி – சத்யவான் பற்றி அறியாத வேற்றுநாட்டு மனிதர்களால் இந்த இசையை ரசிக்க முடியுமானால், நம்மால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியவேண்டும் அல்லவோ?
வினாக்களுக்கு என்னிடம் விடை இல்லை.
ஆனால், என்னால் கட்டாயம் வேறு ஒன்றைச் செய்யமுடியும். என் வசமுள்ள தென்னிந்திய வாத்திய சங்கீதத் தொகுப்புகளிலிருந்து எனக்கே எனக்காக இதனை உருவாக்கிக்கொண்டு ரசிக்க முடியும். உத்வேகம் பிறந்ததும் தேடல் தொடங்கிவிட்டது. வீணை, வயலின், புல்லாங்குழல் (இப்போதைக்கு இவையே போதும்) ஆகியவற்றில் இசைக்கப்பட்ட ராக ஆலாபனைகள், சில ‘தானம்’ பகுதிகள், மேலும் சில இசை அமைப்புகள் (Musical arrangements) ஆகியவற்றைத் தேடி எடுத்தேன். அதே சாவித்ரி – சத்யவான் கதைக்கேற்ப, என மனம் விழைந்த, பொருத்தம் எனக் கருதிய ராகங்களைத் தேர்ந்தெடுத்து, இவற்றை ஓர் இசை வடிவாகத் தொகுத்துத் தொடுத்தேன்.
சுலபமான வேலையன்று; ஆனால் சுகமான வேலை!
அமைப்பு முழுமை பெற்றதும் கதையை எண்ணத்தில் ஓடவிட்டபடியே கண்களைமூடி நான் தொகுத்த எனக்கே எனக்கான அந்த இசையைக் கேட்டபொழுது, நானே ஒரு படைப்பாளியாகி எதையோ சாதித்தது போன்ற மகிழ்ச்சியில் மிதந்தேன். என் அனுபவங்களின் பகிர்வே இது!
சாவித்ரியின் கதையுடன்தான் இந்த இசை வடிவையும் பற்றிக் கூறப்போகிறேன். கேளுங்கள்…..
(இசைப்பதிவுகள் அனைத்தும் காப்புரிமை உடையவை என்பதால், எந்த இசைக் கலைஞர் என்று தெரிவிப்பதோ, அந்த இசை வடிவை, ஏன் என் தொகுப்பைப் பகிர்ந்துகொள்வதோ இயலாது என எண்ணுகிறேன். அதன் நயங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே!) ஆனால் கேட்க ஆர்வமுள்ளவர்கள் என்னைப்போலவே தங்கள் சேமிப்புகளிலிருந்து இந்த ராகங்களைத் தொகுத்துக் கேட்கலாம்! கொஞ்சம் மெனக்கெடும் வேலை! ஆனால், முடிவில் நமது படைப்பின் வெற்றியின் உச்சத்தை செவியால் உணரும்போது ஏற்படும் இன்பம் தேவானுபவம்தான் என்று சொல்லவேண்டும்!
எண்ணற்ற அசுவங்களைக் (குதிரைகள்) கொண்ட அரசன் அசுவபதியின் நாடு வளமும் செழுமையும் வாய்ந்தது; செல்வங்கள் கொழிப்பது; அமைதியில் சிலிர்ப்பது. இனிய தென்றலாகத் தவழ்ந்துவரும் ராகம் மலயமாருதம் இதை உணர்த்தும். அசுவபதிக்கு எல்லாம் இருந்தும் இல்லாதது ஒன்று; மனிதனின் வாழ்வில் இன்றியமையாதது – மக்கட்செல்வம். அவன் வாழ்வு முழுமை பெறவில்லை. அவனுடைய நாட்டின் வளங்களைப்போல, வீணையிலிருந்து இனிமையான மலயமாருதத்தின் இழைகள் அமைதியாக, நிதானமாக அழுத்தமாக எழுகின்றன; ஆனால் அதன் அடியாழத்தில் ஒருவிதமான ஏக்கம், ஏதோ ஒரு குறையின் தாக்கம் இழையோடுவதனை உணருகிறோம்.
அடுத்து விடியலின் ராகமாக பிலஹரியின் ஆலாபனை வயலினில் இருந்து இழைந்து வருகிறது. அரசன் அசுவபதி தன் அரசியுடன் ஒரு குழந்தைக்காகத் தீவிரமான தவமியற்றுவதனை உணருகிறோம். அது பலிக்கும் எனும் திடமான நம்பிக்கையை பிலஹரியின் அற்புதமான, அங்கீகரிப்பான ஆலாபனை இழைகள் உணர்த்துகின்றன. நம்பிக்கையின் இழைகளும் உடன்சேர்ந்து அரச தம்பதிகளின் வேண்டுதல் பலிக்கப்போவதனை உணர்த்துகின்றன. நமது உள்ளங்களும் வேண்டுதலில் குவிகின்றன.
ராகம் சாவித்ரி, ஓர் அதிசயமான அபூர்வ ராகம்…. அதன் மாயமான ராக அலைகள் இழையிழையாக வேகத்துடனும் உறுதியுடனும் பெருகிப் பிரவகிக்கும்போது, நாம் காண்பது சூரிய பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட இளம்குழந்தை சாவித்ரியை; அவள் யாகத் தீயினின்று வெளிப்படும்போது, உலகின் அனைத்து நற்குணங்களும் பொருந்திய ஒரு முழுமையான சிறுபெண் வடிவத்தை உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம். சாவித்ரியின் சுஸ்வரங்கள் உள்ளத்தை நிறைக்கின்றன. குழந்தை குதூகலமாக வளர்கிறாள். இன்பத்தை அள்ளியள்ளி வழங்குகிறாள். அசுவபதி, அரசி, மக்கள் அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியையும் மானுடத்தின் நம்பிக்கைகளையும் நிரப்பியவாறு அவள் வளரும் விந்தையை ராகம் கதனகுதூஹலத்தின் ஆனந்தம் கொப்பளிக்கும் ஸ்வரங்கள் விறுவிறுப்பான குழந்தைபோல நடனமாடிக் கண்முன் கொணர்கின்றன.
சாவித்ரி இப்போது அறிவும் அழகும் நளினமும் மிளிரும் அதி சாமர்த்தியசாலியான ஒரு பெண். அவளுடைய அழகும் அறிவும் ஏனைய குணாதிசயங்களும் உலகெங்கும் பரவுகின்றன. வீணையினின்றும் எழும் அழகான வசந்தா ராகத்தின் அலையலையான ராக இழைகள் நமது உள்ளத்தை அசைத்துப் பார்த்து அந்த அற்புதமான பெண் வடிவினைக் கண்முன் கட்டிப்பிடித்து நிறுத்துகின்றன. அனைத்து இளைஞர்களும் அடைய ஏங்கும் ஒரு தேவ கன்னிகையாக இருப்பவளைக் கைப்பிடிக்க ‘எனக்கு என்ன தகுதி?’ என்று அதே இளைஞர்களும் அரச குமாரர்களும் தாழ்வு மனப்பான்மையில் குமைவதனை வசந்தா ராகத்தின் தானமாக இழையும் ஸ்வரக்கோர்வைகள் பிழிந்தெடுத்து நம்முன் நிறுத்துகின்றன. பெற்றோரின் ஆதங்கம் வளர்ந்து விசுவரூபம் எடுக்கிறது.
அசுவபதி மகளை அழைத்து, “அம்மா! நீயே சென்று தேடிப்பார்த்து உனக்கேற்ற மணாளனைக் கண்டு தேர்ந்துகொள்வாயா?” எனக் கேட்கிறான். விறுவிறுவென நகரும் வசந்தா ராகக் கோர்வைகள் அரசகுமாரி சாவித்ரியுடன் தாமும் தேரில் ஏறிக்கொண்டு அவளுக்கான ஒரு மணாளனைத் தேடி விரைகின்றன.
சாவித்ரி – சத்யவான் சந்திப்பு – இதனை, சந்திரகவுன்ஸ் ராகத்தின் இனிய இழைகள் ஒரு தெய்வானுபவமாக வீணையினின்றும் விரிந்து இழைந்து, தெய்வலோகத்தில் நிச்சயிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு பிணைப்பின் சந்திப்பாக அறிமுகப்படுத்துகின்றன. சத்யவான், உயர்குடிப் பிறப்பும், அறிவின் ஒளியும் சுடரும் அழகன், ஒரு காலத்தில் பேரரசனாக விளங்கியவனும் தற்போது விதிவசத்தால் கண்ணிழந்தவனுமான தன் தந்தைக்குப் பழங்களும் நீரும் பரிந்தளிக்கிறான். ராக இழைகள் இந்தக் கருணையே வடிவான அரசிளங்குமாரனை நமக்குப் பரிச்சயமாக்குகின்றன. அவனுடைய கம்பீரமான இளமை பொங்கும் வடிவை இனிய காட்சியாக்குகின்றன.
கண்ணோடு கண்ணிணை நோக்கிக் கலந்து இருவரின் இதயங்களும் ஒன்றாகச் சங்கமிப்பதனை சாரங்கா ராகத்தின் சிருங்காரமான இழைகள் உணர்த்துகின்றன. யுகாந்தரங்கள் போலும் நீண்ட மௌனமான பொழுதின் முடிவில், ‘இவரே என் மணாளன்’ என அவள் தெளிகிறாள். காதலில் பொங்கியெழும் சாரங்காவின் ராக அலைகளின் ஆர்ப்பரிப்பின் பின்னணியில் அரசிளங்குமரி மகிழ்ச்சிக் கடலில் நீந்தியபடி தன் தேர்வைப்பற்றித் தந்தையிடம் கூறத் திரும்புகிறாள்.
சாவித்ரி அசுவபதியிடம் சத்யவானுடனான தனது சந்திப்பைப் பற்றிக் கூறுகிறாள். அங்கு விருந்தினராக வந்திருக்கும் நாரத முனிவர் அரசனிடம் ‘சத்யவான் இன்னும் ஓராண்டுக் காலமே உயிர் வாழ்வான்; அவனுக்கு ஆயுள் குறைவு’ எனத் தெரிவிக்கிறார். ரேவதி ராக இழைகளின் ஒலியில் அரசனின் ஆதங்கமும் சோகமும் அதிர்ச்சியும் தெரிகின்றன. ஆனால் சாவித்ரி, “இவரே என் மணாளன்” எனும் தனது உறுதியிலிருந்து தளரவில்லை.
கலங்கிய உள்ளத்துடனும் கனத்த கண்களுடனும் அசுவபதி சாவித்திரியைச் சத்யவானுக்கு மணமுடித்துக் கொடுக்கிறான். காபி ராகத்தின் ஸ்வர அலைகள் இந்தப் பிணைப்பை உறுதிப்படுத்தி ஆசிர்வதிக்கின்றன. கணவன் சத்யவானுடன் சாவித்ரி அவனுடைய எளிய குடிலில் வாழச் செல்கிறாள். மோன நிலையில் ஒலிக்கும் ப்ருந்தாவன சாரங்காவின் உள்ளத்தை உருக்கும் ராக இழைகள் அவள் தன் கணவனின் நலனுக்காக நோற்கும் கடினமான நோன்புகளை நமக்குச் சித்திரிப்பதுடன், நெஞ்சில் அவள் மட்டுமே உணர்ந்து தவிக்கும் வேதனை நிரம்பிய விதியின் விளையாட்டையும் நமக்கு உணர்த்துகின்றன. தவிர்க்க முடியாத விதியின் இந்த விளையாட்டின் முடிவை எதிர்நோக்கியவாறே ஓராண்டும் ஓடிச் செல்கிறது.
இதயத்தைப் பிழிந்தெடுக்கும் இரக்கம் சொட்டும் சாருகேசி ராக இழைகள் சுழன்றெழுந்து சாவித்ரியின் இதயத் தாபத்தையும் சொல்லொணா வலியையும் உணர்த்துகின்றன. விதியால் நிச்சயிக்கப்பட்ட அந்த நாளில் கனத்த இதயத்துடன் சாவித்ரி சத்யவானுடன் காட்டிற்குச் செல்கிறாள். விறகுவெட்ட முற்பட்டுச் சிறிதே நேரத்தில் களைப்படைந்த சத்யவான் அவள் மடியில் தலை வைத்துப் படுக்கிறான். நேரம் விரைந்து செல்ல, எமதர்ம ராஜனின் நிழலுருவம் சாவித்ரியின் கண்களுக்குப் புலனாகிறது.
சோகம், அவலம், தவிப்பு இவற்றைப் பெருக்கியவாறு தொடர் அலைகளாக விரியும் ஷண்முகப்ரியா ராகத்தின் பின்புலத்தில் எமதர்ம ராஜன் சாவித்ரியிடம் கூறுகிறான்: “பெண்ணே! உன் கணவனின் வாழ்நாள் இவ்வுலகில் இன்றுடன் முடிவுற்றது. அவனுடைய உயிரை நான் எடுத்துச் செல்லவேண்டும்.” கணவனின் பூத உடலை இலை தழைகளால் பத்திரப்படுத்தியவள், எமனைத் தொடர எத்தனிக்கிறாள். விறுவிறுப்பாகத் தொடரும் ‘தான’த்தின் தொனியில் எமன் கூறுவது கேட்கிறது. “குழந்தாய்! உனது நேரம் இன்னும் வரவில்லை. திரும்பிச் சென்று உன் கணவனின் அந்திமக் கிரியைகளைச் செய்வாயாக.”
இப்போதுதான் சாவித்ரிக்கும் எமனுக்குமான வாக்குவாதம் துவங்கி, சூடு பிடிக்கிறது.
“எனது இடம் என் கணவருடன்தான்,” சாவித்ரி. கீரவாணி ராகம் விரிந்தெழுந்து அவளுடைய மன உறுதியைக் காட்டி நிற்கின்றது. அவளுடைய மன உறுதியை வியக்கும் எமன், அவளுக்கு அளிக்கும் முதல் வரத்தை ராக இழைகள் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. கணவனின் உயிரைத்தவிர வேறென்ன வேண்டுமாயினும் அவள் வரமாகக் கேட்கலாம்.
லதாங்கி ராகத்தின் அழுத்தமான, ஆனால் துயரம் தோய்ந்த ஸ்வரக் கோர்வைகளினூடே தன்னலமற்ற அச்சிறுபெண் தனது மாமனாரின் இழந்த கண் பார்வையையும், இழந்த நாட்டையும் மீட்டுத்தர வரம் கேட்கிறாள்.
மாயாமாளவகௌள ராக இழைகள் ஆச்சரியத்திலாழ்ந்த எமனை நம் கண்முன்பு நிறுத்துகின்றன. முதல் வரத்தை அளித்த எமன், விடாது மீண்டும் தன்னைத் தொடரும் அவளுக்கு மனம் நெகிழ்ந்து இன்னொரு வரமும் – கணவனின் உயிரைத் தவிர – அளிக்கிறான்.
சஹானா ராகம் அமைதியாகவும், வேண்டுதலாகவும் ஒலிக்கும் கனத்ததொரு பின்னணியில் சாவித்ரி திட மனதுடன் தன் தந்தை அசுவபதிக்கு ஆண் வாரிசுகளை வேண்டுகிறாள். வரமளித்த எமன் சத்யவானின் உயிருடன் விரைய, சாவித்ரி இன்னும் அவனைத் தொடர்வதனை நிறுத்தவில்லை.
“பெண்ணே! கடைசியாக ஒரு வரம் தருகிறேன், உன் கணவனின் உயிரைத் தவிர்த்து – பெற்றுக்கொண்டு திரும்பச் செல்!” எமன் கூற, தர்மவதி ராகத்தின் அழுத்தமான, உறுதியான இழைகள் பொங்கியெழுந்து, சாவித்ரி கேட்கும் வரத்தைச் சத்தியமான வேண்டுதலாக்கி உறுதிப்படுத்துகின்றன.
“எனக்குக் குழந்தைகள் வேண்டும்!” – சாவித்ரி.
“ஆகட்டும். தந்தேன் அந்த வரத்தையும்,” என்ற எமதர்ம ராஜன் வரத்தின் பொருளையும், தான் அவசரத்தில் அதனை அளித்துவிட்டதையும் அறிந்து திகைத்து நிற்கிறான்.
உருக்கமாக ஒலிக்கும் சக்ரவாக ராகத்தின் பின்னணியில் தீனமான ஆனால் தெளிவான சிந்தையுடன் நியாயத்தை உணர்ந்த சாவித்ரி கேட்கிறாள்: “என் கணவரின்றி நான் குழந்தைகள் பெற்றுக்கொள்வது எவ்வாறு சாத்தியம்?”
“பெண்ணே! நீ வென்றுவிட்டாய்! உன் கணவனின் உயிரைத் திரும்பத் தந்தேன்,” என ஆசிர்வதிக்கும் எமனை வணங்கி, ஆனந்தம் கொப்பளிக்கும் மோஹனகல்யாணி ராகத்தின் உயிர்ப்பான, மங்களமான இழைகளினூடே கணவனின் கரங்களைப் பற்றியவாறு புதிதாகத் துவங்கிய தன் வாழ்க்கையை நோக்கிக் குதிநடையிடுகிறாள் அந்த அதிசயப் பெண் சாவித்ரி.
அவளுடைய கனவு மெய்ப்பட்டது; வாழ்வின் குறிக்கோளை அடைந்துவிட்டாள்!
என்னுடைய இசைத் தொகுப்பும் உயிர்பெற்று என்னுடன் உலாவுகிறது; இழைகிறது. இனம் புரியாத பேரானந்தத்தில் மனம் குதூகலிக்கின்றது.
பின் குறிப்புகள்:
சாவித்ரி – புது யுக வகை இசையின் சில பகுதிகளை இங்கே கேட்கலாம்: https://www.2002music.com/savitiri/
சாவித்ரி – ஓர் ஆபெரா – ஹோல்ஸ்டின் ஒரு நிகழ்ச்சியை இங்கே பார்த்தபடி கேட்கலாம். இது மேலைச் செவ்வியல் இசையின் அடிப்படையில் நடப்பது. மொழி ஜெர்மன். https://www.2002music.com/savitiri/
(கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள காணொலி இசைப்பகுதிகள் சொல்வனம் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவை, Youtube-இல் கிடைப்பவை.)
_________________________________________________
One Reply to “சாவித்ரி- ஓர் இசை”