கவிதைகள் – வ. அதியமான்

கரும்பொன்

அந்த
சூதாடிக் கிழவனின்
மூக்குப்பொடிச்
சிமிழினை
எப்படியும்
இன்று
திறந்து பார்த்துவிட
வேண்டும்
வென்றாலும்
தோற்றாலும்
ஒரு போதும்
தாழ்வதில்லை
அவன் தலை
அவனை
நிலம் தாங்கும்
அந்த
பணயப் பொருளை
அதில் தான்
பதுக்கி
வைத்திருப்பதாக
எல்லோரும்
சொல்லிக் கொள்கிறார்கள்
அவன்
உறங்கா விழிகள்
சிறு குருவிகளின்
மழலையில்
ஒரு கணம்
நின்று
உறைகிறது
விரைந்து
எடு
ஓசை எழாது
திற திற
தேவதைகள்
கந்தர்வன்
பூதங்கள்
ஆவிகள்
எதுவும்
காணக்கிடைக்கிறதா?
எதுவுமே
இல்லையா?
பிறகு?
குன்றா
கரும்பொன்
இரவுகளை
பட்டுத் துணிபோல
சுருட்டி
வைத்திருக்கிறான்

***

பறி

நடனமாட
கால்கள்
அவசியமென
காத்திருப்பவன்
கடைசிவரை
என் முலைகளை
தொடப்போவதில்லை
அனுதினமும்
நிறைந்த
உண்டியலை
ஒரு கணத்தில்
ஓங்கி உடைக்கும்
உலகமிது
உளம் கூர்ந்து
செவி கொள்
அலைகள் மட்டுமல்ல
கடற்கரை
பொன்மணலின்
ஒவ்வொரு பருக்கையும்
பாடிக்கொண்டு தான்
இருக்கிறது
மூடனே
நாளெல்லாம்
நாவூறி கிடப்பவனே
இரவின் மதுவுக்கு
கதிரவன் அணையும்வரை
காத்திருக்க
வேண்டியதில்லை
இருவிழி இமைகளை
இறுக மூடு
அது போதும்

***

யசோதா

தேகமெங்கும்
குரல் முளைத்து
கூவி நிற்கிறாய்
கொள்ளும் செவிகள்
திரும்ப வருமென
இடுப்பில் கையூன்றி
உறுதியாய்
காத்திருக்கிறாய்
அமரும் குருவியல்ல
இந்த கிளையில்
அத்தனையும்
பறக்கும் குருவிகள்
கரிய யமுனையில்
நாங்கள்
நர்த்தனமிட
காளிங்கன்
மட்டுமல்ல
கோபியர்களும்
துயில் கலைந்தனர்
துகில் மறந்தனர்
பீலி சூடும்
குழலோன்
சிறு குழலூதி
புவனங்களை
மேய்த்துவர
கிளம்பிவிட்டான்
அவன் நீங்காநிழல்
நாங்கள்
ஒன்று செய்
இனி உன்
வாய்ச்சொற்கள்
யாவையும்
நெய் வடியும்
அக்கார அடிசிலாக்கு
அப்போது
உன் கிளைக்கு
எங்கள் சிறகுகளை
அமர்த்துவான்
அந்த அழகன்

***

பசி

எத்தனை முறை
என் விழிகளை
அதிர்ச்சியில்
அச்சத்தில்
உறைய வைத்து
செதில்கள் சிலிர்க்க
நொடியில் சரசரத்து
மாயமாகி இருக்கிறாய்?
சற்றும் நான்
எண்ணியே இராத
இடங்களில்
உன் வால் நுனியால்
கோலமிட்டு
எனை மட்டும்
ஏன் அழைக்கிறாய்?
உன் படமெழுந்த
வைரங்களை
கனவில்
கொண்டு வந்து
எதற்கு நிறுத்துகிறாய்?
கலையா நெடுந்துயிலை
எனக்கென
உன் நெளிவுகளில்
பொத்தி வைத்து
காத்திருக்கிறாயா?
என் பாதச்சிவப்பை
உன் விழிகளுக்கு
அறியத் தருகிறேன்
உன் பற்களுக்கு
அள்ளித் தருகிறேன்
மலைச்சுனையை
திறந்து கொள்
என் சிறகினை
எனக்கே
தந்துவிட்டு
நீ பசியாறு

**

யோக ஜாதகன்

பார்த்திருந்த
அத்தனை
விழிகளிலும்
பாதம் பதித்து
வெறுங் காற்றில்
வாள் சுழற்றி
ஒரு வழியாய்
அரண்மனைக்குள்
நுழைந்தாயிற்று
அரியணையும்
மணிமுடியும்
எவருக்கு ஐயா
வேண்டும்?
பழைய ஆயுத கிடங்கில்
தூக்கி வீசுங்கள் அதை
முன்னவர்
சொன்னதை நம்பி
உயிரை
பணயம் வைத்து
உள்ளே
வந்தேன் ஐயா
தேசம் என்றால்
ஆட்சி உண்டு
ஆட்சி என்றால்
அரண்மனை உண்டு
அரண்மனை என்றால்
அரசன் உண்டு
அரசன் என்றால்
சகல சம்பத்துக்களுடன்
ஒரு அரசியும்
உண்டு தானே?
மஞ்சத்திலும்
நந்தவனத்திலும்
மட்டுமல்ல
எந்த வனத்திலும்
அவளை
காணவில்லை
அவள்
குறித்து கொடுத்த
நாளினை
அவளே
மறந்தாளோ?
தோழிகளோடும்
சேடியரோடும்
தேவதையாய்
துள்ளி துள்ளி
வெள்ளியோடு
சேர்ந்து
எங்கிருந்தோ
முளைத்து வருகிறாள்
என்
நிழலையும்
மிதிக்காது
கனவில்
மிதந்து செல்கிறாள்
விழிகள் பூத்து
கால்கள் ஓய
ஒரு நட்சத்திரமாய்
உதிர்கிறேன்
நாளை காலை
சுபமுகூர்த்த வேளையில்
நான்
கழுவில் ஏறி
அமர வேண்டும்
ஐயா
யானை
வாய்க் கரும்பாய்
போருக்குப்
போயிருக்கும்
அரசன்
நீடு வாழ்க
நீடு வாழ்க

***

கருங்குரங்கு

அறைக் கதவினை
ஓங்கி
அறைந்து
தாழிட்டு
இவ்வுலகினை
இல்லாமல்
செய்துவிட
கூடுமெனில்
ஒரு ஜன்னலை
தாழ் திறந்து
ஏன்
ஒரு பிரபஞ்சத்தை
இழுத்துக்கொண்டு
வரக்கூடாது
இந்த வீட்டுக்குள்?
எப்படியும்
நாளை
இந்த கூரையை
பிய்த்தெறிந்து
உள்ளே
குதிக்கப் போகிற
கருங்குரங்கு தானே
அது
வீண் பிடிவாதம்
நமக்கு
தகாது தம்பி
கண் சிமிட்டாது
பார்த்திருக்கும்
அந்த
நட்சத்திரங்கள்
நாளை
உன் வரலாற்றை
என்னவென்று
சொல்லும்?

***

7 Replies to “கவிதைகள் – வ. அதியமான்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.