கருவாய் உயிராய்

அனுபவக் கட்டுரை

இந்தக் கட்டுரையின் நோக்கம், உலகில் 8 – 10 சதவீதம் மகப்பேறு காலத்துப் பெண்களையும் அவர்களின் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் சேர்த்தே பாதிக்கும் இளம்பேற்றுக் குளிர் காய்ச்சல் (Pre-Eclampsia) எனப்படும் நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். இங்கு நான் எழுதியிருப்பது என் சொந்த அனுபவம்.

இரண்டாயிரமாவது ஆண்டிற்குப்பின் தகவல்தொடர்புத் துறையில் ஏற்பட்ட கணிசமான வளர்ச்சியில் வளர்ந்தவர்களில் நானும் ஒருத்தி.

திருமணத்திற்கு முன்னர் அமெரிக்கா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் சென்று வேலை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதே, என் பெற்றோருக்காகச் சென்னையில் ஒரு குடியிருப்பு வீட்டையும் வாங்கிவிட்டேன். என் சொந்தச் செலவில் திருமணம் செய்துகொள்ளும் இன்றைய நம்பிக்கைப் பெண்களில் ஒருத்தியாக நிமிர்ந்து நின்றேன்.

ஆண் – பெண் என்ற பேதம் நீங்கி, எல்லோரும் சமம் என்று வாழும் சமுதாயத்துக்காக ஏங்கும் மனப்போக்கு உடையவள் நான்.

திருமணம் முடிந்து சிங்கப்பூரிலும் அதே துறையில் வேலை பார்த்து வந்தேன்.

என் பெற்றோரின் மூன்று பெண்களில் இரண்டாவதாக இருந்த எனக்குத் திருமணத்தின்போது வயது இருபத்தி ஏழு. குழந்தை பிறப்பைத் தள்ளிப்போட எந்த முயற்சியும் செய்யாதபோதும்  திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளில் நான் கருத்தரிக்கவில்லை. அதன பின் மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில், மீண்டும் ரத்தப்போக்கும் வயிற்று வலியும் வர, சிங்கப்பூரில் கே கே மருத்துவமனைக்குச் சென்றேன்.

ரத்தப் பரிசோதனையில் HCG எனப்படும் மகப்பேற்றை உறுதி செய்யும் ஹார்மோன் அளவு அதிகமாக இருக்க, மருத்துவர் கருச்சிதைவு ஆகிவிட்டதாகச் சொன்னார்.

கர்ப்பம் என்றால் மாதவிடாய் வராது என்பதுதான் நான் அறிந்திருந்தது. என் அனுபவம் வேறாக இருந்தது. என் மாதவிடாய்ச் சுழற்சி சரியான நாள் இடைவெளியிலும், உடல் எடை சரியாக இருந்தும் இது நடந்தது. அதன்பிறகு போலிக் அமில மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தேன்.

வெளிநாடுகளில் வாழும் என் போன்றவர்களுக்கு நண்பர்கள்தான் சுற்றம்.

எங்கள் நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்குக் குழந்தைகள் பிறந்துவிட்ட பிறகு, தனிமையாக உணர ஆரம்பித்தோம். 

HSG எனப்படும் கருமுட்டைக் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா எனக் கண்டறியும் சோதனையைச் செய்துவந்தேன். என் கணவருக்கு அவர் உடல்கூறுகளில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

இறுதியில், கருத்தரிப்புக்கான சிறப்பு மருத்துவரிடம் சரணடைந்தேன்.

அவர் என் கருமுட்டை வளர்ச்சி உரிய அளவில் இல்லை என்று சொல்லி ப்ரோஜெஸ்டெரோன் (Progesterone) ஊசிகளைப் போட்டார்.

அசைவ உணவுகளில் மீன் வகைகளைச் சாப்பிடுவோருக்கு இந்த உட்சுரப்பு நீர்ச் சுரப்பில் குறைபாடு இருக்காது. சைவ உணவுப் பழக்கம் உள்ள எனக்கு இது ஏன் குறையானது என்று பெரியவர்கள் யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.

சைவ உணவு சாப்பிடுபவர்கள், பீன்ஸ், பச்சைப் பூக்கோசு போன்ற காய்கறிகளைப் பச்சையாகவோ அல்லது பாதி வேக வைத்தோ  அதிகம் சாப்பிடவேண்டும்.

ஓரிரு மாதங்களுக்குப் பிறகும் கருத்தரிப்பு நடக்கவில்லை என்றபோது, லேப்ராஸ்கோபி (Laprascopy) முறையில், சூலகத்தில் (PCOS) இருந்த கட்டிகளை நீக்கி, சூலகங்கள் தங்கள் வேலையைச் செய்ய என்று, அவற்றில் மெலிதான ஓட்டைகளைப் போட்டார்கள். (Ovarian drilling.)

அதன் விளைவாக ஓரிரு மாதங்களில் கருவுற்றேன். ஆனால் இந்தச் சிகிச்சையால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும், அதிக ரத்தப் போக்கோடுக் கூடிய மாதவிடாயால் அவதியுறுகிறேன்.

கருத்தரிப்புக்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்கள் நினைவில் கொள்ளவேண்டியது, இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் உடலின் நீடித்த பாதிப்புகளை உண்டாகும் என்பதுதான்.

இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் வரம் நம் உடல். “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே” என்கிறார் திருமூலர். நம் பாரம்பரிய மருத்துவ முறைகளை அடுத்த அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டியதன் அவசியத்தை என் அனுபவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.

வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு அவர்கள் வாழும் நாடுகளில்  மாற்று மருத்துவ முறைகளில் தேர்ச்சிபெற்ற மருத்துவர்கள் கிடைப்பதில்லை. இது இன்றளவும் சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில்கூட நிதர்சனம்.

இப்போதெல்லாம் பெண் பிள்ளைகள் பத்து வயதில் பருவம் அடைகிறார்கள். படித்து, வேலை பார்த்து, தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் பெண்களில் பலருக்கும் என்னைப்போன்ற சோதனைகள் ஏற்படலாம்.

இன்றும் என் கர்ப்பத்தை உறுதிசெய்த கருவியின் புகைப்படம் என்னிடம் இருக்கிறது. வார்த்தைகளில் சொல்லமுடியாத உணர்வு அது.

வீட்டு வேலைக்கென யாரும் இல்லை.யாரையாவது நிரந்தரமாக அமர்த்த வேண்டும் என்று முகவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.

ஐம்பது நாள்களைத் தாண்டுவதற்குள்ளே இளஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியாவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். மருத்துவர் மீண்டும் ப்ரோஜெஸ்டெரோன் ஊசிகளைக் கையில் எடுத்தார். கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் இடது வலது என்று மாற்றி மாற்றி இடுப்புப் பகுதியில் தினமும் ஊசி போட்டுக்கொண்டு, வீட்டிலிருந்தப்படியே வேலையைத் தொடர்ந்தேன்.

அதன்பிறகு, வழக்கமாகக் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தி, மயக்கம் என ஒன்றுமே இருக்கவில்லை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, கருவளர்ச் செல்வன் வளர ஆரம்பித்தான்.

ஆறு வாரங்களுக்குப் பிறகு இதயத்துடிப்பு உறுதி செய்யப்பட்டது. சொல்லிக் கொள்ளும்படியாக எந்தச் சிக்கலும் இல்லாமல் ஆறு மாதங்கள் கழிந்தன.

இதற்கு நடுவில் நான் வாங்கிய சென்னை அடுக்கக வீட்டில் சிக்கல் ஆரம்பம் ஆனது. அந்த வீட்டை எனக்குக் கட்டிக்கொடுத்த தொழில் அதிபர் செய்த மோசடி அப்போதுதான் அம்பலம் ஆனது.

நீதி வாழ்நாள் முழுவதும் கிடைக்காத இந்தியா போன்ற நாடுகளில், ஓர் இளம்பெண் தன் காலில் நிற்க முயற்சி செய்வது எத்தனை இழுபறிகளையும் வாழ்க்கைச் சிக்கல்களையும் உண்டாக்குகிறது என்பதைக் கண்ணாறக் கண்டேன்.

என் பெற்றோர் பணக்காரர்கள் அல்லர். சமூகத்திற்கான பங்களிப்பைச் சரியாகச் செய்த ஆசிரியர்கள். அவர்களை வயதான காலத்தில், நிம்மதியாக இல்லாமல் செய்துவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி எனக்கு மேலிட ஆரம்பித்தது.

வேலை இடத்திலும் அதிக வேலைப் பளு. இந்தியாவில் யாரோ செய்த மோசடியில் மாட்டிக்கொண்டு, தூரத்தில் துடிக்கும் புழுபோல ஆனேன்.

பல நேரங்களில் நல்லவர்கள் சொல்லும் அறிவுரை நம் காதுகளின் வழியாக உள்ளே செல்லவும் இறையருள் வேண்டும்.

அப்போது யார் என்ன சொன்னாலும், மனம் பிரார்த்தனையில் இருந்தாலும், மறைமுகமாக மனதில் வலி இருக்கவே செய்தது.

இருபத்தி எட்டு வாரங்களைக்கடந்து விட்டேன். குழந்தையின் பேரழகு முகத்தையும் ஒருமுறை மருத்துவர் பரிசோதனையின்போது காட்டினார். ஆண் குழந்தை என்பதையும் சொல்லிவிட்டார்.

அதன் பிறகு என் கர்ப்பம் என்ற கப்பல் , நான் அறியாமல் திசைமாறத் தொடங்கியது.

திடீரென்று அதிகக் காய்ச்சல் வந்தது. அருகில் இருந்த பொது மருத்துவரிடம் போனோம். அவர் எங்களை உடனடியாக எங்கள் மகப்பேறு மருத்துவமனைக்கு விரைந்து போகச் சொன்னார்.

இரவு முழுவதும், பிரசவ வலி எடுக்கும் பெண்களுக்கான அறையில் வைக்கப்பட்டேன். அன்றைய இரவில், எண்ணங்களற்று மூளை வேலை செய்யாததுபோல உணர்ந்தேன்.

வயிற்றைத் தடவியபடியே இருந்த என்னிடம் என் மருத்துவர், Pre-Eclampsia எனப்படும் இளம்பேற்றுக் குளிர் காய்ச்சலைப் பற்றிச் சொன்னார்.

விஷயம் இதுதான். என் ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தது – 150/100. அத்துடன், என் சிறுநீர் அதிகப் புரத அளவைக் கொண்டிருந்தது. இவை இரண்டும்தான் – கர்ப்பிணிகளுக்கும் அவர்கள் வயிற்றில் இருக்கும் கருவிற்கும் உலை வைப்பவை.

பெரும்பாலும் கர்ப்பிணிகள் இந்த உயர் ரத்த அழுத்தத்தை உணரமாட்டார்கள். எனவே இதனைச் சொல்லாமல் கொல்லும் (Silent Killer) என்கிறார்கள்.

இரண்டு வாரங்கள் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொண்டு மருத்துவமனையில் இருந்தேன். வீட்டுக்கு மருந்துகளோடும், ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவியோடும் வந்தேன். என் கணவர் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து, மருந்துகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

ஓரிரு வாரங்களுக்குப் பிறகும் ரத்த அழுத்தம் தொடர்ந்தததால், குழந்தையை  ஊடுகதிர் (Scan) வழியாக ஆராய்ந்தார்கள். என் முப்பதாவது கர்ப்ப வாரத்தில் குழந்தையின் எடை ஒரு கிலோ, இருநூறு கிராம் (1.2 KG) இருந்தது.

குழந்தை குறைமாதப் பிள்ளையாக , அதிக எடை இல்லாமல் பிறக்க அதிகச் சாத்தியக்கூறுகள் இருப்பதை மருத்துவர் எடுத்துச் சொன்னார்.

அடுத்த நான்கு வாரங்கள் எப்படியாவது குழந்தையை வயிற்றில் தங்க எல்லா முயற்சிகளையும் செய்வதாகச் சொன்னார். முப்பதினான்கு வாரங்களுக்கு முன்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி முற்றுப்பெற்று இருக்காது. இதுவும் நான் அறிந்திராத தகவல்.

முப்பது வாரத்தில் தொடங்கி மருத்துவமனை வாசம். குரங்கை நினைக்கக்கூடாது என்று குரு சீடனிடம் சொன்னாராம். சீடன் எப்போதும் குரங்கின் நினைவாகவே இருந்தானாம். அப்படித்தான் நானும் இருந்தேன். 

எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க, என்னைச் சுற்றி நல்ல பாடல்களைப் போட்டு, என்னைச் சிரிக்கவைக்க என் கணவரும், அம்மாவும் முயற்சி செய்தார்கள். எனக்கு இறைநம்பிக்கை இருந்தாலும், ஏன் இப்படி ஆனது என்ற கேள்வி குடைந்துக்கொண்டே இருந்தது. என் குழந்தை இல்லை என்றால் நானும் இல்லை. இது மட்டுமே என் தீர்மானமாக இருந்தது!

எங்கள் மருத்துவர், பேறு காலத்தில் ஆகப்போகும் மருத்துவச் செலவைக் கணக்கில்கொண்டு, சிங்கப்பூரில் நிரந்தரக் குடிவாசிகளான எங்களைப் பிரசவத்திற்குச்  சிங்கை பொது மருத்துவமனைக்குப் போகுமாறு அறிவுறுத்தினார். எப்படியும் அறுவை சிகிச்சைதான் செய்யவேண்டும் என்பதும் தீர்மானம் ஆகிவிட்டது. குழந்தை குறைந்த எடையில் பிறந்தால் வீட்டுக்கு எடுத்து செல்ல ஒரு மாதம்கூட ஆகலாம். தாயின் சிறுநீரகம் பாதித்து இருக்கக்கூடும் என்றெல்லாம் சொன்னார். நாங்கள் யோசிப்பதாகச் சொல்லியிருந்தோம்.

என் மருத்துவர் திருமதி யுனிஸ் சுவா, ஒரு சீனர். தனியார் மருத்துமனையில் சிகிச்சை செய்பவர் .நான் பார்த்த பெண் மருத்துவர்களில், அதிகக் கனிவுகொண்ட இவரைவிட்டு, கடைசி நாள்களில் வேறு மருத்துவரிடம்போக எனக்கு ஆகபட்ச கலக்கம். என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

(மருத்துவர் யூனிஸ் சுவா)

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டின் முதல் நாள். இந்தியாவின் கடை அடைப்புப்போல சிங்கப்பூர் இருக்கும்.

தனியார் மருத்துவமனையில் இருந்த என்னிடம் தாதி ஒருவர் குழந்தையின் அசைவை நான் உணரும் நொடிகளில், ஒரு பொத்தானை அழுத்தச் சொன்னார். குழந்தையின் இதயத் துடிப்பை அவர் கண்காணித்தார்.

அவர் முகத்தில் தெரிந்த பயரேகை என் முகத்தில் இருந்த உணர்ச்சிகளை மொத்தமாகத் துடைத்தது.

மருத்துவர் சற்று நேரத்தில் வந்தார். அதன்பிறகு என்னிடம், இன்று உங்கள் குழந்தை பிறக்கப்போகிறது என்றார். குழந்தையின் இதயத் துடிப்பு குறைந்திருந்ததை அவர் என்னிடம் சொல்லவில்லை.

குழந்தையின் நுரையீரல் வேலை செய்வதற்காக என்று ஒரு ஊசியைப் போட்டார். உடனே, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குச் செல்லுமாறு சொல்லி, அங்கே மருத்துவர் தேவ் என்பவரைத் தொடர்புகொண்டார். மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்தன.

நிலைமை கட்டுக்குள் இல்லை என்பதை வார்த்தையால் சொல்லிக் கொள்ளாமல், நானும் என் கணவரும் கைகளைப் பிடித்தபடி பேச்சற்று இருந்தோம். இறைவா, பல சவால்களுக்குப் பின்னான பிள்ளை. அவனை என் கையில் முழுமையாகத் தா என்று சொல்லிக்கொண்டே இருந்தோம்.

என்னைப் பயமுறுத்த வேண்டாம் என்று ஒரு சிற்றுந்தில் என் கணவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுவந்தார். நாங்கள் இறங்கும் நேரம் ஐந்து தாதிகள் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என் தலையைத் தடவி அணைத்த அவர்கள் யாரும் தமிழ் பேசுபவர்கள் அல்லர்.

அரசு மருத்துமனை பற்றிய என் பிம்பம் முற்றிலும் உடைந்தது.

சற்று நேரத்தில் என் உடல் முழுவதும் குழாய்கள் இணைக்கப்பட்டன. என் குழந்தைக்கென ஒரு தொட்டி வந்தது. குழந்தையின் நுரையீரலுக்கான இரண்டாவது ஊசியும் போடப்பட்டது.

மருத்துவக் குழுவினர் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். முதுகுத் தண்டில் ஊசி போட்ட மருத்துவரின் பெயர் சுதாகர்.அது என் மைத்துனரின் பெயர். தெரியாத முகங்களோடு, தொடர்புபடுத்த என் மூளை முயற்சி செய்தது.

இரவு மணி ஒன்பதுக்கு என் குழந்தை வயிற்றைக் கிழித்து வெளியே எடுக்கப்பட்டான். பிறகு எனக்கு மயக்கம் தெளிய முப்பத்தாறு மணி நேரத்துக்கும் மேல் ஆனது.

இப்போது எங்கள் மகனுக்கு பத்து வயதாகிறது. பியானோ, நீச்சல், பாட்டு, படிப்பு என்று இன்று அவன் இருக்கும் வேகம் தொட நாங்கள் பல சவால்களைத் தாண்டி வந்தோம். என் குழந்தையை வீட்டுக்கு எடுத்துவர எனக்கு முப்பத்தாறு நாள்கள் ஆனது.

குழந்தையை வீட்டுக்கு எடுத்துவந்த பிறகு, கொரோனா காலத்தைப்போல, யாருக்கும் எங்கள் வீட்டுக்குள் அனுமதி இல்லை. ஐந்தாம் மாதத்தில் பெயர் வைத்தோம். இதய வால்வுகள் மூடிக்கொள்ள ஏழு மாதங்கள் ஆனது. பேச்சு, நடை என்று எல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டியிருந்தது. பணியிட வேலையில் மோகித்திருந்த என்னை, என்னை மட்டுமே நம்பியிருக்கிற ஜீவன் வேலையை சில ஆண்டுகள் விடவைத்தான்.

என் அனுபவத்திருந்து தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்கள்:

 • எந்தக் காப்பீடு நிறுவனமும் குழந்தையின் முதல் முப்பது நாள்களுக்குக் காப்பீடு வழங்கமாட்டார்கள்.
 • வளர்ந்த நாடுகளில் பொது மருத்துமனை சேவைகள் தனியார் மருத்துவமனைகளை ஒத்திருக்கின்றன. ஆனால், பொது மருத்துவமனைகளில் செலவு கணிசமாகக் குறையும். என் பேறு காலச் செலவு தனியார் மருத்துவமனையில் 70,000 சிங்கப்பூர் டாலர். (குழந்தையை வீட்டுக்கு எடுத்து செல்லும் வரை.) பொது மருத்துவமனையில் செலவு: 15,000 சிங்கப்பூர் டாலர்.
 • மனநலம் என்பது கர்ப்பிணிகளுக்கு மிக மிக முக்கியம். எந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. வயிற்றிலிருக்கும் பிள்ளை சீக்கிரமாக வெளியே வந்தால் அதன் இதயம், நுரையீரல் போன்ற பாகங்கள் முழுவளர்ச்சி பெற்று இருக்காது. அதனால் பெற்றோர்கள் மேலும் அதிக சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
 • இரண்டு கிலோ எடைக்குக் குறைவாகப் பிறக்கும் பிள்ளைகள், சுவாசம் சம்பந்தமான நோய்களை அதிகம் சந்திக்கிறார்கள். எங்கள் குழந்தை பிறக்கும்போது எடை ஒரு கிலோ, நானூறு கிராம். அவனது ஐந்தாம் வயது வரை மூன்று முறையாவது அவனுக்குப்  பிராண வாயு செலுத்த வேண்டியிருந்தது. கொரோனா காலத்தில்தான் ஆக்சிமேட்டர் (Oxymeter) பற்றி அதிகம் மக்கள் கேள்விப்படுகிறார்கள். குறைமாத, குறைந்த எடைப் பிள்ளைகளின் பெற்றோர் இவற்றைப் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள்.
 • குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்செல்ல சிங்கப்பூரில் மூன்று விஷயங்களில் உறுதியாக இருக்கிறார்கள்.
  •  குழந்தை குறைந்தது இரண்டு கிலோ எடையில் இருக்க வேண்டும்.
  •  குளிரூட்டப்படாத அறையில் அதன் வெப்பநிலை சீராக இருக்க வேண்டும்.
  • குழந்தை தாயிடமிருந்தோ அல்லது குடுவையிலிருந்தோ பால் அருந்தப் பழகியிருக்க வேண்டும்.
 • கொரோனா காலத்திற்குப் பிறகும் வாய்ப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது. வேலையா, குழந்தை பிறப்பா என்று முடிவெடுக்க வேண்டியிருந்தால், குழந்தையை நல்லபடியாகப் பெற்றபிறகு வேலையைத் தொடரலாம். பல நேரங்களில், ஆண் மேலாளர்களுக்குப் பெண்களின் பிரச்னைகள் புரியாது. எனவே பணியிடத்திலிருந்து விலக வேண்டும் என்றால், அதை ஒரு தோல்வியாக நினைக்கத் தேவையில்லை.

2 Replies to “கருவாய் உயிராய்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.