
குட்டி பள்ளிக்கூடம் விட்டு வந்தபோது ஜீவா வீட்டிலிருந்தாள்.
“அத்தே….. .வந்துட்டியா…..”
குட்டி ஓடிச்சென்று கட்டிக்கொள்ள, ஜீவாவின்மேல் பான்ஸ் பவுடர் வாசமடித்தது.
“குட்டி…… எப்படிடீ இருக்கே….”
அலுங்கலில்லாத அந்தச் சிரிப்பில் அவளது கன்னச்கதைகள் பளபளத்தன.
“தூக்க முடியாம மூச்சிரைக்குதுடி எனக்கு. பெரியவளாகிட்டே.”
“போன தடவை வந்தப்பவும் இதைத்தான் சொன்னே.”
குட்டிக்கு அலுப்பாயிருந்தது. முற்றத்திலிறங்கி கால் கழுவி மேலேறினாள்.
“அத்தையைக் கண்டதும் உடுப்பு மாத்தத் தோணலையா, போய் மாத்திட்டு வா.”
அடுக்களை உள்ளிருந்து பரிமளாவின் குரல் அதட்டலாக ஒலித்தது. அழுக்கான உடையை உருவி எறிந்துவிட்டு பாவாடை சட்டையோடு வந்தவளை ஜீவா கண்ணிமைக்காது பார்த்தாள். பருவ வயது அவளது உடையில் தெரிந்தது.
“அண்ணியார், குட்டி சீக்கிரம் உட்கார்ந்துடுவான்னு தோணுது.”
ஆருடம்போல் சொல்லவும் பரிமளா அடுக்களையிலிருந்து கைகளை ஓங்கிக்கொண்டு வந்தாள்.
“ஏழாவது படிக்கிற பிள்ளையைப் பார்த்து இப்படியா சொல்லுவே. வாயில போடுவேன்.”
“இப்பெல்லாம் பத்து வயசுலேயே பிள்ளைகள் வயசுக்கு வந்துடறாங்க அண்ணியார். நீங்க என்னமோ சொல்றீங்களே.”
குட்டி இருவரையும் கவனிக்காது டிவியை ஓடவிட்டு அதில் வந்த பாட்டை வெறித்துக்கொண்டிருந்தாள்.
அண்ணியாருக்கும், நாத்தனாருக்கும் பேச ஆயிரம் விஷயங்களிருந்தன. பகல் பொழுதில் உக்கிர மதிய நேரத்தில் கட்டையைச் சாய்க்கும்போது பேச்சில் சுவாரசியம் கூடும்.
“நீ ஊருக்குப் போயிட்டீன்னா எனக்குப் பொழுதே போகமாட்டேங்குதுடி” என்பாள் பரிமளா.
“எனக்கும் இங்கே இருந்துட ஆசைதான். உங்க மாமியார் விடமாட்டேங்குதே” என்பாள் ஜீவா.
குட்டி பிறந்து மூன்று மாதக் குழந்தையாகத் தூக்கி வந்தபோது, பார்த்துக்கொள்ள ஜீவா அனுப்பி வைக்கப்பட்டாள். வந்தவளுக்கு அண்ணன் வீட்டில் சலுகை அதிகம் கிடைத்தது. சின்னண்ணன், அண்ணியாரைவிடப் பெரியண்ணன், அண்ணியாருக்கு நல்ல மனசிருந்தது. குட்டியும் ஜீவாவுடன் ஒட்டிக்கொண்டாள்.
“அயனான வரன் ஒண்ணு வந்திருக்குடி. பையன் உனக்குப் பொருத்தமா இருப்பான். உங்க அண்ணன் அவனை முடிச்சிடணும்னு துடியாத் துடிக்கிறாரு. “
பரிமளா வெங்காயத்தை நறுக்குவதில் மும்முரமாயிருந்தாள். குட்டிக்கு செய்வதற்கு நிறைய வீட்டுப் பாடங்களிருந்தன. அவள் தலையைச் சொறிந்தபடி காலை மடித்துக் குனிந்து எழுதிக் கொண்டிருந்தாள்.
“எவ்வளவு கேட்கறாங்க….?”
ஜீவா, தனக்கு அதிலொன்றும் அவ்வளவாக ஆர்வமில்லை என்பதுபோல் கேட்டாள். கண்களில் சட்டென்று ஒரு மலர்ச்சி தோன்றி மறைந்தது. பரிமளா அரிந்த வெங்காயத்தைக் கிண்ணத்தில் கொட்டிவிட்டுக் கத்திரிக்காயை நறுக்கினாள்.
“ராத்திரிக்கு உங்கண்ணனுக்குப் புளிக்குழம்பு வேணுமாம். இப்படித்தான் இருந்தாப்ல இருந்து எதையாவது கேட்டு வைப்பாரு.”
பரிமளாவுக்கு சலிப்பாயிருந்தது. ஜீவா அவளைப் பார்த்தவாறிருந்தாள். மறுபடியும் அவள் வாயைப் பிடுங்க வெட்கமாயிருந்தது.
குட்டி ஒன்பதாம் வாய்ப்பாட்டை மனனம் செய்து கொண்டிருந்தாள். ஜீவா வந்துவிட்டால் குட்டிக்கு இரவுப் படுக்கை அவளுடன்தான். முயல்குட்டிபோல அவள் மார்பில் ஒண்டிவிடுவாள். ஜீவா மெல்ல காது மடல்களை நீவிவிடுவாள். கால்களைப் பிடித்துவிடுவாள்.
” கால் பிடிக்கிற கணக்குப் பிள்ளைக்கு மாசம் பத்து ரூபா….” என்று பாடுவாள்.
குட்டி கலகலவென்று சிரிப்பாள். குட்டி வளர வளரக் கதைகள் அதிக நேரம் எடுத்துக்கொண்டன. ஜீவா தனக்குச் சொல்லப்பட்ட கதைகளை ஜோடித்து அவளுக்குச் சொல்வாள்.
தானாக மூடிக்கொள்ளும் இமைகளைத் திறந்து வைத்துக்கொண்டு குட்டி கதைகள் கேட்பாள். பள்ளியில் சேர்வதற்கு முன்புவரை ஜீவா அவளுடனே இருந்தாள். பள்ளியில் சேர்ந்தபின் ஊருக்குப் போவதும் வருவதுமாயிருந்தாள்.
கிணற்று நீர் கைக்கெட்டும் தூரத்தில் தளும்பி நின்றது. பொய்க்காத பருவ மழையால் கொல்லையில் பசுமை விரிந்துகிடந்தது. முடக்கத்தான் கீரை வேலியெங்கும் படர்ந்திருந்தது.
ஊடாகப் பிரண்டைக் கொடியில் இளசான காய்கள் இளம்பச்சை நிறத்தில் சங்கிலிக் கண்ணிகளாய் ஓடியிருந்தன. குட்டி கொல்லை வாசற்படியில் நின்று ஜீவா தோள்களில் கை பதித்து எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தாள்.
“பதினஞ்சு பவுன் போடணுமாம். தவிர கல்யாணம் செஞ்சு வைக்கணுமாம். தனிக் குடித்தனத்துக்குப் பாத்திர, பண்டமெல்லாம் வாங்கிக் கொடுக்கணுமாம்.”
பரிமளா, மாமியாரிடம் அலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தாள். ஜீவா பரபரவென்று மனசுக்குள் கணக்குப் போட்டுப்பார்த்தாள்.
“காதுத் தோடு, டிஸ்கோ செயின், அம்மாவின் அந்தக் கால வெள்ளைக் கல் நெக்லஸ் எல்லாம் சேர்த்தால் எட்டு பவுன் தேறியது.
“உனக்கு இன்னிக்கு பூரான் சடை பின்னி விடறேன் வா.”
ஜீவா குட்டியைப் பின்னாலிருந்து வளைத்து இழுத்து உள்ளே கொண்டுபோனாள்.
முற்றத்தில் வெயில் கோடுகளுடன் பரவிக்கிடந்தது. இளங்காலை வெயில் சாட்டையால் அடிக்கவில்லை.
மொதுமொதுவென்று இளஞ்சூடான நீர் வழிவதுபோல இதமாயிருந்தது. ஜீவாக் குட்டியை முற்றத்து விளிம்போரம் அமர்த்தி, தான் வெயிலுக்கு முதுகுகாட்டி உட்கார்ந்துகொண்டாள். தேங்காய் எண்ணெயின் பளபளப்போடு குட்டியின் தலையில் பூரான் ஊர்ந்தது.
“எங்கத்தை பின்னி விட்டுச்சு.”
அன்று முழுக்கத் தெருவில் குட்டியின் அலட்டல் மிகுந்திருக்கும். ஜீவாவின் மனதிலும் பூரான் ஊர்ந்தது. ஏழு சவரன் பூரான். அந்தப் பூரான் தங்க நிறத்தில் மினுமினுத்தது. உடலை அப்படியும் இப்படியுமாக நெளித்து அது இங்குமங்கும் ஓடியது.
ஜீவா சீப்பிலிருந்த முடியைச் சுருட்டிக் கொல்லையில் எறிந்தாள். கிணற்றிலிருந்து நீரிறைத்துக் கைக்ச் சோப்புப்போட்டுக் கழுவினாள்.
“நாலு பச்சை மிளகாய் பறிச்சிட்டு வாடி.”
பரிமளா உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.
கொல்லைக் கடைசியில் வேலியோரமிருந்த மிளகாய்ச் செடியில் மிளகாய்கள் கொத்துக் கொத்தாய்க் காய்த்திருந்தன. அதில் பாதிக்குமேல் மருதாணியிட்ட விரல்கள்போல் பழுத்துக் கிடந்தன. மரக் கிளைகளின் ஊடாக விழுந்த சூரிய ஒளிக் கம்பிகள்பட்டுப் பழங்கள் ஒளிர்ந்தன.
ஜீவா கவனமாக நாலு மிளகாய்களைப் பறித்துக்கொண்டாள். வேலி மீது ஓடிய ஓணான் ஒரு நிமிடம் நின்று தலையைத் தூக்கி அவளைப் பார்த்துவிட்டு ஓடியது. இடையில் ஊர்ந்த கட்டைசூவை எறும்பைப் பிடுங்கி எறிந்துவிட்டு உள்ளே வந்தபோது பரிமளா மறுபடியும் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.
“நீங்க சீட்டு போட்டுச் சேர்த்து வச்சிருக்க அம்பதாயிரத்துல ரெண்டு பவுன் வாங்கிடலாம். மிச்ச பவுனுக்கு வழி பண்ணனும்.”
ஜீவாவுக்குச் சலிப்பாயிருந்தது. கடந்த ஐந்து வருடங்களில் பத்து வரனுக்கு மேல் தட்டிப் போய்விட்டன. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு காரணங்கள். ஒவ்வொரு முறையும் வரன் தகைந்துவிட வேண்டுமென்று அம்மா குல தெய்வத்துக்கு வேண்டிக்கொள்வாள்.
காசும் முடிந்து வைப்பாள். முடிந்து வைத்த காசுகள் வருடாந்திர படையலின்போது உண்டியலுக்குப் போய்ச்சேராமல் சாமி மாடத்தில் ஓர் ஓரமாய்க் கிடந்தன.
ஜீவா குழம்புக்கு மசாலா அரைத்துத் தந்தாள்.
“உங்கண்ணன் சாப்பிடுற நாலு வாய்ச் சோறுக்கு நான் நாள் முழுக்க அடுப்படியில கிடக்கணும்டி. இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்.”
பரிமளா பெருமூச்சுவிட்டு அரைத்த மசாலாவை எடுத்து இரு விரல்களால் நசித்துப் பார்த்தாள்.
“இன்னும் மைய அரை. பட்டுப்பட்டா அரைச்சாதான் குழம்பு வாசனையா இருக்கும். அடுத்தது வாழைக்காய் வறுக்கணும். “
இரண்டு மணிக்கு டிவியில் பழைய படம் போடுவார்கள். அதை பார்க்கும் அவசரம் பரிமளாவுக்கு. ஆனால் ஒருநாளும் படத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்ததில்லை. பெரியண்ணன் ஒன்றே முக்காலுக்குதான் சாப்பிட வருவான். பரிமளா தவித்துத் தண்ணீர் குடிப்பாள். ஜீவா பரிமாற பெரியண்ணன் ஒத்துக்கொள்ள மாட்டான்.
“உங்கண்ணியை வரச்சொல்லு,” என்பான். ஜீவாவுக்கே எரிச்சல் வரும்.
“நான் போடலைன்னா உங்கண்ணனுக்குத் தொண்டைக் குழிக்குள்ள சோறு இறங்காது,” என்பாள் பரிமளா. அன்றும் மதியம் மெதுவாகச் சாப்பிட வந்தான். நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்துபோய்த் திண்ணைப் பெஞ்சில் கட்டையைச் சாய்த்துக் கொண்டான். பரிமளா பரபரவென்று அள்ளி விழுங்கிவிட்டு டிவி பக்கம் ஓடினாள். பதினைந்து நிமிடம் படம் ஓடியிருந்தது.
சின்ன அண்ணியார் பெரிய மனது பண்ணி தன்னுடைய நகையிலிருந்து இரண்டு பவுன் தருவதாக ஒத்துக்கொண்டாள். பரிமளாவுக்கும் தருவதில் ஆட்சேபணையில்லை. நகைப் பிரச்சனை ஒழிந்தது. அம்மா சல்லிசாகப் பாத்திர பண்டம் வாங்கிச் சேர்த்து வைத்திருந்தாள். திருமணச் செலவுக்கு வீட்டை அடமானம் வைப்பதென்று முடிவானது.
“பிற்பாடு அண்ணன், தம்பி ரெண்டு பேரும் கைக்காசைப் போட்டு வீட்டை மீட்டுக்குங்க.”
அம்மாவின் ஆலோசனை இது. ஜீவா கண்களில் கனவுகள் விரிந்தன. இரவுக் கனவுகளுக்குப் பஞ்சமேயில்லை. கனவில் ஜீவா ஒரேமுறை பார்த்த மாப்பிள்ளையுடன் கைகோர்த்துக் கதை பேசினாள். அநியாயத்திற்கு வெட்கப்பட்டுக் கன்னம் சிவந்தாள்.
“ஜீவாத்தை, மாமா கனவு காணுறியா…..” என்று குட்டிகூட கிண்டல் செய்தாள்.
“உதை வாங்குவே.”
ஜீவா அவளை அடிக்க ஓடினாள். சிந்தனையை ஓரிடத்தில் நிறுத்தி வைக்க முடியவில்லை. அது அந்தப் புதியவனைச் சுற்றிவந்தது. யாரும் எதையும் சொல்லி விடுவார்களோ என்று அச்சமாயிருந்தது. கண்டுபிடித்து விடுவார்களோ என்று பதைபதைப்பாயிருந்தது.
“கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. அவ என்கூட இருக்கட்டும், அனுப்பி வச்சிடு. “
அம்மா சொல்லிவிட்டாள். குட்டிக்கு ஜீவாத்தையை அனுப்ப மனசேயில்லை. முகம் தொங்கிப்போய்விட்டது.
“இப்ப வர்ற மாதிரி சட்டுன்னு மினி பஸ் பிடிச்சு வந்துட்டு போவியா அத்தை.”
சுய சமாதானத்துக்காகக் கேட்டுவைத்தாள். ஜீவாவின் தலை அசைந்தது.
மழையின் நீர்த்துளிகள் கோர்த்த சரமாய்க் கொட்டிக் கொண்டிருந்தபோது ஜீவா, குட்டியைப் பார்க்க வந்திருந்தாள். பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை வந்துபோன பழக்கம். இரண்டு மாதங்கள் தாக்குப் பிடித்ததே பேரதிசயம்.
குட்டி, ஜீவாவை இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டாள். மழைநாள் விடுமுறை அவளுக்கு. பொழுதுபோகாமல் வானில் பின்னிப் பிணைந்தூரும் மின்னல்களைப் பார்த்தவாறிருந்தாள்.
“மின்னலைப் பார்க்காதே. கண் அவிஞ்சிடும்.”
பரிமளா பயமுறுத்தினாள்.
“விளையாட யாருமில்லாம பொழுதே போகலை.”
குட்டி முற்றத்தில் வழிந்தோடும் நீரைப் பார்த்தபடியே சொன்னபோது ஜீவா வந்து நின்றாள்.
“பஸ்சை விட்டு இறங்கி நாலு அடி எடுத்து வைக்கிறதுக்குள்ள முழுசா நனைஞ்சிட்டேன்.”
ஜீவா மழைநீர் செதுக்கிய உருவமாய் நின்றிருந்தாள். புடவை உடலோடு ஒட்டி வளைந்தும், நெளிந்தும் கிடந்தது.
“ஜீவாத்தை நீ குண்டாயிட்ட…..” குட்டியின் அனுமானம் பரிமளாவை அவசரப்படுத்திற்று.
“முதல்ல ஈரப் புடவையைக் களைஞ்சிட்டு வேற உடுத்து. அப்புறம் பேசலாம். “
அவளை அறைக்குள் அனுப்பித் துண்டு எடுத்துத் தந்தாள்.
ஜீவா இரண்டு மாதத்தில் நன்றாகத் தெளிந்திருந்தாள். பரிமளாவுக்கு ஏகத் திருப்தி. கண்களில் மினுக்கட்டாம் பூச்சி ஒளிர்ந்ததையும் அவள் கவனித்து விட்டாள்.
“திடீர்னு இப்படி மழையில வரணுமா…. மழை விட்டதும் வர்றது.”
“முன்னாடியெல்லாம் நினைச்சதும் ஓடி வந்துடுவேன். ரோட்டுல மினிபஸ் போறதைப் பார்த்தா குட்டி ஞாபகம் வந்ததுடும். உடனே ரெண்டு புடவையை எடுத்து வச்சிக்கிட்டுத் திரும்பி வர்ற பஸ்சுல ஏறிடுவேன். இப்ப ரெண்டு மாசமாதான் அப்படி வர முடியலை. ஆனா எப்பவும் குட்டி ஞாபகம்தான். காலையில குட்டியைப் பார்க்கணும்னு அவர்கிட்ட சொன்னேன். பஸ் ஏத்தி விட்டுட்டார்.”
ஜீவா, குட்டியை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டாள். பிளாஸ்டிக் கவரில் சுற்றி பத்திரமாக கொண்டு வந்திருந்த வளையல், தோடுகளை குட்டியிடம் தந்தாள்.
“உனக்குதான்டி. பிடிச்சிருக்கா……?”
குட்டியின் கண்கள் விரிந்தன.
“மாமாதான் செலக்ட் பண்ணினார்.”
குரலில் பெருமை வழிந்தது. பரிமளா, குட்டியை விரட்டினாள்.
“முதல்ல மடியை விட்டு இறங்கு.”
குட்டி கண்ணாடியை நோக்கி ஓடினாள்.
“ஏன்டி, ஏதும் விசேஷம் உண்டா…..? ரெண்டு மாசம் முடிஞ்சிடுச்சே. நாள் எதுவும் தள்ளிப் போயிருக்கா……?”
ஜீவாவுக்கு அடிவயிறு சிலீரிட்டது.
பரிமளா மறுபடியும் கேட்டாள்.
“என்னடி ஒண்ணும் சொல்ல மாட்டேங்குற. ஏதும் விசேஷம் உண்டாடி……?”
இனி நாலா பக்கமிருந்தும் வரப்போகும் கேள்விகளுக்கான முதற்புள்ளி அது.
ஐ. கிருத்திகாவின் “கணை சிறுகதை படித்தேன். ஜீவா அத்தை, பரிமளா அண்ணி, குட்டி என மூன்றே பாத்திரங்கள். பெரிய அண்ணன் வந்தும் கதையில் பேசவில்லை. ஆற்றொழுக்காகக் கதை செல்கிறது. ஒரு நடுத்தரக் குடும்பம் பெண்ணுக்குத் திருமணம் செய்யப் படும் அவத்தைகள் நன்கு படமாக்கப்பட்டுள்ளன். குட்டிக்குப் பூரான் சடை பின்னும்போது கூட குறையும் அந்த ஏழு சவரன் பூரான் போல ஜீவாவின் மனத்தில் நெளிந்து கிடப்பது மற்றும் சமையல் செய்துகொண்டே நடக்கும் உரையாடல்கள் எல்லாமே மிக யதார்த்தம். ஒருவழியாய்த் திருமனம் முடிகிறது. ஜீவாவுக்குக் குழந்தைகள் என்றால் மிகப்பிரியம் என்பது கதையின் தொடக்கத்தில் இருந்தே அவள் குட்டியின் மீது செலுத்தும் அன்பின் மூலம் கதாசிரியர் காட்டி விடுகிறார். ஆனால் அவளுக்கு? ஜீவாவின் அடிவயிறு சிலீரிட்டது எனக் கிருத்திகா எழுதுகிறார். ஆனால் அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. வாசகன் என்னென்னமோ நினைக்கிறான். வாசகன்தான் ஊகித்துக் கொள்ள வேண்டும். கண்ணைகள் இனி நாலாப்பக்கங்களிலிருந்தும் வரும். அவள் தாங்கத்தான் வேண்டும். வாசகனின் ஊகங்களுக்கு வேலை தரும் கதை இது.
மிக்க நன்றி சார்