ஓசை பெற்று உயர் பாற்கடல்


கர்நாடக சங்கீதம் என்று பரவலாக அறியப்படுகிற தென்னிந்திய இசையினை முறையாகக் கற்கும் பேறு பெற்றவனில்லை. பள்ளி நேரம் அல்லாத வேளைகளில் வயிற்றுப் பாட்டுக்காகக் கூலி வேலைக்குப் போகிறவன், இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆடும் நோக்கத்துடன் இலக்கங்கள் பல ஆண்டுக்குக் கொடுத்து பயிற்சி பெற முடியாதல்லவா? ஆனை தூறுகிறது என்று ஆட்டுக்குட்டி தூறினால் அண்டம் கீறிப் போகாதா?

என்றாலும் பத்துப் பன்னிரண்டு வயது முதலே இசை கேட்கப் பிடித்திருந்தது. அது சங்கீதம் கேட்பதல்ல, பாட்டுக் கேட்பது! தாழக்குடி ஜலகண்டேசுவரர் கோயில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோயில், திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோயில், நாகர்கோயிலின் நாகராஜா கோயில், கிருஷ்ணன் கோயிலின் கிருஷ்ணன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில் எங்கும் தேரோட்டத் திருவிழாக் காலங்களில் சங்கீதக் கச்சேரிகள் நடக்கும். நடந்தலைந்து, இரவு கண்விழித்து, பசிக்கப் பொறுத்துக் கேட்டவை.

இன்றளவும் தொடர்கிறது இசை கேட்பதென்பது. பம்பாய் சென்ற பிறகு சண்முகாநந்த சபா, செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்; டிசம்பர் மாதங்களில் சென்னை இசைவிழாவுக்கு என்றே வந்து மியூசிக் அகாடமி, நாரதகான சபா என்று கேட்டவை. கோவை வந்தபிறகு தொடர்ந்து கேட்பவை. இன்றும் காலை எழுந்து கடன்கள் முடித்துப் படிப்பறைக்கு வந்ததும் முதல் வேலை இசைக் குறுந்தகடுகள் போட்டுக் கேட்பது. தினமும் காலையிலும் மாலையிலுமாக ஆறேழு குறுந்தகடுகள். அதற்காக, அதை மட்டுமே கண் மூடி அமர்ந்து கேட்பேன் என்று பொருளில்லை. பாட்டுக் கேட்டவாறே எழுதுவேன், நகலெடுப்பேன், வாசிப்பேன். இசை கேட்பதென்பது வலிய பல மன அழுத்தங்களில் இருந்து விடுதலை. எழுத வாசிக்க முனைகையில் மனம் குவியவும் உதவும்.

இதை எழுதும்போது நுஸ்ரத் பத்தே அலிகான் பாடிய கவாலி பாடல்கள் அடங்கிய ஆல்பத்தின் ஆறாவது வட்டு பாடிக்கொண்டிருக்கிறது. மொத்தம் 8CD + 8VCD அடங்கிய ஆல்பம். மியூசிக் டுடே தயாரித்து அளித்தது. ஆல்பத்தின் தலைப்பு The magic of Nusrat.

அறுபது ஆண்டுகளாக இசைமூலமாகவும் தமிழ் நமக்குள் சுரந்தது. தமிழ் மூலமாகவும் இசை எனக்குள் இறங்கியது. சிறு வயதில் ராக ஆலாபனை நடக்கும்போது அப்பா மடியில் தலைவைத்து உறங்கிப் போவேன். கடல் மணல் பரத்தப்பட்டிருக்கும் கோயில் முகப்புக்களில் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தாலும் தணுத்து வீசும் காற்றிலும் இசை ஆரோகண அவரோகணத்திலும் அருமையாக உறக்கமும் வரும்.

துக்கடா என மாபாவிகள் தரம் பிரித்த தமிழ்ப் பாடல்கள் படிக்க ஆரம்பித்ததும் அப்பா எழுப்பி உட்கார வைப்பார். விரும்பிக் கேட்பேன் என்று அவருக்குத் தெரியும். காய்கறி வாங்கி முடிக்கும்போது கொசுறாகப் போடும் கறிவேப்பிலை, கொத்துமல்லி போல, கச்சேரி இறுதியில் கேட்போருக்கு வழங்கப்பெறும் சலுகை அல்லது இலவசம் போலும் துக்கடா என வழங்கப்பட்ட தமிழ்ப் பாட்டுக்கள்! அவையே எனக்கு இசைக்கும் தமிழுக்கும் அடியுரம், மற்றெல்லாம் மேலுரமே!அருணாசலக் கவிராயரின் ‘இராம நாடகக் கீர்த்தனைகள்’ கொடையளித்த பாடல் ஒன்று சின்ன வயதிலேயே எனக்கு மனப்பாடம். இப்போது யாராவது அந்தப் பாடலைப் பாடுகிறார்களா என்பதறியேன். சுருட்டி ராகப் பாடல் என்பது பின்னர் தெரிந்துகொண்டது. ‘காண வேண்டும் லட்சம் கண்கள்’ எனத் தொடங்கும் பாடல். எனக்கு இப்போதும் நினைவில் இருக்கும் ஈரடிகள்,

நவரத்ன தங்கத் தோடு
நடையிலே அன்னப் பேடு
அவனியிலே இல்லை ஈடு
அவளுக்கு அவளே ஜோடு

– என்பன. சீதையைப் பாடுகிறார் கவிராயர். நவமணிகளால் ஆன தங்கக் காதணிகள் அணிந்து பொன் அன்னம் போல் நடக்கிறாள். உலகில் அவளுக்கு ஈடு இணையில்லை. அவளுக்கு அவளே இணை என்பது பாடலின் பொருள். என் சிறு வயதில் தோடு, பேடு, ஜோடு எனும் சொற்களுடன் அறிமுகம் இல்லை. ஆனால் இந்தப் பாடல் மூலம் அறிந்து கொண்டேன். இந்தக் கட்டுரையை எழுதிவரும்காலை எனக்குத் தோன்றுகிறது – பெடை, பேடை, பேடு, பெட்டை, பேடி எனும் சொற்கள் குறித்துக் கட்டுரை ஒன்று எழுதலாம் என்று. பேடு எனும் சொல்லை எனக்கு அறிமுகம் செய்த அருணாசலக் கவிராயரின் காலம் 1711-1779.

அன்று கேட்ட இன்னொரு பாடல்தான்,

சபாபதிக்கு வேறு தெய்வம் சமான மாகுமா? – தில்லைச்
சபாபதிக்கு வேறு தெய்வம் சமான மாகுமா?

– என்ற கோபால கிருஷ்ண பாரதியார் பாடல், ஆபோகி ராகம்.

வளர்ந்த பிறகு கேட்ட தியாகய்யரின் கீர்த்தனை வரி,
ராம நீ சமான மெவரு?” – என்று வினவும் கரகரப்பிரியா ராகத்தில்.

ஒருவருக்கு சபாபதி என்றால் இன்னொருவருக்கு இராமன், அவ்வளவே வேறுபாடு! என்றாலும் நமது தர்க்கமனம் ஒரு கேள்வியை எழுப்புகிறது. தன் தெய்வத்தைப் போற்றுங்கள், புகழுங்கள் சரி! ஆனால் என் தெய்வத்துக்கு வேறு எவன் சமமாகும் எனக்கேட்பது என்ன அறம்?

மதப்பிரசங்கி அல்லது உபந்நியாசி ஒருவர் அடியார் வீட்டுக்கு உணவுக்கோ அல்லது வழிபாட்டுக்கோ போனால், அடியார் வழிபாட்டுப் புரையில் அவர் வணங்காத தெய்வத்தின் படம் இருந்தால் திரும்பி நின்று கொள்வாராம். பிறகு அந்தப் படத்தைத் துணிபோட்டு மறைத்த பிறகே திரும்புவாராம். இது அந்தக் காலத்தில் இல்லை, இந்தக் காலத்திலும்!

பெரியசாமித் தூரனின் அடானா ராகப் பாடல் ஒன்று கேட்டது நினைவில் உண்டு. எம்.எல். வசந்தகுமாரி பாடியவர்.

காலகாலன் கயிலை நாதன்
ஆலகாலன் அணிசெய் கண்டன்
சூழின் மீது சுடரும் பாகன்
தூய நீறில் துலங்கும் ஏகன்

– என்பது பாடலின் முதல் பத்தி.

பெரியசாமித் தூரனின் கீர்த்தனைகள், ‘கீர்த்தனை அமுதம்’, ‘இசைமணி மஞ்சரி’, ‘முருகன் அருள்மணி மாலை’, ‘நவமணி மாலை’ என நான்கு தொகுதிகள்.

அந்தச் சிறுவயதில் சைவம், வைணவம் என்று என்னத்தைக் கண்டேன் நான்? நம் சாமிகள் முத்தாரம்மன், இசக்கியம்மன், முப்புடாதி அம்மன், சுடலைமாடன், புலைமாடன், கழுமாடன், முத்துப்பட்டன், சங்கிலிப் பூவத்தான், வைரவன், சாத்தா… ‘அறிவே தெய்வம்’ என்று பாரதி பாடியதைப் பிறகுதானே அறிகிறோம்?

பாடியவர்களும் சித்தர்களா, பட்டினத்தடிகளா, தாயுமானவரா, இராமலிங்க வள்ளலாரா, சைவ நாயன்மாரா, வைணவ ஆழ்வார்களா, அருணகிரியாரா என்று அன்று அறிந்திருக்கவில்லை. இன்று அவர்கள் பாடல்களை சொல் வடிவமாகவும் இசை வடிவமாகவும் வாசிக்கும்போது கேட்கும்போது எல்லாமே இறையுருவங்கள் என்பது அர்த்தமாகிறது!

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்திற்கு, சிவராத்திரிக் கொண்டாட்டங்களின்போது இசை கேட்கப் போவேன். அங்குதான் நான் குண்டாச்சா சகோதரர்கள் பாடிய துருபத் இசை கேட்டது. இந்துஸ்தானி பாடகியர் கிஷோரி அமோன்கர், வீணா சகஸ்ர புத்தே கேட்டது. பாடகர் பண்டிட் பீம்சென் ஜோஷி, பண்டிட் ஜஸ்ராஜ் கேட்க வாய்த்ததும் அங்குதான்.

ஆதி சங்கரரின் நிர்வாண சதகத்தின் பாடல் ஒன்று பண்டிட் ஜஸ்ராஜ் பாடக் கேட்டேன் அங்கு.

சிதானந்த ரூபம் சிவோகம் சிவோகம்
ந புண்யம் ந பாபம்
ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந கீதம்
ந வேதா ந யக்ஞம்
சிதானந்த ரூபம் சிவோகம் சிவோகம்

என்ன ராகத்தில் பாடினார் என்பதறியேன். உத்தேசமாக நான் புரிந்துகொண்ட பொருள்:

“சிதானந்த ரூவம் சிவோகம் சிவோகம்
புண்ணியமில்லை பாவமில்லை
சுகமில்லை துக்கமில்லை
மந்திரமில்லை கீதமில்லை
வேதமில்லை வேள்வியில்லை
சிதானந்த ரூபம் சிவோகம் சிவோகம்.”

ஈதென்னை சித்தர்களின் சிந்தனைக்கு ஆற்றுப்படுத்துகிறது.

உஸ்தாத் பிஸ்மில்லா கான், அல்லா ரக்கா, பண்டிட் ரவிசங்கர், சிவ்குமார் சர்மா, ஹரிபிரசாத் சௌராஸ்யா, பண்டிட் படேகுலாம் அலிகான், உஸ்தாத் அம்ஜத் அலிகான், பண்டிட் குமார் கந்தர்வ், உஸ்தாத் விலாயத்கான் என்றெல்லாம் கேட்க நேர்ந்தது பம்பாய் சண்முகாநந்தா சபாவில்.

1973 – ஜனவரி முதல், பம்பாய் தொழிற்கூடம் ஒன்றில் என்னுடன் தினக்கூலியாக பணிபுரிந்த பாலக்காட்டுக்கார இராமன், சண்முகாநந்த சபா கச்சேரி நடக்கும் மாலைப் பொழுதுகளில் அரங்கின் வாசல் ஒன்றில் நுழைவுச்சீட்டு சரிபார்த்து அமரவைக்கும் வேலையும் பார்த்தான். நுழைவுச்சீட்டும் இலவச அனுமதிச்சீட்டும் இல்லாத என்னைக் காலியாகக் கிடக்கும் இருக்கை ஒன்றில் அமர வைப்பான். இடைவேளையில் அவனுக்கு சலுகையாகக் கிடைக்கும் காப்பி அல்லது சாயாவில் எனக்கோர் பங்கும் தருவான்.

புறநானூற்றில் மாறோக்கத்து நப்பசலையார்,

ஈண்டுசெய் நல்வினை ஆண்டுச்சென்று உணீஇயர்,
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன்

– என்று பாடியதைப் போல அவனும் அகாலமாகச் சென்று சேர்ந்தனன்.

இசை கேட்க மனமும் நல்ல செவிகளும் இருந்தால் போதும், இராகம் தாளம் கணக்கு வழக்குகள் எல்லாம் பாடுகிறவர்கள் கவலை என்பது என் புரிதல். நல்ல பாடல் என்பதை உணர அது வெண்பாவா, வஞ்சிப்பாவா, கலிப்பாவா, அகவற்பாவா, விருத்தமா என்பது இரண்டாம் பட்சம்தானே!

சப்த சுரங்களும், ஆரோகணம் அவரோகணமும், தாள வேறுபாடுகளும் அறிமுகம் இல்லாமல்தான் பாட்டுக் கேட்க ஆரம்பித்தேன். இன்றும் தெரியாது! என்றும் தெரியப்போவதும் இல்லை. ஒருமுறை கோயம்புத்தூர் பாரதீய வித்யா பவன் அரங்கில் ஒரு கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தேன். பின்னவீனத்துவ மேஜிக்கல் ரியலிச நான்-லீனியர் நாவல் வாசிப்பதுபோல, பாட்டின் இராகம் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தது; பக்கத்தில் ஒருவர் தாளமும் தலையசைப்பும் சபாஷ், பேஷ்பேஷ் உச்சாடனங்களுமாக இருந்தார். எனக்கு என்ன ராகம் என அறிந்து கொள்ள ஆசை. ஆசை வெட்கம் அறியாது! மிகுந்த கூச்சத்துடன் அவரிடம் கேட்டேன், “என்ன ராகமுங்க?” என்று. அவர் பதிலாக, “தெரியாதுங்கண்ணா…” என்றார். இரண்டு சாத்தியப்பாடுகளே! இவன் தெரிந்து என்ன செய்யப் போகிறான் என்று நினைத்திருக்கலாம். அல்லது அவருக்கே தெரியாமல் இருக்கலாம்! பின்னர் தெரிந்து கொண்டேன் – ‘சொக சுகா மிருதங்க தாளமு’ என்ற அந்த தியாகய்யரின் கீர்த்தனை பாடப்பட்ட ராகம் ஸ்ரீரஞ்சனி என்று.

வாசிக்க வாசிக்கத் தெரிந்து கொள்கிறோம், மிகவும் பிரபலமான தியாகய்யரின் தெலுங்குக் கீர்த்தனையான ‘நகுமோமு கநலேநி நாஜாலி தெலிஸி’ ஆபேரி ராகம் என்று. என் இளம் பருவத்தில், தமிழின் பிரபலமான வார இதழில், பிரபலமான தொடர்கதை எழுத்தாளரின் நாவல் ஒன்றில் முதலிரவுக் காட்சியில் இந்தப் பாடலை கிராமஃபோனில் ஓடவிடுவான் கதாநாயகன். மேலும் சில காலம் சென்றபின் பாடலின் பொருள் புரிந்தபின், முதலிரவின்போது கோவர்தனதாரியைக் கூப்பிடும் பாடலைக் கேட்ட கதாநாயகன் மேல் நமக்கு இரக்கம் தோன்றியது. பிறகு எங்கோ வாசித்தேன் ஆபேரியின் பழைய பெயர் கர்நாடக தேவகாந்தாரி என்றும் அதற்கு இணையான இந்துஸ்தானி ராகம் பீம்ப்ளாஸ் என்றும்.

கேட்டுக் கேட்டுத் தெலுங்குக் கீர்த்தனைகளின் பொருள் ஒரு அளவுக்கு அர்த்தமாகும். ‘ப்ரம்மம் ஒக்கட்டே, பரப்பிரம்மம் ஒக்கட்டே’ எனும் அன்னமாச்சாரியாவின் பாடல் வரி அர்த்தமாகக் கன்னடம் தெரிந்திருக்க வேண்டாம். சுதா ரகுநாதனின் குரல் இனிமை போதும்.

ஆனால், தமிழ் எம் தாய்மொழி என்பதால் பல பாடல்கள் மனப்பாடமே ஆகிப் போயின. எடுத்துக்காட்டுக்குப் பற்பல பாரதியார் பாடல்கள். காற்று வெளியிடைக் கண்ணம்மா, தீராத விளையாட்டுப் பிள்ளை, செந்தமிழ் நாடெனும் போதினிலே, வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம், காணி நிலம் வேண்டும், ஓடி விளையாடு பாப்பா, கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் என நீண்டு பயணிக்கும் பட்டியல்.

ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடல்கள், பாவநாசம் சிவன் பாடல்கள், தண்டபாணி தேசிகர் பாடல்கள், மதுரை சோமசுந்தரம் பாடல்கள் என்றும் எழுதிக்கொண்டே போகலாம்.

பத்துத் தொகுதிகளாகக் கலைக்களஞ்சியம் தொகுத்த பெரியசாமித் தூரனின் பாடல்களில் ஒன்றை ஜி.என். பாலசுப்பிரமணியம் பாடிப் புகழ்பெறச் செய்தார். இன்றும் அதைச் சிறப்பாகப் பாடுபவர் நித்யஸ்ரீ மகாதேவன்.

சாம கானப் பிரியே – அம்ப
சர்வ லோக நாயகியே!

– என்ற பாடல். இராகம் பாடலிலேயே வரும் ஆனந்த பைரவி என்று.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தமிழிசைக் கீர்த்தனைகள் பல எழுதி வைத்துச் சென்றுள்ளார். அவை ‘தேவியின் கீர்த்தனைகள்’ என அறியப்படும். பாடல்கள் எழுதியவரை சாகித்ய கர்த்தா என்றனர் அன்று. என் பக்கத்தூர் புத்தேரியில் வாழ்ந்தவரைச் சந்திக்க வயது போதவில்லை எனக்கு.

பூதப்பாண்டி அருணாசல அண்ணாவி, சென்னிகுளம் அருணாசல ரெட்டியார், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், சீர்காழி அருணாசலக் கவிராயர், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, மழவை சிதம்பர பாரதி, பெரியசாமித் தூரன், எம்.எம். தண்டபாணி தேசிகர், நீலகண்ட சிவன், கோபால கிருஷ்ண பாரதியார், வள்ளல் இராமலிங்கம் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பாவநாசம் சிவன், சுத்தானந்த பாரதி, சுப்பிரமணிய பாரதியார், பாரதிதாசன்… இவை அனைத்தும் உடனடியாக நினைவில் இருந்து குறிப்பெடுத்தவை. அறிந்தோர் பட்டியலை மேலும் தொடரலாம்.

இன்றும் இசைக்கச்சேரி மேடைகளில் பாடப்படும், விரும்பிக் கேட்கப்படும் பாடல்,

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?

– என்ற பாரதிதாசன் பாடல். பாடலுக்கு தேஷ் ராகத்தில் மெட்டமைத்து மேடைகளில் பாடிப் புகழ்பெறச் செய்தவர் இசைமுரசு எம்.எம். தண்டபாணி தேசிகர்.


(இந்த அரிதான ஒலிப்பதிவில் இப்பாடலுக்கு மெட்டமைத்த விதத்தைக் கூறுகிறார் தண்டபாணி தேசிகர்)

அவர் நந்தனார், திருமழிசை ஆழ்வார் போன்ற சினிமாக்களில் தோன்றிப் பாடல்களால் புகழ் பரப்பியவர். அந்தப் பாடலை இன்றும் மேடைகளில் உயிரோட்டத்துடனும் இசை நுட்பங்களுடனும் பரவசத்துடனும் தோய்ந்து பாடுகிறவர் சஞ்சய் சுப்பிரமணியம்.

தமிழும் கற்றிராத, இசையும் அறிந்திராத வயதில் சிலமுறை தண்டபாணி தேசிகர் பாடக் கேட்டிருக்கிறேன். இசை வடிவாக அவர் தந்த தமிழ் பொருளாக எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற முதல் திருக்குறளை அம்சத்வனி ராகத்தில் அவர் அன்று பாடியது இன்றும் நினைவுக்கு வரும். அதற்கு ஒப்பவும் மிக்கவுமாகப் பத்தாண்டுகள் முன்பு சஞ்சய் சுப்பிரமணியம், ராகம் – தானம் – பல்லவியில் ‘ஒழுக்கம் ஓம்பப்படும்’ என்று எடுத்தபோது நெஞ்சம் கிளர்ந்தது.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

– என்ற திருக்குறள் அன்றைய பல்லவி.

திருக்குறளைத் தீக்குறள் என்று பழித்த மகானும் அது சமற்கிருத நூலின் மொழிபெயர்ப்பு என்று பரப்புரை செய்து பத்ம உயர் விருது பெற்ற ஆய்வறிஞரும் உவந்து கொண்டாடப்படும் தாய்த் திருநாடு இது.

ஆதிப் பொதுமறையை அனுதினமும்
ஓதிப் பழகுவோமே!

– என்று பாடல் யாத்தார் கவிமணி, சண்முகப்பிரியா ராகத்தில்.

ராமலிங்க வள்ளலாரின் “என்ன புண்ணியம் செய்தேனோ அம்மா நான்?” என்ற பைரவி ராகத்தில் அமைந்த திருவருட்பா நினைவுக்கு வருகிறது. சுப்பிரமணிய பாரதியார் அமைதிப்படுத்துகிறார், “பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே!” எனும் கானடா இராகப் பாடல் மூலம்.

பெரியாழ்வாரின் பாசுரம் ஒன்றை நீலாம்பரி ராகத்தில் பாடுவார் தண்டபாணி தேசிகர். அந்தப் பாடலை 1975-ம் ஆண்டு, பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் சொற்பொழிவில் கேட்டு வியந்திருக்கிறேன்.

மாணிக்கம் கட்டி வைரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ! வையம் அளந்தானே தாலேலோ!

– என்பதந்தப் பாடல். பதினைந்து வயதில் இசை வடிவமாகக் கேட்ட பாசுரம் இருபத்தெட்டு வயதில் மொழி வடிவமாக இறங்கிற்று என்னுள். என்றாலும் ‘பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்’ எனும் பொருள் இந்த வயதில்தான் புலனாகிறது.

இன்று இசை நிகழ்ச்சிகளில் பாடும் புகழ்பெற்ற இசை விற்பன்னர்கள் அனைவருமே – மதுரை சேஷ கோபாலன், நெய்வேலி சந்தான கோபாலன், அருணா சாயிராம், சுதா ரகுநாதன், சௌமியா, நித்யஸ்ரீ மகாதேவன், ரஞ்சனி – காயத்திரி, சிக்கில் குருசரண், பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்பிரமணியம் போன்றோர் தேவாரமோ, திருவாசகமோ, நாலாயிரத் திவ்யப் பிரபந்தமோ, வள்ளலாரோ விருத்தம் ஒன்று பாடிவிட்டு இராகம் பாடத் துவங்கும்போது நெஞ்சம் நிமிர்ந்து கொள்கிறது. பாரதி சொன்னதுபோல, ‘இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!”

எனக்குத் தோன்றும் சில சமயம். தமிழ் நாம் தாய்ப் பாலோடு பருகியது. கருவில் இருந்தபோதே செவிப்பட்ட மொழி. எனினும் சமூகக் காரணங்களுக்காக, அங்கீகாரங்களுக்காக, நம்மை மேம்படுத்திக் காட்டிக் கொள்வதற்காக, அறியாத மொழிகளை மகிமைப்படுத்துகிறோம். போலியான, செயற்கையான, ஆடம்பரமான மெய்ப்பாடுகளைக் காட்சிப்படுத்துகிறோம். எனில் தாய்மொழியின் ஆளுமையை அறியாதவரா நாம்?

வயதேற ஏற, தெலுங்குக் கீர்த்தனைகள், சமஸ்கிருத, கன்னட, மலையாள இசைப் பாடல்கள், மராத்தி மொழியின் அபங், வங்காளத்தின் இரவீந்திர சங்கீதம், உருது மொழிக் கவாலி, கஸல் போன்றவற்றைக் கேட்டு இன்புற்றாலும் தமிழ்ப் பாடல்களைக் கேட்க நேர்கையில் மனமும் மெய்யும் பரவசம் கொள்கிறது. பெற்ற அம்மையை அம்மை எனச் சொல்லக் கூசுகிறவர்களின்பால் இரக்கமே ஏற்படுகிறது.

வண்டினம் முரலும் சோலை,மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதுலாவும் சோலை, குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்க மென்னா

– என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடல் இசை வடிவமாகக் காதில் விழக் கேட்டிருக்கிறீர்களா? இசையாலும் தமிழாலும் வாழக் கொதி ஏற்படும்.

பூதத்தாழ்வார் பாடுகிறார்,

யானே தவம் செய்தேன், ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன், எம்பெருமான் – யானே
இருந்தமிழ் நல்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது

– என்று செம்மாந்து.

அந்த பெருந்தமிழன் நானென்ற மனோபாவம் எனக்கும் பெருமிதம் ஊட்டுவது. தமிழிசைப் பாடல்களைச் செவியுற நேர்கின்ற போதெல்லாம் ஏற்படும் அனுபவம் அது.

தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருப்புகழ், அருட்பா எனப் பெருந்தமிழர்கள் யாத்தளித்துச் சென்ற பாடல்களில் என்ன இசையுண்டு, பண்ணுண்டு, இராகம் உண்டு என்று கேட்பாரும் உளர் என்பதறிவோம்! கெட்ட வார்த்தைப் பழமொழி ஒன்று சிந்தையில் குறுக்கு வெட்டுகின்றது. இந்தக் கட்டுரையில் அதைப் பேசப் பிரியப்பட மாட்டேன். பெருந்தமிழனாய்ப் பேசிவிட்டுத் தாய்மொழியையே பகைமொழி எனக் கருதுபவர்களை நாமெதற்குச் சிந்தையாலும் கருதவேண்டும்? நெடுமால் திரு முருகா, நித்தம் நித்தம் இந்த இழவா?

சமீப காலங்களில் சஞ்சய் சுப்பிரமணியம் உணர்ந்து உருகி இசை பெருக்கிப் பாடும் பாடலொன்றைத் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். பாடலை இயற்றியவர் பாவநாசம் சிவன். இராகம் மாயா மாளவ கௌளை. முழுப் பாடலையும் கீழே தருகிறேன்:

பொல்லாப் புலியினும் பொல்லாக் கொடியன் என்னைப்
புவிதனில் ஏன் படைத்தாய் – சம்போ!
(பொல்லாப்….)

நல்லோரைக் கனவிலும் நணுக மாட்டேன் நல்லது
சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்
(பொல்லாப்….)

உன் நாமம் என் நாவாலும் சொல்ல மாட்டேன் உள்ளெழும்
காமக்குரோதம் தள்ள மாட்டேன்
(பொல்லாப்….)

என்நாளும் மூவாசையை வெல்ல மாட்டேன் என் ஐயன்
உன் ஆலயத்துள் செல்ல மாட்டேன்
(பொல்லாப்….)

– இப்பாடலில் ‘சம்போ’ எனும் ஒற்றைச் சொல் நீங்கலாக மற்று எந்தச் சொல்லும் எச்சமயத்தையும் குறிப்பன அல்ல. இறைப்பற்று இல்லாமையை இயலாமையாகப் பார்ப்பதுவே பாடலின் கருப்பொருள். ஒருமுறை இப்பாடலைக் கேட்டு அனுபவித்துப் பாருங்கள் பாக்கியம் உண்டு எனில்.


ஆயிரம் ஆண்டுகள் முன்பே தொண்டரடிப் பொடியாழ்வார் இதனை வேறு சொற்களால் புனைந்து பாடுகிறார்:

போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்

– என்று. பொய்கை ஆழ்வார் அதனையே உடன்பாட்டில் உள்ளுருகுகிறார்.

வாய் அவனை அல்லது வாழ்த்தாது, கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா

– என்றும்,

தோள் அவனை அல்லால் தொழா, என் செவியிரண்டும்
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும்

– என்றும்.

ஆழ்வர்களின் பாடல்களின் மற்றொரு வடிவமே பாவநாசம் சிவனின் பாடல் வரிகளும்.

கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள் பாடுவார்,

கேளு பாப்பா! கேளு பாப்பா!
கேள்விகள் ஆயிரம் கேளு பாப்பா!

– என்று.

அதை மாற்றிப் படிக்கலாம்,
கேளு பாப்பா! கேளு பாப்பா!
பாடல்கள் ஆயிரம் கேளு பாப்பா
!”
– என்றும்.

அவரே பாடுவார்,
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது
பேரின்ப மன்றுக்குள்ளே!

– என்று.

நமக்கும் பாடலாம் என்று தோன்றுகிறது.
சினிமாப் – பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது
இசைத்தமிழ்ப் பாட்டுக்குள்ளே!

– என்று.

ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யர் தேன் மதுரத் தமிழ்ப் பாடல்கள் பல யாத்தும் கோர்த்தும் அளித்தவர். பரஸ் ராகத்தில் அவர் எழுதிய ‘ஆளாவ தென்னாளோ சிவமே!” எனும் கீர்த்தனை அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களின் பெயர்களையும் பட்டியலிடுகிறது. அருணா சாயிராம் பாடி ஒரேயொரு முறை கேட்டிருக்கிறேன்.


பாவநாசம் சிவனின் இன்னொரு பாடல், கல்யாணி ராகத்தில், பலரும் பாடி இருக்கிறார்கள். நான் கேட்டது அருணா சாயிராம் பாடியது. “உன்னை அல்லால் வேறே கதி இல்லை அம்மா!” என்ற பாடல்.

“உலகெலாம் ஈன்ற அன்னையே! என்னையோர் வேடமிட்டு உலக நாடக அரங்கில் ஆடவிட்டாய் அம்மா! என்னால் இனி ஆடமுடியாது! நீ திருவுளம் இரங்கி, ஆடியது போதும் என்று ஓய்வளிக்க உன்னையல்லால் வேறே கதி இல்லை அம்மா!” – என்று பாடலின் பொழிப்புரை. அதை இசை வடிவமாகக் கேட்கும்போது நாம் பெறும் அனுபவம் வேறு.


நல்ல பாடகர்கள், அவர்கள் தாய்மொழியும் தமிழாக இருந்த காரணத்தால், சொற்சிதைவின்றி, பொருள் துலக்கமாகப் புரியும்படியாக, அழுத்தம் திருத்தமாகப் பாடினார்கள். மாணிக்கவாசகரையும் திருநாவுக்கரசையும் ஞானசம்பந்தரையும் அருணகிரியையும் வள்ளலாரையும் பாரதியையும்.

எத்தால் இச்சை கொண்டாய் பெண்ணே!’ என்பதை ‘எத்தால் ஈச்சை கொன்றாய் பெண்ணே!’ என்று பாடிப் பயனென்ன? கேட்டுப் பழகியவர்களுக்குத் தெரியும் தெலுங்குக் கீர்த்தனைகளை ஐதராபாத் சகோதரர்களும், மல்லாடி சகோதரர்களும் பாடுவதற்கும் தெலுங்கு தாய்மொழி அல்லாதவர்கள் பாடுவதற்குமான வேறுபாடு.

மீரா கே பிரபு’ என்றொரு பஜன் சிலர் பாடும்போது நம் காதில் ‘Meera K Prabhu’ என்று பெயர் விளிப்பது போல் ஒலிக்கும் கொடுமையும் உண்டு. ‘நற்றவத்தவர்’ என்றொரு சொல் வரும் பாடல் ஒன்று. நல்+தவத்தவர் = நற்றவத்தவர். பாடுகிறவர் தமிழர்தான். என்றாலும் தமிழ் கற்றிருக்க மாட்டார் போலும் பள்ளியில். அவர் நற்றத்தவத்தவர் என்று உச்சரிப்பதைக் காணப் பாவமாக இருக்கும். முதலமைச்சர் கனவில் இருக்கும் தமிழினத் தலைவர் ஒருவர் கையில் குறிப்பு வைத்துக்கொண்டு அவத்தைப்படுவதையும் நாம் அனுபவிக்கிறோம்தானே! ‘என்ன தவம் செய்தனை – யசோதா – எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க?’ என்று பாவநாசம் சிவன் காபி ராகத்தில் எழுதிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

கூடவே கோபாலகிருஷ்ண பாரதியார் பாடலொன்றும் நினைவுக்கு வருகிறது. முகாரி அல்லது சண்முகப்பிரியா ராகத்தில் பாடுவார்கள். இசைப்பேழையில் என்.சி. வசந்தகோகிலம் பாடித் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன். ‘தந்தை தாயிருந்தால் உமக்கிந்த தாழ்வெலாம் வருமோ ஐயா?’ என்று. பிறப்பறியாப் பெற்றியனைப் பாடியதை நாம் மொழிக்கும் பாடலாம்.

பாரதியார் பாடல்களில் பல, வகை வகையான பண்களில் இன்றும் செவிக்கின்பம் பெருக்கி சிந்தை குளிர்விக்கின்றன. கண்ணன் பாட்டுத் தொகுதியில் முதற்பாடல் – கண்ணன் என் தோழன். பாரதி தேர்ந்தெடுத்த ராகம் புன்னகவராளி. அதை இராகமாலிகையில் பாடக் கேட்டிருக்கிறேன். பயன்படுத்தப்பட்ட இராகங்கள் நாட்டை, காம்போதி, சாமா, அமிர்தவர்ஷினி, சகானா, கீரவாணி என்பன.
பாடல் வரிகள், முதல் பத்தியில், முதல் பகுதி:

பொன்னவிர் மேனி சுபத்திரை மாதைப்
புறங்கொண்டு போவதற்கே – இனி
என்ன வழியென்று கேட்கில் உபாயம்
இரு கணத்தே உரைப்பான்
’’

– என்று பாடுவார்கள். பொன்னவிர் மேனி எனும் சொற்றொடர் நமக்கு இன்றும் வியப்புத் தருகிறது.

கோவையில் ஒரு கச்சேரியில் சஞ்சய் சுப்பிரமணியம் ராகம் – தானம் – பல்லவியில் சிவரஞ்சனி ராகம் பாடினார். பாடல் வரிகள் பாரதியார்.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்

– என்று.

தொடர்ந்து ராகமாலிகை – நாட்டைக் குறிஞ்சி, குந்தள வராளி, சுபபந்து வராளி, பேகடா, சுருட்டி ராகங்கள். என்ன தவம் செய்தேன் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்தக் கட்டுரையை எழுதப் புகுந்த காலை, என் நண்பர் ஒருவர், சத்குருநாத ஓதுவார் பாடல் ஒன்றை அனுப்பியிருந்தார். யாழ்ப்பாணத்து நல்லூர் கந்தசாமி கோயில் பற்றிய பாடல் ஒன்று அவர் பாடியது. இசையும் துல்லியமான சொற்களும் அற்புதமாக இருந்தது. நண்பர்களிடம் கேட்டபோது பாடலை யாத்தவர் யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகள் என்று சொன்னார்கள். போகர் அல்ல யோகர் சுவாமி.

பத்துக் கண்ணிகளில் முதற் கண்ணி,

நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனெடி – கிளியே
இரவு பகல் காணேனெடி

– என்பதாகும்.

இன்னொரு கண்ணி,

பருதி காயில் வாடாது, பவனம் வீசில் வீழாது,
பரவை சூழில் ஆழாதெடி – கிளியே
படைகள் மோதில் மாயாதெடி

– என்று நீளும்.

நமது அடி எனும் விளியை அவர் எடி என்கிறார்.

பருதி எனும் சொல்லறிவேன். இளம்பருதி, செம்பருதி அறிவேன். பவனம் என்ற சொல் சற்று நின்று யோசிக்க வைத்தது. பரவை எனில் கடல் என்பதறிவேன். அகராதியை நாடியபோது, பவனம் எனும் சொல்லுக்குப் பத்துப் பொருள் தரப்பட்டிருந்தது. வீடு, அரண்மனை, பூமி, காற்று, இராசி, நாகலோகம், பாம்பு, சுவர்க்கம், விமானம், பூனை என.

சூரியன் காய்ந்தால் வாடாது, காற்று வீசினால் வீழாது, கடல் சூழ்ந்தால் ஆழாது, கிளியே, படைகள் மோதினால் மாயாது என்று பொருள் கொள்ளலாம்.

பவன வாசல், பவன வாய் என்றால் காற்றுச் செல்லும் வாசல். குதம், Anus என்றும் பொருள். பாம்பு காற்றை உண்ணும் காட்சியினால் அதற்கு பவனாசனம் என்று பெயர். பவனாத்துமசன் எனும் சொல்லுக்கு வாயுவின் குமாரன், அனுமான் என்று பொருள். இராம இலக்குவற்குத் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் சொற்கள், கம்பன் மூலமாக, ‘காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன்’ என்பதாகும். பவனி என்றால் உலா வருதல். காற்றும் உலவும் என்பதால் பவனம் போலும்.

இந்தக் கட்டுரை எழுத அமர்ந்த காலை, யாழ்ப்பாணத்துப் யோகர் சுவாமிகள் பாடலைக் கேட்ட காரணத்தால் எனக்கு வந்து சேர்ந்த புதிய செய்தி, பவனம் என்றால் காற்று என்பது. அவரது பாடல் கண்ணியொன்றை மேற்கோள் காட்டினால்,

எத்தொழிலைச் செய்தாலென், ஏதவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள் – கிளியே
காவல் அறிந்திடெடி
!”

ஆமாம்! தமிழ் கற்க முனைபவனுக்குக் கர்த்தன் திருவடிகளே காவல். இதன்மூலம் நமக்கு அறியக் கிடைப்பது, கர்த்தன் – கர்த்தா என்றால் ஏசுபிரானை மட்டும் குறிப்பதல்ல, இறைவனைக் குறிப்பது என்பது.

எனது நண்பர்களில் பலர் இறை மறுப்பாளர்கள். ஒருகாலத்தில் ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ எனும் மலையுச்சி நிலையில் இருந்து தளர்ந்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று இறங்கினார்கள். இன்று அவரவர் தெய்வம் அவரவர்க்கு என்றும் தத்தம் கோவிலுக்குப் போவதும் வழிபடுவதும் அவரவர் சுதந்திரம் என்றும் தம்மைத் தாமே ஆற்றுப்படுத்திக் கொண்டனர். காவடி சுமப்பதும், அலகு குத்திக்கொள்வதும், தீச்சட்டி எடுப்பதும், நோன்புகள் இருப்பதும், குருத்தோலை சுமந்து ஊர்வலம் போவதுமாக அவரது வாரிசுகளை வெகு விரைவில் காணப்போகிறோம்!

இசையையே இறை வடிவமாக்கித் தந்துள்ளனர் நற்தவத்தோர். நாத உபாசனை என்றே சொல்லொன்று உண்டு. எனக்குப் பல பாடல்கள் மூலமாகத் தமிழே இசை வடிவமாக வந்து சேர்ந்திருக்கிறது. தமிழை இயல், இசை, நாடகம் என முத்தமிழ் என்றோம். அறம் – பொருள் –இன்பம் என்று பேசும்போது, ‘நடுவணது எய்த இருதலையும் எய்தும்’ என்றனர். தமிழ் என்பதுவும் அங்ஙனமே ஆகலாம். ஈண்டு நாம் ஐந்தமிழ், எழு தமிழ், ஒன்பான் தமிழறிஞர் என்று தமக்குத்தாமே விருதளித்துக் கொண்டவர்களைக் கூட்டாக்கவில்லை.

இறை மறுப்பாளரே ஆனாலும் இசையையும் தமிழையும் விட்டு விலகிச் செல்வது என்பது தம்மைத்தாமே கதவடைத்து விலங்கிட்டுச் சிறைப்படுத்திக் கொள்வதே ஆகும்.

கானாப் பாடல்கள், குத்துப் பாட்டுக்கள், டப்பாங்குத்துப் பாடல்கள், சினிமா டூயட் பாடல்கள் என்ற பொரி தின்று மட்டுமே பசியாற இயலாது. செந்தமிழ் என்பதைப்போல், செவ்விலக்கியங்கள் என்பதைப்போல, செவ்வியல் இசை என்றும் நமது ரசனை நகர முற்பட வேண்டும். ‘உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே’ என்கிறார் தொல்காப்பியர். உணரும் ஆற்றல் உணர்வோரது உணர்வைப் பொறுத்தது.

6 -10-2020

***

7 Replies to “ஓசை பெற்று உயர் பாற்கடல்”

  1. மனம்இசையோடு ஒரு பயணம் செய்து நெகிழ்ந்தது.ஆசிரியரின் இசை நுகர்வின் உணர்வை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் படி இசைக்கோப்புகளையும் இணைத்து வெளியிட்டது பாராட்டத்தக்கது. தமிழ் இசையை “எப்படிப்பாடினரோ” என சுத்தானந்த பாரதி சிலாகிப்பது போல எத்தனையெத்தனை தமிழ் கீர்த்தனைகள் கொட்டிக்கிடக்கின்றன வலைவெளியில் என நினைக்கத்தோன்றுகிறது. நன்றி.

  2. நாஞ்சில்நாடன் கட்டுரை ஓசைபெற்று உயர் பாற்கடல் பல அரிய செய்திகளை அறிவிக்கிறது. இசை கேட்பதென்பது வலிய பல மன அழுத்தங்களில் இருந்து விடுதலை. எழுத வாசிக்க முனைகையில் மனம் குவியவும் என அவர் எழுதுவது அனுபவித்தவர்களுக்குப் புரியும்.ஒருவருக்கு சபாபதி. மற்றொருவருக்கு ராமன் என்று மிகத் தெளிவாக எளிதாக நாஞ்சில் கூறும்போது பரவசப்படுகிறோம். அவர் வட இந்திய இசையையும் ரசித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இடையே மாறோக்கத்து நப்பசலையாரின் புறநானூறு அடிகளையும் எடுத்துக் காட்டி நண்பர் காலமானது குறித்து வருந்துகிறார். பாடலை ரசிக்க மொழி தேவை இல்லை என்ற அவர் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. பூதத்தாழ்வார்,பெரியாழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகியோரின் பாசுரங்களையும் அருமையாகத் தேவையான இடங்களில் எடுத்துக் காட்டி உள்ளார். பாரதியார் பாடல்களில் மனத்தைப் பறிகொடுக்கிறார். அவர் எப்பொழுதும் சொல்லாராய்ச்சியில் ஆர்வம் காட்டுபவர். பவனம் என்னும் சொல் கிடைக்க அதைப் பற்றி மிகச்சிறப்பாக ஆய்ந்து எழுதுகிறார். செந்தமிழ் செவ்விலக்கியங்கள் என்பது போல செவ்வியல் இசை உருவாக வேண்டும் என்று கட்டுரையை அருமையாக முடிக்கிறார்.

  3. கட்டுரையை வாசித்தேன்; அருமை. “நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே” என்ற திருவாசக வாக்கியம் நினைவில் வருகிறது. உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் அறிந்தோர்க்கு நேரியாய் அறியாதோர்க்கு சேயாய் அனைவருக்கும் நணியாய் இருப்பது இறை மட்டுமல்ல இசையும் தான். இசையின் வழியது இறை நிலை. தமிழ் கொண்டு வாய்ப்பாடும் வழிபாடும் சாத்தியம் என்று கூறும் கட்டுரையின் அகலமும் ஆழமும் அசாத்தியம். அது சொல்பவரையும் கேட்பவரையும் பொருத்தது. மறு வாசிப்பை தூண்டும் உள்ளடக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.