அமுதா அக்கா

அக்கா எங்களைவிட உயரமானவள். அவள் எங்களைவிட வயதில் மூத்தவள். அதனால் எங்களைவிட உயரமானவள். நாங்கள் ஐந்தில் இருந்தபோது அவள் ஏழில் இருந்தாள். நாங்கள் பாஸாகி ஏழுக்கு  வந்திருந்தோம். அவளுக்கு எங்கள்மீது அளவு கடந்த பிரியம், ஆகையால் அவளும் எங்களுக்காக ஏழிலேயே காத்திருந்தாள்.

இங்கே நாங்கள் என்பது நான், அழகு, குண்டு பாபு, மணிகண்டு, லெப்ட் கணேசு, கருப்பு செந்தில், புருஷு வினோத்து, கட்ட கண்ணன், பீப்பீ சங்கரு, சேட்டு குமாரு, தெத்து பல்லு மூர்த்தி மற்றும் எங்க கேங்க் லீடர் ஐயப்பூ. எங்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டப் பெயர் இருந்தது.எனக்கு வாத்தியார் கடை. ஏன்னா, ஒருமுறை அஞ்சு ரூவா மிட்டாயைத் திருடத் தெரியாம கையும் மிட்டாயுமா  மாட்டிக்கிட்டு கலியபெருமாள் வாத்தியார்கிட்ட வசமாக அடி வாங்கினதால எனக்கு அந்தப் பெயர். அதன் பிறகு நான் வாத்தியார் கடைக்குப் போனது இல்லை.  அது என் பத்து வயதில் நிகழ்ந்தது. ஆனாலும்  வாத்தியார் மரிக்கும் சமீபம் வரையிலும் என்னை  ஏதோ கொள்ளைக் கூட்டத் தலைவன் ரேஞ்சுக்குத்தான் பார்த்தார். நான் அவரின் பார்வையிலிருந்து விலகிக்கொள்வேன். அவர் தலை மறைந்ததும் தனியாக போய்ச் சிரித்துக் கொள்வேன். அவரை எதிர்கொள்ளும் போதெல்லாம் அந்தக் கள்ளச் சிரிப்பு என்னுள் தோன்றி மறையும்.

வாத்தியாருக்கு இறுதி வணக்கம் செய்துவிட்டு வந்த அம்மாவின் நினைவில் இருந்து சிந்திய சொற்கள் தான் வாத்தியார் பற்றிய என் எண்ணத்தை மாற்றியது.

நான் அப்போது படிப்பில் கொஞ்சம் சுட்டி. வகுப்பில் முதல் மாணவன். அதன் பிறகு அந்த தரத்துக்கு நான் எத்தனை படித்தும் வரவே முடியவில்லை. தம்பி நல்லா படிக்குறான். கேக்குற கேள்விக்கு டான் டான்னு பதில் சொல்லுறான், சட்டு சட்டுனு கணக்குப் போடுறான், அவன் கையெழுத்து சீர்மையாக இருக்கு என்று என் அம்மாவிடம் சொல்லிகொண்டே இருப்பார் கலியபெருமாள் வாத்தியார். அம்மா, மளிகை சாமான் வாங்க அவர் கடைக்குப் போகும்போதெல்லாம் என்னையும் என் படிப்பையும் விசாரிப்பதாக அம்மா அப்பாவிடம் சொல்லிப் பெருமை கொள்ளுவாள். அவர் என்மீது வைத்த நம்பிக்கையை நான்தான் வயசு வாக்கில குலைச்சிருந்தேன். அந்தத் துரோகத்தை அவரால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை. அதன் பிறகு, அம்மா அவ்வபோது கடைக்குப் போகும் போதுகூட வாத்தியார் எதுவும் பேசாமல் சட்டென எழுந்து உள்ளே போய்விடுவாராம். சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு விட்டத்தைப் பார்ப்பாராம். அவர் காதுகள் மட்டும் அம்மாவை நோக்கி விறைப்பாகத் தூக்கிக்கொண்டு இருக்குமாம். அவரின் மனைவியிடம் சொல்வதுபோல என் தேர்ச்சி விவரங்களையும் வாங்கிய பரிசுகளைப் பற்றியும் அம்மா சொல்லுமாம். அவரும் கேட்டுக் கொண்டதற்கு அடையாளமாக மேலும் கீழுமாகத் தலையை ஆட்டிக்கொள்வாராம். அவருக்கு என்மீது கோவமும் அக்கறையும் இருந்ததாக அம்மா சொல்லிவிட்டு மூக்கைச் சிந்தித் திண்ணைச் சுவரில் பூசிற்று. இந்த பயதான் கண்ட காலிப் பசங்ககூட சேந்துகிட்டு இல்லாத பழக்கத்தை எல்லாம் கத்துக்கிட்டான் என்று அம்மா விசும்பினது என்னை யோசிக்கவைத்தது,

நிச்சயமாக வாத்தியாரின் கோவத்துக்குக் காரணம் என்னால் ஏற்பட்ட ஐந்து ரூபா இழப்பாக இருந்திருக்காது, மாறாக என்மீது அவர் செய்து வைத்திருந்த மதிப்பீட்டுத் தவறுக்கானதாக இருந்திருக்கலாம். வெறும் ஐந்து ரூபாயில் ஒரு முழு மனிதரை அவர் நம்பிக்கையைக் கொன்றுவிட்டோமே என்று எனக்கு அவரைப்பற்றி அம்மா சொன்னபோதுதான் புரிந்தது.

இப்படி எங்க கேங்க்ல இருந்த ஒவ்வொருத்தன் பட்டப்பெயருக்குப் பின்னால் ஒவ்வொரு அற்பக் கதையும் சொற்பக் காரணமும் இருந்தது.  பம்பரம், கிட்டிப் புல்லு, கபடி, கொக்கோ, அப்புறம் கிரிக்கெட்டு, ஐஸ்பாய்னு சீசனுக்குத் தகுந்த மாதிரி எங்கள் விளையாட்டு ரசனை மாறிக்கொண்டே இருந்தது. ஆனால் எப்பவுமே மாறாத ஒரு விளையாட்டை எங்க கேங்க் லீடர் ஐய்யப்பு தெரிந்து வைத்திருந்தான். அந்த விளையாட்டுக்குத் தொழில்னு பெயர் தந்திருந்தான்.

அதாவது வீட்டுப் பாடம் எல்லாம் முடிச்சி பயலுக விளையாட ஒன்றாகச் சேரும்போது எங்க தெருவுக்கு அக்கம் பக்கம் இருக்கும் ஏதோ ஒரு பெட்டிக் கடைக்குப்போயி பிஸ்கெட், மிட்டாய், முட்டைனு திருடறது!

டே… ஆளு இன்னைக்கு எனக்கு சுவிட் பிஸ்கட் சாப்பிடணும்போல இருக்குடா…

………ம்.

டேய்…. இன்னைக்கு பப்லி கம்தான் நம்ம வேட்டை. …

………ம்.

டேய்… எனக்கு ஒரு தொப்பி வேணும்டா…

………ம்.

ஆளு… இன்னைக்குக் கோவிலில் செம கூட்டம்… நல்ல செருப்பா ஒண்ணு தூக்கு…

– என்று சில சமயங்களில் நேயர் விருப்பத்தின் அடிப்படையில்கூட நாங்க தொழிலுக்குப் போய்வருவோம். 

…டேய்… இன்னைக்கு ஒண்ணும் வேண்டாம் டா. பூனை ஒன்னு குறுக்கப் போயிடுச்சி. இனி சரி வராது.

இருடா… மூணு பேரா, ஒத்தை படையில் போகக்கூடாது டா… இன்னும் எவனாவது சேரட்டும் அப்புறம் போவோம்.

… இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சோமோ… ஒண்ணும் கிடைக்கில…

டேய்… ஆளு இது செம வேட்டைடா.

என்று நாங்க தொழிலுக்குப்போக சில நம்பிக்கைகளும் உண்டு பண்ணி வச்சிருந்தோம்.

பள்ளிக்கூடம் விட்டு வரும்போதே அன்றைய தொழிலுக்கான ஏதேனும் ஒரு கடையைத் தெரிவு செய்திருப்போம். கடைத் தெரிவுகள் பெரும்பாலும் ஒற்றை ஆள் உள்ளதாக அதுவும், வயதான தாத்தா அல்லது ஆத்தா கடையாகத்தான் இருக்கும். ஒருவேளை மாட்டிக்கொண்டால் ஓடித் தப்பிவிடலாம் பாருங்க. அதற்குத்தான் அப்படியான ஏற்பாடு!

முச்சந்தி, நாற்சந்தி அல்லது தெரு முனையில் உள்ள கடைகளாகத் தேர்வு செய்வோம். சட்டென ஓடி மறையவும், எந்தச் சந்தில் ஓடியிருப்பார்கள் என்று கடைக்காரனை குழப்பவும் அந்த ஏற்பாடு!

நாலு பேரில் யார் மாட்டினாலும் மற்றவர்களைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்பதும் வீட்டிற்குத் தெரிந்தால் உதைவிழும் என்ற பயத்தில் மாட்டிக்கொண்டவன் தெரு பெயரை மாத்திரம் எக்காரணம்  கொண்டும் சொல்லவே கூடாது என்பதும் எங்கள் தொழில் சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருந்தது!

பொதுவாக நாலு பேராகத்தான் எப்பவும் தொழிலுக்கு போவோம். எட்டணாதான் முதல்.

கடையின் சந்தில் ஒருவன் நிப்பாட்டப்பட்டிருப்பான். அவனின் வேலை ஆள் நடமாட்டம் பற்றிய நோட்டத்துக்கும், செய்தி சொல்லவும். ரெண்டு பேர் நேரிடையாகக் களத்தில் இறங்குவார்கள். ஒருவன் கடைக்காரனைத் திசை திருப்பவும், மற்றவன் சாமானை எடுக்கவும். நாலாமவன், கடையின் சுவற்றில் மறைந்து இருப்பான். அவனுக்குப் பணி, எடுத்துக் குடுத்த சாமானை வாங்கிக்கொண்டு முதலமாவன்கூட  ஓடி, இடும்பன் கோவில் சந்துக்கு வருவது, கள வீரர்கள் வந்ததும் பங்கு பிரிப்பு என்று அன்றைய சபை கலையும். இதுதான் எங்கள் திட்டமாக இருந்து வந்தது.

தெருவில் யாரேனும் வந்தாலோ அல்லது கடைக்கு யாரேனும் வருவது மாதிரி இருந்தாலோ உடனே செய்தி அனுப்பிவிடுவான் முதலமாவன். நாய் போன்ற லொள் லொள் சமிச்சையுடன்.

உடனே, நாலாமாவன் ரெண்டமாவனின் கை பற்றி அமர்த்தி விடுவான். அடிக்க வேண்டிய சாமானை  மூன்றாமவன் முடிவு செய்து ரெண்டமாவனுக்குச் சைகை காட்டிவிட்டுப் பையில் இருக்கும் எட்டணாவைக் கொடுத்து அண்ணே… பொட்டுகல்ல கொடுண்ணே..ம்பான்.

கடைக்காரர் பொட்டுக் கடலைக்குத் திரும்பும் அந்த நொடியில் மூன்றாமவன் சட்டெனக் கண் காட்ட, திட்டமிட்ட அல்லது ஏதேனும் அகப்பட்ட டப்பியை ரெண்டாமவன் எடுத்திருப்பான். அது நாலாமாவன் கைகளுக்கும் போயிருக்கும். அவனும் முதலமாவனும் இந்நேரம் இடும்பன் கோவில் சந்தை நோக்கி ஓடிக் கொண்டிருப்பார்கள். இவை எல்லாமே நொடிப் பொழுதில் நிகழும். அதே நேரத்தில் சலனமின்றி மூன்றாவனும் ரெண்டமாவனும் வாங்கிய பொட்டுக்கல்லையை அங்கேயே பிரித்துக்கொண்டு தின்பார்கள். ஏதேதோ பேசிக்கொண்டு.. இது கடைக்காரனுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்கான ஏற்பாடு!

சில நேரங்களில் ஆள் அரவம் பார்த்து நொடிப் பொழுதில் எந்த முடிவும் எடுக்கும் எல்லா கட்டற்ற அதிகாரமும் மூன்றாமவனுக்கு உண்டு. தொழிலுக்குப் புதுசு என்பதால் எனக்கு எப்போதும்  முதலமாவன் வேலைதான் ஒதுக்கபடும். நாலாமாவன் என்பவன் என்னிலும்  கொஞ்சம் அனுபவம் பெற்றவன். ரெண்டமாவன்தான்  லீடருக்கு அடுத்த பொறுப்பில் இருப்பவன். மூன்றாமவன்தான் எங்க கேங் லீடர்.

இப்போ புரியுதா  கலியபெருமாள் வாத்தியார் குடுத்த அரைச்சலை நான் ஏன் காதில் வாங்கினேன் என்று. அதன் பிறகு தொழிலுக்கு நான் போனதில்லையே, ஏன்னா,  அடி அப்படி!

டேய்… நீ வரியா…

……

ப்ம்ம்ம்… செரி டா நாங்க வரோம்… நீ இடும்பன் கோவிலாண்ட வந்துடு..… நாம… கிளம்பலாமா என்று லீடர் கேக்க, சரி ஆளு போவம்னு அவன் பின்னாடியே மற்றவர்கள் போவார்கள். ஒருநாள் லீடர்  முட்டை எடுக்கப்போயி மாட்டிக்க, செம்மையா உரித்துவிட்டதும்  இப்போது யாரும் தொழிலுக்குப் போவதில்லை! எல்லோரும் திருந்திவிட்டிருந்தோம்.

தொழிலைக் கைவிட்ட அந்த நாள்களில், ஸ்கூல் இல்லாத லீவு நாள்களில் என்று அமுதா அக்கா வீட்டுௐ கொல்லைதான்  எங்களுக்குக் கெதி. கொல்லையில் காயும் மாவத்தல், ஜவ்வரிசிக் கூழ்வடவம், கொல்லையில் சிதறிக் கிடக்கும் வாதாங்கா, கொய்யாக்காய், பப்பாளிதான் வயித்த நிரப்பும் சாப்பாடு. ,அப்புறமா, அக்கா இடையிடையே வந்து கொடுக்கும் உப்பும் மிளகாயும் தூவிய மாங்காயும், பழைய வடவமும் சுட்ட அப்பளமும்தான். அக்கா வீட்ல கறிக் குழம்புன்னா, சாப்பாட்டில் முட்டையும் கண்டிப்பா இருக்கும். இட்லிக் குண்டானில் அவித்த முட்டைகளைக் கொல்லையில் வைத்து உரிக்கும்போதே ஒன்றிரண்டைக் கட்டியிருக்கும் பச்சை நிறப் பாவாடையில் ஒளித்து வைத்துக்கொள்ளும் அமுதா அக்கா. நாங்கள் விளையாடிவிட்டுப் போகும்போது என்னை மட்டும் தனியாகக் கூப்பிட்டு வீட்டில் யாரும் பார்த்துவிடாமல்  திரும்பித் திரும்பிப் பார்த்தபடி எனக்கு தரும். அக்காவின் பாவாடையில் துடைத்த முட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நூலை எடுத்து போட்டுவிட்டு அவுக் அவுக்கென தின்பேன். அக்கா என்னையே பார்த்து கொண்டிருக்கும். அந்த முட்டைகள் என்றுமே கவிச்சை வீசியதில்லை.

நாங்கள் வசித்த தெருவில் அக்காதான் என் பள்ளித் தோழி. என்னை அக்காதான் பள்ளிக்கு கூட்டிப் போகும். நான் அக்காவின் கைபற்றி நடப்பேன். என்னென்னவோ கதை பேசிக்கொண்டே வரும். அப்பப்போ வீட்டில் செய்த வடை, அதிரசம், சக்கர பொங்கல், கேசரினு எதையாவது  திங்கக் கொடுக்கும். முந்தைய இரவில் செவ்வாய்ப் பிள்ளயாருக்குப் படைத்த அரிசிக் கொழுக்கட்டையை வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து தரும்.

டேய் … செல்லம், இந்த கொழுக்கட்டைய ஆம்பளைங்க திங்கக் கூடாதுனு அம்மா சொல்லிச்சி… நான்தான் தெரியாம எடுத்துட்டு வந்தேன். யார் கிட்டயும் சொல்லக்கூடாது செரியா… அப்பிடி சொன்னே… ம்… பாத்துக்க… காதில் கிசுகிசுக்கும்.

அக்காவின் வாயிலிருந்து எப்போதும் பூண்டுத் துவையலின் வாடை வீசும். அக்காவுக்குப் பெரியப் பெரிய கண்கள். கொஞ்சமா வலப்பக்க வாகு எடுத்துப் பின்னிய ரெட்டை ஜடை. கூரான வளைந்த தாவாங்கட்டை. அக்கா சிரிக்கும்போது வாயி நீண்டு காதைத் தொடும். காதருகே உள்ள முடி மட்டும் சுருண்டு சுருண்டு கிடக்கும்.  முன்பற்கள் ரெண்டுக்கும் இடையே மெல்லிய ஈர்க் குச்சி நுழையும் அளவு பிளவு இருக்கும். தலையில் தடவிய கையேந்திரை எண்ணெய் அக்காவின் காதோரத்தில் லேசாக வழிந்துகொண்டே இருக்கும். அக்காவின் வலக்கைக் கட்டை விரல் பின்மண்டையை எப்போதும் சொரிந்துகொண்டே இருக்கும்.

ந்த… என் பேரு செல்லம் இல்ல ந்த, செல்வம்.… உனக்கு எத்தனை வாட்டிதான் சொல்றது…

நான் அத்தனை முறை சொல்லியும் அக்கா கேட்கவேயில்லை. அதுக்கு என்னை செல்லம்னு கூப்பிடப் பிடித்திருந்ததுபோல. நாங்கள் வேறு வீடு மாறும்போது வரையிலும் என்னை அப்படித்தான் கூப்பிட்டது.

செல்லம்… நல்லா படிக்கணும்… செல்லம்… விளையாட்டக் குறைச்சிக்க… செரியா? வீட்டுக்கு வந்துட்டு போய்ட்டு இரு… என் கைகளைப் பிடித்துகொண்டு சொன்னது அமுதா அக்கா.

அக்காவின் வீடு எங்கள் வீட்டிற்கு எதிர் வீடு என்பதால் அது  வீட்டு அன்றாடங்கள் எனக்கு தெரிந்திருந்தது. அக்காவின் குடும்பம் பெரியது. எங்கள் வீட்டு வாசற்படியில் அமர்ந்து பார்த்தால் அக்கா வீட்டின் கொல்லைக் கிணற்றைத் தாண்டி சுவர் வரையிலும் தெரியும். எப்போது பார்த்தாலும் அந்த வீட்டில் குறுக்கும் மறுக்குமாக யாரேனும் நடந்துகொண்டே இருப்பார்கள். அக்கா வீட்டுத் திண்ணையில் யாரேனும் படுத்து உருண்டு கொண்டேயிருப்பார்கள். எப்ப பார்த்தாலும் வீட்டு உள்முற்ற தாழ்வாரக் கம்பியில் சீனுசாமி அண்ணன் தொங்கிக் கொண்டிருக்கும். அமுதா அக்காவின் கடைசி அண்ணன். 

சீனுசாமி அண்ணனுக்கும் அக்காவுக்கும் ஒரு வயசு வித்தியாசம்தான். ஆனாலும் அண்ணனைவிட அக்கா சற்று வளர்த்தி. பள்ளிக்கூடம் போக  ஜடை பின்னிக் கொள்ளும்போது சீனுசாமி அண்ணன் அக்காவின் இடுப்பிலே வதக்ன்னு மிதிச்சிப்பிட்டுதான் பள்ளிக்கூடம் போகும். அவ்ளோ கோவம். என்னையவிட இவ எப்படி வளத்தியா இருக்கலாம். வெளியில் ஒன்றாகச் சேர்ந்து போகும்போது அக்காவும் தம்பியும் எங்க கிளம்பியாவது என்றுதான் தெருவில் கேட்பார்கள். அப்படி யாரேனும் கேட்டுவிட்டால், அவ்வளவுதான். அக்காவின் தலை மயிரைக் கொத்தாகப் பிடித்துக் கீழே தள்ளி உதைத்துவிட்டு ஓடிப்போகும் சீனுசாமி அண்ணன்.

பள்ளிக்கூடம் போறேன்னு கிளம்பி புத்தகப் பையோடு சாப்பாட்டு மூட்டையையும் கட்டிக்கொண்டு நேராகப் பூங்கா பார் கம்பியிலே தொங்கிகிட்டு இருக்கும். தின்னது செரிச்சுப் பசிக்க ஆரம்பித்தவுடன்  வீட்டுக்கு வந்துவிடும்.

ஏன்டா… பள்ளிடம் இல்ல… அதுக்குள்ளே வந்துட்ட… வீட்டில் கேட்போருக்கு ஏதேனும் பதில் தயாராக வைத்திருக்கும் சீனுசாமி அண்ணன்.

யம்மா… வாத்தியாரு கிணத்துல குதிச்சிட்டாரு… ம்மா.

டீச்சரோட அம்மா இறந்துவிட்டாங்க… அதான் ரீவு விட்டுட்டாங்க…

வவுத்த வலிக்கிது… ம்மா.

ரொம்ப பசிசிச்சு… ம்மா.

அதெப்படி தாத்தா திவசத்துக்கு நான் இல்லாமையா…

மழை வரும் போல இருந்திச்சி…

வெயில் அதிகம்…

யூனிபாம் துவைக்கல என்று  அப்படி இப்படினு ஏதோ ஒரு காரணம் சொல்லிக்கொண்டே இருந்தது அண்ணன்.

ம்ம் ஹம்… இது சரிப்பட்டு வராது, இவனை வெள்ளைக்காரப் பள்ளிடத்துல போட்டாதான் சரியா வரும்னு மிஷனரி பள்ளிக்கூடத்துல எட்டுல சேர்த்தார்கள்.  படிச்சிக்கிட்டு இருந்த சீனுசாமி அண்ணனை, இருங்க… இருங்க… என்ன சொன்னேன்…படிச்சிக்கிட்டுன்னா… இல்ல… இல்ல.… பள்ளிக்கூடம் போய்ட்டு வந்துகிட்டு இருந்த அண்ணனை வகுப்பு தோழர்கள் கட்ட பய, கட்ட பயனு கிண்டல் செய்வதும் டேய், ஆளப் பார்ரா, அவன் தங்கச்சியைவிடக் குள்ளப் பயடா இவன். அமுதாதான் அக்கா மாதிரி இருக்கு, இவன் நம்மகிட்ட டூப்பு விடுறான்டா… ஆளு…இவனை அவுங்க வீட்ல தவுட்டுக்கு வாங்கியிருப்பாங்க போலடா… னு கேலி செய்வதும் தன்னைவிட அக்கா கொஞ்சம் உயரமாக இருப்பதையும் பொறுக்கமுடியாம, அக்காவைப் போட்டு அடிச்சிகிட்டே இருக்கும் சீனுசாமி அண்ணன். அக்காவும் லேசுப்பட்டது இல்ல, நகத்தால் பிராண்டி விட்டுவிடும்.

மூஞ்சி மொகர எல்லாம் நகக் கீறல்களுடன் பள்ளிக்கூடம் போகவும் அண்ணன் அசிங்கப்பட்டுகிட்டு கிரவுண்ட் போய் உக்காந்துக்கும். வாத்தியார் மேலே இருந்த அளவற்ற பயமும், தான் அமுதா அக்காவைவிடக் குள்ளமாக இருந்த தாழ்வு மனமும், கூடப் படித்த பயலுகள் செய்த கேலி கிண்டலும், அமுதா அக்காவிடம்  வாங்கிய நகக் கீறல்களும் தடங்கலான படிப்பை பாதிலே ஏறக்கட்டிவிட்டது.அதற்கு பிறகு அண்ணன் பள்ளிக்கூடம் போகவேயில்லை.

அமுதா அக்காவும் நானும் ஒரே பள்ளிக்கூடத்தில் ஏழில் இருந்தோம்.வேற வேற பிரிவுகளில். அக்காவுக்கு எவ்வளவு முயன்றும் இந்த இங்கிலீஷும் கணக்கும் வரவேயில்லை. காலாண்டில் ஐந்துக்கு ஐந்திலும் அக்கா தேறவில்லை. காலாண்டுத் தேர்வு விடுமுறையில் கொடுத்த வீட்டுப் பாடங்களை ஒன்றாகச் செய்தோம். ஒருநாள் அக்கா என்னிடம் தயங்கித் தயங்கிக் கேட்டது.

 டே..… டேய்… செல்லம்… செல்லம், எனக்கும் கொஞ்சம் கணக்குப் பாடம் சொல்லிக் குடுடா…

அதன் பிறகு, நாங்கள் இருவரும் ஒன்றாகப் படிக்க ஆரம்பித்தோம். அக்காவுக்கு இப்போது அறிவியலும், துணைப் பாடமும் நன்றாக வந்தது. தமிழில் ஒற்றுப் பிழையுடன் செய்யும். அதுவும் போகப் போகச் சரியாகி வந்தது. அக்கா கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வந்தது. அரையாண்டில் மூன்று பாடங்களில் தேறியிருந்தது. டே…டேய்… தம்பி இந்த வருஷம் பாஸாகனும் டா.. கணக்குகூட பண்ணிப்புடுவேன். இந்த இங்கிலிஷ்தான் பயம்… அமுதா அக்கா சொல்லிற்று.

எனக்கு இங்கிலிஷ் பிரச்சனை இல்லை என்பதால் என்னுடைய இங்கிலிஷ் புஸ்தக நோட்ஸை அக்காவிடம் கொடுத்திருந்தேன்.

அப்போது எங்களுக்கு அரையாண்டு விடுமுறை விட்டிருந்தார்கள். நான் அக்காவைப் பார்க்க போகும்போது, கையைப் பிடித்து அக்கா பெரிய மனுஷியாகிட்டா டா… இனிமே முன்ன மாதிரி  சும்மா அவ கூடத் திரியக்கூடாது சரியா… என்று அம்மா சொல்லியது எனக்கு அப்போது புரியவில்ல.

விடுமுறை முடிந்து நாலு நாள் வரையில் அக்கா பள்ளிக்கூடம் வரவில்லை. நான் அக்காவைப் பார்க்கப் போயிருந்தேன். அக்கா கொல்லை நடையில் தனியாக உட்கார்ந்திருந்தது. விளக்குமாறும் ஒரு விறகுக் கட்டையும் அக்கா  உட்கார்ந்திருந்த பாய்க்குக் குறுக்கே கிடந்தது. கொஞ்சம் அடுப்புக் கரியும் அருவா ஒன்றும் அக்கா பக்கத்தில் இருந்தது. அக்காவின் மேலே ஏதோ ஒரு கத்தாள வாடை வீசிற்று. தின்று கொண்டிருந்த நல்லெண்ணெயிட்ட உளுத்தம் களியை எனக்குத் தரக் கையை நீட்டிய அக்காவை நோக்கி , அடியே… யாரையும் தொடக்கூடாது டீ.. எத்தனை வாட்டி சொல்லுறது.

டே… தம்பி நீயும் தான்… கொஞ்சம் நவுந்து உக்காரு… அவளைத் தொடாம இரு… என்று ஒரு கிழவி வைததுக்கு பின்னேதான் அக்காவை உற்று நோக்கினேன். அக்கா அணிந்திருந்த மேல் சட்டைக்கு மேல ஒரு துண்டு போர்த்தியிருந்தது.  பாவாடையை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டது.  அக்காவின் முழங்காலிலும் கெண்டைக் காலிலும் முல்லை அரும்புகள்போலச் சின்னச் சின்ன ரோமங்கள் பூத்திருந்தன.

செரி… செரி… மறந்துட்டேன்…

டே… தம்பி… தள்ளு தள்ளு… தொடாம உக்காரு என்று சொல்லிக்கொண்டே முட்டை ஒடுகள் மேலே மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களை  விசிறியால் வீசி விரட்டி கொண்டிருந்தது அமுதா அக்கா.

பெரிய மனுஷியா ஆனதுக்குப் பின்னே அக்கா தனியாகப் பள்ளிக்கூடம் போய்ட்டு வந்தபடி இருந்தது. என்னிடமும் அவ்வளவாகப் பேசுவதில்லை.பெரிய மனுஷி ஆனா பெண் பிள்ளைகள் சுரிதார் யூனிபாம் அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்று அப்போது எங்கள் பள்ளிக்கூடத்தில் அந்தப் புதிய சட்டம் போட்டிருந்தார்கள்.  அதுவும் அக்காவுக்கு கொஞ்சம் படிப்பின்மேல் நாட்டம் வரத் துவங்கிய அந்த நேரத்தில்!

ஒருநாள் யூனிபாம் சூரிதார் அணிந்து வராததால் வகுப்புக்கு வெளியே நிறுத்தபட்ட அக்காவின் காலிடுக்கில் பிசு பிசுத்த அவமானத்தில் பள்ளிக்கூடத்தில் இருந்து ஓடி வந்துவிட்டது அமுதா அக்கா. இனிமே பள்ளிடம் போகப்போவதில்லை என்று ஒரேயடியாக ஒட்டாரம் செய்தபடி இருந்த நேரம் தெரியாம  அக்காவிடம், த்த… என் புக்கை குடு.… த்த என்று நான் கேட்கப்போயி கொப்பளிக்கும் கோவத்தில் புத்தக மூட்டையைத் தூக்கி எறிந்துவிட்டு எடுத்துக்கிட்டு போடா… என்று அழுதுகொண்டே அக்கா கிணற்றடிக்கு ஓடிற்று, நான் இனி பள்ளிடம் போகமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே. அதன் பிறகு அக்கா பள்ளிக்கூடம் வரவேயில்லை.

வீசியெறிந்த பையிலிருந்து என் இங்கிலிஷ் நோட்ஸ் புக்கை மட்டும் எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். அக்கா அதில் என்னவோ எழுதி எழுதிப் பார்த்திருந்தது. எப்படியேனும், கற்றுக்கொள்ள முயன்றதை, பாஸ் ஆக வேணும் என்ற இறுமாப்பாய் இருந்ததை அதற்குப் பிறகுதான் நான் உணர்ந்தேன்.

ஒருவேளை அக்காவுக்கு யூனிபாம் சுரிதாரும் அந்த இங்கிலிஷ் நோட்ஸ் புக்கும் இருந்திருந்தா அக்கா படிச்சு நல்ல நிலைமையில் இருந்திருக்குமோ என்னவோ?

அதன் பிறகு, ஒருமுறை அமுதா அக்காவை எங்கள் தெருக் கோவில் விளக்கு பூஜையில் பார்த்துப் பேசியதுதான். அப்போது நான் டிப்ளமோ படிச்சிக்கிட்டு இருந்தேன். நாங்கள் இருந்த வீட்டில் இப்போது யாரோ சிங்கப்பூர்காரங்க குடி வந்திருப்பதாகவும், அவர்கள் வீட்டில வெள்ளை என்று அழகா ஒரு பெண்ணும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.  அது ஒரு காரணம் போதாதா, வெள்ளையைக் காதலிக்க! வெள்ளையைப் பார்க்கும் பொருட்டு பழைய தெருவிற்குச் சென்றிருந்தேன்.

அக்காவைக் கடைசியாகப் பார்த்து ஐந்து வருடங்களுக்குமேல் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் அக்கா என்னை ஞாபகம் வைத்திருந்தது. அது என்னை ஞாபகம் வைத்திருக்கும் என்று நான் கிஞ்சித்தும் நினைக்கவேயில்லை.

ம்ம். நல்ல இருக்கேன்… தயங்கி தயங்கி நின்னேன். அக்காவிடம் முன்னே மாதிரி எனக்குப் பேச முடியவில்லை. என் கண்கள் அக்காவின்மீது குறுகுறுத்ததை அக்கா கண்டுபிடித்து விடுமோ என்று உள்ளூர பயம்  வேறு ஓடிக்கொண்டிருந்தது.

செல்லம்… என்ன டா பாக்குற… என்னைய மறந்துட்டியா… நான் தான்டா… தம்பி… அமுதா அக்கா. நியாபகம் இல்லையா? -னு அக்கா கேட்க, இல்ல இல்லனு மறுத்துத் தலை அசைத்தேன்.

வெள்ளையைப் பார்க்கப் போகும்போது சாக்கில் அப்பப்போ அக்காவிடமும் பேசி வருவேன். வெள்ளையுடனான காதல் தோல்விக்குப் பிறகு  அமுதா அக்காவை நான் பார்க்கப் போவதில்லை.

அதன் பிறகு அக்காவை மீண்டும் பார்ப்பேன் என்றுகூட நினைக்கவில்லை.

ரேஷன் கடை வாசலில் கையில் ஒரு பிள்ளையையும், இடுப்பில் ஒரு பிள்ளையையும் வைத்து கொண்டு நிற்கிறதை, பத்துப் பன்னிரெண்டு வருடத்திற்குப் பிறகு, இப்போதுதான் பார்க்கிறேன்.

அமுதா அக்காவாக இருக்குமோ என்று நான் நினைத்த நேரத்தில், அக்கா என்னைக் கவனித்து விட்டிருந்தது.

டேய்… தம்பி… செல்லம்…

நல்லா இருக்கியா… என்ன செய்யுற… கல்யாணம் கட்டிக்கிட்டியா…எத்தனை பிள்ளைங்க… இப்போ எங்க இருக்க…

நல்லா இருக்கியா?… யப்பா எத்தனை வருஷம் ஆச்சு. அப்படியே இருக்கியே… முகம் மாறாமல்… னு ஏதேதோ கேட்டுக்கொண்டே இருந்தது அமுதா அக்கா. அக்காவின் குரல் மாறவேயில்லை!

நல்லா இருக்கியா… நல்லா இருக்கியானு கேட்டுக்கொண்டே இருந்த அக்காவிடம் நீ நல்லா இருக்கியா என்று நான்  திருப்பிக் கேட்டவேயில்லை. அப்படிக் கேட்பது அக்காவின்மேல் தொடுக்கும் வன்முறை என்று நினைத்துக்கொண்டேன்.

ம்ம்….. ம்ம்ம்ம்… என்று தலையை மட்டும் ஆட்டிக் கொண்டேன்.

நல்லா இருக்கேன்க்கா. மெட்ராஸில் வேலை பார்ப்பதக்ச் சொன்னேன்.

கல்யாணம் டா… தம்பி.

ம்ம்… முடிச்சிட்டேன்க்கா. அங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்துக்  கல்யாணம் கட்டிகிட்டேன். ஒரு பொம்பளப் பிள்ளைன்னு பொய் சொன்னேன்.

உடனே, அக்காவின் முகம் மலர்ந்தது மாதிரி இருந்தது. உடனே பக்கத்தில் இருந்த கடைக்கு இடுப்பிலே வைத்திருந்த பிள்ளையோடு லொங்கு லொங்குவென நடந்துபோய், ஒரு மிட்டாய் வாங்கிக்கொடுத்து, பிள்ளைட்ட குடுனு சொல்லிச் சிரித்து நின்றது அமுதா அக்கா. அப்பப்போ புறங்கையால் நெற்றியை ஒற்றி ஒற்றி துடைத்துக்கொண்டது.

அக்காவுக்கு வயதாகிவிட்டிருந்தது.  அங்கொன்றும் இங்கொன்றுமாக கிழிசல்களோடு கசங்கிபோய் அழுக்காய் இருந்தது சுத்தியிருந்த புடவை. வியர்வையில் நனைந்திருந்த ஜாக்கெட்டின் கக்கத்தில் கிழிந்திருந்தது கைதூக்கும்போது தெரிந்தது.  அக்கா முன்னைவிட இப்போது இன்னும் கறுத்துப் போயிருந்தது. கன்னங்கள் ஒட்டி இருந்தன. பற்களில் மஞ்சள் கறை படிந்திருந்தது.

எனக்கு ஏனோ அக்காவைப் பார்க்கும்போது ராஜா அண்ணனும் பெரிய மனுஷியாகியிருந்த சமயத்தில் அண்ணனுக்குப் பயந்துகிட்டு என்னைய கையைப் பிடிச்சுக்கிட்டு கோவிலுக்குப் போகும் இளவயது அமுதா அக்காவும்தான் நியாபகத்தில் வந்தார்கள். அப்போதெல்லாம் அக்கா அவ்ளோ அழகாயிருக்கும்.

சைக்கிள் ராஜா அண்ணன்தான் அப்போதைய எங்கள் தெரு காதல் மன்னன். அண்ணன் ஏதோ காலேஜ்ல என்ஜினிருக்குப் படிக்கிது என்றும் டிகிரி படிப்பு படிக்கிது என்றும் சொல்லுவார்கள். நீயி  நல்லா படிச்சனாக்க ராஜா அண்ணன்கூட காலேஜ்க்கு அனுப்புவேன் இல்லையினா உன்னையே யாருக்காச்சும் வித்துப்பிடுவேன் பாத்துக்கனு பசங்களைப் பயமுறுத்த எங்கள் தெருவில் உள்ள அம்மாக்கள் சொல்வதுண்டு. அந்த அளவில் ராஜா அண்ணனை தெரு மக்கள் அறிந்திருந்தார்கள். தெருவில், பள்ளிடம் தாண்டி காலேஜ்போன முதல் ஆள் ராஜா அண்ணன்தான்.  கிரீஸ் நிற்கும் பேண்ட், இடுப்பில் வார் பெல்ட்,  டக் செய்த முழுக்கை சட்டை, கருத்த பருக்கள் நிறைந்த களையான முகம். பழைய சைக்கிள். திகு திகுவென உடல்வாகு. ஆறுக்கும் கொஞ்சம் குறைவான உயரம். வெள்ளைச் சிரிப்பு. அண்ணனின் சிரிப்பு போலவே வெள்ளையாக இருக்கும் சாக்ஸும், எப்போதும் கட் ஷு அணிந்து கொண்டுதான்   இருக்கும் அண்ணன். அதுதான் ராஜா அண்ணன்.

தூங்கும் போதும்கூட அப்படியேதான் தூங்குமோ என்று எங்கள் எல்லோருக்கும் அண்ணன்மீது சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். ஏனெனில் மார்கழி மாத விடிகாலைப் பொழுதில்  கலர்க் கோலம் போடவரும் எங்க தெரு அக்காக்களை பார்க்க சைக்கிள் எடுத்துவரும் ராஜா அண்ணன் அதே கெட்டப்பில் வருவதைப் பார்க்க எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.  சைக்கிள் மிதித்துக்கொண்டே தெருவில் உள்ள எல்லார் வீடுகளின் வாசல் பார்க்கும் அண்ணனின்  கண்கள் கொல்லை மதில் சுவர்வரை சென்றுவரும். சற்றேறக்குறைய தெருவில் இருந்த எல்லாப் பெண்களையும் அதே அளவில் ராஜா அண்ணன் காதலித்து வந்தது.  

ஏதேனும் பெண் பிள்ளைகள் கண்ணில்பட்டால் உடனே அவர்களைப் பின்தொடர்வது, எதிர்ப்படும் வழியில் வேறு எவளேனும் வந்துவிட்டால், இவளைவிட்டு அவள் பின்னால் போவது, காலை, மாலை என்று பேதம் பாராமல் பெண்கள் வாசல் தெளிக்கும்போது எதிரில் போய் நின்று சிரிப்பது, போடப்பட்ட கோலத்தின்மீது சைக்கிள் விடுவது, கோவில் பிரகாரத்தில் யாருடனாவது பேச முயற்சிப்பது, ஒவ்வொரு வார்த்தை பேசிய பின்னர் கழுத்தை இடப் பக்கமாக ரெண்டு முறை வெட்டி வெட்டி பல்லிளிப்பது,  பதினோரு நாட்கள் நடக்கும் எங்கள் தெரு பிள்ளையார் கோவில் திருவிழாவின்போது உற்சவ மூர்த்திக்குப் பின்னாலேபோய்  எட்டு வீதியிலும் எந்தந்த வீட்டில் எந்தப் பெண் இருக்கிறது என்று  ஆளோட்டம் பார்ப்பது, பின்னர் பிள்ளைகள் உள்ள வீட்டில் மட்டும் அர்ச்சனைக்குத் தட்டகத்தில் உள்ள தேங்காய்களை உடைப்பது என்று அண்ணனின் காதல் வேற லெவலில் இருக்கும். அண்ணனின் பட்டியலில் கடைசில சேர்ந்தது அமுதா அக்காவாக இருக்கலாம்.

அண்ணனைப் பற்றி தெருவில் எல்லோருக்கும் தெரிந்திருந்தால் யாரும் அவரைச் சட்டை செய்வதில்லை.வேடிக்கையாக எடுத்துக் கொண்டனர்.  ஆனால் தெருவில் இருந்த அத்தனை பெண்களுக்கும் ராஜா அண்ணனை நன்றாக தெரியும். அண்ணன் சவரம் செய்துகொண்டாலோ, முடி வெட்டிக்கொண்டாலோ, புது சட்டை போட்டிருந்தாலோகூட அவர்களுக்குத் தெரிந்துவிடும்.அவர்கள் ரகசியமாகத் தன்னை ரசிப்பதை அண்ணன் உள்ளுக்குள் கொண்டாடும்.

அவர்களுக்குள் ரகசியமாகப் பேசிக்கொள்வது அண்ணனுக்குத் தெரிந்தே இருந்தது. அப்படி,  எங்கள் தெருவில் காதல் மன்னன், இளவரசன், அது இதுனு எல்லாமே ராஜா அண்ணன்தான். ஆனாலும் யாரேனும் பெரிய மனுஷி ஆனாக்கா முதலில் அவர்களுக்கு சொல்லப்படுவது இந்த ராஜா பயல மட்டும் நிமிர்ந்து பார்த்திராத என்பதாகத்தான் இருக்கும்.

அண்ணனை வேடிக்கையாகப் பார்த்துவந்த தெருப் பெண்கள் அதிரும் ஒரு சம்பவத்தை அண்ணன் ஒருமுறை செய்தது. அது பாத்திமா அக்காவைத் தான் விரும்புவதாகச் சொல்லிகொண்டே மாடியிலிருந்து கீழே குதித்துக் கை காலை உடைத்துக் கொண்டது.மறு நாளே பாய் வீட்டைக் காலி செய்ததுகூட தெரியாமல் ஆஸ்பத்திரியில் கிடந்தது அண்ணன். ஆனால் மற்ற பெண்களுக்கு அண்ணனின்மீது கோவம். கீழ விழுந்து சாவுற அளவுக்கு அப்படி என்ன பாத்திமா அழகியா? ச்சை… என்று அதன் பிறகு அண்ணனைப் பற்றி  எங்கள் தெருப் பெண்கள் யாரும் பேசுவதில்லை.

அமுதா அக்கா கோவிலுக்குப் போகும்போது என்னையும் கூட்டிப்போகும். அடி ப்ரதச்சனை செய்யும் அக்காவை அண்ணன் சுத்திச் சுத்தி வரும். கழுத்தை வெட்டி வெட்டி  அக்காவிடம் பேச எவ்ளவோ முயற்சி செய்தது. ஆனால் அக்கா ஒருமுறைகூட அண்ணனை நிமிர்ந்து பார்த்ததேயில்லை. அண்ணன் யாரைக் கல்யாணம் பண்ணிகொண்டது என்று எங்கள் யாருக்குமே இது நாள் வரையில் தெரியாது.

வண்ணம் உதிர்ந்த மொட்டை மாடிச் சுவர்போலப் பொலிவின்றி நிற்கும் அக்காவைப் பார்த்துக்கொண்டே நின்றேன். அக்காவிடம் எதுவும் கேட்கவேண்டும் என்று ஏனோ எனக்குத் தோணவில்லை.

அந்தப் புறம்போக்குப் பய வசூலுக்குப் போய்க்கிட்டு இருந்த லைன்ல ஒருத்தியோடு குடும்பம் நடத்துறான் நாடுமாறி நாயி…என்று தானாகப் பேசியது அமுதா அக்கா.

தோ… இத்த மாதிரி ரெண்டு பொம்பள பிள்ளைக இருக்கு அவளுக்கு. இந்தாளுக்குப் பொறந்ததுதான். நாயி பய எல்லாத்தையும் மறைச்சி எனக்கும்ல தாலி கட்டியிருக்கான். அந்தப் பிள்ளை வயசும் சின்ன வய்சுதான்… கருப்பா, கெளையாதான் இருப்பாவ… தினம் தண்டல்க்கு வட்டிக் காசு வாங்கப்போன இந்த மனுஷனுக்கு எப்படியோ தொடுப்பு ஏற்பட்டுருச்சிபோல…

எனக்கு விசயம் தெரிஞ்சி போயி அவ வீட்டுக்கே போய்ட்டேன். கோவமாதான் போனேன். சண்ட பிடிக்க. ஆனா என்னத்தப் பண்ண… எனக்கு மனசு வரல… த…

பாவம்… த… அந்தப் பிள்ள. அதுக்கும் வேற வழியில்ல பாத்துக்க. அவன் புருஷன் போட்டாவ பாத்தேன்… கிழப் பய. அவனுக்கு போய் கட்டிவச்சிட்டு அவ அப்பன் செத்துப் போச்சிதாம். அந்த கிழப் பயலும்  செத்துப் போயிட்டான். இந்தப் பிள்ளதான் என்ன செய்யும். பாவம்… வயலு வேலைக்குப் போய்க்கிட்டு இருந்துருக்கு பொழப்புக்கு. ம்ம்… எல்லா இடத்திலையும்தான் இந்த ஆம்பள நாயுங்க இருக்கே அப்புறம் பொம்பள எங்க பொழைக்கிறது.

த… நீயி ஒன்னும் கோவிச்சிக்காத த… நா பொதுவாச் சொன்னே.

எப்படியோ இந்த மனுஷன் கண்ணுல ஆப்பட, நம்ம வீட்டு ஆளும் கேங்கு பிடிச்ச பய. அதான் அந்தப் பிள்ளையை ஏமாத்தி வச்சிக்கிட்டான். ஏதோ இந்த மனுஷன் சேத்துகிட்டு வாழுறதால, அந்த பிள்ளைக்கு வேறு ஒருத்தனும் அவளைச் சீண்டுறதில்லைனு சொன்னா.

இன்னொரு விஷயம் தெரியுமா தம்பி… சட்டையை விலக்கிக் காட்டினா த… பாத்தாக்கா அவ மாரில இந்தப் பய பேர பச்சை குத்தி வச்சியிருக்கா. பாவம். 

யக்கா… என்னய மன்னிச்சிருங்கக்க னு ஒண்ணும் தெரியாத அந்தப் பிள்ளைகளையும் என் கால்ல விழவச்சி உங்க கூடயே இருந்துடுறேன்க்கா. என்னையத் தொரத்தி விட்டுறாதீங்கன்னு கதறினா. இந்த மனுஷன் ஒண்ணுமே சொல்லாம வாசல்ல நிக்குறான். எனக்கு என்ன செய்யணும்னு தெரியல. அவ தலை மயிரை இறுக்கி பிடிச்சிருந்த நானு ஒண்ணும் சொல்லாம வந்திட்டேன்.

அப்புறம் ஒருநா அந்தாளு வந்து என்னையக் கூப்பிடுச்சி, நான்தான் போவுல. என்ன ரோசமோ தெரியல. வீராப்பா நின்னுட்டேன். அதுகூடப் போவணும்னு தோணல.

எது… எப்படியோ  வேறு ஒருத்தியையும்கூட சேத்துக்காம , அந்தப் பொண்ணையும் ரெண்டு புள்ளிகளையும் பாத்துகிட்டு, நல்லபடியாயிருந்தா சரிதான்… என்ன… த சொல்லுற… என்று மூச்சிரைக்கச் சொல்லி முடித்தது அமுதா அக்கா. அதுக்கு யாரிடமாவது சொல்லணும்னு தோன்றியிருக்கும்போல, நான் அக்காவை இடைமறிக்கவில்லை.

புழுதி பறந்து ஒரே தூசியா இருக்குக்கா தெருவே… இல்ல… என்றேன். அக்கா என்னைப் பார்த்து வறட்சியாச் சிரித்தது.

அக்கா வைத்திருந்த அரிசிப் பையை வாங்கிக்கொண்டேன். ஒரு குழந்தையை வண்டியில் உட்கார்த்தினேன். டீ குடிக்கலாம் வா என்று அருகில் இருந்த கடைக்கு அழைத்தேன்.

மாமாகூட டீ குடிப்பூமா… மா… என்று இடுப்பில் இருந்த குழந்தையின் வயிற்றில் கிச்சுக்கிச்சு மூட்டியபடி சிரித்து நடந்தது அமுதா அக்கா.

தம்பிக்கி என்ன வேணும்… என்ன சாப்பிடுறீங்கனு நான் கேட்க, அம்மாவைப் பார்த்தது குழந்தை. உயர்ந்தவளுக்கு பிறந்தது ஆயிற்றே!

வாங்கிக்கோடா… மாமாதான்… னு சொல்லிக்கொண்டே அக்கா என்னிடம் கேட்டது, த… என்ன கடைக்குள்ளேயுமா உனக்கு புழுதி பறக்குது?

இந்த முறை நான் வறண்டு சிரித்தேன்.

சீனி போண்டாவும், பொட்டலத்தையும் வாங்கிகொண்டு அழகாக வெட்கப்பட்டது குழந்தை. நான் வாங்கிய டீயைக் கையிலே வைத்துக் கொண்டிருந்தேன்.

தா… இன்னும் சூடா டீ குடிக்க பழகலயா… நீயி… கல்யாணம் பண்ணி பெரிய மனுசனா ஆயிட்ட…… இரு என்று ஒரு வட்டாவை எடுத்து ஆற்றி ப்பூ… ப்பூவென ஊதிக்கொடுத்துவிட்டு, பன்னை டீயில் ஊறவைத்து சின்னதுக்கு ஊட்டிவிட்டது. இவருக்கு பன்னுதான் பிடிக்கும். நீயி குடி… த.

குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்த அக்காவை உற்றுப்பார்த்தேன். அக்கா நிஜமாகவே உயரம்தான்.

நா வரேன்னு சொல்லிவிட்டு நகர்ந்தேன், அக்காவின் பெயரைத்தான் எனக்குப் பிறக்கும் பெண் பிள்ளைக்கு வைக்கவேண்டும் என்று ஏனோ தோணிற்று.

***

3 Replies to “அமுதா அக்கா”

  1. பாஸ்கர் ஆறுமுகத்தின் “அமுதா அக்கா” சிறுகதை படித்தேன். இக்கதைக்குப் புழுதி என்றே பெயர் வைத்திருக்கலாம்.ஏனென்றால் கதையின் இறுதிப் பகுதியில் புழுதி ஒரு குறியீடாக மிளிர்கிறது. கடையில் மிட்டாய் திருடிப் பட்டப்பெயர் பெறுவது, ஐய்யப்புவுடன் சேர்ந்து திருடுவது எல்லாவற்றையும் நேர்த்தியாய் எழுதியிருக்கிறார். அத்தொழிலில் சட்டங்கள் வேறு,. அக்கா தரும் தின்பண்டங்கள் சுவையானவை. செல்லம் என்னும் பெயர் அக்காவிற்கு இவன் மீது தனி அன்பு இருந்ததைக் காட்டுகிறது. இடையில் வரும் ராஜா அண்ணன் வருணனைகள் பிரமாதம். அவன் பெண்களைச் சுற்றுவது எல்லாம் நன்கு எழுதப்ப்ட்டுள்ளன. சுரிதார் அணிவதால் பெரிய மனுஷியான பெண் படும் அவத்தை சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அது கதைசொல்லிக்கு எப்படித் தெரிந்த்து என்று தெரியவில்லை. 12 வருஷங்களை ஒரே வீச்சில் நகர்த்தி விடுவது ஆயாசம் தருகிறது. நாவலாக எழுதியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. வண்ணம் உதிர்ந்த மொட்டைமாடிச் சுவர் நல்ல உவமை. அமுதா எல்லாம் சொல்லி முடித்தபின் தெருவெ புழுதி என்று கூறும்போது அவனுக்கு அமுதா சொல்வது எதுவுமே பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. அவன் அமுதாவிடம் தெருவே புழுதியாகக் கெட்டுவிட்டதாகக் கூறுகிறான். அதனால்தான் அமுதா கடையிலுமா புழுதி எனக் கேட்கிறாள். அங்கு வரலாமே என்கிறாள். அமுதாவின் கணவன் கதை தனிச்சிறுகதை. ராஜா வைத்தான் அமுதா திருமணம் செய்து கொண்டு விட்டாளா என்றும் கதைசொல்லிக்கும் அமுதாமீது அக்கா என்பதை விட அதிகமாக ஓர் ஈர்ப்பு இருந்தது என்றும் தெரிகிறது. தன் குழந்தைக்கு அமுதாவின் பெயரை வைக்க அவன் தீர்மானிப்பது ஊகத்தை வரவழைக்கிறது

  2. திரைமொழி போன்று காட்சிக்குள்காட்சியாய் விரியும் கதை சொல்லும் பாங்கு சிறப்பாய் உள்ளது.
    படைப்பாளியின் மொழியாக நம்மைப் பயணிக்க வைக்கும் பாங்கு அழகு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.