மூன்று நாய்கள்

சன்னக் கம்பி போல் மழை தூறிக் கொண்டிருந்தது. ரோட்டில் கேபிளுக்குத் தோண்டிய பள்ளங்கள் நிரவப்பட்டு மேடாகி மற்ற இடத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. தேங்கியிருந்த நீரை ஒட்டி மூன்று நாய்களும் கால்கள் நான்கையும் பரப்பி, அடிவயிறு குளிர படுத்திருந்தன. இரவில் தெருவைக் காவல் காக்கும் நாய்களைக் கடந்துவர, ஒருபாடு கலைகளைக் கற்றுத் தேறவேண்டும். 

அந்தச் சாலையை கடக்க, மூன்று தடைகளைத் தாண்டவேண்டும். முதலில் தெருவின் ஆரம்பத்தில் ஐந்து நாய்கள் இருக்கும். தாடையில் வெள்ளை மட்டும் படிந்த கருப்பன் அவற்றின் தலைவன். அது வலதுபுற சாலையிலே நிற்கும். மீத இரண்டும் இரண்டிரண்டாக இரண்டு பக்கமும். கடைசியில் இருப்பதுதான் இந்த மூன்று நாய்கள். போலீஸ் ஸ்டேஷனை ஓட்டி வாழ்பவை. 

சாலையில் தெரியாத யாரையும் விடுவதில்லை, குரைத்தெடுத்து விடும். அதற்குச் சன்மானமாக அனைவர் வீட்டிலும் உரிமையுடன் உணவைக் கேட்டு உன்னும். இரண்டு குழுக்களும் தனித்துப் பிரிந்துதான் தெருவைக் காவல் காக்கும். இரவில், கரிய பசித்த யட்சிகள் தன் காவலர்களுடன் நடு சாலையில் உலா வரும் நேரம். கருப்பனும் முனியப்பனும் சிலையாய் மாறி நேர்கொண்டு அத்துவான இருட்டில் ஒன்றுமே இல்லையே என்ற பாவனையில் நிற்கும் போதும், நாய்கள்தான் குரைத்துத் துரத்தி எதிர்ப்பைத் தெரிவிக்கும். ஆனால் யட்சியின் கோபம் ஊழிக்காலம் போல். உண்டானால் தன் குலம் தாங்காது என்ற சிறு அறிவைச் சொல்ல அதற்கு யாருமில்லை. இதனால் ஐந்து நாய்களையும் தன் கோவில் பிரகார வாகனமாக்கி அமைதிப்படுத்தினான் பைரவன். யட்சியின் காவல் சேவகனான அக்கினி இரவில் வெளியே வர முடியாதலால் இருளப்பன் வருவான். பின்புதான் நாய்களுக்கு விஷயம் புரிந்தது. அதனால் யட்சியை நோக்கித் தவமிருந்தது, மூன்று நாய்களும். நாளானது, வாரமானது, மாதமானது. தினமும் அசையாது நேர் கொண்ட யட்சிக்குச் சங்கடமாக இருந்தது. உயர்ந்த மலையில் இருந்து விழுவது ஆபத்தானது என்பதால் அவற்றைச் செய்யாத பக்குவம் அவளுக்கிருந்தது. ஆனால் நாய்களுக்கில்லை. நாய்கள், காலை எழ மதியம் உலவ, இரவில் யாரையும் காணாமல் உறங்கப் படைக்கப்பட்டதென அவற்றிற்குப் புரியவைக்க முடியாமல் திண்டாடினாள் மீனாட்சி. சிவந்த உடல் மேலும் சிவந்தது. கரிய மூடாத விழிகளின் தீர்க்கமும் வெளிச்சமும் கண்ணைப் பறிப்பதாய் மாறியது. அவள் தெருவில் அலைபவள். தெருக்களுக்கும் வீதிக்கும் பொட்டுகட்டியவள். கண்ணை அமட்டும் சோர்விலும் கடமையாற்றுபவள். ஊர்மேல் செல்பவள். அவள் நாக்கும் விரல் நகங்களும் என்றும் சிவந்திருப்பவை. அள்ளி முடியாத கூந்தலில் இருந்து வடிந்துகொண்டே இருக்கும் குருதி சொட்டி ரோஜாப் பூவாக அரளியாக செங்காந்தலாக காலைச் சூரியாக மலர்ந்து கிடக்கும். பாா்ப்பவன், அது இறந்தவனின் கடைசி மணம் என்று முகராமல் செல்வான். ஆனால் அந்த மூன்று நாய்களுக்கும் தெரியும். அவை யட்சியின் ஒரு நொடி வியர்வை என.

 ‘ வேண்டின படி கேள்’

‘ நான் உன்னை கண்டுகொண்டே இருக்க வேண்டும். மும்முலையும் எனக்கு மட்டுமே அமுதூட்ட வேனும்’

‘ அண்டம் தாங்காதது, இது உனக்கு அதிகம், நீ பேராசைக்காரன், உன்னுடனே உள்ள மற்ற இருவரையும்கூட கணக்கில் கொள்ளாமல் உன்னைப் பற்றியே சிந்திக்கிறாய். உன் தவமும் பாவனையும் வீண்’ 

‘ நான் என்னடி செய்ய, எனக்கு எது தேவையோ அதைத்தான் நான் கேட்பேன், நீ சொல்லி என் பாவனை போவதில்லை. அவை நான் சொல்வது.’

‘ இந்த தெரு என் காவலில் வர வேண்டும்.’

‘ எப்படியோ தொலைந்து போ’ எனக் கையில் ஆசீர்வதிக்க முட்டிக் கொண்டிருந்த வரத்தைத் தூக்கி எறிந்து நகர்ந்தாள்.

இப்படியாகத்தான் அந்தத் தெருவை நாய்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அவற்றின் ஆளுகைக்கு கீழ் தெருவின் ஒழுங்கு கொண்டுவரப்பட்டது. சீரில்லாமல் இருந்த நிர்வாகத்தைச் சரிசெய்ய முற்பட்டு, பல்வேறு முன்னேற்ற சரத்துகளைத் தயாரித்து வைத்திருந்ததை இப்பொழுது வசதியாக மறந்தன. நேரக் கட்டுப்பாடு விதித்தன, இரவு நாய்களுக்கும், காலை மனிதனுக்கும் என பிரிக்கப்பட்டது. மாறபட்ட நேரத்தில் எதிர்ப்படும் வினோதர்கள் தாக்கிக்கொண்டு காயம்பட்டால் அதற்கு அவரவர்களே பொறுப்பு என்று சொல்லியது. அந்தத் தெரு, அரசியல் மேடைக்குப் பிரசித்திபெற்றது. உலகில் இருந்த எல்லா அமைப்புகளின், சிந்தனையின் குறுக்கு மற்றும் நீண்ட கிளைகள் அதற்குள் இருந்தது நாய்களுக்கு பிடிக்கவில்லை. எல்லாமே நாய்களை நாய்களாகவே பார்த்தன. இவ்வளவு அதிகாரங்கள் தனக்கு அளிக்கப்பட்டது துரதிருஷ்டவசமாக நாய்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தன. அதனால் நாய்கள் இரவில் ஓயாமல் குலைத்து மனிதர்கள் உறங்கியபின் உண்டான கனவுலகத்தில் சென்று தம் ஆளுமையைப் பதித்து ஒவ்வொருவரின் ஆழ்மனதுக்குள் சென்றன. விழித்தபோது தெருவாசிகளுக்கு உலகத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டதும், தான் ஏதோ ஒரு வகையில் குறைந்து போனதும் உறுத்தியது. ஆனால், நாய்களை அவர்கள் சரியாகக் கண்டுகொண்டார்கள். நாய்களின் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டு வழிபடத் தொடங்கினார்கள். இரவில் உறக்கம் பிடிக்காமல் கண்ணைத் திறந்து இந்த உலகத்துடன் தொடர்புகொண்ட செயல்பாட்டாளர்களுக்கு இந்த செயல்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தின. ஓர் இரவில் உலகத்துக்குப் பைத்தியம் பிடித்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது, அவர்களுக்கு. கூடவே ஒரு சந்தேகமும். பைத்தியம் பிடித்திருப்பது அவர்களுக்கா, இல்லை தங்களுக்கா எனத் தெரியவில்லை. இந்த குழப்பங்களைப் பயன்படுத்தி, தன்னை பருண்மையாகவும் நிலைப்படுத்திக் கொண்டன நாய்கள்.  தெருவில் தெரியாதவரை மட்டுமல்ல, தெரிந்தவரையும் விடமறுத்தன. ஒருமுறை தெருவை நீங்கியவன் தெருவின் நினைவில் இருந்து மறந்தவனானதால் தெரு அவனுக்கும், அவன் தெருவிற்கும் அந்நியமாகிப் போனார்கள். விட்டு நீங்கியவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாமல், தொலைந்த தன் நினைவின் தடத்தில் நடந்து நடந்து இரவில் பகலையும் பகலில் இரவையும் தேடி அந்த தெருவிற்கே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இது எதுவும் நாய்களால் புரிந்துகொள்ளப்பட முடியாமல் இருந்தது. ‘ சுத்த மடத்தனம்’ என்றன நாய்கள். மனிதனைப் போன்ற முட்டாளை மேய்ப்பதற்கு நம்மைவிட சிறந்த மேய்ப்பன் கிடையாது என்ற செருக்கில் தன் கடமையை ஆற்றியது. மீறிப் பயணிக்கும் வேற்றுத் தெரு அந்நியர்கள் கடிபட்டார்கள். கடி உயிரைப் பறித்துகொண்டு செல்வது போன்று இருக்க, கடிபட்ட இடம் என்பது கொத்தாக சதையைப் பிய்த்தது போன்று தோன்ற, விளக்கு வெளிச்சத்தில் பாா்த்தபோது காயம் ஏதும் இல்லை. அது மட்டுமில்லாமல் தாங்கள் எதற்காகக் கடிபட்டோம் என்பதையும் எது கடித்தது என்பதையும் மறந்தார்கள். ஆனால் வலி மட்டும் இருந்தது. வலி முற்றி வீட்டில் இருப்பவர்களிடம் குரைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கொழுத்து தெருவின் உரிமையைப் பெருமளவு தம் அதிகாரத்தில் வைத்துக்கொண்டன காவல் நாய்கள். 

அவைதான் அந்த இனத்தின் முதன் தொடக்கம். முதலில் தெருவாசிகள் இதையெல்லாம் எப்போதும் தம் தர்க்க மூளையால் குறுக்கப் பார்த்து பின்பு விசாலித்து, அந்த விசாலத்தின் பிரம்மாண்டம் தாங்காமல் திரும்பியபோதுதான் உணர்ந்தார்கள் நாய்கள் தம்மை ஆளுவதை. மனிதர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் நாய்களின் ஆட்சியை மனிதர்கள் எப்படிப் பொறுத்துகொள்வார்கள்? என்னதான் இருந்தாலும் அவர்களுக்கும் சூடும் சுரணையும் உண்டுதான். 

மனிதனுக்கும் மனித சமுதாயத்திற்கும் பெரும் இழுக்கென்று பிரசாரத்தைத் தொடங்கின எதிர்க்கட்சிகள். அவை ஆளுங்கட்சியின் அடியாட்கள் என்றும், மறைமுக அதிகாரத்திற்காக நாய்போல் வேடம் அணிந்து அவற்றைத் தங்கள் தெருவில் உலவவிட்டு இப்பொழுது நினைத்ததை முடித்துக் கொண்டன என்றார் ஆட்டோக்கார ராஜேந்திரன். நாய்களுக்கும் மனிதர்களுக்குமான வேறுபாடு பற்றிய தீராத சந்தேகம் அவரிடம் இருந்தது இதில் வெளிப்பட்டது எனத் தெருவில் பேசிக்கொண்டார்கள். மேலும், அவை வாங்கியதாகச் சொல்லப்படும் வரம் என்பது பிலாத்து, தெய்வங்கள் எங்கேனும் வரம் தருமா என்றார். இவை நம் தெருவின் சுயசார்புத் தன்மையைக் கெடுத்துவிட்டன. அறிவை மழுக்கி மழுமட்டையாய் மாற்றிப் பாதையில் பின்பக்கம் பயணிப்பவை  என்று அறைகூவல் விடுத்ததைச் செவலை நாய் இண்டிகா வண்டியின் கீழ் இருந்து கேட்டுக்கொண்டிருந்தது. அகில இந்திய அகிலத்தின் முக்கிய செயல்திட்ட அம்சமாக அறிவிக்க ஸித்தித்துள்ளதாக வெள்ளைக் கொடிக் கட்சி சொன்னது. வெள்ளையினைத் தொடர்ந்து சிகப்பும் நீலமும் கருப்பும் தங்கள் முன்னேற்றத் திட்டத்தின் அலகாக குறித்துக்கொண்டன. அந்த நாய்களின் அதிகாரத்தில் இருந்து தெருவை மீட்டெடுப்பது. போலியான பொம்மை அரசைக் கவிழ்த்தபின் புதிய சர்வ சமத்துவ உலகிற்கான விடிவெள்ளி இராஜ்ஜியத்தை உருவாக்கும் அரசை உருவாக்க முனைவது. பின் நாய்களை அழித்தொழிப்பது. 

இந்த திட்டத்தின்படி ஒரு பாதுகாப்பு இயக்கம் கூட்டிக் குழுவாக அமைக்கப்பெற்றது. முதல் திட்டமாக, இரவில் ரோந்தை அதிகப்படுத்தத் தொடங்கினார்கள். காவலர்கள் முப்பது முப்பதடி தூர வளைவில் மறைந்திருந்து பிடிக்க நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் காவலர்களுக்கு நாய்களைப் பற்றிய விளக்கம் சொல்லப்படவில்லை. நான்கு காலில் நடப்பது என்றும், இரவில் கருமையைத் தன் தீரம் உள்ளமட்டும் குரைத்தே கரைக்க நினைப்பது என்றும் சொல்லியதால் தவறுதலாக பெரும்பான்மையான நேரத்தில் குரைக்கும் மனிதரையும் தவழும் மனிதரையும் பிடித்தனர். இதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை, திட்டத்தின் செயல்நிலை விளக்கத்தில் திட்டத் தலைவர் நான்கு கால்களில் நடந்து பதுங்கிப் பம்மி, போடப்பட்டிருந்த மேசையின் அடியில் லாவகமாக பிருஷ்டத்தை நுழைத்து அதிகாரியின் பூட்சை வாஞ்சையுடன் நக்கி, குரைத்து திடீரென்று தாவி அனைரையும் கலவரப்படுத்திய திருப்தியில் மூலையில் கால்களை ரயில் நிலையக் கம்பிபோல் மூத்திரம் பெய்த சந்தோஷத்தில் சொன்னார், ‘ நாய்கள் இப்படியும் இருக்கலாம்.’ இதனால் அதிகாரிகள் மேலும் குழம்பினர்.  

 பின் அடுத்த செயல்திட்டமாக, அவற்றின் வாழிடங்களை அழிப்பது. நாய்களின் வாழிடங்கள் எது எனத் தெருவாசிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவைகள் பெரும்பாலும் உலாவுகின்றன, நடக்கின்றன, கண்ணை வெறுமனே மூடியபடி அமர்ந்திருக்கும் நேரம்தவிர குரைக்கின்றன. அவைகளுடன் இவ்வளவு காலம் இருந்தும் அவற்றின் சங்கேத பாஷைகளும் அவர்களுக்குத்  தெரிந்திருக்கவில்லை என்ற கழிவிரக்கம் அமைப்பு சாராத ஒவ்வொரு சாதாரணரையும் இறுகப் பற்றியது. நாய்கள் எல்லாவிடத்திலும் அலையும் என்றாலும் அவற்றிலும் மிக முக்கியஸ்தலம் என்பது முச்சந்தியில் இருந்த ஆலமரம். நாய்கள் அடையாமல் இருக்க ஆலமரம் வெட்டப்பட்டது. மரங்களும் பசுமையும் அழகான பெண்டிர்போல அரிதாகிப்போன தங்கள் தெருவில் கொட்டும் வெயிலுக்குப் பாா்த்துப் பாா்த்து பூரிக்க இவையும் இல்லையென்றால் கண்கள் அவிந்துவிடும் என்று தெருவில் வீடில்லாமல் வசிக்கும் அநேகருக்குத் தோன்றியது. ஆனால், இது செயல்பாட்டுக் காலம், யாருடைய அர்த்தமில்லாத பயத்தையும் பதில் இல்லாத கேள்வியையும் ஏற்காத அமைப்பினால், தங்கள் அல்லாட்டத்தை உரத்த கோஷங்களுக்குள் நழுவி செல்லும் மீனைப்போல் விட்டனர். அது சென்று சமுத்திரம் சேர்ந்தது.

 பின்பு அதே போன்ற சாயல் கொண்ட அனைத்து மரங்களும் வெட்டப்படும் பொழுதுதான் மேலிடம் நாய்கள் மரத்தில் அடைவதில்லை என்றது. மரங்களினால் சேரும் குப்பையைக் கூட்டி மாள முடியாததினால் இந்த முடிவு என ராஜதந்திரமாக அறிவித்ததன் நுட்பத்ததை மக்கள் வெகுவாக ரசித்தார்கள். இதன் பொருட்டு மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால் இது ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான செயல்பாடு, அரசுக்கு எதிராகச் சிந்திக்கக் கனவில் மட்டுமே உரிமை உண்டு என்பது அந்த பிரதேசத்தில் பொதுவாகக் கடைபிடிக்கப்பட்ட நம்பிக்கை. பொதுவெளியில் தேச அபிமானியாக மட்டுமே அனுமதி என வெட்டப்பட்ட மரங்களை அபராதமாக எடுத்துக் கொண்டது. 

யாருக்கும் எதுவும் புரியவில்லை. சிலருக்கு ஆசுவாசம் ஏற்பட, ஒரு வழியாக நாய் தொலைந்தது என்றபடி தங்கள் வேலையைப் பாா்க்கத் தொடங்கினார்கள். வேலை இல்லாத சிலர், இல்லாத நாயைத் தேடத் தொடங்கினார்கள். இரவும் பகலும் தூக்கம் மறந்து சிறப்பு காவல் உதவியுடன் உலவியதற்கு நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து ஓர் ஆச்சர்யமான உண்மை கிடைத்தது. உண்மை என்பதனால் அதை எப்பொழுதும்போல் நம்பவில்லை. 

அது என்னவென்றால், சரியாக முச்சந்தி ஆலமரம் வெட்டப்பட்ட நாளில் நாய்களுக்கும் ரப்பனாவுக்கும் சந்திப்பு நடந்துள்ளது. ரப்பனாவின் கதை அங்கிருந்த அனைவரும் அறிந்ததுதான். இன்னும் சொன்னால் காணக்கூடியதுதான். குதிரையின் மூதாதையேரே இல்லாத அந்தப் பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக ஒரே ஒரு குதிரை மட்டும் தொடர்ந்து அங்கு உலவியது. என்றும் அதற்கு இன்றுதான். எல்லா நாளும் கண்டதுபோலவே காட்சியளிக்கும். அதனைப் பாா்த்ததுபோலவே பா்க்காததும் நிஜம்தான் என்ற ஐயம் அந்தச் சாதரணர்களிடம் இருந்தது. ஆனால் கோட்பாட்டாளர்களுக்கும் இயக்கத்தவர்க்கும் இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் மனதில் கண்டதையும் கண்ணில் காணாததையும் உண்மையெனக் கொண்டார்கள். இன்னும் சொன்னால் அந்தத் தெருவின் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றுதான். வாழ்க என்று சொல்லும்போதே, மனதினுள் ஒழிக என்பார்கள். மேற்கிலிருந்து வந்த தாடிக்காரர்களின் வரவுதான் ரப்பனாவின் முன்னோர். ஒரு காலத்தில் நடந்த நம்பமுடியாத கலகத்தில் அனைத்துக் குதிரைகளும் கொல்லப்பட்டன. அது அப்படித்தான் நினைக்கப்பட்டது. ஆனால் ரப்பனாவைக் கண்டபின்தான் அது கனவு போன்ற நினைவு என்றும் நிஜமான புனைவு என்றும் பயம் உதித்தது.  சிலர் இரவில் கருமையைப் போா்த்தியபடி செல்லும் ஆதிகிழவனின் கால் எலும்பாக அது தெரிந்தது என்றும் சிலர் ஆற்றின் மடியில் ஊரும் சுனைநீர் போலப் பிரவாகமாக என்றும் சொன்ன பின்புதான் அதுவும் வரம் பெற்றது எனத் தெரிந்தது. தலைமுறைக்கும் தொடரும் வரம். அனைவருக்கும் உச்சிக் குடுமியை யாரோ பிடித்து இழுப்பதுபோன்ற உணர்வு தோன்றியது. ஒரே நேரத்தில் சகலருக்கும் தோன்றிய அந்த உணர்வைக் கிடைநீட்டமாக விரித்தால் அது ஒரு கடக்க முடியாத நெடுங் கோடையின் கொடுங்காலமாக இருந்தது. 

தன் காலத்திலே அனைத்திற்கும் முடிவு தேடிய வைரவமணிக்கும் ரத்தினத்திற்க்கும் இது கொஞ்சமும் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. 

ஆனால் ரப்பனாவிற்கும் நாய்களுக்குமான சந்திப்பு நிஜம்தான். நாய்கள் ஆலமர மறைவிலிருந்து கடைசி ஓடுகாலுக்குள் பதுங்கிக் கொண்டன. கடைசி ஓடுகால் துரைமாணிக்கத்துடையது. அக்கரையில் உள்ள பேச்சிக்கும் ரப்பனாவிற்கும் தொடர்பு உண்டு. பேச்சி தினமும் ரப்பனாவிற்குத் தன் வாசலைத் திறந்து வைத்தாள். ரப்பனா தினமும் மரித்தது, தினமும் பிறந்தது. 

மூன்று நாய்களும் ரப்பனாவிடம் உதவியை நாடின. ரப்பனா என்பது ஒரு மாயம். அதுவரைக்கும்தான் அதனுடைய பெருமதி. அதிகாரத்தின் புறவய ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட்ட நவீன காலத்தில் அதனுடைய இருப்பு கோவில் சிலைகள்போல. அந்த தெருவாசிகள் வெளியில் அம்மனின் பத்தினித்தனத்தை நையாண்டி செய்வார்கள். உள்ளுக்குள் அவள் கன்னி என நம்பினார்கள். இன்னும் சிலர் வெளியில் அவள் பத்தினி என்றார்கள். உள்ளுரப் பத்தினியுடன் சல்லாபிக்கும் சுகத்தை அடைந்தார்கள். அதனால், ரப்பனா பேச்சியிடம் கூட்டிச்சென்றது. துரைமாணிக்கத்திற்குப் பேச்சியின்மேல் ஒரு கண் உண்டென்பது ரப்பனாவிற்கும் தெரியும். ஆனால்,  இதுவெல்லாம் பேச்சி சிலையாவதற்கு முன்தான். அதையே கொக்கியாகப் போட்டு பேச்சியிடம் சொன்னது. பேச்சி துரைமாணிக்கத்தை இரவு நெருங்கிக் கொண்டிருந்த சாயங்காலத்திற்குச் சற்றுப் பின்னான, அது இரவா சாயங்காலமா எனத் தெரியாமல் அனைவரும் யாரோ ஒரு கோட்பாட்டாளரையும் அறிவுஜீவியையும் கேட்க, இரவென்பது இருள் என்று கொண்டாலும் பௌர்ணமியில் இருட்டில்லாமல் போகிறதென்பதற்காக அது இரவில்லை என்று சொல்ல முடியாததனால், சாயங்காலம் என்பது எட்டு மணிக்கு முன், இரவென்பது அதற்குப் பின் என கோட்பாட்டாளர்கள் வகுத்த பின் இரவும் சாயங்காலங்களும் போட்டியில்லாமல் குழப்பமில்லாமல் வந்து போனபோது அந்தத் தெருவாசிகள் ஆசுவாசம் அடைந்தார்கள். அந்த நேரத்தில் அவளை துரைமாணிக்கம் சந்தித்தது அவனுக்குக் காமமில்லாத கிளர்ச்சியைக் கொடுத்தது. இருந்தாலும் அவன் ரசனைக்காரன்தான், இல்லாமல் அந்த பகுதியின் கட்சியின் செல்வாக்கு அவனுக்குக் கிடைத்ததற்குக் காரணம் ஒவ்வொருவரின் ரசனையையும் தேவையையும் தெரிந்தவன். அவன் மூலமாக நாய்களை ஆதீனத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அவன் முற்போக்கும் பகுத்தறிவும் கொண்ட இயக்கத்தின் தடித்த உறுப்புதான் என்றாலும் உறுப்பே இல்லாமல் இம்சிக்கும் ஏதோவொன்றின் பயம் அவனை ஆட்டியபோது ஆதீனம் பழக்கமானார். அனைத்தும் அனுமதிக்கப்பட்டது என்ற அவருடைய கொள்கை அவனை புல்லுருவிகளின் அபத்த நச்சரிப்பில் இருந்து விடுவித்தது. ஆதீனத்திடமும் காதல் செய்தாள் பேச்சி. இது சிறுமதத்திற்கும் பெருமதத்திற்குமான இணைப்பு என்றும் அடிமட்ட மக்களின் மேல்நிலையாக்கம் என்றும் இதற்கு விளக்கம் சொல்லிக் கொள்ளலாம் என்று பேச்சியின் சம்மதத்திற்கு முன்பே ஆதீனம் முடிவு செய்துகொண்டார். 

நாய்கள் ஆதீனத்தைச் சந்தித்துத் தங்கள் சிக்கல்களைச் சொல்லின. பேச்சியின் கிறக்கத்திலிருந்தவர், பேச்சியின் கட்டளைப்படி நாய்களைத் தம் சீடர்களாகவும், முதலாம் கருப்பு நாயை அடுத்த தலைமை ஆதீனமாகவும் நியமிக்க ஒத்துக்கொண்டார். மற்றவைகள் இரண்டும் அந்தத் தெருவின் காவல் உயர் பதவியில் திணிக்கப்பட்டன. 

அதற்குபின் நாய்களின் கீழ் வேலை செய்வதோ, நாயின் ஆளுகைக்குட்பட்ட ராஜ்ஜியத்தில் தன் அற்ப உயிரை சுமந்துகொண்டு அலைவதையோ பெரும் பேறாக எண்ண அந்தத் தெருவாசிகளின் மூளைக்குள் ஏற்கெனவே திணிக்கப்பட்ட வஸ்து வேலை செய்தது. புதியதாகத் தெருவின் வரலாறு நாய்களில் இருந்து உருவாக்கப்பட்டது. 

தெரு என்பது நீண்ட பெரிய சாலை. சென்று சேர்வது ஆற்றில் சேரும் ஓடையில். தண்ணீர் இல்லாமல் இருந்தால் ஓடை என்றே நம்பமாட்டார்கள் என்பதனால் சாக்கடையைத் தேக்கி வைத்திருந்து அந்த பிரதேசத்திற்குக் கொசுவின் தேவையைப் பூர்த்தி செய்தது. ஒவ்வொரு நூறு அடிக்கும் தெரு மாறிக்கொண்டே வந்தது. பெரும்பாலும் வந்தேறிகளால் நிரம்பியது. ஆற்றின் அக்கரையில் இருந்த நகரும் கோவிலும் அந்நியரின் அக்கிரமிப்புக் காலத்தில் நகர்ந்து இக்கரை வந்து சேர்ந்தது. தூரம்தான் என்றாலும் மீனாட்சி வந்து வந்து பாா்த்துக்கொண்டாள். தெருவின் வரலாற்றை ஆராயும் பொருளாதார ஆய்வாளன், தெருவின் பெரும் சொத்துக்கள் கோனார்களிடமும் நாயக்கர்களிடமும் இருப்பதனால் இது ஒரு காலத்தில் முல்லை நிலமாக இருந்தது என்றும் தொடர்ந்த குடியேற்றத்தின் சாட்சியையும் விவரித்து ஆயிரம் பக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளான். அந்த அறிக்கையைச் சரிபார்த்துக் கையொப்பம் இட்டது இரண்டாவது செவலை நாய். 

அதிகாரத்தின் போதையில் அமிழ்ந்த இரண்டு நாய்களும் மூன்றாவது நாயைக் கண்டுகொள்ளவில்லை. மூன்றாவதாகச் செய்யும் புரட்சி பலனில்லாதது என்பதனால், தன் பூர்வ ஜென்ம ஞாபகத்தைத் தொகுத்து மீண்டும் நாய் பாவனைக்குத் திரும்பி, சிறு சந்தை எடுத்துக்கொண்டது வெள்ளை நாய். 

அந்தத் தெரு மூன்று நாய்களின் வெவ்வேறு அதிகாரப் பகிர்வினால் அதற்குப்பின் சுபிட்சமாக ஆளப்பட்டது.

***

One Reply to “மூன்று நாய்கள்”

  1. சிறந்த பகடியும், வலியும் நிறைந்த கதை. ஊசிகளால் உடல் முழுதும் குத்தியிருக்கிறார். அகில இந்திய அகிலக் குழு… நினைத்து நினைத்துச் சிரிக்கலாம். நாய், ஓனாய், குள்ள நரி, முள்ளம் பன்றி போன்ற உயிரினங்களையே கதை மாந்தர்களாக்கியிருக்கலாம். ரப்ப்னா, பேச்சி, மீனாகஷி, ஆதீனம்….. அதிகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.