மனித இனம்:ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு

ரட்கர் ப்ரெக்மானின் புத்தகம்

நூல் மதிப்புரை: ஆண்ட்ரூ ஆந்தெனி  

தமிழாக்கம்: கோரா 

மனித இனத்தின் மூலாதார உள்ளுணர்வுகள்  குறித்த விவாதங்களில் இந்த டச்சு வரலாற்றியலாளரின் நோக்கு, முற்சார்பு (prejudice) மறைவிடங்களைக் (blind spots) கொண்டிருக்கும் போதிலும், இவரது திட நம்பிக்கை உற்சாகமூட்டுகிறது.

அரசியல் தத்துவத்தின் வெகுவாக வாதாடப்பட்டுவரும் கருத்துருவாக இருந்துவருகிற போதிலும், பெரும்பாலான  மக்கள் மனித இயல்பு மற்றும் நடத்தை பற்றி ஒருமித்த கருத்தையே  கொண்டிருக்கிறார்கள். ரட்கர்  பிரெக்மேன், மனித இனம் என்ற தன்  புதிய நூலில் ஒட்டு மொத்தமாகச் சொல்லியிருப்பது: நாம் அனைவரும் சிறிது  அவநம்பிக்கை கொண்டுள்ளோம் – மிக நுட்பமாக,  நம்மைப் பற்றியல்ல, நாமல்லாத   பிற ஒவ்வொருவரையும் பற்றி – என்பதே.

நாம்  பிறரை சுயநலமிகள், நம்பகமானவர்கள் அல்லர் மற்றும் ஆபத்தானவர்கள் எனப் பார்ப்பதாலேயே, அவர்களுடன்  தற்காப்புணர்வோடும் அவநம்பிக்கையுணர்வோடும் பழகி வருகிறோம். 17-ஆம் நூற்றாண்டு தாமஸ் ஹாப்ஸ்  என்னும் தத்துவ ஞானி, நம்  இயல்பு எப்போதுமே  இப்படித்தான் இருந்தது எனக் கருதினார்; இதுவரை  வலிமையான அரசும், உறுதியான தலைமையுமே நம்மை வன்முறை அராஜகத்திலிருந்து விலக்கி வைத்திருந்தது என நம்பினார். 

 ஹாப்ஸ்  வழியில், மனித  இயல்பு பற்றி  நாம்  கொண்டுள்ள எதிர்மறைக் கண்ணோட்டம் நமக்கே பிரதிபலிக்குமாறு உறுதி செய்து கொள்கிறோம் என பிரெக்மேன் விவாதிக்கிறார். மாறாக அவர் (பிரெக்மேன்)  18-ஆம் நூற்றாண்டு சிந்தனையாளரான  ழான் ழாக் ரூசோ வின் கருத்துகளின்மீது நம்பிக்கை கொண்டுள்ளார். ரூசோ அறிவித்த புகழ்பெற்ற வாக்கியம்:மனிதன் தளைகளற்றுப் பிறந்தவன்;  கீழ்ப்படியவைக்கும் அதிகாரமும்  மற்றும் அடக்குமுறை சட்டங்களும் கொண்ட  பண்பாட்டின் தாக்கமே அவனுக்கு விலங்கிடுகிறது.

ஹாப்சும் ரூசோவும் மனித நடத்தை வாதத்தின்  இரு துருவங்களாக இவருக்குத்  தெரிகிறார்கள். அதனால் பிரெக்மேன்  பிரெஞ்சுக்காரர் தரப்பில் சேர்வதில் வியப்பெய்த ஏதுமில்லை. அவர் ரூசோவின் உள்ளுணர்வை வைத்து, அறிவுசால் மாந்தர் (homo sapiens) கிட்டத்தட்ட கடந்த மூன்று லட்சம் ஆண்டுகள் முழுவதிலும்   பணிவு மற்றும் ஒற்றுமை என்னும் அரிய கொள்கைகளால் மட்டுமே கட்டுண்ட சமூகமாக இயற்கையுடன் இணைந்து நிறை வாழ்வு வாழ்ந்தனர் என்ற கண்ணைக்கவரும் கற்பனாவாத ஓவியத்தைத் தீட்டுகிறார்.

அதன் பிறகு நாம் விவசாயத்தைக் கண்டுபிடித்தோம். அடுத்த 10000 ஆண்டுகளில் கண்டதெல்லாம் சொத்து, போர், பேராசை மற்றும் அநீதி மட்டும் தான். வேளாண்மைக்கு முந்திய வாழ்வைப் பற்றிய இவரது பார்வை சரியோ தவறோ– மானுடவியல் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சி முடிவுகளை வைத்து பிரெக்மேன்  அனுமானித்திருப்பவை அனைத்தும்  தெளிவாக விளக்கப் பட வேண்டியவையே என்றாலும்-  சமூகம் தவறான முதற்கோளால்(premise) கட்டமைக்கப் பட்டுள்ளது  என்பதற்கான வசீகரமான வாதத்தை டச்சுக்காரர்(ஆசிரியர்) தொகுத்து முன் வைத்துள்ளார்.

இதற்கு முந்திய நூலையும் – Utopia for Realists – இதே அளவுக்கு திட நம்பிக்கையைக்  கொடுக்கும் வகையில் எழுதியிருக்கும் பிரெக்மேன்,  கோட்பாட்டளவான அறிக்கைகளை அலசிப்பார்ப்பதிலும் இடைநிகழ்வுத் துணுக்கு  மணிகளைக் கண்டுபிடிப்பதிலும் மால்கம் க்ளாட்வெல்லைப் போல் அபாரத் திறமை பெற்றவர்.  அந்த கனடாவைச் சேர்ந்த ஜனரஞ்சக எழுத்தாளரைப் போன்றே, இவரும் பயமில்லாமல் வாசகரை சம்பந்தமில்லாத கண்டுபிடிப்புப் பயணத்தில் இட்டுச் செல்லக் கூடியவர். இங்கே நாம் ஒரு மின்னல்வேகத் தாக்குதல் நிகழ்வதைக் காண்கிறோம்:  Lord of flies – புதினம் மற்றும் அதனின்றும் வெகுவாக மாறுபட்டுள்ள ஒரு உண்மைச் சம்பவப்  பதிவு, ஒரு சைபீரியா ஓநாய்ப்  பண்ணை, ஒரு இகழ்தற்குரிய நியூயார்க் கொலை,மிக  அதிக  எண்ணிக்கையிலிருக்கும் மதிப்பிழந்த உளவியல் ஆய்வுகள், ஸ்டான்லி மில்க்ராமின் (Dr.Stanley Milgram) அதிர்ச்சி எந்திரம் மற்றும் பிலிப் ஜிம்பர்டோ-வின்  (Philip zimbardo) ஸ்டான்போர்ட் சிறைப் பரிசோதனை உட்பட – இப்படிப் பலப்பல 

எழுத்து போகிற போக்கில் வரிகள் நெடுகிலும்  Richard Dawkins, Jared Diamond மற்றும் Steven Pinker ஆகிய பிரபலங்களைச் சீண்டியவாறே செல்கிறார். கதைமாந்தர் மற்றும் தகவல்களின் அணிவகுப்பு கிட்டத்தட்ட தடுமாறச்செய்யக் கூடிய அளவில் இருக்கும் போதிலும் பிரெக்மேன்,  அடிப்படையில் மனிதர்கள் நட்புணர்வு கொண்டவர்கள், அமைதியானவர்கள், ஆரோக்கியமானவர்கள் என்கிற தன்  மையக் கருத்தை  ஒருபோதும் மறந்து விடவில்லை. 

நம்முடைய நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டது, அதற்குப் பின்னர் விலங்குகளை அடக்கிப்  பயிற்றுவித்து வீடு மற்றும் பண்ணை வேலைக்கு பயன்படுத்தியது, இவையே  தட்டம்மை, வைசூரி, காசநோய், மேகநோய், மலேரியா, காலரா மற்றும் பிளேக் ஆகிய தொற்றுநோய்களைக் கொண்டுவந்தது என்கிறார் பிரெக்மேன் . இது உண்மையாக இருக்கலாம்;  ஆனால் வேளாண்மை வளர்ச்சியுடன் நோய்க்கிருமிகள் மட்டுமே  பெருகவில்லை, மனிதர்கள்கள் எண்ணிக்கையும் பெருகியது என்பதை பிரெக்மேன்  ஒருபோதும் புரிந்துகொள்ள முயற்சிப்பதாகத் தெரியவில்லை.

உணவைப் பின்தொடர்ந்து  வேட்டையாடி உணவு திரட்டுவோர் 30-40 கொண்ட குழுவாக இருக்கும் வரை  நட்புறவுகளைப் பேணி  சொந்த சொத்தில்லாமல் மாதிரி வாழ்க்கை வாழ முடிவது சாத்தியமே. ஆனால் குடியிருப்புகள் பல்லாயிரமாக ஆகிவிடும் போது வாழ்க்கை பெரிய அளவில் சிக்கலாகிவிடுகிறது; மற்றும் அறிவு மிகவும் பரந்து விரிந்து விடுகிறது.

“நாகரிகம் என்றால்   அமைதி மற்றும் முன்னேற்றம் என்றும் அதே போல் காட்டுமிராண்டித்தனம் என்றால்  போர் மற்றும் சரிவு என்றும் ஒத்தபொருளுடைய சொற்கள் உருவாகி இருக்கின்றன. ஆனால் உண்மையில், மனிதரின்  தோற்றத்துக்குப் பிந்திய காலத்தின் பெரும் பகுதியின்  நிலவரம் இதற்குத்  தலைகீழானதாகவே இருந்து வந்திருக்கிறது” என்று Bregman எழுதுகிறார்.

வழக்கமான வரலாற்றுக் குறிப்புகள் நாகரிகங்களின் வீழ்ச்சிகளை , அனைத்தும்   மோசமாகும்  இருண்ட காலங்கள் என சித்தரித்து வருகையில், நவீன அறிஞர்கள் அவற்றை அடிமைகள் விடுதலையடையவும் பண்பாடு செழிக்கவும் உதவிய   தற்காலிக தண்டனை நிறுத்தங்களாகக் (reprieve)  காண்கிறார்கள் என்று அழுத்திக்  கூறுகிறார். இந்நூலில் கூறப்பட்டுள்ள பிற கருத்துக்களைப் போன்றே, உண்மை பெரும்பாலும்  இவ்விரு நிலைப்பாடுகளுக்கிடையே எங்கேயாவது இருக்கும். 

எப்படி இருப்பினும் பிரெக்மேன் நம்புகிற நாகரிக வீழ்ச்சி குறித்த அச்சம் அடிப்படையற்றது . டச்சு உயிரியலாளர் பிரான்ஸ் டி வால் -ன் வெளிப்பூச்சுக் (veneer theory) கோட்பாட்டின் படி அமைதியான மேற்பரப்புக்குச் சற்று கீழே நம் விலங்கியல்பு வெடித்துக் கிளம்பக் காத்திருக்கிறது; அதுவே வீழ்ச்சிக்குக்   காரணம் என்கிறார் கட்டுரை ஆசிரியர். இதை மறுக்கும் விதமாக நகரங்கள் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகும் போதோ  அல்லது இளைஞர் குழு கப்பல் மூழ்கியதால் தொலைதூரத் தீவில் ஒதுங்கிய போதோ உண்மையில் நம் கவனத்தை  ஈர்ப்பது இயல்பாக எழுந்து முன்வருகின்ற ஒத்துழைப்பு மற்றும்  சமூக சக்திதான் என்று பிரெக்மேன்  வாதிடுகிறார். 

மித மிஞ்சிய துணிச்சலுடன் சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூல்,  இதில் காணப்படும் மனித உயிரினமான நாம் யார் என்னும் கருத்து எப்படி நம்மைக் காயப்படுத்தும் விதமாக திரித்துக் கூறப்பட்டுள்ளது என்கிற வாதம் மற்றும் அதை  ஆதரிக்கும் பல்வேறு சான்றுகள், ஆகியவற்றிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய நம்பிக்கையூட்டும் நயத்தக்க  மனிதப் பண்பு நலன்கள் பலப்பல. ஆனாலும் மனித இனம் இருவகை மனிதர்களையும் உள்ளடக்கி இருக்கிற நிலையில் அதை இரு கூறாகப் பிரித்து அவற்றின்  போதகர்களாக  ரூசோ மற்றும் ஹோப்ஸ் சித்தரிக்கப் பட்டுள்ளது ஒரே சீராக  தவறாக வழிநடத்தும் விதமாகத் தெரிகிறது. 

நம் தன்னலமற்ற உள்ளுணர்வுக்கும் சுயநல உள்ளுணர்வுக்கும், நம் திறந்த மனப்பான்மைக்கும் பாதுகாப்பு மனப்பான்மைக்கும் சண்டை எப்போதும்இருந்துகொண்டே  இருக்கும்– இதுவே மனித நாடகத்தின் மூலப்பொருள். இருந்தாலும், சாத்தான் எல்லா சிறந்த ராகங்களை வைத்திருந்தாலும் இதுபோன்ற  மனித நல்லியல்பு குறித்துத்  தளராது நீடிக்கின்ற சுவாரஸ்யமான பாராட்டுரை எப்போதும் வரவேற்கத்தக்க மாறுதலாகவே இருக்கும்.

கட்டுரைக்  குறிப்பு :

தி  கார்டியன் அனைத்துலக பதிப்பின் மே 12, 2020 இதழில்  இன்றைய நூல் பகுதியில் வெளிவந்த  நூல் மதிப்புரைக் கட்டுரை; கட்டுரை ஆசிரியர் : ஆன்ட்ரியு அந்தோணி. இந்நூலின் அறிமுகமும் நூலாசிரியருடன் கலந்துரையாடலும் அண்மைய இந்து நாளேடுகளில் வெளிவந்திருக்கின்றன.

ஆசிரியர் குறிப்பு : 

1988-ல் பிறந்த  ரட்கெர்  பிரெக்மேன் டச்சு (நெதர்லாந்து) நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் எழுத்தாளரும் ஆவார். இவர் வரலாறு, தத்துவம் மற்றும் பொருளாதாரம் போன்ற கல்விப் புலம்களில் நூல் வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய Utopia for Realists: How we can build  the ideal  world என்ற நூல் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இவருடைய Humankind: A Hopeful History அண்மையில் வெளியாகி  கணிசமான பாராட்டுக்களையும் திறனாய்வுகளையும் பெற்று விற்பனையிலும் சாதனை புரிந்து வருகிறது. 

சொல்லடைவு:

blind spot: விழித்திரையில் விழி நரம்பு சேருமிடம்; பின்னோக்கு கண்ணாடியின் பார்வையில் விழாத சாலையின் ஒருபகுதி; பாரபட்சம் காரணமாக ஒரு உண்மையைப் புரியாதிருத்தல்   

தாமஸ் ஹாப்ஸ்  (Thomas hobbes)(1588-1679) : இங்கிலிஷ் தத்துவ ஞானி: தற்காலத்திய அரசியல் தத்துவவியலின்(modern political philosophy) தோற்றுநர் எனக் கருதப்படுகிறார்.

ழான் ழாக் ரூஸோ (Jean-Jacques Rousseau )(1712-1778): ஜெனேவ தத்துவ ஞானி. இவருடைய அரசியல்  தத்துவம் ஐரோப்பா மக்களின் தெளிவடைதலுக்குக் காரணமானதுடன் பிரென்ச் புரட்சிக்கும் வித்திட்டது. இவரது ஏற்றத்தாழ்வுச்  சொற்பொழிவுகள் (Discourse on Inequality) மற்றும் சமூக ஒப்பந்தம் (Social contract) ஆகிய புத்தகங்கள் நவீன அரசியல் மற்றும் சமுதாய சிந்தனைகளின்  மைல்கற்களாகக் கருதப்படுகின்றன.

Gladwellian gift: Malcom Gladwell என்கிற அமெரிக்க எழுத்தாளரின் எழுத்துத் திறமையைக் குறிக்கும்  சொற்றொடர். அமெரிக்கர்களால் ஒரு எழுத்துலக நிகழ்வு (global phenomenon) எனக் கருதப்படும் இவர், The Tipping Point, Blink அதிக அளவில் விற்பனையாகும் புத்தகங்களை எழுதியிருக்கிறார். 

Lord  of Flies: நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளரான வில்லியம் கோல்டிங் எழுதிய 1954 புதினம். மனித நடமாட்டமற்ற  தொலைதூர தீவில் கரை ஒதுங்கிய பிரிட்டிஷ் பையன்கள் தம்மைத்  தாமே ஆண்டு கொள்ள முயற்சி செய்து விபரீத விளைவுகளைச் சந்தித்தது பற்றிய கதை. 1963, 1990 ஆண்டுகளில் திரைப்படங்களாகவும் தயாரிக்கப் பட்டது. 

நூலாசிரியர் எழுத்தின் போக்கில் கீழ்க்கண்ட பிரபலங்களை வம்புக்கு இழுக்கிறார்:

Richard Dawkins: பிரிட்டிஷ் நடத்தையியலாளர் (ethologist), பரிணாம உயிரியலாளர் (evolutionary biologist) மற்றும் எழுத்தாளர். 

Jared Diamond: அமெரிக்க புவியலாளர், வரலாற்றாசிரியர், மானுடவியலாளர், பறவையியலாளர் மற்றும் எழுத்தாளர் 

Steven Pinker:கனடிய-அமெரிக்க அறிவாற்றல் உளவியலாளர்(cognitive -psychologist) மற்றும் உளவியலாளர் 

சுட்டி: 

https://www.theguardian.com/books/2020/may/12/humankind-a-hopeful-history-by-rutger-bregman-review

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.