
நார்மடி புடவைப் பாட்டியும், அந்த இளம்பெண்ணும் வாசலில் வந்து நின்றார்கள். பாட்டி தலையை முக்காடிட்டிருந்தாள். இடுப்பில் ஒரு சணல் பை ஒரு காது பிய்ந்து இன்னொரு காதோடு முடிச்சு போட்டு இருந்தது. பெண் பளீரென்று சூர்ய ஒளியை திருப்பித் தருகிற வெள்ளை வெளேர் வெள்ளையாக, சதுர முகமாக , கொஞ்சம் சப்பை மூக்காக, பெரிய பற்களோடு ஈயென்று சிரித்துக்கொண்டு நின்றது. கறுப்பில் சின்ன சிகப்பு பூக்கள்போட்ட புடவை, கறுப்பு சட்டையில் தோள் பக்கம் தையல் விட்டு தோள் மாம்பழ கதுப்பு!
“இவா நம்மளுக்கு என்ன உறவு பாட்டி?” என்றது அந்தப் பெண் சிரிப்பு மாறாமல்.
“சித்த சும்மா இருடி,”என்று அவளைப் பார்த்து சொல்லிவிட்டு
என்னிடம் “குழந்தே! இது ராமகிட்டு வீடுதானே?” என்றாள்.
“ஆமா பாட்டி! வாங்கோ! நீங்க….?”
பாட்டி பதில் சொல்லாமல் கருத்த முகத்தில் படிந்த வியர்வையை முக்காடால் துடைத்துக்கொண்டு “நீ ராமகிட்டு பெரிய பொண்ணா? அப்படியே எங்க சுந்தர அக்கா மாதிரியே இருக்க” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.
அம்மா சாயங்கால வேளை முகம் அலம்பல் முடிந்து சோப்பு வாசனையோடு வாசல் கொடியில் போட்டிருந்த துண்டை எடுக்க வந்தவள் துண்டும் கையுமாக “யாரு?” என்றாள்.
பாட்டி “ சௌக்யமாடி சாந்தா? எப்படி இருக்கே?” என்று சொல்லிக்கொண்டே வாசலைக் கடந்து வீட்டு முகப்பில் போடப்பட்டிருந்த அந்த பெரிய கூரை வேய்ந்த கூடத்தில் இருந்த கட்டிலில் உட்கார்ந்து “ அப்பாடா! என்ன வெயில், என்ன வெயில்!” என்றாள்.
அந்தப் பெண் கட்டில் தலை மாட்டில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பவானி ஜமக்காளம் தலைகாணியைப் பார்த்து “ இங்க யாரு படுத்துப்பா? நீயா? என்று என்னைக் கேட்ட வாக்கில், அதன் மேல் சௌகர்யமாக சாய்ந்து உட்கார்ந்துகொண்டது.
அம்மா கொஞ்சம் யோசித்தபடி “சுகந்தம் சித்தியா? வாங்கோ!. இது…..”
பாட்டி சந்தோஷமாக சிரித்தபடி “பரவாயில்லையே ! கெட்டிக்காரிதான்! கண்டுபிடிச்சுட்டயே ! இது நம்ம சாச்சு பொண்ணு , பெரியவ!” என்றாள்.
அம்மா சாச்சு என்பது ஆணா , பெண்ணா என்று யோசித்துக்கொண்டிருந்தாள் என்று தோன்றியது. அம்மாவின் புடவையை லேசாகப் பிடித்து இழுத்தேன். பாட்டி பார்த்துவிட்டாள்.
“நான் யாருன்னு பாக்கறயா குழந்தை? நான் உங்க பாட்டியோட தங்கை! எங்க அம்மாவும், உங்க பாட்டியோட அம்மாவும் சொந்த சித்தப்பா பொண்ணு , பெரிப்பா பொண்ணு! அப்பிடித்தான் ப்ரியமா இருப்பா! எனக்கும் அக்காக்கும், அதான் உங்க பாட்டிக்கும் பெரிம்மாதான் மல்லிப்பூ பூக்கற நாள்ல பூத்தச்சு விடுவா!” பாட்டி தலையைத் தடவி விட்டுக்கொண்டாள்.
சணல் பையின் காதை அவிழ்த்து, ஒரு சின்ன காகிதப் பொட்டலத்தை எடுத்து என்னிடம் நீட்டினாள்.
“இந்தா! எடுத்துக்கோ! கடலை உருண்டை பிடிச்சேன்! எடுத்துண்டு வந்தேன் !”
கொடுக்கும் பொழுது பொட்டலம் பிரிந்து நாலு உருண்டைகள் இருந்தது தெரிந்தது.
அம்மா “இதெல்லாம் எதுக்கு சித்தி?” என்றாள்.
“நன்னாயிருக்கே ! குழந்தைகள் இருக்கற வீட்டுக்கு வெறுங்கையோட வர முடியுமா?”என்றாள். பிதுங்கி உருத் தெரியாமல் இருந்த பையை நோண்டி பிரிமணை மாதிரி சுருட்டி வைத்திருந்த நார்மடி புடவை, விபூதி சம்படம், அந்த பெண்ணின் ஒரு பச்சைக்கலர் வாயல் புடவை, சாயம் போன கீழ் ஓரத்தில் பிசிர் பிசிராக இருந்த ஒரு வெளிர் சாம்பல் நிற உள்பாவாடை இதெற்கெல்லாம் கீழே இருந்து நாலு கொய்யாக்காய்களையும் எடுத்து என் கைகளில் கொடுத்தாள்.
“இருங்கோ ! சித்தி! நான் காபி கொண்டு வரேன். தோசை வாக்கறேன்! சாப்பிடலாம்” என்றாள்.
பாட்டி “பேஷா சாப்பிடலாமே!” என்றாள்.
அந்தப் பெண் “மாமி ! நானும் காப்பி சாப்பிடுவேன் ! எனக்கும் கொண்டு வாங்கோ!” என்றது.
அம்மா புருவத்தைச் சுளித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு “ஏண்டி! பாட்டிக்கு கொடுக்கும்போது உனக்கு மட்டும் குடுக்கமாட்டேனா?”என்றாள்.
“இல்லை மாமி ! நான் காபி குடிப்பேன்னு உங்களுக்குத் தெரியாதில்லையா அதான்” என்றது. அப்புறம் பாட்டியிடம்
“இவா எனக்கு மாமிதானே ? இல்லை சித்தியா?” என்றது.
அம்மா காபி கலக்க உள்ளே போனாள்.
“மாமிதாண்டி, மாமிதான். உங்க அம்மா ராமகிட்டுவுக்கு தங்கை இல்லையா?’ என்றாள் பாட்டி.
“ராமகிட்டு ஆரு?”
“அசத்து! இவ அப்பாடி! இவ அப்பா என்னோட அக்கா பிள்ளைடி! ” என்றாள்.
பக்கத்து வீட்டு ஜன்னலில் அவர்கள் வீட்டு பையன் ஹாலைக் கடந்து போவது தெரிந்தது.
“யாரு அந்த பையன்? பக்கத்தாத்தில ஆரு இருக்கா?” என்று அந்தப் பெண் என்னிடம் கேட்டாள் .
“நான் சொன்னா உனக்கு யாருன்னு தெரியுமா?“
வாயை கைகளால் மூடிக்கொண்டு சிரித்துவிட்டு “பாரேன் இவளை!” என்றாள்.
அப்புறம் “சொன்னா என்ன கொறஞ்சா போயிடுவே” என்றாள்.
நான் பேசாமல் இருந்தேன்.
அம்மா தோசையை அவர்கள் இலையில் போட்டுக்கொண்டே “படிக்கறயா?’ என்று அவளைக்கேட்டாள்.
“எஸ் எஸ் எல் ஸி எழுதினா. இங்க்லீஷ், கணக்கு இரண்டுலயும் போயிடுத்து. திருப்பி எழுதணும்” பாட்டி பதில் சொன்னாள்.
“மாமி கொஞ்சம் மிளகாப் பொடி போடுங்கோ, சாம்பாரும் ஊத்துங்கோ” அந்தப் பெண் இலையில் தாளமிட்டபடி கேட்டாள்.
“ஏதோ இதுகள் படிச்சு மின்னுக்கு வந்தா சாச்சு தலை நிமிருவாள்ன்னு பாத்தேன். ம்……. ஈஸ்வர சித்தம் எப்படி இருக்கோ தெரியல!”
என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது, சாச்சு என்பது பெண் பெயர்தான்.
“ஆச்சு ! பரிக்ஷை வருதே இப்ப இன்னும் ஒரு மாசத்தில !” என்றாள் அம்மா இலையில் சாம்பாரை ஊற்றியபடி.
வாசல் கேட்டைத் திறந்தபடி அண்ணாவும் , சிவராமனும் வந்தார்கள்.
“ஏண்டா ! லட்டு மாதிரி பாலை பாஸ் பண்ணி உன் கிட்ட குடுக்கறேன் , கோட்டை விட்டயே! இல்லாட்டா நாம ஈஸியா ஜெயிச்சுருக்கலாம்!”
“என்கிட்ட எங்கடா பாஸ் பண்ணின? பால் நேரா பாண்டி கிட்ட போறது, அவன் விடுவானா, சர் சர்ன்னு தள்ளிண்டு போயிட்டான் . நீ என்னபண்ணின உன் பெனால்டி சான்ஸை? கரெக்டா கோல் போஸ்டுக்கு வெளியில அடிக்கற?” சண்டையிட்டுக்கொண்டே வந்தார்கள். அவர்களை கால்களை அலம்பிண்டு வாங்கடா என்று சொல்லுகிற சாக்கில் வெளியில் ஓடி வந்து
“பக்கெட்டில் தண்ணி இருக்கு, ஒழுங்கா கால், கையை அலம்பிண்டு உள்ளே வாங்கோ” என்று சத்தமாக சொல்லிவிட்டு மெதுவாக “உள்ளே யாரோ பாட்டியும், ஒரு அசட்டுப் பொண்ணும் வந்துருக்கு”என்றேன்.
சிவராமன் “யாரு?” என்றான் மெதுவாக.
தெரியல என்று உதட்டைப் பிதுக்கினேன்.
அண்ணா தலையை எக்கி உள்ளே பார்த்தான்.
“எச்ச இடறாளே அவளா? ” என்றான்.
அந்தப் பெண் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்துகொண்டே இவர்கள் யார் என்று பார்த்தது.
“சேப்பா இருக்கா இல்லை?” என்றான் அண்ணா.
“ஆமா! கிழிச்சா! வாயைத் திறந்தா அசடு வழியறது”
“நீ சொல்றது சரியா , தப்பான்னு நான் டிஸைட் பண்றேன்”
“உன் கிட்ட சொன்னேன் பாரு! நீ என்ன பெரிய ஜட்ஜா, தீர்ப்பு சொல்றதுக்கு”
அடித்தொண்டையில் இவ்வளவும் சொல்லி முடிப்பதற்குள் அவள் வந்தாள்.
“உனக்கு ஒரு அண்ணாவும், தம்பியும்னயே? ரண்டு பேரும் தம்பி மாதிரி இருக்காளே?”
அண்ணாவை சரியாக அவனுடைய பலவீனமான இடத்தில் தாக்கிவிட்டாள். அந்த ஒரு வார்த்தையில் அவனுடைய பரம எதிரியாகி விட்டாள்! எனக்கு சந்தோஷமாக இருந்தது!
அப்போது ஒன்பதாவது படித்துகொண்டிருந்த அவன் ஏழாவது படித்துக்கொண்டிருந்த என்னைக்காட்டிலும் கொஞ்சம் குட்டையாக இருப்பான். என்னை அவனுடைய அக்காவா என்று ஒவ்வொரு முறை யாராவது கேட்கும்பொழுது, எவ்வளவு ரகசிய கிள்ளு வாங்கியிருக்கிறேன். இன்றைக்கு ஒரே கல்லில ரண்டு மாங்கா, அவனுக்கும் நல்ல அடி, இவளையும் இனிமே ஒசத்தியா சொல்லமாட்டான்!.
“உன் பேரு என்ன?’ என்று அண்ணாவைக் கேட்டாள். அண்ணா பதில் சொல்லாமல் அவளை முறைத்து விட்டு உள்ளே போனான்.
அவள் விடாமல் சிவராமனைப் பார்த்து “ உன் பேர் என்ன?” என்று கேட்டாள். அவன் “சிவராமன்! உன் பேர் என்ன?” என்று கேட்டான்.
“என் பேர் நிர்மலா! நிம்மின்னு கூப்பிடுவா!”
“நாய்க்குட்டி பேர் மாரி இருக்கே?” என்றான் சிவராமன்.
அவள் கெக்கெக்கென்று சிரித்தாள். “நீ நன்னா பேசறடா?’ என்று அவன் தோளைத் தட்டுவது போல கையை நீட்டினாள். அவன் லாகவமாக வளைந்து அந்த தட்டுதலைத் தவிர்த்தான்.
“உன் அண்ணா பேரு?”
“ரகு!” சொல்லிக்கொண்டே உள்ளே ஓடினான்.
அப்பா ஆஃபிஸில் இருந்து வரும் போது பாட்டி அந்த வாசல் பக்க கூறை போட்ட ஹாலில் உட்கார்ந்திருந்தாள். ”வாடா ராம கிட்டு, எப்படி இருக்க? பாத்து கொள்ளை நாளாச்சேப்பா!” என்று வரவேற்றாள்.
“அடடா! சித்தியா, வாங்கோ! வாங்கோ! சௌக்யமா? துரை சௌக்யமா இருக்கானா? பாக்கி பேரெல்லாம் சௌக்யமா?”என்றபடியே பாட்டி பக்கத்தில் அமர்ந்தார்.
பாட்டி “எல்லாரும் சௌக்யம்! துரை பொன்மலையிலேதான் இருக்கான். சாச்சு, திருச்சியில மாதுளம்கொல்லை அக்ரஹாரத்தில இருக்கா. அவ பொண்ணு என் கூட வந்திருக்கா. இப்பெல்லாம் கண்ணு சரியா தெரியமாட்டேங்கறது, அவளைத்தான் துணைக்குக் கூட்டிண்டு வந்தேன். லெச்சி துறையூர்ல இருக்கா. எல்லாம் ஏதோ இருக்குக! நான் இவா மூணு பேர்கிட்டயும் மாறி மாறி இருக்கேன்! சீனு மெட்ராஸ்ல இருக்கான்“
“எப்ப வந்தேள் திருச்சியிலேந்து?” என்று கேட்டார் அப்பா.
“நான் வந்து பத்து நாளாச்சு”
“பத்து நாளா எங்க இருந்தேள்?”
“வக்கீல் புதுத் தெரு விச்சு இல்ல விச்சு, அவாத்தில……..உனக்கு அவனைத் தெரியுமோ?”
“யாரு ஆடிட்டர் விஸ்வனாதனா? கேள்விப்பட்டிருக்கேன். ஒண்ணு ரண்டு தடவை பாத்திருக்கேன். பழக்கம் இல்லை” என்றார் அப்பா.
“அய்! மாமா! எப்படி இருக்கேள்?” என்று கேட்டுக்கொண்டே நிர்மலா வந்தாள்.
“வாம்மா, படிக்கறயா”என்றார் அப்பா.
“படிச்சு முடிச்சாச்சு மாமா!” என்றது.
அப்பா ”தேவலாமே! அப்படி படிப்புக்கு முடிவு கூட உண்டா என்ன?” என்றார் சிரித்துக்கொண்டே.
அம்மா அப்பாவுக்கு காபி கொடுத்துக்கொண்டே “அவளை விடுங்கோ! ஐயோ! ஆடிட்டர் விஸ்வனாதய்யராத்துக்கு வந்தேளா? அவாத்து மாமி படு ராங்கிக்காரி ஆச்சே! மீனாக்ஷி அம்மன் கோவில்ல பாத்திருக்கேன். ப்ளூ ஜாகர் தோடும் , எட்டுக்கல் வைரபேசரியும், வைர முத்து மூக்குத்தியும் போட்டுண்டு உலகமே லட்சியமில்லைன்னு போவா !
யதேச்சையா பாத்துட்டா, அன்னிக்கு அஞ்சு மனசும் குளுந்திருந்தா, தலையை அமத்தலா ஒரு அசைப்பு அசைச்சிட்டு, சிரிச்சாளோ இல்லையோங்கிறாப்பல ஒரு அரைக்கால் இஞ்சு சிரிப்பு சிரிச்சுட்டு அதுவே உங்களுக்கெல்லாம் ஜாஸ்திங்கிறாப்புல விருட் விருட்னு போவ! இத்தனைக்கும் எங்க அப்பாவுக்கு தாயாதிக்காராதான் அவ அப்பா!” சொன்னாள்.
“ஆமா! அவ கும்மோணத்துக்காரிதான்! கரெக்டு!” என்றாள் பாட்டி.
“அவாத்தில என்ன? அவரை உங்களுக்குத் தெரியுமா?”
“விச்சு எங்க அப்பா பக்கத்து உறவு. எனக்கு ஒண்ணு விட்ட சித்தப்பா பிள்ளைதான்! அவன் பொண்ணுக்கு அடுத்த வாரம் கல்யாணம்! அக்கா! நீதான் ஆத்துக்குப் பெரியவ! முன்னாடியே வந்து ஆத்து பழக்க வழக்கமெல்லாம் சொல்லித் தரணும்னான். அதோட கொஞ்சம் பக்ஷணம் எல்லாம் பண்ணனும் ஒத்தாசைக்கு வாயேன்னு கூப்பிட்டான். பத்து நாளா அதான் அவாளுக்கு எல்லாம் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன். இப்ப கல்யாணத்துக்கு எல்லாரும் வந்து இறங்கியிருக்கா! பரிசாரகன் போட்டு சமையல் சாப்பாடெல்லாம் அமக்களப்படறது. நீங்க வேணா உங்க சொந்தக்காராளை எல்லாம் பாத்துட்டு கல்யாணத்துக்கு முத நாள் வாங்கோன்னு லக்ஷ்மி சொன்னா! அதான் உங்களையெல்லாம் பாத்துட்டு, இங்க ஒரு வாரம் இருந்துட்டு போலாம்னு வந்தேன்”
“அது சரி!” என்றார் அப்பா.
“நம்மாத்துக்கு சித்தி வந்தது ஸந்தோஷம்தான்! அது என்ன பத்து நாளா வேலை வாங்கிட்டு, இப்ப பரிசாரகன் சமச்சா இவா இரண்டு பேரும்கூட இருந்து சாப்பிடப்படாதா?’ அம்மா முகம் சிவந்தது.
“அது இல்லம்மா! அங்க வீடு நிறைய மனுஷா ! இடமில்லை! அதான்!” என்றாள் பாட்டி.
அப்பா ”விடு ! சாந்தா! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி ! எல்லாரும் ஒருப்போல இருக்கறதில்லை! விடு!”என்றார்.
பாட்டியிடம் “எப்ப கல்யாணம்?” என்று கேட்டார்.
“இன்னிக்கு சனியா, அடுத்த ஞாயித்துக் கிழமை கல்யாணம். வெள்ளிக்கிழமை சாயங்காலமா கிளம்பிப் போனா சரியா இருக்கும்னு நினைக்கறேன். சனிக்கிழமை காலங்காத்தால விரதம், நிச்சயதார்த்தம். கல்யாணம், ரிசப்ஷன் இரண்டும் ஞாயித்துக் கிழமை” என்றாள் பாட்டி.
“அதுக்கென்ன? நம்மாத்தில இருக்கறதுக்கு என்ன?” என்றார் அப்பா.
படுப்பதற்கான ஏற்பாடு பற்றி அப்பாவும் அம்மாவும் யோசித்தார்கள்..
அந்த கீற்றுக் கொட்டகை ஹாலைத் தவிர , ஒரு சின்ன கூடம் அப்புறம் சமையலறை . பின்னால் பாத்ரூம் வகையறா. ரயில்வே கம்பார்ட்மெண்ட் மாதிரி ஒன்றன்பின் ஒன்றாக இருக்கிற வீட்டில் அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான். பொதுவாக அப்பா கீற்றுக் கொட்டகை, நாங்கள் நால்வரும் அந்த சின்ன கூடத்தில் தலை மாட்டில் இரண்டு பீரோ, சமையலறை சுவரை ஒட்டி பக்கவாட்டில் ஒரு மேஜை, கால் மாட்டில் ஒரு அரை அடி அகல பெஞ்சு, இன்னும் தட்டு முட்டு சாமான்களுக்கிடையே தூங்குவது வழக்கம். கீற்று கொட்டகை தரை நல்ல சிமெண்ட் தரைதான். ஆனால், மூன்று பக்கமும் சார்ப்பு இல்லாமல் திறப்பாக இருக்கும் , ஒரு பக்கம் பக்கத்து வீட்டு சுவருடன் ஒட்டி இருக்கும். மண் தரையை ஒட்டிய இடமென்பதால், நிறைய ஜீவராசிகளின் தாராள நடமாட்டம். அப்பா கட்டிலில் படுப்பதால் அதெல்லாம் ஒன்றும் செய்யாது என்று ஒரு நம்பிக்கை. அம்மா சொல்வாள் “ஏதோ தர்மத்துக்கு கட்டுப்பட்டுதான் நம்மளையெல்லாம் அதுகள் கடிக்காமல் இருக்குக”
அப்பா சொன்னார் “நான் நாலஞ்சு நாள் முத்து கிருஷ்ணன் வீட்டுல படுத்துக்கறேன், அவங்க வீட்டு மாடி ரூம் ஃப்ரீயாதான் இருக்கும். அவங்க மிசஸ்கூட ஊருக்குப் போயிருக்காங்க.” படுக்கும் பிரச்னை ஒருவாறு தீர்ந்தது.
அண்ணாவும் தம்பியும் பகலில் பள்ளிக்கூடம், சாயங்காலத்தில் விளையாட்டு மைதானம் , அப்புறம் சினேகிதர்கள் வீடு என்று விழித்துக்கொண்டிருக்கும் வேளையெல்லாம் வெளியிலேயே திரிந்தார்கள்.
நிர்மலா நான் பள்ளியிலிருந்து வருவதற்காகவே காத்துக் கொண்டிருப்பாள். வந்ததுதான் தாமசம் பேச ஆரம்பித்து விடுவாள். காட்டுக்கும் ,மேட்டுக்கும் சம்பந்தா சம்பந்தமில்லாமல். ஏதோ தொலைகிறது கேட்டு வைக்கலாம் என்றால் பேச்சு சுவாரசியமே இல்லாமல் வேறு இருந்து தொலைக்கும். எனக்கு எப்படா இவர்கள் போவார்கள் என்றிருந்தது.
ஒரு வாரம் ஒரு வழியாக கழிந்தது.
அப்பா வெள்ளிக்கிழமை காலையில் ஆஃபீஸ் போகும்போதே பாட்டியிடமும், நிம்மியிடமும் “கல்யாணத்துக்குப் போயிட்டு ஜாக்கிரதையாக ஊருக்கு போயிட்டு வாங்கோ. இன்னிக்கு யூனியன் மீட்டிங்க் இருக்கு, லேட்டாகும் நான் வரதுக்கு. நீங்க கிளம்பும்பொழுது வந்திருக்க மாட்டேன், அதான் இப்பவே சொல்றேன் “ என்பதாக விடை கொடுத்தார்.
ராத்திரி அப்பா தன் சாவியை வைத்து வாசல் கேட்டை திறந்து கொண்டு வந்தார். சத்தம் கேட்டு நானும் அம்மாவும் விழித்துக்கொண்டு முன் பக்கத்துக் கூறைக்கு , இருட்டில் தட்டுத் தடுமாறி வந்தோம். அப்பா டார்ச் விளக்கு வெளிச்சத்தில் , யாரையும் தொந்தரவு படுத்தாமல் , மெதுவாக கூரை போட்ட முன் ஹாலுக்கு வந்தார்.
“என்ன இந்த இரண்டு பசங்களும் இங்க என் கட்டில்ல படுத்துண்டு இருக்காங்களே ? உள்ளே தூங்கலை?” என்றார் அம்மாவிடம் மெதுவாக.
அம்மாவும் அதே மெது குரலில்” அங்க சித்தி, நிம்மி, நான் , இவ.. எங்க நாலு பேருக்கே இடம் நெருக்கி அடிக்கறதே?” என்றாள்.
“இன்னிக்கு போறதா சொன்னாளே , அதான் நான் இங்க தூங்க வந்தேன். அதுவும் இல்லாம, இன்னொருத்தர் வீட்ல ராத்ரி பத்து மணிக்கு மேல கதவை எப்படி தட்றது? அது சரி, ஏன் போகலை? “
“போகலை! அவ்வளவுதான்”
“இப்ப என்ன பண்றது?”
“நான் பெரியவனை உள்ளே தூங்க சொல்றேன் . கொஞ்சம் மேஜையை நகத்தி சமையல் உள்ளுக்குத் தள்ளிட்டு, அந்த இடத்தில இவனைப் போடறேன். இவனை எழுப்பி நடக்க வைக்கறதுதான் பாடு!”
“ஐயோ! சிவராமனும், நானும் இந்த கட்டில்லயா? உதச்சு தள்ளுவானே!”
“ம்க்கும்…. படுக்க இடம் கிடைச்சுதே அதுக்கு சந்தோஷப் படுங்கோ! இப்போ தடாம், புடாம்னு சத்தம் போடாம , உள்ள வந்து, அந்த மேஜையை கிச்சனுக்குள்ள தள்ள ஒத்தாசை பண்ணுங்கோ!”
இருட்டுக்குள், டார்ச்சை மங்கலாக அடித்து யார் காலையும் கையையும் மிதிக்காமல், ஒரு வழியாக அப்பா மேஜையை உள்ளே நகர்த்தி சுவத்தோரமாக அண்ணா படுக்க இடம் பண்ணினார்.
அண்ணாவை எழுப்பி உட்கார வைத்து “உள்ளே போய் படுத்துக்கோடா!” என்றார். அவன் மலங்க மலங்க முழித்துவிட்டு திரும்பி படுத்துக் கொண்டான். அவனை ஒரு வழியாக தூக்கத்திலேயே நடக்க வைத்து மேஜை இருந்த இடத்தில் படுக்க வைத்தனர்.
கூடத்தின் நுழை வாயிலுக்கருகே படுத்திருந்த நிம்மி கிளுக் ப்ளுக்கென்று சிரித்த சத்தம் கேட்டது.
காலையில் அவர்கள் முன் கூரை ஹாலில் துணிமணிகளை பையில் வைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பாவுக்கு அன்று மத்யான டூட்டி. சாவகாசமாக சமையலறையில் நின்று காபி குடித்துக்கொண்டிருந்தார். அம்மா மெதுவாக கேட்டாள் “அவர்கள் ஊருக்கு போவதாயிருந்தால் அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டாமா? என்னிடம் குடுக்க ஒண்ணும் இல்லை. நல்ல வேளை நேத்து போயிருந்தால் ஒண்ணும் குடுத்திருக்க முடியாது! ஒரு பத்து ரூபாயாவது குடுங்கோ! சித்திக்கு குடுக்கறேன்” என்றாள்.
அப்பா சட்டைப் பையில் கையை விட்டு பத்து ரூபாய் எடுத்தார். ”இது மட்டும்தான் இருக்கு” என்றபடி அம்மாவிடம் கொடுத்தார்.
கொஞ்சம் யோசனைக்குப் பிறகு “ இதை சித்திக்கு குடு. அந்தப் பெண்ணுக்கு, நீ வாங்கி வச்சுருக்கயே புதுப் போர்வை! அதைக் குடு! “ என்றார்.
“போர்வையா? ஏன்? ரகுவோட போர்வை தலைப் பக்கம், கால் பக்கம் இரண்டு இடத்திலயும் கிழிஞ்சுருக்கு. போத்திண்டா கால்ல மாட்டி இன்னும் பெரிசா கிழியறதுன்னு வாங்கினேன்!”
“பரவாயில்லை குடு !”என்றார் அப்பா. அவர்கள் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
அம்மா ஒரு தட்டில் வாழைப் பழங்களும் பத்து ரூபாயும் வைத்து பாட்டியிடம் கொடுத்தாள்.
“இதெல்லாம் எதுக்கும்மா? நீங்கெல்லாம் பிரியமா இருந்தேளே! அதுவே போதும்” என்றபடியே வாங்கிக்கொண்டாள்.
அந்தப் பெண்ணிடம் அம்மா போர்வையைக் கொடுத்தாள்.
“அய்! எனக்கா மாமி? ரொம்ப நன்னாயிருக்கு மாமி” என்று அதை கையில் வைத்து தடவிக்கொண்டிருந்தாள். கரு நீலத்தில் பொன் வண்ணப் பூக்களோடு அந்தப் போர்வை ரொம்ப நன்றாக இருந்தது. எனக்கு அப்பாமேலும், அம்மாமேலும் கோபம் கோபமாக வந்தது. என்னோடது சாயம் போய் கரைந்து போக ஆரம்பித்திருந்தது. எனக்கு குடுத்திருக்கலாம் இல்லையா? இந்த அசட்டு போரடிக்கற பொண்ணுக்கு எதுக்கு?
பஸ் ஸ்டாப் பக்கத்திலிருக்கும் பெருமாள் கோவிலுக்குப் போய்விட்டு அப்படியே பஸ் பிடித்து டவுனுக்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
அவர்கள் வாசல் கேட்டைத் தாண்டுவதைப் பார்த்தேன்.
“அப்பா, ஏம்ப்பா அந்த போர்வையை குடுக்க சொன்னேள்? என்னோடதும் கிழிஞ்சுண்டு இருக்குப்பா!” என்றேன் கோபமும், கொஞ்சம் அழுகையுமாக.
அப்பா என்னை ஒருமுறை பார்த்துவிட்டு அம்மாவிடம் “அந்தப் பெண்ணுக்கு ராத்திரி போர்வை குடுக்கலையா நீ?” என்றார்.
“கொஞ்சம் பெரிய போர்வையா இருந்தது. சித்தி சொன்னா, தானும் பேத்தியும் போத்திக்கறதா! ஏன்? என்னாச்சு?”
“ராத்திரி அமக்களத்தில பாத்ரூம் போகாம படுத்துண்டேன். சரி, கொஞ்ச நேரம் கழிச்சி எழுந்திண்டு போலாம்னு பாத்தா இந்த பொண்ணு கதவுகிட்ட படுத்துண்டு இருந்தது. லேசா டார்ச் அடிச்சுண்டு அவளைத் தாண்டலாம்னு பார்த்தால் புடவையை அவுத்துப் போத்திண்டு இருக்கா. ஐயோன்னு லைட்டை அணைச்சுட்டு என் போர்வையைக் கொண்டு அவ பக்கத்துல போட்டேன் . முழிச்சுண்டா போலிருக்கு! ‘பரவாயில்லை மாமா எங்காத்துல போர்வையெல்லாம் கிடையாது. இப்படித்தான் புடவையைப் போத்திண்டு தூங்குவோம்’னா! வயசுப் பொண்ணை , இப்பிடி வீடு வீடா வேலைக்கு, ஒத்தாசைக்குன்னு சித்தி கூட்டிண்டு வேற போறா. கொஞ்சம் ஜாக்ரதையா இருக்க வேண்டாமா? வேலைக்குப் போற எல்லா இடத்திலும் இப்பிடி புடவையை அவுத்து போத்திக்கறது ஆபத்து இல்லையா?”
“வேலைக்கா? வேலைக்கா இங்க வந்திருக்கா?” என்றாள் அம்மா நம்ப முடியாமல்.
“பின்ன என்ன ஆடிட்டர் விஸ்வநாதன், அக்கான்னா மரியாதை பண்ண கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்கான்? பொண்ணு கல்யணத்துக்கு பக்ஷணம் பண்ண மலிவா கிடைப்பாளேன்னு கூப்பிட்டிருக்கான். சித்தியும் ஏதோ நூறு இருநூறு கிடைக்குமேன்னு வந்திருக்கா பாவம்! இல்லாத கொடுமை!”
“அடடா! அவா இவ்வளவு கஷ்டத்துல இருக்கான்னு எனக்குத் தெரியலயே! அவ பிள்ளை ஒத்தனை எஞ்சீனீயருக்கு படிக்க வச்சாள்னு சொன்னேளே! பெரிய வேலையில இருக்கான்னேளே!”
“ஒத்தந்தான் பெரிய வேலை! பாக்கி பொண்ணுகள், பிள்ளைகள் எல்லாம் ஏதோ இருக்குக! கொஞ்சம் அப்பிடி இப்பிடி தட்டிக் கொட்டிண்டுதான் ஜீவனம்! .
சீனுதான் , மெட்றாஸ்ல இருக்கான். பெரிய போஸ்ட்! இருக்கறதுலயே அவன்தான் ரொம்ப நன்னா செயலா இருக்கான், வீடு வாசல்னு எல்லாம் வாங்கிண்டு. சித்தி ரொம்ப வருத்தப்பட்டு சொன்னா “சீனு யாரையும் வீட்டு வாசப்படி கூட ஏறவிடறதில்ல! கூடப் பிறந்ததுக அஞ்சுக்கும் பத்துக்கும் ஆலாப் பறக்கறதுகளேன்னு இரக்கம் இல்லை! அம்மா வயசான காலத்தில கஷ்டப்படறாளேன்னு தோணலை! என்ன சொல்றது?” ஆனா இரும்பு மனுஷி! எப்படியோ உழைச்சு தன் சாப்பாட்டையும் பாத்துண்டு மத்த குழந்தைகளுக்கும் முடிஞ்சதை குடுக்கறா பாவம்” என்றார் அப்பா!
“அம்மா அவா கோவிலுக்கு போயிட்டுதானே பஸ் ஏறுவா?” என்றேன்.
“ஆமா”என்ற அம்மா
“இருடி, எங்க ஓடற?” என்று கேட்டாள்.
நான் ஓடினேன். அவர்கள் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தனர்.
“என்னம்மா இது? ஏன் ஓடி வர?” என்று பாட்டி கேட்டாள்.
“இல்ல பாட்டி! நீங்க கிளம்பும் போது நான் சரியா போயிட்டு வாங்கோன்னு சொல்லலை இல்லை, அதான் !“ என்றேன் மூச்சு வாங்கிக்கொண்டு.
“அதுக்காடி வந்தே என் தங்கமே? நீ நன்னாதான் சொன்னயே” என்றாள் பாட்டி.
சற்று தூரத்தில் இரண்டாம் நம்பர் பஸ் வருவது தெரிந்தது.
நான் அவசர அவசரமாக “இன்னொரு தடவை எங்க வீட்டுக்கு வாங்கோ பாட்டி! நீயும் கட்டாயம் வா நிம்மி! கண்டிப்பா என்ன?” என்றேன். அவள் பஸ்ஸைப் பிடிக்க பாட்டியுடன் விரைந்துகொண்டே,
“கண்டிப்பா வரேண்டி! உங்காத்தில எல்லாரும் ரொம்ப நல்லவா! அதிலயும் நீ ரொம்ப, ரொம்ப நல்லவடி!” என்றாள்.
.
மிகவும் யதார்த்தமாக, தொய்வு இல்லாமல், வார்த்தை ஜாலம் இல்லாத சரளமான நடை.
நம் வாழ்வில் பார்த்த, பாரக்கக்கூடிய, கதாபாத்திரங்கள்.
Introduction of each character with one Or two conversations, reader could easily get the characterization and attitude of each character. Brilliant…
அழகான பதிவு….
வாழ்த்துக்கள்