
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொலை நோக்கிகளின் மூலம் பார்த்ததை வைத்துச் செவ்வாய் வாசிகளையும் பரபரப்பான செவ்வாய் நாகரிகத்தையும் கற்பனை செய்திருந்தோம். 1960 முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் செவ்வாய்க்கோள் பயணத் திட்டங்களின் நோக்கம் புவியின் பிரதி போலத் தெரிகிற இந்த அண்டைக் கோளைப் பற்றி சற்றுத் தெளிவாகவும் அதிகமாகவும் அறிவதுதான். அவ்வாறு அனுப்பப்பட்ட சில ஆய்வுக்கோள்கள் செவ்வாயின் மேற்பரப்பில் பறந்து சென்றும் மற்றும் செவ்வாயை வட்டமிட்டும் ஆய்வுகள் நடத்திச் சேகரித்த தகவல்கள் இவை: சில பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் புவியின் குட்டி இரட்டை சகோதரனாக, நீர் வளத்துடன் (ஒரு வேளை உயிரினத்துடன் கூட இருக்கலாம் ) கதிரவனை வலம் வந்திருக்கக் கூடும்; இன்று அது தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகள் மட்டுமே கொண்ட (நீர்நிலைகள் ஏதும் தென்படாத) கடுங்குளிர் வெற்றுப் பாலைவனம். அதன் அழிவு பற்றிய அறிவு புவியினருக்கு ஒரு பாடமாக இருக்கும்.
நெவில் ஷுட் (Nevil Shute )-ன் On The Beach (1957) புதினமும் , கீழே தரப்பட்டுள்ள T.S Eliot -ன் கவிதை வரிகளும் நம் அழிவை முன்னுணர்த்தியுள்ளன.
(This is the way the world ends,not with a bang but a whimper…Poetry by T.S.Eliot)
இப்படித்தான் உலகம் மடியும்,
திடீர்ப் பேரொலியுடனல்ல;
தீனமான முனகலுடன்
—-டி .எஸ். எலியட் (கவிதை)
முந்திய ஆராய்ச்சிகளின் மூலம் நாம் தெரிந்து கொண்டவை: செவ்வாய்க் கோள் முன்பொரு காலத்தில் சூழல் மண்டலத்தை ஏற்கும் திறன் பெற்றிருந்தது; நீண்ட காலத்துக்கு முன்பே புவிக் கோளைப் போல் தட்ப வெப்ப நிலை மாறுதல்களை எதிர்கொண்டதால் அழிந்திருக்கலாம் ; இன்று செவ்வாய்க் கோளில் நீர் காணப்படா விட்டாலும் துருவ பனிச் சிகரங்களுக்கு அடியில் உறைநிலையில் சிறைப்பட்டோ அல்லது தரையின் அடியாழத்திலோ பெருமளவில் இருக்கக் கூடும் என நம்பப் படுகிறது; அதன் துருப்பிடித்த தரைப் பரப்பின் அடியில் நுண்ணுயிர்கள் உயிர் வாழும் சாத்தியங்கள் இருக்குமெனக் கருதப்படுகிறது.
செவ்வாய் பூமியைவிடச் சிறிய கோளாக இருந்தாலும். நிலப் பரப்பைப் பொறுத்தவரை பூமியின் 7 கண்டங்களின் மொத்தப் பரப்புக்கு சமமான நிலச் சொத்து செவ்வாயிலும் இருக்கிறது. புவியைப் போன்றே துருவ மூடிகளைக் (polar caps) கொண்டுள்ளது. அதன் சுழற்சி அச்சு புவியைப் போன்றே சாய்ந்து இருப்பதால் பருவகால மாறுதல்களுக்கு உட்பட்டிருந்தது. இவற்றை மட்டுமே புவி மற்றும் செவ்வாய்க் கோள்களின் ஒப்புமைகளாகக் (similarities) கருத முடியும்.
ஆனால் வேற்றுமைகள் பலவுண்டு. செவ்வாய்க்கோளின் ஈர்ப்பு விசை, புவியில் உணரப்படும் ஈர்ப்பு விசையில் 38% மட்டுமே. வளிமண்டலத்தின் காற்றழுத்தம் மிகக் குறைவு (புவியில் 1000 மில்லி பார்;செவ்வாயில் 7.5 மில்லி பார்). செவ்வாயில் எப்போதும் கடும் குளிர். சராசரி வெப்பநிலை -63 டிகிரி C . புவியைப் போலவே 24மணிநேர நாட்களைக் கொண்டிருந்த போதிலும், நீண்ட சுற்றுப் பாதையின் காரணமாக ஒரு ஆண்டுக்கு 687 நாட்கள். செவ்வாய் வளிமண்டலத்தில் உயிர் வளி (oxygen) இல்லை. மெல்லிய கரிம வாயுப் படலம் மூடியிருப்பதால், பூமியின் உயிரினங்கள் அங்கே உயிர்வாழ முடியாது. உலர்ந்து போன இந்த செவ்வாய் உலகின் வளிமண்டலத்தில் அடிக்கடி மீத்தேன் வாயுவும் காணப் படுகிறது. செவ்வாய் மண்ணில் இருக்கும் நச்சு சேர்மங்கள் உயிருக்கு ஊறு விளைவிப்பவை..மேலும் அங்கே புற்று நோய் உண்டாக்கக் கூடிய கதிர் வீச்சுகள் பெருமளவில் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் செவ்வாயை சிவப்பாக காட்டும் புழுதிப் புயல் அடிக்கடி வீசும் எனவும் தெரிய வந்துள்ளது.
அண்மைய நாசா-வின் செவ்வாய் 2020 விடாமுயற்சி தேட்ட ஊர்தித் திட்டப்படி (Mars 2020 Perseverance Rover), விண்கலம் 30, ஜூலை 2020-ல் புவியை விட்டுக் கிளம்பி இருக்கிறது. இது விடாமுயற்சி தேட்ட ஊர்தியை பிப்ரவரி 2021-ல் செவ்வாய்க் கோளின் ஜெஸிரோ எரிமலை வாயில் கொண்டு சேர்க்கும். செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா? ஏற்கனவே அங்கு உயிரினங்கள் வாழ்ந்தனவா? அதற்கான அறிகுறிகள் உள்ளனவா? என இந்த ஆய்வு கலம் ஆய்வு செய்யும். ஆய்வுக் கலத்தில் இணைக்கப் பட்டுள்ள கூர்மதி (ingenuity) இயந்திர வழி செயல் முறை (robotic ) ஹெலிகாப்டர், ஆய்வுக் கலன் தரையில் இடரின்றி உலவ உகந்த வழித் தடங்களைத் தேர்ந்தெடுக்கும்.எனினும் இந்தப் பயணத்தின் முடிவில் நீர் ஆதாரங்களோ நுண்ணுயிர் சுவடுகளோ கிடைக்காமலும் போகலாம்.
60 ஆண்டுகளாக செவ்வாய்க் கோளை எட்டிப் பார்ப்பதும் மண்ணைத் துளையிட்டுப் பார்ப்பதுமாயிருந்த ஆராய்ச்சியாளர்கள், அதிரடியாக விண்வெளி வீரர்களைக் களத்தில் இறக்கி ஆய்வில் ஈடுபடுத்த முடிவு செய்து விட்டார்கள். அதன் படி நாசா 2030-ல் விண்வெளி வீரர்களை செவ்வாயில் தரையிறக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஏழு மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு களமிறங்கும் முன்னோடிகளுக்கு முதல் தேவை தங்கி வாழ உறையுள் (habitat ). அறிவியலாளர்களுடன் கலந்து பேசி உறை பனிக்கட்டிகளால் குளிரவைக்கப்பட்ட உப்பக் கூடிய (inflatable} குவி மாடங்களை (domes) உருவாக்கி விண் வெளி வீரர்களின் வாழ்விடமாகத் தந்து அவர்களைக் கடும் குளிர் மற்றும் தீவிர கதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாக்க நாசா (NASA ) திட்டமிட்டுள்ளது. புவியிலிருந்து வெற்றுக் குவிமாடப் பொருட்கள் விண்வெளி வீரர்களின் வருகைக்கு முன்பே அனுப்பப் பட்டுவிடும். ரோபோக்கள் வீரர்களின் வருகைக்கு சற்று முன்பே நீர் நிரப்பி குளிரவைத்த குவி மாடங்களை நிறுவி வைத்திருக்கும். இந்த சிறப்பு ஏற்பாடு முதல் வருகைக்கு மட்டுமே. அடுத்தடுத்து வரும் விண்வெளி வீரர்கள் வசதியாகத் தங்குவதற்கு உள்ளூர் கட்டுமானப் பொருட்கள் பயன்பாட்டில் அழகிய குடியிருப்புகள் உருவாக்கப் படும்.
நாசாவைத் தொடர்ந்து ஐரோப்பிய மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனங்களும் செவ்வாய்க் கோளில் மனிதன் குடியேறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகக் கண்டறிந்திருக்கின்றன. ஆயினும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு முன்பாக செவ்வாய்க்கோள் குடியேற்றத்தை அரங்கேற்றும் முனைப்பில் பல முன்னணி நிறுவனங்கள் அணி வகுத்துள்ளன. மார்ஸ் ஒன் என்கிற டச்சு கம்பெனி , 2023-க்குள் ஒரு மனித குடியிருப்பை செவ்வாய்க்கோளில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் (space x ) கம்பெனியின் தலைவரான எலான் மஸ்க், (Elon Musk ) முன்வைத்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய்த் திட்டம், 2022-ல் செவ்வாயில் சரக்குகளை இறக்கவும், 2024-ல் சரக்குகளுடன் சிப்பந்திகளையும் சேர்த்து அனுப்பவும், 2050 -க்குள் ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் காலனி உருவாக்கவும் தயாராகி வருகிறது. ஆக, வெறும் கோள் ஆய்வாகத் தொடங்கியது காலனியாக்கமாக மாறியது ஒரு நகை முரண். கரிம உமிழ்வு புவிவெப்பமாதல், பசுங்குடில் விளைவு, பருவநிலை மாற்றங்கள், மூன்றாவது உலகப் போர் ஆகியவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பணக்காரர் காலனி செவ்வாய்க் கோளில் உருவாகிவிடும். கூடவே கொத்தடிமைகளாக உழைக்க சிலரும் தேவைப்படுவர்.
ஒரு மில்லியன் குடியிருப்புகளை உருவாக்கத் தேவையான கட்டுமானப் பொருட்களை புவியில் இருந்து எடுத்துச் செய்வதற்குப் பெருஞ்செலவு செய்யவேண்டியிருக்கும். அது இயலாத காரியம். உள்ளூரில் கிடைக்கும் மண், ஜல்லிகளை கட்டுமானப் பொருட்களாக உபயோகித்துக் கட்டடம் எழுப்பும் தொழில் நுட்பம் அங்கே உருவாக வேண்டும். இதற்காக நாசா முப்பரிமாண அச்சு உறையுள் பரிசுப் போட்டியை (3-D printed Habitat Challenge) அறிவித்திருக்கிறது. இது செவ்வாயில் பாறைகளின் மீது இயற்கையாகப் படிந்துள்ள மண்ணடுக்குகளோடு (regolith) இணைப்பான்களைக் (binder ) கலந்து முப்பரிமாண அச்சுக்கு உகந்த பொருளைத் தயாரிக்கும் போட்டி. செவ்வாய்க் கோளில் கிடைக்கும் கந்தகத்தை மண்ணில் கலந்து கந்தக கான்க்ரீட் செய்யும் முறை ஆய்வில் உள்ளது. பாசி மட்டும் பூஞ்சைகளை வளர்த்துப் பயன்படுத்தும் தக்கவைக்கக்கூடிய (sustainable ) கட்டுமானப் பொருள் தொழில் நுட்பமும் ஆய்வில் இருக்கிறது.
இணைப்பிலுள்ள கட்டுரை சிட்டின் (chitin ) எனப்படும் அங்ககப் பாலிமரை (polymer) செவ்வாய்க் கோளின் மண்ணுடன் கலந்து நடைமுறைக்கு உகந்த கட்டுமானப் பொருளாக மாற்றலாம் என்கிறது. சிட்டின் என்னும் இப்பொருள் நண்டு, நத்தை, லோப்ஸ்டர் போன்றவற்றின் மேலோடுகளிலும் மீன் செதில்களிலும் பெருமளவில் காணப்படுகிறது .
இணைப்பு:
Chitin could be used to build tools and habitats on Mars, study finds