மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்த இயற்கைவளம் மிகுந்த நகரம் செங்கோட்டை. தமிழர்கள் மிகுந்து வாழும் இப்பகுதியானது, முற்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1956-இல் மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்படும் போது நடந்த தெற்கு எல்லைப் போராட்டத்தின் விளைவாக செங்கோட்டை தமிழ்நாட்டுடன் இணைந்தது. திருவிதாங்கூர் மற்றும் தமிழகத்தோடு இருந்த இருவேறு காலகட்டங்களிலும், செங்கோட்டையினுடைய அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்தில் ஆளுமை செலுத்தியவர்கள் “ஐந்து வீட்டுக் கரையாளர்கள்”. செங்கோட்டையைச் சேர்ந்த ஐந்து வீட்டுக் கரையாளர்களைப் பற்றியும் அக்குடும்பத்தின் மூலவராக விளங்கிய நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர் அவர்களுடைய வாழ்வு மற்றும் பணியினைக் குறித்தும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
கரையாளர்கள்
செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் யாதவகுலத்தைச் சார்ந்த ஒரு பிரிவினர் கரையாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். “கரையாளன்” எனும் சொல்லானது கிராமத்தில் அதிக செல்வங்களை வைத்திருக்கும் உரிமையாளரைக் குறிக்கும் என்று மிரோன் வின்சுலோ அகராதி விளக்கம் தருகின்றது. சென்னைப் பல்கலைக் கழக தமிழ் பேரகராதியில் கரை எனும் சொல்லுக்கு நன்செய் நிலம் அல்லது விளைநிலம் என்ற பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது அதிக எணிக்கையில் நிலங்களை வைத்து ஆளுகை செய்த யாதவகுலத்தின் ஒரு பிரிவினருக்கு “கரை ஆண்டவர்கள்” எனும் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கலாம். கரை ஆண்டவர்கள் எனும் பட்டமானது பின்னாட்களில் மருவி “கரையாளர்” என்று மருவியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. இக்கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக செங்கோட்டையைச் சுற்றி வாழும் கரையாளர் பிரிவினர் தங்களுடைய குலத்தொழிலான கால்நடை பராமரிப்போடு மட்டும் நில்லாமல் அதிக எணிக்கையிலான விளை நிலங்களுக்கு உரிமையாளர்களாகவும் விளங்குகின்றனர். இத்தகைய இனப்பிரிவில் தான் நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர் அவர்கள் தோன்றினார்.பிறப்பு:
நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர் அவர்கள் (சித்திரை – பூசம்) 10-04-1851-இல் நாராயணன் கசமுத்து கரையாளர் அவர்களின் ஒன்பது குழந்தைகளில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். நாராயணன் கசமுத்து கரையாளர் அவர்கள் வேலை நிமித்தமாக இலங்கை சென்ற காரணத்தினால், சட்டநாதன் அவர்கள் தன்னுடைய மூத்த சகோதிரியின் வீட்டில் வளர்ந்தார். குடும்பச் சூழ்நிலையின் காரணமாகக் கல்வி கற்க முடியாத நிலைக்கு உள்ளானார்.
தொழில்
பள்ளிக்கூடம் செல்லாதக் காரணத்தினால் இளம் வயதிலேயே நா. க. சட்டநாதன் அவர்கள் கூவிலை, செங்கல் மற்றும் சுண்ணாம்பு விற்பனை போன்ற சிறு தொழில்களில் ஈடுபடலானார். நிரந்தர வருமானம் கிடைப்பதற்காக வெள்ளையர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். வெள்ளைக்காரரின் அன்பயையும் நன்மதிப்பையும் சம்பாதித்ததின் காரணமாக, நா. க. சட்டநாதன் அவர்கள் தனியாக சிறுதொழில் தொடங்குவதற்கு வெள்ளையர் உதவி செய்தார். வெள்ளையர் செய்த உதவியின் காரணமாக, செங்கோட்டைக்கு அருகில் பொதிகைமலையில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு கூலி ஆட்களையும், மாளிகைப் பொருட்களையும் ஏற்பாடு செய்யும் சிறு ஒப்பந்தக்காராகச் செயல்பட்டார்.
குடும்பம்
நா. க. சட்டநாதன் அவர்கள் வியாபாரத்தில் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஆவுடையம்மாள் என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு ஐந்து ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன.
ஆண் குழந்தைகள்:
- நா.க.ச. முத்துசுவாமி கரையாளர்
- நா.க.ச. சுப்பிரமணியன் கரையாளர்
- நா.க.ச. வீரபத்திரன் கரையாளர்
- நா.க.ச. லெட்சுமணன் கரையாளர்
- நா.க.ச. கிருஷ்ணசாமி கரையாளர்
பெண் குழந்தைகள்:
- நா.க.ச. திருமலையம்மாள்
- நா.க.ச. ராமுத்தாய் அம்மாள்
நா. க. சட்டநாதன் அவர்களுக்கு திருமணத்திற்கு வெளியிலான உறவின் மூலம் அயனம்மாள் என்ற பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
தொழில் பெருக்கம்
நா. க. சட்டநாதன் அவர்கள் குறிக்கோளும் தொலைநோக்குச் சிந்தனையும் கொண்ட கடின உழைப்பாளி. இத்தகைய நற்பண்பின் காரணமாக அவர் தொடங்கிய தொழில்கள் அனைத்தும் அபார வளர்ச்சியடைந்து லாபத்தை ஈட்டியது. நா. க. சட்டநாதன் அவர்கள் தொழில் முன்னேறிக்கொண்டிருந்த க் காலக்கட்டத்தில் செங்கோட்டை பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த திருவனந்தபுரம் சமஸ்தான மன்னரான ஸ்ரீ மூலம் திருநாள் ராம வர்மாவினுடைய “சாரட்” வண்டி ஓட்டுநரின் வழியாக நா. க. சட்டநாதன் அவர்களுக்கு மன்னருடைய அறிமுகம் ஆதரவும் கிடைத்தது. இதன் பயனாக நா. க. சட்டநாதன் அவர்கள் அரசு ஒப்பந்ததாராக மாறினார். தொழிலின் மூலம் ஈட்டிய செல்வத்தைக் கொண்டு பல ஏக்கரில் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை வாங்கினார். ஆரியங்காவு கோவிலைச் சுற்றியுள்ள தனியார் நிலங்கள் பெரும்பாலும் இவர் வசமே இருந்தன. ஆலப்புழை, நாகர்கோவில் மற்றும் தாமரைக்குளம் போன்ற பகுதிகளில் உப்பளங்களை வாங்கி உப்பு வியாபாரத்திலும் ஈடுபட்டார். மழைக்காலங்களில் நன்செய், தென்னை மற்றும் வாழைத் தோப்புகளின் மூலமாக பணவரவும், வெயில்காலங்களில் உப்பளம் மூலம் வருமானமும் கிடைக்கப்பெற்றதன் வாயிலாக செங்கோட்டையில் மிகவும் செல்வாக்கு மிகுந்த மனிதராக மாறினார்.
சமூகப் பங்களிப்பு:
நா. க. சட்டநாதன் அவர்கள் சாதாரண நிலையிலிருந்து தன்னுடைய கடின உழைப்பின் மூலம் மிகப் பெரும் செல்வந்தர் எனும் இடத்தை அடைந்த காரணத்தினால், இயல்பாகவே எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பாங்கு அவருக்கு இருந்தது. இதன் வெளிப்பாடாக செங்கோட்டையில் ஏழை எளிய மக்கள் மற்றும் பயணிகள் தங்கி உணவருந்த இலவச அன்னதான சத்திரத்தைக் கட்டினார். இதில் நாள்தோறும் ஏழை எளியவர்கள் ஒருவேளை உணவருந்துவதற்காக ஒரு அறக்கட்டளையையும் ஏற்படுத்தினார். செங்கோட்டையில் அமைந்ததுள்ள பள்ளிக்கூடத்திற்கு நன்கொடைகள் பல வழங்கினார். மேலும் செங்கோட்டைக்கு அருகில் பண்பொழி (பைம் பொழில்) எனும் கிராமத்தில் சிறு குன்றின் மேல் அமைந்துள்ள சுந்தரரால் பாடப்பெற்ற தேவார வைப்புத் தலமான திருமலை முத்துக்குமாரசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அவர் பிறந்தநாளான சித்திரை பூசம் அன்று பக்தர்களுக்கெல்லாம் அன்னதானம் வழங்கும் பொருட்டு நிலங்களை தானமாக வழங்கினார்.
கரையாளர் கட்டிய அன்ன சத்திரம் (இன்றைய நிலை)
கரையாளரின் கல்வி சேவை:
நா. க. சட்டநாதன் கரையாளர் அவர்கள் தன்னுடைய சொந்த நிலத்தை செங்கோட்டையில் பள்ளி வருவதற்கு தானமாக வழங்கினார். அதுமட்டுமின்றி அதில் வகுப்பறைகள் கட்ட தாராளமாக நிதி உதவியும் செய்தார். ஆரம்பத்தில் நடுநிலைப் பள்ளியாக மட்டுமே செயல்பட்டுவந்த இப்பள்ளியானது நா. க. சட்டநாதன் கரையாளர் அவர்களுடைய இரண்டாவது மகனான நா.க.ச. சுப்பிரமணியன் கரையாளர் அவர்கள் அளித்த நிதியின் காரணமாக உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஐந்து வீட்டுக் கரையாளர்கள்
செங்கோட்டையின் அரசியல், கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நா. க. சட்டநாதன் கரையாளர் அவருடைய ஐந்து புதல்வர்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுகளும் பெரும் பங்களிப்புச் செய்தனர். நா. க. சட்டநாதன் கரையாளருடைய ஐந்து புதல்வர்களும் தனித்தனியே பெரிய வீடுகளில் வசித்த காரணத்தினால் அவர்களை மக்கள் “ஐந்து வீட்டுக் கரையாளர்கள்” என்றே அழைத்தனர். கரையாளர் குடும்பத்தினர் தேசத்திற்கும், செங்கோட்டைக்கும் ஆற்றிய சேவைகள் மற்றும் நற்பணிகள்:
- நா.க.ச. முத்துசுவாமி கரையாளர் அவர்கள் நா. க. சட்டநாதன் கரையாளரின் முதல் மகன் ஆவார். இவர் செங்கோட்டை நகரசபைத் தலைவராகவும் மிட்டாதாரராகவும் பணியாற்றினார். மேலும் செங்கோட்டை நகரசபை அந்தஸ்தை அடைவதற்கும், அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதற்கும் உழைத்தார். இவருடைய மகன் மு. சுப்பிரமணியன் (M.S.) கரையாளர் அவர்கள் தமிழக மேலவை உறுப்பினராக (1956–1957) பணியாற்றினார். இதுதவிர 1956-இல் நடைபெற்ற தமிழக எல்லைப் போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு செங்கோட்டை தமிழகத்தோடு இணைய பாடுபட்டார். மு. சுப்பிரமணியன் (M.S.) கரையாளர் அவர்களின் மகனான மு.சு. முத்துசுவாமி கரையாளர் அவர்கள் 1952-இல் தமிழக சட்டமன்றத்தின் மேல்சபை உறுப்பினராகக் காங்கிரஸ் கட்சியால் தேர்வுசெய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவராகவும், 1962-லிருந்து செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
- நா.க.ச. சுப்பிரமணியன் கரையாளர் அவர்கள் நா. க. சட்டநாதன் கரையாளரின் இரண்டாவது மகன் ஆவார். இவர் B.A. படித்திருந்த காரணத்தினால் “B.A. கரையாளர்” என்றும் அழைக்கப்பட்டார். 1917-இல் செங்கோட்டையில் உயர்நிலைப் பள்ளி எதுவும் இல்லாதிருந்தது. இந்தசூழ்நிலையில் மறைந்த தன் தந்தையின் நினைவாகவும் திருவனந்தபுரம் மகாராஜா ஸ்ரீ மூலம் திருநாளின் 60-வது பிறந்ததினத்தை (ஷஷ்டியப்த பூர்த்தி) முன்னிட்டும் செங்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக 25,000 ரூபாயை நன்கொடையாக வழங்க விரும்புவதாக ஸ்ரீ மூலம் திருநாளினுடைய அரசவையில் தெரிவித்தார். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்னர் ஜூன் 1918-முதல் செங்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த உத்தரவிட்டார். அதுமுதல் செங்கோட்டை அரசுப் பள்ளியானது “ஸ்ரீ மூலம் ஷஷ்டியப்த பூர்த்தி சட்டநாத கரையாளர் உயர்நிலைப் பள்ளி” என்று அழைக்கப்பட்டது. தற்சமயம் இது மேல்நிலைப் பள்ளியாக செயல்படுகிறது. நா.க.ச. சுப்பிரமணியன் கரையாளருடைய மகன் சு. சட்டநாதன் (S.C.) கரையாளர், சட்டம் (M.A.B.L.) படித்தவர். இவர் ஸ்ரீ மூலம் திருநாள் அரசவையில் “டெபுடி ப்ரெசிடெண்ட்” ஆக பதவிவகித்தார். செங்கோட்டையிலிருந்து சாம்பவர் வடகரை எனும் பகுதிவரை மின்சாரம் வழங்கும் உரிமத்தை அரசிடம் பெற்று அப்பகுதிகளுக்கு மின்சாரவசதி கிடைக்க வழிவகை செய்தார். பலராம வர்மா எனும் பெயரில் நூற்பாலை ஒன்றை செங்கோட்டையில் கொண்டுவந்தார். ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கியின் தொடக்க நிறுவனமான “திருவனந்தபுரம் வங்கி” உருவாக்கத்தில் பெரும்பங்காற்றினார். திருவனந்தபுரம் மன்னரான சித்திரைத் திருநாள் பலராம வர்மா அவர்கள் சு. சட்டநாதன் கரையாளரின் சேவைகளைப் பாராட்டி “ராஜசேவா நிரத” எனும் பட்டத்தை வழங்கினார். கேரள சட்டசபையின் மூலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். பாரத ஸ்டேட் வங்கியின் இயக்குனராகவும் சிலகாலம் பணியாற்றினார்.
- நா.க.ச. லெட்சுமணன் கரையாளர் அவர்களின் மகனான லெ. சட்டநாதன் (L.S.) கரையாளர் அவர்கள் 25-01-1910-இல் பிறந்தார். சட்டம் பயின்ற இவர் காந்தியின் தலைமையை ஏற்று இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி, காலை பத்தரை மணிக்கு சங்கரன் கோவிலில் வெள்ளையருக்கு எதிராக அறவழியிலான போராட்டத்தை முன்னெடுத்தார். இதன்காரணமாக 14-12-1940 முதல் 23-05-1941 வரை வேலூர் மற்றும் திருச்சி ஆகிய சிறைகளில் ஐந்துமாதகால கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார். தன்னுடைய சிறை அனுபவங்களை “1941 – திருச்சி சிறை” எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்ட காலத்தில் பாராளுமன்ற செயலாளராகப் பணியாற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றினார். பத்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், ஆறு ஆண்டுகள் மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
- நா.க.ச. கிருஷ்ணசாமி கரையாளர் (1895–1970) அவர்கள் நா. க. சட்டநாதன் கரையாளரின் ஐந்தாவது மகன் ஆவார். இவர் செங்கோட்டை நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார். இவருடைய மகன் கி. சட்டநாதன் (K.S.) கரையாளர் (1921–2001) அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். 1971 முதல் 1976 வரை செங்கோட்டை நகரசபை தலைவராகப் பதவிவகித்தார். கேரள சட்டமன்றத்திற்கு இருமுறையும் தமிழக சட்டமன்றத்திற்கு மூன்று முறையும் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றினார். இந்திய-ரஷ்ய நடப்புறவுக் கழகத்தின் தலைவராகச் செயல்பட்டார். பொதுவுடமைச் சித்தாந்தத்தில் பற்றுக்கொண்ட கி. சட்டநாதன் கரையாளர் அவர்கள் மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளராகப் பணியாற்றினார்.
A.N. சட்டநாதன்
நா. க. சட்டநாதன் கரையாளரின் மகளான அயனம்மாள் பாவூரைச் சார்ந்த ஆறுமுக நாயக்கர் என்பவரை மணந்தார். இத்தம்பதியர்க்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர் A.N. சட்டநாதன். A.N. சட்டநாதன் அவர்கள் 1926-இல் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் M.A. பட்டம் பெற்றார். அதன்பின்பு 1928-இல் சுப்பீரியர் சிவில் சர்விஸ் தேர்வில் வென்று சுங்கம் மற்றும் ஆயத்தீர்வை துறையில் பணியாற்றினார். 1947-க்கு பின் புதிதாக உருவான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சுங்கம் மற்றும் கலால் எல்லைகளை வகுத்தார். 1950, 51-இல் ஐ.நா. சபையின் போதைப்பொருள் ஆணையத்துக்கான இந்தியக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். 1956-இல் பணியிலிருந்து விருப்ப ஓய்வுப் பெற்றபின் 1969-இல் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் அமைக்கப்பட்ட முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (சட்டநாதன் கமிஷன்) தலைவராக ஊதியம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் பணியாற்றினார். இவர் 1970-இல் இவர் அரசுக்கு தாக்கல் செய்த “சட்டநாதன் கமிஷனின்” அறிக்கை சமூகநீதி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது.
இவ்வாறு நா. க. சட்டநாதன் கரையாளர் மற்றும் அவருடைய வாரிசுகள் இந்நாட்டிற்கும் செங்கோட்டைக்கும் ஆற்றிய தொண்டுகள் ஏராளம். இத்தகைய செயற்கரிய அரும்பணிகள் மூலம் செங்கோட்டையின் சிற்பிகளாகவும் முக்கிய ஆளுமைகளாவும் கரையாளர் குடும்பத்தினர் விளங்குகின்றனர் என்பதில் ஐயமில்லை.
செங்கோட்டை அரசுப் பள்ளியின் பெயர்ப் பலகை
மரணம்
நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர் அவர்கள் உடல்நலிவின் காரணமாக 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இயற்கை எய்தினார். அவருடைய உடல் சகல மரியாதையுடன் அவருக்குச் சொந்தமான நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருடைய நினைவுதினம் பள்ளி புரவலர் தினமாக 1918-இல் இருந்து அனுசரிக்கப்பட்டு வந்தது, அன்றையதினம் நா. க. சட்டநாதன் கரையாளரின் திருவுருவப் படமானது செங்கோட்டையின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதியில் பள்ளியை வந்தடையும். மேலும் புரவலரை நினைவு கூறும் விதமாக பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்படும். காலப்போக்கில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுவது முற்றிலுமாக நின்றுபோனது, வருத்தத்திற்குரியதாகும்.
முடிவுரை
நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர் மற்றும் அவருடைய நேரடி வாரிசுகளான ஐந்து வீட்டுக் கரையாளர்கள் மற்றும் A.N. சட்டநாதன் போன்றவர்களைப் பற்றிய வரலாற்று தகவல்கள், செங்கோட்டையைச் சார்ந்த பெரும்பான்மையான மாணவர்கள் மற்றும் இளம்தலைமுறையினரால் அறிந்து கொள்ளப்படாமலேயே இருக்கின்றது. இக்கட்டுரையின் வாயிலாக, கடுமையான உழைப்பும், கல்வியும் தனிமனிதர்களை சாதனையாளர்களாக மற்றும் என்ற கருத்தினை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளலாம்.
குறிப்புகள்
- மிரோன் வின்சுலோவின் தமிழ் – ஆங்கில அகராதி (2004). ஏசியன் எடுகேஷனல் சர்வீஸ், நியூ டெல்லி. பக்கம்: 253.
- ச.சி. செல்லம் (2010). யாதவர் களஞ்சியம் (தொகுப்பு நூல்). பதிப்பாசிரியர்: மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. பக்கங்கள்: 122-130 & 476.
- A.N. சட்டநாதன் (2010). ஒரு சூத்திரனின் கதை. பதிப்பாசிரியர்: உத்தரா நடராஜன். காலச்சுவடு பதிப்பகம், பக்கங்கள்: 30-34, 94, 104, 105, 121, 247 & 248.
- மு. சுப்ரமணியன் கரையாளர் (1956). சென்னை-செங்கோட்டை இணைப்பு விழா (சிறு புத்தகம்).
- தா. மாணிக்கவாசகம் பிள்ளை (1938). நா.க.ச. முத்துசுவாமி கரையாளர் – புகழ் மொழி மாலை. பதிப்பகம்: டாஸ் அச்சாபீஸ், நகர்கோவில்.
- திரு M. சுப்பிரமணியன் கரையாளர் மற்றும் திருமதி ராஜசரஸ்வதி (முன்னாள் நகர்மன்றத் தலைவி – செங்கோட்டை) தம்பதியரிடம் 30-04-2015-இல் கண்ட நேர்காணலின் வழியாக நான் சேகரித்த தகவல்கள்.
***
Sri Ram Nallamani Arts and Science College located at Tenkasi was believed to have been under this great family of Karayalars. Hence it was called as Karayalar’s College till the 1990s. Is it true? Later only the college was changed to the present name. Please, comment.