சிசு

நோக்கும்
அத்தனை விழிகளும்
என் முகத்தில்
பிதுங்கித் தவழும்
சிசுவை
அக்கணமே
வாசித்துவிடுகின்றன
அடுத்த கணம்
சாக்லெட்டின்
இனிக்கும் சரசர ஓசையோடு
உறை பிரித்து
கொலை வாளை
உருவி எடுக்கிறார்கள்
பால் ததும்பும்
புன்னகையோடு
அவர்கள் மடியேறிய
என் சிசு
இளங்குருத்து கழுத்தை
எம்பித் தருகிறது
ஒரு கணம்
அதிர்ந்த விழிகளை
இமைமூடி
சுயம் மீள்கின்றனர்
நாணம் உதிர்த்த வாள்
உதிரம் ஊறியெழ
சிசுவைக் கனி கொய்கிறது
செம்பொன் மேனி
பொலிய பொலிய
குறுநகை குமிழி
வானிறங்கி வரும்
அடுத்த சிசு
என் முகத்தில்
துள்ளி ஏறி அமர்கிறது
அப்போது
அப்போது
அந்த கணங்களில்
எப்படி இருந்திருக்க வேண்டுமோ
அப்படி இருந்திருக்கவில்லை
நான்
என்பதால் தான்
அப்போது
எப்படி இருந்திருக்க கூடாதோ
அப்படி இருந்துவிட்டாய்
அல்லவா நீ?
உண்மையைச்
சொல்வதென்றால்
அப்படி இருந்திருக்க
அறிந்திருக்கவில்லை நான்
அப்போது மட்டுமல்ல
இப்போதும் கூட
ஆனால் ஆச்சரியம்
இப்போது
எப்படி இருக்க வேண்டுமோ
அப்படித்தான் இருக்கிறது
நம் அத்தனை பேரையும்
கொன்று தின்று
ஏப்பம் விட்டு
கொழுத்திருக்கும்
இந்த இரவு
கொஞ்சம்
நெட்டி யோசித்தால் தெளிவது
எப்போதும்
எப்படி இருக்க வேண்டுமோ
அப்படித்தான் இருக்கிறது
அத்தனையும்
அதனால் என்ன?
வளையாத வானத்தில்
ஒரு வளைந்த வானவில்லும்
வளைந்த வில்லில்
ஒரு வளையாத அம்பும்
அத்தனை ஆச்சரியம்
ஒன்றுமில்லை காண்!
நெடும் பயணி

முற்றத்தில் ஒருங்கி
நின்றிருக்கிறது
கல்தேரும்
மண் குதிரைகளும்
சரி அதனால் என்ன?
போய்ச் சேர்ந்தாக வேண்டுமே
ரதமூரும் தடங்களும்
பச்சை மாமிசமாய்
கனிந்திருக்கிறது
தேர் நுகத்தில்
இழுத்து வந்து
குதிரைகளைப் புகுத்து
அது போதும்
அதன் பிறகு
அங்கே உனக்கேதும்
வேலையில்லை
யாருமறியாது
இரவெலாம்
ஊர் சுற்றிவிட்டு
ஒழுங்கு பிள்ளைகளாய்
புலரியில் ஓடி வந்து
அமர்ந்து கொள்ளும்
அந்த குன்றுகளின்
கள்ளச் சிரிப்பை
செவி கொள்ளாது
சாட்டை சொடுக்கு
சரியும் அந்தியிலிருந்து
கொடி படர்ந்தெழும்
புலரிவரையிலுமான
ஒளிவருட தூரங்கள்
தேர்காலில் நசுங்குகின்றன.
குரல்
அறுந்த தலை
நிலம் தொட
உதிர்கிறது
எழுந்த குருதி
மணம் கமழ
பூக்கிறது
எரிந்த விழி
அனல் அணைந்து
மரிக்கிறது
சரிந்த உடல்
மண் அளந்து
ஓய்கிறது
கனிந்த கொலைவாள்
தியானத்தில்
அமர்கிறது
ஓயாத
வால்நுனி மட்டும்
இன்னும்
துள்ளித் துடித்து
என்ன பேசுகிறது?
செம்புழுதியின்
பொன்னேட்டில்
துள்ளி துள்ளி
எதை எழுதுகிறது?
இத்தனை விரிந்த
இந்த உலகத்திடம்
எதைக் கேட்டு
சொடுக்கி எழுகிறது?
நித்தியானுபவ

மண்ணுறைந்து
போனவர்களைத்
தொட்டெழுப்பி
மீட்டுத்தரும்
மாயனொருவன்
வந்து சேர்ந்தான்
அவ்வீதிக்கு
வீட்டிற்கு
ஒருவரை மாத்திரம்
மீட்டெழுப்பிக் கொள்ளலாம்
என்று உறுதி சொன்னான்
ஒவ்வொரு வீட்டின்
சுவர்களுக்கு உள்ளிருந்தும்
கூரைகளுக்கு உள்ளிருந்தும்
கதவு கைப்பிடிகளுக்கு உள்ளிருந்தும்
அடுப்படிகளுக்கு உள்ளிருந்தும்
அரிசி குதிர்களுக்கு உள்ளிருந்தும்
சாக்கடைகளுக்கு உள்ளிருந்தும்
ஆயிரமாயிரம் கைகள்
தங்களைத் திறக்கச் சொல்லி
தட்டியபடி அதிர்கிறது
அவ்வீதி
எழுபவர் எவருமே
மீளவும் இறக்கவே இயலாது
எப்போதும்
என்ற நிபந்தனையை
மென்குரலில்
நிதானமாய் அறிவிக்கிறான்
மாயன்
அக்கணமே
தியானத்தின்
நிசப்தத்தில்
சுருண்டு கொள்கிறது
அவ்வீதி
நர்த்தகி
கோடி பவுர்ணமிகளை
மிதித்துத் தாண்டி வரும்
உன் மழலையின்
அதே கூர் கொண்டு
இரண்டென நெடுக்காய்
எனை வகுந்துருக்கு
தாழ்திறவா இமைகளை
சரசரவென உரித்தெடுத்து
எல்லோரும் பார்த்திருக்கவே
என் ஒரு விழியின் கருமணியில்
வந்தமர்
சதங்கைப் பரல் மணிகள்
துள்ளி துடிக்க
சிறுதடம் பதியாது
என் நிலமெங்கும் நடந்து
எனையா அளக்கிறாய்?
சரி அளந்து முடி
அதற்குள்
மறுவிழியும்
நுதல்விழியும்
கனிந்து
காம்புதிர்கிறது
பொன் பொலியும்
கிழக்குவாசல் கோபுர கலசத்தில்
மென்சிறகு விரிந்தெழ
சிறுமணி விழிகள் உருள
கருஞ்சாம்பல் புறாவாகி
ஓயாது உனை
பார்த்திருப்பேன் தேவி
இனிய கவிதைகள். வாழ்த்துகள்