எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல்

ப. சகதேவன்

கிரேக்க நாகரிகத்திற்கு அடையாளமாக ஏதென்ஸ் நகரத்தையும், ரோமானிய நாகரிகத்திற்கு ரோம் நகரத்தையும் சொல்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு அடையாளமாக மொஹஞ்சாதாரோ, ஹாரப்பா என்னும் இரண்டு நகரங்களும் சொல்லப்படுகின்றன. ஏதென்சும், ரோமும் இன்னும் இருக்கின்றன. சிந்து வெளி நாகரிகம் இருந்தது என்று சொல்வதற்கு ஸ்தூலமான சில அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. திராவிட நாகரிகம் என்று சொல்வதற்கு   மதுரை இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. கட்டிடங்களும், புழங்கு பொருள்களும் தான் நாகரிகம் என்று பொருள்படுத்திக் கொண்டால் இவையெல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஆனால் கட்டிடங்களும், புழங்குபொருள்களும் தான் நாகரிகமா? நாகரிகத்திற்கும் (Civilization) பண்பாட்டிற்கும் (Culture) என்ன வேறுபாடு? இது குறித்து ஒருமித்த கருத்து இல்லை. இதுவரை நாகரிகம் என்று பொருள் கொண்டவற்றில் முதன்மையாகக்  குறிப்பிட்டுச் சொல்லுகிறபடியாக  இசை இருந்திருக்கவில்லை.  மனிதனின் நுண்ணுணர்வின் வெளிப்பாடாக இருந்த அது நாகரிகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும் ஒரு தனி மனிதனின் அழகியல் தேட்டத்தையும், ஆன்மீக அனுபவத்தையும் வெளிப்படுத்துவதாகவே இருந்து வந்திருக்கிறது. இயல்பாக அமைந்த திறமையினாலும், கடும் பயிற்சியினாலும் இது செம்மையடைகிறது

கட்டிடம் என்பது முதலில் மனிதன் மனதில் சிந்தனையாக உதித்தது. பிறகு அது வடிவமாக உருவெடுத்தது. அதற்கு வெவ்வேறு நாகரிகங்கள் வெவ்வேறு வடிவங்களைக் கொடுத்தன. கோயில், மசூதி, மாதாகோயில் என்பவை வெவ்வேறு வகையான கட்டிடப்பாணிகளைக் கொண்டவை.  அதைப்போல இசை என்பது ஆதிகாலத்திலிருந்தே மனிதனின் மனத்தில் உதித்து மொழி, இன அடிப்படையில் வேறுபாடுகள் கொண்டு வெளிப்பட்டது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான சில குணாம்சங்கள் இருந்தாலும்  இந்துஸ்தானி சங்கீதம் என்பது  வட இந்தியாவுக்கானதாகவும், கர்நாடக சங்கீதம் என்பது தென்னிந்தியாவுக் கானதாகவும் ஆகிப்போயிருக்கிறது. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் (என்னைப்போல) இந்துஸ்தானி சங்கீதத்தை ரசிப்பவர்களும் உண்டு. ஒவ்வொரு நாகரிகத்திற்குள்ளும் இசை தன்னதேயான அடையாளத்தையும், பாதிப்பையும் உண்டு பண்ணிக் கொள்கிறது. அந்த அடையாளம் இசைக்கலைஞர்களின் குரல் மூலமாக வெளிப்படுகிறது. அப்படி ஒரு காலகட்டத்திய நாகரிகத்தின், பண்பாட்டின் வெளிப்பாடாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலை அடையாளம் காணலாம்.

எஸ்.பி.பி.யின் குரல் தமிழ்ச் சங்கீத உலகத்திற்குப் புதியதாக இருந்தது. கிட்டப்பா-சின்னப்பா-பாகவதர் காலம்  சாஸ்த்ரீய சங்கீதம் கோலோச்சும் காலமாக இருந்தது. பிறகு வந்தவர்களில் டி.எம்.எஸ். பாசத்தையும், தத்துவத்தையும் பொழிந்தார். அவரது காதலும் ஒரு குறிப்பிட்ட ஸ்தாயியிலிருந்து கீழே இறங்கி வரவில்லை. சீர்காழி கீழ்த்தட்டு மக்களின் ஆவேசமான பக்தியின் குரலாக இருந்தார். பி.பி.ஸ்ரீனிவாசால் காதல் தோல்வியிலேயே தொய்ந்து போனார். ஏ.எம்.ராஜாவுடையது பெண்மையின் ஓரத்திலிருக்கும் குரலாக இருந்தது.  எஸ்.பி.பி.யின் குரல் இவையெல்லாம் கலந்த குரலாக இருந்தது. அவர் அறிமுகமான காலமும் மேற்குறிப்பிட்ட எல்லா உணர்வுகளும் வெகுசனப் புழக்கத்திலிருந்த காலமாக இருந்தது. சினிமாவின் பரவலான  தாக்கம் இதற்கு முக்கியக்காரணம்.

‘நான் சங்கீதத்தை முறையாகப் படிக்கவில்லை’ என்பது எஸ்.பி.பி.யின் பணிவின் அடையாளமாக மட்டுமல்லாமல் சங்கீதத்தை இலக்கணமாகப் பார்க்காதவர்களின் பிரகடனமாகவும் வெளிப்பட்டது. ஒரு கலை வடிவத்தை இலக்கணத்துக்குள் அடைக்கக் கூடாது என்பதற்குக் காரணம் இலக்கணத்துக்குள் அடைக்கப்படும்போது  அதன் படைப்பாற்றலின் சக்தி குறைபட்டுப் போகக்கூடும்  என்பது தான்.  அது ஒரு சிறு குழுவுக்குள் சிக்கிக்கொள்கிறது என்பதுவும் ஒரு காரணம். கர்நாடக சங்கீத வித்தகர் பாலமுரளிகிருஷ்ணா ‘சங்கராபரணம்’  படத்தை மிகவும் விமரிசித்தார். அவர் விரும்பியபடி (பவித்திரமான சங்கீத வடிவத்தில்) படத்தை எடுத்திருந்தால் இத்தனை ஜனங்கள் அதை ரசித்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். எவ்வளவு தான் கடுமையாக முயற்சித்தாலும் டி.எம். கிருஷ்ணாவால் இன்னும் கர்நாடக சங்கீதத்தை மயிலாப்பூரிலிருந்து விடுவிக்க முடியவில்லை தானே! 

ஆனால் எஸ்.பி.பி விடுவித்தார். சாஸ்திரீய சங்கீதத்தை எளிமைப்படுத்தி நம் பக்கத்த்தில் வருமாறு செய்தார். சமஸ்கிருதம் அப்படி ஒன்றும் நமக்கு அந்நியமான மொழி அல்ல என்று காண்பித்தார். ’சங்கராபரணம்’ படத்தில் தாசி துளசியின் மகன் அவனது குரு சங்கர சாஸ்திரிகள் தூங்குவதற்காக சதாசிவ பிரமேந்திரரின்ம ‘மானச சஞ்சரரே..’ என்னும் பாட்டைப் பாடுகிறான்

ப்ரம்மத்தை நாடிப்போ மனமே!
பிரம்மத்தை நாடிப்போ..
மயில்பீலி புனைந்த அவன் கேசம் பார்
மலர் மொக்கு விளங்கும் அவன் கன்னம் சேர்

என்று பாடிவிட்டு ஸ்ரீரமணீகுஜ என்று தொடங்கும் அடுத்த வரியில் தடுமாறும்போது

ஸ்ரீரமணீகுஜ துர்க விஹாரே
சேவக ஜன மந்திர மந்தாரே
(திருமகளின் நெஞ்சத்தில் வீற்றிருப்பவனே!
அடியார்கள் மனம் கொண்ட கல்ப தருவே!)

என்று சாஸ்திரிகள் எடுத்துக் கொடுப்பார். வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடலில் மேற்கண்ட  இரண்டு வரிகளை மட்டுமே எஸ்.பி.பி. பாடியிருப்பார்.  மிகக் குறைந்த (இந்திய) வாத்தியக் கருவிகளோடு பாடப்பட்ட இந்தப் பாடலில் எஸ்.பி.பி.யின் இரண்டு வரிகள் கடவுளோடு நேரடியாகப் பேசுவது போல இருக்கும். இது ஒரு எல்லை என்றால் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் எந்த விதமான பின்னணி இசையும் இல்லாமல் பாடிய பாரதியின் தீர்த்தக்கரையினிலே.. பாடல் இன்னொரு எல்லையைத் தொட்டது. எல்லா பேதங்களையும் தாண்டிய அன்பின் பிரவாகம் மொழி வழியாக, தகுந்த குரல் வழியாக வெளிப்பட்டு இந்தப் பிரபஞ்சத்தில் கலக்கிறது. பாரதி இருந்திருந்தால் ‘சபாஷ் பாண்டியா’ என்று எஸ்.பி.பி. யைத் தட்டிக் கொடுத்திருப்பார்

’கானயோகி பஞ்சாட்சர கவாயி’ என்னும் கன்னடப்படத்தில் படத்தில் இந்துஸ்தானி சங்கீதத்தில்  எஸ்.பி.பி. பாடிய 

உமண்டு குமண்டு கண கஜரே பதர
காரே காரே அதஹி தருவ

என்னும் பாடல் தான் அவர் பாடிய பாடல்களிலேயே மிகக்கடினமான பாடலாக இருந்திருக்க வேண்டும். அந்த வருடத்திய சிறந்த பாடகருக்கான பரிசையும் அந்தப் பாடல் அவருக்குப் பெற்றுத்தந்தது.  ‘சங்கராபரணத்தி’லிருந்தும், ‘கானயோகி பஞ்சாட்சர கவாயி’லிருந்தும்  ’கரகாட்டக்கார’னிடம் எஸ்.பி.பி. யால் மிகச்சுலபமாக வர முடிந்தது. இப்படிப்பட்டவருக்கு ரஜனிகாந்த் படத்துக்கு அறிமுகப்பாடல் பாடுவது எப்படிக் கஷ்டமாக இருக்கும்?   ஊதியம் மட்டுமே இதற்குக் காரணமாக இருக்காது. ரஜனிகாந்த் மேஜிக்குக்கு உருவம் கொடுக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்றும் அவர் நினைத்திருக்கலாம்.

இந்த இணைந்து போகும் தன்மை, கலந்து போகும் பண்பு  கலையுலகில் மட்டுமல்லாமல் அவரது தனிப்பட்ட வாழ்விலும் இருந்தது. இந்திய சூழ்நிலையில் இது மிகவும் அபூர்வமானது. நூற்றாண்டுகளாக நிகழாதது. மிகவும் உணர்ச்சி வசப்படும் தமிழர்கள் தங்கள் இரு கைகளால் அவரை அரவணைத்துக் கொள்ளவும் இது தான் காரணமாக இருக்கும். எல்லாக் கலைவடிவங்களையும் போல சங்கீதமும் சத்தியத்தைத் தேடும் முயற்சி தான். சத்தியத்தைத்தேடும் எந்தக் கலஞனுக்கும் அடிப்படையாகத் தேவையானது நேர்மை. வெளிப்படைத்தன்மை. ’நான் ஒரு சோஷியல் ட்ரிங்கர்’ என்று வெளிப்படையாகச் சொன்ன அவரால்  சுலபமாக மொழிகளைத் தாண்டி வர முடிந்தது. ‘இசை தான் எனது மொழி’ என்று அவர் தன்னை நிரூபித்துக் கொண்ட பிறகு மனிதர்களில் பிரிவினை உண்டாக்கக் கூடிய எந்த எதிர்க்குரலும் அவரை நோக்கி எழவில்லை. 

தொழில் ரீதியாகப் பார்த்தால் எஸ்.பி.பி. ஒரு சினிமாப்பாடகர் என்று தான் நிறுத்தப்படுவார். அவரது எல்லா சாதனைகளும் அதற்குட்பட்டவைதான்.   சினிமாவும், சினிமாவுக்குள்ளே வரும் பாட்டும் இந்திய நாகரிகம் அல்லது பண்பாட்டின்  பகுதிகளாக மாறிப்போய் விட்டன. இதற்கு முதற்காரணம் எல்லா வகையான ரசனையும் கொண்ட ஒரு பெரும் ஜனத்திரள் நமக்குள் உருவானது தான்.  நமது பாரம்பரியமும், நாகரிகமும், பண்பாடும் பரிசீலனை செய்யப்படும்போது இவர்களது ரசனையையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இவர்களை மகிழ்விப்பதும், கிளுகிளுப்பூட்டுவதும், லேசாக அழ வைப்பதும் தவிர இவர்களுக்கு நினைவுறுத்துவது, அறிவுறுத்துவது, இவர்களை ஆற்றுப்படுத்துவது என்று எல்லாப் பணிகளையும் செய்தவர்கள் மிகச் சிலரே. இந்தச் சிலர் அரசியல், சினிமா, இலக்கியம் என்று பல துறைகளிலும் இருக்கிறார்கள்.  சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் எஸ்.பி.பி.  தமிழரின் ஆதிகாலச் சரித்திரத்திலிருந்து  துருவமாக இருந்த சில கலாசார அம்சங்களை அண்மைப்படுத்தியவர். எஸ்.பி.பி. அவர் எடுத்துக் கொண்டது சினிமாக்களம். சினிமாவில் சங்கீதம். அதில் இவருக்கு முன்னால் முன்னத்தி ஏர் பிடித்தவர் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். இருவருக்குமுள்ள ஒற்றுமை இருவரின் தந்தையரும் ஹரிகதையோடு தொடர்புடையவர்கள். வேற்றுமை, மகாதேவன் தமிழ்க் கலை வரலாற்றின் தொடர்ச்சியில் ஒரு கண்ணியாக இருந்தவர். சென்னை பால கந்தர்வ சபாவில் தனது கலைவாழ்க்கையை நடிகராகவும், பாடகராகவும் தொடங்கியவர். இயக்குநர் ஏ.பி.நாகராஜனோடு இணைந்து இவர் பெரும் கலாச்சார மாற்றத்தை நிகழ்த்தினார். திராவிட இயக்கம் தமிழர்களின் கலை வரலாற்றை, பண்பாட்டு வரலாற்றை ஒற்றைத்தன்மை உடையதாக, மொண்ணையானதாக மாற்ற முயற்சி செய்த போது அதை எதிர்கொண்டு அது அப்படி இல்லை.. அது வளமானது என்று இருவரும் நிரூபித்தார்கள். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், தில்லானா மோகனாம்பாள் முதலிய  தொன்மங்கள், இலக்கியங்கள், புராணங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஏ.பி. நாகராஜனின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் மகாதேவன்.  இப்படங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்ற அதே காலகட்டத்தில் வெளிவந்தவை. குறைகளிருந்தாலும் நமது மரபை முற்றாக நாம் நிராகரிக்கலாகாது என்று சொன்னவை. மிருதங்கம், தபலா, வீணை, புல்லாங்குழல், மேளம், நாதஸ்வரம் என்னும் நமது மரபான இசைக்கருவிகள் சினிமாவுக்கு அந்நியமானவை அல்ல என்று நிரூபித்தவர் மகாதேவன்.

மகாதேவனுக்கு இருந்த சவுகரியங்கள் ஏதும் எஸ்.பி.பி.க்கு வாய்க்கவில்லை. இன்னுமொரு சங்கடம் அவர் தமிழ் மண்ணுக்கு வெளியிலிருந்து வந்தவர். அவர் கலைத் துறைக்குள் நுழைந்தபோது இந்தியக் கலை உலகம் தனது பழைய தொன்மங்களையெல்லாம் இழந்து தனக்குத் தொடர்பில்லாத புதிய தொன்மங்களை உருவாக்கும் முயற்சியில் இருந்தது. எஸ்.பி.பி. தனது தொடக்க காலத்தில் பாடுவதைத் தவிர திரைப்படத்தின் எந்த அம்சத்தினோடும் பரிச்சயமில்லாதவராக இருந்தார். இத்தகைய பலவீனங்களைத் தாண்டிச்செல்ல அவருக்கு இருந்த ஒரே உபகரணம் அவரது குரல் மட்டுமே. இருவரும் வெவ்வேறு பாதைகள் வழியாக வந்திருந்தாலும் வந்து சேர்ந்தது ஒரே இடம்தான். அந்த  சந்தர்ப்பத்தை ‘சங்கராபரணம்’ படம் ஏற்படுத்திக் கொடுத்தது. 

எல்லாக் கலாசார மரபுகளும் ஒரு வீணையைப் போன்றவை. அதில் எந்த நரம்பை எப்படித் தீண்டுவது என்று சில கலைஞர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. எஸ்.பி.பி.யும் கே.வி.மகாதேவனும் இதில் தேர்ந்தவர்கள். மகாதேவன் தனது இசைக்கருவிகள் மூலமாகப் பல செய்திகள் சொன்னார். பல அனுபங்கள் தந்தார். எஸ்.பி.பி. தனது  குரல் மூலம்  இவற்றைச் சாத்தியமாக்கினார். அது சாத்தியமானதற்குக் காரணம் அவரது குரல் தெளிவான குரலாக இருந்ததுதான்.

***

தொடர்புள்ள பதிவுகள்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.