சபார்டி ஜோகோ தமனோ கவிதைகள்
தமிழில் – விருட்சன்
சபார்டி ஜோகோ தமனொ ஓர் இந்தோநேசியக் கவிஞர். இவரது வாழ்க்கைக் குறிப்பில் இவர் கடந்த ஜூலை மாதம் இறந்தார் என்று விக்கிபீடியா சொல்கிறது. இவர் பாஸா இந்தோநேசியாவிலிருந்து இங்கிலிஷுக்கும், இங்கிலிஷிலிருந்து பாஸா இந்தோநேசியாவுக்கும் இருபுற மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.
மத்திய ஜாவாவில், ஸோலோ என்கிற நகரில் மார்ச் 1940 இல் பிறந்தவர் பிள்ளைப் பிராயத்தை அங்கு கழித்திருக்கிறார். யோக்யகர்த்தா நகரில் பல்கலையில் இங்கிலிஷ் இலக்கியம் படித்தார். ‘பேஸிஸ்’, ஹொரைஸன், கலம் ஆகிய இந்தோநேசிய இலக்கியப் பத்திரிகைகளில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1969 இல் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு பிரசுரமாகியது. அது இந்தோநேசிய சந்தக் கவிதைகளின் மறுபிறப்பு என்று சொல்லப்படுகிறது. கருத்தியல் பிரச்சாரங்களே ஆக்கிரமித்த முந்தைய இந்தோநேசியக் கவிதை உலகிலிருந்து வேறுபட்டு, நுட்பமும், நயமும் கொண்டு படைக்கப்பட்ட கவிதைகள் இவை. அலங்கரிப்பு இல்லாத எளிய மொழியில் எழுதப்பட்டவை. 70களில் இவர் எழுதிய கவிதைகள் எளிமையின் இலச்சினையாக இருந்தன.
இவரது கவிதைத் தொகுப்புகள் பின்வருமாறு:
மாதா பிசாவ் (1974) – (கத்தி முனை)
ஸிஹிர் ஹுஜான் (84) (மழை மந்திரம்)
ஹூஜான் புலான் ஜுனி (1994) – (ஜூன் மாதத்து மழை)
ஆர்லோஜி (1999) (கைக்கடிகாரம்)
ஆயத்-ஆயத் ஆபி (2000) (நெருப்பான பாடல்கள்)
மாதா ஜெண்டெலா (2001) (ஜன்னலின் கண்)
அடா பெரிடா அபா ஹரி இனி, டென் சாஸ்ட்ரோ? (2002) – [இன்றைக்கான சேதி என்ன, டென் சாஸ்ட்ரோ?)
கொளம் (2009) -[ குளம் (!)]
இவை தவிர இவர் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.
[மேற்படி தகவல்களுக்குப் பார்க்க- https://www.poetryinternational.org/pi/poet/16151/Sapardi-Djoko-Damono/en/tile ]
****

கீழே உள்ள 5 கவிதைகள் இவருடைய ‘ ‘Black Magic Rain’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து பெறப்பட்டவை. கவிதைகளின் இங்கிலிஷ் தலைப்புகள் (வரிசைக்கிரமமாய்) :
I Wait For You
We Three Of Us
Ear
I Stop The Rain
In Children’s Hand
***

நான் உனக்காகக் காத்திருக்கிறேன்
கோடையின் மலட்டு மரங்களில் உலர்ந்து
இறுகிப்போன பருத்தி மலர்களைப் போல
நான் உனக்காகக் காத்திருக்கிறேன்
எனக்குள்ளே ஜுன் மாதம்
தன்னைத் தன் மீதே சுருட்டிக்கொண்டு
செயலற்றுப் போவதைப் போல்
நான் உனக்காகக் காத்திருக்கிறேன்
பிறகு அனைத்தும்
தேய்ந்து மறைகிறது
அனைத்தும் ஓசையின்றிக் கவனத்திற்குள்ளாக்கப்படுகிறது
அனைத்தும் மிக அமைதியாக விடுவிக்கப்படுகிறது
சிறு மேகங்கள் பாலத்தைக் கடந்து செல்கின்றன
நான் காத்திருக்கிறேன்
பருவகாலங்கள் என்னுடைய கண் இமைகளில்
சாம்பலாகப் படிகின்றன
வானத்தின் குறுக்கே முடிவில்லாத
அலைகளின் தெறிப்பைக் கேட்கிறேன்
இங்குதான் தீராத இச்சையும்
ஒளிவு மறைவற்ற உணர்வுகளும் இருக்கின்றன
நட்சத்திரங்கள் ஓய்ச்சலின்றித் தழைக்கின்றன
மிகக் குறைந்த காலமே நீடித்த கோடைகாலம் உதிர்ந்துவிட்டது
பருத்தி மலர்களையும் மூலிகைச் செடிகளையும் கடந்து
எங்கும் அமைதி நிலைகொண்டுவிட்டது
நான் காத்திருக்கிறேன்
ஒரு வேளை இதற்கு மறுபுறம்
ஒரு சில மேகங்கள் இருக்கலாம்
அவை
எதற்காகவும் காத்திருக்க தேவையில்லை
உனக்காகவும்

நாங்கள் மூவர்
அங்கே அறையில் நாங்கள் மூன்று பேரிருந்தோம்
நான், ஒரு கத்தி மற்றும் ஒரு மொழிஉங்களுக்குத் தெரியும் தானே ?
தன் மீது ரத்தம் தோய்ந்த பிறகே
அது கத்தி என்ற தன் பெயருக்குரிய அடையாளத்தைப் பெறுகிறது
அதில் தோயும் ரத்தம் என்னுடையது அல்லது என் வார்த்தைகளுடையது.

காது
‘என் காதுக்குள் வந்து புகுந்துகொள்
அவன் கெஞ்சுகிறான்:
பைத்தியக்காரத்தனமே;
தன்னுடைய சொந்த காதுகளில் புகும்படி தூண்டப்படுகிறது
அதன் காரணமாக
அவனால்
அனைத்தையும் மிகத் துல்லியமாகக் கேட்கமுடிகிறது
ஒவ்வொரு வார்த்தையையும்
ஒவ்வொரு எழுத்தையும்
ஒலிக்குறிப்பை உண்டாக்கும்
முனகலையும் வெடிப்பொலியையும்கூட
அவனால் கேட்க முடிகிறது.
‘உள்ளே வா,“ கெஞ்சுகிறான்
பைத்தியக்காரத்தனமே!
அவன் அவனுக்குள் முனுகும்
அனைத்தையும் புரிந்து கொள்ள

மழையை நிறுத்தினேன்
நான் மழையை நிறுத்தினேன்
இப்பொழுது நான்
மிக மெதுவாகப் பனிப்புகையை அகற்றுவதையே
சூரியன் விரும்புகிறது
எனக்குள் எதுவோவொன்று துடிக்கிறது
ஈர நிலத்தின் வழியாக உந்தித் தள்ளுகிறது
மழை மற்றும் சூரிய ஒளியால்
கசப்புத்தன்மை கருக்கொள்ளப்பட்டுவிட்டது
நான் மலர்களைப் படைக்கிறேன்
என்று வற்புறுத்தி
சூரியனை என்னால் தடுக்க முடியாது

குழந்தைகள் கைகளில்
குழந்தைகள் கைகளில் காகிதம்
அலைகளால் வெற்றி கொள்ள இயலாத
சிந்துபாத்தின் படகாக உருமாறுகிறது
தனது அழைப்பால்
கானகத்தின் மலர்களைத் திறக்கும் ஒரு பறவையாகிறது
குழந்தைகளுடைய வாய்களில்
வார்த்தைகள் புனிதமடைகின்றன
“கனவானே !
தயவுசெய்து
என் விளையாட்டைத் தொந்தரவு செய்யாமல்
தனியே
விட்டுவிடுங்கள்”

இங்கிலிஷிலிருந்து தமிழாக்கம்: விருட்சன்