இடிபாடுகளைக் களைதல்- லெபனானின் எதிர்காலம்

லூப்னா எல் அமீன்

தமிழில்: உத்ரா

இத்தனை மோசமாக நிகழக்கூடும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால், அது நடந்தது. செவ்வாய்க் கிழமை அன்று பெய்ரூட்டின் துறைமுகத்தில் 2570 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து, தொற்றினால் மேலும் பாதிக்கப்பட்ட லெபனானின் பொருளாதாரத்தை தீவிரமாகப் பாதித்து விட்டது. அந்தப் பெரு வெடிப்பிற்கு முன் தீ எழுந்ததால், வானில் கிளம்பி மிதந்தக் காளான் மேகப் புகைக் கூட்டங்களை ஃபோன் கேமராக்கள் படம் பிடித்தன. அந்த வீடியோப் பதிவுகள் கூட சில நொடித் துளிகள் தான்- அதைப் படம் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் தரையில் வீழ்ந்தனர். மங்கலான தலைகீழ் உருவங்கள், கூச்சல் கூப்பாடுகள், பிரார்த்தனைகள், சிதறும் உலோகங்கள்; கண்ணாடிகள், பெயர்ந்து விழும் சுவர்கள்; இந்த வெடிப்பில் தான் இறப்பதற்கு முன்  ஒருவர் எடுத்த காணொலியை நான் பார்த்தேன். இதுவரை 137 பேர் இறந்திருக்கிறார்கள், 5000 பேர் காயமுற்றிருக்கிறார்கள், மூன்று இலட்சம் பேர் வீடிழந்திருக்கிறார்கள்.

அந்தத் துறைமுகத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் வசிக்கும் என் பெற்றோர் அனுப்பிய வாட்ஸப் செய்தியின் மூலமாக இதை அறிந்தேன். அவர்களின் வசிப்பிடக் கதவு, கீல்களிலிருந்து  பெயர்த்து வீசப்பட்டது. அவர்களின் கட்டிடத்திலும், தொலைவிலிருந்த கட்டிடங்களிலும் கண்ணாடிகள் உடைந்தன.

அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றினால் மருத்துவப் படுக்கைகளும், உபகரணங்களும் அவசியமாக இருக்கும் நிலையில் நான்கு

மருத்துவமனைகள் நாசமாயின. ரொட்டிகூட வாங்க முடியாமல் ஏழைகள் தவிக்கும் நிலையில் பொருளாதாரம் இருக்க, நாட்டின் தானிய இருப்பு 85% இந்த வெடிப்பால் அழிந்தது. மத்திய பெய்ரூட்டில் ஒரு நாளில் 12 மணி நேரம்தான் மின்சாரம் கிடைக்கும்; இப்போதோ மின்சாரக் குழுமங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன- என்ன சொல்வது?

இயற்கைச் சீற்றத்தினால் இத்தகைய பேரழிவுகள் ஏற்படுவதே கொடூரமானது. இப்போது நடந்ததோ இயற்கைச் சீற்றத்தை விட மோசமானது. அம்மோனியம் நைட்ரேட்டில் தீ எப்படிப் பற்றியது என்பது தெரியாது; ஆனால், மொசாம்பிக் செல்லும் கப்பல் ஏதோ சிக்கலினால் பெய்ரூட் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, அதிலிருந்த 2500 டன்களுக்கும் மேலான அம்மோனியம் நைட்ரேட் ஆறு ஆண்டுகளாகப் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டது. அறச் சீற்றத்துடன் என் அமெரிக நண்பர் இதை ஆள்வோர் எப்படி அனுமதிதார்கள் என்று கேட்டார். அவர்களின் ஊழலும், பொறுப்பின்மையும் அறிந்திருந்த எனக்கு பிறருக்கு இது ஒரு வியப்பளிக்கும் விஷயம் என்று தோன்றாமல் போய் விட்டது.

அதிபர், பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் விபத்துக் குறித்து சொன்னவை ஒன்றுமில்லை. சிறுகுருவி (ட்விட்டர்) செய்தியில் ஒருவர் சொன்னதுபோல அவர்களால் எவரையும் கண்களைப் பார்த்து எதையும் சொல்ல முடியவில்லை. அவர்கள் அரங்கத்தை எமானுவேல் மேக்ரோவிடம் (Emmanuel Macron) விட்டுவிட்டார்கள். அவர் பெய்ரூட்டில் பேச்சுரைகள் நிகழ்த்தினார், அரசியல்வாதிகளைப் பார்த்தார், பொதுச் சமூகச் செயப்பாட்டார்களுடன் பேசினார், உதவுதாக உறுதி சொன்னார். தங்களது காலனி ஆதிக்கத்தில் இருந்தவர்கள் நீங்கள் என்ற மறைமுகச் செய்தி அதில் அடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். (50,000க்கும் மேற்பட்ட மக்கள் லெபனான் அதிகாரத்தை மீள எடுத்துக் கொள்ளுமாறு ஃப்ரான்சுக்கு மனு அளித்தனர்) லெபனானின் அரசை ஃப்ரெஞ்ச் அதிபர் முற்றிலுமாக மறைத்து விட்டார். மற்றவற்றிலும் கூட அரசின்மை தான் புலப்பட்டது. இறந்தவர்களின் பெயர்களை மருத்துவர்கள் வானொலியில் படிக்க, தொலைந்த தம் நேசத்திற்குரியவர்களைப் பற்றி விவரங்களை பரிதாபமாகக் கேட்பவர்களின் நேர்முக ஒளிபரப்புகள் நடை பெற்றது என்று ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளர் புகார் சொன்னார். அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டது; ஆயினும் நாட்டின் பல பகுதிகளிலிருந்து தன்னார்வலர்கள்தான் களத்தில் முன்னின்று இடிபாடுகளைக் களைந்தார்கள்.

லெபனானின் அதிகாரிகள் பொது மக்களுடன் உரையாடும் விதம் என்னை எப்போதுமே வியப்பதிர்ச்சி அடைய வைக்கிறது; நலத்துறை அமைச்சர் உணவுப் பற்றாக்குறையைப்பற்றி, தான் அதில் எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்பதுபோலப் பேசுகிறார். தொலைத் தொடர்பு அமைச்சர், இணையம் முதலில் செயல்படாமல் போனதற்கு அதிகாரியாகத் தன் பொறுப்பை மறந்து, ஒரு நண்பர் சொல்லும்  நற்செய்தியைப் போல, இணையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது என்று செய்திக் குறிப்பு அனுப்புகிறார்; அரசாங்கத் தூதர், வெளிநாட்டில் நிகழ்த்தும் உரைகளில் கிளர்ச்சியாளர்கள், அரசைஅகற்ற வேண்டும் என்று எழுப்பும் கோஷங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார், ஏதோ இந்தக் கோஷங்கள் தன்னையும் குறிப்பதில்லை என்பது போல. அந்த வெடிப்பிற்குப் பின் அரசின் அறிக்கைகள் இந்த வகைமையைத்தான் கொண்டிருந்தன; அனைவரையும் போலவே அமைச்சர்களும் கலங்கிப் போயிருக்கின்றனர், இதற்குக் காரணமான பிறரைப் பழித்தொதுக்க வேண்டும், எதிர்கால பாதுகாப்பிற்கு உறுதி தருகிறோம் போன்றவை. துறைமுக அதிகாரிகள் 16 பேரைக் கைது செய்திருக்கிறார்கள்; யாரும் இராஜினாமா செய்யவில்லை.

கடந்த முப்பது வருடங்களாக ஆட்சியில் இருப்பவர் மீது தன் ஆறாப் பெரும் சினத்தை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பெண் ஒருவர் சொன்னார். ஆயினும், இந்தப் பிரச்சனைகள் அதையும் தாண்டிப் பழமையானது. அந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் ஒன்றும் அமைதியோ, வளமோ இல்லை; 15 வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போர்- இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் வழி நடத்திச் சென்ற போராளிகளால் உயிரிழந்த 1,20,000 பேர், பல்லாயிரக் கணக்கில் இடம் பெயரும் துயரில் சிக்கியவர்கள். அதற்கும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், சுதந்திரம் பெறுவதற்கும், உள்நாட்டுப் போர்கள் துவங்க ஆரம்பிக்கும் முன்னதான இடைவெளியில், சிற்றளவில் போராட்டங்கள் நடந்து வந்தன.

என் நாட்டின் வரலாறு என் பள்ளியில் எனக்குக் கற்பிக்கப்படவில்லை.

பாடப் புத்தகம் 1943-ம் ஆண்டோடு நின்றுவிட்டது. அதற்குப் பதிலாக, இரு உலகப் போர்களின் காரணங்கள் பற்றி, குருதி தாகம் கொண்ட ஒட்டோமான் (Ottoman) அதிகாரி பற்றி, 1915-ல் வெட்டுக்கிளிகளின் படை கொண்டு வந்த தாங்கொண்ணாத் துயர் பற்றி, ஃப்ரெஞ்ச் துருப்புகள் 1943-ல் லெபனானை விட்டுச் சென்றது பற்றிப் படித்தோம். 1860-ல் மவுன் லெபனானில் தொல்குடி விவசாயக் கிருத்துவர்களுக்கும் (Maronites) ட்ரூஸ் (Druze) நில உடைமையாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த போர்களைப் பற்றிப் படித்த நினைவில்லை 19-ஆம் நூற்றாண்டின் அமீர்களின் வரைபடங்களையும், அவர்களது தாடி மற்றும் வண்ணமயமான ஆடைகளையும் எங்கள் பள்ளி வரலாற்றுப் பாடத்தில் படித்ததை மட்டும்தான் என்னால் நினைவு கூறமுடிகிறது.

1998-ல் புதிய கல்விப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும், வரலாறு என்னவோ 1943-ல் நின்றுவிட்டது. மாற்றங்களில், அராபிய இலக்கியங்களின் இடத்தை மோசமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உலக இலக்கியங்கள் எடுத்துக்கொண்டன; புதிய தத்துவப் புத்தகம், ‘செய்ய வேண்டும்’ என்ற வார்த்தகளோடு (ஒரு முழு அத்தியாயம் புனிதப்படுத்தும் ஆசைகளைக் கைக்கொள்ள அறிவுறுத்தி) மேலும் குடிமைப் பண்புகள் என்று ஒரு புதுப் பாடத் திட்டமும் இடம் பெற்றன. வரலாறு, உள்நாட்டுப் போர்களுக்கு முந்தைய காலகட்டத்துடன் நின்றதென்றால், மகிழ்வான எதிர்காலத்திற்குக் குதித்தோடியது குடிமைக் கல்வி. போக்குவரத்துக் குறியீடுகளுக்குப் பணிந்து நடப்பது எத்தனை முக்கியம் என்றும் குப்பைகளைக் கண்ட இடத்தில் போடக்கூடாதென்றும் நாங்கள் வாழும் நகர்களில் எங்களின் பங்கும் இருக்க வேண்டுமென்றும் கற்பிக்கப்பட்டோம் – விநோதம் என்னவென்றால், இந்த தேசத்தில், போக்குவரத்துக்கான பொது வெளிச்சத் தூண்களில்லை, பொதுப் பூங்கா இல்லை; முனிசிபல் தேர்தல்களில்கூட நாம் வாழும் நகரில் நம் ஓட்டைப் போடமுடியாது; உங்கள் தாத்தா, பாட்டி பிறந்த இடத்தில்தான் ஓட்டுப் போடவேண்டும்.

பட்டப்படிப்பு படிக்கும் போது தான் நான் முதல் முறையாக லெபனான் அரசியல் அமைப்பு சாசனத்தைப் படித்தேன். என் 20 வயதில் இப்படி ஒரு ஆவணம் இருக்கிறதென்றும், அதை நானே படிக்க முடியுமென்றும் அறிந்த போது எனக்கு வியப்பாக இருந்தது. ‘இறையாண்மை கொண்ட, சுதந்திரமான, தன்னாட்சி கொண்ட நாடு லெபனான்’ என்று அது தொடங்கியது. 1826-ல் ஃப்ரெஞ்ச் கட்டளையின் கீழ் எழுதப்பட்ட இந்த சாசனத்தில், 1943-ல் விடுதலை பெற்ற பிறகு சில மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்; 1990-ல் மீள் மாற்றம் செய்யப்பட்டது. நாடாளுமன்ற இடங்கள் இப்போது சரிசமமாக கிருத்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் வழங்கப்படுகிறது.(1990-க்கு முன் இதன் விகிதம் 6க்கு 5 என்று இருந்தது.)  அதிபரான தொல்குடி கிருத்துவ இனத்தைச் சேர்ந்தவரின் அதிகாரம் குறைக்கப்பட்டு  அது சுன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்த பிரதமருக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த சபா நாயகருக்கும் வழங்கப்பட்டது. அரசியல் ஒப்புதல் வாக்குமூலங்களைக் கலைவது தான் தேசத்தின் குறிக்கோள் என்றும், இத்தகைய தற்காலிகச் சட்டம் விகித இடங்களைக் களைவதற்கு முகாந்தரமாக ஏற்படுத்தப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. அரசியல் ஒப்புதல் வாக்குமூலம் ஓர் இடைநிலை; அதனுடைய இலக்கு, தன்னையே இல்லாமல் செய்வதுதான்.

லெபனானுக்கு உள்ளும், வெளியும் இருக்கும் மக்கள் அதை நீக்க வேண்டுமென்று திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார்கள். மதச் சார்பற்ற அரசும், மக்களுக்கும் ஆள்வோருக்குமிடையே புதிய சமூக ஒப்பந்தமும் தேவை எனச் சொல்லி வந்தார்கள். பின்-காலனி நாடுகளின்  நிலவும் குணாதியசமாக இதை நான் பார்க்கிறேன்- தற்காலிகமென்பது நிரந்தரமாக, எப்போதுமே நிறைவேற்றப்படாத, எப்படி இருந்திருக்க வேண்டுமென்ற உறுதி மொழியோடுத் தான் தென்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளின் அருகே 2570 டன் அம்மோனியம் நைட்ரேட்டை கிடங்கில் வைப்பதைத் தடுப்பதற்கு அரசுடன் புது ஒப்பந்தம் தேவையா என்ன? நவீன சமுதாயத்திற்கு முன்னதான ஆயிரக் கணக்கான ஆண்டுகளிலும் மக்களைக் காப்பது அரசின் தலையாய கடமை அல்லவா? (அது பணிவிற்கு வழங்கப்பட்ட காப்பாக இருந்த போதும்). உங்களைக் காக்கத் தவறிய அரசு, அதி வெட்கக் கேடாக உங்கள் வாழ்க்கையையும் காவு வாங்குகையில், அப்படி ஒரு அரசின் தேவைதானென்ன? இந்தப் பிரச்சனைகள் சமயத் தனிக் குழு அமைப்பினால் மட்டுமல்ல, ஆனால், நவீன  ஆட்சி முறை அமைப்பு  எதை அனுமதிக்கிறது, எதற்கு அனுமதி மறுக்கிறது, திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு மக்களுக்கு எந்த அளவில் இடமிருக்கிறது, மாற்று வழி அரசு அமைப்புகளைப் பற்றி மக்கள் சிந்திப்பதற்கு என்ன ஒரு வாய்பளிக்கிறது போன்றவற்றையும் சார்ந்திருக்கிறது.

பழமை வாய்ந்ததான, ‘மக்கள் பொது நலம் அந்தந்த அரசுகளைச் சார்ந்தது’ என்ற கருத்து இந்தத்  தொற்று நோய் காலத்தில் மேலோங்கி, உலக நீதிக்கான ஆர்வம் பின்தள்ளப்பட்டுவிட்டது. ஏனெனில், எல்லா இடங்களிலும் எல்லோரும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; தங்கள் நாட்டைச் சேர்ந்தோரைக் காக்க வேண்டுகோள் விடுக்கப்பட்ட அளவில், பிறரைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்டவர்கள் குறைவே. தற்சமயம் தேசம் கடந்ததாக இருக்கும் ஒரு செயல்பாட்டை அளிக்கக் கூடியது- அது பகுதி விதி விலக்கு என்றாலும்- ஐரோப்பிய யூனியன் ஒன்றுதான்.  லெபனானில் காளான் மேகக் கூட்டங்கள் வானில் தென்படுகையில், உலகம் அதை கவனிக்கையில், பனியிலிருந்து எழுந்த தேவனென வந்தவர் ஃப்ரெஞ்ச் அதிபர் என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது.

Nationalist Discourse and The Colonial World (1986) காலனி ஆதிக்கக் கருத்துக்களை எதிர்த்துப் போரிட்ட நாடுகளில் பின்- காலனி தேசியம் எப்படி மாறுபடுகிறது என்பதை ஆராய்ந்தார் பார்த்தா சட்டர்ஜீ (Partha Chatterjee); ஆனால், அதில் தோல்வியே. பின்-காலனீய உலகம் தன் வடிவமைப்புகளால், காலனியின் வகைகளுக்குள் சிறைபட்டு, அதைத் தாண்டிச் செல்லும் திறன் குறைந்து இருக்கிறது. இந்த வெடிப்பிற்கு முன் லெபனானின் முன் இருந்த, நடை முறை சாத்தியப்பட்ட, ஒரே வாய்ப்பு, கட்டமைப்பைச் சரி செய்யும் திட்டம் தான்.  இப்போது எந்த வடிவிலோ ஃப்ரான்ஸ் சொல்லித்தரும் பாடங்களை கேட்டு நடப்பது இரண்டாவது வாய்ப்பாகக் கூடும். இப்போது இடிபாடுகளை அகற்றிக் கொண்டு, இழந்த உயிர்களுக்காகப் போராடப் போவதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் மூன்றாவது வாய்ப்பாகவும் ஆகலாம். சென்ற அக்டோபரில் நடந்த திரள் புரட்சியின் ஆவி சற்றுக் குளிர்ந்திருக்கலாம், ஆனால், அதன்  ஆன்மா ஜீவித்திருக்கிறது. அனைத்துத் தடைகளையும் அது வெல்லட்டும்.

மூலக் கட்டுரையை இங்கே காணலாம்:

https://www.lrb.co.uk/blog/2020/august/clearing-the-rubble

Loubna El Amine. She teaches political science with emphasis on early  Chiense thoughts.

07-08-2020

பின் குறிப்புகள்:

இந்த வெடிப்பு நிகழ்ந்த உடன் லெபனான் சென்ற பிரான்ஸ் அதிபர் மேலும் இரு முறை சென்றிருக்கிறார். ஆனாலும், சிறு ஐயப்பட்டுடன் அதை எதிர் கொள்கிறார்கள். சென்னைத் துறைமுகத்தில் நாலைந்து ஆண்டுகளாக இவ்வாறு கிடங்கில் வைக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டினால் ஆபத்தில்லை என்று அதிகாரிகள் சொன்னார்கள்- அதை அகற்றிவிட்டதாகவும் செய்தி வந்துள்ளது.

இதற்கிடையில் பெய்ரூட் துறைமுகத்தில் மேலுமொரு தீ விபத்து.

ஆனால், வரலாறு மறைக்கப்பட்ட விதத்தில், காலனி நாடுகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை வியப்பைத் தருகிறது. இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர பள்ளிப் பாடங்களிலோ, கல்லூரிகளிலோ எவரும் குறிப்பிடப்படுவதில்லை.

*** 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.