இடம்
அங்கே யாருக்கும்
அனுமதி கிடையாது
என்னைத் தவிர
நான் அங்குப் போய்விடுகிறேன்
என்பது போல்
யாரும் அங்கே வந்துவிட முடியாது
ஒரு இடம் என்றால்
அங்கு எல்லாம் இருக்கவேண்டும்
அங்கு எல்லாம் இருந்தது
உன்னை என்னை என்று
நீ என்ன சொன்னாலும்
சொல்லாவிட்டாலும் எந்த ரகசியமும்,
நீ மறைத்து வைத்த விடையும்
குளத்தில் விழுந்த
பொருள் போல் மிக ரகசியமாக
காணாமல் போகவில்லை
எனக்கானது எல்லாம்
உனக்கானது என்னிடம்
மட்டும் தோன்றும்
அது

தபால்காரன்
அவனுக்கு இன்னொரு
பெயர் பாலம்
அது நடமாடுவதை
நீங்கள் பார்க்கலாம்
கடிதத்தோடு மட்டுமின்றி
சட்டதிட்டத்திற்கும் கட்டுப்பட்டவன்
விலாசம் பேசுகிற குரல்
கடிதம் போட்டவனுக்கும்
பெற்றவனுக்கும் வேறு வேறு
கடமையின் சுமை
அவனுக்கு வெற்றி
ஒரு காலத்தில்
மற்றும் இன்றும்
வான்காவாவின் ஓவியம் அவன்
தெருவில் நடமாடும்
மடல் எனும்
கடிதத்தின் வழிப்போக்கன்
எழுதப்பட்ட பெயரில்
ஆட்களை காணும்
மாயக்கார மானுடன்
எல்லோருக்கும் அவன் ஒருவன்
அவனுக்கு எல்லோரும் ஒருவரே
வெய்யில் மழையென
நனைந்து காய்ந்தாலும்
ஓலை அழைத்து
செல்லும் தூதன்
கடிதம் தான் அவன்
அவன் தான் கடிதம்

மனதின் பாதை
ஆங்காங்கே ஆட்கள் இருக்கிறார்கள்
அவர்கள் என்னைக் கேட்கிறார்கள்
அவர்கள் முன்
என்னைக் காட்டிக்கொண்டதில்லை
ஒரு நினைவில் தப்பிய மனிதனாகிய நான்
வீணாய் எனது உடலின் சுமையைச் சுமப்பவன்
வழுவாத சலிக்கும் பாதையில் நடப்பவன்
பேசி தீர்த்துக் கொள்வதற்கு
மொழி இல்லாதவன்
நான் எல்லோரையும்
சமாதானம் செய்து கொள்கிறேன்
நான் உயிர் வாழ
மிச்சமிருக்கும் குரலில் பேசுகிறேன்
எனக்கு மட்டும் கேட்டு
அழுகும் மனதை ஆராய்கிறேன்
வெளியே வந்தால் எல்லாம்
அப்படியே இருக்கிறது
மறைந்த உண்மை நிலத்தில் இருக்காது
என்னை நகர்த்தும்
உன்னை நான் அறிவேன்
—-புஷ்பால ஜெயக்குமார்