ஆல மரத்தமர்ந்தவர்

புதுப்பட்டியில் ஆபரணப் பொருள்கள் விற்பனைக் கடை வைத்திருக்கும் கணேசன்தான் சின்ன வாத்தியாரை நினைவுபடுத்தினான். என்னுடைய திட்டம், என் திருமண அழைப்பிதழை கணேசனுக்கு கொடுத்தவுடன் 27 எண் பேருந்தில் ஏறி புதுக்கோட்டை செல்வதுதான். அவன்தான் “சின்ன வாத்தியாருக்கு கொடுத்தியா… இங்க பக்கத்துலதான் இருக்காரு” என்றான்.

நான் யோசிப்பதைப் பார்த்து “27 போயிடுச்சின்னா அரை மணி நேரத்துல 19 வரும்டா. அதுல போயிக்க. பெரிய வாத்தியாருதான் எங்க இருக்காருன்னு தெரியாது. கல்யாணம் பண்ணப்போற, ஒரு வாத்தியாரோட ஆசிர்வாதம் கெடைக்கிறது நல்லதுதானேடா. பக்கத்திலதானே இருக்காரு ” என்றான். இந்த அளவிற்கு சொல்கிறானே, சிறிது தாமதமதமாவதால் ஒன்றும் குறையப்போவதில்லை. சரி செல்லலாம் என முடிவெடுத்தேன். அந்தத் தெருவிலேயே வடக்குப் பக்கம் நாலாவது தெருவுல கிழக்க பார்த்த கடைசி வீடு என்று அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

சின்ன வாத்தியாரின் நினைவை மெல்ல மீட்க ஆரம்பித்தேன்…… மனதினுள்ளே எத்தனை எத்தனை நினைவுகள் படிந்துள்ளன. அதைப் பற்றி நினைத்தவுடன் தான் இவ்வளவு விபரங்களும் உள்ளே இருத்தனவா, எல்லாவற்றையும் சுமந்து கொண்டுதான் நடமாடிக் கொண்டிருக்கிறோமா என ஆச்சர்யப்படுமளவிற்கு சரக்கு ரெயில் பெட்டிகள்போல ஒன்றன்பின் ஒன்றாக பிணைந்து முடிவேயில்லாது வந்து கொண்டேயிருக்கும்.

எங்கள் ஊரில் ஐந்தாம் வகுப்புவரையான ஆரம்பப் பள்ளிக் கூடம்தான் இருந்தது. ஆறாவது படிக்க மூன்று மைல் தூரம் நடந்து புதுப்பட்டியிலிருக்கும் மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும். +1 படிப்பதற்கு புதுப்பட்டியிலிருந்து பேருந்தேறி அறந்தாங்கி செல்லவேண்டும். கல்லூரியென்றால் காரைக்குடி அழகப்பாவையோ, புதுக்கோட்டை மன்னரையோதான் சரணடைய வேண்டும்.

எங்கள் பள்ளிக்கூடம் இரு ஆசிரியர் பள்ளிக்கூடம். நான் படித்து முடித்து சில ஆண்டுகளிலேயே இவர் ஓய்வு பெற்றுவிட்டார். ஆயினும் சின்ன வாத்தியாரென்றே இப்போதுவரை அழைக்கிறோம். ஏனென்ற காரணத்தை இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போது யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றாவது மற்றும் இரண்டாம் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர். அடுத்த மூன்று வகுப்புகளுக்கும் ஒரு ஆசிரியர். இவர் கடைசிவரை முதலிரண்டு வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுத்தார். சிறிய வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுத்ததால்தான், பணி ஓய்வு பெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகும் சின்ன வாத்தியார் என அழைக்கப்படுகிறார் எனத் தோன்றியது. பெரிய வகுப்புகளுக்கு பாடம் எடுப்பவர் இளவயதுக்காரராய் இருந்தாலும் பெரிய வாத்தியார் என்றே அழைக்கப்பட்டார்.

எனக்கு நான்கு வயதானபோதே முதல் வகுப்பில் அம்மா சேர்த்துவிட்டார். அவர் என்ன செய்வார், பாவம். அக்கா பள்ளிக்கு சென்றுவிடுவார். அம்மா கீழ வயலுக்குச் சென்றால் மேல வயல் பக்கமும், அவர் மேலக் கொல்லைக்குச் சென்றால் நான் கீழக் கொல்லைப் பக்கமும் செல்வேன். சிறு வெண்பூக்களுடன் தும்பைச் செடிகள் வளர்ந்திருக்கும் நிலத்தில், மண்வாசம் பரவ ஒரு செடியைப் பிடுங்கி பிற செடிகளின் மலர்களில் அமரும் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் அவை மாய்ந்துவிடாமல் பொத்தினாற்போல அழுத்திப் பிடிப்பேன். அதன் சிவந்த உடல் பகுதியில் நூலைக் கட்டி பறக்கவிடுவேன். பொன் வண்டுகளைப் பிடித்து அதன் கழுத்துப் பகுதியில் லாவகமாக நூலைக் கட்டி பறக்கவிடுவேன். செம்மஞ்சள் நிறக் காராம் பழம், கருமை நிற சூராம் பழம், காரமும் துவர்ப்புமான சுவையுடனிருக்கும் மஞ்சனத்திப் பழம், ஈச்சங்காய், ஈச்சம் பழம் என கிடைக்கும் காய் பழங்களை கொய்து உண்பேன். அம்மா வீட்டிற்கு வந்ததும், என்னைக் காணாமல் “தம்பீஈஈஈ” என பத்து முறை அழைத்தபின் என் காதில் சத்தம் கேட்டால் செல்வேன். வீட்டிற்கு சென்றவுடன் திட்டுவார். கை கால்களில் காய் பழங்களைப் பறிக்கும் போது உண்டான காயங்களைக் கண்டால் அடிப்பார். சொல்பேச்சு கேட்காமல் ஊரைச் சுற்றி காயங்களுடன் வருவதை எத்தனை நாள்தான் பொறுப்பார்.

பெரிய வாத்தியார் சிவராமனிடம் என்னை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். பிறந்த தேதியைக் கேட்டதற்கு தெரியாது எனக் கூறி, ஐந்து வயது ஆகியிருக்கும் என்றார். பெரிய வாத்தியார் என்னிடம் வலது கையால் இடது காதை தொடச் சொன்னார். எனது கை நடுவிரலின் நுனி லேசாக காதைத் தொட்டு விலகியது. திருப்தியுடன் தலையாட்டியபடி ஏதோ ஒரு கணக்கில் ஜூலை மாதத்தில் ஒரு தேதியை பிறந்த தேதியாக எழுதிக் கொண்டு பள்ளியில் சேர்த்துக் கொண்டார்.

சின்ன வாத்தியார் எனக்கு பாடம் எடுத்ததைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எவ்வளவு துழாவியும் எதுவுமே தட்டுப்படவில்லை. எங்கள் பள்ளி, ஒருபக்கம் அதிகமாகவும் ஒருபக்கம் குறைவாகவும் பகுக்கப்பட்ட செவ்வக வடிவ கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இரண்டு பகுதிகளுக்கும் தனித்தனி வழிகள் இருந்தன. முதல் இரண்டு வகுப்புகளில் நிகழ்ந்த எதுவுமே நினைவில் இல்லை. மூன்றாவதிற்கு அடுத்த பகுதிக்கு சென்றுவிட்டதால் இவர் எப்படி பாடம் எடுப்பார் என்பதையும் காண வாய்ப்பில்லை. பள்ளி நினைவுகளில் முதன்மையாக தெரிவது, அப்போது பெரிய வாத்தியாராக இருந்த சிவராமன் சார், கணிதத்தை அழகாக விவரித்ததும் அவரின் என் மீதான தனிக் கரிசனமும்தான்.

சின்ன வாத்தியார் பாடம் எடுத்ததுதான் நினைவிலில்லையே தவிர எங்கள் ஊரை எண்ணும் போதெல்லாம் வரும் சித்திரத்தில் அவரும் ஒரு தவிர்க்க முடியாத துணைக் கதாபாத்திரம்தான். வேட்டியும் வெள்ளைச் சட்டையும்தான் அவரின் எப்போதைக்குமான ஒரே உடை. கையில் எப்போதும் மரக் கைப்பிடி போட்ட மான் மார்க் குடை இருக்கும். ஊரில் வசிக்கவில்லை என்றாலும், இருபது வருடங்களாக எங்கள் பள்ளியில் பணியாற்றியதில் இவரும் ஒருவகையில் ஊர்க்காரர் போலத்தான். எல்லோருடைய வீட்டு நிகழ்வுகளுக்கும் அழைக்கப்பட்டு, கலந்து கொள்வார்.

ஐந்தாவது முடித்து ஆறாவதிற்கு புதுப்பட்டிக்கு, வயல்கள் வழியாகவும் சிறு சாலை வழியாகவும் மூன்று மைல் தூரம் நடந்து செல்பவர்கள், அங்கிருந்து நடந்து வரும் இவரை தினமும் காலையிலும் மாலையிலும் “வணக்கம் சார் ” என்று எதிர்கொள்வார்கள். அவர்மேல் பெரியதாக மரியாதையோ பணிவோ இருக்காதென்றாலும் தாழ்வாகவும் யாரும் நடந்துகொள்ளமாட்டார்கள்.

சின்ன வாத்தியார் என்றவுடன் எங்களுக்கெல்லாம் சட்டென நினைவுக்கு வரும் நிகழ்வு ஒன்றுண்டு. எங்கள் ஊர் ஆட்கள் அவசரமென்றாலோ நடக்க சிரமமாயிருக்கும்போதோ புதுப்பட்டியிலிருந்து வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு வருவார்கள். பின், ஊரிலிருந்து செல்பவர்களிடம் அதனை வாடகைத் தொகையுடன் கொடுத்தனுப்புவார்கள். ஒருநாள், கீழத் தெரு சிதம்பரம் சித்தப்பா புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டு வரும்போது மதிய வெயில் உக்கிரமாக இருக்கவே வாடகை சைக்கிள் எடுத்துவந்தார். மறுநாள் கொண்டுபோய் கொடுப்பதென்றால் ஒருநாள் வாடகையாகிவிடும். இன்றே கொடுத்துவிட்டால் மணி கணக்கில்தான் வாங்குவார்கள். இதனைக் கணித்து சைக்கிளையும் மூன்று மணி நேரத்திற்கான வாடகையையும் சின்ன வாத்தியாரிடம் கொடுத்து போகும்போது சைக்கிள் கடையில் விட்டுவிடுங்கள் என சொல்லியிருக்கிறார். அவர் தயங்கியிருக்கிறார். ” நீங்க அங்கதான போறீங்க. போற வழில இத விட்டுட்டு போயிடுங்க” என சிதம்பரம் சித்தப்பா கூறியதும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

வயல்களுக்குள் குறுக்கே செல்லும் தூரம்தான் மூன்று மைல். சைக்கிள் ஓட்டிச் செல்வதற்கான சுற்றுச் சாலையின் தூரம் ஐந்து மைல். ஒன்பதாம் வகுப்பு படிக்க சைக்கிளில் செல்லும் சுந்தர், வரும் வழியில் சைக்கிளை எத்திக் கொண்டு சின்ன வாத்தியார் வருவதைப் பார்த்து நிறுத்தியிருக்கிறான்.

” ஏன் சார், எத்திக்கிட்டு வர்றீங்க. பஞ்சராயிடுச்சா” எனக் கேட்டதற்கு “அதெல்லாம் இல்ல. கால் வலிக்குது. கொஞ்ச நேரம் தள்ளிட்டு அப்பறம் ஓட்டிட்டு போவேன். நீ போ” என்றாராம். சந்தேகம் வந்து மறுநாள் சைக்கிள் கடையில் விசாரித்த போதுதான் சொன்னார்கள், அவர் இதுவரை சைக்கிள் ஓட்டியதில்லை என்பதை. நாலாவது படிப்பதற்குள்ளேயே பிள்ளைகளெல்லாம் சைக்கிள் ஓட்டக் கற்றுகொள்வதை பார்க்கும்போது, ஒரு வாத்தியாருக்கு ஓட்டத் தெரியாதென்பது, ஊரில் இன்று வரையில் ஒரு இளிவரல் பேசு பொருளாகவே இருந்துவருகிறது.

மனதில் சிறியதாக தோன்றிய கேள்வியொன்று கொஞ்சகொஞ்சமாக வளர ஆரம்பித்தது. இருபது வருடங்களுக்கு மேலாக ஒன்றாம், இரண்டாம் வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுத்தவரை, வெள்ளையுடையில் கருப்பு குடையை கையில் வைத்திருக்கும் உயரமான கருத்த உருவமாக மட்டுமே என் நினைவில் இருப்பவரை ஏன் காண வேண்டும்?

கணிதத்தின் புதிர்களை விடுவிப்பதன் சுவாரசியத்தை காட்டிய சிவராமன் சார், அறிவியலின் அதிசியங்களை அறிமுகப்படுத்திய ஜெயராணி டீச்சர், வரலாற்றை நிகர் வாழ்வெனக் காட்டிய லட்சுமி டீச்சர் , தமிழின் அழகை பார்க்க பழக்கிய சுதா டீச்சர் போன்று தினம் ஒரு தடவையாவது நினைவிலெழும் என் ஆசிரியர் நிரையில் இல்லாத இவரை பார்க்காவிட்டால் என்ன?

இக்கேள்விகள் வளர்ந்தபோதே குருத்து வாழை எட்டிப் பார்ப்பதென, உள்ளத்தில் வாழும் ஆசிரியர்கள் யாரையும் இப்போது சந்திக்க வாய்ப்பில்லையே. இவரை சந்திப்பதன் மூலம் அவர்களை சந்திப்பதாக இருக்கட்டுமே. கொஞ்சம் மஞ்சள் தூளை பிடித்து வைத்தே ஐங்கரனென வணங்குகிறோமே? மனதில் நிலைக்கவில்லை என்பதால் இவர் என் ஆசிரியர் இல்லையென்று ஆகிவிடுமா? என்ற கேள்விகள் முளைத்து வந்தன.

இப்படி யோசித்தபடியே கணேசன் கூறிய அந்த முட்டுச் சந்தை அடைந்தேன். வீடுகள், பழங்காலத் திரைப்படம் எடுப்பதற்காக அமைக்கப்பட்ட செட் போல காணப்பட்டன. மர உத்திரத்தில் நாட்டு ஓடுகள் வேயப்பட்ட வீடுகளாக இருந்தன. மழையிலும் வெயிலிலும் கருத்துப் போயிருந்த ஓடுகள் வேயப்பட்டபோது சிவப்பாக இருந்திருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டது. இடது பக்கம், சில்வர் வண்ணம் பூசப்பட்ட ஆழ்துளை அடி பைப் ஒன்று, பாதி துருப்பிடித்து தலை குனிந்து நின்றிருந்தது. அதைச் சுற்றி நீர் பரவி உலர்ந்த தடம் தெரிந்தது. தெருவில் மனிதர்கள் யாரையும் காணவில்லை. மாலை நேரத்தின் மயக்கமாய் இருக்கக் கூடும். இரண்டு சிறிய நாய்கள் பொய்க்கடி கடித்தும், தாவியும் புழுதி பறக்க விளையாடிக் கொண்டிருந்தன. கூரைமேல் அமர்ந்திருந்த தனித்த காகம் வெறுமனே அதை பார்த்துக் கொண்டிருந்தது.

அந்தத் தெருவை முட்டுச் சந்தாக்கிய ஆளுயர சுற்றுச் சுவருக்கு அந்தப் பக்கம் மா, வேம்பு, தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன. சுவரையொற்றி வளர்ந்திருத்த ஆலமரத்தின் கிளை சுவரின் இந்தப்பக்கமும் பரந்திருந்தது. கிளியின் அலகைப் போல சிவந்திருந்த பழங்கள் இலைகளை மீறி தங்களைக் வெளிக் காட்டிக் கொண்டிருந்தன. பறவைகளின் கீச்சொலிகள் லேசாக கேட்டது. சுவரை ஒட்டி பூங்காக்களில் இருக்கும் இருக்கைகள் போல இரு பக்கம் கற்கள் தாங்க ஒரு சிமெண்ட் சிலாப் போடப் பட்டிருந்தது. அருகே பாறைக் கற்கள் சில கிடந்தன.சுற்றுச் சுவர் கட்டியபோது எஞ்சியதாக இருக்கலாம்.

நான் கடைசி வீட்டையடைந்தேன். மாலை சூரியன் அந்த வீட்டின் ஓட்டினை தொட முயன்றது. அந்தவீடு சிறு திண்ணையுடன் இருந்தது. லேசாகத் திறந்திருந்த கதவைத் தட்டினேன். நாற்காலியில் இருந்து எழுந்துவரும் ஒலி சன்னமாகக் கேட்டது. “வாங்க, வாங்க” என்றபடியே சார் வெளியே வந்தார். தலைமுடியில் ஆங்காங்கே கருப்பு முடி கண்ணில் பட்டது. ஆனால், மீசை முழுவதுமாக வெண்ணிறத்தில் ஒளிர்ந்தது.

கையால் வணங்கி அவர் புன்னகைத்தபோது, இரண்டு பற்களில்லாத சிறு புன்னகையை, மீசை பெருஞ்சிரிப்பாகக் காட்டியது.

“வணக்கம் சார்… நான் சங்கர். சிவலாங்குடி, கங்காணிய வீடு” என்றேன். தெரிந்தது போலவோ மறந்ததாகவோ காட்டாத முக பாவனையோடு “ஒக்காருங்க” என்று திண்ணையை கை காட்டியபடி அவரும் அமர்ந்து கொண்டார்.

நான் சென்னையில் வசிப்பதையும், என் பணிகளையும் பற்றிக் கூறிவிட்டு “சார் எனக்கு கல்யாணம். பத்திரிக்கை கொடுத்து அழைச்சிட்டு, ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டுபோலாம்னு வந்தேன்” என்றேன்.

“ரொம்ப சந்தோசம்பா, நீண்ட நாளைக்கி நல்லா சொகமா இருக்கனும்” என்றபடி வானத்தை நோக்கி வணங்கிக் கொண்டார்.

நான் எழுந்து, என் கைப்பையிலிருந்து ஒரு பத்திரிக்கையையும் ரெயிலில் செல்லும்போது தின்பதற்கென வைத்திருந்த இரண்டு ஆப்பிள் பழங்களையும் எடுத்து சாரிடம் நீட்டினேன். அவரும் மெதுவாக எழுந்து வாங்கிக் கொள்ள, நான் குனித்து என் எல்லா ஆசிரியர்களையும் மனதில் எண்ணியபடி, அவர் காலைத் தொட்டு வணங்கிஎழுந்தேன். அவர் வேட்டிக்கு மேல் கட்டியிருந்த பச்சைப் பெல்டில் இருந்த இடப் பக்கப் பையிலிருந்து நூறு ரூபாய் தாளையும் வலப்பக்கப் பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தையும் எடுத்து தாளின்மேல் நாணயத்தை வைத்து என்னிடம் நீட்டி ” நல்லா இருப்பா” என்று கூறினார்.

நான் வாசலுக்கு வந்தவுடன் அவரும் உடன் வந்தார். ” சார் ஒங்கக்கிட்ட ஒன்னு கேக்கனும். தப்பா எதுவும் நெனச்சுக்கக் கூடாது”

முகத்தை நிமிர்த்தி, சுருங்கிய இமைகளை உயர்த்தி “கேளுப்பா” என்றபடி மெதுவாக நடந்து சென்று மரத்தினடியில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்.

வேண்டாம் வேண்டாமென மனதினில் ஒரு குரல் ஓலமிட்டபோதும், இப்போதும் தவறவிட்டால் பிறகொரு வாய்ப்பு கிடைக்காது என உறுதியாகத் தெரிந்ததால் அவரருகில் சென்று அந்தக் கேள்வியை கேட்டுவிட்டேன்.

“சார், வேலையில சேந்ததுல இருந்து ரிட்டையர் ஆகுற வரைக்கும் ஒன்னாவதுக்கும் ரெண்டாவதுக்கும் மட்டுமே பாடம் எடுத்துக்கிட்டிருந்தீங்களே ஏன் சார்? “

“நீயும் அதையேதான் கேக்குற. இதுல தப்பா நெனச்சுக்கிறதுக்கு என்ன இருக்கு. வா இங்க ஒக்காரு சொல்றேன்” என்று அமரச் சொல்லி கை காட்டினார்.

நான் அவரருகில் அமராமல், அமர்வதற்கு வாகாக சற்று தள்ளி கிடந்த கல் திண்டில் அமர்ந்தேன்.

கால்களை தளர்வாக நீட்டி அமர்ந்தபடி என்னைப் பார்த்து “எங்க அம்மா அப்பா ரெண்டு பேருமே வெவசாயக் கூலி வேலதான் பாத்தாங்க. எனக்கு அக்காங்க ரெண்டு பேரு. கொஞ்சம் வளந்தவொடன நாங்களும் அவங்க கூடவே வயலுக்குப் போவோம். மொதலாளிங்க வீட்டுப் பிள்ளைகளெல்லாம் பள்ளிக் கூடம் போகுங்க. எனக்கு அவங்க எங்க போறாங்கன்னு புரியல. அப்பாகிட்ட கேட்டேன். அவங்க வயல்ல நாம வேல பாக்குறம். அவங்க புள்ளைங்க வேல பாக்க வராம வேற எங்கயோ போறாங்களேன்னு”

“எங்கப்பாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம, எல்லாம் விதிதான்டான்னு சொன்னாரு. எனக்கு அப்பப் புரியல” என்று கூறி நிறுத்தி தனக்குள் ஆழ்ந்தார்.

“பழைய கதையெல்லாம் முழுசா சொல்ல நேரமாகும். நீ கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்றேன். மரம் பெருசா வளர்ரதுக்கு அதோட வேரு பலமா இருக்கனும். ஆனா அது கண்ணுக்குத் தெரியாது. . நான், செடி வக்கிறப்ப அடியில குப்பய தூவுற மாதிரி எழுத்துகளையும் எண்களையும் கத்துத் தந்தேன். பெரிய படிப்பு படிக்கறதுக்கு மொழியையும் எண்களையும் சரியா படிச்சிருக்கனும்கிறது ரொம்ப அவசியம்ல. அந்த அடித்தளத்த சரியா அமைச்சிடனும்னு நெனச்சேன். முதல் ரெண்டு வருசத்துக்கு கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் கத்துக் கொடுக்கறதோட சூட்சமம் புரிஞ்சிடுச்சு. ஒரே விசயத்த தொடர்ந்து செய்யிறப்ப ஒரு லாவகம் கைகூடிடும்ல, அதுக்குப் பிறகு அந்த வேலை மேல ஒரு பிரியம் வந்திட்டுது. சிற்பத்தை செதுக்கிக்கிட்டே இருக்கிற சிற்பி மாதிரி அடுத்தடுத்த பிள்ளங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆசையா இருந்துச்சு. அதோட சின்னப் பிள்ளங்க எழுத்துக்களை உள்வாங்கறதப் பாக்கறப்ப தாய் காகம் இரை கொண்டு வரும்போது குஞ்சுங்கல்லாம், குட்டியூண்டு மென்மையான அலகத் திறந்து எனக்கு எனக்குன்னு கேட்டுவாங்கி முழுங்குமே, அதுமாதிரி தெரியும். என்னய ஒரு தாயாவே ஒணர ஆரம்பிச்சுட்டேன். நான் கொடுக்குறத ஆவலோட இத்தனபேரு வாங்கிக்கிறத பாக்கிற சுகத்தவிட வேறன்ன வேணும். இந்த சொகத்த இழக்க வேண்டாம்னுதான் பதவி உயர்வே வேண்டாம்னு எழுதிக் கொடுத்திட்டேன்”

“பெரிய ஆளா ஆனப்பறம் எந்த வாத்தியாரப் பிடிக்கும்னு கேட்டா பயலுவல்லாம் அறிவியல் வாத்தியாரப் புடிக்கும், கணக்கு வாத்தியாரப் புடிக்கும்னு சொல்லுவானுங்க. எழுத்தையும் எண்ணையும் கத்துக் கொடுத்தவன யாரும் சொன்னதில்ல. அவங்க மேல தப்பில்ல. ஏன்னா, சின்ன வயசுல்ல. நினைவுல தங்கறதில்ல. ஆனா… அதப்பத்தி எனக்கேதும் வருத்தமில்ல”

கூறிவிட்டு என்னைப் பார்த்தார். என் முகம் நெகிழ்ந்திருந்தது. கைகளை கூப்பியபடி எழுந்து அவர் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினேன். அவர் பதறி எழுந்தார். “என்னப்பா இது சட்டை அழுக்காயிடாது” என்று தோளில் கைவைத்து தூக்க முயன்றார். நானாகவே எழுந்தபோது தலையில் இரண்டு ஆலம்பழங்கள் விழுந்து தெறித்தோடியது.

“நான் கெளம்புறேன் சார்” என்றவுடன் அவர் லேசாக நடுங்கிய தன் கைகளைக் கூப்பினார்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.