
ப்ரீத்தி தான் பயணம் செய்துகொண்டிருக்கும் விண்வெளிக் கப்பலிலிருந்து ஒரு ப்ரோபை (probe) அந்த அனாதைக் கிரகத்தின் மீது ரிமோட் (remote) உதவியுடன் தரையிறக்கினாள். அந்தப் ப்ரோப், அந்த அனாதை கிரகத்திலிருந்த மண்ணைச் சுரண்டித் தன்னிடமிருந்த வேதிப் பொருட்களைக் கொண்டு பல்வேறு வேதியியல் பரிசோதனைகளை மேற்கொண்டுவிட்டுத் தான் கண்டுகொண்டவைகளை ப்ரீத்திக்குச் செய்தியாக அனுப்பியது.
அந்தத் தரவுகளை தரவிறக்கம் செய்து முழுமையாகப் பார்த்த ப்ரீத்தியின் கண்கள் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஒளிர்ந்தன.
“இதோ பார்.. நீ ஒரு அனாதையாக இருக்கலாம். அனாதை ஆசிரமத்திலேயே வளர்ந்திருக்கலாம். உன் மீது பச்சாபம் இருக்கிறது. கருணை இருக்கிறது. ஆனால், அதற்காக நீ சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டுமென்பதில்லை.” என்றார் ஃபனிந்த்ரா.
“நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. அதற்கான முயற்சியையும்கூட எடுக்கவில்லை. ஏனெனில், நான் ஒருத்தி. ஒரு பெண். அதிலும் அனாதை. எந்தக் குடும்பத்தின் ஆதரவும் இன்றி வளர்ந்தவள். ஆகையால், என்னை வைத்து நீங்கள் என் ஆலோசனையைப் புறக்கணிக்கிறீர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன்,” என்றாள் ப்ரீத்தி.
“நீ தேவையில்லாமல் கற்பனை செய்துகொள்கிறாய், ப்ரீத்தி. இயற்கையாகவே உன் ஒருத்திக்குத் தோன்றுவது எங்கள் எல்லோரையும் சமாதானம் செய்யும் விதமாய் இருக்க வேண்டும். அப்படியில்லை எனும்போது இதற்கு மேல் பேச என்னிடம் எதுவுமில்லை. நீ மேலிடத்தில் பேசிக்கொள் ப்ரீத்தி” என்றுவிட்டு அவளின் பதிலைக் கேளாமலேயே எழுந்து வாசலைக் கடந்து ப்ரீத்தியின் பார்வையை விட்டகன்றார் ஃபனிந்த்ரா.
இதை லேசில் விடுவதாயில்லை என்று கறுவியபடி எழுந்து, நான்கு ப்ளாக்குகள் கடந்து தலைமைப் பொறியாளரின் அறையை அண்டினாள்.
“நான் உங்களிடம் இப்போதே பேசியாக வேண்டும்” என்றே துவங்கினாள் தலைமைப் பொறியாளர் ரஞ்சனிடம்.
“நீ எதைப்பற்றிப் பேச இருக்கிறாய் என்பது குறித்து எனக்குத் தகவல் முன்கூட்டியே வந்துவிட்டது. உன் எதிர் தரப்பையும் வரவழைப்போம். விவாதிப்போம். ஒளிவு மறைவுக்கு என்ன வேலை?” என்றுவிட்டு ரஞ்சன் ஃபனிந்திராவை இன்டர்காமில் அழைக்க, ஃபனிந்திரா சற்றைக்கெல்லாம் ரஞ்சன் முன் ஆஜரானார்.
ப்ரீத்தி, அந்த அறு நூறு சதுர அடி அலுவலக அறையை ஏதோ நீதிமன்றம் போல் பாவித்து தன் வாதங்களை முன்வைக்கலானாள்.
“நாம் இரண்டாவது பூமியைத் தேடிக்கொண்டிருக்கிறோம்தான். அதற்கெனப் பல்லாண்டு காலப் பயணம் மேற்கொள்ளவும் தயாராய் இருக்கிறோம். ஆனால், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்” என்றாள் ப்ரீத்தி.
ரஞ்சன் குழப்பமாய் ப்ரீத்தியைப் பார்க்க,
“ப்ரீத்தி ஒரு அனாதைக் கிரகத்தைப் பற்றி பேசுகிறாள்” என்றார் ஃபனிந்திரா.
“அனாதை கிரகங்கள் என்றால், முன்னெப்போதோ ஒரு சூரியனைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்துவிட்டு, தன்னைவிடப் பருமனான ஒரு கிரகத்தின் அசுரத்தனமான தலையீட்டால், சூரியக் குடும்பத்தில் தன் இடத்தை இழக்க நேர்ந்து, அனாதை ஆக்கப்பட்டு galaxy-யின் மையத்தை சுற்றிக்கொண்டிருக்கும் கிரகங்களைச் சொல்கிறாயா?”
“ஆம். ப்ரீத்தி அப்படி ஒன்றைக் குறித்துதான் பேசிக் கொண்டிருக்கிறாள்.”
ரஞ்சன் ப்ரீத்தியை ஏறிட்டார்.
“ப்ரீத்திக்கு எங்களைப் பற்றிய எண்ணம் என்னவென்றால், நாங்கள் இருபது பேருமாகச் சேர்ந்து அவளது யோசனைக்கு ஆதரவளிக்காமல் புறக்கணிக்கிறோமாம்” என்றார் ஃபனிந்திரா.
“நீ என்ன சொல்கிறாய் ப்ரீத்தி?” என்றார் ரஞ்சன்.
“ரஞ்சன், நாம் தேடிக்கொண்டிருப்பது மனிதர்கள் வாழ ஒரு கிரகத்தை. அதை சூரியனைச் சுற்றி வரும் ஒரு கிரகம் என்றே நீங்கள் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி ஒன்று கிடைத்தால் பரவாயில்லைதான். ஆனால், நடப்பதென்ன? நமக்கு மிகவும் அருகாமையிலிருக்கும் ஆன்ரோமெடா (Andromeda) நான்கு ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கிறது. அங்கும் மனிதர்கள் வாழக்கூடிய ஒரு கிரகம் இருக்குமா தெரியவில்லை. இனிமேல்தான் தேடவேண்டும். நான், நாம் குடியேறக்கூடிய ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்திருக்கிறேன். அதற்கு அத்தனை தொலைவு செல்ல வேண்டியதில்லை. ஒரே ஒரு குறை என்னவென்றால், அது ஒரு அனாதைக் கிரகம். ஆனால், என் கண்டுபிடிப்பை ஏறெடுத்தும் பார்க்கக்கூட யாரும் தயாராக இல்லை” என்றாள் ப்ரீத்தி.
“நீ கண்டுபிடித்திருக்கும் கிரகம் இருக்கட்டும். சூரியனையே சுற்றி வராத ஒரு கிரகம். அதில் photosynthesis நடக்காது. நீராதாரம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி இருக்குமோர் அனாதை கிரகத்தை யார்தான் திரும்பிப் பார்ப்பார்கள்?” என்றார் ஃபனிந்த்ரா.
“இதோ பார் ப்ரீத்தி. உன்னுடன் வேலை பார்ப்பவர்கள் மூலமாக எனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களை வைத்துப் பார்க்கிறேன். நீ ஒரு குடும்பச் சூழலில் வளராதவள் என்பது உன் தனிப்பட்ட விஷயம். அதையும், இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் உன் வேலையையும் நீ முடிச்சிட்டு சிக்கலாக்கிக் கொள்கிறாயோ என்று நான் சந்தேகிக்கிறேன்” என்றார் ரஞ்சன்.
“உங்களுக்கு ஏன் புரிய மறுக்கிறது? எனக்கு கண் கூடாகத் தெரிவது உங்களுக்கு ஏன் தெரிவதில்லை? என் பார்வையையும் உங்கள் பார்வையையும் பிரிக்கும் அந்த வஸ்து எது? Solar Systemத்தில் ஒன்பது கிரகங்கள் இருந்தன. ஒன்பதில் ஒன்றில் மட்டுமே புத்திசாலித்தனமான உயிர்கள் தோன்றின. என் கேள்வி என்னவென்றால், உயிர்க்க முடியாத எஞ்சியவைகளின் பொருட்டு ஒரு பாரிய குடும்பத்தின் அன்பும் அக்கறையும் எதற்காகிறது என்பதும், உயிர்க்கக்கூடிய ஒன்றின் மீது வெளிச்சம் விழாமல் இருளிலேயே நீள்வதும் எதற்காகிறது என்பதும்தான்.” என்றாள் ப்ரீத்தி வெடித்துச் சிதறும் ஓர் எரிமலையின் சீற்றத்துடன்.
“இந்த உலகத்தில் அன்பும் அக்கறையும் தேவைக்கும் அதிகமாய்ப் பெற்று பிறந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எல்லோரும் தங்களுக்குக் கிடைத்த அன்பையும் அக்கறையையும் நியாயப்படுத்திவிட்டார்களா? எத்தனை பேர், அந்த அன்புக்கும் அக்கறைக்கும் சிறிதும் பொருந்தாமல் இருந்திருக்கிறார்கள்? ஆனால், இன்னொரு புறம் அதே அன்பிலும், அக்கறையிலும் சில துளிகளைக்கூடப் பெறமுடியாமல் எத்தனை பேர் அனாதைகளாக இருக்கிறார்கள்? எந்த அன்பையும், அக்கறையையும் நீங்கள் மலை போல் குவித்தாலும், அதற்கு எவ்வித நியாயத்தையும் வழங்கிடாதவர்களுக்கே தொடர்ந்து அந்த அன்பையும் அக்கறையையும் வழங்கிக்கொண்டே இருப்பது செக்குமாட்டுத்தனமா, கையாலாகாததனமா? அல்லது என்ன இருந்தாலும் அது உங்கள் இரத்தம் என்கிற நினைப்பா?”
“Listen. நீ தேவையில்லாமல் பேசுகிறாய் ப்ரீத்தி. உன்னுடன் இனி பேச எனக்கொன்றும் இல்லை. உனக்கு இடப்பட்ட பணிகளை நீ செவ்வனே செய்தால், பூமியை விட்டு அறுநூறு ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும் இன்னொரு சூரியக் குடும்பத்தில் பூமியையொத்த கிரகத்தில் குடியேறச் செல்லும் இந்த விண்கப்பலில் உனக்கும் இடமுண்டு. இல்லையென்றால், நம்மிடம் உயிர்காக்கும் கலன்கள் (life boats) இருக்கின்றன. நாம் இன்னும் பூமியைவிட்டு வெகு தொலைவுக்கு வந்துவிடவில்லை. சில வாரப் பிரயாணத்தில் இந்த உயிர்காக்கும் கலன் உதவியுடன் நீ மீண்டும் பூமிக்குத் திரும்பி விடலாம். முடிவு உன் கையில். நீ போகலாம்” என்றார் ரஞ்சன்.
ஃபனிந்த்ரா ஏதோ திக்கில் தனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதாய் பார்த்துக்கொண்டிருக்க, அங்கே நிற்கப் பிடிக்காமல் அந்த விண்வெளிக் கப்பலில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குத் திரும்பினாள். கண்ணாடி முன் அமர்ந்தாள். முகம் பொத்தி அழுதாள். கண்ணாடி ஜன்னலினூடே விண்வெளியை வெறித்துப் பார்த்தாள்.
தூரத்தில் நட்சத்திரங்கள் தெரிந்தன. பிரபஞ்சத்தில் நெருக்கமாய் அமையப்பெற்ற நட்சத்திரங்கள், காலப் பிரயாணம் செய்து அவள் கண் முன் விரிந்திருக்கும் காட்சிகளில், ஓர் ஒவியம்போல் விரிந்து கிடந்தது. துருவங்களில் தெரியும் ஆரோராபோல் பல வண்ணங்களில் கடவுளின் உருவத்தைப் பிரதிபலித்தன.
‘குடும்பம் என்பது என்ன? ஒரு மைய விசையைச் சுற்றிக் கட்டமையும் ஏனைய சிறுசிறு விசைகளா? இந்த சிறு குறு விசைகளின் நோக்கம், அந்தப் பாரிய மைய விசைக்கு ஆதரவளிப்பதா? சூரியனைச் சுற்றிய பூமியின் இருப்பு வெறும் பூமியின் இருப்பால் சாத்தியப்படும் ஒன்று எனில், ஏன் எஞ்சிய எட்டு கிரகங்கள்? ஒரு வேளை, எஞ்சிய எட்டு கிரகங்களும்தாம் பூமியின் இருப்பைச் சாத்தியப்படுத்துகின்றனவா? அப்படியெனில், சூரியனைச் சுற்றிய ஒன்பது கிரகங்களின் விசைகள் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு, சமன்படும் இடங்களில்தான் ஒவ்வொரு கிரகத்தின் இருப்பும் சாத்தியமாகிறதா? சமன்படுதலும், சமரசமும்தான் குடும்பமென்கிற ஒருங்கிணைப்பின் மையமா?’ சிந்தனையில் ஆழ்ந்திருந்த ப்ரீத்தியின் முகம் சட்டென ஒளிர்ந்தது.
அவள் சட்டென தன் மடிக்கணிணியை விண்வெளிக் கப்பலின் மெயின் ஃப்ரேம் சூபர் கம்ப்யூட்டர்களோடு இணைத்துச் சில ஆணைகள் பிறப்பித்தாள். அவளுக்கும் அந்த கணிப்பொறிகளுக்குமான சம்பாஷணைகள் பற்பல புதிய திசைகளை, வெளிச்சங்களைக் காட்டின.
சற்றைக்கெல்லாம், அந்த விண்வெளிக் கப்பலிலிருந்து உயிர்காக்கும் கலன் என்று சொல்லப்படும் ஒருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய, ஆனால், கிரகம் விட்டுக் கிரகம் செல்ல ஏதுவான உந்து விசையை உற்பத்தி செய்யக்கூடிய சக்திகளைப் பெற்ற சிறிய விண்கலன் ஒன்று பிரிந்து விண்வெளியின் இருட்டில் வழுக்கிச் செல்வதை கணினி ரஞ்சனுக்கும், ஃபனிந்திராவுக்கு அறிவித்தது.
“அவள்போல் ஒரு வீம்பு பிடித்த பெண்ணை நான் பார்த்ததில்லை” என்றார் ஃபனிந்திரா.
“என் கவலை எல்லாம், நாம் போக இருக்கும் கிரகத்தில் புதிய மனிதக் கருக்களை உருவாக்க ஒரு பெண் தேவை. அதற்கு விண்வெளிக்கப்பலில் இருக்கும் பெண்களோடு, ப்ரீத்தியும் பயன்படுவாள் என்று நினைத்தேன். அந்த எண்ணிக்கையில் ஒன்று குறைவதைப் பற்றித்தான்” என்றார் ரஞ்சன், இருளில் வழுக்கி விலகிச்செல்லும் ப்ரீத்தியின் விண்கலனைப் பார்த்தபடி.
“விடுங்கள். ஒரு குடும்பத்தின் அரவணைப்போ ஆதரவோ இன்றி அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் அவள். அவளின் வளர்ப்பில், நிறைய அம்சங்கள் குறையாகியிருக்கும். அந்தக் குறைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டாம் என்றுதான் மருத்துவர்களும் யோசிக்க வாய்ப்பிருக்கிறது. ப்ரீத்தியின் இழப்பு இழப்புதான். ஆனால் அது அத்தனை பெரிய இழப்பு அல்ல.” என்றார் ஃபனிந்த்ரா.
ப்ரீத்தி தன் விண்கலனை அந்த இருண்ட சிறிய கிரகத்தின்மீது இறக்காமல் விண்வெளியின் எல்லையிலேயே நிறுத்தினாள். நொடிக்கு எண்பதாயிரம் மைல் வேகத்தில் பயணிக்கும் அந்தச் சிறிய கிரகம் இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் அவள் அவதானித்திருந்த அனாதைக் கிரகத்தைச் சமீபிக்க இருக்கிறது. அந்த அனாதைக் கிரகம் பூமியை விடவும் சற்றுப் பெரியது. ஆனால், ஜூபிடரை விடவும் சிறியது. அந்த கிரகத்தில் ஈர்ப்பு விசை இருந்தது. வளிமண்டலமும் இருந்தது. எல்லாவற்றையும்விட, ப்ரீத்தியின் அவதானிப்பில் தேர்வாகியிருந்தது அந்த அனாதைக் கிரகம்.
ப்ரீத்தி தன் விண்கலனிலேயே ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டைத் தயார் செய்தாள். பின் அதை முப்பது நிமிடங்களுக்குப்பின் வெடிக்கும்படி செட் (set) செய்துவிட்டு அந்த கிரகத்தை நோக்கி ஏவினாள். பின் தன் விண்கலனில் அமர்ந்து, அந்தச் சிறிய கிரகத்தின் அருகாமையிலிருந்து தன் கலனை விடுவித்துக்கொண்டு இருளில் மறைந்தாள். நிமிடங்கள் மெல்ல மெல்லக் கரையத் துவங்கின. சுமார் 30 நிமிடங்களுக்குப்பிறகு அந்தச் சிறிய கிரகம் தொலைவில் பிரகாசமாய் ஒளியை உமிழ்ந்தபடி வெடிப்பது தெரிந்தது. துளியும் சத்தமில்லை. அந்த பேரொளிக்கும், அந்தப் பேரமைதிக்கும் பொருத்தமே இல்லை. அந்த வெடிப்பு உருவாக்கிய விசையில், அந்த அனாதைக் கிரகம் உந்தித் தள்ளப்பட்டது. அதன் திசை பூமி இருக்கும் சூரியக் குடும்பத்தை (Solar system) நோக்கி இருந்தது.
ப்ரீத்தி, ரஞ்சனுக்கும் ஃபனிந்திராவுக்கும் கிடைக்கச் செய்வதான மின்னஞ்சல் ஒன்றை எழுதத்துவங்கினாள்.
‘நண்பர்களுக்கு,
நான் கண்டுபிடித்து வைத்திருந்த அந்த அனாதைக் கிரகத்தை ஏற்கனவே போதிய மட்டில் ஆராய்ந்துவிட்டேன்.
செவ்வாய், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய இந்த நான்கு கிரகத்தின் அளவு மற்றும் நிறைக்கும், புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களின் அளவு மற்றும் நிறைக்குமான வித்தியாசம் என்னை வெகு நாட்களாய் உறுத்திக்கொண்டே இருந்தது. போதாததற்கு, பூமியிலிருந்து பிரிந்து சென்றதாக நிலவும் தோற்றமளித்தது எனது ஐயங்களுக்கு வலு சேர்ப்பதாய் அமைந்தது. இவற்றிலுள்ள ஒற்றுமைகளை வைத்து எனக்குத் தோன்றியது என்னவென்றால், பூமி மற்றும் செவ்வாயின் இடத்தில் வேறொரு பெரிய கிரகம் முன்பொரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். அப்போது விண்வெளியில் ஒரு பெரிய கிரகம் சூரியனின் ஈர்ப்பு விசைக்குள் பலவந்தமாய் நுழைந்ததால், சூரியக் குடும்பத்திலிருந்து அந்தப் பெரிய கிரகம் தூக்கி வீசப்பட்டு அனாதை ஆகியிருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில், இப்படியாக சூரியக் குடும்பத்தில் இணைந்துவிட்ட அந்தப் பெரிய கிரகம் கால மாற்றத்தில் மூன்று துண்டுகளாக உடைந்திருக்க வேண்டும். ஒன்று செவ்வாயாகவும், மற்றொன்று பூமிக்கு நிலவாகவும் ஆகியிருக்க வேண்டும். இப்படி இல்லாவிட்டால் பூமிக்கும், சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் உள்ள உருவ மற்றும் இதர ஒற்றுமைகளை என்னால் நியாயப்படுத்த முடியவில்லை.
இதற்கெல்லாம் என்ன நிரூபண்ம் என்று நீங்கள் இப்போது கேட்கலாம். நான் கண்டுபிடித்த அனாதை கிரகம் ஒரு காலத்தில் சூரியக் குடும்பத்தில் பூமி , மற்றும் செவ்வாய் இருந்த இடத்தில்தான் இருந்தது எனில், கோல்டிலாக் மண்டலத்தில் (goldilock zone) இருந்ததன் பலனாய், அந்தக் கிரகத்தில் பூமியையொத்த நிலப்பரப்பு இருக்கவேண்டும் என்று நான் ஊகித்தேன். அதை நான் ஒரு probeஐ அனுப்பி சோதித்து கண்டுபிடித்த போதுதான், இது ஊர்ஜிதமானது. இப்போதுள்ள பூமி இனி மனிதர்கள் வாழ லாயக்கற்ற கிரகமாக ஆகிவிட்டது. செவ்வாய் அந்தக் கட்டத்தை எப்போதோ எட்டிவிட்டது. ஆக, இந்த இரு கிரகங்கள் சூரியக் குடும்பத்திற்கு எவ்வித அர்த்தத்தையும் இனி வரும் காலங்களில் சேர்க்கப்போவதில்லை. இந்த அனாதை கிரகமானது மீண்டும் சூரியனின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையுமானால், பூமியும், செவ்வாயும் வெளியே வீசப்பட்டு, அந்த இடத்திற்கு இந்தப் புதிய கிரகம் வந்துவிடலாம். கோல்டிலாக் மண்டலத்தில் ஒரு புதிய கிரகம். இதனால், நாம் வாழ புதியதாய் ஒரு கிரகம் கிடைத்துவிடும். கேட்கவே கிளர்ச்சியாக இருக்கிறதல்லவா?
இந்த உண்மைகளை உங்களுக்குப் புரிய வைக்கும் எனது முயற்சிகள் தோல்வி அடைந்ததில் இப்போது, மனித இனத்தைப் புதிய பூமியில் தழைக்க வைக்க நான் வேறு வாய்ப்புகளை உருவாக்கிவிட்டேன். உயிர் வாழ உங்கள் எல்லோருக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு, நீங்கள் எல்லோரும் பூமிக்கு திரும்புவதுதான். இந்தப் புதிய பூமி இப்போது சூரியக் குடும்பத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. என் கணிப்பு சரியானால், சில மாதங்களில், புதிய பூமி மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியானதாகிவிடும் அல்லது அது தகுதியாகும் காலம் வரை (ஒரு சில ஆண்டுகள்) இந்த புதிய பூமியிலேயேகூட பாதுகாப்பாய் நீள் உறக்கத்தில் காத்திருக்கலாம். நீங்கள் எல்லோரும் புதிய பூமிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் திரும்பி வர, worst case, ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கிறேன். நல்ல வேளை. நான் உங்கள் விண்வெளிக் கப்பலைவிட்டு நீங்குகையிலேயே புதிய மனித உயிர்களை உருவாக்குவதற்குத் தேவையான மனித கருக்களைக் கொண்டு வந்துவிட்டேன். ஆதலால், ஆயிரத்து இரு நூறு ஆண்டுகள் கழித்து நீங்கள் வந்தால், அப்போதிருக்கும் புதிய பூமியின் பிரஜைகள் உங்களை வேற்று கிரக வாசிகளாகப் பார்க்காமல் இருக்க ஏதாவது செய்ய முடியுமா பார்க்கிறேன்.
ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். வாழ்வனுபவம் என்ற ஒன்று இருக்கிறது. நோக்கம் என்று ஒன்று இருக்கிறது. பூமியின் இடத்தைப் பிடிக்கக்கூடிய எல்லாத் தகுதிகளையும் கொண்டிருந்தும் ஒரு கிரகம் ஏன் அனாதையாய்த் திரியவேண்டும்? அழிந்தவிட்ட பின்பும் ஒரு கிரகம், உயிர்த்து வைத்திருக்கத் தகுதி பெற்ற ஒரு இடத்தை ஏன் தொடர்ந்து ஆக்ரமித்திருக்க வேண்டும்? அதை ஓர் அமைப்பு ஏன் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்? பூமியின் இடத்திற்கு இந்த அனாதைக் கிரகம் வருவதை பிரபஞ்சம் என்கிற பாரிய இறை அமைப்பு அனுமதிக்கிறது என்னும்போது மனிதனாகப் பார்த்து உருவாக்கிய குடும்ப அமைப்பு எம்மாத்திரம்?
நன்றி.”
மின்னஞ்சலை அனுப்பிவிட்டு விண்கலனைச் சூரியனை நோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கையிலேயே கணிப்பொறியின் மூலம் தொலை நோக்கிகளை இயக்கிப் பார்த்தாள் ப்ரீத்தி. சூரியக் குடும்பத்தில் குருவுக்கும் சூரியனுக்குமிடையே மூன்று கிரகங்கள் மட்டுமே தோன்றின. இனி புதிய பூமியில் ஒரு வருடத்திற்கு, எத்தனை நாள், ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம், ஒரு மணி நேரத்திற்கு எத்தனை நிமிடங்கள், நிமிடத்திற்கு எத்தனை நொடிகள் என்று கணக்கிடத் துவங்கினாள் ப்ரீத்தி. இனி வரும் காலத்தை மேலாண்மை செய்ய அவளுக்குப் புதிய கால அளவீடுகள் தேவைப்படும் என்றே தோன்றியது.
***