ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் கடந்த இரு வாரங்களாக ஃப்ளோரிடா மாநிலம் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வெற்றி பெறாத குடியரசுக் கட்சி வேட்பாளர் அதிபராவது கடினம் என்ற சூழலில் ட்ரம்ப் மீண்டும் அதிபராக ஃப்ளோரிடாவில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இங்கு வாழும் பல்வேறு சிறுபான்மையின மக்களும் பழமைவாதிகளும் வெள்ளை மாளிகையின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் களமாகியுள்ளதால் இரு கட்சியினரும் தொற்றுநோய்ப் பரவலையும் மீறி தீவிரமாக இயங்கி வருகிறார்கள். 

1999ம் வருடத்திலிருந்து மாநிலத்தில் ஆளும் கட்சியாக குடியரசுக் கட்சியினரே இருந்து வருகிறார்கள். அதிகளவில் மக்கள் வாக்களிக்காததும் பழமைவாதிகள் நிறைந்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இவர்களின் வெற்றிக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் வாக்காளர்கள் பலரையும் குற்றவாளிகளாகச் சித்திரித்து வாக்களிக்கத் தடைசெய்து வாக்குச்சாவடிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து வெற்றிகண்ட இவர்களின் அரசியல் பாணியை 2020 தேர்தலில் மாற்றியமைக்க ஜனநாயகக் கட்சியினர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். அதன் முதல் முயற்சியாக, குற்றவாளிகளுக்கு நிராகரிக்கப்பட்டிருந்த வாக்குரிமை மீண்டும் கிடைத்திடப் போராடி வருகிறார்கள்.

2000ம் வருடம் ஜார்ஜ் புஷ் ஜூனியர், அல் கோருக்கிடையே நடந்த தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்தது ஃப்ளோரிடா மாநிலம். அமெரிக்க அரசியலில் களங்கத்தை ஏற்படுத்திய அன்றைய களேபரங்களை அத்தனை எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. அதிக வித்தியாசமில்லாத வெற்றி வாக்குகளின் எண்ணிக்கையை ஒரு மாதத்திற்கும் மேலாக மறுபரிசீலனை செய்து பல தகிடுதத்தங்களுக்குப் பிறகு அல் கோரை விட கூடுதலாக 537 வாக்குகள் பெற்றதாக ஜூனியர் புஷ்ஷை அதிபராக அறிவித்தது உச்ச நீதிமன்றம். அதற்கு அன்றைய மாநில ஆளுநரும் புஷ்ஷின் தம்பியுமான ஜெப் புஷ் மற்றும் குடியரசுக் கட்சியின் தலையீடும் காரணம் என்பதை நாடே அறியும். குடியரசுக் கட்சியினர் கோலோச்சும் இம்மாநிலத்தில் இத்தகைய சம்பவங்கள் வரும் நவம்பர் மாத தேர்தலிலும் நடக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் ஜனநாயக கட்சியினர் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் முதல் நடவடிக்கைதான் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது. 

1877ல் பிரிவினைவாதம் முற்றுப்பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதும் ஆதிக்க வெள்ளையினத்தவரால் அதிகாரப்பூர்வமாக இயற்றப்பட்ட ‘ஜிம் க்ரோ சட்டங்கள்’ குற்றவாளிகள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் வகையில் கறுப்பர்களுக்கு எதிராகவே ஓட்டுரிமையைக் காத்து வந்தது. 1888 முதல் 1968 வரை ஃப்ளோரிடா மாநிலத்தில் கறுப்பின சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. 

நூற்றாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியற்றவர்களாக கருதப்பட்டுத் தடைசெய்யப்பட்டிருந்த நிலை இன்று பல மாநிலங்களிலும் மாறிவருகிறது. மெய்ன், வெர்மாண்ட் மாநிலங்களில் சிறைத் தண்டனை பெற்றிருந்தாலும் வாக்களிக்க முடியும். பதினாறு மாநிலங்களிலும் நாட்டின் தலைநகர் டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியாவிலும் சிறையில் இருக்கும்வரை குற்றவாளிகள் வாக்களிக்க முடியாது. தண்டனைக் காலம் முடிந்தவுடன் வாக்களிக்கும் உரிமையை மீண்டும் பெற்றிடும் வகையில் சட்டங்கள் உள்ளது. 21 மாநிலங்களில் சிறைத் தண்டனையின் போதும் அதற்குப் பிறகான தண்டனைக் காலம் (பரோல்) முடியும் வரையிலும் , தண்டனைக்கான கட்டணங்கள் செலுத்தும் வரையிலும் குற்றவாளிகள் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்கள். 11 மாநிலங்களில் கடுமையான குற்றங்களுக்காகச் சிறைக்குச் சென்றவர்கள் நிரந்தரமாக வாக்களிக்க முடியாது. 


ஃப்ளோரிடா மாநிலத்தில் கறுப்பின மக்கள் மட்டுமே வாழ்ந்த சரசோட்டா நகரில் வளர்ந்தவர் பெட்டி ரிடில். தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் தாயார் கொலை செய்யப்பட, தாயாரின் சகோதரியின் கண்காணிப்பில் வளர்ந்தவர். சிறு வயதிலேயே சண்டை சச்சரவுகளில் ஈடுபட்ட பெட்டி ரிடில் பதினைந்தாவது வயதில் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது எதிராளியைக் கண்களில் குத்திய குற்றத்திற்காக 1975ம் வருடம் சிறை சென்றவர். தண்டனைக் காலம் முடிந்தவுடன் போதை மருந்துகளுக்கு அடிமையாகி விபச்சாரம், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுச் சிறைக்குச் செல்வதும் வெளிவருவதும் பெற்ற குழந்தைகளையும் கவனிக்க மறந்தவராக 2002ம் வருடம் போதைப்பொருட்களை விற்ற குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் மத குருமார்களின் பிரசங்கங்ளைக் கேட்டு மனம் திருந்தியவராக, இனி நிறைவான வாழ்க்கையை குழந்தைகளுடன் வாழ்வதென தண்டனைக் காலம் முடிந்தவுடன் மகளுடன் சேர்ந்து “No Place Like Home” எனும் நடமாடும் உணவகத்தைத் தொடங்கினார். வேலை செய்துகொண்டே சட்ட ஆலோசகர்களுக்கு உதவியாகப் பணிபுரியும் வகையில் பாராலீகல் பட்டப் படிப்பையும் தொடர்ந்தார். அவருடைய மாற்றத்தைக் கண்ட சட்ட அலுவலகம் ஒன்று அவருக்கு வேலையும் வழங்க, ‘மனதை ஒருமுகப்படுத்தினால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும்’ என்பதை கற்றுக்கொண்டதாகக் கூறியவர் 2016ல் பணியில் சேர்ந்து வீடும் வண்டியும் வாங்கி வாழ்க்கையில் முன்னேறினாலும் தேர்தலில் மட்டும் வாக்களிக்கவே முடியவில்லை.

1960-1970களில் ‘ஜிம் க்ரோ சட்டங்கள்’ நீக்கப்பட்ட பிறகு, குற்றம் புரிந்தவர்களாக அறியப்படுபவர்கள், தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன், பல மாநிலங்களில் வாக்களிக்க அனுமதிக்கும்போது, ஃப்ளோரிடாவும் வேறு சில மாநிலங்களும் அந்த தடையை மாற்றிக்கொள்ளவே இல்லை. மேலும் இம்மாநிலங்களில் போதை மருந்துக் குற்றங்களுக்காக அதிக அளவில் கறுப்பர்கள் சிறைத் தண்டனை பெறுகிறார்கள். இதனால் ஐந்தில் ஒரு கறுப்பர் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்.

சிறு குற்றங்களுக்காகச் சிறை சென்றவர்களின் வாக்களிக்கும் உரிமையைத் தடை செய்திருந்த சட்டத்திற்கு எதிராகப் போராடி நவம்பர் 2018ல் “Amendment Four” மாறுதலைக் கொண்டு வந்தார் சட்டம் பயின்ற குற்றவாளி டெஸ்மாண்ட் மீட். அனைத்துக் கட்சியினரையும் சேர்ந்த 65 சதவிகித மாநில மக்கள் இதற்கு ஆதரவு அளித்திருந்தார்கள். அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளரும் ஃப்ளோரிடா மாநில ஆளுநருமான ரான் டி சான்டிஸின் ஆதரவுடன் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது .

‘சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு’ என்று தன்னுடைய 62வது வயதில் முதன்முறையாக மார்ச் 2020ல் நடந்த ப்ரைமரி தேர்தலில் மகிழ்வுடன் வாக்களித்தார் ரிடில் மற்றும் அவரைப்போல் இளம் வயதில் சிறை சென்ற பலரும். வரும் நவம்பரில் அதிபர் தேர்தலுக்காகக் காத்திருக்கும் வேளையில் பெரும்பான்மை குடியரசுக் கட்சியினரைக் கொண்டுள்ள ஃப்ளோரிடா மாநில அரசு “Amendment Four”ல் மேலும் சில திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளிவந்திருந்தாலும் நீதிமன்றம் விதித்த பரோல் மற்றும் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்திய பின்னரே குற்றவாளிகள் வாக்களிக்க முடியும் என்ற புதியதொரு சட்ட மாறுதலை இந்த வருடத்தில் கொண்டுவந்துள்ளது. இதனால் 770,000 வாக்காளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் கறுப்பர்கள் அதிகமாக! 

1890களில் வாக்களிக்க வேண்டுமானால் “தேர்தல் வரி” செலுத்த வேண்டும் என்ற சட்டத்தால் ஏழைகள் வாக்களிக்க முடியாமல் போனது என்பது வரலாறு. 1975 வரை நீடித்த அச்சட்டம் முற்றிலும் நீக்கப்பட்ட நிலையில் தற்போதைய புதிய சட்ட மாறுதல் அன்றைய “தேர்தல் வரி”யை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருவதாக ரிடிலும் 16 முன்னாள் குற்றவாளிகளும் ஆளுநரை எதிர்த்து வழக்குத் தொடர, ஃபெடரல் நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதனை எதிர்த்து ஆளுநரும் ‘Eleventh Circuit Court of Appeals’ல் மேல்முறையீடு செய்து அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியினருக்கு ஆதரவான நீதிபதிகள் கவர்னருக்குச் சாதகமாகவே ஆலோசனைகளை வழங்கி மனித உரிமையை மீறுவதாக ஜனநாயக கட்சியினரின் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஃப்ளோரிடா வாக்காளர்கள் அதிபர் தேர்தலுக்காகப் பதிவு செய்யும் கடைசி நாளான அக்டோபர் 5ந்தேதி நெருங்கி வரும் வேளையில் இந்த வழக்கின் முடிவுகள் வெளிவர உள்ளன. குற்றவாளிகளுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அனைவராலும் இழப்பீட்டுத் தொகையை குறுகிய காலத்திற்குள் செலுத்தி வரும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். 

பணம் செலுத்த முடியாத மக்கள் வாக்களிக்காமலிருந்தால் குடியரசுக்கட்சி ஜெயித்துவிடும் சாத்தியம் இருப்பதாலேயே தீர்ப்பு வழங்காமல் இருப்பதாக ரிடில் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளின் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தி வாக்களிக்கப் பதிவுசெய்ய நியூயார்க் தொழிலதிபர் மைக்கேல் ப்ளூம்பெர்க் 16 மில்லியன்கள் வழங்கியதும் நாட்டு மக்களை வியப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது! அவருடைய ஒரே குறிக்கோள் இந்த தேர்தலில் ட்ரம்ப் தோற்க வேண்டும் என்பதே. 

2016 தேர்தலில் தேசிய அளவில் ஹில்லரி க்ளிண்டன் 65,853,514 பாப்புலர் வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருந்திருந்தாலும் 62,984,828 வாக்குகள் பெற்ற ட்ரம்ப் அதிக அளவில் எலெக்டோரல் வாக்குகளைப் பெற்று அதிபரானார். ஃப்ளோரிடாவில் ட்ரம்ப் 48.6% வாக்குகளும் ஹில்லரி 47.4% வாக்குகளும் பெற்றிருந்தார்கள். மிகவும் குறுகிய சதவிகித வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெறும் சமர்க்களமான மாநிலங்களே (battleground states) அதிபரைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றன. இந்த வருடத் தேர்தலில் தொற்றுநோய்ப் பரவல் காரணமாக வாக்குச் சாவடிகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைந்துவிடும் சாத்தியம் இருப்பதும் ஜனநாயகக் கட்சியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தபால் மூலம் வாக்களிக்கும் முறையை மக்களுக்குச் சென்றடையும் வகையில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தாலும் அதில் இருக்கும் பாதகங்களைக் குடியரசுக் கட்சியினர் விவாதித்து வருவதும் 2000ம் வருட தேர்தல் நாடகம் மீண்டும் அரங்கேறுமோ என்ற குழப்பமும் ஏற்பட்டிருப்பதால் ஃப்ளோரிடா மாநிலத் தேர்தல் முடிவுகள் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளன என்பதே உண்மை. 

வரும் தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டால் குடியரசுக் கட்சியினரை வீழ்த்திவிடலாம் என்பது ஜனநாயகக் கட்சியினரின் அரசியல்  கணக்கு. தற்போதைய கருத்துக் கணிப்புகளின்படி ஃப்ளோரிடாவில் ஜோ பைடன்  தோற்றாலும் அதிபராக வெற்றிபெரும் வாய்ப்புகள் இருப்பதால் மாநிலத்தின் 29 எலெக்டோரல் வாக்குகளையும்  பெற்று அதிபராக வேண்டிய நிலையில் இருக்கிறார் ட்ரம்ப்.

அதிபரே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஃப்ளோரிடா மக்களின் வெற்றி வாக்குகள் தீர்மானிக்கப் போகும் வெற்றியாளர் யார் என்ற கூடுதல் எதிர்பார்ப்புக்கான விடை இன்னும் முப்பது நாள்களில் தெரிந்துவிடும். அதுவரை புரியாத புதிராகவே  தொடரும் அரசியல் நாடகங்கள்!

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.