வ. அதியமான் கவிதைகள்

ஆராதனை

துளையில்
இதழ்
பொருத்து
அது போதும்

நலுங்காத
செவ்வரிகளை
செதுக்கி எடுத்து
தடம் பதி

உனக்கென
கனிந்து
வெந்து தணிந்த
ஒரு வனத்தை
ஏந்தி வந்திருக்கிறேன்

ஊறியெழும்
சிறுமூச்சில்
மீளவும் ஓர் முறை
அப்பெருவனத்தை
மீட்டெழுப்பு

ஆழங்களும்
நுனிகளும்
சுருளவிழ்ந்து
துயிலெழுந்து
நடனமிட
தொட்டெழுப்பு

இதழூறும்
சிறு பொழுதில்
வெறுங்குழல் அல்ல
நிலம் நடுங்க
கரையுடைத்து
அலைபுரளும்
வன நதி நான்

ஆசி

அம்மாவின்
பாம்புவிரல் மோதிரம் முதல்
மூத்தவனின்
கலர் பென்சில்கள் வரை

அந்த பிஞ்சு
உள்ளங்கைகளில்
அடங்கும்
அத்தனை பொருட்களும்
தொலைத்து விளையாட
அம்மு குட்டிக்கு
போதுமானதாய்
பொருத்தமானதாய்
இருப்பதில்லை
இப்போது

முன்னிலும்
சில அங்குலங்கள்
இப்போது அவள்
வளர்ந்துவிட்டதாக
சொல்லிக் கொள்கிறார்களே

மாயத்தில் ஓடி மறைந்து
கண்ணாமூச்சி விளையாடும்
அவள் கைப்பொருட்களும்
வளரத்தானே வேண்டும்?

அனைத்தும் அறிந்தும்
ஊர் எல்லையில்
அப்பாவியாய்
அமர்ந்திருக்கும்
தெக்கூரான் மலையை

பருவம் கனிந்த
மழைநாட்களில் மட்டும்
துள்ளும் குமரியாகிவிடும்
திருக்கொன்றை
சிற்றோடையை

எழுநூறாண்டு
மெருகேறிய பேரழகில்
உலகநாயகி உடன் அமர்ந்த
பொன்னார் மேனியன்
கற்கோயிலை

கடுந்தாகத்தில்
வாய்பிளந்து
விழிபூத்து
காத்திருக்கும்
மாவனூர் ஏரியை

இவ்வுலகையே
வெள்ளியில்
கரைத்து குடித்துவிட
வெறிகொண்டு
காயும் முழுநிலவை

அவள் ஸ்கூலுக்கு
லன்ச் பாக்ஸில்
மறைத்தெடுத்துக்
கொண்டு செல்கிறாள்

பேரரசியின்
ஆணைகளை
ஒரு நாளும்
மீறுவதில்லை
அவைகள்

மறக்காமல்
அவை அனைத்தையும்
நாளுக்கு
ஒவ்வொன்றாய்
தொலைத்துவிட்டு
வீடு வந்து சேர்கிறாள்

இன்னுமொரு வனம்
இன்னுமொரு கடல்
இன்னுமொரு பாலை
இன்னுமொரு சூரியன்
இன்னுமொரு வானம்

அவள் பிஞ்சுக் கைகளால்
தொலைந்து போய்விட
காத்திருந்து காத்திருந்து
இறங்கி வருகிறது

வினைவலன்

பால் திரளும்
நெல்மணிகளில்
தேன் திரளும்
செங்கனிகளில்
சாத்தியமாகியதை

முகிழப் போகும்
அரும்பிதழ்களில்
முடியப் போகும்
தூறல் துளிகளில்
சாத்தியமாகியதை

கனிந்து சரியும்
பொன் அந்திகளில்
எரிந்து ஒளிரும்
மின்மினிகளில்
சாத்தியமாகியதை

மது நுரைக்கும்
புலரி கானங்களில்
ஒளி துளிர்க்கும்
கொழுந்தளிர் நுனிகளில்
சாத்தியமாகியதை

அலைபுரளும்
சிற்றோடைகளில்
பொன் விரியும்
பாலைமணற் பருக்கைகளில்
சாத்தியமாகியதை

பால் பொங்கும்
முழு நிலவுகளில்
வனம் ததும்பும்
சிறுகுருவி கூடுகளில்
சாத்தியமாகியதை

இதோ இன்று
பதமிட்டு குழைத்தெடுத்த
இந்த பச்சைத் தசைகளிலும்
அந்த ஏதோ ஒன்றை
எவனோ
எப்படியோ
அப்படியே
சாத்தியமாக்கி இருக்கிறான்

சிறு மணிச்சுடர்
ஒளிரத்தான்
இருட்பெருங்கடலை
அகலாக்கியவன்
அல்லவா
அவன்?

புதையல்

மயானத்தின்
நட்டநடுப் பகலில்
ஆளரவமில்லா
ஒற்றையடித் தடத்தில்
என் பாதம் இடறிய
உலர்ந்த ஒரு தாடை
எலும்புத் துண்டை
கைகளில் எடுக்கிறேன்

ஓசையெழாது
நகைத்தபடி
ஒரு முழு மனிதனும்
அத்தாடையோடு
கூடவே எழுகிறான்

மழைக்கால ஈசலாய்
அவனோடு
அவனைத் தரித்திருந்த
ஒரு உயிர் குலமும்
சேர்ந்தே எழுகிறது

தாய் மடியாய்
அவ்வுயிர் குலத்தை
மேவியிருந்த
ஒரு பேருலகமும்
அதனுடன்
வெடித்தெழுகிறது

அருமணியாரத்தில்
அவ்வுலகினை
சிறுமணியாக்கி
விளையாடும்
முடிவிலா ஒரு விசும்பும்
எங்கும் விரிந்தெழுகிறது

நடுநடுங்கிய
என் சின்னஞ்சிறு
கரங்களிலிருந்து
தாங்கொணா
ஒரு பிரபஞ்சத்தை
வீசி எறிந்துவிட்டு
வேக வேகமாய்
திரும்பிப் பாராது நகர்கிறேன்

அனலமர் தேவி

இரவும் பகலும்
அகமும் புறமும்
நிலமெரிந்து கரியும்
அனல் எனக்கு

கனியா இரவுகளை
தின்று தீர்ப்பதற்கில்லை
சிறு தடமும் அறியாது
விழுங்கித் தீர்க்கிறேன்

புலரிச் சிவப்பில்
அந்த செவ்வானம்
ஒரு முறை
புரண்டு படுக்கிறது

இமைப்பீலி மலர
கனன்றெரியும்
அனலாற்றை
பாதச் சிறுவிரலில்
மெட்டியாக்கி
பூணுகிறாய்

முலை தேடும்
விழி திறவா
சிறுமகவின்
தளிர் விரல்களாய்
உனைத் தொட
கவ்வி எழுகிறது
இப்பொற்தழல்கள்

உலைபூத்து மலர்ந்த
உன் பருக்கைகள்
செதில் செதிலாய்
கனிகிறது
என் தாலத்தில்
இன்று

முகில் உலா
முன்பென்றால்
விரல்நுனி மொட்டின்
தொடுகையே
போதுமானது

ஆனால்
இப்போதோ
அதுவும் கூட
தேவைப்படாமல்
ஆயிற்று

விழி கனன்ற
பார்வை
கொஞ்சம்
உற்று உறுத்தாலே
போதுமென்று
ஆகிவிட்டது

நெஞ்சம் அதிர
விழிகள் பார்த்திருக்கவே
மெல்ல மெல்ல
நலுங்கி கலங்கி கரைந்து
காணாமல் மாயமாகிறது

திசையெங்கும்
தீட்டி வைத்து
வண்ணங்கள்
கொப்பளிக்கும்
அந்த பேருலகு

***

2 Replies to “வ. அதியமான் கவிதைகள்”

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.