வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2

கலையின் நோக்கம் தீர்வல்ல

கம்பா நதியின் தியோப்ளஸ், ரெயினீஸ் ஐயர் தெருவின் தியோடராக வருகிறான். வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெருக்காரர்களும் சாணை பிடிப்பவனும்’ என்ற கவிதை, நாவலில் அடைக்கலாபுரம் கோயில் பாதிரியார் ஜேம்ஸ் ஐயருடைய மகன் எபனின் கவிதையாக வருகிறது. கவிஞர் கல்யாண்ஜி, நாவலுக்குள் அதிகம் பேசாத, ஆனால் ஆழமான அன்பு காட்டத்தெரிந்த கல்யாணியாக வருகிறார். 

முத்துகிருஷ்ணன்தான் பாலகிருஷ்ணன். அவரே எம்.எல். நாவலிலும் வருகிறார். சோவியத் இலக்கியங்களைப் படித்து விவாதிப்பதோடு மார்க்ஸியம் வகுப்பு நடத்தும் முத்துகிருஷ்ணன், நாவலில் பாலகிருஷ்ணனாக மாறினாலும் நா.வானமாமலையின் ஆய்வு வகுப்புகளிலிருந்து வெளியேறி, நல்ல காப்பி குடித்துவிட்டு, சினிமா பார்க்கச் செல்லும் வண்ணநிலவன், நெல்லையப்பனாக ‘காலம்’ நாவலின் மார்க்ஸிய வகுப்பில் இருந்து வெளியேறுகிறார். நெல்லையப்பன் என்ற குமாஸ்தா, கதையில் அத்தை மகளைக் கட்டிக்கொண்டு அங்கேயே இருக்கிறான். ராமச்சந்திரன் என்ற வண்ணநிலவனோ தப்பித்து, சென்னை வருகிறார்.   

கம்பா நதியின் பாப்பையா, ‘ஆற்றுப் பாலத்தைப் பஸ் கடப்பதற்குள் எதிரில் லாரி வந்தால், இந்த இண்டர்வியூவில் வேலை கிடைக்கும்’ என்று நினைக்கிறான். கண் விழிக்கையில், ‘மேல் வீட்டில் குளிப்பது மீனாவாக இருந்தால், இன்று இண்டர்வியூவில் கட்டாயம் வேலை கிடைக்கும்’ என்று மனத்துக்கு இதமானவற்றைக் கற்பனை செய்வான் பாப்பையா. சிறுபிள்ளைத்தனமென்றாலும் இறுகிய வாழ்க்கையில், தனக்குத் தானே நம்பிக்கைக் கொடுத்துக்கொள்ளும் முயற்சிதான் பாப்பையாவின் இந்த மன விளையாட்டு. எல்.டி.எஸ். பீரியட்களில் சினிமா பாட்டுக்களைப் பாடி நடிப்பதை, கம்பா நதியின் பாப்பையாவும் நினைப்பான். ரெயினீஸ் ஐயர் தெரு கிரேஸும் நினைப்பாள்.

‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவலில், முன் வாசலில் தெரு நடைக்கல்லில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் டாரதிக்கு, கோழிக்குஞ்சுகள் மட்டும் மேய்ந்துகொண்டிருக்கும் தெருவின் தனிமை துயர் தருகிறது. தெருவில் அப்போது யாராவது நடந்து வந்தால் சந்தோஷமாக இருக்கும் போலிருக்கும் அவளுக்கு. கம்பா நதியின் நெல்லையப்பனுக்கும், காந்திமதி அம்மனின் சந்நிதியில் யாருமே இல்லாமல் தான் மட்டும் கண்மூடி நின்று கொண்டிருப்பது என்னவோ போலிருக்கும். பட்டரின் குரல் தூரத்தில் ஒலிக்க, மல்லிகைப் பூவின் வாசனை நாசியில் ஏறும் கணத்தில், ‘அந்தத் தனிமையைக் குலைக்க யாராவது வர மாட்டார்களா?’ என்று தவிக்கிறான். தங்களின் மனம் திண்டாடும்போது, வெளியில் இருந்து ஏதோ ஓர் அபூர்வம் தங்க்ளைக் காத்தருளும், மனநெருக்கடியில் இருந்து வெளிவர உதவும் என்று வண்ணநிலவனின் மாந்தர்கள் நம்புகிறார்கள்.

குடும்பங்களுக்குள், முறையற்ற உறவுகளின்மீது ஈர்ப்பு உண்டாவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே நாவல்களுக்குள் சுழல்கிறது. அக்கா முறை காந்திமதியிடம் பேசிப் பழக நெல்லையப்பனுக்குள் கிளர்ச்சி இருப்பதும், அவள் இயல்பாகத் தொட்டுப் பேசினாலும் இவனுக்குள் இனம்புரியாத உடலின்பம் வருவதையும் குற்றவுணர்ச்சியோடு அனுபவிக்கிறான். காந்திமதி காதலிக்கும் சபாபதி தனக்கும் நண்பன், நண்பனுக்குத் துரோகம் செய்கிறோமோ என்று மனம் குமைந்து, உடனே அதிலிருந்து வெளியேற விரும்புகிறான். 

சிற்றப்பா முறையுள்ளவரின் மகனான பாப்பையாவிடம் பழகும் கோமதிக்கும் மனத்தில் அவன் மேல் காதல் என்று சொல்ல முடியாது. ஆனால் தனியாகப் பேசினால் பரவாயில்லை என்று ஆசைப்படுகிறாள். ‘என்னன்னு தெரியலை, அழணும்போல் இருந்துச்சி, அழுதேன்’ என்று பாப்பையா முன்னால் அழுது, துக்கத்தைக் கரைத்துக் கொள்கிறாள். அவனும் அவளுடைய புடைவை வாசனையும், தலையில் தடவியிருக்கிற தேங்காய் எண்ணெய் வாசனையும் நுகர்கிற அருகாமையில் அவளுடன் நடந்துபோகப் பிரியப்படுகிறான். 

இவையெல்லாம் காதலா? காமமா? பருவத்தின் கிளர்ச்சியா? சூழல் உண்டாக்கிக் கொடுக்கும் நெருக்கத்தின் பாலியல் விழைவா? நான்கு ரதவீதிகளுக்குள், ஊருக்குத் தென்கிழக்காக ஓடிக்கொண்டிருக்கிற தாமிரபரணியின் கரைக்குள் ஒடுங்கி, இரவில் தண்ணீர் பிழிந்துவிட்டு, வெறும் சோறு சாப்பிடுகிற மக்களின் வாழ்க்கைக்குள் என்ன விடாப்பிடித்தனம் வந்துவிட முடியும் என்ற பக்குவமா? நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, வேறொரு நபர்களாக உருமாறி நிற்கிறார்கள். ஆறு என்பது நீரை மட்டுமா குறிக்கிறது? அது குணத்தின் எதிரொலியும் அல்லவா என்று கேட்பது போலிருக்கிறது வண்ணநிலவனை வாசிக்கையில்.

வயதிற்கு வந்த பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்துக்கொண்டு, இழுக்க முடியாத குடும்ப பாரத்தை இழுத்துக் கொண்டிருக்கும் தந்தைகள், தன் கையருகில் இருக்கும் மாப்பிள்ளைகளைப் பிடித்துப் போடப் பார்க்கிறார்கள். சிதம்பரம் பிள்ளை, எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல், ஓடியாடி வேலை செய்கிற நெல்லையப்பனுக்குத் தன் மூத்த மகளைத் திருமணம் செய்துகொடுத்துவிட்டால் நிம்மதி என்று நினைக்கிறார். முப்பது வருஷமாய் குமாஸ்தா உத்தியோகம் பார்த்து ஓய்ந்துபோன அவரின் கால்களுக்கு, அலைந்து திரிந்து தன் பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்த்து வைக்கத் தெம்பில்லை. வசதியும் இல்லை. தன்னைப்போல் ஒரு குமாஸ்தா இருந்தால் போதுமென்று விரும்புகிறார். 

‘கம்பா நதி’யின் சரவணப் பிள்ளை, தன்னுடன் கடையில் வேலை பார்க்கும் அம்மா அப்பா இல்லாத கதிரேசனை தன் மகளுக்கு மாப்பிள்ளையாக்குகிறார். 

வாழ்க்கை எவ்வளவுதான் துயரங்களைத் தூக்கித் தூக்கித் தலைமேல் வைத்தாலும், தலைச்சுமையையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றனவே? என்று ஏமாற்றங்களை, ஒரு சூரிய அஸ்தமனத்தில் கடந்து போகிறார்கள், அடுத்த நாள் கேண்டீனில் நெல்லையப்பனுக்கும் சேர்த்து பில் கொடுக்கும் சிதம்பரம் பிள்ளையைப்போல்.

சதைப் பகுதியைத் துருத்தவிட்டு உள்ளடங்கி இருக்கும் நகங்களை ரசிக்கும் கோமதிக்கு, கரடுமுரடாகச் சுருண்டு, அந்தச் சுருட்டையின் உள்ளே மண் ஏறி செம்மிப் போயிருக்கும் நகம் இருக்கும் ஆள்தான் மணமகனாகிறான். அவள் மணமேடையில் பாப்பையாவின் கால் நகங்களை நினைத்துக்கொண்டே, குனிந்து தாலி வாங்கிக் கொள்கிறாள். 

காரணங்கள் சொல்லாமல், ஆனால் மனத்திற்குப் பிடித்தவனிடம்/ பிடித்தவளிடம் அழுவதைப்போல் உலகில் உன்னதமான தருணம் வேறொன்று இருக்கிறதா? அழுகையின் வழியாக இருவரும் இந்த உலகம் தன் பிரியத்திற்குரியதாகத்தான் இருக்கிறது என்று நம்புகிறார்கள். ‘இந்தக் குளம் அவனுக்குரியது. காலடியில் கிடக்கும் தண்ணீர் அவனுக்குரியது. பின்புறமாய் தச்சநல்லூர் போகிற ரோடு அவன் போவதற்கென்றே போடப்பட்டிருக்கிறது’ என்று அவள் நினைக்க, அவனோ, ‘அழும் அவளுக்கு ஆறுதல் சொல்வதற்குச் சரியான வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் தன்னுடைய துரதிர்ஷ்டம் அவைகள் தன்னுடைய நினைவிற்கே வரவில்லை. ஆனாலும் தன் முன்னிலையில் அழ நினைத்து, அவள் அழுதது தனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது’ என்கிறான். ஓர் அழுகை இருவரையும் கட்டிப் போடுகிறது. தங்களின் வாழ்நாளில் இப்போது தாங்கள் துய்ப்பதைப் போன்ற உண்மையான தருணம் வரவே வராது என்று இருவருமே நம்புகிறார்கள். 

‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவலின் டாரதிபோல், பாப்பையாவுடன் பேசிக்கொண்டிருக்கும் கோமதிக்கும் அருகில் எங்கோ கோழிகளின் சத்தம் கேட்கிறது. அது இனிமை தருகிறது. தனிமையில் இருக்கும் ஆணும் பெண்ணும் முத்தத்தின் இனிமைக்காக ஏங்காமல், தூரத்தில் கேட்கும் கோழியின் சத்தத்தில் தோய்கிறார்கள். ஆளற்ற பாதை தரும் ஏகாந்தத்தில் நிறைகிறார்கள். இருவருக்குமே காதல் தேவைப்படவில்லை. காதலின் துணிவில் இயல்பாய்க் காமத்திற்கு நகரும் வேட்கையில்லை. வெறுமை நிரம்பித் ததும்பும் தங்களின் வாழ்வின் அன்றாடங்களில் இருந்து சிறு பச்சையத்தைச் சுவாசிக்க விரும்புகிறார்கள். அதற்குத் தன்னைப் புரிந்த ஓர் ஆன்மாவின் புன்னகைத் தேவைப்படுகிறது. வறுமையும் நிராதரவும் புரட்டிப் போடும் கணத்தில், உறவுகளைக் கடந்த அன்பின் ஜீவிதத்தைத் தேடுகிறார்கள்.

பிலோமியும் சாமிதாஸும்கூட இதே பரிதவிப்பில் உள்ளவர்கள்தான். நிறைவேறவே முடியாத காதலென்று தெரிந்தே ஒருவருக்கொருவர் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இருந்த சுதந்திரமும், துணிவும் மெல்லிய அந்த அன்பை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல, கோமதியும் பாப்பையாவும் ஆடைகள் உரச நடந்து செல்வதோடு தங்களின் ஆறுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் யார் கண்ணிலாவது படுவோம் என்ற பயத்தில் பிரிகிறார்கள். இருவேறு வாழ்நிலைகளின் வெளிப்பாடும்கூட இதில் அடங்கியிருக்கிறது. 

‘எம்.எல்.’ நாவலின் சோமு ரகசிய இயக்கத்துடனான தன் தொடர்பிலிருந்து வெளியேறுவதும் வண்ணநிலவனின் பாப்பையாவைப்போல், நெல்லையப்பனைப்போல் தான். வாழ்தலின் அழகியலைக் கோருபவர்கள் இவர்கள். அரசியலின் வழியாகத் தீர்வுகளை நோக்கி நகர்வதைப்போல், இவர்கள் வாழ்தலின் வழியாக நகர்கிறார்கள். 

வர்க்கபேதமும், பசியும் வேறு வேறு ரூபங்களில் உலகம் உள்ளவரை முளைத்துக்கொண்டே தான் இருக்கும். இவையிரண்டையும் அழித்தொழிக்க நடத்தப்படும் போராட்டங்கள், உண்மையில் எவற்றை அழித்தொழித்துக் கொண்டிருக்கின்றன என்ற கேள்வியை எம்.எல். நாவல் எனக்குள் எழுப்பியது. 

சோமுவிடம் கம்யூனிஸ்ட் நாடுகளில் பண்பாட்டுச் சுதந்திரம் பற்றிய கேள்வியை எழுப்புகிறான் சபாபதி. நம் ஊர்போல் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் இருக்கிற வழிபாட்டுச் சுதந்திரம், அவரவர் மதச் சடங்குகள், திருவிழாக்கள் கொண்டாட ரஷ்யாவிலும் சீனாவிலும் அனுமதியில்லை. மனிதனுக்குச் சாப்பாடு, வேலை மட்டும் போதாது, சாமி கும்பிடவும் சடங்குகள் செய்யவும் அவனுக்கு வழி இருக்க வேண்டாமா? பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்று சொல்லி ரஷ்யாவிலும் சீனாவிலும் ஆட்சியைப் பிடித்த கம்யூனிஸ்ட்கள், ஏழை, எளிய பாட்டாளிகளையா ஆட்சியாளர்களாக்கினார்கள்? ரஷ்யாவிலும் சீனாவிலும் வர்க்கபேதம் ஒழிக்கப்பட்டுவிட்டதா? தனியுடைமையை ஒழித்த கம்யூனிஸ்ட் ஆட்சி, தனி மனித சுதந்திரத்தையும் பேச்சுரிமையும் ஒழித்துவிட்டதே? சாரு மஜூம்தார்போல் ஒருவர் சீனாவில் அரசை எதிர்த்து ஆயுதப் புரட்சி நடத்த முடியுமா? என்ற சபாபதியின் கேள்வி, அரசியல் சித்தாந்தத்திற்கு எதிரானது அல்ல. ஒடுக்கப்பட்டவர்களுக்காக மேலெழுந்து வரும் அரசியல் கோட்பாடும், ஒருவகையில் ஒடுக்குமுறையின் மற்றொரு ஆயுதமாக மாறுவதையே சபாபதி சொல்கிறான். 

ஓர் எழுத்தாளர் ஏதாகிலும் ஒரு சித்தாந்தத்தையோ, குழுவையோ, அமைப்பையோ சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? நிச்சயம் இல்லை. ஓர் அரசியல் கட்சியின் பாரத்தை இலக்கியம் தாங்குமா (பக்.118, ஒரு குட்டிப் பூர்ஷ்வாவின் அனுபவங்கள்) என்று சந்தேகிக்கிறார் வண்ணநிலவன். புரட்சி, எழுச்சி, சமத்துவம் என்ற முழக்கங்கள் தரும் வெற்று ஈர்ப்பினால் இயக்கத்திற்குள் வருபவர்களுக்கு, இயக்கம் திருப்பித் தரும் கடுமையைத் தாங்க முடிவதில்லை. 

எம்.எல். நாவலில் அல்பேனிய கம்யூனிஸ்ட் போல் வந்து, ரகசிய இயக்கத்தை உளவுப் பார்க்கும் சிபிஐ அதிகாரி பிச்சாண்டி, ‘எந்த விகற்பமும் இல்லாத பையன்களைக் காட்டிக் கொடுக்கிற மாதிரி ரிப்போர்ட் எழுதி மேலதிகாரிகளுக்கு அனுப்புகிற இந்த வேலை ஒரு வேலையா? அவர்களை நம்ப வைத்துக் கழுத்தறுத்தது போலத்தான் என்று மனம் நோகிறான்’ என்றெழுதும் வண்ணநிலவன், கடுமையான இடங்களிலும் இயல்பைத் தவறவிடாத மனிதர்களையே முன்வைக்கிறார்.

  எம்.எல். நாவலில் கோபால் பிள்ளை, ‘கண்டவன் படத்தையெல்லாம் மாட்ட இதென்ன நாசுவங் கடையா?’ என மார்க்ஸின் படத்தை அவர் தந்தை தூக்கியெறியும்போது, தன் கொள்கைக்கு இடமில்லாத வீட்டில்தான் இருப்பதில்லை என்று வீட்டை விட்டு மனைவியுடன் வெளியேறுகிறார். 

கோபால் பிள்ளைகள் இருக்கும் ஊரில், சோமுக்களும் இருப்பார்கள். யாருக்கும் எதற்கும் எல்லையில்லை. வரையறையில்லை. கோபால் பிள்ளையின் பிடிவாதமான கொள்கைப் பிடிப்பை உயர்வென்றோ, சோமுவின் விலகலைப் பலவீனமென்றோ சொல்ல முடியாது. “சோமு பத்திரமாக, அவன் வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டுமே?” என்றுதான் நாவலைப் படிக்கும்போது மனம் பதறுகிறது. போலீஸ் ஸ்டேஷனில் சட்டையைக் கழற்ற சொல்லும்போதே உடல் கூசிப் போகும் பிள்ளை, ஆயுதம் தூக்கவும், தலைமறைவு வாழ்க்கைக்கும், ரத்தம் பார்க்கவும் தயாராவானா? அதிர்ஷ்டவசமாய் வண்ணநிலவன் சோமுவைக் காப்பாற்றிக்கொண்டு வருகிறார். 

வண்ணநிலவன் ஏன் சோமுவைக் காப்பாற்றுகிறார்? கம்யூனிசமும், நக்சல்பாரி இயக்கமும், மாவோயிசமும் தங்கள் சித்தாந்தத்தைப் புரிந்து போராளிகளாக வருபவரை மட்டும் ஈர்ப்பதில்லை. அதன் வசீகர மக்கள் விடுதலை முழக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் அநேகம். சாரு மஜூம்தாரின் கட்சியை வேட்டையாட நினைத்த அரசும் காவல் துறையும், போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களை மட்டும் குறிவைத்துத் தாக்கவில்லை. சோமுவைப்போல், என்ன நடக்கிறது என்று அதன் நடவடிக்கைகளை எட்டிப் பார்க்கச் சென்றவர்களையும் பலி கொண்டிருக்கிறது. வன்முறையின் விளைச்சலும் வன்முறைதான் என்பதை நாவல் சுருங்கச் சொல்கிறது. 

ஆயுதப் புரட்சி ஒருபோதும் பிரச்சினைக்கான தீர்வல்ல என்று சொல்வதற்காக மட்டுமா? மார்க்ஸியம் ஒரு பிழையான, இயற்கைக்கு விரோதமான தத்துவம் என்ற அவரின் சித்தாந்த நிலைப்பாடினாலா? (பக்.21. சில இயக்குநர்கள், சில திரைப்படங்கள்) திராவிடம், தலித்தியம், பெண்ணியம் உள்ளிட்ட அரசியல் நிலைப்பாடுகளையும் இலக்கியத்திற்குள் வண்ணநிலவன் ஏற்கவில்லை. ‘தமிழ் இலக்கியம் எந்த இயக்கத்திலிருந்தும் உருவாக முடியாது. அது இயக்கத்துக்கு வெளியிருந்துதான் உருவாக முடியும். (பக்.31. சில இயக்குநர்கள், சில திரைப்படங்கள்) அரசியல் சித்தாந்தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தேடுபவை. அதிர்ஷ்டவசமாய்க் கலையில் தீர்வு இருக்கலாம். எனக்கு முக்கியமானது கலைதான்’(பக்.118, ஒரு குட்டிப் பூர்ஷ்வாவின் அனுபவங்கள்) என்பதே வண்ணநிலவனின் இலக்கியக் கோட்பாடு.

வாழ்வின் நெருக்கடியான தருணங்களிலும் போராட்டங்களையும் விவாதங்களையும் சண்டைகளையும் அனுமதிப்பதில்லை அவரின் கதாபாத்திரங்கள். கோபம் கூடத் தோன்றிய கணத்திலேயே மறைந்துபோகக் கூடிய அளவு பலவீனமானதே. மென்மையும் பூஞ்சையுமான மனிதர்கள் பலவீனமானவர்கள், போராடத் துணிவில்லாதவர்கள் என்று பொருளல்ல. மென்மை எல்லாக் காலத்திலும் பலவீனமானதாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும், மென்மையாக இருப்பதற்குத்தான் அதிக உறுதி தேவைப்படுகிறது. கருங்கல் கூழாங்கல்லாக மாறுவதைப்போல். மென்மையான மனிதர்கள் உண்டாக்கும் அழகியல் அற்புதமானது. அதிசயமானது.

அவரவர் வாழ்வைச் சரியாக வாழ்வதும்கூட அரசியல் செயல்பாடுதான். வண்ணநிலவன் முன்வைக்கும் நுண்ணரசியல் இதுவே. ஒவ்வொரு மனிதரைச் சுற்றியும் எத்தனையோ நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பாப்பையாவும் நெல்லையப்பனும் சோமுவும் தங்களுக்கான சிறு கூட்டில், பழகிய முகங்களுடன், பிடித்த வாழ்வை வாழப் பார்க்கிறார்கள். அந்த வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புலம்பல்கள் அதில் இல்லை. துன்பங்களுக்குக் காரணங்களாக யாரை நோக்கியும் அவர்களின் விரல்கள் நீள்வதில்லை. வாழ்வின் போதாமைகளைக் கடந்து மனம் தோயும் உணர்வுகளில் திளைக்கிறார்கள்.

வண்ணநிலவன் இடைவிடாமல் எழுதுவது, வாழ்வதின் பேரழகைத்தான். காதல் கடந்து போனாலும், காமம் கை கூடா விட்டாலும், உறவுகள் கைவிட்டாலும், இரவுக்கு வெறும் தண்ணீர் சோறுதான் என்றாலும், வாழ்க்கை எதற்காகவும் திக்கித்து நின்றுவிடக் கூடாது என்ற ஞானம். கள்ளி, தனக்குத் தேவையான நீரைத் தன் தண்டுக்குள்ளேயே பொதிந்து வைத்திருப்பதைப்போல், வண்ணநிலவனின் தாமிரபரணி மனிதர்கள், வாழ்வதற்கான உத்வேகத்தைத் தங்களுக்குள்ளேயே பொதிந்து வைத்திருக்கிறார்கள்.

தன் எழுத்து, ஜீவனோபாயத்திற்கான ஒரு தொழில்தானே தவிர, புகழ்பெறுவதற்காக எழுதவில்லை என்று சொல்லும் வண்ணநிலவன், ஒருபோதும் எழுத்தைத் தொழிலாக எடுத்துக் கொள்ளவில்லை. தன் மனத்திற்குப் பிடிக்காத ஒன்றிரண்டு கதைகளை எழுத நேர்ந்தபோதும், பின் வந்த தொகுப்புகளில் அதைச் சேர்க்காமல் உறுதியாக இருந்திருக்கிறார். கலையமைதி அமைந்த ஆத்மார்த்தமான எழுத்துகளை மட்டுமே எழுதி வந்திருக்கிறார். 

இன்றைக்கு வாசித்தாலும் வண்ணநிலவனின் நாவல்கள் ஒளிபொருந்தியவையாக உள்ளன. அவர் காலத்திய எழுத்தாளர்கள் அதிகப் பக்கங்களில் நாவல்கள் எழுதிக்கொண்டிருந்த வேளையில், 150 பக்கங்களைத் தாண்டாத சின்னஞ்சிறிய நாவல்களுக்குள் வண்ணநிலவனால், தான் சொல்ல விரும்பிய வாழ்க்கையை ரசனையுடன், கலையழகுடன் சொல்ல முடிந்திருக்கிறது. முதல் நாவலான கடல்புரத்திலேயே தனக்கென மொழி அழகியலை உருவாக்கிக் கொள்கிறார். இருபது வயதிற்குள் வாழ்க்கை இவ்வளவுதான், அர்த்தமற்றது, அதற்கு எந்த மதிப்பீடுகளும் தேவை இல்லை என்று கடந்துபோகும் தரிசனமிக்க கதைமாந்தர்களை, தன் இருபது வயதில் வண்ணநிலவனால் படைக்க முடிந்தது என்பதும் ஆச்சரியமே. 

அவரின் ஆண்கள் இன்றைக்கும் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள். பிடித்தமானவர்கள் என்றால் பிடித்தமானவர்கள்தான். உறவுகளைத் தாண்டி, உணர்வுகளாய். பாப்பையாவைப்போல் வீட்டின் சின்னச் சத்தத்திற்கும் அர்த்தம் புரிந்துகொள்ளும் வயசுப் பையன்கள் அபூர்வம். நெல்லையப்பனைப் போல் ஓடிக்கொண்டே இருந்தாலும், சட்டென்று ஒரு நடை வீட்டுக்கு ஓடிவந்து முகம் காட்டிக்கொள்ளும் அன்பு வரம். ஸ்டடி சர்க்கிளில் இருக்கும்போதும் மனைவியுடன் கோயிலுக்குப் போயிருக்கலாமோ என்று எண்ணும் சோமுவை எந்தப் பெண்ணும் கடந்துவிட முடியாது. தூங்கும் மகளின் அருகில் அமர்ந்து தலைகோதிவிடும் அப்பாவின் விரல்களில் நேசத்தினை வழியவிடும் தந்தைகள் வரமல்ல? வண்ணநிலவன் இந்திய ஆண்களின் மென்மனத்தை வெளிப்படுத்தியவர். இறுக்கமான குடும்பங்களுக்குள்ளிருந்தும் பேச்சில் நஞ்சில்லாத, கொடுக்குகளில்லாத ஆண்களைப் படைக்கிறார். எனவே தான் அவர்களால் பெண்களின் உலகத்தினைப் புரிந்து ஏற்றுக்கொள்வதோடு, எளிதாக உள்நுழையவும் முடிகிறது.

வீட்டுக்குள்தான் கணவனும் இருக்கிறான். மனைவியும் இருக்கிறாள். இருவருக்குமே வீடும், வீடு சார்ந்த வாழ்வும் பொது. பிள்ளைகள் பொது. படுக்கையறை, அடுப்படி, வரவேற்பறை, தோட்டம், கிணறு, மச்சுப்படி, புறவாசல் கதவு எல்லாமே பொது. உணர்வுகள் சார்ந்து வீட்டின் மேற்சொன்ன இடங்களுடன் ஆணும் பெண்ணும் எவ்வளவு வேறுபடுகிறோம்? என் அம்மாவுக்கான சுவர்கள் என் அப்பாவுக்கானதல்ல. கிணறும், கிணற்றடியும் பெண்களுக்குச் சுதந்திர வெளியென்றால், வரவேற்பறை ஆண்களுக்கான வெளியாகிறது. பாலியல் வேறுபாட்டின் கனத்த இந்த இடைவெளியை வண்ணநிலவனின் ஆண்கள் தயக்கமின்றிக் கடக்கிறார்கள். வரவேற்பறையில் இருந்தாலும் அவர்களின் செவி நெகிழ்ச்சியுடையதாய் அடுப்படியின் கனத்த சுவர்களையும் ஊடுருவுகிறது.

வீடுகளுக்குள் உறவுகளைக் கடந்து, மனத்தைப் புரிந்து நெருங்கி வரும் ஆண்களாக வசீகரத்துடன் இருக்கிறார்கள். அதனால்தான் கை பிடித்துக்கொண்டு ஆளரவமற்ற சாலைகளில் பேசிக்கொண்டே நடக்கப் பிரியப்படுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் காதல் வேண்டியிருக்கவில்லை. காமம் கோரிக்கையல்ல. கண்ணீரின் இளஞ்சூடு போல், உடனிருக்கும் ஓர் ஆறுதல்.

தி.ஜா.வின் ஆண்களின் சாயல் வண்ணநிலவனின் படைப்புக்குள் இருந்தாலும், தி.ஜா.வின் ஆண்களைப்போல் இவர்கள் எல்லாவற்றையும் வெளிக்கொட்டி விடுவதில்லை. அதீத உணர்வெழுச்சிக் கொண்டவர்களும் அல்ல. தெரு வாசலுக்கு வரும்போதெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கப் பிரியப்படும் பக்கத்துவீட்டுப் பையன்கள்போல் ஈர்ப்பானவர்கள்.   

கூர்மையும் நுட்பமும் கொண்ட உரையாடல்களை, பூச்சுகளற்ற நேரடியான மொழியால் கட்டமைக்கும்போது நிகழும் மாயத்தை, வண்ணநிலவனின் மொழி நிகழ்த்துகிறது. கட்டும் செட்டுமாய் என்பதுபோல், சின்னச் சின்ன வாக்கியங்கள். விரைந்து கடந்துவிட முடியாதவை. நெடுஞ்சாலைகளின் நேர்ப் பயணங்களைப்போல், கதையைவிட்டுக் கொஞ்சமும் பிசகாத நகர்த்தல்கள். ஓரிடத்திலும் ஆசிரியர் நின்று கதை சொல்லவில்லை. வழி காட்டவில்லை. கதையே தன் ஓட்டத்தில் நம்மை இழுத்துச் செல்கிறது.

கலையழகை, கலை மேன்மையைப் படைப்பாளி உருவாக்குவதல்ல. அவை படைப்பின் வழியாக, படைப்பவரிடமிருந்து மேலெழுந்து வருபவை. வண்ணநிலவன் தன் படைப்புகளின் வழியாகத் தமிழின் அபூர்வக் கலைஞனாய் மேலெழுந்து வந்திருக்கிறார். மேன்மை, மனித மனத்தின் நுட்பத்தை உணரச் செய்வது. அந்த நுட்பம் வண்ணநிலவனின் நாவல்களில் நிறைந்திருக்கிறது. 

தமிழ் நாவல் உலகில் வண்ணநிலவனுக்கு முன்னும் பின்னும் அவரையொத்தக் கதைசொல்லி யாருமில்லை. தனக்கான இடத்தைத்தானே கண்டடைந்த அசல் கலைஞன் வண்ணநிலவன். 

மனோதர்ம சங்கீதம் வாய்க்கப்பெற்ற இசைக் கலைஞனைப்போல், வண்ணநிலவன் கலையழகு ததும்பும் மொழியின் தொனி வாய்க்கப்பெற்ற தமிழின் உன்னத எழுத்துக் கலைஞன்.


கட்டுரைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வண்ணநிலவனின் நூல்களும் பதிப்புகளும்

நாவல்கள்
கடல்புரத்தில் – 1977 – நர்மதா பதிப்பகம் 
கம்பா நதி – 1979 – அன்னம் (பி) லிட் 
ரெயினீஸ் ஐயர் தெரு – (1981) – கிண்டில் பதிப்பு 
காலம் (2006) – நவம்பர் 2016 – நற்றிணை பதிப்பகம்
உள்ளும் புறமும் – டிசம்பர் 2010 – கல்கி பதிப்பகம்
எம்.எல். – ஜூலை 2018 – நற்றிணை பதிப்பகம்

கவிதை
காலம் – ஜூன் 1994 – அன்னம் (பி) லிட்

கட்டுரைகள் 
பின்நகர்ந்த காலம் – முதல் பாகம் – டிசம்பர் 2012 – நற்றிணை பதிப்பகம்
பின்நகர்ந்த காலம் – கட்டுரைகள் – இரண்டாம் பாகம் – 2019 – சந்தியா பதிப்பகம் 
ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள் – கட்டுரைகள் – அக்டோபர் 2012 நற்றிணை பதிப்பகம்
சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள் – கட்டுரைகள் – டிசம்பர் 2014 நற்றிணை பதிப்பகம் 

Series Navigation<< வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து:பாகம்-1

3 Replies to “வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2”

  1. வண்ணநிலவன் நாவல்களுக்குள்ளே கரைந்து சரியான புரிதலோடு, அதே தாமிரபரணியில் அழகியலோடு அற்புதமாக எழுதி இருக்கிறார் அ.வெண்ணிலா. இரண்டு கட்டுரைகளையும் ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன். எனது இளம்பருவத்தில் “ரெய்னீஸ் அய்யர் தெரு” நாவலை கையெழுத்துப் பிரதியாக ஒரே இரவில் வாசித்தேன். அதே இரவுக்குள் உங்கள் கட்டுரை அழைத்துச் சென்றுவிட்டது. ரசனை விமர்சனமே தலையாய விமர்சனம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
    நன்றி அ.வெண்ணிலா ❤️

  2. உடனிருந்து… அவர் எழுத்துகளின் அங்கமாய் இருக்கும் நீங்கள், வண்ணதாசன் உள்ளிட்டோர் கொண்டாடுவதில் மகிழ்கிறேன் சார். அன்பும் நன்றியும்

  3. அ.வெண்ணிலா அவர்கள், வண்ணநிலவனின் எழுத்துகளை முன்வைத்து எழுதியுள்ள மதிப்பாய்வுகள் மிகவும் நேர்த்தியாக உள்ளன.நானும் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேல், வண்ணநிலவனின் எழுத்துகளைப் பலமுறை வாசித்திருந்தாலும்,வெண்ணிலா அளவுக்கு ஊன்றிப்படிக்கவில்லை என்பதை மதிப்பாய்வுகள் எனக்கு உணர்த்துகின்றன.எனவேதான்,நான் ஒரு சாதாரண வாசகனாகவும்,வெண்ணிலா சிறந்த படைப்பாளியாகவும் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.