யோகசூத்திரங்கள் துணையோடு ராஜ யோக சாதனம்

விஜய் சத்தியா

யோகா பயில விரும்புபவர்களுக்கு இன்றுள்ள பல வகையான யோகா வகுப்புகளில் எதை தேர்வு செய்வது என்பதே பெரிய சவாலாக உள்ளது. பல இடங்களில் ஆசனங்களை மட்டுமே சொல்லித்தருவார்கள். ஒரு  வகுப்பில் அனைவரும் ஆசிரியரைப் பின்பற்றி ஆசனங்களை வரிசையாக செய்வார்கள். அவற்றை உடற்பயிற்சி என எடுத்துக்கொள்ளலாம். மரபான யோகாசன பள்ளிகளில் அவரவருக்குத் தேவையான ஆசனங்கள் கட்டமைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்படும். ஆரம்பத்தில் உடல் உபாதை நீங்குவதற்கோ, வலிகள் குறைவதற்கோ ஆசனங்கள் செய்து சாதகர் முன்னேறி வரும்போது, பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி முதல் தியானம் வரை படிப்படியாகக் கற்றுத்தரப்படும். இவற்றில் ராஜ யோகம், ஹட யோகம் என இரண்டு வகை யோக சாதனங்கள் உண்டு.

ராஜ யோகத்திற்கும், ஹட யோகத்திற்கும்  உள்ள வேறுபாடுகளை இங்கே அறிந்துகொள்ள வேண்டும். ஆசனங்கள் உறுதியாகவும், மூச்சுப் பயிற்சியும் ராஜ யோகத்தில் இருக்கும். தியானத்தில் மனதை ஒன்றச் செய்யவதே லட்சியமாகும். ராஜ யோகத்தில் பத்மாசனம், ஹலாசனம், சர்வாங்காசனம், சிரசாசனம் போன்ற  ஆசனங்களை செய்ய முடிவதே பெரிய சாதனை. 

மற்றும் நாடி சுத்தி, 3/12/6 என்ற எளிய எண்ணிக்கையில் மூச்சை இடது மூக்கில் இழுத்து, நிறுத்தி பின் வலது நாசியில் வெளியேற்றுவது என பெரும்பாலானோர் செய்யக்கூடிய மூச்சு பயிற்சிகளே அடக்கம். ஹடயோகத்தில் இவை மிக தீவிரமாவும், கடுமையாகவும் வளர்ந்து வரும். மேலும் பந்தங்கள்,  கிரியை என பல உள்ளன. இதன் நோக்கம் மூலாதாரத்தில் உள்ள காமாக்னியைத் தூண்டி இச்சா சக்தியான குண்டலினியை எழுப்பி மேலான சக்தி மையங்களுக்கு கொண்டு செல்லுதல். உடலை பிழிந்து வஜ்ரமாக்க ஹடயோகமே சிறந்தது. நூறாண்டுகள் உடலை உறுதியாக வைக்கலாம். ஆபத்தும் உள்ளது. தவறான பயற்சிகளாலும் தக்க குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் போனாலும் பல இன்னல்கள் உடலுக்கு வந்து சேரலாம். ஆகவே மிகக் கவனமாக ஹடயோகம் பயில்வது நல்லது.

ராஜயோகத்தின்  நோக்கம் நம் உடல், மனம் உறுதி பெற்று, ஆத்ம தியானம் செய்து, இந்த வாழ்க்கையை மிக ஒழுக்கமாகவும், மகழ்ச்சியாகவும் வாழ்வதற்கு நம்மைப் பக்குவப்படுத்துவதேயாம். மனதில் தோன்றும் எண்ணங்களை அடக்கி ஆழ்மன சக்தியை பெருக்கி விழிப்புணர்வுடன் இருக்க ராஜயோகம் உதவும். குருவின் வழிகாட்டுதல் மிக அவசியம்.

சேலத்தில் ஞானகுரு யோகாசன சாலை என்ற மரபான பள்ளியில் ராஜ யோகம் பயின்றேன். எனது ஆசான் திரு. துவாரகநாதன் என்பவர், ஐம்பது ஆண்டுகளாக யோகா சொல்லித்தருகிறார். யோக சிகிச்சையே அவர்களின் சிறப்பம்சம். இருதய நோயாளியான ஒரு எளிய மனிதர் தன் மகளுடன் ஒரு முறை வந்தார். மிகவும் சோர்வாக இருந்தார். ஒரு மாதத்தில்  கண்முண் தேறி வருவதை கண்டிருக்கிறேன். எனது ஆசானின் வழிகாட்டுதலில் யோக சூத்திரங்கள் அறிமுகமாயின. யோகத்தில் உறுதி பெறுவதற்கும், சாதனங்களிலிருந்து வழுவும் போது மீட்டுக் கொள்வதற்கும் துணையாக இருந்து வருகின்றன. சில அடிப்படை யோகசூத்திரங்கள் துணையோடு ராஜ யோக சாதனத்தை உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன்.

பதஞ்சலி முனிவர் அருளிய யோக தரிசனத்தில் 196 சூத்திரங்கள் உள்ளன. அவை யோக சூத்திரங்கள் என பொதுவாக வழங்கப்படுகிறது. சூத்திரங்கள் சமாதி, சாதன, விபூதி, கைவல்யம் என நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  சுவாமி விவேகானந்தர் ராஜ யோகம் என்ற  நூலில் பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு உரை எழுதியிருக்கிறார். பகவான் கிருஷ்ணன் அருளிய பகவத் கீதையில், ராஜ யோகத்தில் இறைவனோடு முழுமையான சரணாகதியில் யோகி ஒருவன் பிரிதொன்றில்லாமல் இணைந்திருப்பது குறித்து உபதேசிக்கப்பட்டுள்ளது.

சாங்கிய தரிசனத்தை அடிப்படையாகக் கொண்ட யோக தரிசனத்தில் நம் அனுபவங்கள் அனைத்துக்கும் சாட்சியாக புருஷன் என்ற கருதுகோள் இயம்பப்பட்டுள்ளது. புருஷன் சுய பிரகாசம்  கொண்டவன். மனம், புத்தி, அகங்காரம் என பகுக்கப்பட்டுள்ள சித்தம் புருஷனுக்கு வெளியே உள்ளது. மனம் ஐம்புலன் வழியே  எப்பொதும் வெளியே செல்வதனால் இவ்வுலகக் காட்சியோடு புருஷன் இணைகிறான். மேலும் மனதின் விருப்பு வெறுப்பிற்கேற்ப சித்தத்தில் சலனமேற்பட்டு நாம் காணும் காட்சி திரிபடைகிறது. சலனங்கள் அடங்கும்போது காண்பவனான புருசன் தன் சுயபிரகாசத்தில் மிளிர்கிறான். ராஜ யோகி புற சலனங்களிலிருந்து அகம் வரை, உடல்,மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என ஒவ்வொன்றாக தன் கட்டுக்குள் கொண்டுவருகிறான்.

யோக சூத்திரத்தின் இரண்டாம் பகுதியான சாதன பாதத்தில் பதஞ்சலி, யோக அங்கங்களை அனுதினமும் ஆழ்ந்து பயிற்சி செய்வதால் உடல், மன மாசுகள் நீங்கப்பட்டு பகுத்துணரும் மதிநுட்பமான விவேக புத்தி கூடிவர ஞானம் வாய்க்க பெறும் என்கிறார்.

சாதன பாதம் , 28 ஆம் சூத்திரம்.

யோகாங்கானுஷ்டாநா தசுத்திக்ஷயே ஞானதீப்திரா விவேகக்யாதே (II – 28)

யம நியமாஸன ப்ராணாயாம ப்ரத்யாஹார தாரணாத்யான ஸமாதயோ அஷ்டாவங்கானி  (II – 29)

யோக அங்கங்கள் மொத்தம் எட்டு.  அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி எனப்படும்.

நம் வாழ்க்கையில் சக மனித உறவு மிக சிக்கலாகி வருகிறது. யோக சாதகன் சக மனிதர்களிடம் நல்லுறவை பேண வேண்டும். இன்னா செய்யாமை, வாய்மை, கள்ளாமை, அளவான தாம்பத்தியம்/புலனடக்கம், வெஃகாமை எனப்படும் பிறர் ஈட்டிய புகழையோ, பொருளையோ பொறாமை கொண்டு அடைய விரும்பாதிருத்தல் இவை ஐந்தும் இயமம் எனப்படும். இவற்றை மகா விரதங்களாக கடைபிடிக்கவேண்டும்.

அஹிம்ஸா ஸத்யா அஸ்தேய ப்ரஹ்மசர்யா அபரிக்ரஹா யமாஹ (II – 30)

யோக சாதகன் முதலில் தன்னைத் தானே நேசிக்க வேண்டும்.  தன் செயல்களை, பழக்க வழக்கங்களை, எதிர்மறை சிந்தனைகளை, உணர்ச்சிகளை, கவனிக்கத் தொடங்க வேண்டும். இவை ஐந்து நியமங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. அவை உடல் மற்றும் மனத் தூய்மை, மன மகிழ்ச்சி, தவமாகப் போற்றி உறுதியான யோகாசனப் பயிற்சி செய்தல், ஆன்மிக நூல்களை வாசித்தல், சுயத்தை பற்றி விசாரணை செய்தல், இறை சக்திக்கு தன்னை அர்ப்பணித்தல்.

சௌச ஸத்தோஷதபசு ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானா நியமாஹ  (II – 32)

தவம், ஆன்ம விசாரணை, இறை சக்திக்கு தன்னை அற்பணித்தல் இவை மூன்றையும் சாதனை செய்தல் கிரியா யோகம் எனப்படும்.

தபசு ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி கிரியா யோகஹ  (II – 1)

நோய்களை அகற்றி, உடலை உறுதி செய்வதே ஆசனத்தின் முதல் பாடம். அப்போதுதான் மூச்சுபயிற்சி, தியானம் போன்றவற்றை செய்யும்போது முதுகு தண்டு வளையாமல் உறுதியாக அமர்ந்திருக்க முடியும்.

ராஜயோகத்தில் உடலையும், மனதையும் உறுதி செய்யாமல் மூச்சு பயிற்சி,  தியானம் என மேலாம் படிகளில் வேகமாக ஏறினால் பல இன்னல்கள் வரும். அதனால் சாதனைகளில் முன்னேறாமல் தடைபடும்.

நோய், சோம்பல், சந்தேகம், ஊக்கமின்மை, விஷயப்பற்று, மதிமயக்கம் புலனின்பத்தில் அதிக பற்று,  மனம் குவியாதிருத்தல், தவறான பார்வை, சாதனையிலிருந்து வழுவுதல், அடைந்த ஆற்றலை இழத்தல் என ஒன்பது விதமான தடைகளை யோக சாதகன் தாண்ட வேண்டும்.

நோய், சோம்பல் போன்ற தடைகள் உடல் சார்ந்தது. ஆசன பயிற்சிகளை கவனமாக தொடர்ந்து செய்யவேண்டும். உடல் உபாதைகள் நீக்குவதற்கு அதற்குரிய ஆசனங்களை வடிவமைத்து நாள்தோறும் செய்துவந்தால் சில நாட்களில் பலன் தெரியும்.

சந்தேகம், ஊக்கமின்மை, விஷயப்பற்று, மதிமயக்கம்/ புலனிம்பத்தில் அதிக பற்று,  இவை மனத்தடைகள். ஆசனங்களோடு மூச்சு பயிற்சியும் பழக வேண்டும்.

காலை மடக்கி உட்கார்ந்து முதுகை நேராக வைத்து, தலை,  கழுத்து, முதுகு இவற்றை ஒரே கோட்டில் வைத்து மூச்சை சீராக இழுத்து விட்டு பழக வேண்டும்.

மனம் குவியாதிருத்தல். அதனால் வரும் தவறான புரிதல். இது புத்தியில் ஏற்படும் தடுமாற்றம். பிரத்யாஹாரம், தாரணை இவற்றை பழக வேண்டும். மூச்சுப் பயிற்சியினால் சுவாசம் சீரடைந்து மனம் தாரணைக்கு தயாராகும்.கடவுள் நாமத்தை ஜபித்தல், ஏதேனும் ஒரு தத்துவத்தைப் பயிலுதல் இவை புலன்கள் வழியாக வெளியே செல்லும் மனதை உள்ள முகமாகத் திருப்பும்.

சாதனையிலிருந்து வழுவுதல், அடைந்த ஆற்றலை  இழத்தல் இவை நான், எனது என்றென்னும் அகங்காரத்தால் வரும் தடைகள். தியானமும், பிரபஞ்சத்தையும் இயக்கும் மேலாக இறை சக்தியிடம் நம்மை அர்ப்பணிப்பதும் அகத்தை தூய்மை செய்யும். கலங்கிய சித்தம் அடங்கி காட்சிகள் தெளிவுறும்.

வ்யாதி ஸ்த்யான ஸம்சய ப்ரமாதா ஆலஸ்யா அவிரதி  ப்ராந்திதர்சனா லப்தபூமிகத்வா அனவஸ்திதத்வானி சித்தவிக்சேபாஸ்தே அந்தராயாஹ (I – 30)

துக்கம், மன அழுத்தம், உடல் நடுக்கம், சுவாசக் கோளாறுகள் இவை தவறான யோக சாதனத்தால் ஏற்படும்  விளைவுகள். ஆசனங்களை முறையாகச் செய்யாமல், சில சமயம் நம் ஆற்றலை தவறாகக் கணித்து மேலாம் ஆசனங்களை தீவிரமாகச் செய்யும்போது உடல் நடுக்கம் ஏற்படும். ஆசனங்களைக் கண் மூடி, சரியான எண்ணிக்கையில் நிறுத்தி முறையாகப் பழகவேண்டும். மூச்சுப் பயிற்சியைத் தவறாக, அதிக அழுத்தம் கொடுத்து செய்தால் அது நாடி, நரம்புகளை நடுங்கச் செய்யும். இதயம் படபடப்பாக துடிக்கும். ஆகவே மிகவும் கவனமாக இருக்கவேண்டும். துக்கம், மன அழுத்தம் மற்றும் பயம் போன்றவைகள் தியானத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும். இது நாள் வரை நம் ஆழ் மனதில் மறைந்திருந்த மன அழுக்குகள் சித்தத்தின் விழிப்புணர்வுக்கு வருகின்றன. இவற்றைக் கையாள, தக்க குருவின் வழிகாட்டுதல் வேண்டும்.

துக்க தௌர்மனஸ் யாங்கமேஜயத்வ ச்வாஸ ப்ரச்வாஸா விக்சேப ஸஹபுவஹ (I – 31)

இந்த தடைகளையெல்லாம் யோக தத்துவத்தில் இனம் கண்டு ஐந்து வகையான சித்த விருத்திகளாவும், ஐந்து வகையான மனத் தடைகளாகவும் விளக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் புரிந்துகொண்டு ராஜ யோக பயிற்சியில் தீவிரமாக  ஈடுபடுவதே ஆசனமாகும்

தீவ்ர ஸம்வேகானா ஆசன்னஹ (I – 21)

மெதுவாகவோ, இடை நிலையிலோ அவரவர் உடல் மனத் தகுதிக்கேற்ப முயற்சி செய்யலாம். பலன்கள் அதற்கேற்ப சித்திக்கும்.

ம்ருது மத்யா அதிமாத்ரத்வாத் ததோபி விசேஷஹ  (I – 22)

இப்படி யோகசாதனங்களை நாள்தோறும் செய்து கூடவே வைராக்கியத்தையும் கடைபிடிக்கும் போது சித்தச் சலனங்கள்  அடங்கும். நாம பார்த்த, கேட்ட விசயங்களில் நாட்டம் கொள்ளாமல் மனதை அடக்கி பற்றற்ற தன்மையை வளர்த்து கொள்வதே வைராக்கியம்.

அப்யாஸ வைராக்யாபாம் தன்னிரோதஹ  (I – 12)

ராஜயோகத்தில் ஆர்வமிருந்தால் ஆசனம், பிராணாயாமம், தியானம் என்று முறையாகப் பயில வேண்டும். ஆரம்பத்தில் 30  நிமிடம் எளிய ஆசனங்கள் மட்டும் செய்யலாம்.

இவற்றை நாள்தோறும் காலை சூரிய உதய நேரத்திலோ அல்லது மாலை சூரியன் மறையும் நேரத்திலோ செய்யலாம். நல்ல வெளிச்சத்தோடு காற்றோட்டமுள்ள சுத்தமான அறையில் கடவுள், ஞானிகள் படங்களை வைத்து இதற்கென்று ஒரு இடத்தை தயார் செய்ய வேண்டும். நெகிழியால் செய்த யோகா மேட் தற்போது புழக்கத்தில் இருப்பதால் அதன்மீது ஒரு பருத்தி துண்டை விரித்து  ஆசனங்களை செய்யலாம்.

யோகாசன பயிற்சிகள்

1. இறைவணக்கம்

2. பிரணவம் – 10 முறை (அமர்ந்து ‘ஓம்’ என்று சொல்லவேண்டும்)

3. பிரம்மரி – 10 முறை (இரண்டு காதுகளையும் ஆட்காட்டி விரலால் அடைத்து ‘ம்’ என்று சொல்லவேண்டும்)

4. பத்மாசனம் – 10 வினாடி,  ஓய்வு 5 வினாடி, 2 முறை

5. புஜாங்காசனம் – 5 வினாடி, ஓய்வு 5 வினாடி, 2 முறை.

6. சலபாசனம் – 5 வினாடி, ஓய்வு 5 வினாடி, 2 முறை.

7. தனுராசனம் – 5 வினாடி, ஓய்வு 5 வினாடி, 2 முறை.

8. புருஷ்டகந்தாசனம் – 10 வினாடி, ஓய்வு 5 வினாடி, 2 முறை.

9. உஷ்டிதாசனம் – 5 வினாடி, ஓய்வு 5 வினாடி, 2 முறை.

10. ஜான்சீர்சாசனம் – 5 வினாடி, ஓய்வு 5 வினாடி, 2 முறை.

12. பச்சிமோத்தாசனம் – 5 வினாடி, ஓய்வு 5 வினாடி, 2 முறை.

13. பவனமுக்தாசனம் – 5 வினாடி, ஓய்வு 5 வினாடி, 2 முறை.

14. சவாசனம் – கண்மூடிப் படுத்து ஓம் சாந்தி என்று மனதுக்குள் 100  முறை சொல்லவும். . 

ஆசனங்களைக் கண்மூடி செய்யவும். வினாடி கணக்குக்கு 1,2,3,4,5 என்று மெதுவாக மனதுக்குள் எண்ணவும். நாளடைவில் நூறு எண்ணிக்கை வரக்கூடிய சர்வாங்காசனம் போன்றவற்றை செய்யும்போது எளிதாக கை கூடும்.

இது ராஜ யோகத்தின் ஆரம்ப பாடம். ஆசனங்கள் கூடிவரும்போது மூச்சுப் பயிற்சி செய்யலாம். நாடிசுத்தி, பூரக, கும்பக, ரேசக பிராணயாமம் போன்றவற்றையும் செய்யலாம். புத்தகம் படித்து இவற்றைப் பயில்வது சரிவராது.  தக்க ஆசான் துணை வேண்டும்.

உங்களுக்கு குருவின் அருள் கிடைக்கட்டும்.

3 Replies to “யோகசூத்திரங்கள் துணையோடு ராஜ யோக சாதனம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.