மங்கோலிய நாடோடிப் படைகள் மேற்கு யூரோப்புடன் ஏன் போரிடவில்லை?

மகரந்தம்

வீழாத பேரரசுகள் வரலாற்றில் உண்டா? தமிழகத்தில் சோழப் பேரரசு, ராஜராஜ சோழன் மற்றும் அவர் மகன் ராஜேந்திர சோழன் ஆளுகைக்குப் பின் முடிவுக்கு வந்தது. முகலாயப் பேரரசு ஒளரங்க சீப் மறைந்து 50 ஆண்டுகளுக்குள் வீழ்ந்தது. சத்திரபதி  சிவாஜி போசலே  நிறுவிய மராட்டியப் பேரரசு அவர் மறைவுக்குப் பின் சரிந்தது. எல்லாவற்றிற்கும் வரலாற்றாசிரியர்கள் மூல காரணம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பேரரசுகள் நிலையற்ற அங்கக (organic )  இயல்பு கொண்டவையாகவே  தோன்றுகின்றன. 

ஆற்றங்கரை மரமும் அரசவையில்

வீற்றிருந்த வாழ்வும் வீழுமன்றே… என்கிறது மூதுரை.

http://organicananth.blogspot.com/2012/

அறிவியல் இக்கூற்றை ஒப்புக் கொள்வதில்லை. இணைக்கப் பட்டுள்ள கட்டுரை ஜெங்கிஸ்கானின் மங்கோலிய நாடோடி இனக்  குழுவினரால் மேற்கு ஐரோப்பாவைக் கைப்பற்ற ஏன் முடியவில்லை என்பதற்கான அறிவியல் காரணங்கள் கண்டுபிடிக்கப் பட்டு விட்டதாகக்  கூறுகிறது.

1162-ல் ஆசியாவின் மையத்திலிருக்கும் மங்கோலியாவில்  ஒரு நாடோடி இனக்குழுத் தலைவனின் மகனாகப் பிறந்த ஜெங்கிஸ்கான்,  மற்ற இனங்களையும் இணைத்து ஒரு வலிய படையை உருவாக்கினார், பின்னர் சீனாவுக்கும்  மற்றும் ரஷ்யாவுக்கும்  இடையில் உள்ள  மத்திய ஆசிய நிலப் பரப்பை  கைப்பற்றி  மங்கோலிய அரசை   1206-ல்  உருவாக்கினார். இவர் உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க ராணுவத் தலைவர்களில் ஒருவராகக் கருதப் படுகிறார்.  1206 க்கும் 1368க்கும் இடையில் இவர் நாடோடிக்குழுக்களின்  உதவியோடு உலகின் மிகப் பெரிய நிலத் தொடர்புள்ள (contiguous)  பேரரசை நிறுவினார். ஒரு நீண்ட  தாக்குதலுக்குப் பின் மங்கோலியா திரும்பிய ஜெங்கிஸ்கான், சீனப் பேரரசின் சிசியா  மாகாணத்தின் மீது எடுத்த மிகப்பெரிய   ராணுவ நடவடிக்கையின் போது குதிரையின் மேலிருந்து விழுந்து  காயமுற்றார்.அதுவே அவர் நடத்திய கடைசிப் போர்.  1227-ல்  அவர் இறந்த போது, கிட்டத்தட்ட ஆசியாவின்  மூன்றில் ஒரு பங்கு நிலப் பரப்பு  அவர் ஆளுகைக்கு வந்திருந்தது.( பசிபிக் பெருங்கடல் முதல் காஸ்பியன் கடல் வரை) சீனா, கொரியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக், துருக்கி, ஆப்கானிஸ்தான், ஜார்ஜியா, குவைத், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அதில் அடக்கம்.

ஜெங்கிஸ்கான் இறப்பிற்கு முன், தனக்கு அடுத்த மன்னராக தன் மூன்றாவது மகனான  ஒகோடி கானை நியமித்திருந்தார். ஒகோடி தலைமையேற்றபின் (1227-1241), ரஷ்யா,பல்கேரியா, போலந்து மற்றும்  ஹங்கேரி ஆகிய நாடுகளின் மீது படையெடுத்து வென்று மங்கோலியப்  பேரரசுடன்  கிழக்கு ஐரோப்பாவையும் இணைத்துக்  கொண்டார். இந்த தாக்குதலுக்கு சூத்ரதாரியாக  செயல் பட்டவர் ஜெனரல் சுபுதாய்.  ஜெங்கிஸ் கானின் பேரன்களான பாடு கான் மற்றும் கடன் படைத்தலைமை ஏற்றிருந்தார்கள். 

மங்கோலிய ராணுவம் குதிரைப் படை மற்றும் முற்றுகைப் போரில் திறம் பெற்றிருந்தாலும் இந்த யுத்த தந்திரமே மேற்கு ஐரோப்பா நோக்கிப் படையை செலுத்தும்போது அவர்களின் குறைபாடாகியது. குறிப்பாக அரண் பாதுகாப்புகொண்ட நகரங்களும் சதுப்பு அல்லது கரடு முரடான நிலப் பரப்பு களில்  மங்கோலிய ராணுவ  குதிரைப் படைகளின் தடுமாற்றமும்  படை  முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தன. மேற்கு ஐரோப்பிய  நாட்டு மக்கள்  போதிய அத்தியாவசியப்  பொருட்களுடன் மூடிய கோட்டைக்குள் நீண்ட முற்றுகைப் போருக்கு தயாராகி இருந்தார்கள். மங்கோலியப் படைகளுக்கு இது ஒரு புது அனுபவம். இவர்கள் பெரும்பாலும் தங்கள் இருப்பிடத்தை விட்டு பல மாதங்கள் சண்டை  செய்யப் போவதால், போகுமிடமெல்லாம் உணவுக்கும் உடைமைக்கும் கொள்ளையடித்துக் கொண்டே செல்வார்கள். வெற்றி இல்லையென்றால் உணவு இல்லை. அதனாலேயே மிகவும் கொடூரமாகப் போராடுவார்கள். வெற்றியில்லா நாள்பட்ட முற்றுகை இவர்களுக்கு உகந்ததல்ல.எனவே  போராளிகள் மேற்கு நோக்கிய படையெடுப்பை  விரும்பவில்லை. டிசம்பர் 1241-ல் அபார திறமையும் உயர்ந்த தலைமைப் பண்பும்  கொண்ட மன்னர்  ஒகோடி கான் மறைந்தார். அவர் மரணம் மங்கோலியப்   பேரரசின் மேற்கு நோக்கிய விரிவாக்க நினைப்பை முற்றிலும் துடைத்தெறிந்து விட்டது. 

கீழ்க்காணும் சுட்டி கூறுவது: குறிப்பாக மூன்று ஆண்டுகள் (1238-41) ஹங்கேரியும் அதைச் சூழ்ந்த இடங்களும் அசாதாரணமான குளிர் மற்றும் ஈரப்பதம் கொண்டிருந்தன  என மரப் பட்டைகளின் தடிமன் ஆய்வு மேற்கொண்ட அறிவியலாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். மங்கோலியப் படை மேற்கு ஐரோப்பாவைக் கைப்பற்றாமல் நாடு திரும்பிய வரலாற்றுத் திருப்பத்திற்கு இதுவே காரணம் என்கிறார்கள்.      

Scientists Finally Know What Stopped Mongol Hordes From Conquering Europe

2 Replies to “மங்கோலிய நாடோடிப் படைகள் மேற்கு யூரோப்புடன் ஏன் போரிடவில்லை?”

    1. நன்றி திரு. ஜனார்த்தனம் அவர்களே,மகரந்தம் குறிப்புகளாக எழுதிக் கொடுத்திருந்தேன். ஏன் ஐரோப்பாவை விட்டு வைத்தார்கள் என்பதை மட்டுமே எழுத வேண்டியிருந்ததால் சுருக்கமாக எழுத நேர்ந்தது…. கோரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.