புனித வெள்ளி

“என்னத்துக்கு போட்டு இப்புடி கீறுகா?  மனுசன் சிஃப்ட் முடிஞ்சு வந்து கொஞ்சம் கண்ணசந்து உறங்க முடியுதா,” என்றவாறு பிளாஸ்டிக் பாயில் எழுந்தமர்ந்தான் மணிக்குமரன்.

“இன்னைக்கி நேத்து கத மாரி நீ ஏம்ல சலிச்சுக்கிடுத. டெய்லி ஏசுவடியா வீட்டுல நடக்குகதுதான!” என்றாள் மேரி.

“ஆமா ஒரு நாளும் தீராத கத,” என்றவாறு பாயை மடித்து மூலையிலிருந்த மர பீரோவிற்கும், சுவருக்கும் இடையிலிருந்த இடுக்கில் சொருகினான்.

திண்ணையை தூத்துக்கொண்டிருந்த மேரி வாரியலின் பின் புறத்தில் இரண்டு தடவை குத்தி மீண்டும் தூக்க ஆரம்பித்தாள்.

“இன்னைக்கு என்ன கெழமண்ணு நெனவிருக்கா?” என்றாள்.

“ஆமா உங்க ஏசைய்யாவ தூக்கி நிறுத்துன நாளு,” என்றான்.

“லேய் பரியாசமா போச்சா உனக்கு, அந்தால வாயக் கிழிச்சிறுவேன் பாத்துக்க,” என்றாள் அம்மா. அவள் அடுக்களையிலிருந்து வெளியே வந்து கண்கள் சிவக்க பப்படம் வறுத்துக்கொண்டிருந்த சிணுக்கோலியால் கையை ஆட்டியது இப்போதே கிழித்து விடுவாள் என்பது போலிருந்தது. ஏசுவே இரு கன்னங்களைக் காட்ட சொன்னாலும் இவள் அவரைச் சொன்னதற்கு என்னை கொல்ல வருகிறாள் என்று மணிக்குமரன் நினைத்துக்கொண்டான்

பக்கத்து ஏசுவடியாள் வீட்டில் சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டேயிருந்தது. அவன் கண் துடைத்து, திண்ணைக்கு வந்ததும் தலைக்கு மேல் தொங்கிய அப்பாவின் புகைப்படத்திலிருந்த காய்ந்த மாலையை நிமிர்ந்து பாராமல் இழுத்து கசக்கி தூத்துக்கொண்டிருந்த மேரியின் காலடியில் போட்டுவிட்டு திரும்பால் சென்றான்.

“இந்த மாரி ஒருத்தன கட்டுனா காலம்பூறா அழுதுட்டு கெடக்க வேண்டியது தான்,” என்றாள் மேரி

“உனக்கும் இந்த மாரிதாமுட்டி வருவான் நல்ல மொந்தம்பழமா,” என்று அடுக்களையில் நுளைந்து கடுங்காப்பியை எடுத்து திண்ணையில் அமர்ந்தான்.

“ஆமா இவந்தா எனக்கு மாப்ள பாத்து கட்டி வைக்கப் போறானாக்கும். சவம் பேசுகதப் பாரு,” என்றவாறு மேரியும் காப்பியுடன் அவனருகே கால்நீட்டி அமர்ந்தாள். அவர்கள் இருவரைத்தவிர அந்த அறையில் அப்பாவின் புகைப்படமும், இரண்டு கொடிகள் குறுக்கும் நெடுக்குமாக வம்பளந்து கிடந்தன.

“அவனுக்கு என்னட்டி கொறச்சலு, கணக்கா உனக்க ஏசய்யா மாரிதான இருக்கான். என்ன கேட்டாலும் சொரிபிடிச்சு சூம்புன பட்டி மாரி அழுதுட்டே. செரியான சோடியாகும்”

“லேய், உனக்கிட்ட பலதிரிப்பு சொல்லியாச்சு ஏசுவ அந்தாளுக்கூட சேத்து வச்சி பேசாதண்ணு.”

“சத்தம் போடாதட்டி, அம்மைக்கி கேட்டுறபோகு. போறவு மேளந்தான்,” என்று திரும்பி அடுக்களையை பார்த்து அவளுக்கு கேட்கவில்லை என்பதை உறுதிசெய்தவாறு தொடர்ந்தான். “செரி நீ சொல்லு, உனக்கு எந்த மாரி மாப்ள வேணும். சர்ச்சுல சைடுவாக்குல பாப்பியே மாத்தன் அவன்மாரி புடிப்பமா,” என்றான் கிசுகிசுப்பாக.

“எனக்கு என்ன வேணும்னு தெனம் ஏசப்பாட்ட கேட்டுட்டுதான் இருக்கேன். உனக்கிட்ட என்னத்துக்கு சொல்லணும் , எனக்கு அவர் நடத்தி தருவாரு,” என்று சிலுவை போட்டுக்கொண்டாள்.

“நீ அவன என்னத்துக்கு பாக்கண்ணு எனக்கு தெரியாதுண்ணு நெனச்சிட்டு திரிய. நல்ல பனந்தடி மாரி கை கால்லாம் புடச்சி நிக்கி. நெஞ்சு முடி நல்ல அடுப்பு கரியாட்டும். வெள்ள தோலு வேற. அதான் கெறங்கி கெடக்க,” சாதாரண குரலில் அவளைப் பார்க்காமல் சொல்லி முடித்து காப்பியை உறிஞ்சினான்.

“என்ன நெனச்ச என்ன பத்தி, சும்மா அவனுக்கு மேலுக்க கனத்த கண்டு போறேண்ணு நெனச்சியாகும்,” கூறி முடிக்கும் முன் அழுது விட்டிறுந்தாள். அம்மா அவர்களிருவரும் பேசுவதை சாதாரணமாக பதிலேதும் பேசாமல் இருந்து, குழலில் புட்டுமாவைத் திணித்து உச்சியில் தேங்காய துருவலை வைத்து மூடியவாறு கவனித்துக்கொண்டிருந்தாள்.

“அழுகைய நிப்பாட்டு, உண்மைய சொன்னா பொங்குதோ. நான் எல்லாம் பாத்துக்கிட்டு தான் இருக்கேன். உனக்க பிரண்ட்ஸ் கிட்ட அவன காட்டிக் காட்டி பேசுகதும், கையி கால உத்து உத்து பாக்கதும் தெரியாதுன்ணு நெனச்சியாக்கும். வண்டவாளத்த தண்டவாளத்துல ஏத்தாண்டாமுண்ணு பாக்கேன். சர்ச்சுல எசுவே எசுவேண்ணு சொல்லிட்டு அவன் பொறத்தால போறது. உங்களுக்கெல்லாம் இப்புடித்தான பயக்க வேணும்.”

“ஆமால , எனக்கு அப்படிதான் வேணும். பெம்பளைக்கு எதாவது ஒண்ணுண்னா துணைக்கு ஆம்பளதாம்ல வேணும். அப்பன மாரி…இந்தா ஏசுவடியா புருசன் மாரிலாம் வந்தா தெருவுல போற எல்லாம் வந்து ஏறி நிக்கும். நீங்கல்லாம் எதுக்கு ஆம்பளைண்ணு இருக்கீங்க அந்தால போயி முட்டளவு தண்ணில முங்கி சாகவேண்டியது தான.”

“ஆமா, உங்கள கண்ணு கணக்கா பாக்கதுதான் எங்களுக்கு சோலியாக்கும். சக்கரம் உண்டாக்கணும் , நல்ல உடுப்பெடுத்து கொடுக்கணும். இல்லாததுக்கு நல்ல சாமானும் வேணும். அப்படி ஒருத்தன் ஆகாசத்துல இருந்து குதிச்சுதாம்ட்டி வரணும்.”

“இவந்தான் பாத்தான். ஊருல உள்ள எல்லா பொம்பளைகளூம் உங்கள மாதிரி மொந்தம்பழத்துக்கூட தான் குடும்பம் நடத்திக்கிட்டு கெடக்கு. பொணத்துக்கூட தெனம் கெடந்து எந்திக்க மாரியாக்கும்.”

“உள்ளத வச்சி வாழ பழகணும்.”

“ஆமா, உள்ள எல்லாம் சூம்பிப்போய் கெடக்கு. வாழதுக்கு வழி சொல்ல வந்துட்டான்.”

“கூடப்ப்பொறந்தவ மாரியா பேசுக.”

“கூடப்பொறந்தவண்ணு இப்பொதா தெரியாக்கும். மத்தது மறிச்சதுலாம் பேசும்போ ஓர்மையில்ல,” மேரி பேசி முடிக்கவும் ஏழு மணிச்சத்தமும், “இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் கழுவி சுத்திகரிக்கும்,” என்ற பைபிள் வசனம் சர்ச்சில் ஒலித்து முடிந்தன. அவள் எழுந்து குளிக்க செல்ல ஆயுத்தமானாள். அவன் பேசியது சரி என்ற எண்ணம் இருந்த போதும் அவளிடம் மன்னிப்புக்கேட்டு பிரச்சனையை முடித்துக்கொள்ள நினைத்து ,  அவள் கைகளை பற்றியவாறு கொஞ்சும் குரலில்,

“தெரியாம சொல்லிட்டேன். எதோ நெனப்புல வார்த்த வந்து விழுந்துட்டு. மன்னிச்சிரு,” என்றான். அதனைத் தான் அழுதுகொண்டே கூறியது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. பொய்யை உன்னதமாக்க கண்ணீர்த் துளிகள் தேவைப்படுகின்றன, ஏசுவின் குருதியைப்போல.

“நிசாரமா எல்லாம் பேசிருக,” என்று நிறுத்தினாள். அவன் அழுகையை அவளும் அறிவாள். ஒருவருக்கொருவர் செய்துகொண்ட ஒப்பந்ததின் படி, “செரி விடு சாரமில்ல. இனிமேல் இப்படி சொல்லாத கஷ்டமாருக்கு,” என்றாள். அவனும் கண்களை துடைத்தபடி சிரித்துக்கொண்டே, “செரி” என்றான்.

ஏசுவடியாள் வீட்டின் வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். குரிசு அவளருகில் அமர்ந்து சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தான். நீள் முகத்தின் குழிந்த கன்னங்கள் அடர்ந்த நீள் தாடியால் மறைக்கப்பட்டிருந்தது. நெஞ்சுக்கூடு தெரியாமலிருக்க பெரிய சட்டையணிந்து வெட்டியை மடித்துக்கட்டாமல் அமர்ந்திருந்தான்.

“ஏன்ன மயித்துக்கு நீரு இருக்கீறு. கையிருப்பெல்லாம் போறவன் வாறவண்ட குடுத்திட்டு நல்ல நாள் பெரு நாள் அதுவுமா சுடுகஞ்சியும் கெழங்கும் அவிச்சு திங்கவா. ஒரு கிலோ எறச்சி எடுக்க ருவாயில்லை. கொஞ்சமாச்சும் வீட்ட பத்தின உணறு இருக்கா. இந்த கோம்பையன புடிச்சி கட்டி வச்சி எனக்கு வாழ்க்க பேச்சே. இதுக்கு பேசாம அறுதலியா அம்மைக்க வீட்டுல கெடந்தா எனக்கு அண்ணம்மாருல்லா நல்ல சோறு போடுவானுக” என்றாள் ஏசுவடியாள். அதற்கு அவன் பதில் சொல்ல முயலவில்லை. அவனால் பேச முடியும் என்பதே யோசனைக்கு அப்பாற்பட்டதாயிருந்தது.

அமைதியான குரலில் “தெற்றுதான், ஆனா காசில்லாம வந்து கேக்கும்போ பொய் சொல்ல முடியாம கொடுத்துட்டேன். மன்னிச்சிரு. கொஞ்சம் பொறு கடம் கூட கெடைக்கும், வாங்கிட்டு வாந்திருகேன்.” என்றான் குரிசு

“எதுக்கு , அதையும் வாங்கி தெருவுல போறவனுக்கு கொடுக்கவா. யம்மா!…. எனக்கு ஒரு கொடையும் வேண்டாம். திங்காம கொள்ளாம சாவுகேன். தூக்கி போட நாலு பேரு முன்சிபாலிட்டில இருந்து வரமாட்டானா,” என்று ஓலமிட்டாள். அவன் மீண்டும் அமைதியானான். எதும் பேசவில்லை. அவனுக்கும் சேர்த்து அவளே பேசினாள். “உன்னக்கட்டி சிலுவைல ஏத்திருக்கணும். எனக்க ஏசுவே,” என்று நெஞ்சிலறைந்தாள்.

“கடம் கொடுத்தவன் வந்து எனக்க தாலிய அத்துட்டு போகும்போ பாத்துட்டு பல்ல இளிச்சிட்டு நிண்ணீறு. பொட்டப்பய….அடி வாங்கிட்டு எனக்கு பொறத்த வந்த நிக்க, கொஞ்சமாவது சொரண வேண்டாமால உனக்கு. அம்ம பாலு குடுத்தாளா இல்ல வேற என்ன யளவையோ கொடுத்தாளா”

வெங்கன சாமான் வாங்கி அவள் வாசலைக் கடந்து சென்ற எலிசி கிழவியிடம் “யக்கா இந்த மனுசன் செஞ்ச வேலையப் பாத்தீளா , நல்ல நாளுக்கு புது உடுப்பு கூட எடுக்க வக்கில்ல , பொட்டப்பய அடி வாங்கிட்டு வந்து நிக்கான. ஒரு புள்ளைக்காவது வழி உண்டா” என்றாள்

“உனக்க அம்ம மொதல்லையே சொன்னத கேட்டு நடந்திருந்தீண்ணா இந்த மண்டச்சி மகனுக்க பக்கரைய கட்டிட்டு கெடக்காம இருந்துருக்கலாம். சொல்லுகப்போ ஒருத்தியளும் கேக்கது கெடையாது” என்றாள் எலிசி கிழவி. நிற்காமல் நடந்த வாறே தினமும் இதே தேவ வசனத்தை வார்த்தைகள் மாற்றி கூறுவதில் வல்லவள்.

“நல்லவனா தெரிஞ்சாண்ணுல்லா கூட வந்தேன். பொட்டப்பய இருக்க இருப்ப பாறு. சீ….அந்தால போல நாய.”

“உனக்கு நா வேண்டாம்” என்றான் குரிசு

மூக்குச்சிந்தியவாறே “என்னத்த முணுமுணுக்கீறு. அந்தா முக்குல போய் அனக்காம் காட்டாம உக்காரும். உனக்க மாமன கூப்டு சடங்கு சுத்துவொம்,” என்றாள். அவன் பேசாமல் தன் சாறத்தின் விளிம்பு மழை பெய்த தொழியில் நனைய அதனை உணராமல் நடந்தான்.

சென்று சேரும் பொழுதுதான் தெரிந்தது அவன் கால்கள் இங்கு தான் வரப்போகிறதென்று. தேவாலயத்தின் வாசலில் நின்றவன் தொடர்ந்து உள்ளே நுழைந்தான். செங்கற்களால் கட்டப்பட்ட பழைய கட்டிடம். பத்து மணி பிரார்த்தனைக்காக அங்கே தோரணங்கள் கட்டப்பட்டிருந்ததன. ரத்தம் உடலில் ஊர, பச்சை நரம்புகள் புடைக்க சிலுவையில் அவன் உருவம் அந்தரத்தில் தொங்குவதை அவனே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னைத்தானே அடையாளம் காண முயல்வது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. கைகால்களில் ஆணித்தடம் இருக்கிறதா என்று தடவிப்பார்த்தான். இப்பொழுதில்லை ஆனால் அதன் வடு இருந்த இடம் அரிப்பெடுத்தது. கை கால்களை ஒன்றன் மேல் ஒன்று வைத்து மாறி மாறிச் சொரிந்து கொண்டான். காலியாகயிருந்த தேவாலயத்தின் வலது மூலையில் பியானோ வயலின் மைசெட் சகிதம் தயாராயிருந்தது. நடுவில் பாதிரியார் பேசுவதற்கான மைக் கம்பீரமாக நின்றது. ஏனோ அவை அவனுக்கு மனத்திற்கு நிம்மதியைக்கொடுத்தது. தன் சாவின் திருநாள் நினைப்பாயிருக்கலாம்.

“இன்று நான் இறந்த நாள். இன்னும் மூன்று நாட்களில் இன்னோரிடத்தில் பிறந்து மீண்டும் ஓர் வெள்ளிக்கிழமை சாக வேண்டும். நான் செத்த உடலுடன் அப்படியே பிறப்பதாக இந்த மக்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு எப்படிச்சொல்லி புரியவைப்பது. எதற்கு, இருப்பது அப்படியே இருக்கட்டும். அப்பனே என்னை ஏன் இப்படி செய்கிறாய் முதல் தடவை கொன்றாய், அப்படியே என் பிறப்பறுத்திருக்கலாமே. மீண்டும் மீண்டும் சவக்குழியில் இறக்கி பிண நாற்றத்துடம் வெளிக்கொண்டு வந்து ஏன் விளையாடுகிறீர்,” முதல் வரிசையில் சென்று மண்டியிட்டுக்கொண்டான். “எல்லாரையும் அன்பு செய்யும் படி செய்யச்சொன்னீரே , என்னை யார் அன்பு செய்வார். உலகின் கடினமான செயல் அனைவரையும் நேசிப்பதே சீ… நீர் என்னை வைத்து உன் சோதனைக்கு விளையாடினீர். உனக்கு மன்னிப்பே கிடையாது. நீர் இறங்கி வந்து இங்கு வீடு மனவி குழந்தை குட்டிகளுடன் இருந்து பாரும். காலத்தின் காலடியின் அப்பனே நீ யாரென்று தெரியும். உன் ஆசைகள் பலிக்காதவை. அவை ஈரமற்று அலையும் காட்டு ஓநாய். அவை என்னைத் தின்று சொட்டு ரத்தம் இல்லாமல் குடிக்கின்றன. குளிர் தாங்க முடியவில்லை நடுங்குகிறது. என் கை கால்கள் நடுங்குவதை நீரே பாரும் என் அப்பனே” அழுது கொண்டிருந்தான். நிமிர்ந்திருந்த முகத்தின் வழி கண்ணீர் வழிந்து கோர்த்திருந்த கை மொழிகளில் வடிந்தது.

“உங்கள் கணக்கு தெற்றாகிவிட்டது என் அப்பனே. நானே அதற்கு சாட்சி. உறவுகளுடன் மனிதர்கள் சேர்ந்து வாழ நினைக்கும் இவ்வுலகத்தில் நீங்கள் சொல்லும் அந்த அன்பிற்கு இடமில்லை. வாழ்ந்து பாருமைய்யா. நான் பெட்டையா. நீர் அப்பன், உன்னை பெட்டையென்று யாரும் சொல்வதில்லை சொல்லவும் அனுமதிப்பதில்லை. நான் மட்டும் ஏன் பெட்டை. ஆண்கள் அன்பானர்கள் இல்லையா. எல்லா தடவையும் நான் மற்றவர்களின் பாவத்திற்காக கொல்லப்பட்டேன். அதனை நீர் அனுமதித்தீர். அந்த இறுதி நொடியில் கைவிடப்பட்ட ஆடு நான். மீண்டும் அந்த மந்தையில் ஏன் ஜெனிக்க வைத்தீர் என் அன்பானவரே! வேடிக்கை…கைவிடப்பட்ட என்னிடம் மீண்டும் இந்த மந்தைகள் அவர்களை அணைத்துக்கொள்ள துடிக்கின்றன.”

“உன் அன்பு எனக்கு இந்த முறை தேவையில்லை. நான் பட்டாக்கத்தியை எடுக்கிறேன். அதுதான் ஒரே வழி. இந்த முறை நான் உன்னை கைவிட்டுவிட்டேன் என் அப்பனே” என்றவாறு விறு விறுவேன தேவாலயத்திலிருந்து வீடு நோக்கி நடந்தான். மழைக்காற்று அவனை சுழன்றடித்தது. சட்டையும் சாறமும் பறக்க வெரும் ஜட்டியுடன் விலா எலும்புகள் புடைக்க நடந்தான். கை கால்கள் பலம் பொருந்தியிருந்தன , ஆணித்தடங்களில் ரத்தம் சொட்ட ஆரம்பித்திருந்தது. நடக்கவில்லை பறந்தான். மேகம்  வெடித்து மழை அருவியென கொட்ட வானம் கண்ணிமைக்க மின்னல் வெட்டியது. அவன் வீட்டு ஓட்டுக்கூரைகள் மழை சொட்டி அழுது தடுத்தன. உள்ளே நுழைந்தவன் ஏசுவடியாளின் கால்களைப் பிடித்திழுத்து வெளியே கொண்டு வந்து போட்டான். மழைக்கொதுங்கித் தெருவில் நின்ற அனைவரும் வேடிக்கைப்பார்த்தனர். அவனைசுற்றி நெருப்பு வளையும் உருவாகியிருப்பது போல் அவர்கள் உணர்ந்தனர். எங்கிருந்தோ கொண்டு வந்திருந்த தங்க நிற பட்டாக்கத்தியை தலைமேல் ஆவேசமாக தூக்கி அவள் நடுநெஞ்சில் குத்தினான். கத்திக்கொண்டே அதனை முன்னும் பின்னும் ஆட்டி வெளியே எடுக்கும் பொழுது, ரத்தம் அவன் உடம்பில் தெறித்து யோனியிலிருந்து வெளிவந்த குழந்தையைபோலிருந்தான். இவையனைத்தையும் பக்கத்து வீட்டின் சிறிய ஜன்னல் வழியே மேரி பார்த்துக்கொண்டிருந்தாள். சிலுவையில் தொங்கும் ஏசுவின் உருவத்திலிருந்தான், ஆனால் ரத்த விழிகளுடன். ஜன்னலைச் சாத்தி விட்டு திண்ணையின் மூலையில் அமர்ந்து ஜபம் சொல்ல ஆரம்பித்தாள். யாரிடம் முறையிடுவதென்று தெரியவில்லை, ஆனால் ஜபம் நிற்கவில்லை.

நனைந்தபடி திண்ணைக்குள் ஓடிவந்த மணிக்குமரன் பதற்றமாக “ஏட்டி குரிசுக்கு மதம் எழகி போயிட்டு. அவள குத்திக் கிழிச்சி வச்சிருக்கான்,” கள்ளத்தனமான பார்வையில், கனத்த குரலில் “இப்போ சொல்லு குரிசு மாரி மாப்ள பாத்துருவோமா?” என்றான் சிரித்தவாறு. அவள் கண் திறக்காமல் ஜபம் செய்து கொண்டேயிருந்தாள். அம்மா அடுக்களையிலிருந்து வெந்த புட்டுடன்  வெளிவந்து அப்பாவின் படத்தைப்பார்த்து பல்தெரியாமல் சிரித்தாள்.

ஏசு அவன் வீட்டில் ரத்தம் சொட்ட சொட்ட தூக்கில் தொங்கினான். கைகள் காற்றில் விரிந்து சிலுவையில் அடித்தது போலிருந்தது. அவன் சொந்தப் பாவத்திற்கு செத்ததில் முகம் மகிழ்ச்சியாகவேயிருந்தது.

பிணங்களை ஒதுக்கி வைத்து விட்டு தெரு மக்கள் புனித வெள்ளி பிரார்த்தனைக்காக தேவாலயத்தில் கூடினர், மணி பத்தாகியது.

One Reply to “புனித வெள்ளி”

  1. தெய்வம் மனிதனாக இறங்கிவரும் பொழுது , அந்த மனிதனுக்குள்ளே இருக்கும் தைவதமே சக மனிதர்களால் அவனுடைய பலவீனமாகப் பார்க்கப்படுவது எப்பேர்ப்பட்ட சோகமான நகைமுரண் ?

    மனிதன் தெய்வத்தை தன்ஆறுதலுக்காக , தன் சௌகர்யத்திற்காக எங்கேயோ தூரத்தில் உட்கார்ந்திருந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறானே ஒழிய தெய்வத்தின் அணுக்கம் அவனுக்கு மிகப் பெரிய இடையூறாக, இடைஞ்சலாகத்தான் படுகிறது போல.

    மிகவும் மாறுபட்ட கற்பனையை ,மிக அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் இவான் கார்த்திக்! வாழ்த்துக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.