- விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)
- சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)
- பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1
- பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்
- விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன
- விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன
- ராட்சச எண்ணெய்க் கசிவுகள்
- ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து
- விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்
- டால்கம் பவுடர்
- டால்கம் பவுடர் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2
- விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 2
ரவி நடராஜன்
உலகம் முழுவதும், காற்று மாசைக் குறைக்க (air pollution) சில வழிகளைத் தவறாது பின்பற்றுகிறோம்:
- எல்லா வாகனங்களும், வருடம் ஒருமுறை உமிழ் சோதனை (emission test) மேற்கொண்டு, அரசாங்கச் சான்றிதழ் பெறவேண்டும். பல நாடுகளில், இது ஊழல்புரிய ஒரு கருவியாகவே ஆகிவிட்டது
- மக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்குப் பொதுப் போக்குவரத்து பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்கள் என்று சில நகரங்களில் ஓரளவிற்கு உதவினாலும் பெரும்பாலும், மக்களின் போக்குவரத்துத் தேவைகளை இவை ஓரளவே பூர்த்தி செய்கின்றன
- நகரங்கள் விரிந்த வண்ணம் (urban sprawl) இருக்கின்றன. பொதுப் பயண வசதிகள், மக்களின் தேவைக்குக் குறைவாகவே உள்ளது. இது ஒரு வெல்ல முடியாத ஓட்டப் பந்தயமாகிவிட்டது. அரசாங்கங்களின் முயற்சிகள் ஒருபுறம், மேலும் விரிவான நகரம் மற்றும் மக்கட்தொகை மற்றொரு புறம் என்று இரு சாராருக்கும் திருப்தி அளிக்கும் என்று தோன்றவில்லை
- சில நகரங்களில், மையப் பகுதிக்குச் (city center) செல்லத் தனியார் கார்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டும்
- சிங்கப்பூர் போன்ற நாடுகள், கார் வாங்குவதற்கு ஏராளமான வரிவிதித்து, அதை ஒரு மிகப் பெரிய செலவாக்க முயற்சிசெய்து, ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன. மற்ற நாடுகளில், இம்முயற்சிகள் சாத்தியம் இல்லை
- நகரத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில், வேகமாகச் செல்லும் வரைபாதையில் செல்வதற்கு ஒரு காரில் குறைந்தது இரு பயணிகள் இருக்கவேண்டும் என்று சட்டம் வகுப்பது (high occupancy lanes)
- நகரத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் முக்கியச் சந்திப்பில், இலவச கார் நிறுத்துமிடம் உருவாக்கி, பல பயணிகளை ஒரு வாகனத்தைப் பயன்படுத்தத் தூண்டும் முயற்சி (car pooling)
- நகர மையங்களில், சைக்கிள்களுக்குத் தனி வரைபாதை (bicycle lanes) அமைப்பது
- நகரத்தின் பல பகுதிகளில், மின்சாரக் கார்கள் / ஸ்கூட்டர்களுக்கு இலவச நிறுத்துமிடம் உருவாக்கி, காற்றை மேலும் மாசுபடாமல் தடுக்க முயற்சி
- நகர மையங்களில், மலிவாக வாடகை சைக்கிள் (bike rentals) கிடைக்க வழி வகுத்தல்
- நகரங்களின் மையப் பகுதியில், நடப்பவர்களுக்கு நடைபாதை அமைப்பது (pedestrian pathways)
- ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் புகையை உமிழும் கார்களை சாலைகளில் வராமல் பார்த்துக் கொள்வது
- பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற தொல்லெச்ச எரிபொருளுக்கு வரியைக் கூட்டி, அவற்றின் தேவையைக் குறைக்க முயற்சி எடுப்பது (carbon tax)
இப்படிப்பட்ட பல உத்திகளை நாம் எல்லோரும் அறிவோம். என்ன, இது நகர மேயர் அறிக்கையோ என்று தோன்றலாம். எல்லா நகரங்களும் உலகெங்கும் ஏறக்குறைய இப்படித்தான் செயல்பட்டு வருகின்றன.

இதில் முக்கிய சில விஷயங்களை எந்த நகரமுமே செய்வதில்லை (சிங்கப்பூர் போன்ற விதிவிலக்குகள் தவிர):
- நகர வீதிகளில் வாகனங்களைக் குறைக்கும் முயற்சி. இத்தனை விஷயங்களைப் பட்டியலிடும் அதே அரசாங்கங்கள், கார்களின் ஓட்டுனர் உரிமக் கட்டணம் (driver license) , கார்களின் உரிமத் தட்டுக் கட்டணம் (license plate renewal) , சாலை வரி என்று தன்னுடைய நிதி அறிக்கையில், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு வருமானம் எப்படி உயர்ந்துள்ளது என்பதைக் காட்டத் தவறுவதே இல்லை
- வாகன உரிமம், பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் மிக எளிதில் கிடைக்கும் விஷயம்
- வாகன நிறுத்திமிட வாடகை (city center parking revenue) ஒவ்வொரு நகர அரசாங்கத்தினுடைய முக்கிய வருமான அம்சம்
- நகரங்கள் விரிவடைய மக்களுக்கு மேலும் வாகன வசதி செய்துகொடுக்க நகர அரசாங்கங்கள் தவறுவதில்லை. புதிய புறநகர் பகுதிகளில் கார்களில் செல்ல நல்ல சாலைகள், காரிலிருந்து இயக்கக்கூடிய வங்கி ஏடிஎம் –கள், காப்பி மற்றும் உணவகங்கள் என்று ஒரு தனியுலகமே உருவாக்கப்படுகிறது
- வாகன நிறுத்துமிடம் (Mall parking lots) என்பது புதிய ஷாப்பிங் வளாகங்கள் உருவாக்கத்தில் மிக முக்கிய அங்கம்
- புதிய பல்லடுக்குக் கட்டிடங்களில் (new apartments, condos) முதல் இரண்டு பாதாளத் தளங்கள் கார்கள் நிறுத்துவதற்கு. இதை வீடு கட்டுபவர்கள் தனியாக விற்கவும் செய்கிறார்கள்
- பக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பனைச் சந்திக்கப் பெட்ரோல் பைக்கில் செல்லுவது என்பது நமது வழக்கமாகிவிட்டது
- இந்தியா போன்ற நாடுகளில், டீசல் எரிபொருள் மற்றும் சமையல் வாயுவிற்கு மானியம் வழங்கப்படுவதால் டீசலில் மற்றும் எரிவாயுவில் இயங்கும் ஊர்த்திகளை மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள்
- வங்கிகள் மற்ற நிதி நிறுவனங்கள், கார் வாங்கக் கடனுதவி (car loans) மற்றும் குத்தகையைப் (vehicle leases) பெரிதாக நம்பியிருக்கின்றன
- புவி சூடேற்றம் பற்றி வாய் கிழியப் பேசும் அரசியல் தலைவர்கள், பேசி முடிந்தவுடன் தாய்நாட்டிற்குத் திரும்பும்முன் அரபு நாட்டு வழியாக எண்ணெய் இறக்குமதி முடிவெடுத்துவிட்டுதான் வருகிறார்கள்
ஒரு 60 ஆண்டுகளில் எண்ணெய்க்கும் அதில் இயங்கும் ஊர்த்திகளுக்கும் மக்கள் மற்றும் அரசாங்கம் எப்படி அடிமையாகியது? இந்தக் கேள்விக்கு பதிலே, இன்றைய பனிப்புகை உருவாக்கத்திற்கும் பதில் ஆகும். கார் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் ‘மகிழுந்து’ என்று ஒரு சொல் சில இடங்களில் வழக்கத்தில் உள்ளது.
மகிழ்ச்சி + உந்து = மகிழுந்து
உந்துதல் மட்டுமே பிரதானமாக இருந்த இந்த ஊர்த்தி, இன்று மிகவும் சாகசமாக மகிழ்ச்சிக்குப் பிரதானம் கொடுத்து, வெற்றிபெற்ற விற்பனையாளர்களிடம், நாம் எல்லோரும் சிக்கியதால் வந்த வினை இது.
1970 –களில், உலகில் ஒரு பெரிய எண்ணெய்ப் பஞ்சம் நிலவியது. இதனால், உலகப் பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும் நிலை வந்தது. பெட்ரோலை, டீசலை ஒழித்து கட்டிவிட்டுப் புதிய வழிகளைக் காண உலகம் துடித்தது. அந்தக் காலகட்டத்திலேயே, பனிப்புகை தலை தூக்க ஆரம்பித்தது. கடைசி 50 ஆண்டுகளாக எவ்வளவோ துறைகளில் முன்னேற்றம் அடைந்தும், எண்ணெய் / ஊர்திகளுக்கு உலகம் அடிமையாகவே இருந்து வந்துள்ளது. கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்கள்/ இளைஞிகள் உருவாக்கும் மாற்று எரிபொருள் ஐடியாக்கள், சில நாள்களிலேயே மறக்கப்படுகிறது.
இவ்வாறு நடக்க யார் காரணம்? எப்படி 50 ஆண்டுகளில், எந்தப் பெரிய மாற்றமும் இல்லாதவாறு யார் பார்த்துக் கொண்டார்கள்? அரசாங்கங்கள் சமாளிக்க முடியாமல் தவிக்கும் இந்த பிர்ச்சினைக்குப்பின், அரசாங்கத்தைவிடப் பலமான ஓர் அமைப்பு இருந்தால்தான் இப்படி நிகழக்கூடும்.
அந்த அமைப்பு, எண்ணெய் மற்றும் கார் நிறுவனங்கள். இவர்கள் தந்திரமாகக் கந்தகக் குறைப்பு (அமில மழை தடுப்பு) முயற்சிகளிலிருந்து தப்பித்தார்கள். மாற்று சக்தி முயற்சி ஒவ்வொன்றையும், கடந்த 50 ஆண்டுகளாக தவிடுபொடி செய்தவர்களும் இவர்களே.
எண்ணெய் நிறுவனங்கள், ஒரு வருடத்திற்கு lobby செய்வதற்கு, அதாவது விஞ்ஞானத்தைத் திரித்துத் தங்களுக்குச் சாதகமான சட்டங்களை உருவாக்குவதற்குச் செலவிடும் பணம் எவ்வளவு தெரியுமா? 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது, ஏறக்குறைய 1,400 கோடி ரூபாய்கள். இதை முதலாதித்துவ பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அமெரிக்க வளைகுடாப் பகுதியில் எண்ணெய்க் கிணறு வெடித்து, அதனால் வந்த சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளை மூடிமறைத்த BP நிறுவனம், இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
அமெரிக்க வேலைகள் போய், உலகளவில் அமெரிக்கா தன்னுடைய இடத்தை இழந்துவிடும் என்று அழுதுபிடித்து, அமெரிக்க மற்றும் கனடா அரசாங்கங்களிடம் பல பில்லியன் டாலர்கள் மானியம் (மக்கள் வரிப்பணம்) பெற்ற கார் கம்பெனிகள் – GM, Chrysler போன்ற நிறுவனங்கள், இந்தத் திரித்தல் பட்டியலில் அடுத்த இடம் வகிக்கின்றன. இவர்களுக்குக் காற்று மாசு பற்றிய கவலை ஏதும் இல்லை. இவர்களது குறி bums on the seat. அதாவது, எத்தனை கார்களை விற்கமுடியும் என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள். இன்றைய உண்மை, வட அமெரிக்கத் துணைக்கண்டத்தில் அனல் மின் நிலையங்களைவிட, அதிகமாகக் காற்றை மாசுபடுத்துவது ஊர்திகள்தாம். இந்த அமெரிக்கக் கார் நிறுவனங்கள் ஆடும் ஆட்டம் வினோதமானது. ஜப்பானிய நிறுவனங்களும் (டோயோடா, ஹோண்டா) இதில் கைகோர்த்துள்ளது வேதனைக்குரிய விஷயம்:
- பெயருக்கு (டெஸ்லாவைத் தவிர) மின்கலனில் இயங்கும் கார்களைத் தயாரிப்பது. உடனே டீலரிடம்போய் வாங்கும் கார்கள் அல்ல இவை. முன்பணம் செலுத்திப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஏனென்றால், 100 தொல்லெச்ச எரிபொருள் பயன்படுத்தும் கார்களுக்கு, ஒரு மின்கலக் காரைக்கூட இவர்கள் தயாரிப்பதில்லை
- இதனால், அமெரிக்கா மற்றும் கனடாவில் அரசாங்க உதவிப்பணம் அல்லது வரிச்சலுகை நுகர்வோருக்குக் கிடைக்கிறது. காரைத் தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும் அதிலிருந்து ஒரு வரவு (credit) கிடைக்கிறது. அடடா, அருமையாக இருக்கிறதே இந்தத் திட்டம் என்று தோன்றலாம். மேலும் படியுங்கள்
- இந்தக் கார் நிறுவனங்கள், கிடைத்த இந்த வரவை என்ன செய்கின்றன? அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலம், மற்ற மாநிலங்களைவிட மிகவும் கறாரான உமிழ் சட்டங்களைக் கொண்டது. மிக அதிக மக்கட்தொகையும், பணமும் புரளும் மாநிலம் இது. அங்கு கார்கள் மிகவும் குறைந்த அளவு உமிழவேண்டும் என்பது மட்டுமல்லாமல், அடுத்த சில ஆண்டுகளில் மேலும் குறைக்கவேண்டும் என்றும் கலிஃபோர்னியா அரசாங்கம் சொல்லுகிறது. அங்கு ஏராளமாக உமிழும், SUV –க்களை விற்க வேண்டுமானால் ஒரே வழிதான் உள்ளது. இவ்வளவு மின்கலன் கார்கள் விற்ற வரவு இருந்தால், இத்தனை ஏராளமாக உமிழும் (லாபமீட்டும்) SUV –க்களை விற்கலாம். பெரிய கார் நிறுவனங்கள் இதையே செய்கின்றன. உதாரணத்திற்கு, GM தன்னுடைய 1,000 Bolt என்ற மின்கலக் காரை விற்று அதன் மூலம் கிடைத்த வருவாயில் (emission credits) மிகவும் லாபம் ஈட்டும், ஆனால் காற்றை மாசுபடுத்தும் Hummer மற்றும் Silverado போன்ற ஊர்த்திகளை விற்கிறது
- இவர்களிடம் விட்டால், நிறைய லாபமீட்டும் SUV- க்களையே அவர்களுக்கு விற்க விருப்பம். அதிலும், அதில் ஏராளமான சொகுசு அம்சங்களை நிறைத்து (இதற்கு பெட்ரோல் செலவும் அதிகம்) விற்றுத் தள்ளிவிடுவார்கள்
- டெஸ்லாவைத் தவிர மற்ற உற்பத்தியாளர்கள், ஆடும் ஆட்டம் இது. இவர்கள் சமீபத்தில் ட்ரம்ப் அரசாங்கத்தை அணுகி இந்த வரவு சட்டத்தை மாற்றவும் பார்த்திருக்கிறார்கள். அதாவது, முதல் 200,000 கார்களுக்கு மட்டுமே அளிக்கும் இந்த ஊக்கத்தை, எந்த உச்சவரம்பும் இல்லாமல் செய்ய வேண்டுமாம். சுற்றுப்புறச் சூழலின்மேல் அவ்வளவு அக்கறை இவர்களுக்கு! உச்ச வரம்பு நீக்கப்பட்டால் இன்னும் அதிக மின்சாரக் கார்களை விற்று, இன்னும் அதைவிடப் பன்மடங்கு அதிக SUV –களை விற்கலாமே!
- அத்தோடு நிற்கவில்லை இவர்கள். அமெரிக்க ஊர்தி எரிபொருள் செயல்திறன் (vehicle fuel efficiency) அளவுகளைக் குறைக்கவும் சிபாரிசு செய்து ட்ரம்ப் அரசிடம் வெற்றியும் பெற்றுள்ளார்கள். ட்ரம்ப் அரசு, கலிஃபோர்னியா தனியாக உமிழ் சட்டம் உருவாக்கும் சலுகையை விலக்கப் போவதாகச் சவால்விட்டுள்ளது
- ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா இந்த விஷயத்தில் பின்நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது
இரு ஆண்டுகளுக்கு முன்னால், ஜெர்மனியக் கார் நிறுவனமான Volkswagen, தன்னுடைய டீசல் கார்கள் புகை உமிழாத உத்தமக் கார்கள் என்று பொய்ச் சான்றிதழ் வழங்கி மாட்டிக்கொண்டது. உமிழ் சோதனை மோசடியில், பல கோடி டாலர்கள் அபராதம் கட்டியது. இன்னும் பல அப்பாவி நுகர்வோர்கள் புகைந்து கொண்டிருக்கிறார்கள்!
உலகில், அதிகமாக கார்களை உற்பத்தில் செய்யும் நாடுகள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி. இவர்களது பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு, கார் தொழிலுக்கு உணடு. இந்த மூன்று நாடுகளும் தொல்லெச்ச எரிபொருளிலிருந்து வெளிவரத் தயங்கும் நாடுகள். இந்தப் பிர்ச்சினை தீர ஒரே வழிதான் உள்ளது. சைனா மற்றும் இந்தியா (உலகின் பாதி மக்கட்தொகை) புதிய தொல்லெச்சக் கார்களைத் துறக்க வேண்டும். இந்நாடுகள், தங்களது இறக்குமதியைக் குறைத்தாலே இது சாத்தியம். சைனா, இதை இன்னும் சில ஆண்டுகளில் செய்யும் என்று நம்பலாம். இதன் முதற்படியாக, டெஸ்லா கார்களைச் சைனாவில் தயாரிக்க அனுமதித்துள்ளது. டெஸ்லாவைப் பார்த்துப் போட்டியிடப் பல சைனா தயாரிப்பாளர்கள் களத்தில் இறங்குவார்கள் என்று சைனா அரசாங்கம் நம்புகிறது. இந்தியா பெட்ரோலுக்கு அடிமையாகிவிட்டது.
பெரிய SUV-க்கள், பலப்பல வசதிகளை (பெரும்பாலும் மின்னணுவியல் வசதிகள்) வீசி, நுகர்வோரை வெற்றிகரமாக தொல்லெச்ச எரிபொருள் அடிமைகளாக்குவதில் கார் நிறுவனங்கள் வெற்றிபெற்றுள்ளன. 1970 –களில் உலகம் மாற்று எரிபொருளுக்குத் துடித்தது – இன்று பெட்ரோல் மயக்கத்தில் பெரிய பெரிய கார்களை வாங்கி, எங்கு செல்லவேண்டுமோ அதற்கு எதிர்த் திசையில் சென்றுகொண்டிருக்கிறோம். அத்துடன், கார்களின் விற்பனை குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். 2019 –ல், இந்தியா போன்ற வளரும் நாடுகள், தங்களது பொருளாதாரத் தேக்கத்தைக் கார்களின் விற்பனை மூலம் மதிப்பிடுவது வேதனைக்குரியது. இந்திய நடுத்தர வர்கத்தின் கனவாகக் கார்களை உருவாக்கி, விற்பனையாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். வங்கிகள், கடனுதவி செய்து இதை ஊதி வளர்த்துள்ளார்கள். இன்று கோவை போன்ற சிறு நகரங்களில், சைக்கிளில் பயணம் செய்வோரைத் தேடவேண்டியுள்ளது. 20 ஆண்டுகளுக்குமுன், பெரும்பாலும் சைக்கிளில் பயணித்த நகரம் கோவை. இன்று, எங்கு பார்த்தாலும் தொல்லெச்ச பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!
உண்மையில் இந்த பனிப்புகைப் பிரச்சினையைத் தீர்க்கச் சில தடாலடி முயற்சிகள் தேவை:
- கார் வாங்குவது மிகவும் கடினமாக்கப்பட வேண்டும். ஏராளமான வரிகள், சிங்கப்பூரைப் போல விதிக்க வேண்டும். சிகரெட் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று திட்டவட்டமாக முடிவானபின், அதில் கடுமையான வரிகள் விதிப்பதைப் போன்ற விஷயம்தான் இது
- பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் வரியை இன்னும் உயர்த்த வேண்டும்
- கார் மற்றும் SUV விளம்பரங்கள் சிகரெட் போல், எப்படி இவை சுற்றுச்சூழலுக்குப் பாதகம் விளைவிக்கும் என்று தெளிவாக அச்சிட வேண்டும்
- கார் / பைக் விளம்பரச் செலவில் ஒரு பங்கு, காற்று மாசு குறைக்கும் திட்டங்களுக்குத் திருப்பிவிடப்பட வேண்டும்
- மின்கலனில் இயங்கும் கார்களுக்கு வரி விலக்கு அளித்து, அதன் பயனைப் பெருக்க வேண்டும்
- மின்கலனில் இயங்கும் கார்களை மின்னேற்றம் செய்ய சூரிய ஒளியால் இயங்கும் மின்னேற்ற மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்
- இந்தியா போன்ற நாடுகள், உடனடியாக மின்கலன் மாற்றும் பைக்குகளை (battery swappable bikes) உருவாக்க வேண்டும். மின்கலன் மாற்றும் மையங்கள் (battery swapping stations) டாய்வான் நாட்டில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது (Gogoro.com)
- கார் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் lobbying பரிசீலனை செய்யப்பட்டு, இவர்களின் கொட்டம் நிறுத்தப்பட வேண்டும்
- விஞ்ஞான அடிப்படையில், நகர அரசாங்கங்கள் காற்று மாசு நிலை முன்னேற்றத்தை வெளியிடவேண்டும்
- சமீபத்தில் (நவம்பர் 2019) இந்திய உச்ச நீதிமன்றம் டில்லி, பஞ்சாப், அரியானா மற்றும் உ.பி. அரசாங்கங்களைப் பனிப்புகை விஷயத்தில் நடவடிக்கை எடுக்காததற்குச் சாடியது. டில்லியை ஒரு புகை அடைப்புக் குகை (smoke chamber) என்று எள்ளி நகையாடியது. ஏன் டில்லிவாசிகளை துப்பாக்கி வைத்துச்சுடாமல் இப்படித் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டது உச்ச நீதிமன்றம். நிலைமை இவ்வளவு மோசமானதால், வயல்களில் தூரை எரிக்காமலிருக்க ராணுவம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், அரசியல்வாதிகள் விவசாயிகளின் வோட்டை நம்புவதால் எதையும் செய்ய மாட்டார்கள்
இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், செஞ்சிவப்பு வானம் உலகெங்கும் தோன்றும் அபாயம் நிச்சயம் உள்ளது – இது வெறும் டில்லி, லாஸ் ஏங்சலஸ் மக்கள் மட்டும் அனுபவிக்கும் கொடூரமாக நிற்காது.