தீவு

ராமையா அரியா

ரடங்குக்கு முன்பே எனக்கு அன்பழகன் சாரைத் தெரியும். ஒரு நாள் நீலாங்கரையில் சட்டம்  குறித்த என்னுடைய சொற்பொழிவுக்கு வந்திருந்தார். முடித்து வெளியே போகும்போது, “உங்ககூட கொஞ்சம் பேசணும்,” என்றார்.

ஒரு டீ குடித்துக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்டேன்.

“இந்தப் பால் விஷயத்தை நீங்க முதல்ல கவனிக்கணும்,” என்றார். “அதுலதான் எல்லா அக்கிரமும் நடக்குது.”

“ஆவின் பாலா? கலப்படமா?” என்றுகேட்டேன்.

“மகா விஷம்,” என்றார் என்னுடைய  கையிலிருந்த டீயைப் பார்த்தவாறே.

ஒவ்வொரு சொற்பொழிவிலும்  இதுபோல யாராவது வருவது உண்டு. சற்று நேரம் பேசியபின் நான் கழண்டுகொள்வதற்கு  வழி பார்த்தேன்.

“வாங்க, பேசிட்டே போகலாம். நானும் திருவான்மியூர்தான்,” என்றார்.

பார்த்தால் அவர் எங்கள் வீட்டுப் பக்கம் இருந்த ஹவுசிங்போர்டு குடியிருப்பில்  இருந்தார். அடிக்கடி பார்த்துக் கொள்வோம். அந்தப் பால் விஷயத்தை அவர் விடவில்லை. பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு ஒவ்வொரு பரிசோதனை நிலையமாக ஏறி இறங்கினார். எல்லோரும் விரட்டிவிட்டார்கள்.

“பேசாம அமேரிக்கா அனுப்பி சோதனை செய்யலாம்னு இருக்கேன்,” என்றார்.

“அங்க போறதுக்குள்ள பால் திரிஞ்சு  போயிடும்,” என்றேன் நான்.

“பிரிட்ஜ்ல வச்சு அனுப்பிடலாம்,” என்றார்.

இவர் குறித்து வீட்டில் சொன்னவுடன் ரம்யா முதலில் சிரித்தாள். ஆனால் வீட்டுக்குப் பக்கத்தில் என்றவுடன் கவலைகொண்டாள்.

“க்ராக்கு மாதிரி இருக்கு. வீட்டுக்கு வந்து நிக்கப்போறார்,” என்றாள். 

அன்பழகன் வழக்கமான அரசியல் பேசி நான் பார்த்ததேயில்லை. எல்லோருக்கும் பின்னிருந்து இயக்கும் இல்லுமிநாட்டி போன்ற சூத்திரதாரிகளைப்  பற்றி அவருக்குக் கவலையில்லை – தம்மைச் சுற்றி உடனே கண்ணுக்குத் தெரியும் சதிகள்  மட்டுமே அவரை இழுத்தன. அவர் போன்ற மனிதர்களுக்கு இது அபூர்வம்.

ஒவ்வொரு சிறு கூட்டத்திலும் வந்து அமர்ந்துகொள்வார் – கவனமாகக் ஒரு சிறு நோட்டுப்புத்தகத்தில் குறிப்புக்கள் எழுதுவார். பிறகு வெளியே நின்று மருந்து கம்பெனிகள், டாக்டர்கள் குறித்த தம் சந்தேகங்களைப் பகிர்ந்துகொள்வார்.  

“நல்லா பாருங்க – எக்ஸ்-ரே மெஷினை ஆன் பண்ணிட்டு நர்ஸ் அங்க நிக்கலை,” என்று ஒரு நாள் சொல்லிக் கொண்டிருந்தார். “அவ ஓடிட்டா. நான் முட்டாப்  பயலாட்டம் சட்டயத் திறந்து போட்டு நின்னுட்டிருந்தேன்.

“இங்க வாம்மான்னு கூப்பிட்டேன். நீயும் என் பக்கத்துல வந்து நில்லும்மா. எங்க ஓடுற?”

சுற்றிக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் நகைத்தார்கள்.

“நாலு தரம் எக்ஸ்-ரே எடுத்திட்டா கேன்சராமே…அடுத்த ரெண்டு வருஷத்துக்கு அந்த டாக்டருக்கு வருமானம்…என்ன நான் சொல்றது?”

வீட்டில் வந்து நான் இதைக் குறித்துத் தெரிவித்தபோது, ரம்யா, “மரணபயம்,” என்றாள். 

“ஆள் நல்ல திடகாத்திரமா இருக்கார்,” என்றேன்.

“சின்ன வயசுல ஏதாவது பறிபோயிருக்கும். அந்த வருத்தத்துல சாவைப் பாத்துப் பயம் வரும். அதான்இப்படிஉளர்றார்.”

*

வூஹான் வைரஸ் இதனாலேயே அன்புசாரின் கவனத்தைப் பெறத் தவறிவிட்டது. பக்கத்துத் தெரு சாக்கடையின் கெமிக்கல் வாசனை, முக்குக் கரெண்ட் கம்பத்தின் விபரீத அலைகள் என்று அவர் இருந்தபோது வைரஸ் கொஞ்சங்கொஞ்சமாக உலகமெல்லாம் பரவி ஊரடங்கில் கொண்டுபோய் விட்டுவிட்டது. 

ஒரு நாள் காலையில் மாங்குமாங்கென்று அரிசி மூட்டை ஒன்றை இழுத்துப்  போய்க்கொண்டிருந்தார். 

நானும் போய் ஒரு கை பிடிக்கப் போனேன்.

“அரிசி வெயிட்டே இல்லை? பிளாஸ்டிக் போட்ருப்பானோ?” என்று போட்டுப் பார்த்தேன்.

“எதுவா இருந்தாலும் இப்போ தின்னுதான் ஆகணும்,” என்றார் அன்பழகன். 

இரண்டு மாடிகள் ஏற்றி விட்ட பின்னர், முதல் முறையாக அவர் வீட்டிற்குள் போனேன். நான்  எதிர்பார்த்தது போலவே தனியாகத்தான் இருந்தார். சிறிய ஹாலில் சுவற்றில் அவருடைய திருமண படம் மாட்டியிருந்தது. சற்றுத் தள்ளித் தனியாக மனைவியின் படம், குங்குமப்பொட்டுடன்.

“வீட்ல யாரும்  இல்லையா?” என்று எதற்கும் கேட்டு வைத்தேன்.

“தனியாள்தான். அப்போதான் இந்த மாதிரி பொது வேலை  பாக்க முடியும் தம்பி,” என்றார்.

வீட்டிற்கு வெளியே வந்து படி இறங்கும் இடத்தில் நின்றோம்.

“தம்பி, ஒரு செகண்ட் மேல வாங்க,” என்றார். வீட்டிற்கு உள்ளே போய் ஒரு பெரிய பைனாகுலர் எடுத்து வந்தார்.

மொட்டைமாடிக்குப் போனோம்.

அந்த இடத்தில் சுற்றி பெரிய கட்டடங்கள் இல்லை. சற்றுத் தள்ளிச் சுட்டிக்காட்டிவிட்டு, பைனாகுலரை என்னிடம்கொடுத்தார்.

“அந்த  கண்ணாடிக் கட்டடத்தோட உச்சில பாருங்க,” என்றார்.

அது  ஒரு ஐ.டிபார்க். சென்னையில் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்ததும் கூட. அதன் மாடியில் சில மனிதர்கள் குச்சிபோல நிற்பது தெரிந்தது.

“தெரியுதா?” என்று மெதுவாகச் சொன்னார்அன்பழகன்.

“என்ன சார்?”

“நாலு நாளா, ஊரடங்கு அறிவிச்ச மறு நாள்ல  இருந்து, அங்க மாடில ஏதோ வேலை நடக்குது,” என்றார்.

நான் மறுபடி பார்த்தேன். அந்த மனிதர்கள் என்னைத் திருப்பிப் பார்ப்பதுபோல ஒரு பிரமை வந்ததும் சட்டென்று பைனாகுலரை இறக்கினேன்.

“நாளைக்கு அங்க நேர்ல போய்ப் பாக்கப்போறேன்,” என்றார்.

*

இதற்குப் பிறகு சில நாட்கள் நான் அன்பழகனைச்  சந்திக்கவில்லை. துணி துவைப்பதிலும், பாத்திரம் தேய்ப்பதிலும் என் நாட்கள்சென்றன. ரம்யா மருத்துவமனை போய்வந்தாள். அவள் மனநலமருத்துவர்தான் என்றாலும் தினம் போகவேண்டி இருந்தது.

காய்கறி வாங்கப் போய்வரும்போது ஒரு நாள் அந்த ஐ.டிபார்க் கட்டடத்தை நின்று பார்த்தேன். மேலே பெரிய டிஷ் ஆன்டென்னா ஒன்று  கட்டியிருந்தார்கள் –  மாலை வெயிலில் பளபளத்தது. இதை உருவாக்கத்தான்  அன்பழகன் காட்டிய அந்த மனிதர்கள் வேலை பார்த்தார்கள் போலும். 

அன்று இரவு ஏழு மணி இருக்கும். நான் தனியாக அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தேன். வைரஸ் செய்திகள் முடிந்து ஏதோ ஒரு மருத்துவமனை வாசலில் இருந்து நிருபர் ஒருவர் பேசினார். கதவு தடதட என்று தட்டும் ஓசை கேட்டது. எழுந்துபோய்த் திறந்தால், அன்பழகன். 

“உள்ள வரவா? கொஞ்சம் அவசரம்,” என்றார்.

உள்ளே நுழைந்து கதவுக்கு அவரே தாள் போட்டார். 

“என்ன இந்த நேரத்துல?” என்றேன்.

“கவர்மெண்ட் ஆட்கள் ரெண்டுபேர் பின்னாடியே வந்தாங்க. அதான் சட்டுன்னு இங்க நுழைஞ்சிட்டேன்.”

ஹாலில் சோபாவில் அமர்ந்து டி.வியை உற்றுப் பார்த்தார். ராயப்பேட்டை மருத்துவமனை வாசலில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

காட்சி மாறியதும், “இன்னைக்கு அந்தக் கட்டடத்துக்குப்போயிருந்தேன்,” என்றார். ஐ.டி பார்க்கைத்தான் சொல்கிறார் என்று எனக்கும் புரிந்தது.

“உள்ள விட்டாங்களா?”

“எப்டியோ போயிட்டேன். வெளியில் இருந்து  பாத்தா காலியா இருக்கு. உள்ள ஏகப்பட்ட பேர். டி.வி ஷூட்டிங் நடக்குது.”

“ஓஹோ. சீரியலா?”

“இல்ல தம்பி. நியூஸ் எல்லாம் அங்கதான் எடுக்கிறான். நிறைய செட் போட்டிருக்கான். இப்போ ராயபேட்டைனு காட்டினானே, அதுவே அந்தக் கட்டடம் பின்னாடி எடுத்ததுதான்.”

*

மறுநாள் காலை ரம்யா மருத்துவமனைக்குக் கிளம்பியபோது நானும் தொற்றிக்கொண்டேன். 

“அன்புசார் நம்மகூட வரார்,” என்றேன்அவளிடம்.

அன்பழகன் விடுவிடுவென்று வந்து வண்டியில் ஏறிக்கொண்டார்.

“வணக்கம்மா.”

வண்டி அடையாறு நோக்கிக் கிளம்பியது. 

“ரம்யா, இன்னைக்கு இவரை ராயப்பேட்டைக்குக்  கூட்டிப்போறேன்,” என்றேன்.

“அங்க என்ன இருக்கு?” என்றாள்.

“அடையாறைத் தாண்டிப் போக விடமாட்டாங்கன்னு சார் சொல்றார்,” என்று சொல்லி முந்தைய நாள் அவர் பார்த்தது குறித்துச் சொன்னேன்.

ரம்யா சிறிது நேரம் மவுனமாக வண்டி ஒட்டினாள். பிறகு, “நாம் இருக்கிற இடம் மட்டும் உலகத்துலையே விசேஷமான இடம்னு உங்களுக்கு எப்பயாச்சும் தோணுதா, அன்புசார்?” என்றாள்.

அன்பழகன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஏதோ சொல்லவந்தார். ஆனால் எதிரே அடையாறில்  இருந்து ராயப்பேட்டை நோக்கிப் போகும் பாலம் தெரிந்தது. ரம்யா அவளுடைய மருத்துவமனையைத் தாண்டி வண்டியை நிறுத்தினாள். மூவரும் இறங்கினோம். 

பாலத்தின் குறுக்கே ஓர் அடைப்பு வைத்திருந்தது. ஓரிரு போலீசார் நின்றுகொண்டிருந்தனர். 

ரம்யா, “பாலத்துல ஏறிப் பாருங்க,” என்றுவிட்டுப் போய்விட்டாள். நாங்கள் இருவரும் பாலத்தின் மேல் ஏறினோம்.

கீழே, எப்போதும் தேங்கி நாற்றம் பிடிக்கும் அடையாறு நதி சீராக, ஆழமாக  ஓடிக்கொண்டிருந்தது. பெரும் தூர்வாரும் இயந்திரங்கள் அதன் கரைகளில் நின்றன. அவற்றைச் சுற்றிப் பல மனிதர்கள் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

“பரவாயில்லையே,” என்றேன்  நான்.

பாலத்தின் அடியில் அந்த இயந்திரங்களில் ஒன்று மோதி சேதப்படுத்தி இருப்பது தெரிந்தது.

*

மே மாதம் முதல் வாரத்தில் இருந்து அன்பழகன் அடிக்கடி ஊரைச் சுற்றிவந்தார். பலருடன் பேசிக்கொண்டு நிற்பதைப் பார்த்தேன். செல்போனில் சில வீடியோக்களை அவரே வீட்டு மாடியில் வைத்து எடுத்துக்கொண்டார்.

மே ஒன்று:

“தம்பிகளே….போன வாரம் அடையாறு தாண்டிப் போக முயற்சி பண்ணேன். நடக்கலை. பாலத்தை மூடிட்டான்.

“தெற்க  நீலாங்கரைக்கு அந்தப்பக்கம் யாரையும் விடலைனு  பக்கத்து வீட்டு ஆயாம்மா  சொல்லுது. சிலபேர் கடலே அந்தப் பக்கம் உள்ள வந்திருச்சின்னு சொல்றாங்க. நான் இன்னும் போய்ப் பாக்கலை.

“கிழக்க கடல். மேற்க கால்வாய். நாம எல்லாரும் ஒரு தீவுல மாட்டி இருக்கோம். ஏன் இந்த கதி?”

காமிரா கன்னாபின்னாவென்று ஆடிவிட்டுத் தள்ளி இருந்த ஐ.டி பார்க் கட்டடத்தில் போய் நிலைத்தது.

மே பதினைந்து – அன்பழகனின் வீடியோவில் இருந்து:

(முகம் வெளிறி இருக்கிறது.) 

“நேத்து பெசன்ட்நகர் மயானத்துல காலையில இருந்து பாத்தேன். பாடில்லாம் வரிசையா வந்திட்டே இருக்கு. 

“ஒரு சில பிணங்களைப் பக்கத்துல போய்ப் பாக்க முயற்சி பண்ணேன் – கரோனால இறந்தா  மண்டை சைஸ் பெருசாகி இருக்கும். சில  சமயம் கபாலம் பிளந்துடும்னு சொல்றாங்க. அப்படி எதுனாச்சும் இருக்கான்னு கேட்டா நம்ம மக்களே கோபப்பட்டு விரட்டிவிடுறாங்க. உண்மையைக் கண்டுபிடிக்கச் செத்தவன் உறவுக்காரனுக்கே ஆர்வம் இல்லை.”

“டி.வில பாத்தா அடையாறுல வைரஸ்னால சாவே இல்லைன்றான். யாரை நம்புறது? நம்ப கண்ணையா, இல்லை இவன் டி.வில காட்டுறதையா?

“இதுக்கு நம்மகிட்ட ஒரு ஆள் இருக்கார். நாளைக்கே உண்மையோட வரேன்.”

ரம்யாவுக்கு இந்த வீடியோவை அனுப்பினேன். அவளிடமிருந்து பதில் வரவில்லை என்றவுடன் அழைத்தேன். சற்று நேரம் பொறுத்து எடுத்தாள். மெதுவாகப் பேசினாள்.

“என்ன விஷயம்? நான் செஷன்ல இருக்கேன்.”

“இந்த அன்பழகன் பத்திக் கொஞ்சம் பயமா இருக்கு. அவரை உன்கிட்ட கூட்டிவரவா?”

“இங்க யாருக்கும் நேரம் இல்லை, ரகு.”

பின்னால் யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. 

“ரம்யா, அவர் என்கிட்டேதான் வரார்னு நினைக்கறேன்.”

ஆனால் அவள் போனை வைத்துவிட்டாள். 

*

இரவு முன்போலவே ஏழுமணிக்குக் கதவு தட்டப்பட்டது. அவர்தான்.

“தம்பி, பாத்து ரொம்ப நாளாச்சு.”

நான் சுரத்தே இல்லாமல் அவரை அமரச் சொன்னேன்.

“அப்பவே வரணும்னு நினைச்சேன் – மயானத்தில் இருந்து வந்தா குளிக்கணும்னு இருக்கே, அதான் லேட்டாயிருச்சி.”

“ஒவ்வொரு நாளும் போறீங்களா?” என்றேன்.

“ஆமா தம்பி. ஏகப்பட்ட சாவு. அது இருக்கட்டும். உங்ககிட்ட ஒரு  உதவி ஆகணுமே.”

நான் காத்திருந்தேன்.

“உங்க மனைவி ஆஸ்பத்திரில மார்ச்சுவரி இருக்குல்ல, அங்க என்னை ஒருநாள் கொண்டுபோய் விடமுடியுமா?”

“செத்தாதான் அங்க கொண்டுபோவாங்க.”

“ஹாஹாஹா. அதில்ல தம்பி… கரோனாவோட உண்மை நிலவரம் தெரியணும்னா ஒரு நைட்டு அங்க இருந்தாதான் முடியும்.”

“ஒவ்வொருத்தர் மண்டையா போய்ப் பாக்கப்போறீங்களா?”

“வேற வழியில்லை தம்பி.”

நான் கேட்டுப் பார்ப்பதாகக் கூறி அவரை அனுப்பிவைத்தேன். ரம்யாவிடம், “வேற வீடு பாக்கலாமா?” என்று கேட்டேன். அவள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

ஜூன் ஒன்று – அன்பழகனின் வீடியோ செய்தியில் இருந்து:

“நண்பர் ஒருத்தரை நம்பினேன் – ஏமாத்திட்டார். அரசாங்கத்துக்குக் கைக்கூலி ஆயிட்டாரா, விலைபோயிட்டாரானு தெரியலை. 

“நிறையபேர் எனக்குப் பதில் எழுதுறீங்க. பாராட்டுறீங்க. ஆனா காலையில மயானத்துல, சாவுவீட்டுலனு கூப்பிட்டா யாரும் வரமாட்டேன்றீங்க. 

“அடுத்த கட்டத் திட்டம் ஒண்ணு இருக்கு. நாளைக்குச் சொல்றேன்.”

*

மறுநாள், ஜூன் இரண்டன்று, தொலைபேசிகள் நின்றுபோயின. சென்னைக்குள் சில இடங்களில் வேலைபார்த்தன – ஆனால் வெளியே யாரையும் கூப்பிட முடியவில்லை. இணையமும் அதேபோலப் படுத்தியது. மிதமிஞ்சிய சூரியக்கதிர் வீச்சினால் சாட்டிலைட்டுக்கள் சில எரிந்தேபோய்விட்டதாகப் பேசிக்கொண்டார்கள்.

எனக்கு அன்பழகனைக் குறித்துப் பாவமாக இருந்தது. கட்டாயம் தம்மைக் குறிவைத்துத்தான் இணையமே நிறுத்தப்பட்டதாக அவர் நம்புவார். இப்படி நடப்பது எல்லாம் அவருடைய சந்தேகங்களை அதிகரிப்பதாகவே நடக்கின்றன. என்ன செய்வார் என்று ரம்யாவிடம் கேட்டேன்.

“கட்டாயம் பயம் அதிகமாத்தான் ஆகும்,” என்றாள் அவள். “ஏதாவது மேஜரா அவரைச் செய்யத் தூண்டும்.”

*

இரண்டு நாட்கள் கழித்து, அந்தி மங்கும் நேரத்தில் வெளியே கூக்குரல்களும் பலர் நடமாடும் சத்தமும் கேட்டது. நான் வெளியே போய்ப் பார்த்தேன்.

அன்பழகன் இருந்த குடியிருப்புக்கு வெளியே பலரும் நின்று கத்திக்கொண்டிருந்தார்கள். நடுவில் அவர்.

“என்ன சார்?” என்று போய்க் கேட்டேன்.

“என் வீட்டுக்குள்ள போகக் கூடாதாம்.”

“தினம் எழவு வீட்டுக்குப் போயிட்டுவரார் சார். ஏற்கனவே ஊரெல்லாம் வியாதி, ” என்று ஒருவர் கத்தினார்.

அன்பழகன், “ஊரெல்லாம் வியாதின்னே நான் சொல்லித்தான் உங்களுக்குத்  தெரியும்,” என்றார்.

சிலர் அவரை நோக்கிக் கையை ஓங்கிக்கொண்டு போய்விட்டுப் பிறகு தொற்றுக்குப் பயந்து  நின்றார்கள்.

“எல்லாரும் போய் டி.வி பாருங்க. நான் போறேன்,” என்றுவிட்டு அன்பழகன் கிளம்பிவிட்டார். 

எனக்குச் சங்கடமாக இருந்தது. வயது முதிர்ந்தவர். தெளிவாக மனநிலை சரியில்லாதவர். ரம்யா ஏன் இவருக்குச் சிகிச்சைகொடுக்க மறுக்கிறாள்?

*

அன்று இரவு பதினோரு மணிக்கு அன்பழகனிடம் இருந்து போன் வந்தது. போன் அடித்தே சில நாட்கள் ஆனதால் திகிலுடன் எடுத்தேன்.

“தம்பி…,” என்றார். அவர் மூச்சுவாங்குவது கேட்டது. எங்கோ வெளியில் இருந்து பேசுகிறார் என்று தெரிந்துகொண்டேன். காற்று வேகமாக அடிக்கும் ஓசை கேட்டது. 

“மார்ச்சுவரியா?” என்று கேட்டேன்.

“இல்ல தம்பி. எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணுமே?”

“நான்தான் அரசாங்கக் கைக்கூலியாச்சே…”

“ஐயோ, அத விடுங்க. எனக்கு ஒரு படகு அவசரமா வேணும்.”

நான் முழுவதும் விழித்துக்கொண்டு, ”எங்க இருக்கீங்க?” என்று கேட்டேன்.

“அடையாறு ஆத்துக்கரையில தம்பி. துடுப்புப்படகா இருந்தா நல்லா இருக்கும்.”

“அன்புசார். நீங்க திரும்பி வாங்க. ரம்யாகிட்ட சொல்றேன். கட்டாயம் குணப்படுத்திடுவா.”

சிறு தயக்கம்.

“டாக்டர் யாரையும் நம்பாதீங்க தம்பி. அவங்களுக்கு உண்மை தெரியும்.”

அவர் போனை வைத்துவிட்டார்.

மறுநாளும் அவர் வீட்டுக்கு வரவில்லை என்று சொன்னார்கள். மூன்றாவது நாள் இரவு ஒரு சிறு பெண் எங்கள் வீட்டிற்கு வந்தாள்.

“அங்கிள், அன்புதாத்தா வந்திட்டார், ஆனா உடம்பு சரியில்லை போல. எங்க அம்மா உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க.” 

ரம்யா வீட்டில் இல்லை. நான் முதலில் கரோனாவை நினைத்துத் தயங்கினேன் – பிறகு முகக்கவசம் போட்டுக்கொண்டு குடியிருப்புக்கு ஓடினேன். எல்லோர் வீடுகளும் அடைத்திருந்தன. மாடியில் அவர் வீட்டுக் கதவு தள்ளினால் திறந்துகொண்டது. அன்பழகன் மல்லாக்கத் தரையில் படுத்திருந்தார். ஒரு நிமிடம்அவர் தலை உண்மையிலேயே பெரிதாகி இருப்பதுபோல எனக்கு ஒரு பிரமை தோன்றியது. 

போன் இல்லை. ஆம்புலன்ஸ் வராது. ஆனால் முகக்கவசம் போட்டிருந்த துணிவில் அவர் அருகே போய்க் கூப்பிட்டேன். பிறகு கால்களைத் தொட்டுப் பார்த்தேன். நல்லவேளை – சூடுஇல்லை. மூச்சும் சீராக வருவது போலவே தோன்றியது.

“அன்புசார்,” என்று கையைப்பிடித்து ஆட்டினேன்.

கண் விழித்தார். விழிகள் சிவப்பாக இருந்தன. 

“ஆஸ்பத்திரி போலாம்.”

அவர், “தம்பி, தப்புப் பண்ணிட்டேன்,” என்றார். 

“சரி, கிளம்புங்க.” 

அவர் ஏதோ ஒரு சக்தியுடன் என்னைத் தள்ளிவிட்டார். 

“தள்ளி இருங்க தம்பி. எனக்கு வைரஸ் இருக்கு.”

அவர் கைகள் சுட்டிக்காட்டிய இடத்தில் பழைய வேட்டி, சட்டை கிடந்தன. 

“நான் போன பிறகு அதக் கொண்டுபோய் எரிச்சிருங்க,” என்றார்.

நான்,”சார், வைரஸ் வந்த முக்கால்வாசி பேர் நல்லாதான் இருக்காங்க. ஒண்ணும் ஆகாது உங்களுக்கு.”

அவர் மலங்க மலங்க முழித்தபடி எழுந்து நடந்தார். படிகளில் அவரே இறங்கிவந்தார்.  பிறகு சாலையில் நடக்க முயற்சித்து அழுக்குத் தரையில் உட்கார்ந்துவிட்டார்.

நான் அவசர அவசரமாகப் போய் என் காரை எடுத்துவந்தேன். அவரோ எழுவதுபோலத் தெரியவில்லை.

“சார்?” என்றேன்.

“தம்பி, தப்புப் பண்ணிட்டேன்,” என்றார் மறுபடி. “கிருமிய தீவுக்குள்ள கொண்டுவந்திட்டேன்.”

நான் மவுனமாக இருந்தேன்.

“நீங்க சொல்ல சொல்லக் கேக்காம அடையாறத் தாண்டி நீந்திப் போனேன், தம்பி. ஆத்துல மிதந்திட்டிருந்தது எல்லாத்தையும் தாண்டிப் போனேன். ரெண்டு நாள் அக்கரையில சுத்தினேன். அந்தப் பக்கம் யாருமே இல்லையே,” என்றார், கையை விரித்தபடி. “எல்லாம் செத்திட்டாங்க.”

*

மருத்துவமனை வாசலில் அவரை ஒப்படைத்துவிட்டேன். போவதற்கு முன் மறுபடி, “என்ன மன்னிச்சிருங்க தம்பி,” என்றார்.

இரவு ஒரு மணி இருக்கும். ரம்யாவைப் பார்க்கமுடியவில்லை – நள்ளிரவில் சைக்கியாட்ரிக் வார்டில் என்ன வேலையோ. 

பாலம் இடப்புறம் தெரிந்தது. கிட்டத்தட்ட மொத்தமாக விளக்குகள் இல்லை. போலீசும் இல்லை. இடையே இருந்த தடுப்புக்கள் அப்படியே இருந்தன. 

ஆற்றுக்கு மறுபுறம் தெரிந்த கட்டடங்களைப் பார்த்தேன் – அவற்றில் விளக்குகள் எரிந்தன. 

இருண்ட பாலத்தில் ஏறி நடந்தேன். அன்பழகன் இதற்குக் கீழேதான் நீந்திப் போனாரா? இல்லை அதுவும் அவரின்  வினோத  மனம் உருவாக்கிய கற்பனையா?

பாலத்தின் மேல் சாய்ந்து நின்றேன். நல்ல காற்று. 

கீழே அடையாற்றில் சிறுசிறு மிதவைகள் செல்வது தெரிந்தது. ஆற்றின் வேகத்தில் அடித்துச்செல்லப்பட்டுச் சுழன்றபடியே அவை சென்றன. கறுப்புத் திட்டுக்களாக. அருகே இருந்த ஆழப்படுத்தப்பட்ட முகத்துவாரத்தைத் தாண்டி அந்த மிதவைகள் ஆழ்கடலுக்குள்ளே சென்றுவிடும்.

என் உடல் நடுங்கியது.

***

2 Replies to “தீவு”

  1. நண்பர் ராமையாவின் இந்த “தீவு” சிறுகதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எழுத்தில் ஒரு இயல்பான நடை தெரிகின்றது. மனநலம் சார்ந்த கதைகள் அதீத கற்பனையுள்ளவர்களுக்கே கை கூடும் அல்லது அது உண்மை சார்ந்த ஒரு கதையாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.