டாக்டர் கடலூர் வாசுதேவன்

கோவிட்-19 சர்வதேச தொற்றுநோய் கடந்த 8 மாதங்களில் இரண்டரை கோடி மக்களைத் தாக்கியுள்ளது. உயிரிழந்தவர்கள் 8,50,000 பேர். 65 வயதிற்கு மேலானவர்கள் அமெரிக்காவில் மட்டும் 80 சதவீதம் ஆகும். இந்நோயின் தாக்கம் தொடர்வதால் இந்நோயைப் பற்றியும் இதன் காரணமான நோய்க்கிருமியைப் பற்றியும் புதிய செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன. எல்லோருமே எதிர்பார்ப்பது இந்நோய் எப்போது எவ்வாறு நம்மைவிட்டு அகலும், இதற்கான தடுப்பூசி எப்போது வெளிவரும் என்பதே. ஆனால், அதைவிட முக்கியமானது, பெருமளவில் இறப்பவர்கள் முதியோர்களாக இருப்பதால் இத்தடுப்பூசியின் தாக்கம் அந்த வயதினருக்கு எந்த அளவு உதவியாயிருக்கும் என்று யோசிப்பதே.
பொதுவாக, நுரையீரலைப் பீடிக்கும் இன்ஃப்ளூயன்சா, ஆர்.எஸ்.வி (Respiratory Syncytial virus) போன்ற வியாதிகள் வயதானவர்களை மிகக் கடுமையாகப் பாதிப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் வயதானவர்களிடையேதான் அதிகம். உதாரணமாக, அமெரிக்காவில் 18 முதல் 49 வயதுள்ளவரிடையே லட்சத்தில் 4 நபர்களும் , 65-74 வயதானவரிடையே 59 நபர்களும் 74 வயதுக்கு மேலானவர்களிடையே 475 நபர்களும் இன்ஃப்ளூயன்ஸா வியாதியினால் வருடந்தோறும் மரணமெய்துகின்றனர். பாலர்களும் சில சமயங்களில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். கோவிட்-19 நோய் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. நோய்வாய்ப்பட்டவர்களில் 60 வயதிற்கு மேலுள்ளவர்களில் 4.5 சதவீதம் இறந்துவிட்டனர். 30லிருந்து 60 வயதுக்குட்பட்டவர்களிடையே இறந்தவர்கள் 1.4 சதவீதம்தான். 30 வயதிற்கும் கீழுள்ளவர்களிடையே 0 – 0.19 சதவீதம் மட்டுமே. ஆகவே, 60 வயதிற்கு மேலானவர்களுக்குத்தான் இதற்கான தடுப்பூசி மிக அத்தியாவசியம் என்பதில் சந்தேகமேயில்லை. எனவே, தடுப்பூசி தயாரிக்கும் துறையில் ஈடுபட்டுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் இக்குறிப்பிட்ட வயதினரின் நலனில் எந்த அளவு அக்கறை கொண்டுள்ளனர் என்பதை மதிப்பீடு செய்வது ஓர் இன்றியமையாத அம்சமாகும்.
மேலும், வயதானவர்கள்தான் அழற்சி நோய்களாலும் (Chronic inflammatory diseases) அவதிப்படுகிறார்கள். இம்மதிப்பீட்டில் தடுப்பூசி வல்லுநர்கள், நோயெதிர்ப்புத் திறன் குறைவதனால் அகால மரணத்திற்கு இலக்காகியுள்ள முதியோரிடம் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இதன் காரணம், வயதானவர்களிடம் அழற்சி மட்டான அளவில் தொடர்வதுதான். (Low grade inflammation.) இதுவே முதியோர்கள் கடுமையான நுரையீரல் வியாதிகளினால் பாதிக்கப்படுவதற்கும் காரணம் ஆகும். கோவிட்-19 வயதானவர்களின் நுரையீரலைக் கடுமையாகத் தாக்குவதற்கும் இதுவே காரணம்.
நம் வயது ஏற ஏற உடலின் தடுப்புச் சக்தி குறைவதால், தடுப்பூசிகளின் தாக்கமும் குறைகிறது. கோவிட்-19 வியாதிக்கான தடுப்பு மருந்தை அதி விரைவில் கண்டுபிடிக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ள அனைவரும் இதைக் கவனத்திற் கொள்ளவேண்டும். இந்த முக்கியமான விவரமும் வயதானவர்களுக்குதான் தடுப்பூசி மிக அத்தியாவசியம் என்ற விஷயமும் கோவிட்-19 சம்பந்தமான கருத்தாய்வுகளில் இடம்பெற்றதாகவே தெரியவில்லை. எந்த வியாதிக்குமே, தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இளம் வயதினரையே கருத்தில் வைத்துச் செயல்படுகிறார்கள்.
பாலூட்டிகளும் வயதான மனிதர்களும்
எந்த வியாதியானாலும், அதன் தடுப்பூசிக்கான ஆராய்ச்சியின் முதல் கட்டம் சுண்டெலிகளிடம்தான் நடத்தப்படுகிறது. இச்சுண்டெலிகளின் வயது 12 வாரங்களுக்கு உட்பட்டதுதான். இது மனிதர்களின் வயதில் 20 அல்லது அதற்கும் குறைவானதாகும். வயதான மனிதர்களுக்கு ஈடான 18 மாத சுண்டெலிகளிடம் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் மிகக் குறைவே. ரீசஸ் குரங்குகளிடம் நடத்தப்படும் ஒருசில ஆராய்ச்சிகளும் 3 லிருந்து 6 வயதான குரங்குகளையே உபயோகப்படுத்துகின்றன. இது இளம்பிராய வயதினருக்கு ஈடாகும்.
மனித ஆராய்ச்சி வெள்ளோட்டங்கள்
முதற் கட்டங்களில் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகள், மக்களிடம் ஏதாவது தீங்கு விளைவிக்குமா என்று அறிவதற்காகத்தான் செய்யப்படுகின்றன. அதன் தாக்கத்தை அறிவது நோக்கமன்று. 2 ஆவது அல்லது 3 ஆவது வெள்ளோட்ட ஆராய்ச்சிகள் மூலம்தான் நோயெதிர்ப்புத் திறன் குறைந்தவர்களிடம் தடுப்பூசியின் தாக்கம் எந்த அளவிற்குள்ளது என்பதைக் கண்டறியமுடியும். பெரும்பாலான தடுப்பூசிகள் இப்பிரிவினரைப் பாதுகாப்பதில்லை என்னும் விவரம் தெரியவரும்போது தடுப்பூசி தயாரிக்கும் வர்த்தகங்கள் கையைப் பிசையவோ, விரித்துவிடவோ முடியுமே தவிர வேறெதுவும் செய்ய இயலாது. பிராணி ஆராய்ச்சிகளிலேயே நோயெதிர்ப்புத் திறன் குறைந்த வயதான பிராணிகளிடம் தடுப்பூசியின் தாக்கம் எந்த அளவில் உள்ளது என்றறிந்து, அதைச் சரிசெய்வதன் மூலமே முதியோர்களிடம் தடுப்பூசியின் தாக்கத்தை அதிகரிக்கமுடியும்.
தடுப்பூசி தயாரிப்பில் தடுமாற்றங்கள்
ஆராய்ச்சிகளுக்கு உபயோகப்படும் பிராணிகளை வளர்க்கும் வர்த்தக நிறுவனங்கள் இளவயது பிராணிகளையே விற்பனை செய்கின்றன. இவ்வர்த்தகங்களில் முதிய பிராணிகளின் இருப்பளவு வெகு குறைவாகும். உதாரணமாக, ஆராய்ச்சிகளில் உபயோகப்படுத்தப்படும் வயதான சுண்டெலிகள் C57BL/6 திரிபைச் சேர்ந்தவை. ஆனால், இச்சுண்டெலிகளிடம் இயற்கையாகவே நுண்ணுயிர் நோய்க்கிருமிகளை எதிர்க்கும் சக்தி உள்ளதால், இந்நுண்ணுயிர் தடுப்பூசி ஆராய்ச்சிகளில் அவை உபயோகமுள்ளதாக இருக்காது. எனவே, கோவிட்-19 போன்ற சார்ஸ் கிருமிகள் மனிதர்களைபோலவே வயதான சுண்டெலிகளையே உக்கிரமாகத் தாக்குவதால் அந்த வகைச் சுண்டெலிகள் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டால், வயதான மனிதர்களிடம் இத்தடுப்பூசியின் தாக்கம் சிறந்த அளவில் இருக்கும் என்ற தவறான முடிவை எடுக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக உலகையே வாட்டியெடுக்கும் கோவிட்-19 வியாதி, 65 வயதிற்கு மேலானவர்களையே குறிவைக்கிறது, காலனிடமும் அனுப்புகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. 2021ல் இதற்கான தடுப்பூசியை வெளிக்கொணர்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களுமே விலங்கு ஆராய்ச்சிகளைத் தவிர்த்து நேரடியாக மனிதப் பரிசோதனைகளில்தான் இறங்கியிருக்கும் என்பதால் முதற்தலைமுறை தடுப்பூசி வயதானவர்களிடம் நன்கு வேலை செய்யுமா என்பது சந்தேகமே. ஆகவே, தற்சமயம் விலங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், இளைய மற்றும் முதிய பாலூட்டிகளை தலையோடு தலை ஒப்பீடுசெய்வது இன்றியமையாத ஒன்றாகும். இது வருங்காலக் கொரோனா கிருமித் தாக்குதல்களை சமாளிக்கவும் உலகளவில் பரவாமலிருக்கவும் உதவும். அது மட்டுமல்லாமல், இத்தகைய முன்பரிசோதனைகளைப் புற்றுநோய் போன்ற மற்ற நோய்களுக்கான தடுப்பூசிகளைத் தயாரிப்பதிலும் பயன்படுத்த வேண்டும். அதற்குக் காரணம், புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளும் முதியோர்களையே அதிக அளவில் தாக்குகின்றன என்ற உண்மைதான்.
ஆதாரம்: Byram W. Bridles, Associate Professor of Viral Epidemiology Dept.of Pathobiology, Univ of Guelph, Canada, and Shayan Sharif, Prof of Immunology & Associate Dean for Research & Graduate Studies, Univ of Guelph, Canada. Published in Epoch Times, on Wednesday, July 29, 2020 (First Published in ‘The Conversation’)
Opinion Pieces Discuss Various Aspects Of COVID-19 Pandemic, Response, Including Need To Address Global Poverty Amid Pandemic | KFF