க. ரகுநாதன் கவிதைகள்

கடவுளின் நிறம்

சாலையில் சிதைந்து வானம் பார்த்த
அந்தப் பறவையின் சிறகுகளுக்கு
அந்திமாலை வானின் நிறம்.
அதன் ஒவ்வொரு இறகிற்கும்
இரவின் ஒளியும் குளிரும்
ரகசியமும் கொண்ட
கருநீலவானின் நிறம்.
சிறகுகளிடையே வடிந்து
ஒளிரும் திரவத்திற்கு
செவ்வானின் நிறம்.
நகங்கள் நசுங்கி விறைத்த
அதன் கால்களுக்கு
சிதறிக் கிடந்த நெல்மணியின் நிறம்.
உலகை அளந்த சிறகுகள்
படபடத்த சாலைக்கு
பிரபஞ்ச வெளியின் நிறம்.
கழுத்திற்கும் உடலுக்கும்
இடையே தெரிந்தது
வெற்றுக் காலத்தின் நிறம்.
பறந்தோடும் உயிர் நோக்கிய
அதன் கருமணிக் கண்களுக்கும்
எனக்கும் இடையே
துடித்தது கடவுளின் நிறம்.

வண்ணங்கள் பறந்த பட்டாம்பூச்சி

இரு பக்கமும் பூக்கள் மலர்ந்த
ஒரு சதுரமான காகிதத்தின்
முனைகளை உள் பக்கமாக மடித்தேன்.
அதன் எதிர் முனைகளைப் பிடித்து
குறுக்கே மடித்து தலையை பின்னுக்கு இழுத்து
மெல்ல விரியும் இறகுகளை
விரல்களால் அழுத்தினேன்.
அதன் பின்னிறகுகளை
மேல் நோக்கி வளைத்துவிட
காலத்தில் ஒட்டாத
ஒரு பட்டாம்பூச்சியாகி இருந்தது.

மௌனமாக வெளியை நோக்கியபடி
ரேகைப் பள்ளத்தாக்கில்
தியானத்தில் அமர்ந்த அதன் சிறகுகளில்
என் உயிர் ஏறி மென்சூடேற்றிட
வண்ணங்கள் பிரிந்து ஒளிப் புள்ளிகளாகின.

ஈரப் பசும் ஒளிசூடி
சூல்களின் மகரந்தம்
மெல்லிய கால்களில் ஏறிட
பள்ளத்தாக்கின் செவியறியாமல்
அகாலத்தைக் கலைத்து
காலத்துள் பறந்தது பட்டாம்பூச்சி.

கைகளில் இருந்ததோ
வெற்றுத் தாள் வடிவம்தான்.


அகத்தின் ஒலி

கண் மூடிய இருளில்
ஒளியைத் தேடுகிறது அகம்.
இல்லாத ஒன்றில் இருந்து
புள்ளியாய் துவங்கி
பெருகி வழிகிறது ஒளி.

அகமிருள் வட்டத்தின் ஓரத்தில்
செவ்வொளியோடு சிதறும்
ஒளித் தெறிப்புகளில்
வடிவில்லா வடிவாகி
ஒளியில்லா ஒளியாகி
ஒளிக்குள் ஒளி கலந்து
ஒலியில்லா ஒலியுள் நுழைந்து
பரவிப் போன பின்
அகமே கேட்கும்
மௌனத்தின் ஒலி.

வடிவம் போய்
ஒளி போய்
ஒலி போய்
பேரிருள் வழிய
அகமெங்கும் இருள்.
கண் திறக்க பரந்து
கவிழ்ந்தது வான்.