கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்

சொல்வனம் இதழில் கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வரும் கமல தேவியின் மூன்றாவது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. சொல்வனம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பயணத்தில் சிறு பங்கினை ஆற்றிய சொல்வனம் பெருமை கொள்ளும் தருணம் இது!

மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி

நோய்மை அனுபவங்களை சித்தரிப்பதற்காகவே “அற்புத உலகில் ஆலிஸ்” என்ற நூலை லூயிஸ் கரோல் எழுதினார் என்று சொல்வார்கள். அந்த நூலின் ஆரம்பத்தில் ஒரு பெரிய குழியில் விழுவது பெரும்பாலும் வலிப்பு நோய்க்காரர்களுக்கு சாதாரணமான ஒரு அனுபவம் .அற்புத உலகத்தின் ஊடாக ஆலிஸ் பயணிக்கும்போது பொருட்கள் பறப்பதை அவள் அடிக்கடி பார்க்கிறாள். அவளும் இறக்கை கட்டிக் கொண்டது போல ஆகிவிட்டதாக உணர்கிறாள்.இதுவும் வலிப்பு நோய் தாக்குதலின் விளைவாக விவரிக்கும் இன்னொரு அம்சம் என்று பலர் சொல்வார்கள் .வலிப்புநோய் கலைக்குச் சாதகமாக இருப்பதாக பல எழுத்தாளர்களின் வாழ்க்கையை முன்வைத்துக் குறிப்பிடுவார்கள்.

நோய்த்தன்மை அப்படித்தான் கலைக்கு சாதகமாக இருப்பதாக தோன்றும். அதை விட மன அழுத்தமும் இறுக்கமும் கலைகளுக்கு சாதகமாக இருப்பதாகவும், படைப்பிலக்கியத்தின் ஊன்றுகோலாக குறிப்பிடப்படுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

கமலதேவி கதைகளில் நோய்க்கூறு மற்றும் சாவு அதிகமாக இடம்பெறுவதை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கிறேன். அவரிடம் சந்தேகப்பட்டு கேட்ட போது அந்த நோய்மை கூறுகளை அவர் உள்வாங்கிக்கொண்டு அவதானித்துக் கொண்டும் எழுதுவதாகச் சொன்னார். நல்லவேளை ஆரோக்கியமாகத் தான் இருக்கிறார் என்று நான் ஆறுதல்கொண்டேன் .

காரணம் அவரின் படைப்புத் தன்மையில் தொடர்ந்த நோய்க்கூறுகள் அதிகம் இடம் பெறுவது எனக்கு அந்த வகை கேள்வியை எழுப்பியது. இந்த தொகுப்பை சேர்த்து மூன்று தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார் .அந்த மூன்று தொகுப்புகளில் பல கதைகளில் சாவுகளின் மையமாகவும் அல்லது சாவால் ஏற்படும் பிரிவு பற்றி சொல்வதாக இருக்கிறது.மருத்துவரிடம் செல்வது பரிசோதனைகள் செய்வது மருத்துவ முறைகள் என்பதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பல அனுபவங்களை பல கதைகளில் பார்க்க முடிகிறது.

இவர் ஒரு ஆசிரியராக பணிபுரிந்தவர் என்ற வகையில் அவரின் அனுபவங்கள் பணி சார்ந்தும் கல்விசார்ந்த விமர்சனங்களும் பல இடங்களில் தென்படுகின்றன .அதுவும் தனியார் பள்ளியில் இருக்கிற கெடுபிடிகளும் சித்திரவதைகளும் சொல்லிமாளாது. மாணவரோடும் நல்ல இயல்புகளோடு படிப்பிக்கும் முறையினைச் சொல்கிறபோது கல்விமுறை சார்ந்த விமர்சனங்களையும் அவர் கொண்டு வந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் .

எல்லா தொகுப்புகளிலும் இடம் பெறும் இந்த கல்வி நிறுவனங்கள் சார்ந்த அனுபவங்களும மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் மிக முக்கியமானவையாக எனக்குத் தோன்றுகின்றன.இந்த கதைகளில் இடம்பெறும் கிராம மக்களின் வாழ்க்கையும், கிராமங்களின் நிலப் பரப்பும் மிகத் துல்லியமாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றது. நிலம் முக்கிய கூறாக இருக்கிறது. பல கதைகளில் நிலமும் கால்நடைகளும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன .விவசாயத்தை தொழிலாக மாற்றுவது என்பது மிக முக்கியமான விஷயமாக போலத்தான் இந்த கதைகளில் தென்படுகிறது . தெப்பக்குளம் அர்த்தப்படுத்தும் வகையில் சொல்லப்படுகிறது. ஆறு போன்றவை அதன் அர்த்தம் குறித்து சரியாக சொல்லப்பட்டிருக்கின்றன. கிணறுகள் பற்றி பல்வேறு சித்தரிப்புகள் கதைகளாக வந்துபோகின்றன.

கிணறு என்பது இன்றைக்கு நகர்ப்புறங்களில் வழக்கொழிந்து விட்டது. ஆனால் மிஞ்சியிருக்கும் கிராமங்களில் தென்படும் அவை எப்படி உயிர்நீர் ஆக உயிர் நீருக்கு ஆதாரமாக இருக்கின்றன என்பதை குறித்த சித்தரிப்புகள் மிக முக்கியமானவையாக தோன்றுகின்றன. நீரில்லாமல் வெள்ளாமையில் வதங்கிய வயல்கள் எப்போதும் துன்புறுத்துகின்றன .முள்ளில் கால்களை ஏற்றி வைக்கும் மறக்க முடியாத அனுபவங்கள் சிரமப்படுத்துகின்றன. வயல்காட்டு வேலை, வெளியூர்களுக்கு செல்லும் பெற்றோர்கள் இவர்கள் மத்தியில் கல்வி சார்ந்த அக்கறை எடுத்துக் கொள்ளும் சிறுவர்கள் பற்றி பல அனுபவங்களாக வெளிவந்திருக்கின்றன , கேணி என்ற இடம் கிராமத்தை பொறுத்து பழைய காலத்தில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது இன்றைக்கு அதன் அர்த்தம் எப்படி இருக்கிறது அல்லது அர்த்தமிழந்து இருக்கிறது என்பதை சொல்கிறது.

இது போன்ற பல்வேறு கிராமிய இடங்கள் படிமங்களாக இந்தக் கதைகளில் படிந்து கிடக்கின்றன .கிராம அனுபவங்களில் கம்மஞ்சோறு ஆக்கி சாமி கும்பிடும் அவலம் அவரை ரொம்ப இம்சிக்கிறது . பசிக்கிறது ,சாமி கும்பிட நெல்லு இல்லை வேறு வழியில்லாமல் அந்தச்சடங்குகளை அவர்கள் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சாவு வீட்டில் உசிரோட இருக்கிறங்களைப் பத்தி நினைச்சு அழக்கூடாது என்று ஒரு கதாபாத்திரம் சொல்கிறது ஆனால் உயிரோடு இருக்கின்றவர்களை பற்றி பல இடங்களில் இதுபோன்ற அழுகைக் குரல்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன .பிள்ளைபாசம் கேடுதரும், பிள்ளைப்பாசம் சாவும் தரும் என்கிறவகையில் அனுபவங்களும் விரிந்து கொண்டே செல்கின்றன. ஊற்றுக்கண் என்ற தலைப்பிலேயே ஒரு சிறுகதை கூட கேணி அனுபவங்களை விரிவாக எடுத்துச் சொல்கிறது .
புறப்பட்ட இடத்திற்கும் சேர்ந்த இடத்திற்கும் போய் சேர இப்படி மூச்சு பிடிக்கணும் என்று வாழ்க்கையின் அனுபவங்களை தத்துவம் ஆக்கி சொல்லியிருக்கிறார்.வானத்தில் என்ன நடக்குது… இடி மேகம் என்ன செய்து என்று குழந்தைகளின் அனுபவங்களோடு பலவழி பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன .மாயை என்ற கதை கூட இப்படி ஒரு நிச்சயமின்மை தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது .

ரொம்பவும் நெருங்காதே ரொம்பவும் விலகாதே என்று ஒரு கதாப்பாத்திரம் சொல்கிறது. கமலதேவி பிரச்சனைகளையும் அனுபவங்களையும் சொல்கிறபோது இப்படித்தான் ரொம்பவும் நெருங்காமலும் விலகாமலும் இடையில் நின்று பேசுகிறார். இதுதான் ஒரு படைப்பாளிக்கு தேவையான பார்வையாக இருக்கிறது . கதையில் வருகிற ஒரு சிறுமி குறித்து .. அவள் பிறரின் அனுபவங்களையெல்லாம் கேட்டுகொண்டேருக்கிறாள்.அவள்தான் சொல்கிறாள் : மந்திர பெட்டி ஒன்று இருக்கிறது. அது கதை சொல்கிற தாத்தாவிடம் இருக்கிறது. அதிலிருந்து அந்த கதைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று சொல்கிறார். அதேபோல ஆசிரியப் பணி ஆகட்டும், கிராம வாழ்க்கையாகட்டும், நோய்க்கூறுகள் ஆகட்டும், சாவின் மத்தியில் அனைவரும் சாதாரண மனிதர்கள் ஆகட்டும்.. ..இவை பற்றிய கதைகளை தொடர்ந்து சீரான முறையில் குரலை உயர்த்தாமல் சொல்லும் கமலதேவியின் கதைகள் கிராமப்புற கதைப் பெட்டிக்குள் அடைபட்டுக் கிடக்கின்றன.

சமீபத்தில் பாவ்லோ கொய்லாவின் சஹீர் என்ற நாவலை படித்துக் கொண்டிருந்தபோது அந்த நாவலில் அவர் குறிப்பிடும்.ஒரு பகுதி எனக்கு பிடித்திருந்தது . ஒரு பச்சை நிறமான துண்டுத்துணி ஆனால் அது கருப்பாக தெரிவதற்குக் காரணம் அது உழைப்பினால் கறுகி போய் விட்டது .உலகில் எங்கேயோ இருந்த ஒரு போர் வீரன் தான் இறப்பதற்கு முன்பு அவனது சட்டையைக் கழற்றச் சொல்லி ரத்தக்கறையுடனாக சட்டையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அவனது சாவின் அர்த்தத்தை புரிந்து கொள்ளுமாறு எல்லோருக்கும் அதை விடுவிக்குமாறு கூறியிருந்தான் .

உங்களிடம் அவ்வகை ஒரு துண்டு இருக்கிறதா?

அப்படி கிராம அனுபவங்களை ரத்தத்துளிகளுடன் துண்டுகளாய் தன்னுடைய கதைகளில் தொடர்ந்து படைத்துக் கொண்டிருக்கிறார் கமலதேவி . பெண் பார்வையில் தீவிரமான அனுபவங்களாகின்றன அவை.

சுப்ரபாரதிமணியன் திருப்பூர்.

  • கடுவழித்துணை
  • கமலதேவி (ஆசிரியர்)
  • பகுப்பு: சிறுகதைகள் / குறுங்கதைகள்
  • பதிப்பாளர்: வாசகசாலை பதிப்பகம்
  • பக்கங்கள்: 124
  • வெளியான ஆண்டு: 2020
  • ₹150
முந்தையத் தொகுப்புகள்: சக்யை & குருதியுறவு
Series Navigation<< மகிமைதந்தைக்கு என்றும் நன்றியுடன் >>

2 Replies to “கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்”

  1. அவசரமாக எழுதப்பட்ட மதிப்புரை போல இருக்கிறது. உரைநடை தள்ளாடுகிறது. படைப்பூக்கம் அற்ற எழுத்து.சிறுகதையில் மிகச் சிறந்த படைப்பாளியாக, கமலதேவி உருவாகி வருவதை இந்தத் தொகுப்பு நிரூபிக்கிறது. வாழ்த்துகள் 👍

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.