ஓவியா

முனைவர் ப. சரவணன்

கையெழுத்து அழகாக இருப்பது ஒரு தலைவலிதான். அம்மா என்னிடம் அடிக்கடி கூறுவார், “கையெழுத்து அழகா இருந்தா தலையெழுத்து நல்லா இருக்காதுடா” என்று. அப்போதெல்லாம் நான் எனக்குள், ‘அம்மா கூறுவது உண்மையென்றால், உலகில் உள்ள எண்ணற்ற ஓவியர்களின் வாழ்க்கை கேள்விக்குறிதானோ!’ என்று நினைத்துக்கொள்வேன்.

என்னுடைய கையெழுத்து அழகாக இருப்பதாலேயே சான்றிதழ்கள் எழுதும் பணியைப் பெரும்பாலும் என்னிடமே தள்ளிவிடுகின்றனர் என்னுடைய சக ஆசிரியப் பெருமக்கள். தமிலோ, ஆங்கிலமோ எதுவானாலும் சரி என்னைக் கேட்காமலேயே என்னுடைய மேஜையில் வைத்துவிடுகிறார்கள். 

கண்டிப்பாக மாதம் ஒருமுறை என் மேஜையில் சான்றிதழ் அட்டைகளும் அவற்றில் எழுது வேண்டிய குறிப்பும் மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியலும் விதவிதமான நிற மைகளைக் கொண்ட எழுதுகோல்கள் சிலவும் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை யார் வைத்தார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. 

நான் என்னுடைய ஓய்வுநேரத்தில் அவற்றை என்னுடைய முத்து முத்தான எழுத்துகளில் கையெழுத்துப் பயிற்சியை மேற்கொள்ளும் சிறுவனைப் போல மிகுந்த கவனத்துடன் எழுதி வைப்பேன். ஒருநாளைக்கு 50 சான்றிதழ்கள் வீதம் எழுதிவிடுவேன். இரண்டு நாட்களுக்குப் பின்னர் அந்தச் சான்றிதழ்கள் யாராலோ என்மேஜையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கும்.  

ஆங்கிலத்தில் ‘க்யூ’ என்ற எழுத்தை எழுதும்போதும் தமிழில் ஒ,ஓ,ஒள ஆகிய எழுத்துகளை எழுதும்போதும் எனக்கு என் மகள் ஓவியாவின் நினைவு வந்துவிடும். என் மகள் முதல்வகுப்பு படிக்கும்போது, நான் அவளுக்கு ‘ஆங்கில எழுத்துகளையும் தமிழ் எழுத்துகளை எவ்வாறு மிக அழகாக எழுதுவது?’ என்று கற்றுக் கொடுத்தேன். 

நான் ஓவிய ஆசிரியன் என்பதால், எல்லாவற்றையும் அழகுணர்ச்சியுடன் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். என் மகளுக்கும் ஓவியத்தின் மீது பற்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். நான் என் மகளுக்கு ‘ஓவியா’ என்று பெயர் வைத்ததும் நான் ஓவியத்தின் மீது கொண்ட பற்றுதலால்தான். 

ஓவியாவுக்கு ஆங்கிலத்தில் ‘க்யூ’ என்ற எழுத்தும் தமிழில் ஒ,ஓ,ஒள ஆகிய எழுத்துகளும் சரியாக எழுதவரவில்லை. நான் பலமுறை அவளுக்குச் சொல்லிக்கொடுத்தும் அவளால் அதை முறையாக எழுத முடியவில்லை. வளைவுகள் அவளுக்குச் சரியாக வரவேயில்லை. நான் எத்தனை முறை கூறினாலும், “எங்க மிஸ் இப்படித்தான் சொல்லிக்கொடுத்தாங்க” என்று அவளின் தமிழ், ஆங்கில ஆசிரியைகளின் மீது பழிபோட்டுவிடுவாள். சிறார்களுக்கு அவர்களின் ஆசிரியர்கள்தான் தெய்வங்கள். அவர்களுக்கு அவர்களின் ஆசிரியர்கள் கூறுவதுதான் தெய்வ வாக்கு. ‘தங்கள் ஆசிரியர்கள்தான் இந்த உலகில் மிகச் சரியான மனிதர்கள்’ என்று சிறார்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள். 

‘நானும் ஆசிரியர்தானே?’ என்று நான் பலமுறை ஓவியாவிடம் கேட்டிருக்கிறேன். “ஆமாம் நீங்களும் டீச்சர்தான். ஆனா, நீங்க என்னோட டீச்சர் இல்லை. நீங்க எங்க ஸ்கூல் டீச்சரும் இல்லையே” என்று அழுத்தமாகக் கூறுவாள். ‘நீங்களும் டீச்சர்தான்!’ என்று கூறியதால், ‘அவள் என்னையும் ஓர் ஆசிரியராக ஏற்றுக்கொண்டாளே’ என்ற மகிழ்ச்சியில் நான் என்னையே சமாதானம் செய்துகொள்வேன். 

இன்று மதியத்துக்குமேல் என்னுடைய மேஜையின் மீது முந்நூற்றுக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் அடுக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நான் பணியாற்றும் பள்ளியில் நடைபெற உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு இடையிலான ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கதைப் போட்டி போன்றவற்றில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்க உள்ள சான்றிதழ்கள் இவை. 

இந்தப் போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைப் பெற்றவர்கள் மட்டும் குழந்தைகள் தினத்தன்று இந்தப் பள்ளிக்கு அழைக்கப்படுவர். அப்போது அவர்களுக்கு இந்தப் பங்கேற்புச் சான்றிதழ்களோடு, அவர்கள் பெற்ற நிலைக்கான பட்டயமும் பதக்கமும் வழங்கப்படும். 

ஓவியப் போட்டிக்கு வந்திருந்த ஓவியங்களைத் தேர்ந்தெடுக்கும் பணியினை என்னுடைய சக ஓவிய ஆசிரியர் செய்தார். அவருக்குத் தெரியும், ‘இந்தக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நான் பல சான்றிதழ்களை எழுத நேரிடும்’ என்று. அதனால், ஓவியங்களைத் தேர்ந்தெடுக்கும் பணியினை அவரே முன்வந்து ஏற்றுக்கொண்டார்.

மதிய உணவுக்குப் பின்னர் எனக்கு இரண்டு பாடவேளைகள் ஓய்வு. அதனால் நான் சான்றிதழ்களை எழுதத் தொடங்கினேன். நான் ஓவிய ஆசிரியன் என்பதால், முதலில் ஓவியப் போட்டிக்கான பங்கேற்பாளர்களின் சான்றிதழ்களை எழுதத் தொடங்கினேன்.

மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியலைப் படித்துப் பார்த்தேன். பெரும்பாலும் எந்தப் பெயரும் தூய தமிழ்ப்பெயராக இல்லை. ‘தமிழ்நாட்டில்தான் நான் வாழ்கிறேனா?’ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. பத்துப் பெயர்களைத் தாண்டியவுடன் என் கை நின்றது. என் பார்வை ஒரு பெயரின் மீது பதிந்தபடி இருந்தது. இமைகளைப் பலமுறை சிமிட்டிய பின்னர் மீண்டும் அந்தப் பெயரைப் படித்தேன். ‘ஓ வி யா’. 

உடனே, அந்தப் பெயரின் முன்னெழுத்தைப் பார்த்தேன். என்னுடைய பெயரின் முதல் எழுத்துதான். அவள் படிக்கும் பள்ளி உள்ள ஊரைப் பார்த்தேன். ஆம்! அது என் மனைவியின் ஊர்தான். ‘என் மகள்தான் இந்தப் ஓவியப் போட்டியில் பங்கேற்றுள்ளாள்’ என்பது எனக்கு உறுதியாகிவிட்டது.  அந்தப் பள்ளியின் பெயரைப் பார்த்தேன். அதை என் மனத்தில் பதித்துக்கொண்டேன். 

என் மகளின் பெயரைச் சான்றிதழில் மிக நேர்த்தியாக எழுதத் தொடங்கினேன். என் கண்கள் மங்கின. கண்ணீரின் படலம் என் விழிகளை மறைத்திருந்தது. ‘ஓ’ என்ற எழுத்து வளைந்து, பிசகிவிட்டது.

இந்த ‘ஓ’ எழுத்தை மிகச் சரியாக எழுத எத்தனையோ முறை நான் என் மகளுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவள் தந்த எழுத்தைத் தன் மனம்போன போக்கில், தன் விரல்கள் வளையும் திசையில் வளைத்து எழுதுவாள். ‘வி’, ‘யா’ எழுத்துகள் சரியாகவும் அழகாகவும் இருக்கும். ஆனால், ‘ஓ’ எழுத்து மட்டும் ஒடிந்து தொங்கும். 

“ஓவியா! இந்த ‘ஓ’ உன்னோட பெயருக்கு முதல் எழுத்து. உன்னோட பெயரை நீ அழகா எழுத வேண்டாமா?” என்று நான் கண்டிப்புடன் கேட்பேன். 

“நீங்க ஏன் எனக்கு ‘ஓ’ எழுத்துல பேரு வைச்சீங்க? ‘ஈ’ எழுத்துல எனக்குப் பேரு வைச்சிருக்கலாமே! நான் அதை ‘ஈஸி’யா எழுதிருவேன்ணே” என்பாள் என் மீது குற்றம் சுமத்தும் முயற்சியோடு.  

நான் உடனே அவளிடம், “ ‘ஈ’ன்ணு பேரு வைச்சுடட்டுமா? அப்படி வச்சா நீ ‘ஈஸி’யா பறந்து போயிடுவியே!” என்பேன். 

“நான் என்ன, ‘ஈ’யா? என்று கேட்டு என்னை முறைப்பாள்.

‘ஈ’ என்று நான் அவளுக்குப் பெயர் வைக்காமலேயே அவள் ‘ஈஸி’யாவே என்னைவிட்டுப் பறந்துபோய்விட்டாள். அவளுக்கு ‘ஓ’ எழுதச் சொல்லிக் கொடுத்துப் போராடித் தோற்ற நான், இப்போது அந்த எழுத்தைத் தவறாக எழுதிவிட்டுத் திகைத்து நிற்கிறேன். 

வேறொரு சான்றிதழை எடுத்தேன். என் கண்களைத் துடைத்துக்கொண்டு என் மகளின் பெயரை எழுதினேன். அடுத்து வேறு எந்தப் பெயரையும் சான்றிதழில் எழுதவிருப்பம் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன்.   

ஓவியாவுக்கு ஆறுவயதிருக்கும்போது அவள் என்னைவிட்டுப் பிரிந்து,  தன் அம்மாவோடு தனியாகச் சென்றுவிட்டாள். இப்போது அவளுக்கு 11 வயதிருக்கும். இதற்கிடையில் நான் அவளைப் பார்க்கவில்லை. அதற்கான வாய்ப்புத் துளியளவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஐந்தாண்டுகள் ஐந்து நிமிடங்களைப் போலக் கடந்துவிட்டன. 

என் மகளின் ஓவியத்தைப் பார்க்க நினைத்தேன். எழுந்துசென்று, என் சக ஆசிரியரின் இருக்கைக்கு அருகில் குவிந்திருந்த ஓவியத் தாள்களைக் களைத்துத் தேடினேன்.  ஏறத்தாழ அறுபதுக்கும் மேற்பட்ட ஓவியத்தாள்கள் அங்கிருந்தன. அந்த ஓவியத்தாள்கள் அனைத்தும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியப்போட்டிக்காக வந்தவைதான். ஒவ்வொரு ஓவியத்தின் பின்பக்கமும் அதை வரைந்தவரின் பெயரும் வகுப்பும் பிரிவும் பள்ளியின் பெயரும் பள்ளியின் முகவரியும் பள்ளியின் வட்டவடிவ முத்திரையும் இருந்தன.

ஒவ்வொன்றாக எடுத்து, ‘அதை வரைந்தவரின் பெயர் ‘ஓவியா’ என்று இருக்கிறதா?’ என்று பார்த்துக்கொண்டே வந்தேன். இருந்தது. ச. ஓவியா என்று மிக அழகாக எழுதப்பட்டு, அதன் கீழ் ஆறாம்வகுப்பு ‘அ’ என்று குறிப்பிடப்பட்டு, அதனைத் தொடர்ந்து பள்ளியின் முகவரியும் முத்திரையும் இருந்தன.

‘இப்போது என் மகள் ‘ஓ’ எழுத்தை மிக அழகாக எழுத நன்றாகப் பழகிவிட்டாள்’ என்று நினைத்தேன். அவளுக்குப் பள்ளியில் சிறந்த ஓவிய ஆசிரியர் கிடைத்திருப்பார் என்று நினைத்துக்கொண்டே, இந்த ஓவியத்தாளை திருப்பிப் பார்த்தேன். வண்ணங்கள் ஏதும் தீட்டப்படாத, வெறும் கறுப்பு-வெள்ளை நிறத்தில் மட்டும் வரையப்பட்ட உலக உருண்டையின் படம் இருந்தது. 

அந்தப் படத்தையே உற்றுப் பார்த்தேன். ‘ஏன் ஓவியா இப்படி வரைத்திருக்கிறாள்? அவளுக்கு இந்த உலகம் ஏன் கறுப்பு-வெள்ளையாக இருக்கிறது? அவள் மனத்தில் என்னதான் இருக்கிறது? இந்தச் சிறிய வயதில் அவளுக்கு ஏன் இந்த உலகத்தின் மீது இவ்வளவு விரக்தி? என்று சிந்தித்தேன்.

 மீண்டும் மீண்டும் அந்தப் படத்தையே பல கோணங்களில் பார்த்தேன். கறுப்பு-வெள்ளை கோடுகள் நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் வரையப்பட்டிருந்தன. கறுப்பு-வெள்ளை தீற்றல்களும் தேவைக்கு ஏற்ப மென்மையாகவே தீட்டப்பட்டிருந்தன. 

அவள் வரைந்த இந்த உலக உருண்டையில் இருந்த அனைத்துப்  பெருங்கடல்களும் பொங்கிக் கொண்டிருந்தன. அவை இன்னும் பொங்கினால் முழு நிலப்பரப்பையும் அவை அவை விழுங்கிவிடும் போல எனக்குத் தோன்றியது. ‘இந்த ஓவியத்தில் பொங்குவது பெருங்கடல்கள் மட்டும்தானா? அல்லது அவளின் ஆழ்மனமும் தானோ?’ என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். 

அந்த ஓவியத்தைக் கையில் வைத்துக்கொண்டே, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட ‘போட்டிகள் குறித்த அழைப்பிழை’த் தேடினேன். அது என் சக ஆசிரியரின் இருக்கைக்கு அருகில் இல்லை. 

‘என்னிடம் இருக்கிறதா?’ என்று தேடிக்கொண்டே என்னுடைய இருக்கைக்கு வந்தேன். அந்த அழைப்பிதழ்களுள் சில என்னுடைய மேஜைக்குப் பின்புறம் சிறு குவியலாக இருந்தன. அதில் ஒன்றை எடுத்து, ஆறாம் வகுப்புக்கான ஓவியப் போட்டித் தலைப்பினைப் பார்த்தேன். “என் பார்வையில் உலகம்” என்று இருந்தது. 

மீண்டும் ஓவியாவின் ஓவியத்தைப் பார்த்தேன். ‘அவளது பார்வையில் இந்த உலகம் கறுப்பு-வெள்ளைதானோ?. அவள் கனவுகளும் கற்பனைகளும் கறுப்பு-வெள்ளைதானோ? அவளின் மனம் இருண்டுதான் இருக்கிறதா?’ என்று நான் எனக்குள் கேட்டுக்கொண்டேன்.

அந்த ஓவியத்தைக் கையில் வைத்துக்கொண்டே, வேகமாக நடந்து என் சகஆசிரியரின் இருக்கைக்கு அருகில் சென்றேன். அவரது இழுப்பறையைத் திறந்து, ஓவியப்போட்டியின் முடிவுகள் எழுதப்பட்டிருந்த கோப்பினை எடுத்தேன். அதைப் புரட்டிப் பார்த்தேன். 

ஆறாம் வகுப்பு ஓவியப்போட்டியில் முடிவுகளை வாசித்துப் பார்த்தேன். ‘இரண்டாம் நிலை – ச. ஓவியா’ என்று இருந்தது. ‘என் மகள் வென்றுவிட்டாள்’ என்பதை அறிந்ததும் என் மனம் துள்ளிக் குதித்தது. அந்தக் கோப்பினை இழுப்பறையில் வைத்துவிட்டு, என்னுடைய இடத்துக்கு வந்து அமர்ந்தேன். 

‘குழந்தைகள் தினத்தன்று பரிசினைப் பெற ஓவியா இங்கு வருவாள்’ என்று நினைத்தேன். அந்த மகிழ்ச்சியோடு வேக வேகமாக அனைத்துச் சான்றிதழ்களையும் எழுதி முடித்தேன். ஒரே நாளில் இத்தனை சான்றிதழ்களை நான் எழுதி முடித்தது  இதுவே முதன்முறை. 

வீட்டுக்குப் புறப்படும் முன்பு, நான் ‘ஓ’ என்ற எழுத்தை எழுதும்போது வளைந்து, பிசகிய அந்தச் சான்றிதழை எடுத்து, என்னுடைய பள்ளிப் பைக்குள் வைத்துக் கொண்டேன்.  ‘அது என்னுடைய எழுத்துப் பிழைக்கான சான்றிதழ்’ என்றுதான் நினைத்தேன். ‘ஒருவேளை அது என்னுடைய வாழ்க்கைப் பிழைக்கான சான்றிதழாகவும்கூட இருக்கலாம்தானே?

குழந்தைகள் தினத்தின்போது, காலையிலிருந்தே பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த வெற்றியாளர்கள் என்னுடைய பள்ளிக்கு வருகை தரத் தொடங்கினர். நான் வரவேற்பு அறைக்கு முன்பாக நின்றுகொண்டு, பிற பள்ளி ஆசிரியர்கள் தங்களின் வருகையைப் பதிவுசெய்யும் பேரேட்டினைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘ஓவியா பயிலும் பள்ளியிலிருந்து எந்த ஆசிரியர் வந்திருக்கிறார்? அவருடன் ஓவியா வந்திருக்கிறாளா?’ என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தேன். ஓர் ஆசிரியை ஆறு மாணவியர்களோடு வந்தார். ஒவ்வொரு மாணவியும் மற்ற மாணவியரோடு உயரத்தில் சற்று மாறுபாடுடன் இருந்தர். அவர்களை அழைத்து வந்த ஆசிரியை பேரேட்டில் என் மகள் பயிலும் பள்ளியின் பெயரையும் முகவரியையும் எழுதினார். 

உடனே, நான் அந்த ஆசிரியையின் முகத்தையும் அவருடன் வந்திருந்த மாணவியர்களின் சீருடையையும் நினைவில் பதித்துக்கொண்டேன். ‘இந்த ஆறு மாணவியர்களுள் யார் என் மகள்?’ என்று எனக்குத் தெரியவில்லை. 

என்னைப் பொருத்தவரை என் மகள் ஒன்றாம் வகுப்புதான் படிக்கிறாள். அவளின் உயரமும் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவிக்குரியதுதான். என் மனத்தில் அவள் வளரவேயில்லை. 

‘காலவோட்டத்தில் இப்போது என் மகள் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். சரி, ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவள் இப்போது எப்படி இருப்பாள்? அவளை நான் எப்படி அடையாளம் கண்டுகொள்வது? அவளின் விழிகளைப் பார்த்தா? அது எனக்கு நினைவில் இருக்கிறதா?’ என்று நான் என்னையே கேட்டுக் கொண்டிருக்கும் போது, ஓர் ஆசிரியை வேகமாக வந்து, என்னைத் தலைமையாசிரியர் விழாமேடைக்கு அழைப்பதாகக் கூறினார்.

நான் என் மனத்தை அங்கேயே விட்டுவிட்டு, விழாமேடையை நோக்கி ஓடினேன். விழாமேடையின் பின்னணியில் எழுதப்பட்ட வாசகங்களில் ‘ஓ’ என்ற ஓர் எழுத்து மட்டும் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதை உடனே சரிசெய்யுமாறு தலைமையாசிரியர் என்னிடம் சினத்துடன் கூறினார். நான் அந்த எழுத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வேகமாக என்னுடைய அறைக்கு ஓடினேன். 

என்னுடைய மேஜையில் அந்த ‘ஓ’ என்ற எழுத்தை வைத்துவிட்டு, வேறொரு தாளில் அதே அளவில் அதே நிறத்தில் ‘ஓ’ என்ற எழுத்தை வரையத் தொடங்கின. என் அகவிழிகள் ஆயிரமும் வரவேற்பு அறையின் அருகில் நின்றிருந்த ஆறு மாணவியர்களுள், ‘யார் என் மகள்?’ என்பதைத் தேடிக்கொண்டிருந்தன. 

‘ஓ’ என்ற எழுத்தை என்னால் சரியாக எழுத முடியவில்லை. இரண்டு முறை வரைந்து, அந்தத் தாள்களைக் கிழித்தெறிந்தேன். மூன்றாம் முறையாக வரைந்த போது அந்த எழுத்தின் கீழ்நோக்கி சுழி எனக்குக் கைவசப்படவில்லை. எனக்கு வியர்க்கத் தொடங்கியது. விழா தொடங்குவதற்காக அறிவிப்பொலிகள் காற்றில் அலைந்துகொண்டிருந்தன. எனக்குப் பதற்றம் கூடியது. 

நான்காவது முறையாக ‘ஓ’ என்ற எழுத்தை வரைந்தேன். வண்ணம் தீட்டினேன். தாளை எடுத்து, எனக்கு முன்னால் தூக்கிப் பிடித்தபடி அதைப் பார்த்தேன். என் மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது எப்படி ‘ஓ’ என்ற எழுத்தை எழுதினாலோ அதுபோலவே இந்த ‘ஓ’ என்ற எழுத்தும் இருந்தது. எனக்குச் சிரிப்பு வந்தது. அடுத்த விநாடியே என் மகளின் நினைவு எனக்கு வந்துவிட்டது. அந்தத் தாளை எடுத்துக்கொண்டு, விழாமேடைடைய நோக்கி ஓடினேன். விழா தொடங்கியிருந்தது.

இனிமேல் விழாமேடையின் பின்னணியில் இருக்கும் வாசகத்தோடு இந்த ‘ஓ’ எழுத்தை இணைத்து, சரிசெய்ய முடியாது. காலம் கடந்துவிட்டது. மேடையில் அமர்ந்திருந்த தலைமையாசிரியர் என்னைப் பார்த்து முறைத்தார். நான் எங்கள் ஆசிரியர்களின் கூட்டத்தில் என்னுடைய சக ஓவிய ஆசிரியரைத் தேடினேன். அவர் வெகுதூரத்தில் நின்றபடி, டீ அருந்திக் கொண்டிருந்தார். 

நான் அவர் மீது எப்படிச் சினப்பட முடியும்? விழாமேடையின் பின்னணியை உருவாக்கியது அவர்தான் என்றாலும் எழுத்தைச் சரிசெய்யும் பணியைத் தலைமையாசிரியர் இப்போது என்னிடம்தானே கொடுத்தார். என்னால் ஓர் எழுத்தை ஒழுங்காக, விரைவாக வரைந்து வண்ணம் தீட்ட முடியவில்லை. இதற்காக நான் எப்படி என்னுடைய சக ஓவிய ஆசிரியரின் மீது சினம் கொள்ள முடியும்?’ என்று நான் எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு, அமைதியடைந்தேன். 

விழாமேடைக்கு முன்பாக அமர்ந்திருந்த பிற பள்ளி ஆசிரியர்களைப் பார்த்தேன். என் மகள் படிக்கும் பள்ளியிலிருந்து வந்திருந்த ஆசிரியை எங்கிருக்கிறார் என்று பார்வையிட்டேன். அவர் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தார். அவர் அழைத்து வந்திருந்த ஆறு மாணவியரும் அவருக்கு அருகில் அதே வரிசையில் அமர்ந்திருந்தனர். 

அவர்களுள் ‘யார் என் மகள்?’ என்று என் விழிகள் தேடிக்கொண்டே இருந்தன. நேரம் கடந்துகொண்டே இருந்தது. நான் என் தலையை விழா மேடையின் பக்கம் திருப்பவே இல்லை. விழாமேடையில் யார் யாரோ ஏதேதோ பேசினார்கள். எதுவுமே என் காதுகளில் விழவில்லை. என் கையில் ‘ஓ’ என்ற எழுத்து வரைப்பட்ட தாள் இருந்தது.  

பரிசளிப்பு நிகழ்ச்சி தொடங்கியது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கவிதைப்போட்டிக்குரிய வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் பரிசுக்குரிய மாணவ-மாணவியர்கள் விழா மேடைக்குச் சென்று தமக்குரிய பட்டயத்தையும் பதக்கத்தையும் பெற்றுத் திரும்பினர். அந்த ஆசிரியர் அழைத்துவந்த மாணவியர்களுள் ஒருவர் மட்டும் எழுந்து சென்று பட்டயத்தையும் பதக்கத்தையும் வாங்கிக்கொண்டு வந்தார். நான் அந்த மாணவியைத் தவிர மற்ற ஐந்து மாணவியர்களுள், ‘யார் என் மகள்?’ என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

இப்படியாக அடுத்த இரண்டு போட்டிகளுக்குரிய வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த ஆசிரியை அழைத்துவந்த மாணவரியர்களுள் இரண்டு மாணவியர்கள் எழுந்து சென்று தமக்கு வழங்கப்பட்ட பட்டயத்தையும் பதக்கத்தையும் வாங்கிக் கொண்டு வந்தனர். நான் மற்ற மூன்று மாணவியர்களுள், ‘யார் என் மகளோ?’ என்று ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஓவியப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டதும். நான் அந்த மூன்று மாணவியர்களையும் பார்த்தேன். அவர்களுள் யாரும் எழவில்லை. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவர்களுள் யாருமே எழவில்லை. அவர்களை அழைத்து வந்த ஆசிரியை வேகமாக எழுந்து விழாமேடைக்குச் சென்றார். 

ஒலிப்பெருக்கியில் என் மகளின் பெயர் கூறப்பட்டது. அந்த ஆசிரியை என் மகளுக்கான பட்டயத்தையும் பதக்கத்தையும் வாங்கிக்கொண்டார். அவர் விழா மேடையைவிட்டு இறங்கும்போது, நான் வேகமாக அவரை நோக்கி ஓடினேன். 

அவரை வழியிலேயே நிறுத்தி, “ஓவியா வரலையா?” என்று கேட்டேன். 

அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “இல்லைங்க சார்” என்றார்.

“ஏன்?” என்று கேட்டேன். 

அந்த ஆசிரியை தன் புருவங்களைச் சுருக்கிக்கொண்டு, “அவுங்க அம்மா ஃபெர்மிஷன் கொடுக்கலை” என்றார்.

நான் மீண்டும், “ஏன், ஏன்?” என்று இருமுறை கேட்டேன்.  

“அவுங்க, ‘மதுரைக்குன்ணா என் மகளை அனுப்ப மாட்டேன்’ணு கறாரா சொல்லிட்டாங்க” என்றார். 

நான் அசையாமல் நின்றிருந்தேன். அந்த ஆசிரியை சற்று விலகி என்னைக் கடந்து நடக்கத் தொடங்கினார். 

நான் சில விநாடிகளுக்குள் என்னைச் சமநிலைப்படுத்திக்கொண்டு, “மேடம்!” என்று அந்த ஆசிரியையை அழைத்தேன். அவர் நின்று திரும்பிப் பார்த்தார். 

என் கையில் இருந்த ‘ஓ’ என்ற எழுத்து வரையப்பட்ட அந்தத் தாளை அவரிடம் கொடுத்து, “தயவு செஞ்சு இந்தத் தாளை ஓவியாக்கிட்ட கொடுத்துடுங்க, ப்ளீஸ்!” என்றேன். 

என்னிடமிருந்து அதை வாங்கி, ‘ச. ஓவியா, ஓவியப் போட்டி – இரண்டாம் நிலை’ என்று எழுதப்பட்ட பட்டயத்தோடு இணைத்து வைத்துக் கொண்டார் அந்த ஆசிரியை.

– – –

13 Replies to “ஓவியா”

 1. I really don’t know what to say Sir…. At first I thought it gonna be a funny story n it remembers my old days I spent with my dad as same as u.. I too said that same dialogue to my dad.. but later as u said my eyes were fully filled with tears and I can’t read further… Definitely Oviya will keep that paper u gave very safely as a treasure… It’s really like a movie and I expect that it gonna be a happy ending… But I disappointed.. someone I know told me “it’s k if it’s not an hpy ending because it’s not an ending..” so I wish that one day ur desires will come true… But sir I guessed there’s no Oviya among that 6 girls because If she’s there she would start search u when she reached Madurai n she noticed while u r standing in the reception n definitely she ran to u n hugged u….

  1. சுஷ்மிதா அவர்களுக்கு, வணக்கம்.
   தொடர்ந்து என்னுடைய கதைகளைப் படித்துப் பின்னூட்டம் நல்கி வருகிறீர்கள். நன்றி.
   தந்தை-மகள் உறவும் தாய்-மகன் உறவும் மிகவும் வலுவானவை. அவை எளிதில் அறுத்தெறிய இயலாதவை. அதனால்தான் அந்த உறவுகளுக்கு இடையில் ஏற்படும் விலகல்கள் வலிமிகுந்தவையாக இருக்கின்றன. நன்றி.
   – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

 2. வணக்கம். “ஓவியா’ சிறுத்தை அருமையாக இருந்தது. தந்தையின் மனக்கவலையை அறிய முடிந்தது. பெற்றோரின் ஈகோவால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளே!

  1. அனுசுயா தேவி அவர்களுக்கு, வணக்கம்.
   உண்மைதான் பெற்றோரின் ஈகோவால் பலியாவது குழந்தைகள்தான். பெரும்பான்மையான குடும்பங்களில் குழந்தைகளால்தான், குழந்தைகளுக்காகத்தான் பெற்றோர் இணைந்து வாழ்கிறார்கள். நன்றி.
   – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

 3. Now I am crying sir,really I missed my mom and dad,sir,I know your feel,how hardful in heart,sir don’t worry sir,god deside everything in different,he will give you an wonderful time to meet your daughter and mam,I will pray for you,I belive it 100%..because in my life ,I am so worry about my mother’s death,so daily I pray to god,after2years….now my daughter face is very perfect match to my mother’s face,also every actions…I am happy now…bcz now I carry,playing,walking,holding ,teaching cycling to my (baby mother )my daughter…..so don’t worry sir,,one day you will happy to meet your family sir,it is true and dame sure ..thank you sir

  1. சாம் அவர்களுக்கு, வணக்கம்.
   உலக அளவில் எல்லாக் கதைகளுமே வலிகளில் பிறப்பவைதான். புனைவுகளைப் படிப்பதன் நோக்கமே வலிகளை எவ்வாறு தாண்டிச்செல்வது என்பதைக் கற்றுக்கொள்ளத்தான். புனைவுகள் என்றுமே நம் கண்முன் நிற்கும் வழிகாட்டிகள்தான். அவற்றை அதற்காகவே நாம் அணுகவேண்டும்.
   – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

   1. Sir, it’s really like watching a movie and the flow of the story will make everyone to read till the end. I’m not suprised since we all know your potential from our UG. The story just went deep into my heart and tethered my soul and the pure emotional content between a father-daughter, made me to remember my childhood days. It again made me to stamp my heart that fathers are the real heroes.

    Simply, no words to express my gratidue for offering such a awesome story, my eyes overwhelmed with tears and while reading the last line it just dropped out of my eyes, Sir

    My kind wishes for you to reach new heights, Sir

   2. என் அன்புக்குரிய மாணவி செல்வி ஆர். கல்பனா அவர்களுக்கு, வணக்கம். என்
    மனச்சுமைகளை எழுத்தாக்கும்போது என்னுடைய இதயம் மிகுதியாகவே வலிக்கிறது. எழுதிய பின்னர் மனம் நிம்மதிப் பெருமூச்சினை விடுகிறது. அந்த நிம்மதியை அடைவதற்காகவே நான் என் மனச்சுமைகளை என் எழுத்துகளின் வழியாக இறங்கி வைக்கிறேன். அவை பலருக்குப் பாடமாகவும் சிலருக்குப் பாரமாகவும்தான் இருக்கும். தந்தை-மகள் உறவு, தாய்-மகன் உறவு ஆகிய இரண்டுமே சம அளவில் வலுவானவை. தந்தையை நேசிக்கும் மகள்கள் அனைவருமே போற்றுதற்குரியவர்கள். அவர்களுக்குப் பரிசளிக்க அந்தத் தந்தையர் தம் உயிரைக்கூடத் தயார்நிலையில் உள்ளங்கையில் வைத்திருப்பர். நன்றி.
    – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை. 9894541523.

 4. சார், இந்தக் கதையை நான் பத்து முறைக்கு மேல் வாசித்தேன். அவ்வளவு அற்புதமான கதை. கதையோட்டம் உடைய கதை. பாசப்பிணைப்பை எழுத்தோவியத்தில் கூறியுள்ளீர்கள். ஒவ்வொரு வரியையையும் நுட்பமாகத் தேர்ந்தெடுத்துக் கூறியுள்ளீர்கள். உளவியல் அடிப்படையில் எழுதி உள்ளீர்கள் . இந்தக் கதைக்காகவே உங்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் . நான் மிகைப்படுத்திக் கூறவில்லை. உண்மையைத் தான் கூறுகிறேன். இந்தக் கதையில் எழுத்துப்பிழை என்ற வரியை வாசித்த போது பிள்ளைகளால் வேண்டாம் என்று கைவிடப்பட்ட பெற்றோர்களும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளையும் என் மனத்தில் நினைக்க வைத்து விட்டீர்கள். அத்தகைய வலிமை உங்களின் எழுத்தில் பொதிந்திருப்பதை ஆழமாக உணர்கிறேன்.

  1. பிரியா நடராஜன் அவர்களுக்கு, வணக்கம்.
   என் கதையினைப் பத்துமுறைக்கு மேல் படித்த தங்களுக்கு நான் பத்துமுறை அல்லவா வணக்கம் கூறவேண்டும்!.
   சில கதைகள் வாசித்து முடித்தபின்னரும் நம் மனத்துக்குள் தொடரும். எனக்கு இந்தக் கதை அப்படித்தான். ஒவ்வொருநாளும் இந்தக் கதையில் உள்ள ஏதாவது ஒரு வரி எனக்குள் ஓடத்தான் செய்கிறது. நான் எழுதிய சில கதைகளும் அப்படித்தான். என்ன செய்வது? சில கதைகள் நம் மனத்தைவிட்டு நகர மறுக்கும். அவை நம் மனத்துக்குள் முடிவின்றி எழுதப்பட்டுக்கொண்டே, நம் மனத்தால் முடிவின்றிப் படிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்தக் கதை நம் மனத்துக்கும் நம் மனம் அந்தக் கதைக்கும் பழகிவிடுகிறது. மின் தடையின்போது கைவிசிறியைப் பயன்படுத்துவோம். தடை நீங்கி மின்சாரம் வந்த பின்னரும் நம் கை, கைவிசிறியை இயக்குவதை நிறுத்தாமல், சில விநாடிகள் தொடர்வதைப் போல, அலை வந்து சென்ற பின்னரும் கரையில் ஈரம் இருப்பது போலத்தான் இதுவும். நன்றி.
   – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

 5. வணக்கம். இக் கதையில் பணியிடங்களில் பிறரிடம் எவ்விதத்தில் பழக வேண்டும் என்பதைக் கூறி உள்ளீர்கள் . ஓர் ஆசிரியர் பிற ஆசிரியருக்கு உதவியாக இருப்பதைத் தொடக்கத்தில் கூறி உள்ளீர்கள். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் பணிபுரிந்தால்தான் அந்தநாள் முழுவதும் மலர்ச்சியுடன் இருக்கும் என்பதைக் கதாப்பாத்திரம் வழி உணர்த்தி உள்ளீர்கள் . அது மட்டுமல்லாது கையில் எழுதிய தாளுடன் அக்கதாபாத்திரம் பிறர் மீது பழி போடுவதும் தவறு என உணர்த்துகிறது . பணியிடத்தினில் கடைப்பிடிக்க வேண்டிய நேர்த்தியை உணர்த்தி உள்ளீர்கள். தந்தையின் மனக்குமுறல்களை நேர்த்தியாக அதிகப்படியான வார்த்தைகளோ அலங்கார வார்த்தை இன்றி அருமையாகக் கொண்டு சென்றுள்ளீர்கள். ஒவ்வொரு இடத்திலும் நேர்த்தியான வார்த்தைகள். பெண்களின் வருத்தம் வார்த்தைகளிலும் கண்ணீரிலும் வெளிப்பட்டு விடும் .ஆனால் ஆண்களின் ஆதங்கம் அடிமனதில் சொல்லாத் துயராகப் புதைந்து கிடைக்கும்.
  ஆண் களின் மனவோட்டத்தினைப் படம் பிடித்துக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

  1. திரு. சபாபதி அவர்களுக்கு, வணக்கம்.
   “ஆண்களின் ஆதங்கம் அடிமனத்தில் சொல்லாத் துயராகப் புதைந்து கிடக்கும்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான். அத்தகைய சொல்லாத் துயரங்களைச் சொல்லில் செல்ல உதவுபவை புனைவெழுத்துகளே. குறிப்பாக, சிறுகதையும் நாவலும். உலக அளவில் எல்லாப் புனைவெழுத்துகளும் துக்கத்தைச் சுமந்தவையே என்பது என் கணிப்பு. நகைச்சுவை மிகுந்த புனைவெழுத்தாக இருந்தாலும் அதனுள் ஓர் இடத்தில் சிறு புன்னகையின் வழியாகத் துக்கம் கசியத்தான் செய்யும் என்பது என் வாசிப்பனுபவத்தின் வழியாக நான் கண்டடைந்த கருத்து.
   நன்றி.
   – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.