இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்

பழனி ஜோதி

மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜன். உங்களின் இசையமைப்பில் வெளிவந்த ‘சந்தம்’, சங்கப்பாடல்கள் இசைத்தொகுதி அமேஸானின் சர்வதேச இசை டாப்#10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது! உங்களோடு சக தமிழராக, இசை ரசிகராக நாங்களும் உவகையும், பெருமையும் கொள்கிறோம். சந்தம் இசைத்தொகுதியை வெளியிடும் போது இவ்வளவு வரவேற்பையும், வெற்றியையும் பெரும் என்று நினைத்தீர்களா?

நன்றி! இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று இதை வெளியிட்ட போது நினைக்கவில்லை. சங்கப்பாடல்களை இப்போது யார் விரும்பிக் கேட்பார்கள்? என்ற எதிர்மறைக் கருத்துக்களைத்தான் பெரிதும் சந்தித்தேன். ஆனாலும், எந்த ஒரு ஆக்கமும் 2000 வருடங்களைத் தாண்டி நிற்கிறதென்றால் அது மகத்தான ஆக்கம்தான். அது ஏதோவொரு வகையில் நம் மனதைத் தொடுகிறது. அதற்கு செம்மையான இசைவடிவம் கொடுத்து, குறைந்தபட்சம் என் கடமையை செய்துவிட்டால், இசையையும் கவிதையையும் ரசிக்கும் சிலராவது இதை ரசிப்பார்களே என்ற நம்பிக்கை இருந்தது.  

உலகின் தொன்மையான பாடல்களுக்கு, உலகளாவிய இசை வடிவங்கள் வாயிலாக இசையமைத்ததே ஒரு பேரனுபவம். அதைப் பலரும் ரசிப்பதும், விரும்பிக் கேட்பதும் பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. 

சங்கப்பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சங்கச் சித்திரங்கள் புத்தகம் தான் இதன் ஆரம்பப் புள்ளி. சங்கச் சித்திரங்கள் எனக்கு முற்றிலும் புதிய, உயர் கவித்துவம் கொண்ட சங்கப்பாடல்களை அறிமுகம் செய்தது. 

இதற்கு யாராவது இசை வடிவம் தந்திருக்கிறார்களா என்று தேடிய போது, ஓரிரு புகழ்பெற்ற சில பாடல்களின் வரிகளை திரைப் பாடல்களில் பயன்படுத்தியதைக் தவிர முழுமையான இசை வடிவம் பெரிய அளவில் எந்தப் பாடல்களுக்கும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். 

குறிப்பாக “கலம் செய் கோவே” என்ற பாடலில் வரும் ‘அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண்பல்லி போல” என்ற வரியுணர்த்தும் உருவகமும் அதன் பின்னாலிருந்த அந்தப் பெண்ணின் பெருந்துயரும் என்னை அலைக்கழித்த ஒரு நடு இரவில், அந்தப் பாடலை என்னையறியாமல் மெட்டுடன் பாடிக்கொண்டிருந்தேன். உடனே எழுந்து அதற்கு இசையமைத்ததில் தொடங்கியது இதற்கான பயணம்.

ஓசை நயம், சந்தம் மற்றும் தாள ஒழுங்கு பெரும்பாலும் இல்லாத சங்கப் பாடல்களுக்கு இசை அமைப்பதில் இருந்த சவால்கள் என்ன?

சங்கப் பாடல்களில் தாள ஒழுங்கு – லயம் இல்லை என்பது உண்மைதான். அதற்கு இசையமைப்பது சவாலாகத்தான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு பாடலின் ஆன்மாவையும் உணர்ந்து ரசிக்கும் போது, அவற்றுக்கான பொருத்தமான உணர்ச்சி வெளிப்பாட்டுடன் மெட்டு உருவானது  எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.   

சங்கப்பாடல்களின் சிறப்பு அதன் நுட்பமான கவித்துவ உச்சம். பாடல்களின் நுட்பத்தை இசையில் வெளிக்காட்ட என்ன செய்தீர்கள்?

அந்தப் பாடல்களுக்குள் இருந்த நுட்பமும் அழகியலும் எனக்குள் இருந்த படைப்பாளிக்கு மிகப்பெரும் களம் அமைத்துக் கொடுத்திருப்பதை உணர்ந்து கொண்டேன். அதற்கு மேல், மெட்டுக்காக சொற்கள் சிதையாமல் பார்த்துக் கொண்டேன். பாடகர்கள் இந்தப் பாடல்களின் பொருளையும் குறிப்பாக உணர்ச்சியையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்வதில் கவனம் செலுத்தினோம். பாடலின் மெட்டும், பயன்படுத்தப் பட்ட இசைக்கருவிகளும், பின்னணி இசைக் கோர்வைகளும் இந்த உணர்ச்சிகளைக் கடத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம்.

சந்தம் தொகுதியிலிருந்து குறிப்பாக ஏதாவது ஒரு பாடலை வைத்து இதை விளக்க முடியுமா?

திருமணமாகிச் செல்லும் மகளை நோக்கிப் பாடும் ‘ஞாயிறு காயாது மர நிழல் பட்டு’ கவிதையை எடுத்துக்கொள்வோம். மகள் திருமணமாகி செல்லும்போது அன்னையின் முகத்தை கவனித்து இருக்கிறீர்களா?  மகிழ்ச்சி, பிரியப்போகும் சோகம், சிறப்பாக வாழ வாழ்த்து, குடும்பம் வளரும் மங்கல நிகழ்வு என்று உணர்ச்சிக் கலவையாக இருக்குமல்லவா? இந்தக் கவிதை அவ்வுணர்ச்சிகளை அற்புதமாக சொல்லும். அத்தனை உணர்ச்சிகளின் கலவையையும்- மங்கலம், வாழ்த்து, மகிழ்ச்சி, சோகம் அனைத்தையும் இந்த இசைவடிவில் காணலாம். 

YouTube Link: ஞாயிறு காயாது மர நிழல் பட்டு 

மேலை இசை மரபின் சிம்பொனியையும், தென்னிந்திய மரபிசையின் ராகங்களையும் ஓரிழையில் கோர்த்திருக்கிறீர்கள். இது எந்த வகையில் உங்கள் இசை கோர்ப்புக்கு உரம் சேர்த்ததாக நினைக்கிறீர்கள்?

இரண்டாயிரம் வருடங்களைத் தாண்டிய எந்த விஷயமும் பிரம்மாண்டமானது அல்லவா? இதன் அழகையும் , பிரம்மாண்டத்தையும், உணர்வையும் இசையில் கொண்டுவர சிம்ஃபொனியும் நம் மரபிசையும் தேவை என்று உணர்ந்தேன்.  

நான்கைந்து தனித்தனி இசைப் பகுதிகளை, மிகவும் சிக்கலான இசைக்கோர்வைகளை, மிக பிரம்மாண்டமான இசைக் கலவையை ஒப்பு நோக்க மிகக் குறைவான நேரத்தில் கொண்டுவர சிம்பொனி இசைக்குழுவால் இயலும். ஒவ்வொரு பாடலுக்கும் டர்ஹாம் சிம்ஃபொனியைச் சேர்ந்த 68 இசைக் கலைஞர்கள் பல்வேறு இசைக் கருவிகளை வாசித்தார்கள். நான்கு பெரிய தொகுதிகளாக – புல்லாங்குழல், கிளாரினெட் போன்ற குழலிசை; ட்ரம்ப்பெட், ட்ராம்போன் போன்ற பித்தளைக் குழல்கள்; வயலின், வியோலா உள்ளிட்ட தந்தி வாத்தியங்கள்; தாளக் கருவிகள். 

அதே சமயம் பாடலின் ஆன்மாவை உணர்ச்சியை வெளிப்படுத்த நம் மரபிசை ராகங்களே சிறந்தவை என்பதை உணர்ந்தேன். நம் மரபிசையில்  கொட்டிக்கிடக்கும் நுட்பங்கள் வழியாக எவ்வித உணர்ச்சியையும் துல்லியமாக கடத்திவிட முடியும். 

மேலை இசையில் இல்லாமல், கர்னாடக இசையில் இந்த நுட்பமான உணர்வு வெளிப்பாட்டை சாத்தியமாக்குவது எது என்று நினைக்கிறீர்கள்?

எல்லாவற்றையும் (இசைக்குறியீடுகள்) எழுதிவைத்து பாடுவது நமது மரபாக இல்லை. குருவின் முன் அமர்ந்து நேரடியாக காதில் கேட்டு, பார்த்து கற்றுக்கொள்வதே வெகுகாலம் நம் மரபு. அப்படி நேரடியாக கேட்டு கற்றுக்கொள்வதன் பலன், எழுதமுடியாத பல  நல்ல சாத்தியக்கூறுகளையும் கற்றுக்கொள்ளலாம் அல்லவா? அதுவே நம் இசையின் பலம்.  அந்த சாத்தியக்கூறுகளை அடித்தளமாகக் கொண்டே நம் ராக நுட்பங்கள் வளர்ந்துள்ளன. 

ஆனால், துல்லியமான இசைக் குறியீடுகளை பயன்படுத்தாத காரணத்தால், நம் மரபிசையில் ஒரு பாடலை ஒரு பெரிய இசைக்குழு இணைந்து கச்சிதமாக வாசிப்பது கடினம்.  

ஒப்பு நோக்க மேலை இசையில் இந்த சவாலை எப்படி எதிர்கொள்கிறார்கள்? 

மேற்கத்திய இசையின் முக்கியமான பலம் அதன் துல்லியமான குறியீடு, அதன் பயிற்சி. ஒரு குழுவாக வாசிக்க மிகவும் ஏற்றது அந்த முறை.  

உதாரணமாக ‘சந்தம்’ தொகுதியில், சிக்கலான இசைக்கோர்ப்பு கொண்ட “முல்லை ஊர்ந்த” பாடலை எடுத்துக்கொள்வோம். ஒத்திகை, அதன் பிறகு  பிசிறின்றி ஒலிப்பதிவு என எல்லாவற்றுக்கும், 68 பேர் கொண்ட பிரம்மாண்ட இசைக்குழுவுக்கு  மொத்தமே வெறும் 5 மணிநேரம் மட்டுமே ஆனது.   

முதல் இரண்டரை மணி நேரம் நான் எழுதிக்கொடுத்த இசைக் குறியீட்டை வைத்து ஒத்திகை பார்த்துக் கொண்டார்கள். சிக்கலான அடுக்குகள் கொண்ட கோர்வைகள்… சிம்ஃபொனி இசையின் நான்கு பகுதிகள்…அடுத்த இரண்டரை மணி நேரத்தில் முழு இசையும் வாசிக்கப் பட்டுவிட்டது. இதை சாத்தியப் படுத்தியது மேலை இசையின் இசைக் குறியீட்டின் அடிப்படையில் கட்டியெழுப்பப் பட்ட துல்லியமும் முதிர்ச்சியும்தான். 

ஆனால், இதனால் அவர்கள் இழந்தது என்ன தெரியுமா? ஒவ்வொருவரும் அவர்களுக்கேயான பாடலின் வடிவத்தை சமைத்துக்கொள்வதன் சாத்தியக்கூறை! அது நம் மரபிசையில் இருக்கிறது.  இசைக்குறியீடுகளின் துல்லியத்தை இழந்து நம் இசையில் நாம்பெற்றது அது! 

சிம்பொனிக்கு மேலதிகமாக சிதார், ராஜேஷ் வைத்யாவின் வீணை, பல வகையான புல்லாங்குழலிசை, மெடிட்டரேனியன் வகை கிடார் என நுணுக்கமான பல வாத்திய இசைக் கோர்வைகளைக் கையாண்டதன் நோக்கம் என்ன?

பாடலின் பொருளை, உணர்வைத் துல்லியமாகக் கடத்துவதற்காகத்தான். ஒரு ஓவியன் பல்வேறு நிறங்களைக் கொண்டு தான் நினைத்த காட்சியைத் தீட்டுவது போல, வெவ்வேறு இசைக் கருவிகளையும், கோர்வைகளையும் கொண்டு பாடல்களின் உள்ளுறை உணர்ச்சியை வெளிக்கொணர முயன்றிருக்கிறேன். 

ஒரு உதாரணத்திற்காக சொன்னால், வேரல் வேலி பாடலில் பலா மரங்கள் நிறைந்த அந்த குறிஞ்சி நிலத்தின் பின்னணியும் வர வேண்டும், அதே நேரம் அந்தப் பாடலின் களித்தன்மையும் கேலியும், தோழமையின் மீதான் அக்கறையும் சேர்ந்து வர வேண்டும். இதை இசையில் கொண்டு வர மெடிட்டரேனிய கிடார் இசையும், பலவகை புல்லாங்குழலும் சிறப்பாக உதவின. 

YouTube Link: வேரல் வேலி

நம் மரபிசையின் எந்தக் கூறுகள் அதற்கு அறிமுகமில்லாத மேலை இசைக் கலைஞர்களை ஈர்ப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

நிச்சமாக நம் மரபிசை அதன் கலைஞர்களுக்கு அளிக்கும் புத்தாக்கத்தின் சாத்தியங்களும் அது அளிக்கும் சுதந்திரமுமே மேலை இசைக் கலைஞர்களைப் பெரிதும் ஈர்ப்பதாக நினைக்கிறேன். மீள மீள ஒரு ராகமோ, கீர்த்தனையோ பல இசைக் கலைஞர்களால் பாடப்பட்டாலும் ஒவ்வொருவரும் அதைத் தங்களுக்கு உரியதாக மீட்டுருவாக்கம் செய்து கொள்கிறார்கள். நம் மரபிசை கற்பிக்கப்படுவதன் அடித்தளமே, இப்படித்தான் பாடப்பட வேண்டும் என்பதை விட, இப்படியும் பாடப்படலாம் என்ற புரிதலின் மேல் கட்டியெழுப்பப் பட்டிருப்பதாக உணர்கிறேன். ஒரு ராகத்தின் முழு வடிவத்தையும் தன் கற்பனையின் மூலம் விரித்து அதன் உணர்வை பருவடிவில் கடத்த அது அளிக்கும் சாத்தியங்கள் தான் நம் செவ்வியல் இசையை பெருவியப்புடன் நோக்க வைக்கின்றன.

ஃப்யூஷன் இசையை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? உங்கள் இசையமைப்பில் நம் மரபிசையின் ராகங்கள் அவற்றின் மூல வடிவிலேயே கையாளப் பட்டிருக்கின்றன. இதற்கு குறிப்பான காரணங்கள் ஏதும் உண்டா?

ஃப்யூஷன் இசை ஒரு பாடலின் மைய உணர்ச்சியை சிதைக்கும் என்றால் எனக்கது உவப்பானதில்லை. 

ஆனால், ஒரு பாடலின் உட்பொருளையோ உணர்ச்சியையோ பரிமாறத் தேவையென்றால் ஃப்யூஷன் இசையை நிச்சயமாகக் கையாளலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘யாதும் ஊரே’ பாடல் உலகிலுள்ளோர் அனைவரையும் தோழர் என்று பார்க்கிறது. அதை இசையில் சொல்ல ஃப்யூஷன் ஒரு சிறந்த தேர்வென்று நினைத்தேன். நம் மரபிசை, கேலிப்ஸோ, ராக், பாப், ரெகே, ஆப்பிரிக்கப் பழங்குடி இசை என பதினான்கு வகையான இசை வடிவங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். பல நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் நம் மரபின் ஆனந்தபைரவி ராகத்தை அல்லது அதன் சாயல் கொண்ட  இசையை வாசித்திருக்கிறார்கள். அந்தப் பாடலின் விரிவைக் கடத்துவதில் ஃப்யூஷனின் பங்களிப்பு முக்கியமானது என்றே நினைக்கிறேன்.

தமிழ் மரபின் பண்ணிசையை பயன்படுத்தலாம் என்ற எண்ணமிருந்ததா? குறிப்பாக சங்கப்பாடல்களாக இருப்பதனால்…

‘யாதும் ஊரே’ பாடலுக்கு இசையமைக்கும் போது, இவ்வளவு மனவிரிவை – எல்லோரும் நம் உறவினரே; எல்லா ஊரும் நம்முடையதே – என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சொன்ன பாடலுக்கு எந்த இசைவடிவம்  சிறப்பாக இருக்கும் என்று நினைத்தபடியே இருந்தேன். தமிழ்நாட்டின்  நாட்டாரிசையில் ஆனந்தபைரவி ராகத்தில் பல பாடல்கள் உள்ளன.  ஆனந்தபைரவி ராகமோ, சாளரபாணிப்பண் என்னும் பண்ணிலிருந்து உருவான ராகம்.  ஒரு   ஆச்சர்யமான விஷயம், உலகத்தின் பல நாட்டாரிசைகளில் ஆனந்தபைரவி ராகத்தின் சாயலில் பல பாடல்கள் உள்ளன.  அதனால் எந்த இசைவகையையும் ஆனந்தபைரவியில் வாசிக்கலாம்! 

உங்கள் இசையில் தாளக்கட்டும் பயன்படுத்தப்படும் கருவிகளும் தனித்துவம் கொண்டதாக இருக்கின்றன. அண்மையில் வெளிவந்த உங்களின் ‘ஊழிக்கூத்து’, பாரதியின் கவிதைக்குள் உறங்கும் தாள, ஓசை நயத்தின் மேல் கட்டியெழுப்பப் பட்டிருப்பதாகவே தோன்றும். லயத்தின் மீதான உங்களின் இந்த ஈர்ப்பின் பின்னணி என்ன?

பிறந்து வளர்ந்ததெல்லாம்  திருவாரூரில். திருவாரூர் இசையும், குறிப்பாக லயமும் என்னைச் சுற்றி எப்போதும் முயங்கிய அற்புதமான ஊர். கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்வது வரை வெவ்வேறு வகையான தாளங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தியாகராஜர் உற்சவ மூர்த்தியாய் வலம் வரும் போது ஆடப்படும் அஜபா நடத்திற்கொரு லயம்; சிவன் மயானம் நோக்கி செல்கையில் ‘மசான பத்திரம்’ என்று வேறொரு லயம்; ஊர்வலங்களில் வாசிக்கப்படும் வெவ்வேறு வகையான மேள வாசிப்புகள், இறப்பின் போது கேட்கும் பறை, காளி கோயிலில் கேட்கும் உடுக்கை என வெவ்வேறு தாளங்கள் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும். 

இயற்கையாக பழங்குடிகளின் தாளக்கட்டுகள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. குறிப்பாக நம் பறையிசை. பறையிசையில் துடும்பு (Bass drum) வாசிப்பவரின் காலப்பிரமாணத்தை, சீருக்குக் கொடுக்கும் அழுத்தத்தைப் பொறுத்து மொத்தத் தாளமுமே  மாறிவிடும் அற்புதத்தைப் பார்க்க முடியும். அதே வியப்பை ஆப்பிரிக்க, அமெரிக்கத் தொல் பழங்குடியின் தாள அமைப்பைக் கேட்கும் போது அடைந்திருக்கிறேன்.

YouTube Link: பாரதியின் ஊழிக்கூத்து

நம் செவ்வியல், குறிப்பாக கர்னாடக இசை ரசனைக்கு முன்னிற்கும் சவால்கள் என்ன?

உணர்வுகளை  கடத்துவதே இசையின் குறிக்கோள். எந்த நாட்டு இசையானாலும், எந்த வகை இசையானாலும் அதுவே குறிக்கோள். வார்த்தைகளால் சென்றடைய இயலாத உச்சத்தை இசையால் அடையலாம். ஆனால் நாம் மரபிசையில் பெரும்பாலும், உணர்வுகளை பின்தள்ளி விட்டு, சுவரக்  கட்டுமானங்களுக்கும், கணக்குகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம்  அளிப்பதாக தோன்றுகிறது. கற்றுக் கொள்பவருக்கும், சொல்லிக் கொடுப்பவருக்கும் அவை முக்கியம்தான். ஆனால் இவற்றைக் கற்று, முன்னகர்ந்து, உணர்வுகளைக் கடத்துவதற்கு  முக்கியத்துவம்  தர வேண்டும்.   

கர்னாடக இசையின், கச்சேரிகளின் அடுத்த கட்ட வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்று ஊகிக்கிறீர்கள்?

கர்னாட இசைக் கச்சேரிகளில் பயன்பாட்டு எளிமை காரணமாக பொதுவாக வயலின், மிருதங்கம் போன்ற பக்க வாத்தியங்கள் தற்போது பயன்படுத்தப் படுகின்றன. வயலின் கர்னாடக இசைக்குள் நுழைந்தது இருநூறு வருடங்களுக்குள்தான். வயலினை கர்னாடக இசைக்கச்சேரிகளில் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதும் மாறும். எதிர்வரும் காலங்களில் கர்னாடக இசைக் கோர்ப்புகளிலும், கச்சேரிகளிலும் பல்வேறு இசைக்கருவிகளின் பயன்பாடும், அவற்றால் உண்டாகும் புது சாத்தியங்களும் வெளிப்படுமென்பதே என் எண்ணம். 

பழனி ஜோதி

தொடர்புள்ள பதிவுகள்

3 Replies to “இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்”

  1. சங்கத் தமிழ் பாடல்களுக்கு சிம்பொனி இசையை பிரம்மாண்டமாக அமைத்துள்ளார் இசையமைப்பாளர் ராஜன். மரபிசையின் ஆழத்தையும் உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையையும், மேற்கத்திய இசையின் துல்லியமான குறியீடுகளும் குறைந்த நேரத்தில் பெரும் இசை குழுவினர்கள் வாசிக்க முடிவதையும் அருமையாக விவரித்துள்ளார். அவரிடம் கேள்விகளை பல அடுக்குகளில் கேட்டு இசையின் பரிணாமத்தை எளிமையாக புரிந்துகொள்ளும்படி பழனி ஜோதி உரையாடியுள்ளார். அருமை!

  2. கவிதை, இசை வடிவங்கள் காலத்தையும் கடந்து நின்று மனித சமுதாயத்தின் மென்மையான உணர்வுகளை இன்றும் நமக்கு உணர்த்துகின்றன என்பது இந்த ‘சந்தம்’ பாடல்களைக் கேட்கும்போது தெள்ளென விளங்கும். இதுவரை பலமுறை இப்பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்ந்துள்ளேன்; வியந்துள்ளேன்; பெருமிதத்தில் உள்ளம் சிலிர்த்துள்ளேன்.

    இசையைக்கொண்டு சங்கீத உலகில் மாபெரும் புரட்சிகளையே செய்துவிடலாம் என்பதற்கு இது ஒரு முன்னோடி.

    இப்படைப்பினைப் புகழ சொற்களே இல்லை!
    வாழ்க வளர்க என்பதைத் தவிர!

    கட்டுரையாளருக்கு எனது மனமார்ந்த நன்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.