அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!

எஸ்பிபியின் மறைவுச் செய்தி கேட்டபின் நாள் முழுதும்  உறைந்திருந்த நான் இரவெல்லாம் விழித்திருந்து இதை எழுதுகிறேன். எது என்னை உந்துகிறது  என்பது தெரியவில்லை. அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, அவர் முறித்த சாதனைகள், பாடிய மொழிகள், பெற்ற விருதுகளின் பட்டியல் போன்றவற்றை பேச வேண்டாம் என்று தோன்றுகிறது. எஸ்பிபி விஷயத்தில் இது போன்ற அங்கீகாரங்கள் பொருளிழந்து விட்டன. அதே போல, அவர் நடித்தது, இசையமைத்தது அதுவெல்லாமும் இந்தக் கணம் பேசத் தோன்றவில்லை. அவரது இசை ஆற்றல், மற்றும் ஒரு பாடகராய் அவர் தொட்ட உயரங்கள் – அதுவே அவரது இழப்புக்குப் பின்னும் அவரை நம்மோடு இருக்கச் செய்கிறது. அதன் ஒரு சிறு துளியை மட்டுமே இங்கு தொட்டிருக்கிறேன். 

இறையருள் பெற்ற செவ்வியல் பாடகர்கள் தனி ரகம்.  இசைக்கலையில் தேர்ச்சி பெற்றபின் உத்தியையும் உணர்ச்சியையும் சரியான அளவில் கலந்து திறமைக்கு நியாயம் செய்பவர்கள் அவர்கள்.  ஆனால் பின்னணி பாடகர்கள் வேறு ரகம்.  செவ்வியல் இசைக்குரிய அதே வீரியம் அங்கு தேவைப்படுகிறது, ஆனால் அதே சமயம் வேறொருவராக மாறி கூடு பாய்ந்தவர்களின் கதையைச் சொல்லும் சவாலும் சேர்ந்து கொள்கிறது. ஒரு நடிகனைப் போல் நீங்கள் காதல் செய்ய வேண்டும், சல்லாபிக்க வேண்டும், சிரிக்க வேண்டும், அழ வேண்டும், சண்டை போட வேண்டும், வெறுக்க வேண்டும், வேறு எந்த உணர்ச்சியையும் ஒரு பொத்தானை அழுத்தினால் நடப்பதை போல வெளிப்படுத்து வேண்டும். சில சமயம் அந்த உணர்ச்சிகளை மிகைப்படுத்த வேண்டும். சில சமயம் மிக நுட்பமாக குறைக்க வேண்டும். இது அத்தனையையும் கண்ணுக்குத் தெரியாத குரல் என்ற ஒற்றை ஊடகத்தை மட்டுமே கொண்டு செய்ய வேண்டும்!

இந்த சகலகலா வல்லமையையின் மொத்த பிரதிநிதியாய் முதலும் கடைசியுமாய் எனக்கு தோன்றுபவர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மட்டுமே.  அதாவது இன்றைய ‘மில்லினியல் தலைமுறை’ தம் துறையில் உச்சத்தில் இருக்கும், காலத்தை வென்ற அசாதாரண கலைஞர்களை GOAT  (அதாவது Greatest Of All Time) என அழைப்பதுண்டு. எஸ் பி பி பாடிய, சாதாரண திரை வடிவில் சேராத சில பாடல்களின் எடுத்துக்கொண்டால், இவர் ஏன் இந்த பட்டியலில் வருபவர் என்பதை அறியலாம். இந்த பாடல்கள் சராசரி பாடல்களை விட நீளமானவை. மேற்கத்திய செவ்விய இசையில் ஓபரா, ஓராடாரியோ  போன்ற,  ‘ஒரு படைப்பு – பல பகுதிகள்’ (movements) வடிவம் கொண்டவை.  பாடிக்கொண்டிருக்கும் போதே இசைப்பகுதிகள் நிறுத்தப்பட்டு , பின்பு பேச்சுடன் கூடிய நாடகம்/ உரையாடல்கள், மறுபடி  இசை  பகுதிகள் என இப்பாடல்கள் உருமாறிக்கொண்டே இருக்கும். 

‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் வரும் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை‘ பாடலை கதை சொல்லியாக பாடும் எஸ் பி பி; ரீதி கௌளை, ஹரி காம்போதி, மத்யமாவதி என சீதையின் சுயம்வர படலத்தை பல பகுதிகளாய் “ராமா கனவேமிரா” (‘ராமன்  கதை கேளுங்கள்’ – சிப்பிக்குள் முத்து) என பாடும் கதா காலேட்ஷேப விற்பன்னர் எஸ் பி பி;  “எங்கே என் காதலி” (எனக்குள் ஒருவன்) என ராக் மற்றும் ராக் அண்ட் ரோல் மேடை பாடகனாக மிளிரும் எஸ் பி பி; ‘‘I want to tell you something’ (ஆனந்த்) என ஸ்ருதியிலேயே பேசும் எஸ் பி பி; உக்கிரமான இறுதிக்காட்ச்சியில் “சங்கீத ஜாதி முல்லை” (காதல் ஓவியம்) என உயிர்விடும் எஸ் பி பி; எது ஒன்றையும் கேட்டுப் பாருங்கள், நான் சொன்ன சகலகலா வல்லமை திரைப்பாடலுக்கு எந்த அளவில் தேவை என்பதும் அந்த சவாலை எஸ்பிபி எவ்வளவு எளிமையாக கடந்து போகிறார் என்பதும் புரியும். 

நடிகர்களுக்கு தகுந்த வகையில் தன் குரலை மாற்றிக் கொண்டதில்லை என்று எஸ்பிபி அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் அவரது குரல் நீர் போல் அவ்வளவு நளினமாக பிரவாகிப்பதால் அது மிக இயல்பாகவே தன் கொள்கலனின் வடிவத்தை ஏற்றுக் கொள்கிறது. ஒரு புதிய, உற்சாகமான குரலில் எம்ஜிஆர் ‘ஆயிரம் நிலவே வா’ என்று பாடுவதை நம்மால் அந்நியமாக உணர முடிவதில்லை. 

‘பொட்டு வைத்த முகமோ.. ஆ …..!’ என்று சிவாஜி தம் தனித்துவ நாடகீயமாக பாணியில் பாடும்போது புதுக்குரலானாலும் அங்கு அது பொருத்தமாக ஒலிக்கிறது. 

‘இதுக்குப் போயி அலட்டிக்கலாமா’ அல்லது “மன்மதன் வந்தானா.. ஹா!” அல்லது “காதல் வாழ்க! ஹோ”  என்ற வரிகள் ரஜினியே தன் குரலில் பாடியது போலத்தானே இருந்தது..!!

‘ஜூனியர் ஜூனியர்’ என்று பொம்மையோடுப் பாடுபவர் கமலாஹாசன்  அல்லாமல் வேறு யாரோ என்றால் உங்களால் நம்ப முடிந்ததா..!

அறுபதுகள் இறுதி முதல் நாயகர்களின் குரலை அடையாளப் படுத்தத் தொடங்கிய எஸ் பி பி, 2020 வரை இதை செய்திருக்கிறார்.  தொன்னூறுகளில்  ஒல்லியான உருவம் கொண்ட அஜீத் ‘அமராவதி’யில் ‘புத்தம் புது மலரே’ என பாடும்போது, தொழில் நுட்பம், கலைஞர்கள், மக்களின் ரசனை, என  எத்தனையோ மாறி விட்டிருந்தது. ஆனால் திரை வானில் ஒரு துருவ நட்சத்திரமாய் எப்போதும் மாறாத ஒன்று இருந்தது என்றால் அது எஸ்பிபியின் குரல்தான். வசீகர இளைஞனாய் விக்ரம் ‘ஓ பட்டர்பிளை’ பாடி பின் பல ஆண்டுகள் நிலைத்து நின்றதற்க்கு அந்தக் குரலும் ஒரு காரணம். அதே குரல்தான் லவ் டுடே படத்தில் ‘என்ன அழகு எத்தனை அழகு’ என்று பாடிய விஜயையும், நந்தா படத்தில் ‘முன் பனியா’ என்று பாடிய சூரியாவையும்  நோக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது..  முன்னணி நாயகர்களாக்கியது. ஆடுகளம் படத்தில் காதல் வயப்பட்ட தனுஷ் ‘ஐயையோ’ என்று கார் மீது ஆடும்போது அங்கு தேவைப்பட்டதும் அதே குரல்தான்.  

‘எஸ்பிபி பல தலைமுறைகளின் பாடகர்,’ என்ற தேய்வழக்கை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் அது உண்மைதான் என்பதை சுலபமாக நிறுவி விடலாம். அச்சாணி படத்தில் ‘தாலாட்டு… பிள்ளை ஒன்றை தாலாட்டு’ என்று ஆர். முத்துராமனுக்கு குரல் கொடுத்த எஸ்பிபி அவர் மகன் கார்த்திக்குக்கு எண்ணற்ற பாடல்கள் பாடினார் (‘நினைவெல்லாம் நித்யா’ படத்தில் மற்ற பாடல்கள் அபாரம் என்றாலும் ‘தோளின் மேலே பாரம் இல்லை,’ என்ன சாதாரண பாட்டா!). அவர்கள் இருவரும் நடிப்பதை நிறுத்திக் கொண்ட பின்னும் எஸ்பிபியின்  பாட்டரி செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது- கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் ‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தபோது அவர் ‘கத்தி வெட்டி கத்தி வெட்டி கம்பு சுத்துற’ என்று எஸ்பிபியின் அதே பழக்கப்பட்ட குரலுக்குதான் வாயசைத்தார். 

எஸ்பிபி சுயமாய் இசை கற்றுக் கொண்டவர். ஆனால் அவருக்கு செவ்வியல் இசை மீது மிகுந்த பக்தி இருந்தது. எஸ்பிபி எப்போதும் கேஜே யேசுதாசை தன் மானசீக குருவாய் கருதினார். அண்மையில் அவருக்கு பாத பூஜை செய்தபோது அவரது தன்னடக்கம் அனைவரும் அறிய வெளிப்பட்டது. முழு நீள கர்நாடக படைப்புகள் பாட வேண்டும்  என்ற கனவு அவருக்கு உண்டு. சங்கராபரணம் மூலமாக அது நிறைவேறியது. அந்தத் திரைப்படத்தின் இசையும் சங்கர சாஸ்திரி என்ற ஆளுமையின் கௌரவமும் எஸ்பிபியின் பரந்த தோள்களில் மேல் ஏறி உயர்ந்து  நின்றன என்று சொல்வது மிகையல்ல. இன்றளவும் இந்தியா சினிமாவில் சங்கராபரணம் ஒரு மைல்கல்லாக இருப்பதற்கு எஸ்பிபி  ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்கமுடியாது. ஓம்கார நாதானு சந்தான மெகாணமே என படத்தின் பெயர் கொண்ட ராகத்திலேயே அமைந்த பாடல் கர்நாடக சங்கீத இலக்கணப்படி கல்பனா ஸ்வரங்களுடன் பாடியதும், தொறக்குனா இட்டுவண்டி சேவா என கல்யாணியில் உருகியதும், சங்கரா நாதசரீராபரா என மத்தியமாவதியில் முறையிட்டதும், மைசூர் வாசுதேவாச்சாரியாரின் ப்ரோச்சேவாறெவருரா என்ற காமாஸ் ராக க்ருத்தியும், சதாசிவ பிரம்மேந்திரரின் மானஸ சஞ்சரரே என்ற சாம ராக துக்கடாவுமாக என எஸ் பி பியின் சங்கீத வாழ்வை நிறைவடைய வைத்த படம் இது.பிற்காலத்தில் இந்திய இசை மரபின் மற்றொரு பாரம்பரியமான ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதத்திலும் எஸ்பிபி தன் முத்திரை பதித்தார். காஃபி தாட்-டில் அமைந்த ‘உமண்டு குமண்டு‘ (சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர கவாய்) என்கிற பந்திஷ்ஷை போல தன் வாழ்நாளில் அவர் வேறு ஒரு பாடலை பாடவில்லை என்பது உண்மை. அதுவே அவருக்கு இன்னுமொரு தேசீய விருதுயையும் பெற்றுத் தந்தது.  

பல்வேறு இசையமைப்பாளர்களுடன் அவர் இணைந்து பணியாற்றியிருந்தாலும், மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கும் அவருக்கும் இருந்த நட்பு தனித்துவமானது..  எஸ்பிபி பாடிய பாடல் என்று எதுவொன்றை நினைத்துப் பார்த்தாலும் பெரும்பாலும் முதலில் நினைவுக்கு வரும் பாடல் இளையராஜா இசையமத்ததாகவே இருக்கும். துவக்க காலம் முதல், திரைத்துறைக்கு வரும் முன்னே அவர்கள் இருவரும் பணியாற்றியது, தென்னிந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று கச்சேரி போட்டது என அவர்களின் பயணம் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு விட்டது. அதில் குறிப்பாக பழைய காலம் பற்றி அவர்கள் இருவரும் இங்கே பேசிக் கொள்வது ஒரு  முக்கிய சந்திப்பு. 

00:45ஆவது நொடியில் இளையராஜா ஒரு உண்மையைச் சொல்கிறார்- யார் என்ன நினைத்தாலும் சரி, எஸ்பிபிதான் அவருக்கு பிடித்த பாடகர். பொதுவாகவே தன்னோடு இணைந்து பணியாற்றும் இசைக்கலைஞர்கள் பற்றி இளையராஜா அளவுக்கு மீறி புகழ்வதில்லை என்று ஒரு கருத்து உண்டு. ஆலாபனா என்ற தெலுங்கு படத்தில் மிகக் கடினமான ‘மதன லதிகா ஹரே’என்ற பாடலை முதல் டேக்கிலேயே எஸ்பிபி பாடி முடித்ததும் இளையராஜா அவரை மிகவும் பாராட்டினார் என்று சொல்லப்படுவதுண்டு.  (இந்தப் பாடல் பற்றி நான் இங்கே விரிவாக எழுதியிருக்கிறேன் – Raaja Paarvai – A Perspective on Raaja: y=f(dhenuka) ). 

எஸ்பிபியின் பன்முகத் திறமையை மிகச் சிறந்த வகையில் பயன்படுத்திக் கொண்டதும் இளையராஜாவாகவே இருக்க வேண்டும். மேலைச் செவ்வியல் இசை டைனமிக்ஸ்சின் அங்கங்களாய் உள்ள Piano, mezzo piano, mezzo forte, forte போன்றவை, Legato/ Staccato போன்ற ஆர்டிக்குலேஷன் போன்றவை – இவை அனைத்தும் இசைக்கருவிகளை மட்டுமல்ல பாடகர்களுக்கு பொருந்தும் என நிறுவ இளையராஜா பயன்படுத்திக் கொண்டது எஸ்பிபியையும் ஜானகியையும்தான். 

‘இதயம்’ திரைப்படத்தில் ‘பூங்கொடிதான் பூத்ததம்மா‘ என்ற பாடலில் ‘காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்,’ என்று ஒரு இடம் வரும். அங்கே ‘காட்டாத, மீட்டாத’ என்ற சொற்கள் முழு பலத்துடன் Forteல்  (f) பாடப்படும், ஆனால் ‘காதலெல்லாம், வீணையைப் போல்’ என்ற இடங்கள் மென்மையான ‘piano’வாக (p) பாடப்படும். ‘பாட்டு… எசப் பாட்டு‘ (செந்தமிழ்ச் செல்வன்) என்ற பாடலில், ‘ஆவராம்பூவே நீ வா’ என்ற நிறைவு இடம் மிகச் சரியான diminuendoவாக தேய்ந்து மறையும். ‘அப்பப்பா தித்திக்கும்’ (ஜப்பானில் கல்யாணராமன்) பாடலில் இரண்டாம் இடையிசையில் ‘பப்ப பப்ப பப்ப பப்ப ‘ என்று துல்லியமாக வெட்டிய staccattoக்கள் உதிருவதை பார்க்கலாம். பலமுறை அதை முயன்று வாய் கொளறாமல் அதை ஒருமுறை கூட சரியாக பாடமுடியாமல் மண்ணைக்கவ்விய பல பெரிய மேடைப்பாடகர்களை நேரில் பார்த்திருக்கிறேன். 

“வேற வேல ஓடுமா” (உனக்காகவே வாழ்கிறேன்) என ஹரிகாம்போதியில் ஆலாபனையாக தொடங்கி அதை அப்படியே பக்கா ப்ளூஸ் வகைப் பாடலாக மாற்றுவது இளையராஜா என்றால் அதை அப்படியே இரு வகையென பிரித்து பார்க்க முடியாமல் பாடுவது எஸ் பி பி என்ற ஒருவரால் மட்டுமே முடிந்திருக்கிறது. ‘மணியோசை கேட்டு’ (பயணங்கள் முடிவதில்லை) பாடலில் இருமி ‘சரியாக தவறு’ செய்வதென்பது அவ்வளவு சுலபமானதல்ல. பின்னணிபாடகர்களின் ஜாம்பவான்களான கிஷோர்குமாரின் “யூட்லிங்” எப்படியோ,  முஹம்மத்ரஃபியின் எந்த உணர்வையும் சொல்லும்  குரல் எப்படியோ எஸ் பி பியும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர்.  ‘வா வா பக்கம் வா’, “இளமை இதோ இதோ’, ‘எங்கே என் காதலி’ போன்ற பாடல்களில் அவர் வாரியிறைக்கும் ஊஊ-க்களும், ஆஆக்களும்,  ‘ஷீப ராப ஷீப ராப, ரபா ரிபா ரா’க்களும் அவருக்கே உரித்தான தனி பாணி. அவருக்கு முன்னும் பின்னும் ஸ்டைல் பாடல்களை இதுபோல வேறு யாரும் மெருகேற்றி பாடவில்லை. 

இதைப்போல அவர் குரல் மாற்றி பாடிய பாடல்களும் சளைத்தவைகளல்ல. இந்த நேர்முகத்தில் எஸ்பிபி தான் வெவ்வேறு குரல்களில் பாடிய – என் ஜோடி மஞ்சக்குருவி/ மாமன் ஒருநாள் மல்லிகப்பூ கொடுத்தான், ஆடி மாச காத்தடிச்சி போன்ற பாடல்களை  பற்றி சந்தோஷமாகப் பேசுவதை பார்க்கலாம் :

முதலிலே கூறியது போல எஸ்பிபியிடம் நாம் போற்றுதற்குரிய பெரிய விஷயமாய்க் கருதுவது அவரது இந்த தன்னிகரில்லா பன்முகத்தன்மையைத்தான். 

எஸ்பிபி பாடல்களில் லேசாக சிரிப்பதையோ அழுவதையோ பலரும் ரசித்துப் பட்டியலிடுதுண்டு. அதேபோல் அவர் பயங்கர உற்சாகமாகப்பாடி நிறைத்த “இளமை இதோ இதோ”, “மண்ணில் இந்தக் காதலின்றி” போன்ற பாடல்களுக்காகவும் அவர் பெரிதும் அறியப்படுகிறார். ஆனால் பாடலின் சட்டகத்திலிருந்து ஒருத்துளி கூட வெளியே போகாமல் எஸ்பிபி பாடிய “பூவும் தென்றல் காற்றும்”, “கேளடி கண்மணி”, “கல்யாணமாலை”, “துள்ளித் திரிந்ததொரு காலம்”, “நிலவே முகம் காட்டு”, “தேனே செந்தேனே”, “பாடித் திரிந்த எந்தன் தோழி” போன்ற பாடல்களும் ஏராளம்.

எஸ்பிபி எம்எஸ்வி இசையிலும் எஸ் பி பியின் பங்களிப்பு மறக்கமுடியாதது. இளையராஜாவின் வருகை எம்எஸ்வியின் இடத்துக்கு ஒரு சவாலாய் எழுப்பியபோத  எஸ்பிபி பாடிய பாடல்களே அதை கடந்துபோக உதவியிருக்கிறது. ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ (சிம்லா ஸ்பெஷல்), ‘ராகங்கள் பதினாறு’ (தில்லு முள்ளு), ‘வான் நிலா நிலா அல்ல; (பட்டினப் பிரவேசம்), ‘எங்கேயும் எப்போதும்’ (நினைத்தாலே இனிக்கும்), ‘கம்பன் ஏமாந்தான்’ (நிழல் நிஜமாகிறது) போன்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டுக்களாய் அமைந்தன. எம்எஸ்வியுடனே இணைந்து அவர் பாடிய ‘எனக்கொரு காதலி‘ (முத்தான முத்தல்லவோ) எப்போது கேட்டாலும் லயிக்கும் பாடல்.   

மூத்த சகாப்த மேதைகளுக்கு அடுத்து இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து அவர் பாடிய பாடல்கள் பல நெஞ்சைத் தொடுபவை. அவரது முதல் படம் ரோஜாவில் ‘காதல் ரோஜாவே’ என்று துவங்கி, ‘எடுடா அந்த சூரிய மேளம்’ (புதிய மன்னர்கள்), ‘பெண்ணல்ல பெண்ணல்ல’ (உழவன்), , ‘அஞ்சலி அஞ்சலி’ (டூயட்), ‘தொடத் தொட’ (இந்திரா), ‘என் காதலே காதலே‘ (டூயட்), ‘காதலிக்கும் பெண்ணின் கைகள்’ (காதலன், இதில் அவர் நடித்து, நடனமும் ஆடினார்!), ‘மெட்டுப் போடு’ (டூயட்), ‘மின்னலே’ (மே மாதம்), ‘மானூத்து மந்தையிலே’ (கிழக்குச் சீமையிலே), ‘ஒருவன் ஒருவன்’ (முத்து), ‘என்னைக் காணவில்லையே’ (காதல் தேசம்), ‘காதலெனும் தேர்வெழுதி’ (காதலர் தினம்), ‘தங்கத் தாமரை’ (மின்சாரக் கனவு), ‘அழகான ராட்சசியே’ (முதல்வன்) போன்ற பல பாடல்கள் நினைவில் நீங்காதவை. 

இந்தக் கட்டுரை அவர் தமிழில் பாடிய பாடல்கள் பற்றி மட்டும்தான் பேசுகிறது என்றாலும், அவர் இந்தியா முழுவதும் இசை அடையாளமாய் அறியப் படுகிறார் என்பதில் யாருக்கும் மறுப்பு இருக்க முடியாது. சல்மான் கான் உட்பட பாலிவுட் ஹீரோக்களுக்கு அவர் பாடிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் இந்தியில் பாடிய பாடல்களில் அவ்வளவாக அறியப்படாத ‘திக்தானா‘ (ஹம் ஆப்கே ஹைன் கோன்) ஒரு முறை கேட்டுப் பாருங்கள். அவர் எவ்வளவு துல்லியமாக திக்தானாவில் இருவகைப்பட்ட ‘தி’ ஒலியை உச்சரிக்கிறார் என்பது புரிய வரும். திறமைக்கு மொழி ஒரு தடையல்ல என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் தேவையில்லை. 

எல்லா காலகட்டத்திலும் முன்னணி இசையமைப்பாளர்கள்  என்றில்லாமல்  அவ்வப்போது மணியான பாடல்களை மட்டுமே கொடுத்த எந்த ஒரு இசையமைப்பாளரை எடுத்துக் கொண்டால், அதாவது எழுபதுகளில் எம் எஸ் வி , இளையராஜா, அல்லது கே வி மகாதேவன் இசையமைக்காத ஹிட் பாடல்களை எடுத்துக் கொண்டால், அந்த பாடலின் வெற்றிக்கு பின்னால் எஸ் பி பி நிச்சயமாக இருப்பார். எழுபதுகள், எண்பதுகள், தொன்னூறுகள் என இந்த பட்டியல் நீளும். என் நினைவுக்கு வரும் சில மாதிரி பாடல்கள் இவை: 

எழுபதுகள்: எம் பி ஸ்ரீநிவாசன் இசையமைத்த  ‘உன் காதோடு காதொரு செய்தி சொன்னால்’ (நிஜங்கள்) பாடல்; “நான் உன்ன நெனச்சேன்” (கண்ணில் தெரியும் கதைகள்) போன்ற பல  வெற்றி பாடல்கள் கொடுத்த சங்கர் கணேஷ்; தமிழ் திரையிசை வரலாற்றிலேயே நீளமான பல்லவியை கொண்ட, இளையராஜா தன் குருவாக கருதும் வி தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் இசையமைத்த, மதுவந்தி ராகத்தில் அமைந்த ‘நந்தா நீ என் நிலா’ பாடல்;  விஜய பாஸ்கர் இசையமைத்த “என்னடா பொல்லாத வாழ்க்கை” (தப்பு தாளங்கள்); 

எம்பதுகள்: தமிழகத்தின் தலை சிறந்த வயலின் கலைஞரான வி எஸ் நரசிம்மன் இசையமைத்த ‘ஆவாரம் பூவு’ (அச்சமில்லை அச்சமில்லை); கங்கை அமரனின் ‘நீல வான ஓடையில்’ (வாழ்வே மாயம்); விஜய் ஆனந்த்-தின் ‘ஒரு ஜீவன் தான்’ (நான் அடிமை இல்லை), எஸ் ஏ ராஜ்குமார் இசையமைப்பாளராக அறிமுகமான ‘சங்கீத வானில்’ (சின்னப்பூவே மெல்லப்பேசு), மற்றும் அவர் பின்னாளில் இசையமைத்த “ஓ, பொன்மாங்குயில்‘ (மனசுக்குள் மத்தாப்பு), சந்திரபோஸின் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ (அண்ணா நகர் முதல் தெரு); எஸ் பி பியே இசையமைத்து பாடிய ‘சந்தனம்  பூசும்’ (துடிக்கும் கரங்கள்); இந்திப் பிரபலங்களான ஆர் டி பர்மன் இசையமைத்த ‘நதியா நதியா நைல் நதியா’ (பூ மழை பொழியுது) மற்றும் இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-ப்யரேலால் இசையமைத்த ‘பல்லவி இல்லாமல் பாடுகிறேன்‘ (உயிரே உனக்காக), பப்பி லஹரியின் “உன்னை அழைத்தது” (தாய் வீடு);  மற்றொரு இரட்டையர்களான மனோஜ் – க்யான் அமைத்த ‘செந்தூர பூவே இங்கு தென் சிந்த வா வா’ போன்ற பல பாடல்கள் (இந்த பாட்டில் “வெண்பனி போல” என எஸ் பி பி தொடங்கும் இடம் அந்நாளில் மிக பிரபலம்) ; க்யான் வர்மா மட்டும் இசையமைத்த ‘அந்தி நேர தென்றல் காற்று’ (இணைந்த கைகள்)  என கணக்கில்லா பாடல்கள். 

தொண்ணூறுகள்:  

தேவா முன்னணி இசையமைப்பாளராக வளர உதவிய ‘செம்பருத்தி செம்பருத்தி பூவப்போல’ (வசந்த கால பறவை)/ பின்னாளில் ‘சிவப்பு லோலாக்கு’ (காதல் கோட்டை) போன்ற தரமான பாடல்கள், பாரத்வாஜ் இசையமைத்த ‘உன்னை பார்த்த பின்பு நான்‘ (காதல் மன்னன்), ஆதித்யன் இசையமைத்த ‘அழகோவியம் உயிரானதோ’ (ரோஜா மலரே),  மரகத மணி இசையமைத்த “நிவேதா” (நீ பாதி நான் பாதி), எஸ் பி பியின்  சிகரம் படப்பாடல்கள் (வண்ணம் கொண்ட வெண்ணிலவே, இதோ இதோ), பாலா பாரதியின் “தாஜ்மகால் தேவையில்லை” (அமராவதி)  போன்றவை. 

புது நூற்றாண்டில் விஸ்வதுளசி படத்தின் ‘நிழலின் கதை இது கேளடியோ‘ மற்றும் ‘கண்ணம்மா கனவில்லையா’ ஆகிய இரு பாடல்களும்,  இரண்டாயிரத்து பத்துகளில் ‘ராம ராஜ்ஜியம்’ படத்தில் அவர் பாடிய அனைத்து பாடல்களும் அவரின் மார்க்கண்டேய குரலின் அடையாளங்கள்.  

அவரது இழப்பு ஈடு இணை செய்ய முடியாதது என்பதும் எப்போதும் சொல்வதுதான். ஆனால் எஸ்பிபி விஷயத்தில் நவீன இசைக்கு எஸ்பிபியின் பங்களிப்பைப் பார்க்கும்போது அது நியாயமானதுதான். தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் பலவற்றுக்கு தலையாய நடுவராய் அடுத்த தலைமுறையை ஊக்குவித்து வந்தவர், நேரடி மேடை நிகழ்ச்சிகளில் இன்றும் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தவர், ஒலிகூடங்களில் பாடல்களை பதிவுசெய்து வந்தவர்  என அவரின் இசைப்பயணம் தொடர்ந்துகொண்டே இருந்தது. சில மாதங்களுக்கு  முன்தான் அவர் இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் ஹிட்டான ‘நுவ்வு நாதோ எமன்னவோ‘ (டிஸ்கோ ராஜா) பாடியிருந்தார். 1 கோடியே 20 லட்சம் பேர் பார்த்த இந்த பாடல் இன்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கொடி கட்டிப் பறக்கிறது.   கோரானா பாதிப்புகளுக்கு நிவாரண நிதி அளித்த ஒரு சில கலைஞர்களில் அவர் ஒருவர். கோரானாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட/ அரசு ஊழியர்களை ஊக்கப்படுத்த அவர் சில பாடல்களும் பாடினார், அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் பாடிய ‘கொரானா வாரீயர்ஸ்‘ என்ற பாடல். இதே வைரஸ் அவரது உயிரைக் குடித்தது ஒரு மிகப்பெரிய துயரம். இந்த கொரோனா வைரஸ் நம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஈடு செய்யமுடியாத எத்தனையோ உயிரிழப்புகள்! இந்த நிலையிலிருந்து நாம் நிச்சயம் மீண்டு வருவோம். எஸ்பிபி கொடுத்த அழிக்கமுடியாத பொக்கிஷங்கள் அப்போதும் நம்மோடு இருக்கும்.

With Love

Vicky

தொடர்புள்ள பதிவுகள்

4 Replies to “அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!”

  1. விக்கி,

    அருமையான கட்டுரை. சில விஷயங்கள் நேரக்குறைவினால் விட்டிருக்கலாம். அதில் ஒன்று, விதயாசாகருக்கு பாலு பாடிய ஸ்வராபிஷேகம் (தெலுங்கு) படப் பாடல்கள். இளையராஜாவின் ஆரம்ப கால கன்னடப் படங்களுக்கும் ஏராளமாக உதவியவர் பாலு . கீதா படப் பாடல்கள், மற்றும் குலாபி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

    ஒரு கட்டுரையில் எத்தனைதான் அடக்க முடியும் என்று புரிகிறது. குறிப்பாக, இந்தப் பகுதியில் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்:

    “செவ்வியல் இசைக்குரிய அதே வீரியம் அங்கு தேவைப்படுகிறது, ஆனால் அதே சமயம் வேறொருவராக மாறி கூடு பாய்ந்தவர்களின் கதையைச் சொல்லும் சவாலும் சேர்ந்து கொள்கிறது. ஒரு நடிகனைப் போல் நீங்கள் காதல் செய்ய வேண்டும், சல்லாபிக்க வேண்டும், சிரிக்க வேண்டும், அழ வேண்டும், சண்டை போட வேண்டும், வெறுக்க வேண்டும், வேறு எந்த உணர்ச்சியையும் ஒரு பொத்தானை அழுத்தினால் நடப்பதை போல வெளிப்படுத்து வேண்டும். சில சமயம் அந்த உணர்ச்சிகளை மிகைப்படுத்த வேண்டும். சில சமயம் மிக நுட்பமாக குறைக்க வேண்டும். இது அத்தனையையும் கண்ணுக்குத் தெரியாத குரல் என்ற ஒற்றை ஊடகத்தை மட்டுமே கொண்டு செய்ய வேண்டும்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.