1965ல் ஒரு பஸ் பயணம்

பெரிய திருவடி வரதராஜன்

அது நான் அப்பப்போது தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர்  போன்ற இடங்களுக்கு பஸ்ஸில் பயணம் செய்த காலம்.  ஸ்ரீராம் பாப்புலர், லயன் ஆட்டோமொபைல்ஸ் பஸ்கள் நிறைய ஓடிக்கொண்டு இருந்தன. ஞாபகம் கொஞ்சம் மங்கிவிட்டாலும், இவை தவிர வேறு எந்த பஸ்ஸிலும் ஏறியதாக நினைவு இல்லை.  நம் தூத்துக்குடி மக்கான்கள் என் மீது பாயக்கூடும், இந்த பஸ்ஸை மறந்துவிட்டாயே, அதை விட்டுவிட்டாயே என்று. பார்க்கலாம்.   மதுரைப் பக்கம் போனால் ஜெயவிலாஸ், ஷண்முகம் பஸ்கள்.  

தூத்துக்குடியில் இருந்து ஆழ்வார்திருநகரி ஒரு 35.6 கிலோமீட்டர் தூரம் – இப்போ கூகிள் சொல்கிறது.  55 வருஷத்துக்கு முன்னாலும் அதேதான் இருந்திருக்கும்னு ஒரு ஊகம்; இத்தனைக் காலத்தில் வெயில் சூட்டில் கொஞ்சம் நீள, அகல பரிமாணங்கள் மாறியிருந்தால் கூட 35 குத்துமதிப்பா வைத்துக்கொள்ளுங்களேன்.  இந்தக் காலத்து பஸ்களெல்லாம் ஒரு மிதமான வேகத்தில் போனால்கூட 45-50 நிமிடத்தில் எத்திவிடும்.  ஆனால் அப்போதெல்லாம் இந்தப் பயணம் ஒண்ணரை மணிக்குக் குறைந்து முடியாது.  இதற்கு பஸ்ஸின் வேகத்தையோ, டிரைவரின் திறமையையோ  குறை சொல்ல முடியாது. பஸ் ஓடும்போது டிரைவர் அண்ணாச்சி நல்லா அழுத்தி மிதிச்சுத்தான் போவார்.  ஆனால் ஓடிக்கொண்டே இருந்தால்தானே. பஸ் பயணத்தின்போது ஓடும் நேரத்தை விட நிற்கும் நேரம் அதிகமாய் இருந்திருக்குமோன்னு ஒரு சந்தேகம்.  இதற்குச் சில காரணங்கள்.

இப்போ நிலைமை எப்பிடின்னு தெரியலை.  அந்த நாட்களிலே டிரைவரோட வேலை வண்டி ஓட்டுறது மட்டும் இல்லை. அவர் ஒரு ஆடிட்டராகவும் மாத்து ஜோலி பார்ப்பார். கண்டக்டருக்கு ஒரு கவுண்டர்-பாலன்ஸ் மாதிரி. இது ஒரு பிரமாதமான, தனித்துவமான செயல்முறை எல்லாரையும் நேர்மையாய் வைத்திருப்பதற்கு.  தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து, ஏறக்குறைய மூணாம் மைல் பக்கம் முதல் நிர்வாக நிறுத்தம் செய்யப்படும், டிரைவரும் கண்டக்டரும் கலந்து  தீவிரஆலோசனை செய்த பிறகு.  இந்தச் சின்ன தூரத்தில் ஒரு நாலு தடவை அண்ணாச்சிகள், பாட்டையாக்கள், ஆச்சிகள், குஞ்சுகள், குளுவான்கள் பஸ்ஸை இஷ்டப்படி  நட்ட நடு ரோட்டில் நிறுத்தி, தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சாகவசமாக ஏறுவார்கள். அப்படி என்ன அவசரம் என்ற தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற நோக்கைக் கடைப்பிடிப்பவர்கள் என்பதை  எல்லோருக்கும் நிதர்சனமாகத் தெரியப்படுத்தி விடுவார்கள்.   பஸ் நிறுத்தக்கூடிய இடம் என்று ஒன்று இருந்தால்கூட, மற்ற இடங்களில் யாராவது அரைகுறையாக கையை உடம்பு சொறிவதற்காகவோ, சுளுக்கு எடுப்பதற்கோ கொஞ்சம் உயர்த்தினால் போதும் – பஸ் தன்னிச்சையாக  நின்றுவிடும்.  இது வியாபார ரீதியாகவும், ஜனங்களுக்கு சேவை செய்யும் ஆசையினாலும் பஸ் கம்பெனிகளால் முடிவு செய்யப்பட்டு வழக்கமாகிவிட்ட ஒரு விஷயம்.  முதல் நிர்வாக நிறுத்தம் வரும்போது மூணு கிலோமீட்டருக்கு 20 நிமிடம் ஆகியிருக்கும்.

அந்த காலத்துப் பஸ்களில் சீட் அமைப்பு கொஞ்சம் வேற மாதிரி. ஒரு பக்கம் இங்கே டிரைவர் பக்கத்து நுழைவில் இருந்து அங்கே கண்டக்டர் பக்க நுழைவு வரை, ஒரு நீளமான சீட் இருக்கும்.  சங்கப்பலகை என்று பேர் வைத்திருந்தோம் அந்த சீட்டுக்கு. ஏனென்றால் கண்டக்டருக்கு அந்த சீட்டில் எத்தனை பேரை வேண்டுமானாலும் உட்கார வைக்க (பார்க்கப்போனால், அடைக்க) உரிமை உண்டு.  `அண்ணாச்சி, கொஞ்சம் கைய மடக்குங்க; பாட்டையா, கொஞ்சம் காலச் சுருக்குங்க; ஆச்சி, பிள்ளைக்குச் சீட்டே (டிக்கட்டே) எடுக்காம ரெண்டு சீட்டுல (உட்காரும் இடத்தில) ஒக்காத்தி வைக்காதே’ என்ற பணிவும் கண்டிப்பும் கலந்த விண்ணப்பத்துடன் 20 பேர் உட்கார வேண்டிய சீட்டில் 30க்கும் மேலான ஆட்களை அடைக்க முடிந்த திறமை இருந்தால்தான் கண்டக்டர் வேலை கிடைக்கும்.  ஒரு கை மட்டும் உள்ளே போகக்கூடிய இடத்தில ஒரு வளர்த்தியான முழு ஆளை , மிச்சம் மீதியில்லாம  அசால்ட்டா சொருகக்கூடிய கண்டக்டர்கள் நிறைய பேர்.  சில பருத்த ஆசாமிகள் இறங்கும்போது அவர்களுக்கே தெரியாமல் கொஞ்சம் இளைத்து கூடப்  போயிருப்பார்கள் அந்த அடைசலில், ஏதோ ஜூஸ் பிழியப்பட்ட மாதிரி. கூடவே வரும் பெண்டாட்டிகளுக்குக் கூட அடையாளம் தெரியாம போயிடும் சில சமயம்.  இந்த சங்கப்பலகைக்கு எதிர்த்த பக்கம் வழக்கமான முறைல சீட்டுக்கள்.  இதில் பிரச்னை என்னவென்றால், இந்த சங்கப்பலகை சீட்டில் ஆட்கள் முதலில்  உட்கார்ந்துவிட்டால் அப்புறம் ஏறும் பயணிகள் மூட்டைகளுடன் வந்து மற்ற சீட்டுகளில் உட்கார ரொம்பச் சங்கடப்படுவார்கள்.  நடுப்பாதை ரொம்பச் சுருங்கி விடும்.  பயணிகள் ஏறும், இறங்கும் நேரமும் அதிகமாகிவிடும்.  ஆனால் யாருக்கு அந்தக் கவலை? முன்னால  சொன்ன மாதிரி, அத்தன வெரசலா சாமிக்கு    எங்கிட்டு  போகணும்? யதார்த்தமான கேள்வி. 

இந்த நிர்வாக நிறுத்தங்கள் எதற்காக?  டிரைவர் தன்னுடைய ஆடிட்டர் வேலையைச் செய்வது இந்த சமயத்தில்தான். கண்டக்டர் பஸ்ஸில் ஏற்றியிருக்கும் பயணிகள் விவரத்தை ஒரு பார்மில் எழுதி, சரி பார்த்த பின், டிரைவருக்கு உரக்கப் படித்து தெரிவிப்பார்.  ஏறினவர்களுக்கு எல்லாம் டிக்கட் கொடுத்ததின்படி எந்தெந்த ஊரில் எத்தனை பேர் இறங்குவார்கள், மொத்தம் எத்தனை பயணிகள் என்பது உட்பட சகல  விவரங்களும் டிரைவருக்கும் தெரியப்படுத்துவார்.  இதற்கு அப்புறம் எங்கே ஆட்கள் ஏறினாலும், இறங்கினாலும், டிரைவர் கண்டக்டர் இருவரும் தங்களுடைய பார்மில் எண்ணிக்கையை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள்.  உதாரணத்துக்கு, வாகைக்குளத்தில் 4 பேர் இறங்கி, 5 பேர் பேட்மாநகரம் போக ஏறினார்கள் என்றால், கண்டக்டர் தன் கம்பீரமான குரலில் `வாகைக்குளம் 4 எறக்கம், 5 ஏத்தம் பேட்மாநகரம், 45, போட்டு ரைட்’  என சுருக்கமாக அப்போதைய கணக்கை டிரைவருக்கு சொல்லி விடுவார். டிரைவர் தன்னுடைய ஏட்டில் பதிவு செய்யும் கணக்கில் ஏதாவது தகராறு  கண்டுபிடித்தால் , இரண்டு பேரோட கணக்கும் சரியாகும் வரை எல்லோரும் பொறுத்திருக்க வேண்டியதுதான்.  ஒண்ணாம்  கிளாஸ் ரெகன்சிலியேஷன் சிஸ்டம்.  என்ன, இந்த கணக்கு வழக்கு விவகாரத்தால் ஒரு 15-20 நிமிடம் பயணம் நீட்டமாகும்.  பயண முடிவில் இந்த சரி பார்க்கப்பட்டக்  கணக்குப்படி வசூல் வந்திருக்க வேண்டும் என்பதே நோக்கம். நடுவில் செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்து தொலைத்து, கணக்கும் தேறவில்லை என்றால்  நம் தலைவிதி.  அந்த ரம்மியமான பயணத்தைக் கால் மணி நேரம் அதிகமாக அனுபவிக்க வேண்டியதுதான், சிவனே என்று, அந்தப் பூசல் தீரும் வரை. 

பஸ்ஸில் நிச்சயமாக ஒன்று இரண்டு சுவாரஸ்யமான நபர்கள் கிடைப்பார்கள்.  அநேகமாக எல்லாப் பயணத்திலும் காதில் பாம்படம் அணிந்த பெண்கள் சில பேர் இருப்பார்கள். அவர்கள் பக்கத்தில் நகர்ப்புற ஆசாமிகள் உட்கார்ந்திருந்தால், அதுவும் முன்னப் பின்ன பாம்படம் பார்க்காதவர்கள் இருந்தால், நமக்கு கொஞ்சம் பொழுது போகும். காதில் பெரிய ஓட்டையும், தோள் வரை அனாயாசமாகத் தொங்கும் பாம்படமும் நிச்சயமாக ஒரு உரையாடல் ஆரம்பிக்கும் பாய்ண்ட்.  `இவ்வளோ கனமா காதில போட்டிருக்கீங்களே, வலிக்கல?’ என்று நகர்ப்புற பெண்மணி கேட்க, `அடி ஆத்தி, இது என்ன கனம், இதை விட பெரிசால்ல போட்டிருந்தேன் இதுக்கு முன்ன’ ன்னு ஆச்சி அசத்த, `தொட்டுப் பாக்கலாமா’ன்னு பொண்ணு கேக்க, `அட பாரு புள்ள’ன்னு காவிப் பல்லு தெரிய வெகுளியான சிரிப்போடு ஆச்சி காட்ட ஒரு நல்ல சீன் பார்க்கலாம்.  `இது எல்லாம் தங்கமா’ மலைப்போட கேள்வி.  `தங்கமா இருந்தா இதுக்குள்ள வித்து சாப்பிட்டு இருக்க மாட்டமா?’ எகத்தாளமான பதில்.  இன்னிக்கு ஆச்சுன்னா  ஒரு  செல்ஃபி நிச்சயம்.

இதோ சிரிவண்டம் பாலம் வந்தாச்சு. வழக்கம்போல தண்ணியில்லாத தாமிரபரணி மண் கீழ.  பத்து நிமிஷத்தில ஆழ்வார்திருநகரி கோவில் பக்க நிறுத்தம். எறங்கவேண்டியதுதான். `3 எறக்கம்’ கண்டக்டர் கூவ, பஸ் தன் வழில உடன்குடியைப் பாக்கப்போச்சு.  இத்தனை வருடத்துக்கு அப்புறமும் நினைவில் நிற்கும் பயணம்.    

***

One Reply to “1965ல் ஒரு பஸ் பயணம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.