வ. அதியமான் கவிதைகள்

புறப்பாடு

தன் மடியெழுந்து
பறந்துவிட்ட
சிறு குருவியை
தொட்டுத் தொடர
சிறகு விரிக்க தயாராகிறது
அந்த கரும்பாறை

இன்னும்
ஏன் இந்த சிறகுகள்
விரியவில்லை?
திகைத்துக் கொதிக்கிறது
இல்லாத சிறகுகளை
விரிக்கத் துடிக்கிறது

எப்போதும் அதற்குச்
சிறகுகள் ஏதும்
வேண்டியதில்லை
இப்போது
பட்டுக் குருவியை
தொட்டுத் தொடர
பறந்தாக வேண்டும்
பறப்பதற்கு சிறகு வேண்டும்
அவ்வளவே

தன்னுள்
எரிந்தெழுந்த
ஏதோ ஒன்று
இளகி உருகுவதைத்
தானறியாது
பறந்துபோன குருவியின்
திசையை வெறித்து
விழிநீர் மல்க குமைகிறது

கனிந்த கரும்பாறை
கரைந்துருகிய விழிநீர்
தரை தொடும் முன்னமே
தன்னில் முளைத்துவிட்ட
சிறகினை
வியப்பில்லாது விரித்து
வானில் எழுகிறது
நூறு நூறு குருவிகளாய்


ஆயுதம்

இதைவிட
மிக கச்சிதமான ஆயுதம்
தங்களுக்கு வேறேதும்
கிடைக்கப் போவதில்லை
என்பதை

என்றேனும்
ஓர் நாள்
உறுதியாக அவர்கள்
கண்டு கொள்ளவே
செய்கிறார்கள்

ஐயிரு நகங்களிலும்
விழி முளைத்த
கைகளில்
தேடிக் கண்டெடுத்துவிட்ட பிறகு
இவ்வுலகை
ஓயாது கொய்து முடிக்கும்
கொலை ஆயுதம் தான்
அது

அதன் பிறகு
ஒருபோதும் தாழ்வதில்லை
அவர்களின் கொலைவாள்
ஒருபோதும் வீழ்வதில்லை
அவர்களின் மணிமுடி
ஒருபோதும் காய்வதில்லை
அவர்களின் குருதிக் களம்

எட்டாக் கனியாயிருந்த
அத்தனை வெற்றியும்
மண்டியிட்டுத்
தன்னை அருந்தத் தருகிறது
அவர்களுக்கு

நம் விழிகள்
மட்டுமல்ல
வியப்பில்
மாய்ந்து போனது
அவர்களின்
விழிகளும் கூடத்தான்

ஒளியைப்
போலவே தான்
இருக்கிறது
இருளும்
இல்லை இல்லை
ஒளியே தான்
இருளும்.


பல்லிக் குஞ்சு

ஓயாது
என் பெயர் சொல்லி அழைக்கிறது
இன்னும்
என்னால் பெயர் போடப்படாத
என் வீட்டுச்சுவர்
பல்லிக்குஞ்சு

அதன் பாட்டனின்
பாட்டன்கள் வாய் வழியே
என் கதை முழுவதையும்
அறிந்து கொண்டிருப்பதாக
உரத்துச் சொல்லி
என் நேர் நிற்கிறது

என் வீட்டுச் சுவர்கள்
மட்டுமே அறிந்திருந்த
அக்கதைகளை
இன்று இந்த பல்லிக்குஞ்சும்
அறிந்திருப்பது
ஒரு வேளை உண்மையாகவும்
இருக்கலாம்

என் வீட்டில்
எனைக் கண்டு அஞ்சும்
ஒரே ஜீவன் இது மட்டும் தான்
என்கிற என் பேராசையில்
தீயள்ளிப் போட்டுப் பொசுக்கிக்
கொக்கரிக்கிறது

என் வீட்டுக் கூரையை
வானமாக்கி
அதன் கீழே
எனை முழுதாய்
அரசாள்கிறது

மழுங்காது கூர்மின்னும்
புத்தம் புதிய
என் படைக்கலங்களையும்
கொஞ்சம் மழுங்கி
பழையதாகிவிட்ட
என்னையும்
ஒருசேர திரும்ப திரும்ப பார்த்து
‘த்சோ த்சோ த்சோ
ஐயோ பாவம்’
என மெல்ல சிரிக்கிறது
இந்த பல்லிக்குஞ்சு

விரைவில்
இதற்கும் ஒரு பெயரைப்
போட்டுவிட வேண்டியதுதான்
என்ன செய்வது
வேறு வழி
இல்லையே


காம்புதிர் கனி

இத்தனை விரைவாகவா?
நம்ப முடியவில்லை எனக்கு
இன்னமும் கூட
முற்றிலுமாய்
உலர்ந்து போய்விடவில்லை
உங்களின்
அத்தனை ஈரங்களும்

நேற்றுவரை
எங்களோடு
எங்களைப் போலவே தானே
இந்த உலகில்
நீங்களும்
நீந்திக் கொண்டிருந்தீர்கள்

பிறகெப்படி
இன்று
நடுகல் ஊன்றி
நட்டவுடன்
மஞ்சள் குங்குமமும்
மாலையும் சூடமும் கொண்டு
தெய்வமாகிப் போனீர்கள்?

இனி
காலமும் தூரமும்
உங்கள் கால்களை
தளையிடாதா?
பசியும் ருசியும்
உங்கள் பொழுதுகளை
சிறையிடதா?
ஊரும் உலகமும்
உங்கள் அடிமடியில்
கை வைக்காதா?

இந்நொடியே
சிறகு முளைத்து
வான் விரிய
நீங்கள்
உங்கள் கிளைகளில்
எந்த கனிகளை
காம்புதிர்த்தீர்கள்?

***

நிகழ்தகவு

நெளிவுகளில்
எல்லாம்
நிகழ்கிறது
ஒரு நாகம்

துள்ளலில்
எல்லாம்
நிகழ்கிறது
ஒரு மீன்குஞ்சு

எழுவதில்
எல்லாம்
நிகழ்கிறது
ஒரு பறவை

விரிவதில்
எல்லாம்
நிகழ்கிறது
ஒரு மலர்

வழிவதில்
எல்லாம்
நிகழ்கிறது
ஒரு அருவி

அமர்வதில்
எல்லாம்
நிகழ்கிறது
ஒரு குன்று

உழல்வதில்
எல்லாம்
நிகழ்கிறது
ஒரு வீடு

நெளிந்து துள்ளி
எழுந்து விரிந்து வழிந்து
அமர்ந்து உழன்று
இப்படியாகத்தான்
இங்கே
நிகழ்ந்து முடிக்கிறோம்
நீயும் நானும்

***

நகுமோமு கனலேனி

கந்தல் மணக்கும்
அரையாடை
காய்த்து தொங்கும்
சடைத் திரிகள்
மண் பொடித்த தேகம்
சுடரெழுந்த கருவிழிகள்
பால் பொங்கும் புன்னகை
ஒட்டாது உதிரும் சொற்களில்
ரீங்கரிக்கும் கிள்ளை

எவர் விழியும்
முகம் தொடவில்லை
எவர் கரமும்
நகம் படவில்லை
எவர் குரலும்
வெளி எழவில்லை
எவர் நா நுனியும்
எச்சில் ஊறவில்லை
எவர் குறியும்
விறைத்தெழவும் இல்லை

அதனால் என்ன?

இடது கை சுட்டுவிரலால்
இவ்வுலகினை
திசைகள் அதிர அதிர
சுண்டியெறிந்த
அந்தத் தீரா திண்மையின்
அதே பொற்திமிர்
இன்னும்
முழுதாய் வற்றிப்போகாத
செம்முலைகளில்
அலையலையாய்
மிதந்து நடனமிட

பழைய பஸ்டாண்டில்
அமர்ந்து சிரித்து
உண்டு உறங்கியெழுந்து
துளி பிசகாது
ஸ்ருதி சுத்தமாய்
மாமத யானையின்
தாள கதியில்
சுற்றி சுற்றி
திரிகிறது
ஒரு
நகுமோமு கனலேனி.


2 Replies to “வ. அதியமான் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.