வலி

பிரவின் குமார்

வலி

“இது கடைசி முயற்சியா இருக்கட்டும் ஆரத்யா… இந்த ஒரு தடவ மட்டும் என் கூட U.S.க்கு வா… எல்லா ஏற்பாட்டையும் நானே செய்யுறேன்”

“இனிமேல் எந்த ட்ரீட்மெண்ட்டும் எடுக்க கூடாதுனு முடிவு எடுத்துருக்கேன் டாக்டர். நான் எங்கேயும் வர விரும்பல” 

“Listen ஆரத்யா… உனக்கு CIPA கண்டிஷன் இருக்க மாதிரி உன் கேஸ்க்கு நேரெதிரா Hyperalgesia கண்டிஷனால பாதிக்கப்படிருக்க நோயாளிகளும் இருக்காங்க. அவங்களோட Sodium Ion Channel பிளாக் பண்ணி அந்த நோயாளிகளோடு Endorphinsயை அதிகப்படுத்துறதுக்கான ஆராய்ச்சிய வெளிநாட்டல வெற்றிகரமா பண்ணிட்டு இருக்காங்க. இந்த ஆராய்ச்சி மூலமா உன்னோட Endorphinsயை குறைக்குறதுக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. அதனால தான் ட்ரீட்மெண்ட்காக U.S. வானு கூப்பிடுறேன்” 

“டாக்டர் ப்ளீஸ்… என்ன பத்தி நீங்க கொடுத்த இன்டர்வியூனால மனதளவுல நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன். இனிமேலும் என்ன தொல்ல பண்ணாதீங்க. நான் உங்கள பார்க்க வரது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். நான் கிளம்புறேன்..”

டாக்டர் எவ்வளவு எடுத்து சொல்லியும் ஆரத்யா அதை கேட்கும் மனநிலையில் இல்லை. அவ்வறையில் இருந்து கிளம்பத் தயாரானாள். இருபத்து நான்கு வருடமாக தொடர்ந்துக்கொண்டிருந்த சிகிச்சையின் பலனாக அவளுக்கு கிடைத்ததென்னமோ விரக்தியும், மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையும் தான். இனிமேலும் மருத்துவத்தை நம்பிக்கொண்டிருக்க அவள் விரும்பவில்லை. வாழ்வில் ஒரு சிலரின் முயற்சியும் காத்திருப்பும் மட்டுமே அவர்களின் தேவையை நிவர்த்தி செய்கிறது. ஆரத்யாவின் முயற்சியும் காத்திருப்பும் அது போன்ற சந்தர்ப்பத்தை இதுவரை அவளுக்கு அமைத்துக் கொடுக்கவில்லை. அந்த மருத்துவமனையைவிட்டு வெளியே வந்ததும் நீண்ட வருட ஆராய்ச்சி கூடத்திலிருந்து தன்னை தானே விடுவித்துக்கொண்டது போல் உணர்ந்தாள். மருத்துவரை தேடி அலைந்துகொண்டிருக்கும் வாழ்வின் கடைசி நிமிடங்கள் இதுவாகவே இருக்க வேண்டுமென்று உள்மனதுக்குள் தீர்மானம் கொண்டாள்.

அவளை பரிசோதித்து வந்த மருத்துவர்கள் இயலாமையால் ஒருவரை தொடர்ந்து ஒருவர் நழுவிக்கொண்டிருந்தார்களே தவிர எவர் ஒருவராலும் அவளைக் குணப்படுத்த இயலவில்லை. ஆரத்யா தன் வாழ்வில் சந்தித்த மருத்துவர்களை கணக்கிடுவதென்பது கூட அவ்வளவு சுலபத்தில் இயலாத காரியம் தான். இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவரை சென்று பார், அந்த ஊரில் இருக்கும் மருத்துவரை சென்று பார் என்று மருத்துவர்களாலேயே பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர்களை தேடித் தான் அவளது பெரும்பாலான நாட்கள் பயணப்பட்டது. கையில் தன் மருத்துவ கோப்புடன் ஏதேதோ முகவரிக்கு சென்று புதிய புதிய மருத்துவர்களை சந்திப்பதையே தன் வாழ்வின் நீட்சியாக தொடர்ந்துகொண்டிருந்தாள். மருத்துவர்களின் ஆலோசனைப்படி பல சிகிச்சைகளை மேற்கொண்டும் கூட எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததை நினைக்கும் போது அவளிடத்தில் இருந்த நம்பிக்கையும் பொறுமையும் முழுவதுமாக அவளிடமிருந்து விலகிச் சென்றது. 

இரயில் நிலையத்தை நோக்கி நடந்தவள் எதிரில் தென்படும் மனிதர்களை நிமிர்ந்து பார்க்க விருப்பமற்று கீழே குனிந்தபடி சென்றாள். வெளியே செல்லும் நேரங்களில் மட்டும் அவள் நடையின் வேகம் தனிச்சையாக அதிகரிக்கவே செய்தது. சமீபத்தில் அவளைப் பற்றி வெளிவந்த நாளிதழ்களிலிருந்தும் தொலைக்காட்சி செய்திகளிலிருந்தும் இதுவரை அவளைப் பற்றி அறிந்திராதவர்கள் பலர் மேலும் அறிந்துகொண்டார்கள். மருத்துவ மாணவர்களோ அல்லது மருத்துவ துறையை சார்ந்தவர்களோ எங்கேனும் அவளை அடையாளம்கொள்ள நேர்ந்தால் நெருங்கி வந்து பேசுவதற்கு யாரும் தயங்கியதில்லை. “நியூஸ்ல காட்டுனாங்களே அது நீங்க தானே” “எனக்கு ஒரு சின்ன சந்தேகம்… கேட்கலாமா…? “இது ஒரு வியாதினு நினைக்குறீங்களா இல்ல வரமா பார்க்குறீங்களா…?” இப்படி அவள் எதிர்கொள்ளும் மனிதர்களிடமிருந்து கேள்விகள் பல அவள் நிலை அறியாது துரத்திக்கொண்டிருந்தன. ஆர்வத்தினால் இவளிடத்தில் அவர்கள் கேட்க நினைக்கும் கேள்விகளும், விருப்பமற்று அவர்களிடத்தில் இவள் சொல்ல நினைக்கும் பதில்களும் எப்போதும் எந்நேரமும் தயாராகவே இருந்தன. 

உலகம் அறியப்படாத வரை எந்த ஒரு நோயும் இங்கு அதிசயம் தான்… அந்த நோயை தாங்கும் மனிதர்களும் அதிசயம் தான். ஆரத்யா இவ்வுலகிலுள்ள மனிதர்களுக்கு அதிசயமாகிப் போனாள். மூன்று வருடங்களாக  ஆரத்யாவை பரிசோத்தித்து வந்த டாக்டர் நரசிம்மன் மருத்துவ துறையில் தான் பெரிதாக சாதிக்கப்போவதாக நினைத்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் ஆரத்யாவின் புகைப்படத்தை காட்டி  அவளைப் பற்றிய செய்தியை மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கும் ஊடகங்களுக்கு வெளியிட்டார். ஆரத்யாவின் நிலையை அறிந்த பத்திரிக்கையாளர்களும் மருத்துவர்களும் ஆரத்யாவின் வருகையை எதிர்பார்த்தபடி எப்போதும் அவள் வீட்டு வாசலில் காத்திருக்கத் துடங்கினார்கள். மைக்கையும் பேனாவையும் அலகுகளாக கொண்ட காக்கைகள் பல அவள் உடலை ஆராய்ச்சி செய்ய தயார் நிலையில் இருந்தன. வெளிச்சத்தை காண ஏங்கும் மனதிற்கு இருளின் இருப்பிடமே பாதுகாப்பு என்று தன் அறையில் தன்னை தானே தற்காத்துக்கொண்டாள். இந்த உலகம் தன்னை மறக்கும் வரை இவ்வுலகில் இருந்து தன்னை மறைத்துக்கொள்வதே உசிதமானது என்று அவளுக்கு தோன்றியது. கடைசியாக டாக்டரை சந்தித்து தனக்கு இனி மருத்துவத்தில் ஆர்வமில்லை என்றும், தான் சம்மந்தப்பட்ட விவரங்களை வெளியில் பகிரக்கூடாது என்றும், யாரும் இனி என்னை தேடி வர வேண்டாமென்றும் வேண்டிக்கொள்ளவே டாக்டர் நரசிம்மனை பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.    

இரயிலுக்காக அடையார் இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தாள். அவளை கடந்துசெல்லும் பயணிகளின் நடமாட்டம் மட்டும் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது. நீண்ட வீதியிற்கு நடுவில் ஒப்பணையாக கொண்ட வெள்ளை பூக்களை போல் எதிர் பிளாட்பாரத்தில் ஒரு தம்பதியினர் தன் பெண் குழந்தையுடன் அமர்ந்திருப்பத்தை பார்த்தாள். அம்மழலையின் முகம் ஆரத்யாவின்  கவனம் ஈர்த்தது.  அவர்கள் அந்த குழந்தையை கொஞ்சிக்கொண்டிருப்பதையே விழி அகலாது பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த குழந்தையின் அப்பா தன் மனைவியை முதுகில் பலமாக அடிப்பது போல் பாவனை காட்ட அந்தப் பெண் புடவை முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு வலியால் துடிப்பது போல் தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள்.  குழந்தை தன் அம்மாவை காப்பாற்ற இருவருக்கிடையே புகுந்து அப்பாவை தடுத்தது. வலியால் அவதிப்படும் தன் அம்மாவின் வலியை நினைத்து அந்தக் குழந்தையும் அழ ஆரம்பித்தது. முகத்தை மறைத்துக்கொண்டு அழும் தன் அம்மாவின் முகத்தைக் காண அவளின் இரண்டு கைகளையும் முகத்திலிருந்து விடுவிக்க பிராயத்தனப்பட்டுக்கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு அம்மா விடுக்கென்று முகத்திலிருந்து கையை எடுத்து புன்னகை தவழ குழந்தையை பார்த்தாள். குழந்தை தன் கண்ணீரை மறந்து அம்மாவின் முகத்தில் பூத்த சிரிப்பை பார்த்ததும் துள்ளி குதித்து சிரித்துக்கொண்டே தன் அம்மாவை அரவணைத்துக்கொண்டது. அம்மாவின் வலியையும் அழுகையையும் நிஜமென கருதி உள்ளுக்குள்ள அவதிப்பட்டுக்கொண்டிருந்த அக்குழந்தையின் வலியை ஆரத்யாவால் உணரமுடிந்தது. அம்மாவின் அழுகை முகம் மறைந்து சிரிப்பு முகத்தை பார்த்ததும் நொடிப்பொழுதில் தன் இயல்புக்கு திரும்பிய அக்குழந்தையின் குணம் சிறுவயதில் தனக்கு எப்போதாவது நேர்ந்திருக்கிறதா என்று யோசித்தாள். சிறு வயதில் வலியை உணர தன்னை தானே பரிசோதனைக்கு உட்படுத்தி அவளாகவே ஏற்படுத்திக்கொண்ட காயங்களின் வடுக்கள் அவள் உடல் முழுவதும் நிரம்பி இருந்தன. அவ்வுடுக்கள் பிறரின் வலியை உணர்ந்து அவர்களுக்காக பரிதவிக்கும் தருணம் எப்போதும் நிகழ்ந்ததில்லை என்று மட்டும் அவளுக்குள் சாட்சியம் சொல்லியது. உதடுகள் மெல்ல விரிய அந்த பெண்ணையும் குழந்தையும் பார்த்து சிரித்தாள். அச்சிரிப்பில் பிறர் காண இயலாத, உணராத வலி ஒன்று அவளிடத்தில் மட்டும் பல வருடங்களாக நிலைத்துக்கொண்டிருந்தது.

இரயில் வந்ததும் பெண்கள் மட்டும் ஏறும் பெட்டியில் ஏறிக்கொண்டாள். சுற்றி இருப்பவர்களின் கண்கள் அவள் மீதே பதிந்திருப்பது போல் தோன்றியது. இருக்கைகள் இருந்தும் அமர பிடிக்காமல் கதவின் அருகிலேயே நின்றுகொண்டு வந்தாள். வலது பக்கமாக நெற்றியிலிருந்து நீண்டிருக்கும் அவளது முடி கற்றைகளை கதவின் வழியே வந்த காற்று இழுத்துச் செல்ல முனைந்தது. காதோரம் சொருகிக்கொண்டும் பின் பக்கமாக படர விட்டும் பார்வை விலகாமல் பின் நோக்கி நகரும் கட்டிடங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். கைபையில் அடைப்பட்டிருந்த கைப்பேசி சிணுங்கியது. 

அப்பாவிடமிருந்து வர இருக்கும் வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்பதை ஆரத்யா முன்னமே அறிந்திருந்தாள். அவள் ஆறுதல் கொள்ளமுடியாத ஆறுதல் வார்த்தைகள் தான் எப்போதும் அவரிடமிருந்து வந்துக்கொண்டிருக்கும். அழைப்பை எடுக்கலாமா? வேண்டாமா என்று நீண்ட நேர யோசனைக்கு பின் பேசத் துணிந்தாள்.

“என்னடாமா… பேசஸ்புக், வாட்ஸ்சப்னு உன்னோட விஷயம் தான் எல்லா இடத்திலயும் பார்வார்ட் ஆகிட்டு இருக்கு. அப்பா ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருக்கேன்ல. நீ ஏன் இது ஒரு நோயா பாக்குற. இது சாதாரணமா மனுஷன் உடம்புல ஏற்படக்கூடிய ஒரு Physical Changes… அவ்ளோதான்”

ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று இரயில் பயணிகளை ஏற்றியும் இறக்கியும் சென்றுகொண்டிருந்தது. ஆரத்யா எந்த ஒரு பதிலும் சொல்லாமல் செல்போனை காதில் வைத்துக்கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.

“ஹலோ ஆரத்யா… உன்கிட்டா தான்டா பேசுறேன். ஏன் அமைதியா இருக்க…? நீ அம்மாவ கூட்டிட்டு பூனே வந்துடு சென்னை வேண்டாம். நான் உன்ன பார்த்துக்குறேன்”

“அவசியம் இல்லப்பா… இனிமேல் இது சம்மந்தமா நான் எந்த ட்ரீட்மெண்ட்டும் இனி எடுக்க போறது இல்ல… கொஞ்ச நாள் போகட்டும் எல்லாம் சரி ஆய்டும். நான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன். அப்புறம் பேசுறேன். பாய்”

எதிர் முனையில் “ஹலோ ஆரத்யா வெய்ட்…” என்று அவர் கத்திக்கொண்டிருக்கும் சத்தம் மட்டும் மிருதுவாக கேட்டது. ஆரத்யா அவரின் குரலை பொருட்படுத்த மனமில்லாமல் அழைப்பை துண்டித்தாள்.

ஆரத்யாவின் அப்பா விஜயன் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மாற்றல் காரணமாக மூன்று வருடம் பூனாவில் தங்கும்படி நேர்ந்த்தாலும் கூட ஆரத்யாவின் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது சென்னைக்கும் பூனாவிற்கும் திரிந்துகொண்டே இருப்பார். கொஞ்ச மாதங்களாக ஆரத்யா எந்த விவரமும் தன் அப்பாவிடம் சொல்லாமல் தனித்து செயல்பட்டது அவருக்கு மனதிற்குள் ஓர் பயத்தை உண்டு பண்ணியது. ஆரத்யாவிற்கு தெரியாமல் அவளின் நிலை குறித்து தன் மனைவியிடம், அவள் சந்திக்கும் மருத்துவரிடமும் அவ்வப்போது விசாரித்துக்கொண்டே இருந்தார்.

ஆரத்ய அப்பாவின் அழைப்பை தொடர்ந்து சுதனின் அழைப்பும் வந்தது. தன் நிலையை அறிந்து தான் சுதன் அவள் எண்ணிற்கு அழைக்கிறான் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது. ஒரே நேரத்தில் சிவப்பின் திசையை நோக்கி நகர்த்தவும் பச்சையின் திசையை நோக்கி நகர்த்தவும் அவளது விரல் நடுக்கம் கொண்டது. இத்தனை வருடங்களாக மறைத்து வந்த விஷயத்தை எப்படி அவனிடம் எடுத்துரைப்பது என்று தெரியாமல் தொடுதிரையில் பிரதிபலிக்கும் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். நீண்ட நேரமாக அவளது செல்போன் அலறிக்கொண்டும் அடங்குவதுமாக தொடர்ந்துக்கொண்டிருந்தது. பொறுமை இழந்தவள் சட்டென்று தன் செல்போனை சுவிட்ச் ஃஆப் செய்து ஹேன்ட் பேக்கிற்குள் திணித்தாள். 

ஆரத்யா தன் வீட்டை வந்தடைந்ததும் விறுவிறுவென்று தன் அறைக்குச் சென்றாள். “என்ன ஆரத்யா டாக்டர் என்ன சொன்னாரு…? வெளில ஒன்னும் பிரச்சன இல்லையே…” அவளை பின்தொடரும் குரலைக் கூட அவள் கண்டுகொள்ளவில்லை. கோவத்தில் தன் கை பையை வீசி எறிந்துவிட்டு படுக்கையின் மீது அமர்ந்தாள். ஏதேதோ வண்ணங்களிலான மாத்திரைகள், மருத்துவ சீட்டுகள், மருத்துவ குறிப்புகள், புத்தகங்கள் என்று அவள் அறை முழுவதும் மருத்துவத்தால் நிர்மூலமாகி இருந்தன.    

ஆரத்யாவின் அம்மாவால் கைகள் இரண்டையும் பிசைந்துகொண்டு ஆரத்யாவின் பதிலுக்காக காத்திருக்க மட்டுமே முடிந்தது. ஆரத்தயா எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்து மீண்டும் அவளாகவே தொடர்ந்தாள்.

“என்னமா ஆச்சு ஒன்னும் பிரச்சன இல்லையே”

கோவத்தில் தன் கை பையில் இருந்து செல்போனை எடுத்தவள் அதை படுக்கையின் மீதே வீசி எறிந்தாள்.

“எனுக்கும் தான்மா ஏதேதோ நம்பர்ல இருந்து போன் வந்துட்டு இருக்கு… எந்த கால் அட்டண்ட் பண்ணாலும் உங்கள பார்க்கணும்… பேசணும்னு… தான் கேட்குறாங்க. காலைல இருந்து 36 மிஸ்டு கால். சுதனும் கால் பண்ணான் அவனுக்கும் விஷயம் தெரிஞ்சு இருக்கும்னு நினைக்குறேன்”

கால்கள் இரண்டையும் மடித்துக்கொண்டு அதன் மீது தலை வைத்து பேச விருப்பமற்றவளாக கீழே குனிந்தபடி இருந்தாள். கோவத்தில் இருந்து தன்னை தானே ஆசுவப்படுத்திக்கொள்ள அவளுக்கு போதிய நேரமும் தனிமையும் தேவைப்பட்டது. கடக்கும் நொடிகள் ஒவ்வொன்றும் ஒரு யுகமென கருதும் இவ்வுலகிற்கு எப்பொழுதும் ஏதாவது செய்தி தேவைப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. கண்கள் அகல விரிய அதிசயமாக பார்க்கும் எந்த ஒரு செய்திக்கு பின்னும் பாதிக்கப்பட்டவனின் வலி மறைந்திருப்பதை இவ்வூடகம் அறிந்திருக்கவில்லை. வலியும் இங்கு வணிகமயமாக்கப்படும் போது அதை கண்டடைவதற்கான காரணிகளைத் தேடி தான் பத்திரிக்கையாளர்களும் அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். எதன் வடிவிலாவது ஆரத்யா பற்றிய செய்தியை இவ்வுலகிற்கு கொடுக்க வேண்டும். அவள் உடலில் இருக்கும் பிரச்சனையை சரி செய்வதற்கான தீர்வை எவர் ஒருவராலும் கொடுக்க முடியாத போதிலும் அவளுக்குள் இருக்கும் பிரச்சனையை பரப்புரை செய்ய வேண்டும் எனும் எண்ணம் தான் அவளை அணுக முயற்சிக்கும் ஒவ்வொரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது. தான் அனுபவித்துக்கொண்டிருக்கும் ரணம், பொழுதுபோக்கு செய்திகளாக இவ்வுலகில் வலம் வர அவள் விரும்பவில்லை. அதனாலேயே ஊடக வெளிச்சம் தன் மேல் படராமல் இருக்க இரண்டு நாட்களாக போராடிக்கொண்டிருந்தாள். அவள் படும் அவஸ்த்தையை அவள் அம்மாவால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆரத்யாவை அரவணைத்துக்கொண்டு அவள் தலையை கோதிக்கொண்டிருந்தாள்.

“இந்த உலகம் சாதாரண விஷயத்தையும் பெருசா பார்க்கும்… ரொம்ப பெரிய விஷயத்தையும் சாதாரணமா பார்க்கும். இப்போ உன்னோட நிலைமையும் அது மாதிரி தான் ஆரத்யா. எங்களுக்கு நீ ஒரே பொண்ணு. இப்போனாச்சு சுதன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிடு. நீயும் கல்யாணம் குழந்தைனு அடுத்த வாழ்க்கைக்கு நகர்ந்து போக வேணாமா. இன்னும் எத்தன வருஷத்துக்கு இத பத்தியே யோசிச்சுட்டு இருப்ப”

ஆரத்யா தன் கண்ணீரை அடக்க முடியாமல் சிணுங்கிக்கொண்டு அழத் துடங்கினாள். அவள் தோள்களை வருடிக்கொண்டே…

“சரி… எத பத்தியும் யோசிக்காம கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கு. நான் சூப்பர் மார்கெட் போய்ட்டு வந்துடுறேன்”  

அவளை தனிமையில் விடுத்து அவ்வறையில் இருந்து ஆரத்யாவின் அம்மா திரும்பினாள்.

எல்லாம் மறந்த ஓர் விடுதலை உணர்வை எப்போதும் அவள் குளியலறையில் தான் அனுபவிக்க நேரும். குளியலறைக்கு சென்று தன் ஆடைகளை கலைத்து ஷவரில் குளிக்க தயாரானாள். கண்களை மூடி மழைத்தாரையில் நனைந்துகொண்டிருந்தவள் சட்டென்று நீரால் நனைந்துகொண்டிருக்கும் தன் உடலை கவனித்தாள். சிகிச்சையின் அடையாளங்கள், அவளுக்கு அவளே முயற்சித்த பரிசோதனைகள் என்று உடம்பு முழுவதும் தழும்புகளும் கீறலுமாக காட்சியளித்தது. ஆராய்சிக்காக வலது தொடையில் இருந்து தசையை பிரித்தெடுத்த காயத்தின் அடையாளம், ஐயர்ன் பாக்ஸ் சூட்டைக் கொண்டு தன் மார்புகளை சிதைத்த காயத்தின் அடையாளம், தனது வலது தோள்பட்டைக்கு கீழ் கடித்துகொண்ட பற்களின் அடையாளம், தனது நகங்களினால் வயிற்றையும் இடையையும் கீறிக்கொண்ட அடையாளம், கத்தியை கொண்டு தன் இரு கைகளையும் அறுத்துக்கொண்ட காயத்தின் அடையாளம் இப்படி சிறுவயதிலிருந்து ஏற்பட்ட எண்ணற்ற காயத்தின் தழும்புகள் சேற்றில் பதிந்து காய்ந்து போயிருக்கும் பாதத் தடங்களை போல் உடல் முழுவதும் பரவி இருந்தது. தன் உடலின் காயங்களை பார்க்கையில் ஆரத்யாவிற்கு அவள் உடலின் மீதே ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே சிறகுகள் சிதைந்து தோகை விரித்து தன் அழகை இழந்து நிற்கும் மயிலின் தோற்றத்தைப் போல் தன் உடல் இருப்பதாக நினைத்துக்கொண்டாள்.

ஆரத்யா குழந்தையாக இருக்கும் போது உடலில் ஏற்படும் காயங்களுக்கு எந்த வித வலியையும் உணராமல் சகஜமாக சிரித்து விளையாடிக்கொண்டிருந்ததையும் அவள் உடலின் வெப்பச் சூடு எப்போதும் தணியாமல் இருந்தததை பார்த்தும் உடல் ரீதியாக ஆரத்யாவிற்கு ஏதோ சிக்கல் நேர்ந்துள்ளது என்பதை அவளது பெற்றோர்கள் உணர்ந்தார்கள். அவள் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை  அறிந்துகொள்ள முடியாமல் ஆரத்யாவின் பெற்றோர்கள் அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைகளாக அலைந்துகொண்டிருந்தனர். மருத்துவர் போடும் ஊசிக்கு கூட வலியை உணராமல் கைகள் இரண்டையும் காற்றில் அடித்துக்கொண்டிருக்கும் ஆரத்யாவை பார்த்து மருத்துவர்களும் கொஞ்சம் குழம்பித்தான் போனார்கள். இறுதியாக ஆரத்யாவை முழுவதும் பரிசோதித்த நரம்பியல் நிபுணர் ஒருவர் ஆரத்யாவின் உடலில் ஏற்பட்டுள்ள மருத்துவ சிக்கல்களை விளக்கத் துணிந்தார்.

“ஆரத்யாவுக்கு முழுமையா CNS டெஸ்ட் எடுத்து பார்த்ததுல அவளோட Neuronsல வலி உணர்ச்சி இல்லனு ரிசல்ட் வந்துருக்கு. அத உறுதிபடுத்த எல்லா வித ஜெனிடிக் டெஸ்ட்டும் எடுத்தேன். அப்போ தான் உங்க பொண்ணு CIPA (Congenital Insesitivity to Pain and Anhidrosis) ங்குற ஒரு நோயால பாதிக்கப்பட்டிருக்க விஷயத்த தெரிஞ்சுக்கிட்டேன்”

டாக்டர் சொன்ன நோய் என்னவென்பதை சரிவர விளங்கிக்கொள்ள முடியாமல் புருவங்கள் உயர ஆரத்யாவின் பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். டாக்டர் மேலும் விளக்க தொடங்கினார்.

“இனிமேல்தான் ஆரத்யாவ நீங்க கவனமா பார்த்துக்கனும். உடல் ரீதியா ஆரத்யாவுக்கு ஏற்படக்கூடிய காயங்களுக்கு அவளால எந்தவித வலியையும் உணரமுடியாது. மருத்துவ துறைல இந்த மாதிரி கேஸ் பார்க்குறது ரொம்பவே அபூர்வம். கோடில ஒருத்தங்களுக்கு தான் இந்த மாதிரி நோய் வரும். இப்போ உங்க பொண்ணுக்கு வந்துருக்கு”

ஆரத்யாவின் அப்பா பதற்றமடைந்தார். அவர் மனதில் ஏதேதோ கேள்விகள் ஓடியது. சட்டென்று நாவில் இருந்து வார்த்தைகள் எழ நேரம் பிடித்தன. நீண்ட நேர யோசனைக்குப் பின் 

“இதனால குழந்த உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே டாக்டர்… இது சாதாரண ஒரு நோய் தானே”   

“இது ஒரு நோய்யுனு கூட சொல்ல முடியாது மிஸ்டர் விஜயன். மனித உடம்புல ஏற்படக்கூடிய ஒரு Disorder. இத புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்குற பக்குவமோ வயசோ ஆரத்யாவுக்கு இல்ல. நம்மள பொறுத்த வரைக்கும் இது சீரியஸான விஷயம் தான். ஏன்னா அவளுக்கு தலைல அடி பட்டாலோ, உடம்புல வேற எங்கையாவது அடி பட்டாலோ அவளால உணர முடியாது. அத நாம கவனிக்காம விட்டுட்டோம்னா ரொம்ப பெரிய ஆபத்துல போய் முடியும்”

ஆரத்யாவின் அப்பா தன் அடுத்த சந்தேகத்தை கேட்பதற்கு முன் சட்டென்று ஆரத்யாவின் அம்மா முந்திக்கொண்டாள்.

“என் கொழந்தைக்கு மட்டும் ஏன் டாக்டர் இந்த நோய் வருது?”

“எல்லா மனிதர்களோட உடம்புலேயும் Pain Sensation இருக்கு. மூலைல சுரக்கக்கூடிய Endorphins தான் அந்த வலிய கட்டுப்பாட்ல வைக்கும். ஆனா ஆரத்யா மூலைல அளவுக்கு அதிகமா Endorphins சுரக்குது அதோட விளைவுனால தான் அவளுக்கு வலி உணர்ச்சியே இல்லாம போயிடுச்சு. நான் கூட ஆரம்பத்துல இது Hormonsசால ஏற்படக்கூடிய பிரச்சனையா இருக்குமோனு Naloxine எல்லாம் கொடுத்து பார்த்தேன். ஆனா அது எதுவுமே வேல செய்யல. ஆரத்யாவோட Neuronsல Demyelinasation பிராப்ளம் இருக்குறதுனால தான் அவளால எந்த வித வலியையும் உணரமுடியல. இன்னும் உங்களுக்கு தெளிவா சொல்லணும்னா ஆரத்யாவோட உடம்புல இருக்குற நரம்புகள் எதுவுமே வலியை உணராது”         

டாக்டரின் விளக்கங்கள் முழுவதுமாக விளங்கிக்கொள்ள முடியவில்லையென்றாலும் கூட ஆரத்யாவிற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை அவர்களால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. மேற்கொண்டு  என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் மௌனமாகவே இருந்தார்கள்.

“CIPA இருக்குறவங்களுக்கு வியர்க்காது, எந்நேரமும் காய்ச்சல் வந்த மாதிரி உடம்பு சூடவே இருக்கும், அழ மாட்டாங்க, அடிக்கடி வலிப்பு வரும், எப்போவுமே உதட்டையும் விரலையும் கடிச்சுட்டே இருப்பாங்க, ரொம்ப மன அழுத்தத்தோடு இருப்பாங்க. இப்படி நிறைய பிரச்சன இருக்கு. நாட்கள் போக போக எல்லாரும் உணர்கிற வலி நமக்கு எப்படி இருக்கும்னு கைய அறுத்துக்குறதும் நெருப்புல சூடு வெச்சுக்குறதும்னு தன்னை தானே சோதிச்சு பார்ப்பாங்க . சாதாரண மனிதனுக்கு இருக்கக் கூடிய தொடுகையை கூட இவங்களால உணர முடியாது. ரொம்ப அழுத்தமா தட்டியும், அடிச்சாலும் மட்டும் தான் மத்தவங்களோட தொடுகையே இவங்களால உணர முடியும். இனி கடக்கப் போற ஒவ்வொரு நொடியும் ஆரத்யா உங்க கண்காணிப்புல இருந்தா மட்டும் தான் ஆரத்யாவுக்கு வர கூடிய பிரச்சனைய நம்மளால தடுக்க முடியும்”

இனி ஆரத்யா எந்த மாதிரியான சிக்கல்களை எல்லாம் சந்திக்க நேரும் என்பதை யோசிக்கும் போதே இருவரின் இதயத் துடிப்பும் அதிகரித்தது. எதனால் இப்படி? ஏன் இவளுக்கு மட்டும்? என்று பல கேள்விகளுக்கு டாக்டர் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. அடித்தொண்டையில் இருந்து எழும் அழுகையை கட்டுபடுத்திக்கொண்டே ஆரத்யாவின் அம்மா தொடர்ந்தாள்.

“ஏன் டாக்டர் இத குணப்படுத்தவே முடியாதா?”

“CIPAக்கு Proper Medical Management இல்ல. இது செய்யலாம், இது செய்யக்கூடாதுனு மட்டும் தான் ஒரு டாக்டரால அட்வைஸ் பண்ணமுடியும். அதுக்கான ட்ரீட்மெண்ட்ட நாம தொடர்ச்சியா எடுத்துட்டு இருந்தோம்னா ஏதாவது ஒரு கட்டத்துல கண்டிப்பா இத குணப்படுத்த முடியும்”

அன்றிலிருந்து ஆரத்யாவின் பெற்றோர்கள் அவளை எந்நேரமும் தீவிரமாக கண்காணிக்க  துடங்கினர். வேறொரு குழந்தை பெற்றுக்கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. டாக்டர் சொன்னது போல் அந்த நோயிற்குண்டான அறிகுறிகள் ஆரத்யாவின் வாழ்விலும் தலை காட்டியது. அடிக்கடி தன் நகத்தைத் கொண்டு உடலை கீரிக்கொள்வதும், கைகளையும் கால்களையும் கடித்துக்கொள்வதுமாக இருந்தாள். கண்ணாடித்துண்டால் உடலை அறுத்துக்கொள்ளவதற்கும் அவள் தயங்கவில்லை. மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக  அலைந்துகொண்டிருப்பதிலேயே ஆரத்யாவின் நாட்கள் பாதி கரைந்துகொண்டிருந்தன. சிகிச்சைக்காக ஆரத்யாவின் அப்பா பல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதையே சலிப்பின்றி செய்துக்கொண்டிருந்தார். ஆரத்யா வளர வளர அவளது நிலையும் மோசமாகிக்கொண்டு தான் போனது. உடம்பில் ஏற்படக்கூடிய எரிச்சல், அரிப்பு, வெப்பம், குளிர், என்று எந்த ஒரு மாற்றத்தையும் கூட அவளால் உணரமுடியாமல் போனது. உணர்வற்று கிடக்கும் உயிர் மட்டுமே தன் உடலில் எஞ்சி இருப்பதாக ஆரத்யா பல நாட்கள் நித்திரையின்றி தவித்தாள்.

ஆரத்யா உறக்கம் கொள்ள கண்களை மூடிய அடுத்த கணமே சுதனின் முகம் எதிரில் வந்து நிழலாடிக்கொண்டிருந்தது. மனதிற்குள் ஏதேதோ கேள்விகள் எழ அக்கேள்விகளுக்கு விடை தேடி அவளுக்குள்ளே விவாதித்துக்கொண்டிருந்தாள். இந்த உண்மை தெரிவதால் சுதன் என் மீது வைத்திருக்கும் காதல் ஒன்றும் குறையப்போவதில்லையே? இத்தனை நாட்கள் அவனிடம் சொல்லாமல் மறைத்து வந்தது கூட தன்னிடம் பிணக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. தனிப்பட்ட பிரச்சனையை காதலர்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற நிபந்தனைகள் ஏதும் இருக்கிறதா என்ன ? ஆனால் சுதன் தன்னுடன் பழகிக்கொண்டிருந்த இடைப்பட்ட நாட்களில் அவன் வாழ்வின் இன்ப துன்பங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டு தானே இருந்தான். நான் மறைத்தது மட்டும் எப்படி ஞாயமென்று கருத முடியும்? இல்லை சுதனால் நிச்சயம் என்னை வெறுக்க இயலாது. என் மீதான பயமும் அக்கறையுமே அவனிடத்தில் அதிகரித்திருக்கும். கேள்விகளும் பதில்களுமாக சேர்ந்து அவளுக்குள் ஒரு நீண்ட மனப்போராட்டமே நிகழ்ந்துகொண்டிருந்தன. 

சுதனுடன் பழக்கம் ஏற்பட்ட நாளிலிருந்து அவனுடன் கழிக்கும் நிமிடங்கள் மட்டுமே தன் வாழ்வை புதுபித்துக்கொண்டிருப்பதாக அவளுக்கு தோன்றியது. ஆண்களின் நிழலிடமிருந்தும் தன்னை தற்காத்துக்கொள்ள விலகி நின்றவள் சுதனுடன் மட்டும் அதீத நெருக்கம் காட்டினாள். 

அதிவேகமாக பைக்கில் விரைந்துகொண்டிருந்தவன் ஆரத்யா சாலையை கடந்துகொண்டிருப்பதை கவனிக்காமல் நிலை தடுமாறி அவள் மீது மோதினான். கீழே விழுந்ததில் தசைகள் தரையோடு மறைந்து ஆரத்யாவின் வலது கரத்திலும் நெற்றியிலும் ரத்தம் வழிந்தது. எந்த வித வலியையும் உணராத ஆரத்யாவின் பார்வை அவன் மீது பதிந்திருப்பதை பார்த்ததும் சுதன் பயத்தால் நடுங்கிக்போனான். செய்வதறியாது பயத்தில் தன்னை மன்னிக்கும்படி கெஞ்சிக்கொண்டிருந்தவனுக்கு காயத்தை பார்த்ததும் அழுகை வந்தது. ஆரத்யா எவ்வளவு மறுத்தும் விடாமல் ஆட்டோ ஒன்றை பிடித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். மருத்துவமனையை நெருங்கும் நேரம் வரை நிமிடத்திற்கு நிமிடம் “ரொம்ப வலிக்குதா… மன்னிச்சுடுங்க ப்ளீஸ் தெரியாம மோதிட்டேன்” என்று இடைவிடாது புலம்பிக்கொண்டே இருந்தான். தான் உணராத வலியிற்காக சுதன் கண்ணீர் சிந்தியதை பார்க்கும் போது ஆண்களிடத்தில் இருந்த ஒவ்வாமை ஆரத்யாவின் மனதிலிருந்து சற்று விலகியது. பதற்றத்தில் உதட்டை கடித்துக்கொண்டு அரத்யாவின் நிலையை நினைத்து குழந்தையை போல் அழுதுக்கொண்டிருந்தவனின் முக பாவனையை பார்த்து ஆரத்யா உள்ளுக்குள் ரசிக்கவே செய்தாள். ஆரத்யாவிற்கு சிகிச்சை முடிந்ததும் அவளை வீடு வரை அழைத்து வந்து ஆரத்யா பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டும் சென்றான். அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதை இருவரும் உணர்ந்தனர். 

நீண்ட நேரமாக அடித்துக்கொண்டிருந்த வீட்டின் அழைப்பு மணி நித்திரையில் மூழ்கிக்கிடந்தவளை விழிக்கச் செய்தது. எழுந்துச் சென்று கதவைத் திறந்ததும் சுதன் அவளை வெறித்துப்பார்த்தபடி மெளனமாக நின்றிருந்தான். ஆரத்யா எதுவும் சொல்லாமல் மீண்டும் தன் அறையை நோக்கி நடந்தாள். ஆரத்யா படுக்கையின் மீது அமர்ந்ததும் அவளுக்கு அருகில் சற்று தள்ளி சுதனும் அமர்ந்தான்.

“சொல்லு சுதன்… அமைதியாவே இருக்க” 

“பேச புடிக்கலனா நேரிடையாவே சொல்லிட்டு கால் கட் பண்ணிருக்கலாம்.. அது என்ன சுவிட்ச் ஆஃப் பண்ணுற பழக்கம்”

“பேச புடிக்கலனு இல்ல… பேச தயக்கம்”

“எதுக்கு தயங்கனும்…?”

சுதனுடைய குரலில் சினம் கலந்திருப்பதை அவளால் உணர முடிந்தது. சுதனை நெருங்கி அமர்ந்து அவனது கரத்தை இறுக்கமாக அரவணைத்துக்கொண்டு அவன் தோலின் மீது சாய்ந்தாள். எப்போதும் விழுவதற்கு தயாராய் விழி ஓரம் கண்ணீர்  துளி தேங்கி நின்றது. 

“இந்தன நாளா இந்த விஷயத்த உன்கிட்ட சொல்லாமா இருந்தத நினைச்சு கண்டிப்பா நீ வருத்தப்பட்டிருப்ப. அதான் உன்கிட்ட பேச தயக்கமா இருந்துச்சு”

சுதன் ஆரத்யா பக்கம் திரும்பி அவளது மோவாயை பிடித்து பார்வை விலகாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“நீ சொன்ன மாதிரி உன் மேல எனக்கு கோவம் வருத்தம் எல்லாம் இருக்கு. ஆனா இத எல்லாம் விட எனக்கு உன் மேல அக்கறை இருக்கு. உனக்கு இப்படி ஒரு பிரச்சன இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் கண்டுக்காம இருக்க சொல்லுறியா..?”

உணர்ச்சிவசப்பட்டவளாய் ஆரத்யா சட்டென்று சுதனை அரவணைத்துக்கொண்டாள். அவள் முதுகை தட்டிக்கொடுத்துக்கொண்டே சுதன் அவளை மெல்ல ஆசுவாசப்படுத்தினான்.

“இந்த வியாதியால நிறைய கஷ்டத்த அனுபவிச்சுருக்கேன் சுதன். சின்ன வயசுல இருந்து நிறைய Sexual Harassment க்கு ஆள் ஆகியிருக்கேன். ஆனா பெரும்பாலும் என் வாழ்க்கைல அத நான் உணர்ந்ததே இல்ல. அதனாலத் தான் என்னோட பிரச்சனைய நான் யாரிடமும் சொல்லுறது இல்ல. வலிய உணரமுடியலங்குற வலி தான் என் வாழ்கையில அதிகம் இருக்கு”

ஆரத்யாவின் வலியை அவனால் முழுவதும் புரிந்துகொள்ள முடிந்தது. எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை என்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தான் பக்கபலமாக உடன் இருப்பதாக ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளிடமிருந்து விடைபெற்றான். அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டும் நேரில் வந்து நலம் விசாரிப்பதுமாக சுதன் தொடர்ந்துகொண்டிருந்தான். கடந்து வந்த இத்தனை வருட வாழ்வில் சுதனின் அறிமுகமும் காதலும் புதிதாக அர்த்தம் கற்பிப்பது போல் உணர்ந்தாள். எல்லாம் மறந்து திருமண வாழ்வில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளவும் ஆரத்யா தயாரானாள்.

சுதனின் அறையில் தன் எதிர்கால வாழ்வை குறித்தும் தாங்கள் காதலித்த நாட்களில் நடந்த ஊடல்களை குறித்தும் இருவரும் சிரித்து பேசி மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். சுதன் தனக்கு பிடித்த ஓவியங்களை அறை முழுவதும் மாட்டி இருந்தான். விளங்கிக்கொள்ள முடியாத ஓர் உயிரின் நாதம் அவ்வோவியத்தில் மறைந்துள்ளதாக ஒவ்வொரு படத்திற்கும் சுதன் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தான். அந்தரங்கமாக சுதன் ஆரத்யாவின் காதில் ஏதோ கிசுகிசுக்க ஆரத்யா அவனை கிள்ளியும் அடித்தும் விளையாடிக்கொண்டிருந்தாள். வலியில் துடித்த சுதன் பதிலுக்கு ஆரத்யாவின் தோளை கிள்ளினான். எந்தவித எதிர்வினையும் இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்த ஆரத்யாவை பார்ப்பதற்கு அவனுக்கு வியப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. ஆரத்யாவின் கேசத்தை வருடிக்கொண்டே தான் கேட்க நினைக்கும் சந்தேகங்களை ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டிருந்தான். ஆரத்யாவும் எவ்வித மன நெருடலும் இல்லாமல் அவனுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

“ஆரத்யா உன் உடம்புல அளவுக்கு அதிகமா Endorphins சுரக்குறதுனால எந்த வித Painனும் Natural Feelingsம் உன்னால உணர முடியலனு சொல்லுற. செக்ஸ் அப்போ கிடைக்குற Orgasm Feel கூட உன்னால உணரமுடியாதா?” 

ஆரத்யா சுதனை பார்த்து விசித்திரமாக சிரித்தாள். தன் உடலின் நிலை குறித்து சந்தேகங்கள் பல ஆரத்யாவிற்கு அவ்வப்போது எழுந்ததுண்டு. அப்போதெல்லாம் மருத்துவருக்கு கால் செய்தும் நேரில் சந்தித்தும் தன் சந்தேகங்களுக்கு விளக்கம் தெரிந்துகொள்வாள். சுதனுக்குள் எழும்பிய அதே சந்தேகம் நீண்ட நாட்களா ஆரத்யாவிற்குள்ளும் இருந்து வந்தது. ஒருமுறை மருத்துவரை நேரில் சந்தித்து தன் சந்தேகங்களுக்கான விளக்கத்தையும் அறிந்துகொண்டாள்.

“நானும் இத பத்தி டாக்டர்கிட்ட ஒரு தடவ பேசுனேன். செக்ஸ் அப்போ Orgasam அடையமுடியும்னு தான் டாக்டர் சொன்னாரு. நானும் இதுவரைக்கும் அந்த ஃபீல் எப்படி இருக்கும்னு முயற்சி பண்ணல. நம்ம மேரேஜ்க்கு அப்புறம் தான் அந்த ஃபீல் எப்புடி இருக்குதுனு பார்க்கணும்”

சுதனை பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டே அவன் மார்பின் மீது விழுந்து உதட்டை கடித்து மெளனமாக சிரித்துக்கொண்டிருந்தாள். சுதன் அவள் கன்னங்களிலும் உதட்டிலும் பொறுமையாக முத்தம் கொடுத்தான். சுதன் தன் இதழ்களைக்கொண்டு அவள் உடலுக்குள் ஓர் விரகதாபம் தோற்றுவிப்பதை ஆரத்யாவால் உணர முடிந்தது. நிதானத்தை இழந்து இருவரும் மூர்க்கமாக முத்தமிட்டு சல்லாபிக்க முனைந்தனர். இறுக்கமாக அரவணைத்துக்கொண்டு ஒருவரின் உடைகளை ஒருவர் கலைத்து புணர்வில் ஈடுபட தொடங்கினார்கள். சாளரத்தின் வழி நின்றிருந்த சூரிய கதிர்கள் ஆரத்யாவின் உடளை பளிச்சிட்டு காட்டியது. சுதன் ஆரத்யாவின் உடலை முழுவதுமாக அப்போது தான் பார்த்தான். ஆரத்யாவின் மார்பகம் இயற்கையான வடிவத்தை இழந்து தசைகள் சுருங்கி சேற்றுக் குமிழ் போல் இருந்தது. ஆங்காங்கே சிகிச்சை மேற்கொண்டதற்கான அடையாள தையல்களும் வடுக்களுமாக பரவி இருந்தது. தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயத்தின் அடையாளங்கள் பார்க்கும் இடங்களிலெங்கும் அட்டைப் பூச்சிகளாக அவள் உடலில் நெளிந்துகொண்டிருப்பதாக அவன் பிரஞ்கையில் தோன்றியது. சுதனின் முகத்தில் ஓர் சகிப்புத் தன்மை வெளிப்படுவதை ஆரத்யா கவனித்தாள். முகத்தை சுருக்கிக்கொண்டே அவள் உடலின் காயங்களை பார்த்துக்கொண்டிருந்தவன் சீற்றம் இழந்து மெல்ல பின்வாங்கும் கடல் அலையை போல் ஆரத்யாவின் உடலில் இருந்து தன் உடலை பிரித்துக்கொண்டான்.

எதுவும் பேசாமல் வேகாமாகத் தன் உடைகளை அணிந்துக்கொண்டான். அவள் மீது கலவி கொள்ள ஆர்வமின்றி சுதன் விலகிச் செல்லும் காரணத்தை ஆரத்யாவால் புரிந்துகொள்ள முடிந்தது. சுதன் குளியலறைக்குச் சென்று வாந்தி எடுக்கும் சத்தம் அறை முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. அறையை விட்டு வெளிவந்து வீட்டின் நடு முற்றத்தில் போடப்பட்டிருக்கும் சோபாவின் மீது அமர்ந்தான். ஆரத்யா தன் உடைகளை அணிந்துகொண்டு அவனை பின்தொடர்ந்து வந்தாள். சுதனின் முகத்தில் வியர்வைகள் துளிர்த்திருப்பதையும் ஸ்திரமற்று கை விரல்களும் கால்களும் நடுங்கிக்கொண்டிருப்பதை கவனித்தாள். மெல்ல சுதன் அருகில் வந்து அவன் தோலின் மீது கை வைத்தாள்.

“ஸாரி ஆரத்யா…! இன்னைக்கு வேண்டாம் எதுவா இருந்தாலும் மேரேஜ்க்கு அப்புறம் பார்த்துக்கலாம்”

சொல்லிமுடித்ததும் ஆரத்யாவின் முகத்தை கூட பார்க்காமல் பால்கனி பக்கம் சென்று நகரமெங்கும் எழும்பி நின்றிருக்கும் கட்டிடங்களை பார்த்துக்கொண்டிருந்தான். 

உணர்வின் வெளிபாட்டை உடல் தீர்மானிக்கும் என்பதை அப்போது தான் ஆரத்யாவால் தெரிந்துகொள்ள முடிந்தது. வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளும் நிலையிலும் அவள் இல்லை எதுவும் பேசிக்கொள்ளாமல் ஆரத்யா அங்கிருந்து நகர்ந்தாள். தன் வீட்டை நெருங்கும் நேரம் வரை சுதன் அவளுடன் நடந்துகொண்ட விதமும் அவனது முகபாவனைகளுமே அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அறைக்குள் வந்ததும் குளியறைக்கு சென்று மழைத்தாரையில் நனைந்தாள். அழுது தீர்க்க முடியாத பல வலிகள் நினைவறையின் மூச்சுக்காற்றை அவளுக்குள்ளேயே புதைந்திருந்தது. அதையெல்லாம் உடைத்துக்கொண்டு கத்தி அழவேண்டும் போல் இருந்தது. இவ்வுலகில் இருந்து சபிக்கப்பட்டவளாய் தன் பிறப்பை நினைத்தும், தன் விதியை நினைத்தும் நீண்ட நேரம் அழுதுக்கொண்டிருந்தாள். தண்ணீரை காட்டிலும் அவளது கண்ணீரே அதிகளவில் உருண்டோடிக்கொண்டிருந்தது.   

குளியலறையில் இருந்து வெளிவந்ததும் கண்ணாடி முன் நின்று தன் உடைகளை கலைத்தாள். காயதின் தழும்புகள் ஒவ்வொன்றும் மிருகத் தோற்றத்தை கொண்டு உடலெங்கும் நெளிந்துகொண்டிருந்தது. ஆரத்யாவின் முகம் மறைந்து கண்ணாடியில் சுதனின் முகம் பிரதிபலிப்பதை பார்த்தாள். சுதன் அவள் உடலைக் கண்டு புழுவை பார்ப்பது போல் முகம் சுழித்தான். ஆரத்யா உடலின் தோற்றத்தை பார்க்க பிடிக்காமல் அடிவயிற்றை பிடித்துக்கொண்டு அவள் கண்ணெதிரே வாந்தி எடுத்தான். அழுகிய உடலை எந்த உயிரும் நேசிக்காதபோது அதை அப்புறப்படுத்துவது தான் வாழ்வின் நியதி என்று அவள் மனதில் குரல் சொல்லியது.

மேசையில் பழங்களுக்கு இடையில் மறைந்திருந்த கத்தியை எடுத்தாள். சுதனின் முகச் சுழிப்பு அறையின் சுவர்களெங்கும் பிரதிபலித்தது. அவள் உடலின் மீதே அவளுக்குள் இருந்த ஒவ்வாமை அவள் உடலை சிதைத்துக்கொள்ள சீண்டிக்கொண்டிருந்தது. இவ்வுலகிலுள்ள மொத்த வெறுப்புணர்ச்சியையும் தன் உடலின் மீதே காட்டத் தோன்றியது. சட்டென்று தோன்றும் இடங்களிலெங்கும் கத்தியைக்கொண்டு உடலின் பாகங்களை வெறியோடு அறுத்தாள். மார்பகம், வயிற்றுப் பகுதி கைக, கால்கள் என்று அறுபட்ட இடகளிலிருந்து கொதிநீராய் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. ஆரத்யாவின் உடலில் உள்ள குருதி முழுவதும் படுக்கையின் பொதியிற்குள் தஞ்சம் அடைந்தது. சிதைக்க வேண்டிய இடங்கள் பல இன்னும் அவள் உடலில் மிஞ்சி இருந்தன. வலியை உணராத போதிலும் உடலின் வலு குறைந்துகொண்டே போனது. உயிரின் இறுதி சுவாசம் இருக்கும் வரை எங்கெல்லாம் உடலை வதைத்துக்கொள்ள முடியுமோ அங்கெல்லாம் அறுத்துக்கொண்டாள். குருதியால் வழிந்தோடிக்கொண்டிருந்த அவளது அறை முழுவதும் சிவப்பு கம்பளமாக காட்சியளித்தது. கண்கள் இரண்டும் இருளின் வாசலை நெருங்கிகொண்டிருப்பதை உணர முடிந்ததும் எந்த ஒரு தடுமாற்றமும் நடுக்கமும் இல்லாமல் இறுதியாக தன் கழுத்துப்பகுதியை மின்வெட்டலை போல் அறுத்தாள். அறுபட்ட பிளவிலிருந்து ரத்தம் கொப்பளித்தது. இவ்வுலகில் யாரும் அனுபவித்திராத ஒரு வலியை ஆரத்யா உணர்ந்தாள்.  மரணிக்கும் தருவாயில் உடலின் வலியை கடந்த மனவலி மட்டும் அவளிடத்தில் நிலைத்திருந்தது. தனது செல்போன் சிணுங்கும் சத்தம் கேட்டதும் லேசாக கழுத்தை திருப்பி மேசையின் மீதிருந்த செல்போனைப் பார்த்தாள். சுதன் அவள் எண்ணிற்கு அழைத்திருந்தான். தொடுதிரையில் தோன்றும் சுதனின் படத்தை பார்த்ததும் அவளது உதடுகள் மெல்ல சிரித்தது.

***

One Reply to “வலி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.