வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து:பாகம்-1

கலையின் நோக்கம் தீர்வல்ல

அ. வெண்ணிலா

1973ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி, தன்னுடைய சீனியர் வக்கீலய்யா கொடுத்த 21 இஞ்ச் ஹெர்குலஸ் வண்டியை, அவர்கள் வீட்டுப் பூவரசு மரத்தடியில் சாற்றி வைத்துவிட்டு, நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு திருநெல்வேலியில் இருந்து கிளம்பி, சென்னை வந்துவிட்டாலும், வண்ணநிலவன் இன்னும் தாதன்குளம் உலகநாதம் பிள்ளை ராமச்சந்திரனாகத்தான் இருக்கிறார். அதே பூவரச மரத்தடியில், சைக்கிளின் ஹாண்டில்பாரை பிடித்தபடி அவரின் மனம் ‘ஆராதனா’ படத்திற்குப் போகலாமா? நண்பர்கள் யாரையாவது சந்திக்கப் போகலாமா? என்று யோசித்தபடி இருக்கிறது. தன் இருபதுகளின் வாழ்விலிருந்து ஒருபோதும் வெளியேற முடியாத வண்ணநிலவனின் கால்கள், ரெயினீஸ் ஐயர் தெருவுக்கும் முருகன்குறிச்சிக்கும் குறுக்குத் துறைக்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ரெயினீஸ் ஐயர் தெருவின் முதல் வீட்டின் வாசலில் உட்கார்ந்துகொண்டு மழை பார்த்தபடி இருக்கும் டாரதியைப்போல், வண்ணநிலவன் தன் வாழ்க்கையைத் தாமிரபரணியின் கரையில் உட்கார்ந்து எழுதிப் பார்க்கிறார். அவரின் பதினெட்டு பத்தொன்பது வயதில் எழுதிய ‘கடல்புரத்தில்’ நாவல் தொடங்கி, இரண்டாண்டுகளுக்குமுன் அவரின் எழுபது வயதில் வந்துள்ள ‘எம்.எல்’ வரை ஆறு நாவல்களிலும் ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள்தான் கதை மாந்தர்கள் என்பது ஏதேச்சையான ஒன்றல்ல. மரபில் இருந்து நவீனத்தைத் தொடங்குவதுபோல், வண்ணநிலவன் நாம் பார்த்துப் பழகிய வாழ்வையே திரைவிலக்கி, அபூர்வமான வேறொரு உலகத்தைக் காட்டுகிறார். நூற்றாண்டுக் கரையென்றாலும், தினம் அதைத் தழுவி ஓடுவது புதுப்புனல் அல்லவா? 

“பாண்டிய ராசா காலத்தில் இந்த வழியாத்தான் கம்பா நதின்னு ஒரு நதி போச்சாம். பின்ன எப்படியோ அந்த ஆறு நின்னுப்போச்சு. அந்த ஞாபகத்துக்குத்தான் அந்தக் குட்டி மைய மண்டபம் இருக்குது. அந்த மண்டபத்துக்குக் கீழ் பாத்தியன்னா கசங் கணக்கா தண்ணீ கெடக்கும்” என்று காணாமல் போன கம்பா நதி பற்றி நாவலின் கதாபாத்திரம் ஒன்று சொல்கிறது. காணாமல் போன கம்பா நதியின் குட்டி மைய மண்டபமாய் வண்ணநிலவன் உட்கார்ந்திருக்கிறார். 

ஓடி மறைந்து போன ஆறு, ஆற்றங்கரைப் படித்துறை, பனை மரங்கள், உடை மரங்கள், மருத மரங்கள், பரந்த வயல், வில்வண்டிகள், காரிக்கம் வேட்டி, சிட்டைத் துண்டு, மண்பானைச் சமையல்கள், செல்லம்மாள்கள், பிரமநாயகம் பிள்ளைகள், வளவு வீடுகள், வாழ்வின் இன்ப துன்பங்கள், உறவுகளின் இணக்கம், காந்திமதி நெல்லையப்பரின் கண்பார்க்க நடந்த விழாக்கள் எல்லாம் அவரின் எழுத்துக்குள் ‘கசங் கணக்கா’ நுரைத்துப் பொங்கிக் கொண்டிருக்கின்றன. 

தாமிரபரணி ஒரே ஆறுதான் என்றாலும் திருநெல்வேலிக்காரர்களுக்கு ஒன்றல்ல. பாபநாசத்துக்காரருக்கு ராஜவல்லிபுரத்துக் குறுகிய தாமிரபரணி உவக்காமல் போகும். கொக்கிரகுளத்தில் குளிக்கிற குளிர்ச்சியும், வெள்ளக்கோவில் ஆற்றங்கரையின் அமானுஷ்யக் குளியலும் வேறு வேறு. இந்த நுட்பங்களையெல்லாம் ஓடி ஓடி அனுபவித்த வண்ணநிலவனுக்கு, ஐம்பதாண்டுகளாக எழுதித் தீர்த்தாலும், அவரின் பேனாவில் இன்னும் தாமிரபரணி தண்ணீர் மிச்சமிருக்கிறது. 

ஒவ்வொரு பருவ காலத்திலும் ஆற்றில் ஓடுகிற தண்ணீரின் மாறும் மணமும் ருசியும், குறிப்பாக, கோடையில் ஓடும் நீரின் முறுகிய இரும்பின் மணம், அதிகாலையில் ஆற்றில் குளிக்க வரும் கூட்டத்தைப் பகலில் வேறெங்குமே பார்க்க முடியாத ஆச்சரியம், பத்து மணி உல்லாசமான வெயிலில் போடும் ஆற்றுக் குளியல் என்று ஆற்றுப் புராணம் பாடவே இன்னொரு பிறவி தேவைப்படலாம் வண்ணநிலவனுக்கு.

ரயில் நிலையங்கள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நினைவுச் சித்திரம். வண்ணநிலவனுக்கோ ஆறுபோலவே கருங்கல் தளம் போட்ட ஸ்டேஷன்கள் எல்லாம் ஒன்றில்லை. பார்க்கப் பார்க்க அலுக்காதவை. காலத்தின் ஏதோ ஒரு பக்கத்தை என்றென்றும் நினைவுகூர்பவை. தென்காசி ஸ்டேஷன் தளத்துக்கும் கோவில்பட்டி ஸ்டேஷன் தளத்துக்கும்தான் எத்தனை வித்தியாசம்? தென்காசி ஸ்டேஷன் தளத்தைப் பார்க்கிற சமயமெல்லாம் அது யாருக்காகவோ வெகுநாட்களாகக் காத்திருக்கிறது போலவே இருக்கிறது என்று துயர் கொள்கிறார்.

எழுபதுகளில் எழுதத் தொடங்கிய வண்ணநிலவன் தனக்குப் பிறப்பினால் நேர்ந்த சைவப் பிள்ளைமார் வாழ்க்கையுடன், பாளையங்கோட்டையில் கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு மத்தியில் பன்னிரெண்டு ஆண்டுகள் வாழ நேர்ந்த வாழ்க்கையையும் பின்னிப் பிணைந்து எழுதும்போது, அந்த மண்ணின் அற்புதமான வாழ்வியல் வெளிப்படுகிறது. 

வேலையில்லாத காலங்களில் நண்பர்களின் வீடுகளில் மாதக்கணக்கில், வருடக்கணக்கில்கூடத் தங்கும் இளைஞனுக்கு, உறவினர்களைப் போலவே ஆழமான கரிசனமும் அன்பும் காட்டிய அக்காலத்திய வீடுகள், மூன்று வேளையும் சாப்பாடு, தூங்குவதற்கு இடம், படிக்க, எழுத, தனியாக இரவு விளக்கொன்றை ஏற்றி வைத்துத் தூங்கப் போகும் நண்பனின் தங்கை, போகிற எல்லா வீடுகளிலும் கட்டாயம் சாப்பிடக் கொடுக்கிற பண்பு, அவசரம் என்றால் கையில் இருக்கும் நூறு, இருநூறை கொடுத்து அனுப்பும் நண்பர்கள் என அழிக்கதவுகளுக்கு உள்ளேயும் எல்லோரையும் அனுமதித்த வீடுகளின் அன்பை, நேசம் பொழிந்த ஒரு காலத்தின் மனிதர்களை உயிர்ச் சிற்பங்களாய் உலவ விட்டிருக்கிறார் வண்ணநிலவன்.

இன்று குடும்பம் என்றாலே மூன்று அல்லது நான்கு பேர்தான். குடும்பங்களின் சுவர்கள் நெகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டன. வீட்டுக்குள் மூன்றாவது நபரின் பிரவேசம், குடும்பத்தின் தனிமையில், சுதந்திரத்தில் தலையிடுவது என்றாகிவிட்டது. கதவும் அழைப்பு மணிகளும் இடம் பிடித்துவிட்ட வீடுகள், மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்ட தனிமைச் சிறைகளாக, உறவுகளின் இதம் தொலைத்த, செங்கற் கட்டடமாக மாறியுள்ள காலத்திலிருந்து வண்ணநிலவனை வாசிக்கும்போது, மனம் முழுக்க ஏக்கம் பரவுகிறது. கம்பா நதியின் தியோடர் வீட்டு மாடியில் இரவு முழுக்க நின்று பேசிக்கொண்டிருக்க மாட்டோமா என மனம் ஏங்குகிறது. 

இருபத்தைந்து வயதிற்குள் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஏழு நாவல்களில் எழுதியிருக்கும் வண்ணநிலவனை, ஒருசேர வாசிக்கும்போது, நீண்ட நாவலின் பல அத்தியாங்கள்போல் மாயம் காட்டி நிற்கின்றன கதைகள். 

 ‘கம்பா நதி’ பாப்பையா, ‘காலம்’ நெல்லையப்பன், ‘எம்.எல்.’ நாவலின் சோமு  மூவரும் ஒருவரே. வெவ்வேறு வாழ்க்கையின் ஒரே பிரதி. ஒரே குணாம்சம், விருப்பம், தேர்வு, பூஞ்சையான மனசு. பெரும் மகிழ்ச்சியையோ துயரத்தையோ தாங்கிக்கொள்ள முடியாத நொய்மை. வீட்டின் நிழலுக்குள் வளர்ந்த பெண்களைப்போல் பக்குவம், வாழ்க்கை எப்படி இழுக்கிறதோ, அப்படி நகர்ந்துபோக, மௌனமாய்த் தன்னை ஒப்புக்கொடுக்கும் அமைதி இந்த ஆண்களுக்கு வாய்த்துவிடுகிறது. 

ஆண் பிள்ளைகளிடம் நேரடியாகப் பேசிக்கொள்ளாத அப்பாக்கள் இருக்கும் குடும்பங்களில், பெண்களால் வளர்க்கப்படும் ஆண் பிள்ளைகள் விசேஷத்தன்மையுடன் தங்கள் ஆச்சிகளின், அக்காக்களின், மதினிகளின் மென்மையுடன் இருப்பார்கள். பெண்களின் கண்பார்வை அனுமதிக்கும் அளவிற்கு வெளியுலகைப் பார்ப்பவர்கள். அவர்கள் நிழலில் இருப்பதைத் தவிர உலகத்தில் வேறெந்த இதமும் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களுக்கென்று தனித்த விருப்பம் இருந்தாலும், அதை அடைவதற்காக உடன் இருப்பவர்களைத் துன்புறுத்தும் மனமற்றவர்கள்.

கழுவின பாத்திரங்களைத் தண்டை மரத்தில் அடுக்கி வைத்துக்கொண்டிருக்கும் அக்காவோடு தானும் சில பாத்திரங்களை எடுத்து வைக்கப் பிரியப்படும் தம்பி, ‘சிவகாமி அக்கா வாசல் தெளிக்கிறதில் எல்லோருக்கும் வேண்டிய பெண் தெளிக்கிற சந்தோஷம் இருக்கும். அவளும் எல்லாப் பெண்களையும்போல் தண்ணீரைக் கையில் அள்ளித்தான் தெளிக்கிறாள். ஆனாலும் அந்தத் தண்ணீர் கீழே விழுகிறபோது கேட்கிற சத்தம் எல்லோருக்கும் விருப்பமான சத்தமாக இருக்கிறது’ என்று அக்கா இன்னும் கொஞ்ச நேரம் வாசல் தெளிக்க மாட்டாளா என்று காத்திருக்கும் தம்பி, பேருந்தில் போகும்போது, இந்நேரம் தன்னுடைய நண்பன் ரோட்டோரத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கும்போதே, அக்காவுக்கும் இதுபோல் யாரையாவது பார்க்க ஆசையாக இருக்குமா? என்று அக்காவின் மனத்தையும் கணக்கிலெடுக்கும் தம்பி, அறை வீட்டுக்குள் பேருக்குச் சுவரோரமாகத் திரும்பிக்கொண்டு, பேசியபடியே ஆடை மாற்றிக் கொள்ளும் அக்காவும் தம்பியும், 

குழந்தையின் கால்களைத் தூக்கி, தொட்டில் சேலை நனைந்திருக்கிறதா என்று பார்த்து, கொடியில் கிடக்கும் ஒரு துணியை மடித்து, குழந்தையின் இடுப்புக்குக் கீழே வாகாக வைக்கப் பழகியிருக்கும் தந்தை, பேருந்து நிலையத்தில் மல்லிகைப் பூப்பந்தை விலை பேசி வாங்கி, மகளிடம் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொல்லும் தந்தை, சித்த சுவாதீனம் இல்லாத பெண் பிள்ளையை, ‘கிறுக்கு மூதி’ என்று சலித்துக்கொள்வதைக் கேட்கும்போது, மனசு சிவுக்கென்றுக் குத்த, துடிதுடித்துப் போகும் அப்பா என்று குடும்பத்தின் பின்னலுக்குள் இரண்டற கலந்திருக்கும் அபூர்வமான ஆண்கள் வண்ணநிலவன் நாவல்களில் வருகிறார்கள். 

வண்ணநிலவனின் தந்தைகள் எப்போதுமே பிரியத்திற்குரியவர்கள். பெண் பிள்ளைகளுக்கான அவர்களின் வாஞ்சை ஒளி பொருந்தியது. தாவணி அணிந்த மகளைக் கல்லூரி விடுதிக்கு அழைத்துப்போய், மனம் கலங்கி விட்டுவிட்டு வரும்போதும், கல்யாணம் செய்து வைக்கத் தெம்பில்லாத தந்தையைவிட்டு, விருப்பமானவனுடன் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போகும் மகளுக்கு, பேருந்து நிலையத்தில்தான் இன்னும் இருப்பாள் என்று தான் விருப்பமாய் வாங்கி வந்த காதணிகளை மகனிடம் கொடுத்துவிடும் தந்தை… என அவரின் தந்தை மனத்தின் அபூர்வ அன்பைச் சொல்லிக்கொண்டிருக்கலாம். பெண் குழந்தைகளின் மீதான கூடுதல் பிரியமென்றோ, வழமையான அன்பென்றோ வண்ணநிலவனின் தந்தையன்பைக் கடந்து போய்விட முடியாது. பெண்மையை ஆராதித்த ஆதித் தந்தைமையின் தூய்மையை அந்த அன்பிற்குள் பார்க்கலாம். 

வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் வாரிசு பாப்பையா. அப்பாவின் இரண்டு குடும்பச் சுமையுடன், அவரின் திசை மாறிய பழக்க வழக்கங்கள், குடும்பத்தை நிர்க்கதியாக்கியதோடு, வயசுக்கு வந்த பெண் பிள்ளையின் சம்பளத்தை நம்பி இருக்கச் செய்கிறது. வீட்டின் ஆண் பிள்ளையாக இருந்தும், படித்த படிப்புக்கு வேலையில்லாத நேரத்தில், தன்னைப் போலவே வறுமையில் உழன்று, வேலைக்கு அலையும் கோமதியை விரும்புகிறான். இருவரும் காதலைச் சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் இருவருக்குமே இனம் புரியாத ஈர்ப்பிருக்கிறது. சந்தர்ப்பவசத்தால் பாப்பையா பட்டாளத்தில் வேலைக்குப்போன பிறகு, கோமதி அப்பா சொல்லும் மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்கிறாள்.

ஆளில்லா வீட்டிற்குள் வந்து, பிலோமியின் காதலையும் இளமையையும் சேர்த்துப் பருகிய ‘கடல்புரத்தில்’ சாமிதாஸ், பிலோமியைத் திருமணம் செய்துகொள்ள அவன் தந்தையிடம் பேசத் துணியவில்லை. நாட்டுப் படகு வைத்திருக்கும் குரூசு மிக்கேலின் மகளைக் கட்ட, விசைப் படகின் கனவுடன் இருக்கும் தந்தை அனுமதிக்க மாட்டார் என்பது சாமிதாஸூக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் அவன் பிலோமியைக் காதலிக்கிறான். மணப்பாட்டின் ஆளில்லா கரையோரத்து அலைகளில் காதல் கரைய பேசுகிறான். 

நெல்லையப்பனுக்கு அக்கா உறவில் உள்ள காந்திமதியின்மேல் ஈர்ப்பு. காதலா, அன்பா என்று தடுமாறும் நிலையில், அப்பா தன் தங்கை மகளைத் திருமணம் செய்ய நினைக்க, அவனைப் போன்றே இருக்கும் ஏழை சீனியர் குமாஸ்தா அவரின் மகளை நெல்லையப்பனுக்குக் கொடுக்க நினைக்க, அப்பா சொன்னதைக் கேட்டு வசதியான அத்தை மகளைக் கல்யாணம் செய்கிறான்.

சாமிதாஸின் இயலாமையைக்கூடச் சந்தேகிக்கலாம். பாப்பையாவும் நெல்லையப்பனும் வீட்டுச் செடிகள். அவர்களுக்கு வீட்டுக்கு வந்தால், அம்மா, அக்கா என்று பெண்கள் இருக்கவேண்டும். அவர்கள் முகம் சுளிக்காமல், பார்த்துப் பார்த்துக் கவனிக்க வேண்டும். எங்கு சென்றாலும் வீடு மட்டுமே அவர்களின் நிழல் தரு. பெண்களின் அன்பின்றி அவர்களால் இருக்க முடியாது. அம்மாவிடம் ரேஷன் வாங்கப் பணம் கொடுத்துவிட்டு, காந்திமதி அக்காவிடம் கேலி பேசிவிட்டு, பூ கொண்டுவரும் பூக்காரியினால் மனம் நெகிழ்வது எனச் சின்னச் சின்ன விஷயங்கள் உவப்பாக இருக்கின்றன. ‘பழைய சோறுதான் அன்றைய இரவு உணவு என்றாலும், சந்தோஷத்தில் நெஞ்சு நிறைந்து வழிந்தது’ என்கிறான் வக்கீல் குமாஸ்தாவாக இருக்கும் நெல்லையப்பன். 

‘கடல்புரத்தில்’ பிலோமியின் தோழி ரஞ்சி, பிலோமியின் அண்ணன் செபஸ்டியைக் காதலிக்கிறாள். காலம் வேறொருவனுடன் சேர்த்து வைக்கிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஊருக்கு வரும் ரஞ்சியும் செபஸ்டியும் தங்களின் காதலை மறந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. ரஞ்சி ஊருக்கு வந்தால் செபஸ்டி நிறையக் குடிப்பான். ரஞ்சி அவனை வெறிக்க வெறிக்கப் பார்ப்பாள். இருவரின் அன்பு இப்படியாகத் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. 

சாமிதாஸ் கைவிடும்போதும், பிலோமி அவன் முன்னால் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. ரஞ்சியை நினைத்துப் பார்க்கிறாள். தானும் இனி அப்படித்தான் என்று மனத்தைத் தேற்றிக்கொள்கிறாள். ஒரே ஒருமுறை தோட்டத்துக் கிணற்றடியில் உட்கார்ந்து குமுறிக் குமுறி அழும் பிலோமி, யதார்த்தத்திற்குத் திரும்புகிறாள். ‘கம்பா நதி’ கோமதியும், பாப்பையாவை நினைவுகளாக்கிக்கொண்டு, அப்பா சொல்லும் மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து கொள்கிறாள்.

‘ரெயினீஸ் ஐயர் தெரு’வின் மூன்றாவது வீட்டு அற்புதமேரி, தன்னுடைய சாம்ஸன் அண்ணனும், எஸ்தர் சித்தியும் தப்பாக நடந்துகொள்வதைக் கண்ணால் பார்த்துவிடுகிறாள். மகன் முறைதானே வேண்டும் அண்ணன்? சித்தி ஏன் இப்படி அண்ணனிடம் நடந்துகொள்கிறாள் என்று குழம்புகிறாள். ஆனால், ஆச்சர்யமாய் அவர்களைத் தகாத கோலத்தில் பார்த்த பிறகு, அவர்கள் இருவரிடமும் அற்புதமேரி மிகுந்த பிரியத்துடன் இருக்கிறாள். வகுப்பில்கூட முதிர்ந்த பெண்ணைப்போல் நடந்துகொள்கிறாள். யாரிடமும் எதற்காகவும் சண்டை போடும் மனமே வரவில்லை அற்புதமேரிக்கு.

வண்ணநிலவனின் ஆண்களும் பெண்களும் யதார்த்த வாழ்வில் இருந்துகொண்டு, நம்மை மிகை யதார்த்தத்தின் அழகியலுக்குள் அழைத்துச் செல்கிறவர்கள். 

‘கடல்புரத்தில்’ குரூசு மிக்கேல், வாத்தி வேலை பார்க்கும் தன் மகனுடன் உடன்குடிக்குப் போக மறுக்கிறார். அவருக்குத் தான் பிறந்து வளர்ந்த மணப்பாடு கிராமத்தையும், சோறு போடும் கடலம்மையையும் விட்டுச் செல்ல மணமில்லை. லாஞ்ச் என்னும் விசைப்படகுகளின் ஆதிக்கம் மேலெழும் காலத்திலும், தன்னுடைய வல்லத்தைவிட்டுச் செல்ல மனமில்லை. லாஞ்சுகள் நடுக்கடல் வரை சென்று மீன்களை வாரிப்போட்டுக் கொண்ட பிறகும், தன்னுடைய வல்லத்திற்காகக் கொஞ்சம் மீன்களையாவது கடலம்மை பிடித்து வைத்திருப்பாள் என்று குரூசு நம்புகிறான். கரிப்பும் அரிப்புமான அந்த மணலில்தான் தன் உடல் கல்லறைக்குள் இறக்கப்பட வேண்டும் என்று ஏங்குகிறான் குரூசு. லாஞ்ச் கண்ணெதிரில் தீப்பற்றி எரிவதைப் பார்த்துக் கொதித்தெழும் குரூசுவின் பக்கத்து வீட்டு ஐசக், தன் கனவு சிதைந்த வெறியில் கொலை செய்கிறான். வெறி தணியும்போது சிதைந்த வாழ்வை நினைத்துப் பைத்தியமாகிறான். குரூசு மிக்கேலும் தன் வல்லத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு, அந்தப் பணத்துடன் கடல் முன்னால் வந்து நின்றவன், மனம் கொதித்துப்போய் மனநிலை பிறழ்கிறான். சின்னஞ்சிறிய வாழ்விற்குள், சின்னஞ்சிறிய கனவுகளைக் கொண்ட மனிதர்களின் வலி, துயரக் காவியமாகி நிற்கிறது.  

வீட்டையும் வல்லத்தையும் விற்றுவிட்டு வரும்போது பைத்தியமாகும் குரூசு, வாழ்வின் துயரப்பாடுகளுக்கெல்லாம் நிதானமாகத் தன்னை ஒப்புக் கொடுத்தவன்தான். தன் மனைவி மரியம்மை, அவளுடைய பால்ய சினேகிதனான வாத்தி வீட்டுக்குத் தினம் செல்கிறாள். வாத்திக்கும் மரியம்மைக்கும் என்ன உறவு என்று உறுதியாகத் தெரியாதென்றாலும், இருவரும் சந்தித்துக் கொள்வதைக் குரூசுவால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே குரூசுவின் வேதனையை அதிகரிக்கிறது. குரூசு மரியம்மையை நேருக்கு நேர் ஒன்றும் சொல்வதில்லை. அதிகப் போதையில் திட்டினால் உண்டு. மனைவி தன்னை மீறிப் போவதைப் பொறுத்துக்கொண்ட குரூசு, வல்லத்தையும் வீட்டையும் விற்றபோது மனம் பிறழ்கிறார். மகன் வீட்டை விற்றுவிட்டுத் தன்னுடன் வந்து இருக்கச்சொல்லி விடாப்பிடியாய் நிற்பதைக் கடந்து போகிறார். பண்டிகைக்குக் கடலுக்கு மீன் பிடிக்கப் போகக்கூடாது என்ற பறையக்குடியின் வழக்கத்தை மீறும்போது, குடித்துவிட்டு அரிவாளெடுக்கிறார். மகளும் அவள் அம்மையைப்போல் தன்னைவிட்டுப் போய் விடுவாளோ என்று நினைத்துக் கலங்கினாலும், குடித்த பிறகு எல்லாம் மறந்து போகிறார். குரூசு மிக்கேல் வண்ணநிலவனின் கதைமாந்தர்களில் முற்றிலும் வேறானவர். துயரங்களுக்கு எதிராகப் போராடும் குரூசு, தன் வாழ்வின் அடிநாதமான உணர்வுகள் தோற்கும்போது வீழ்ந்து போகிறார். 

‘ரெயினீஸ் ஐயர் தெரு’வின் இருதயம் டீச்சரின் அப்பாவுக்கு, அவர் மனைவி இறந்தவுடன், அவர்கள் வீட்டுத் தோட்டத்தைப்போல் வாழ்க்கை கரடு தட்டிப் போகிறது. அவரின் பிரசங்கங்களில் முன்புபோல் கம்பீரமில்லாமல் போகிறது. இத்தனைக்கும் எந்தக் காலத்திலும் அம்மா அப்பாவுக்குப் பிரசங்கம் தயாரித்துக் கொடுத்தது கிடையாது என்று இருதயம் சொல்லும்போதே, பாதிரியாரின் பிரசங்கங்களின் கம்பீரமாக, உயிர்ப்பாக, ஆசீர்வாதமாக இருந்தது அவரின் மனைவியென்று வாசகர் உணருமிடம் அற்புதமான கணம். அவர்கள் தாம்பத்தியத்தின் வேறெந்தப் பக்கத்தையும் சொல்லாமல், அம்மாவே தயாரித்துக் கொடுத்த பிரசங்கம்போல் மாறிப்போன அப்பாவின் பிரசங்கங்கள் என்ற வரியில் இருவர் ஒன்றிணைவின் ஆன்ம அழகு வெளிப்படுகிறது.    

வண்ணநிலவனின் பெண்களில் மரியம்மையைத் தவிர்த்து, மற்றவர்கள் எல்லோருமே வாழ்வின் போக்கிற்கு வளைந்து கொடுப்பவர்கள். மரியம்மை மட்டுமே தன் விருப்பத்தைக் கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறாள். விருப்பப்படிச் சிங்காரித்துக் கொள்வதும், சாயந்திரமானால் தன் மனத்திற்குப் பிடித்த வாத்தி வீட்டுக்குப் போவதையும் அவள் யார் நிமித்தமும் நிறுத்தவில்லை. குரூசும் பிள்ளைகளும் ஊரும் என்ன நினைத்தாலும் அவளுக்குப் பொருட்டில்லை.    

சாமிதாஸ் தன்னைவிட்டு வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்யப் போகிறான் என்று தேவாலயத்தில் ஓலை கூறுகையில் தெரியவரும்போது, ‘கடல்புரத்தில்’ பிலோமிக்குப் படபடப்பாக இருக்கிறது. கண்கள் குளமாகின்றன. வீட்டுக்கு வந்து தனிமையில் அழுகிறாள். அழுகையில் எதுதான் கரைந்தோடாமல் இருந்திருக்கிறது? பிலோமி தெளிவாகிறாள். சாமிதாஸால் வேறொன்றும் செய்ய இயலாது என்று யதார்த்தம் உணர்கிறாள். அதனால்தான் அவள் தன் காதலைக் கசந்துகொள்ளவில்லை. தன்னுடன் இருந்த சாயுங்காலத்தையும், எச்சில் ஈரத்தில் மின்னும் தன் கருத்த உதடுகளை ருசித்ததையும் சாமிதாஸால் மறக்க முடியாது, தன்னாலும் அவன் உடம்பின் வியர்வை வாசத்தை மறக்க முடியாது என்று நினைத்து ஆறுதல் கொள்கிறாள். 

நினைவுகளே இருவருக்கும் போதுமானதாக இருக்கிறது. சாமிதாஸூக்கும் பிலோமியை மறக்க முடியவில்லை. ஓலை கூறும் அன்றும் பிலோமியைப் பார்க்கும் அவன், அவளின் அழகில் தோய்ந்து மனம் அலைபாய்கிறான். பெரிய மனுஷிபோல், அவன் கல்யாணப் பத்திரிகை எடுத்துக்கொண்டு வரும்போது அழுகையில்லாமல் பேசி, அவனை அனுப்புகிறாள். இரண்டு சின்னஞ்சிறு உள்ளங்கள், பிரிவென்னும் கடும்பாலையை, எளிதாகக் கடக்கப் பார்க்கின்றன. எல்லாத் துயரங்களையும், இழப்புகளையும் மென்றுகொண்டே சிரிக்கத் தெரிந்த ரஞ்சி, அவர்களுக்குக் கண்முன்னால் வழிகாட்டியாக இருக்கிறாள். 

‘கம்பா நதி’ சிவகாமிக்குத் தன் தந்தையுடன் ‘சேர்ந்துகொண்ட’ சௌந்திரத்தைப் பார்த்தவுடன் ஒதுங்கிப்போகத் தெரியவில்லை. அவள் அம்மா ‘இவள்ளாம் ஒரு பொம்பளையா’ என்று முணுமுணுத்தாலும் சித்தி என்று ஒட்டிக்கொண்டு கல்யாண வீட்டில் அவளுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறாள் சிவகாமி. 

கோமதியோ, பாப்பையாவுடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது, அவன் சரியென்று சொன்னால் இப்படியே அநாதிக் காலத்தில் முடிவில்லா தச்சநல்லூர் சாலையில் நடந்துகொண்டே இருக்கலாம் என்று ஆசைப்படுகிறாள். அவன் விரல் கோத்துக்கொண்டு நடப்பதும், அவன் சட்டை மேலே படும் நெருக்கத்தில் நடப்பதும் பிடித்திருந்தாலும், சூழல் அவனைத் தன்னிடமிருந்து விலக்கி வைக்கும்போது, அவள் மனத்திற்குள் பாப்பையாவை மறந்தாளா இல்லையோ, அப்பாவுடன் வேலை பார்க்கும் குமாஸ்தாவை, எதிர்ப்பின்றிக் கல்யாணம் செய்துகொள்கிறாள்.

‘எம்.எல்.’ நாவலின் பெண்கள் வீட்டுக்கு வந்து போகிறவர்களுக்கு இட்லி அவித்துக்கொண்டே இருக்கிறார்கள். காப்பி கலக்கிறார்கள். ‘கம்பா நதி’யின் சுப்ரமணியம் பிள்ளையின் தங்கை பாக்கியம், தன் கணவன் சீட்டு விளையாடும்போது பிடிபட்டு, போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறான் என்று சொல்ல வரும் அண்ணன் மகன் குற்றாலத்திடம், அழுதுகொண்டே, “ரெண்டு தோசை சாப்புட்டுட்டுப் போயேன்” என்று சொல்கிறாள். 

‘ரெயினீஸ் ஐயர் தெரு’ இடிந்த கரையாளை, தாய் மாமன் வீட்டுக்கு மாட்டு வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போது, ஏழெட்டுப் பேர் சேர்ந்து அவளைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள். எல்லாருமே சொந்தக்காரர்கள்தான். திருச்செந்தூர் சப் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் கேஸ் நடந்தபிறகு, தூக்கிக் கொண்டுபோன விடலைப் பையன்களில் ஒருவனுக்கே வாழ்க்கைப் படுகிறாள். இனியும் சுருங்க வழியில்லாத அவளின் கறுத்த தோலும், கறுத்த கருப்பட்டிப் புகையிலைத் துண்டுபோல் தொங்க ஆரம்பித்துவிட்ட அவளின் மார்புகளும் அதையெல்லாம் பழங்கதையானதைச் சொல்கின்றன. பழங்கதைக்குள் அடங்கிப்போய் கிடக்கிறது அவளின் பேரழகுக் கதைகளும். 

இடிந்த கரையாளின் மருமகள் இருதயம் டீச்சருக்கோ, வெளிச்சமே இல்லாத தன் புருஷனுடைய வீட்டைப் பிடிப்பதே இல்லை. தன்னுடைய வீட்டிற்குள் புகுந்துவரும் வெளிச்சமும் காற்றும் எவ்வளவு அருமையானது என ஏங்குகிறாள். பவுர்ணமி காலங்களில் பட்டகச் சாலை முழுவதும் ஜன்னல் கம்பிகளினூடே வீசும் நிலா வெளிச்சத்தை அவளால் ஒருபோதும் மறக்க முடிந்ததில்லை. தொண்டை புகைச்சலில் சதா இருமிக்கொண்டே இருக்கும் புருஷனுக்காகக் கோழி வளர்த்தாலும், வீட்டுக்குள்ளேயே ‘இருந்து’ வைக்கும் கோழிகளைமீறி வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறாள். ‘இந்தா போயிடுவான், அந்தா போயிடுவான்’ என்று பன்னிரண்டு வருஷங்களாகப் படுத்துக் கிடக்கும் கணவன்மேல் இருதயத்து டீச்சரின் அன்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. எப்போதும் சுத்தமாக இருக்க நினைக்கும் இருதயம், கோழையும் சளியும் பரவிக்கிடக்கும் கட்டிலருகில் நாள் முழுக்க கணவனருகில் உட்கார்ந்திருப்பதும், கணவன் மனமுடைந்து போனால், அவனைக் கட்டித் தழுவிப் படுத்திருப்பதுமாக… கண்ணீர் ததும்பச் செய்யும் உயிர்க் காவியம். 

வண்ணநிலவன் மணப்பாடு மீனவக் குடும்பத்தின் பாட்டை எழுதினாலும், ரெயீனிஸ் ஐயர் தெருவின் கிறிஸ்துவக் குடும்பத்தின் வாழ்வை எழுதினாலும், அவரை ஈர்ப்பது, மெல்லிய அன்பினால் பிணைக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வுதான். சின்னஞ்சிறிய பறவைக்கூடுகளின் வாழ்க்கையில் பருவ நிலைகள் மாறலாம். ஒருபோதும் கூடு சிதறிவிடக் கூடாது என்ற கவனம் அவரின் எழுத்துகளுக்கு ஊடாகப் பின்னப்பட்டிருக்கிறது.

‘கம்பா நதி’ நாவலின் தொடர்ச்சியாக, ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவல் விரிகிறது. இரண்டையும் சில மனிதர்கள் இணைத்தாலும், ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ பொதுமையில் இருந்து எவ்வாறு விலகி விலகி, அனாதிக் காலத்திற்குள் சென்றுவிடுகிறது என்பதை இரண்டு நாவல்களும் சொல்கின்றன. 

‘கம்பா நதி’யில் உள்ளவர்களுக்கு விடியலுக்குமுன் ஆற்றில் கால் வைக்கவில்லையென்றால் நாள் தொடங்காது. ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ கிறிஸ்தவர்களோ ஒருபோதும் ஆற்றுக்குக் குளிக்க வருகிறவர்கள் அல்ல. நாடாக்கமார் கிறிஸ்தவர்களும் ஆற்றைப் பிரஷ்டம் செய்யாதபோது, ரெயினீஸ் ஐயர் தெரு கிறிஸ்தவர்கள் ஆற்றுப் பக்கம் வருவதில்லை. ஆற்றின் கரையோரத்தில் இருந்தும், ஆற்றுக்குக் குளிக்க வராததாலோ என்னவோ ரெயினீஸ் ஐயர் தெருவின் வீடுகளின் புறவாசல் அஸ்திவாரச் சுவர்கள் புராதன வெனீஸ் நகரத்து வீடுகளைப்போல் தண்ணீருக்குள் இருக்கின்றன. ஊரே ஆற்றை நோக்கை ஓடிக் கொண்டிருக்க, ஆறு ரெயினீஸ் ஐயர் தெருவின் புறவாசலில் நிலைகொள்கிறது. ஆறு தேடிச் செல்லும் தெரு எனும்போதே அதன் அழகு அபரீதமாய் அதிகரிக்கிறது.  

கம்பா நதிக்காரர்கள் கோடையில் நீருக்குத் தவிக்க, எப்போது பார்த்தாலும் மழை நாளில் பார்ப்பதைப் போலவே ரெயினீஸ் ஐயர் தெரு ஈரத்துடன் இருக்கிறது. கோடை காலத்திலும், கொஞ்சம் முன்னால்தான் அந்தத் தெருமீது மழைபெய்து நனைந்திருந்ததுபோல் இருக்கும் அதிசயம். வறட்சி மண்ணான பாளையங்கோட்டையில் ரெயினீஸ் ஐயர் தெரு ஓர் அபூர்வம். வண்ணநிலவனைப் போலவே பாப்பையாவும் மனசுக்குக் கஷ்டமாக இருக்கும் போதெல்லாம் ரெயினீஸ் ஐயர் தெருவுக்கு வந்துவிடுவான். வண்ணநிலவனின் பிரதிதானே பாப்பையா. 

ரெயினீஸ் ஐயர் தெரு மனிதர்கள் எல்லோருமே மழையின் அடிமைகள். மழை ஆத்மார்த்தம். பெரும் துக்கத்தின் அறிகுறியும். துக்கமும் ஆத்மார்த்தமாக இருக்க முடியாதா என்ன? தங்களின் துயரங்களுக்காகவே வானம் கண்ணீர் வடிக்கிறது என்று நினைப்பார்களோ என்னமோ, அவர்கள் மழை வரும்போது எதுவுமே பேசுவதில்லை. மழை பெய்கிற சத்தம் அவர்களைப் பேசவிடாமல் அடக்கிவிடுகிறது.  

ரெயினீஸ் ஐயர் தெரு டாரதிக்கும் இருதயத்துக்கும் மழையில் நனைய ஆசை. இருதயமோ இப்போது ஒருவனின் மனைவி, ஓர் ஆசிரியை. அவளால் நனைய முடியாது. டாரதியோ மாணவி. வீட்டுப் பெரியவர்கள் பற்றிய பயம்.

மொத்தம் ஆறே ஆறு வீடுகள் கொண்ட தெருவைப் பற்றிய நாவலான  ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வில், தெருதான் பிரதான கதாபாத்திரம். மனிதர்களின் சாம்பல் நிற துயரத்தின் சாயலுடன் மோனத்தில் இருப்பதைப் போலவே இருக்கும் தெரு. உலகத்திலேயே மிகவும் மேன்மையான இடமென்று தெருக்காரர்களுக்குப் பெருமிதம். எத்தனையோ விஷயங்களுக்குக் காரணம் சொல்ல முடியாததைப்போல் இதற்கும் காரணம் சொல்ல முடியாது.

தாய்மொழியை உயர்த்திப் பிடித்த ரேனியஸ் அடிகளாரை, அவர் காலத்தில், பொதுக் கல்லறைக்குள் அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. சாலையோரத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்தக் கல்லறையைச் சுற்றி, மெல்ல உருவான இந்தக் குறுகிய தெருவுக்கு இயல்பிலேயே தனித்த அம்சங்களும், வாழ்வின் அழகியலும் பின்னிப் பிணைந்ததற்கு கல்லறையும் காரணமோ?  

வீடுகளுக்கு நடுவே கல்லறையைக் கொண்ட தெருவில் யாராவது வாழ்ந்து வருவார்களா? கல்லறையை நடுவில் வைத்துக்கொண்டிருந்தாலும் ரெயினீஸ் ஐயர் தெருவாசிகள் மாதத்தின் முதல் வாரம் முழுக்க மீன் சாப்பிட்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். மழை பெய்த இரவுக்கு அடுத்த நாள், தெருவில் புது மணல் வந்தால் சந்தோஷப்படுகிற மனிதர்கள் அவர்கள். இன்னொரு ஆச்சர்யம் தெரியுமா? மழையாலும் ‘வயது’ மூப்பாலும் ரெயினீஸ் ஐயர் தெரு வீட்டின் சுவர்கள் எப்போது இடிந்து விழுந்தாலும் உட்புறமாக இடிந்து விழுகிறதில்லை. அவைகளுக்கு அப்படியொரு சத்தியம். தயை மிக்கச் சுவர்கள். பொதுவாகவே மனிதர்கள் சந்தோஷத்துடன் கூடிக் களித்துத் திரிந்து எவ்வளவு காலமாகிவிட்டது என்று ஏங்கும் தெரு என்பதால் அந்தத் தயை.

ஒரு முழமே தாழ்வாகக் கட்டின அறைகளைக் கொண்டது ஆசீர்வாதம் பிள்ளையுடைய வீடு. வீட்டின் கல்படியில் கல் தச்சன் செதுக்கிய தாமரைப் பூக்கள். இரண்டு பூக்கள் சிறியவைகளாகவும், அவைகளின் நடுவில் பெரிய தாமரைப் பூவொன்றும் இருக்கும்படியாக அந்தப் பூக்களில் பிருஷ்டம் அழுந்த யார் உட்கார்ந்தாலும் அவற்றின் குளிர்ச்சியை மறக்க முடியாது. ரெயினீஸ் ஐயர் தெருவில்தான் வெறும் கல்லில் இத்தனை பெரிய காரியம் பண்ணியிருந்தான் கல் தச்சன். நம்மில் அடுப்படி நடையில் உட்காராமல் யார்தான் பெரியவர்களாகி இருக்க முடியும்? ஆசீர்வாதம் பிள்ளையின் கல் தாமரையில் உட்கார்ந்து பெரியவர்களானவர்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்? கல் தாமரையின் குளிர்ச்சி, அவர்களின் இதயத்திற்குள்ளும் இடம் மாறியிருக்குமா? 

ரெயினீஸ் ஐயர் தெருவை மழையும் பண்டியலும் பிரிக்க முடியாதபடிச் சுற்றிச் சுற்றி வருகிறது. கெடுதலுக்கோ, சந்தோஷத்துக்கோ என்றாலும் சுழன்று, சுழன்று வந்து கூத்தாடுகிறது. 

திருவனந்தபுரம் ரோட்டில் சென்று முடிகிற இடத்தை எப்போது பார்த்தாலும் மனசுக்குக் கஷ்டமாக இருப்பதையும், அந்தக் கஷ்டமான இடத்தை மேய்வதற்காக ஏன் அந்தக் கோழிக் குஞ்சுகள் தேர்ந்தெடுத்தன என்றும் தெரியவில்லையே. நாழி ஓடு போட்ட வீடுகளிலேயே எப்போதும் சண்டையும் சச்சரவுமாகத்தான் கிடக்குமோ என்னவோ? அந்தச் சின்னஞ்சிறிய தெருவை நோக்கித்தான் எத்தனை கேள்விகள் பிறக்கின்றன வண்ணநிலவனுக்கு?

ரெயினீஸ் ஐயர் தெரு வீடுகளில் இருப்பவர்கள் பற்றி ஆசிரியரின் சொல் முறையாகத்தான் கதை சொல்லப்படுகிறது. கதையில் நேரடியான உரையாடலே இல்லை. நாவல் வெளியான 1981ஆம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், நாவலின் வடிவம், சொல்முறை, கதை சார்ந்து பரீட்சார்த்த நாவல். முதல் வீடு தொடங்கி, ஒவ்வொரு வீட்டைத் தொட்டும் கதை நகரும்போது, தானாகவே ஒரு கதை உருவாகிறது.

(தொடரும்)

கட்டுரைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வண்ணநிலவனின் நூல்களும் பதிப்புகளும் : 
நாவல்
கடல்புரத்தில் – 1977 – நர்மதா பதிப்பகம் 
கம்பா நதி – 1979 – அன்னம் (பி) லிட் 
ரெயினீஸ் ஐயர் தெரு – (1981) – கிண்டில் பதிப்பு 
காலம் (2006) – நவம்பர் 2016 – நற்றிணை பதிப்பகம்
உள்ளும் புறமும் – டிசம்பர் 2010 – கல்கி பதிப்பகம்
எம்.எல். – ஜூலை 2018 – நற்றிணை பதிப்பகம்
கவிதை
காலம் – ஜூன் 1994 – அன்னம் (பி) லிட்
கட்டுரைகள் 
பின்நகர்ந்த காலம் – முதல் பாகம் – டிசம்பர் 2012 – நற்றிணை பதிப்பகம்
பின்நகர்ந்த காலம் – கட்டுரைகள் – இரண்டாம் பாகம் – 2019 – சந்தியா பதிப்பகம் 
ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள் – கட்டுரைகள் – அக்டோபர் 2012 நற்றிணை பதிப்பகம்
சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள் – கட்டுரைகள் – டிசம்பர் 2014 நற்றிணை பதிப்பகம் 

Series Navigationவண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2 >>

4 Replies to “வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து:பாகம்-1”

    1. வண்ணநிலவன் பதின்மவயதில் எழுதத்துவங்கி 70 வயதுவரை எழுதியிருக்கிறார் என்பதே பிரமிப்பை அளிக்கிறது.அவர் காட்டும் அந்த அற்புத வாழ்வை வெண்ணிலாவின் கண்வழியே பார்க்கையில் இன்னும் அழகாக தெரிகிறது. பொருத்தமாக //நூற்றாண்டுக்கரையென்றாலும் தினமதைத்தழுவி ஓடுவது புதுப்புனல் அல்லவா?// என்று சொல்லியிருக்கிறார்.
      வண்ணநிலவன் கம்பாநதியின் குட்டிமைய மண்டபமென்றால் வெண்ணிலா வாசிப்பவர்களை கையைப்பிடித்து அழைத்துப்போய் அங்கே அமரசெய்து செய்துவிடுகிறார்.

      பத்துமணி வெயிலை ’உல்லாசமாக’ என்றது ரசிக்கும்படி இருந்தது ஆம் அது அப்படியேதான் இருக்கும். தென்காசி ஸ்டேஷனே யாருக்கோ வெகுகாலமாக காத்திருப்பதாக துயர் கொள்ளும் இவர் வண்ணதாசனுக்கு நெருங்கின சொந்தம் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்
      .
      இரவில் வாசிக்கும் வழக்கமிருக்கும் அண்ணனின் நண்பனுக்கு விளக்கேற்றிவிட்டுப்போகும் தங்கைகள் இருந்த காலத்தை நாம் இவரது கதைகளல்லாது வேறெப்படி அறிந்துகொண்டிருப்போம்? எத்தனை குறுகிவிட்டோம் மனதிலும், நினைவிலும், வாழ்வின் இயங்கியலிலும் இப்போது என்று ஆதங்கமாக இருந்தது. கதவும் அழைப்பு மணியும் மட்டுமல்லவே காவலாளிகளும் நாய்களும், அவை இருக்கிறதென்ற எச்சரிக்கைப் பலகைகளுமாக எத்தனை சின்ன, எத்தனை அற்பமான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இவ்வுலகிலிருந்து வண்ணநிலவன் திரைவிலக்கிக் காட்டும் அவ்வுலகை பார்க்கப்பார்க்கத் தீரவில்லை.

      வண்ணநிலவன் காட்டும் ஆண்கள் எனக்கு ஆச்சர்யமளிக்கிறார்கள். பக்குவமான நொய்மையான // நிழலில் வளர்ந்த பெண்களைபோல அமைதியான // இவர் காட்டும் ஆண்கள் மிது தனித்த பிரியம் உண்டாகிவிட்டிருக்கிறது. //அவர்களுக்கென்று சொந்த விருப்பம் இருந்தாலும் அதன்பொருட்டு உடனிருப்பவர்களை துன்புறுத்தும் மனமற்றவர்கள்// இந்த வரிகள் எத்தணை எத்தனையை சொல்லிவிடுகின்றன இல்லையா?

      அக்காவின் மனதை அறிந்துகொள்ள முயற்சிக்கும் தம்பிகளும், தொட்டில் சேலை நனைந்துவிட்டதாவென்று சோதிக்கும், மகளிடம் பூப்பந்து வாங்கிக்கொடுக்கும் தந்தைகளுமாக கண்ணை நிறைத்துக்கொண்டே இருந்தார்கள். அதிலும் புதுமாப்பிளையுடன் பேருந்து நிலையத்தில் இருக்கும் மகளுக்கு பிரியமான காதணியை கொடுத்தனுப்புகின்ற , அந்த’தூய ஆதித்தந்தையை. கண்ணின் நீர்த்திரை வழியேதான் பார்த்தேன், வண்ணநிலவன் காட்டும் தந்தைகள் ஒவ்வொருவருக்கும் மானசீக மகளாகி கொஞ்சம் வாழ்ந்து பார்த்துக்கொண்டேன்.
      நெல்லையப்பனையும் பாப்பையாவையும் வீட்டுச்செடிகள் என்றதும் அழகு. அன்பூற்றி வளர்க்கப்பட்டவர்களாயிற்றே!

      பிலோமி, ரஞ்சி, பூக்காரி, காந்திமதி, கோமதி,,அற்புதமேரி, சிவகாமி, பாக்கியம்,செளந்திரம், கரையாள், இருதயம் என்று இவர் சித்தரிக்கும் அத்தனை பெண்களுமே வெவ்வேறு பெயர்களில் இருக்கும் ஒரே பெண்ணென்றே தோன்றுகிறார்கள். முறிந்தகாதலை மனதுக்குள் பூட்டுபவர்கள், காதலை கண்ணீரில் கரைக்க முயலுபவர்கள், அப்பா சொல்லும் மாப்பிள்ளையை எதிர்ப்புக்களின்றி கல்யாணம் செய்துகொள்பவர்களென்று வாழ்வள்ளித்தரும் நஞ்சையும் அமுதென்றே பருகுபவர்கள் அத்தனைபேருமே.

      தனக்கென்று சில நியமங்களும் விருப்பங்களுமாய் இருக்கும், தனக்கான எல்லைகளுக்குள் தானென்றாலும் உயரப்பறக்கும் மரியம்மையின் மீதும் எனக்கு பிரியம்தான். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் அரிதான பெண்களில் மரியமும் ஒருத்தி.
      கரையாளின் பழங்கதைக்குள் அடங்கிப்போன பேரழகுக்கதைகளைப்போலவே வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட வாழ்வுக்குள் அடங்கிக்கிடக்கிறது வண்ணநிலவன் காட்டும் பெண்களின் அந்தரங்கக்கதைகளும் .

      ஆறு தேடிச்செல்லுமந்தத் தெருவும், அதன் ஈரமும் கல்தாமரையின் குளிர்ச்சியுமாக பெருமழை பெய்து கொண்டிருக்கும் மாலையில் வாசிக்கையில் வெண்ணிலா சொல்லி இருப்பது போலவே குளிர்ச்சி எனக்குள்ளும் நுழைந்து குளிரடித்தது.

      வண்ண நிலவன் கண்ணீரை, காதலை, கொலையை, மனப்பிறழ்வை, இறப்பை அன்னையை, தந்தையை, மகளை, முன்காதலியை, மரங்களை, தெருவை. ஆற்றை என எதைச்சொன்னாலும் அவையனைத்தையும் அன்பெனும் சரடில் கோர்த்துக்கொண்டே போகிறார். பேரன்பின் மொழியில் எழுதபட்ட கதைகள் அனைத்துமே!

      வண்ணநிலவன் தாமிரபரணித்தண்ணீரை பேனாவில் ஊற்றி எழுதுகிறாரென்றால், வெண்ணிலா மரங்களையும் மனிதர்களையும் பிரியத்தையும் ஊற்றி எழுதுகிறார். வண்ணநிலவன் அவர்களின் படைப்பை, அவர் காட்டும் மண்ணை, மனிதர்களை, சமூகத்தை உறவுகளை,உணர்வுகளை எல்லாம் வெண்ணிலாவின் அழகிய மொழியில் அறிந்துகொள்வது பிடித்தமான இனிப்பை இரண்டு முறை சாப்பிட்டதுபோல் தித்திக்கிறது. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.