ராஜா நடேசன் கவிதைகள்

துல்லியம்

இரண்டாம் மாடி கீழ்மூலை அறையின்
சன்னலுக்கு வெளியே
இலந்தை மரக்கிளையில்
இலையுடன் இலையாய்
கிடந்தது ஓர் பச்சைப்பாம்பு

எனக்கு சட்டென சிக்கியது
என் மகனிடம் நழுவியது
நீண்ட அலைக்கழிப்புக்குப்பின்
பிடித்துவிட்டான்
அதன் கூரான தலையையும்
பழுப்பு நிறக் கண்களையும்

அத்தனை நேரமும்
பதுங்கித்தான் இருந்திருக்கிறது
என் பேனாப் பெட்டிக்குள்
அந்தத் தேரை
சத்தியமாய்
என் மகளுடன் விளையாடவே
அதைப்பிடிக்கப்போனேன்
அதன் கண்களில் மினுக்கியது
என் மீதான அவநம்பிக்கை

முதல்முறை என் மேசையில் குதித்திறங்கி
மறுமுறை என் சன்னலுக்கு வெளியே பாய்ந்தது
மூன்றாம் தாவலில் சரியாக இறங்கியது
அந்த அரவத்தின் வாய்க்குள்

விழிவிலக்காமல்
தலை உடம்பு கால் என
உள்ளிழுக்கப்பட்டு மறைவதை
பார்த்துக்கொண்டே இருந்தன குழந்தைகள்
விரிந்திருக்கும் தசைகளில் மட்டுமே தெரியும் அதன் கருவளையங்களில் கண்பதித்து
பதட்டத்துடன் காத்திருந்தேன்
என் மகன் சற்றே குழப்பத்துடன் கேட்டான்
எப்படிப்பா
அதுக்கு அவ்வளவு சரியாக தெரியுமென
சொல் என்றது பாம்பு
சொல் என்றது தேரை.


இரை

ஓடிக்கொண்டிருக்கிறது
நதி
ஆண்டாண்டு காலமாய்
ஒரு கந்தலைப் போல
துவண்டு கிடக்கும்
இக்கோடையிலும்
ரோசமான ஒரு பிச்சைக்காரியைப்போல்
மறைத்ததே வைத்திருக்கிறது
அதன் பிலங்களை
அதன் பொறிகளை
கண்களே உடலாய் அம்முதலை
கன்றுடன் கரையில் சுற்றியலைகிறது
தாய்ப்பசு
நதிக்குத் தெரியும்
உயிர்தெழுந்தாடும் வைஸ்வாநரன்
கொண்டுவந்து சேர்ப்பான் தன் இரையையென
உடனே எரிந்துவிடுகிறது குருதியும் சதையும்
ஆனாலும் எலும்புகளை மட்டும் செரிக்கமுடியவில்லை
அதிலுண்டு பசுக்களும் முதலைகளும்


தன்னைத்தொலைத்தல்

ஒரு நள்ளிரவில்
நீ குடிக்கப்போகலாம் என்றாய்
சரி எனக்கிளம்பினோம்
குடித்தோம்
அந்த இரவு முடியவேயில்லை

அந்த நூலகத்திலும்
அப்படித்தான் ஆயிற்று
நாம் இருவரும் படிக்கத்தொடங்கிய புத்தகம்
இன்னமும் முடியாமல் தொடர்கிறது

நாம் கேட்கத்தொடங்கிய
இசைக்கோர்வை
நீண்டுகொண்டே போகிறது
முடிவின்றி

தப்பிவிட எத்தனித்து
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்

இப்படித்தான்
ஒவ்வொரு முறையும்
என்னை மட்டும்
கால வளையத்துக்குள்
சிக்கவைத்துவிட்டு
நீ முடிவிலியில் சஞ்சரிக்கிறாய்

ஒவ்வொருமுறையும்
என்னில் ஒரு பங்கை
அறுத்து எடுத்துக்கொண்டே
வீடு திரும்ப அனுமதிக்கிராய்

அப்படித்தான் ஒரு கண்ணில்லாமல்
வந்த என்னைப்பார்த்து
வீரிட்டலறின குழந்தைகள்
ஏற்கனவே
கைகளின்றி வந்ததற்காய்
என் மனைவி கோபம்கொண்டு போய்விட்டாள்

இப்படிச்சேகரிக்கும் என்
உறுப்புகளை
உன் குழந்தைகளுக்கு
விளையாடக்கொடுக்கிறாய்
அவர்களிடம் சொல்லியிருக்கிராயா?
நீ அறுக்கும்போது எனக்கு
வலிப்பதே இல்லையென்பதை.


கடவுளின் பகடை

மண்ணில் இருந்து வந்தது
மண்ணுக்கே செல்கிறது
அன்னமிட்ட மண்
எடுத்துக்கொள்கிறது கொடுத்ததனைத்தையும்
உயிர்ப்பிக்க வரும் தேவன்
எடுத்துச்செல்ல ஒன்றும் இல்லை
இறைஞ்சி நிற்கும் கடவுளிடம்
கையளிக்கிறது மண்
தான் உறிஞ்சிய அனைத்தையும்
பெற்றதைக்கொண்டு
அவர் நிர்மாணிக்கிறார்
சொர்க்கத்தையும் நரகத்தையும்
அங்கே சுற்றித்திரிகிறார்
ஐன்ஸ்டைன், மூளையில்லாமல்
**

2 Replies to “ராஜா நடேசன் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.