யு.ஆர்.அனந்தமூர்த்தி பற்றி

உடுப்பி ராஜகோபாலாச்சார்யா அனந்தமூர்த்தி ( 1932-2014) இந்தியா முழுவதும் அறிந்த ஒரு பொதுவெளி அறிவுஜீவி. ஆங்கிலப் பேராசிரியராக இருந்தபோதும்  தனது எல்லாப் படைப்புகளையும் தாய்மொழியான கன்னடத்திலேயே எழுதினார். குறைந்தது ஏழாம் வகுப்புவரை மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும் என்பது அவர் கொள்கை. ஆங்கில மொழியின் ஆதிக்க மனோபாவம் பற்றிய அவரது விமர்சனம் கடைசிவரை இருந்தது. தனது கலாசாரத்தின் ஆணி வேர்கள் எவை என்பதை உணர்ந்திருந்தாலும் கலாச்சாரம் என்பது வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டது என்பதையும் அறிந்திருந்தார். ஒரே சமயத்தில் பல்வேறு நூற்றாண்டுகளில் வாழும் இந்தியர்கள் எந்தக் கலாச்சாரத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் சக்தி படைத்தவர்கள் என்பது அவர் கணிப்பு.

 ’இந்த நிலமும், நீரும் உள்பட்ட எல்லா இயற்கைச் செல்வங்களும் உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானவை’ என்று  என் சிறு வயதில் கேட்ட ஹரிகதைப் பிரசங்கம் தான் எனது எல்லா நம்பிக்கைகளுக்கும் காரணமாக இருந்தது என்று அனந்தமூர்த்தி கூறியிருக்கிறார். அனந்தமூர்த்தியின் படைப்பு அடையாளத்தை உயர்த்திக்  காண்பித்து இந்திய இலக்கியத்தில் அவருக்கு ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தவை ஒரு நாவலும், ஒரு சிறுகதையும் தான். ‘சம்ஸ்காரா’ (சவ அடக்கம்-1965) நாவல் ஆச்சாரமான வைதீக சமுதாயத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரிய சிக்கலை அடிப்படையாக்க் கொண்டது. பிராமண தர்மத்திற்கு எதிராகவே வாழ்ந்த ஒரு பிராமணர் இறந்துவிட்டால் அவரை பிராமண தர்மத்திற்கு உட்பட்டு அடக்கம் செய்யமுடியுமா என்பது தான் அந்தச் சிக்கல்.  அதற்கு விடைகாண வேண்டிய மூத்த சாஸ்திரிகளான பிராணேஷாச்சாரியாரே தர்மத்தை மீறி புலனிச்சைக்கு உட்பட்டு விடுகிறார். சடங்குகள் என்னும் வழியில் மனித வாழ்க்கையில் பங்கு பெறும் மதத்திற்கு மனிதன் கொடுக்கும் இடம் பற்றிய கேள்வியை எழுப்பியது இக்கதை. அவசரநிலைப் பிரகடனத்தின்போது பெரும் அடக்கு முறைக்குள்ளான பட்டாபிராம ரெட்டியும், அவர் மனைவி சிநேகலதா ரெட்டியும் இப்படத்தை உருவாக்கினார்கள். மறைந்த எழுத்தாளர் லங்கேஷ் பிராமண தர்மத்தை அலட்சியப்படுத்தும் நாராயணப்பாவாக நடித்திருந்தார். பிராணேஷாச்சாரியராக  நடித்தவர் கிரீஷ் கார்நாடு. கன்னட சினிமாவின் புதிய அலையைத் துவக்கி வைத்தது ‘சமஸ்காரா’

அவரது ஒரு சிறுகதை ’கடஷ்ரத்தா’ (இறுதிச்சடங்கு-1969)  ஒரு இளம் விதவை ’வழி தவறிய’ கதையைச் சொல்கிறது. அந்த கிராமத்தின் ஆசிரியன் ஒருவனோடு கொண்ட தொடர்பால் அவள் கர்ப்பிணி ஆகி விடுகிறாள். அந்த விதவையின் துரதிர்ஷ்டம் அவர் ஒரு வேதப்பாடசாலையை நடத்தும் வைதீகரின் ஒரே மகளாகிப்போனது தான். வேதசாலையில் பயிலும் மாணவர் எல்லோரையும் தாயாக இருந்து பார்த்துக் கொண்டவள் அவள். ஊராரின் ஏளனத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளான வைதீகர் அவள் உயிருடன் இருக்கும்போதே அவளுக்கு இறுதிச் சடங்கு செய்து வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்.

பூனா திரைப்படக் கல்லூரியில் படித்தவரும், கன்னட இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவருமான கிரீஷ் காசரவள்ளி இக்கதையைப் படமாக எடுத்தார். ’கடஷ்ரத்தா’ கிரீஷ் காசரவள்ளியின் முதல் படம்.  ’ஒரு 27 வயதுப்பையன் இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறான் என்று என்னால் நம்பவே முடியவில்லை’ என்று சத்யஜித் ராய் வியந்து பாராட்டிய படம் இது. அனந்தமூர்த்தியின் பெரும்பாலான படைப்புகள் சமூக விமர்சனத்தை உள்ளடக்கியவையாகவே இருந்தன. படைப்பு வெளிக்கு அப்பாலும் தனது விமர்சனத்தை முன் வைத்துக்கொண்டேயிருந்தார். தான் ஒரு ‘உள்ளிருப்பு விமர்சகர்’ (Critical Insider) என்றும் கன்னட இலக்கிய வரலாற்றில் பசவண்ணர் உள்பட பல இலக்கியகர்த்தாக்கள் இத்தகைய ‘உள்ளிருப்பு விமர்சகர்’ களாகவே இருந்திருக்கிறார்கள்.

தனது படைப்புக்களில் பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்திய அனந்தமூர்த்தி மக்களின் மரபு சார்ந்த வழிபாட்டு முறைகளைப் பற்றிய விஷயத்தில் வேறொரு நிலைப்பாட்டை எடுத்தார். ஷிமோகா மாவட்டம் சந்திரகுத்தி என்னும் கிராமத்திலுள்ள ரேணுகாம்பா தேவியை வழிபடுபவர்கள் (எல்லா வயதிலுமுள்ள ஆண்களும் பெண்களும்)  வருடா வருடம் மார்ச் மாதம் நடக்கும் திருவிழாவில் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நிர்வாண வழிபாடு செய்வார்கள். அருகிலுள்ள வரதா நதியில் மூழ்கியெழுந்து ஒரு மோன நிலையில் நிர்வாணமாக  ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று 800 மீட்டர் உயரமுள்ள மலையுச்சியிலுள்ள கோயிலுக்குச்சென்று வழிபடுவார்கள். பகுத்தறிவாளர்களின் கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் பிறகு அரசாங்கம் இதைத் தடை செய்தது. அப்போது மூடநம்பிக்கை, ஆன்மீகம், பகுத்தறிவு பற்றிய பெரும் விவாதம் எழுந்தது. இந்த நிர்வாண வழிபாட்டை அனந்தமூர்த்தி ஆதரித்தார். ஆழ்ந்த இறையுணர்வில் ஒரு மறைபொருள் அனுபவத்தைத் தரும் நம்பிக்கை சார்ந்த இந்தப் பழக்கம் தனிப்பட்டவரின் உரிமை சார்ந்தது. இதில் பகுத்தறிவுக்கு இடமில்லை என்றார். 

கன்னட இலக்கியம் குறித்த அனந்தமூர்த்தியின் விமர்சனங்கள் கூர்ந்து கவனிக்கப் பட்டன. இந்துத்துவ சாயல் கொண்ட எஸ்.எல். பைரப்பாவின் எழுத்துக்களின்மீது கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார். எழுத்தாளரின் பின்னணியைப் பார்க்காமல் எழுத்தின் இலக்கியத் தரத்தை மட்டுமே பார்த்தவர் அனந்தமூர்த்தி.  தலித் எழுத்தாளர் தேவனூர் மகாதேவாவின் எழுத்துக்களின்மீது அவருக்கு நல்ல மரியாதை இருந்தது. ’இந்தியப் பண்பாடு என்பது ஒரு வீட்டின் முன்வாசல், பின்வாசல் என்று இரண்டு இடங்களிலும் மையம் கொண்டிருக்கிறது. முன்வாசலில் ஆண்கள் உலகியல், அரசியல், ஆன்மீகம் என்று பேசிக்கொண்டிருப்பார்கள். அங்கே ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்கப்படும். பின்வாசல் அந்த வீட்டுக்கு வரும் எல்லா மக்களுக்குமானது. அங்கே  பெண்கள் குடும்பச்சிக்கல்கள், மனித உறவுகள், பாலியல் விஷயங்கள், ஊர்வம்பு என்று பல செய்திகளையும் பகிர்ந்து கொள்வார்கள். எப்போதுமே பின்வாசல் தான் என்னை ஈர்த்திருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்.

 ’வைதீகப் பண்பாடும், அவைதீகப் பண்பாடும் முறையாகக் கலக்கும்போது தான் முழுமையான இந்தியப் பண்பாடு உருவாகும்’ என்று நம்பிய அனந்தமூர்த்தி தனது அரசியல் குருவாக ஷாந்தவேரி கோபால கௌடா என்பவரை ஏற்றுக் கொண்டிருந்தார். கௌடாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘அவஸ்தை’ என்கிற நாவலையும் எழுதினார். அது படமாகவும் வந்திருக்கிறது.  ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து  காகோடு சத்தியாக்கிரகம் (1951)  சோஷலிசவாதி லோஹியா தலைமையில் நடந்தபோது அதற்குத் தெருத்தெருவாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தவர் அனந்தமூர்த்தி. அந்தத் துண்டுப்பிரசுரங்கள் அவரது தந்தை நடத்தி வந்த அச்சகத்திலேயே அச்சிடப்பட்டன. அப்போது அவருக்கு வயது 19தான். அப்போது லோஹியாவுடன் ஏற்பட்ட நட்பு பல்லாண்டு காலம் தொடர்ந்தது. கோபால கௌடாவின் பாதிப்பு அனந்தமூர்த்தியின்மீது மட்டுமல்லாமல் ஜெ.ஹெச். படேல், பங்காரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் தேவராஜ் ஆகியோர் மீதும் இருந்தது. இவர்கள் எல்லோரும் பின்னாளில் கர்நாடக முதலமைச்சர் ஆனார்கள். ஆனால் சோஷலிசக் கனவுதான் தோற்றுப்போய்விட்டது.

படைப்பாக்கத்தில் மட்டுமல்லாமல் சமூகச் செயல்பாட்டிலும் ஒரு கலகக்காரராகவே வாழ்ந்தவர் அனந்தமூர்த்தி. அது தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்திருக்கிறது. கர்நாடகப்பள்ளிகளில் கன்னடமே முதல் மொழியாக இருக்க வேண்டும் என்ற கோகாக் கமிட்டியின் சிபாரிசை செயல்படுத்தச் சொல்லி 1982-ல் என்று நடிகர் ராஜ்குமார் தலமையில் கன்னட மக்கள் போராடியபோது, அப்படி எந்த  மொழியையும் சிறுபான்மையினர் மீது திணிக்கக் கூடாது என்று அனந்தமூர்த்தி சொன்னார். திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் வைக்கக்கூடாது என்று  ஒரு கன்னடப் பேராசிரியர் தலைமையில் போராட்டம் நடந்தபோது அதை எதிர்த்தும் குரல் கொடுத்தவர் அனந்தமூர்த்திதான். ’பெருந்தன்மை என்பது இந்தியப் பண்பாட்டின் குறிப்பிடத்தக்க அம்சம். இந்தியா முழுமைக்கும் பொதுவான திருவள்ளுவர் சிலையைக் கன்னடியர்களே நகரத்தின் பிரதான இடத்தில் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்’ என்று வாதிட்டார். ’திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைக்க ஓர் அரசியல்வாதிதானா கிடைத்தார்’ என்று ஆதங்கப்பட்டார். தமிழ் இலக்கியத்தின்மீது அவருக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது. சங்க இலக்கியத்தையும், சிலப்பதிகாரத்தையும் சிலாகித்துப் பேசுவார். மௌனியின் சிறுகதைகளைப் பற்றி அவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் இருந்தது. பேராசிரியர் தமிழவன், மறைந்த எழுத்தாளர் நஞ்சுண்டன் ஆகியோர் அவருடன் தொடர்பிலிருந்தார்கள்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்  பெருந்தன்மையைக் கடைப்பிடித்தார். அவருடன் 58 வருடங்கள் வாழ்ந்த அவரது மனைவி எஸ்தரின் கிறித்தவ நம்பிக்கையில் அவர் குறுக்கிடவே இல்லை. அவர் இறப்பதற்குச்  சில ஆண்டுகளுக்கு  முன்பு  எஸ்தர் ஜெருசலேமுக்குப் புனிதப் பயணம் சென்றுவந்தார்.  தனது இறுதிச்சடங்கில் கிறித்தவ முகமதியப் பிரார்த்தனைகளும் இடம் பெறவேண்டும் என்று அவர் விரும்பியபடியே நடந்தது. பெங்களூர் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள கலாகிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டதன் மூலம் ஓர் எழுத்தாளனுக்குரிய மரியாதையை கன்னடச் சமூகமும், கர்நாடக அரசும் அவருக்கு அளித்தன. அதே சமயம் மங்களூரிலும், சிக்மகளூரிலும் அவரது மறைவைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். இந்தியா ஒரே சமயத்தில் பல நூற்றாண்டுகளில் வாழ்கிறது என்று இதை வைத்துத்தான் அனந்தமூர்த்தி சொல்லியிருப்பாரோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.