யார் யாரை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்?

லிண்டா நோர்ட்லிங்

தமிழாக்கம்: கோரா


இங்கிலிஷ் கட்டுரை — செபியன்ஸ் (Sapiens) பத்திரிகை 17/07/2020 இதழ்/ கட்டுரை ஆசிரியர் : லிண்டா நோர்ட்லிங்

காலனியத்தின் குழந்தையாய்ப் பிறந்த மானுடவியல், முந்தைய காலனிய சாயத்தை உதிர்க்கப் போராடி வருகையில், இக்கல்விப் புலம் ஏற்கனவே இனவாதம், ஓரவஞ்சனை, பாகுபாடு ஆகியவற்றை எதிர்கொண்டிருக்கும் கறுப்பின மானுடவியலாளர்களுக்குத் தற்செயலாகச் சில தடைகளை வைத்திருக்கிறது.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு சிசோமோ கலிங்கா (Chisomo Kalinga)வுக்கு ஒரு சங்கடம் வந்தது. தற்போது மருத்துவ மனிதக் கலையியல் (Medical Humanities) அறிஞராய் இருக்கும் அவர், அப்போது லண்டன் அரசர் கல்லூரியில் (King’s College London) பட்டதாரி மாணவி. அமெரிக்கப் புனைவுகளில் HIV மற்றும் எய்ட்ஸ் ஆகியவற்றின் குறிப்பீடு பற்றிய ஆய்வுக்கு ஆதரவளிக்கும் கொடைகளைத் (grants) தேடிக் கொண்டிருந்தார். யாருமே ஆர்வம் காட்டவில்லை. “நிதியின் கரை சேர மாட்டேன் எனத் தோன்றியதால் உற்சாகமிழந்து விட்டேன்,” என்று நினைவுகூர்கிறார் கலிங்கா.

இந்த நிலை இரவோடு இரவாய் மாற நேர்ந்தது. கலிங்கா -வின் தாய்நாடான மலாவி (Malawi) ஆய்வுக்களமென்றால் அதற்கு நிதியளிக்கப் பலர் முன் வரலாம் என்று பல்கலையின் நிதிநல்கை(funding) ஆலோசகர் ஒருநாள் போகிற போக்கில் கலிங்கா-விடம் சூசகமாகக் குறிப்பிட்டார். அதைக் கேட்ட கலிங்கா உடனே தன் ஆய்வுப் பொருளை “ அமெரிக்க இலக்கியத்தின் HIV மற்றும் எய்ட்ஸ் குறிப்பீடுகளை மலாவி நாட்டினுடைய குறிப்பீடுகளுடன் ஒப்பீடு செய்தல்” என்று சிறு மாற்றம் செய்து நிதி உதவி பெற்றார். “இதோ, இதோ பணம் வர ஆரம்பித்துவிட்டது” – என்கிறார் அவர்

இருப்பினும் இந்த நல்வாய்ப்புக்கான மாற்றம் அவரை நிலைகுலைய வைத்தது. மலாவியில் பிறந்திருந்த போதிலும், கலிங்கா 8 மாதக் குழந்தையாக அந்த நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அமெரிக்காவில் வளர்ந்தார். அவர் அமெரிக்காவில் ஆராய்ச்சி நடத்த விரும்பிய ஒரு அமெரிக்கர். ஒரு கறுப்பின அறிஞர் என்பதாலேயே கொடையாளிகள் அவர் வெள்ளையர் அல்லாத அமெரிக்கர் அல்லாத வேறு சமூகத்தினருடன்மட்டுமே பணியாற்ற வேண்டுமென விரும்பினார்கள் ; அத்துடன் குறிப்பாக அமெரிக்காவை விட மலாவியே அவர் ஆராய்ச்சிக்கு மிகப் பொருத்தமான களம் என்றும் கருதினர். இவையே அவரை வெறுப்படைய வைத்தன.

அவருடைய முதலாவது யோசனை ஏன் நிதி உதவி பெறவில்லை என்பதற்கு கொள்கை ரீதியாகப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று, மலாவி போன்ற சில நாடுகள் வரலாற்று ரீதியாக குறை கவனம் பெற்றவை; எனவே அவை வருங்காலத்தில் முக்கிய கவனமும் முன்னுரிமையும் தரப்படவேண்டிய ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டவையாக இருக்கலாம்.

பல்கலை ஏன் அவருடைய மலாவி ஆய்வுக்கு உதவுவதில் தீவிரம் காட்டுகிறது; ஆனால் அமெரிக்க ஆய்வை மறுதலிக்கிறது என்று கலிங்கா நிதிநல்கை ஆலோசகரைக் கேட்டபோது பல்கலையின் முதுநிலைக் கல்வியகம் தாம் நிதியளிக்கும் ஆய்வுத் திட்டங்களின் நிலவியல் சார் குவிமையம் (geographical focus) வெவ்வேறானதாக இருக்க வேண்டுமென விரும்புகிறது என்ற பதில் கொடுத்தார். ஆராய்ச்சி பன்முகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கலிங்கா ஆதரிக்கிறார். எனினும் அந்த சமயம் தன் துறையில் PhD செய்யும் ஒரே கறுப்பினப் பெண்ணாக தான் மட்டுமே இருந்த நிலையில் ஏன் அவ்வாறு ஆராய்ச்சியை விரிவு படுத்துமாறு கேட்கப்பட்டார் என்று இன்றும் கேள்வி எழுப்பி வருகிறார்.

மனித இனமும் பண்பாடுகளும் நுண்ணோக்கியில் வைக்கப் படுகின்றன என்று கல்வித் துறைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கிய விவாதத்திற்குக் கலிங்காவின் அனுபவம் சாட்சி கூறுகிறது. மானுடவியல், சமூகவியல் உட்பட்ட பல துறைகளில் “யாரை யார் ஆய்வது” என்ற கருத்தைச் சூழ்ந்துள்ள அதிகார இயங்கியல் (Power Dynamics) பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. குறை-பிரதிநிதித்துவம் கொண்டுள்ள சமூகங்கள், நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களையும் உள்ளடக்கியதாக கல்வித் துறைகளை மாற்றுவது எப்படி என்கிற பொது விவாதத்தில் மானுடவியலின் இந்தக் கேள்விக்கும் இடம் உண்டு.

இதன் விளைவாக வரலாற்று ரீதியில் அயலாரே மானுடவியலாராய் ஆய்வு செய்திருந்த சமூகங்களைச் சார்ந்தோரின் வழக்கத்துக்கு மாறான குரல்களை இத்துறை ஓங்கி ஒலிக்க வைத்தது. சமூக அறிவியல் ஆராய்ச்சி அறிவுரைக் குழுவின் Ron Kassimir இவ்வாறு கருத்துரைத்தார்- “இத்தகைய உள்ளுணர்வு தீய நோக்கம் உடையதல்ல. ஆனால் அது வளரும் நாடுகளைச் சேர்ந்தோரே அவரவர் நாட்டு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற பேசப் படாத கருத்தாக உருவாக்கி விட்டது.”

கலிங்காவை வருத்தியது இக்கருத்தே. “உன் சொந்த நாட்டு ஆய்வை நீ எடுத்துக் கொள் எனறு அறிவுறுத்தப்பட்ட வெள்ளை இன மாணவனை நான் இதுவரை சந்தித்ததில்லை,” என்கிறார் கலிங்கா.

உபகாரச் சம்பளம் பெறுவதில் வெள்ளை நிறத்தவர் அனுபவிக்கும் கட்டின்மை, பிற நிறத்தவர்க்கு மறுக்கப்படுகிறது என்ற உணர்வே, கலிங்கா போன்ற கறுப்பின இளம் அறிஞர்களின் முக்கிய பிரச்னை. எல்லா ஆராய்ச்சியாளர்களும் சமநிலை பெறும் வரை, குறிப்பாக மேலை நாடுகளைப் பற்றிய கலந்துரையாடல்களில், செல்வாக்குள்ள குரல்கள் வெள்ளை மேலைநாட்டவருடையதாகவே இருந்து விடுவதால், உலகைப் பற்றிய பொருத்தமற்ற கருத்துக்களால் ஆராய்ச்சிக் களம் அவதிப் பட்டுக் கொண்டே இருக்குமென விமர்சகர்கள் விவாதிக்கிறார்கள். அமெரிக்காவில் கறுப்பின மக்கள் வாழ்வியக்கம் (Black Lives Matter) இனவேற்றுமைப் பிரச்னைகளை ஒளிவெள்ளத்தில் காட்டி வரும் இந்த வேளையில், இந்த மனவெழுச்சிகள் மேன்மேலும் அதிர வைக்கும்.

மானுடவியல், பல அறிவியல்களைப் போலவே சமூக மற்றும் இன ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக் களம் ஐரோப்பிய குடியேற்றத் திட்டத்தின் ஆதரவில் வளர்ந்தது மட்டுமல்லாமல் அதன் அதிகப் படியான முயற்சிகளான ஐரோப்பியர்கள் கைப்பற்றிய நிலப்பகுதியின் பூர்விகக் குடிமக்களை அறிவது, விவரிப்பது மற்றும் சில நிகழ்வுகளில் அதற்கும் மேலாக சென்று அவற்றின் மக்கள் மற்றும் விளை நிலங்கள்மீது ஆதிக்கம் செலுத்தி அவற்றை சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது ஆகிய அனைத்துத் திட்டங்களிலும் பங்கேற்றது.

தன் நுண்ணுணர்வுப் பருவ (formative) 1922 நூலான மேற்கு பசிஃபிக்-ன் அக்ரோநாட்ஸ் (Agronauts of West Pacific)-ல், போலந்து நாட்டு மானுடவியலாளரான ப்ரோனிஸ்லா மாலினோவ்ஸ்கி (Bronislaw Malinowski), இனப் பரப்பு விளக்கவியலாளரின் (ethnographer) களப்பணியை விவரிக்கையில் அவர்கள் ஐரோப்பியராகிய எங்களுக்கும் தூர நாட்டின் பூர்விகக் குடிகளுக்கும் இடையே நடுவராக அல்லது தூதராக பணியாற்றினார்கள் என்கிறார். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு உலக வல்லரசாக வளர்ந்து விட்ட அமெரிக்கா, பின்னர் தன் செல்வாக்கு உயர்ந்து வரும் பிரதேசங்களிலெல்லாம், அந்த பிரதேசத்தை நன்கறிந்த அறிஞர்களின் வழங்கீட்டை(supply) உறுதி செய்ய “பிரதேச ஆய்வுகள்” என்கிற பெயர் கொண்ட கல்வித் திட்டங்களைப் பெரிதும் விரிவு படுத்தியது. உண்மையில், பண்பாட்டு
மானுடவியலிலிருந்து கிடைத்த உள்ளொளிகளை (insights), ராணுவ சூழலில் பெரும்பாலும் ஊறு விளைவிக்கின்ற மற்றும் நெறிமுறையற்ற விளைவுகளுக்காக, அமெரிக்கா இரண்டாவது உலகப் போரிலும், வியட்நாம் போரிலும் மற்றும் இதர சண்டைகளிலும் பயன்படுத்திக் கொண்டது.

இந்த கல்வித்துறை தன் காலனித்துவ மரபிலிருந்து விலகி ஓரளவு பாதையைச் சரிசெய்துகொண்டு பல வழிகளில் உருமாறியிருக்கிறது. 1970-ஆம் ஆண்டு முதல் “பிரதேச ஆய்வுகள்” மேலும் மேலும் ஆய்வில் உள்ள பிரதேசங்களின் சேர்த்துக் கொண்டுள்ளன.

100 ஆண்டுகளாக 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வுக்கு நிதியளித்து வரும் SSRC-ன் நிகழ்வுகள் துணைத் தலைவர் காசிமிர், இந்த மாற்றத்தால் உள்ளூர் அறிஞர்கள் எழுப்பியுள்ள புலமை அடித்தளம் அயலாருடையதை விட பெரிதும் அதிகமாகியது என்று குறிப்பிடுகிறார். கடந்த சில பத்தாண்டுகளில் அவருடைய நிறுவனமும் மற்றும் பிற கொடையாளர்களும் இந்த பிரதேசங்களில் ஆய்வு நடத்தி அவற்றின் சவால்களுக்கு பதில் கொடுக்கக் கூடிய நிகழ்வுகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்.

அமெரிக்காவிலுள்ள மானுடவியல் கொடையாளி Wenner-Gren அறக்கட்டளையின் முதன்மை அதிபர் டானிலின் ரதர்போர்ட் (Danilyn Rutherford) இவ்வாறு கூறுகிறார்: “மானுடவியல் உண்மையிலேயே இக்கணம் உற்சாகமூட்டும் இடத்தில் இருக்கிறது. ஒரு புதிய தலைமுறைப் பெயர்வு ஏற்பட்டுள்ளது. துறையின் காலனிய சாயத்தை அகற்ற வேண்டியதின் அவசியமும் அதை நிறைவேற்றும் வழிகளும் குறித்த விழ்ப்புணர்வு வந்துள்ளது.” (SAPIENS, வென்னர்-க்ரேன் அறக்கட்டளையின் ஒரு தற்சார்புடைய ஆசிரியர் உரைகொண்ட வெளியீடு.)

“இதன் விளைவாக பாரம்பரியமாக ஆய்வு செய்யப்படுகிற ஆனால் ஆய்வாளராக முடியாத சமூகத்தின் மக்கள் இப்போது திட்டங்களில் பங்கேற்று ஒரே இடத்தில் ஆராய்ச்சியாளராகவும் ஆய்வுப் பொருளாகவும் இருந்து கொள்ள ஊக்குவிக்கப் படுகிறார்கள்” என்று விளக்குகிறார் ரதர் ஃபோர்ட். அயலார் வருகைதந்து தாம் ஆய்வு நடத்தும் சமூகங்களின் மீது தங்கள் தீர்ப்பை திணித்து அவர்களைக் காயப்படுத்தும் காலனிய பரம்பரைப் பழக்கத்தை இந்த பெயர்வு(shift) எதிர்த்து நிற்கும் என்ற நம்பப்படுகிறது.

ஆனால் களத்தில் அடிப்படை ஏற்றத் தாழ்வுகள் தங்கி விடுகின்றன. உதாரணமாக U.S மற்றும் U.K புதைபொருள் ஆராய்ச்சிக் களங்களில் கறுப்பின அறிஞர்கள் குறிப்பிடத் தக்க வகையில் மிகவும் அரிதான பிரதிநிதித்துவமே பெற்றிருக்கிறார்கள். உயிரியல் மானுடவியலாளர்கள் பற்றிய 2018 கணக்கெடுப்பின்படி மொத்த முதுநிலை மற்றும் முனைவர் பட்டதாரிகளில் குறை-பிரதிநிதித்துவம் கொண்டுள்ள கறுப்பினர், ஆசிய அமெரிக்கர், லட்டினோக்கள்(Latinos) மற்றும் நேட்டிவ் அமெரிக்கன் அறிஞர்களின் விழுக்காடுவெறும் 8-லிருந்து11-க்குள் தான் இருந்தது. மேலும் U.S தேசிய அறிவியல் அறக்கட்டளையின் பதிவுப்படி 2014-ல் மானுடவியல் பட்டப்படிப்பு (எல்லாத் துணைத் துறைகளையும் சேர்த்து) மேற்கொண்ட வெள்ளை இன (ஐரோப்பியன் -அமெரிக்கன்) மாணவர்களின் விழுக்காடு 71.7% என்று அதே ஆய்வு குறிப்பிட்டது.

கலிங்கா சொல்வது போல், பன்மயம் (diversity) இல்லாமையால் வரும் அழுத்தமே தனித்த கறுப்பினத்து அறிஞர்களை தம் சொந்த நாட்டு ஆய்வுக்கு இணங்கச் செய்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் பிறரின் பண்பாட்டு ஆய்வு மேற்கொள்வதைத் தவிர்க்கும் செயல்பாடுகளால், முன்பே வெளிப்படையான அல்லது உள்ளடக்கமான இனப் பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ள கல்வியாளர்கள், ஒத்த நிலையிலிருக்கும் வெள்ளை இனத்தவரைப் போலன்றி, தங்கள் ஆய்வுக் களங்களை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டி இருப்பதால் அதிகச் சுமையை உணர்கிறார்கள்.

யாருக்கு யாரை ஆய்வு செய்ய அனுமதி தரப்படுகிறது என்பது குறித்த தரவுகள் பெருமளவில் இல்லை. எளிதில் உணரக்கூடிய எண்ணிக்கைகள் இல்லாத நிலையில், எந்த அளவுக்கு வம்சபரம்பரை, இனம் அல்லது பிறந்த நாடு ஆகியவை ஆய்வுப் பிரதேசங்களுடன் தொடர்புடைமை காட்டுகின்றன என்று தைரியமாக சொல்வது கடினம். அந்த தரவுகள் எளிதில் கிடைப்பதாய் இருந்தாலும், ஆய்வாளர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட விவாதப் பொருளிலோ அல்லது பிரதேசத்திலோ கட்டாயப் படுத்தப் படுவதாக உணர்கிறார்களா அல்லவா என்பதை அறிவது கடினம்.

எனினும் வாழ்ந்த அனுபவத்தின் பதியப் படாத துணுக்குச் செய்திகள் பெருகி வருகின்றன. டெபோரா (புனை பெயர்) என்னும் கிழக்கு ஆப்பிரிக்க சமூகவியல் பட்டதாரி, U.K-ல் தன் முது நிலை படிப்பு படித்தவர். தன் உண்மைப் பெயரை பயன் படுத்தினால், அது Ph.D நிதி உதவியை பாதிக்கும் என்கிறார். மத்திய கிழக்கின் அரேபிய வசந்த கிளர்ச்சிகளை ஆய்வு செய்வதைத் தவிர்க்குமாறு பிற கல்வியாளர்கள் தன்னை எச்சரித்ததாகக் கூறுகிறார்.

“ஆஃப்ரிக்காவில் பிறந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் குவியம் பிறந்த நாட்டை ஒட்டிய விவாதப் பொருளாக இல்லாமல் மாறுபட்டு இருந்தால் நிதி உதவி பெறுவது மிகவும் கடினம் என்பது ஆப்பிரிக்க அறிஞர்களின் பொதுவான அபிப்ராயம்” என்கிறார் டெபோரா. வேறு விதமாகச் சொல்வதென்றால், ஆஃப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் தங்கள் சொந்த சமூகத்தை ஆய்வு செய்யுமாறும் அல்லது கலிங்காவுக்கு சொல்லப்பட்டது போல் எந்த நாட்டை ஆய்வாளரின் சொந்தநாடு என்று நிதி வழங்குவோர் உணர்கிறார்களோ அந்த நாட்டை ஆய்வு செய்யுமாறும் வலியுறுத்தப் படுகிறார்கள் என்று டெபோரா நம்புகிறார்.

சிங்கப்பூரை பூர்விகமாகக் கொண்டவரும் தற்போது U.K ப்ருனேல் (Brunel) பல்கலையில் பணியாற்றி வருபவருமான லியானா சுவா (Liana Chua) என்னும் சமூக மானுடவியலாளர், வெள்ளையர் அல்லாத மானுடவியலாளர் எதிர்கொள்ளும் சவாலின் வேறொரு முகப்பை நினைவு கூர்கிறார்.அவர் அவருடைய பூர்விகம் மற்றும் தோற்றம் சம்பந்தமுள்ள பலதரப்பட்ட அலுவல் எதிர்பார்ப்புகளை எதிர் கொண்டார். அவர் போர்னியோவில் களப்பணி ஆற்றிவருவதைக் கூறினால், அங்கிருந்து வந்தவரா நீங்கள் என்றோஅல்லது உங்கள் குடும்பம் அங்கு இருக்கிறதா என்றோ கேட்கப் படுகிறார். அவர் இல்லை என்று சொன்னால் மக்கள் வியப்படைகிறார்கள். “வெள்ளை இனத்து மானுடவியலாளர்கள் வேறொரு வெள்ளையர் பெரும்பான்மை கொண்ட சமூகத்தை ஆய்வுக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் இதே கேள்விகளை அவரிடம் கேட்பார்கள் என்று நான் நினைக்கவில்லை,” என சுவா சொல்கிறார்.

இந்த வற்புறுத்தல்களும் ஒருதலைச் சார்புகளும் சிக்கலான விளைவுகளுக்கு காரணமாகி விடுகின்றன. சொந்த பிரதேசங்கள் மற்றும் சமூகங்கள் தவிர பிறவற்றில் ஆய்வு மேற்கொள்வதில் வெள்ளையர் அல்லாத மாணவர்களும் அறிஞர்களும் ஓரங்கட்டப் படும் போது துறை முழுதுமே தோற்றுப் போகிறது என்கிறார், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையின் ஆப்பிரிக்க அரசியல் துறையின் இணைப் பேராசிரியராக உள்ள சிமுகை சிகுடு (Simukai Chigudu). “எது முக்கியமானது, எது அறிவார்ந்த அணுகலுக்குத் தகுந்தது,எது அத்தேவை இல்லாதது ஆகியன குறித்த ஒருமித்த கற்பனையை ஒருபோதும் எங்களால் உருவாக்க முடியாமல் போய்விடுகிறது,” என்கிறார் அவர். ஆய்வாளர்கள் தம் சொந்த நாடுகளையோ சொந்த பண்பாடுகளையோ ஆய்வதில் அனுகூலங்கள் ஏதுமில்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார் சிகுடு. அத்தகைய நபர்கள் தாம் ஆய்வு செய்யும் சமூகத்துடன் சிறப்பாக இணைந்திருப்பதாக உணரக் கூடும். “ அத்தகையோர் பெரும்பாலும் உள்ளொளியும் பிணையங்களும் (networks) பெற்றிருப்பதால் அவற்றை ஒன்று திரட்டி கல்வி நிதி சேவையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அது முற்றிலும் கட்டுப்படுத்துவதாக (limiting) ஆகி விடலாம்” என்கிறார்.

அமெரிக்க மானுடவியலிய கூட்டமைப்பின் தலைவர் அகில் குப்தா, “எல்லா ஒருதலை சார்புகளின் ஒட்டு மொத்த விளைவு உலகளாவிய ஆராய்ச்சிகளில் பார்வைக்கு உடனே கிட்டாத இடங்களை உருவாக்கி விடும்,” என்கிறார். அபரிமிதமான அமெரிக்க மானுடவியலாளர்கள் பிற தேசியங்களையும் பிராந்தியங்களையும் ஆய்வு செய்து வருகிற போதிலும், பூமிக் கோளத்தின் வடபகுதியின் அதிகாரக் கட்டமைப்பை விமர்சன நோக்கில் ஆராயும் வெள்ளையரல்லாதார் அல்லது சரித்திர காலந்தொட்டு குறை பிரதிநிதித்துவம் பெற்று வரும் குழுவின் உறுப்பினர் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர் என்கிறார் அவர்.

“U.S, U.K -யின் அதிகார மையங்களின் ஆய்வு என்கிற ஒரு மிகப் பிரம்மாண்டமான திட்டத்தை நிறைவேற்ற பெருமளவில் குறைபிரதிநிதித்துவ குழுவினர் தேவைப் படுவார்கள்,” என்றும் குப்தா கூறுகிறார்.

தற்போது குறைபிரதிநிதித்துவ சமூகங்களின் அறிஞர்களுக்கான நிதியளிப்புத் தேவை பற்றி அதிக விழிப்புணர்வு சொந்த நாட்டிலும் பன்னாட்டு அமைப்புகளிலும் ஏற்பட்டுள்ளது. இந்த சிந்தனை மாற்றம் உலகெங்கிலுமுள்ள குறை பிரதிநிதித்துவ குழுக்களின் அறிஞர்கள் மானுடவியலில் பங்களிப்பதற்கும் கலந்து கொள்வதற்கும் உதவக் கூடும்.

ஆனால் இன்றும் நிதிஅளிப்பு நிறுவனங்கள் அரிதாகவே இந்த அறிஞர்கள் மேலை நாட்டு சமூகங்களையும் இனங்களையும் ஆய்வு செய்வதை ஊக்குவிக்கின்றன;அநேக மேலைநாட்டு அறிஞர்கள் மேலை நாடுகள் அல்லாத பிரதேசங்களில் ஆய்வு செய்ய தாராளமாக நிதி அளித்து ஊக்குவிக்கப் படுவது போல் அல்ல. இந்தியானா பல்கலையில் மானுடவியலாளர்களாய் இருக்கும் ஆன் பைபர்ன் (Anne Pyburn) மற்றும் ரிச்சர்ட் வில்க் (Richard Wilk) ஆகிய இருவரும் இந்த பிரச்னையில் அதிகமாக சிந்தித்துள்ளனர்.

மத்திய மேற்கு அமெரிக்காவிலுள்ள ஒரு குறிப்பிட்ட சர்ச் மத போதகர்களால் 75 ஆண்டுகளாக வருகை தந்துகொண்டிருக்கப்பட்ட ஒரு கிராமத்திலிருந்து வந்த ஒரு மெக்ஸிகன் மானுடவியலாளரின் கதையைச் சொல்கிறார் வில்க். மத போதகர்களின் அந்த அமெரிக்க நகரம் அவர்களின் பயணத்தால் என்ன மாற்றம் பெற்றது என்பதை ஆராய்ச்சி செய்ய விரும்பினார் அந்த மெக்ஸிகன் அறிஞர். அவருடைய முன்மொழிவு “உண்மையில் முதல் தரமானதாக” இருந்தது என்கிறார்,வில்க், ஆனால் அந்த அறிஞர் நிதிஉதவி பெறமுடியவில்லை.

வெளிநாட்டு அறிஞர்கள் யு.எஸ் ஸிலும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட பிரேதேசங்களிலும் ஆராய்ச்சி நடத்த உதவுவதற்கான அறக்கொடை நிறுவ 50000 US டாலர் நிதி திரட்ட பைபர்ன் மற்றும் வில்க் கிளம்பி இருக்கிறார்கள். வென்னெர்-க்ரேன்-ஆல் நிர்வகிக்கப் படப் போகிற பைபர்ன்-வில்க் இடமாறு தோற்ற ( Parallax) ஆராய்ச்சி அறக்கொடை நிதிவழங்கலில் உள்ள சில கட்டமைப்பு மற்றும் ஏற்றத் தாழ்வுப் பிரச்னைகளைச் சமாளிக்க உலகின் பிற பகுதியைச் சேர்ந்த மானுடவியலாளர்கள், தொல்லியலாளர்கள் (Archaeologists),இனக்குழு வரலாற்றியலாளர்கள் (Ethnohistorians) மற்றும் இனவரைவியலாளர்கள் (Ethnographers) ஆகியோருக்கு நிதிஉதவி அளிக்கும்.

பைபர்ன் மற்றும் வில்க் கூற்றுப் படி, யு.எஸ் ஸில் பயிற்றுவிக்கப் பட்ட பெரும்பாலான வெளிநாட்டு மானுடவியல் பட்டதாரி மாணவர்கள் களப்பணியாற்ற தம் நாட்டுக்குப் போகவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பெரும்பாலும் யு.எஸ் மாணவர்கள் அமெரிக்க பண்பாட்டு ஆய்வு மேற்கொள்வது தடுக்கப் பட்டே வருகிறது. “மானுடவியல் எவ்வளவோ முன்னேறி வந்திருக்கிறது, ஆயினும் நாம் தொடர்ந்து காலனிய விடுவிப்பு(decolonizing) திட்டத்தை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் நாம் இன்னும் பல நாறும் மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறோம்” என்கிறார் வில்க்.

இதற்கிடைய பெருமளவில் தனியார் துறையிடம் நிதிதிரட்டி வரும் SSRC, தான் ஆதரவளிக்கும் வழக்கமான ஆராய்ச்சிக் களங்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக அதிக திட்டங்களுக்கான நிதி திரட்ட சுறுசுறுப்புடன் பிற கொடையாளிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. உதாரணமாக, இந்த ஆண்டில் ஆலோசனைக்குழு கோவிட-19 சார்ந்த சமூக அறிவியல் திட்டங்களுக்கு நிதியளிக்கும் நிகழ்ச்சி நிரலை உருவாக்கி இருக்கிறது. இதில் உலகெங்கிலுமுள்ள ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கலாம். அதன்படி கென்யாவின் ஆராய்ச்சியாளர் இத்திட்டத்தில் சேர்ந்து அமெரிக்காவை ஆய்வு செய்ய எவ்வித தடையும் இல்லை என்றும் பெருங்கொள்ளை நோய்ப் பரவல் சார்ந்த பயணத் தடைகள் அது போன்ற முயற்சிகளை தாமதப் படுத்தலாம் என்றும் காசிமிர் தெளிவுபடுத்துகிறார்.

இந்த பிரச்னைகளை ஆராய்ச்சிக் களம் சமாளித்து வரும் போதே, புதிய பிரச்னைகள் எழலாம் என்கிறார் சுவ. தென் கிழக்கு ஆசியாவுக்குள் அவருடைய குவியப் பிரதேசத்திலேயே “யார் யாரை ஆய்வு செய்ய அனுமதிக்கப் படுவார்கள்” என்பதில் மேலைநாட்டு ஆராய்ச்சிகள் versus பிறநாட்டுஆராய்ச்சிகள் என்ற இருமக் கருத்துருவில் (binary concept) பொருந்தாத பிளவுப் பெயர்ச்சிக் கோடுகள் (fault lines) பல உள்ளன என்கிறார்.

உதாரணமாக, சிறப்புரிமை பெற்றிருக்கும் இனக் குழுவிலிருந்து வரும் மானுடவியலாளர்கள், முன்பு காலனிகளாக இருந்த (இந்தோனேசியாபோன்ற) பிரதேசங்களின் விளிம்பு நிலை இனங்களை ஆய்வதும் அல்லது தனக்கு நடப்பது போல், பிரதேச அதிகாரம் கொண்ட இனங்கள் குறைவான அதிகாரம் அளிக்கப் பட்டுள்ள உள்ளூர் மக்களிடம் ஆய்வு நடத்துவதும் வழக்கான ஒன்று தான் என்று சுவ அவதானிக்கிறார்.

“வட கோளத்திலுள்ள மானுடவியல் கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு இவை போன்ற குழப்பான இயக்கச் சக்திகள் (messy dynamics) பெரும்பாலும் புலப்படாதிருக்கின்றன,” என்கிறார் சிவ. “மானுடவியலில் ஆதிக்கம் செலுத்திய மற்றும் இன்னும் செலுத்திவரும் “பருத்த மோசமான வெள்ளையன்” என்று அழுத்திச் சொல்வது முக்கியமே என்றாலும் அதுவே மானுடவியலில் உள்ள வேற்றுமையின் பிற வடிவங்களான, இயக்கவியல் சக்திகள் (power dynamics) மற்றும் ஏற்றத் தாழ்வுகள் ஆகிய அனைத்திற்கும் காரணங்களை கண்டுபிடிப்பதையும் விமர்சிப்பதையும் கடினமாக்கி விடுகிறது என்று சிவ விவாதிக்கிறார்.

இத்தகைய சிக்கல்களை மானுடவியல் களம் உணர்ந்து வருகிறது என்ற உண்மை கலிங்காவுக்கு அற்ப ஆறுதலாக அமையலாம். PhD திட்டத்தை மாற்றிய பின்னர், அவர் தன் கல்வி சாதனைக்குப் பொருத்தமான முது முனைவர் ஆராய்ச்சியாளர் பதவியைத் தேடிக்கொள்ள பெரிதும் அவதியுற்றார். பல ஆய்விதழ்கள், அவருடைய ஆய்வின் புவிசார் குவியம் (geographical focus) மிகக் குறுகியது மற்றும் அவருடைய ஆதாரங்கள் பெருமளவில் மரபு சாராதவை என்றும் கருதியதால், பதிப்பிடுவது ஒரு சவாலாக இருந்தது.

பதிலாக, அவர் ஒரு மலாவி அறிஞர்கள் பிணையத்தை உருவாக்கி அதில் பிற நாடுகளின் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர்களையும் சேர்த்துக்கொண்டு அவர்களின் ஆய்வுப் பணிகள் எளிதில் அனைவர்க்கும் தெரியச் செய்யக் கூடிய பான்-ஆப்பிரிக்க பன்னாட்டுப் பிணையமாக அதை மேம்படுத்தினார்.

இறுதியாக கலிங்கா எடின்பர்க் பல்கலையின் சமூக மானுடவியல் துறையில் தற்போதய பதவியை தனதாக்கிக் கொண்டு மலாவியில் உடல் நலம் பற்றிய உரையாடல்களில் இலக்கியம் மற்றும் வாய் வழி பாரம்பரியங்களின் பயன்பாட்டை ஆய்ந்து வருகிறார் அவர் தன் PhD பற்றி இவ்வாறு கூறுகிறார்: “சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போய் என்சொந்த பண்பாட்டு வெளியை நன்கறிந்து திரும்பிய வாய்ப்பைப் (குவியத்தை மாற்றியதால்) பொருத்த வரை வருத்தம் ஏதுமில்லை. ஆனால் அது நான் உணர்வு பூர்வமான ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருந்த திட்டப் பணிகளை விட்டுக் கொடுத்ததால்தான் கிடைத்தது.”

கட்டுரை ஆசிரியர் குறிப்பு: Linda Nordling, தென்ஆப்பிரிக்காவின் கேப் டௌனில் வாழும் சார்பிலா அறிவியல் பத்திரிகையாளர் மற்றும் பதிப்பாசிரியர்.
SAPIENS: மானுடவியல் பத்திரிக்கை
சுட்டி:
“Anthropology colonial history – Who Gets to Study Whom? – SAPIENS” https://www.sapiens.org/culture/anthropology-colonial-history/
சொல்லடைவு :
மருத்துவ மனிதக் கலையியல்(Medical Humanities) : மருத்துவர்களுக்கான வாழ்வியல் புலங்கள் கல்வி
SSRC : Social Science Research council


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.