மாற்று

பிரபு மயிலாடுதுறை

உங்களுக்கு அரும்பூர் தெரியுமா? கேட்பானேன். சீர்காழி தாலுக்காவில் உள்ள கொள்ளிடத்தின் முகத்துவார கிராமங்களில் ஒன்று. நூற்று ஐம்பது குடும்பங்கள் இருக்கும். தேவைகளுக்கும் வசதிகளுக்கும் தோணியில் கொள்ளிடத்தைத் தாண்டி வரவேண்டும். இல்லையென்றால் பல மைல் தூரம் சாலையில் சுற்றி வருதல் தவிர்க்க முடியாதது.  கிராமங்கள் தனித்து நினைவுகளில் நிற்பது எப்போதாவது மட்டுமே நிகழ்கிறது. முன்பெல்லாம் பேருந்து இயக்க உரிமம் தரும் போது ஒரு நகரையும் ஒரு கிராமத்தையும் இணைத்தவாறு தருவார்கள். தஞ்சாவூர் மகேந்திரபள்ளி என ஒரு பேருந்து. நான் தஞ்சாவூரிலிருந்து கொள்ளிடம் வரை வந்து அங்கிருந்து ஒரு டவுன் பஸ் பிடித்து சிதம்பரம் வந்திருக்கிறேன். இன்று சாலையில் பாருங்கள். பெரும்பாலான பேருந்துகள் சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன; சென்னையிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன. சரி, நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன். 

சைவர்கள் எந்த ஊரைக் கோயில் என்பார்களோ அந்த ஊரான தில்லைச் சிற்றம்பலத்தை எனது சொந்த ஊராகக் கொண்டவன் நான். ஆடலரசன் ஆருத்ராவுக்கும் ஆனித் திருமஞ்சனத்துக்கும் தேரில் உலா போகும் ஊர்க்காரன். சொந்தக்காரர்கள் அனைவரும் நான்கு வீதிக்குள் இருந்தனர். வீதிகளில் நூற்றிருபதடி நடந்தால் ஒரு சொந்தக்காரரின் வீடு. எப்படி அவ்வளவு துல்லியமாகச் சொல்கிறேன் என்கிறீர்களா? சிறு வயதில் எங்களுக்கு அது ஒரு விளையாட்டு. குழந்தைகள் ஒவ்வொரு அடியாக நடந்து ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குச் செல்வோம். அப்போது எங்கள் காலடிகளால் தூரத்தை அளப்போம். மனதில் வைத்துக் கொள்வோம். ஒருத்தருக்கு நூறடி என்பது இன்னொருத்தருக்கு நூற்று பத்து அடியாக இருக்கும். அதில் எங்களுக்கு ஒரு வியப்பு. குதூகலம். பால பருவத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு அது வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. எங்கள் பாட்டனார் ஒருவர் நாங்கள் அடி விளையாட்டு ஆடிக் கொண்டிருந்த போது என்னடா மெனக்கெட்டு செய்றீங்க என்றார். சொந்தக்காரர்கள் வீட்டு தூரத்தை அளக்கிறோம் என்றோம். பூமியும் வானமும் நமக்கு சொந்தம்; அதை உங்களால முழுசா அளக்க முடியுமா என்று வேடிக்கையாகக் கேட்டார். அவர் கேள்வி என் மனதில் எப்போதும் இருந்தது. காக்கை குருவி எங்கள் ஜாதி என வாசித்த போதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கேட்ட போதும் பாட்டனார் நினைவுகளில் வந்தார். 

எங்கு சென்றாலும் அங்கே ஒரு கதை இருக்கிறது. கவனித்திருக்கிறீர்களா? எழுச்சியின் கதை அல்லது வீழ்ச்சியின் கதை. முயற்சியின் கதை அல்லது தேக்கத்தின் கதை. ஆக்கத்தின் கதை அல்லது அழிவின் கதை. இன்று காலை ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தேன். நண்பரின் வீடு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், ஒன்பது வேலி நிலம் இருந்திருக்கிறது. நண்பர் சிறுவனாயிருந்த போது, அவருடைய சகோதரிகளின் திருமணத்துக்காக நிலத்தை விற்றிருக்கின்றனர். இப்போது ஒரு வேலி நிலம் இருக்கிறது. அவருடைய மகள் படித்து வேலைக்குப் போய் பொருள் ஈட்டத் துவங்கியுள்ளார். மகன் பட்டயப் படிப்பு படித்து விட்டு ஒரு ஆண்டு கோயம்புத்தூரில் வேலை பார்த்து விட்டு இப்போது சிங்கப்பூரில் பணி புரிகிறான். வீட்டுக்குப் புதிதாக வண்ணம் பூசியுள்ளனர். சுவரில் அவருடைய மகள் சில ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார். அவற்றை ஆர்வமாக என்னிடம் காண்பித்தார். அப்போது வந்த அழைப்பு ஒன்றுக்கு பதிலளிக்கையில் மகள் விசாக நட்சத்திரம் என்றார். திருமண ஏற்பாடாக இருக்கக் கூடும். விசாகம் முருகனின் நட்சத்திரம். நம்பியவர்களைக் காக்கப் புறப்பட்ட ஆறிரு தடந்தோள்கள். குடிசெய்வல் என்னும் ஒருவர்க்கு எனத் துவங்கும் திருக்குறளை வாசித்திருக்கிறீர்களா?

சரி, அரும்பூர் கதைக்கு வருகிறேன். எனது நண்பன் ஒருவனின் சொந்தக்காரர் அரும்பூரில் இருப்பவர். பேச்சு வாக்கில் இந்த ஊரின் பேரைக் கேட்டேன். அரும்பூர். அரும்பூர் என அவ்வப்போது சொல்லிப் பார்த்தேன். அப்போதெல்லாம் – ஏன் இப்போதும் – ஒரு பழக்கம். ஏதாவது ஊரின் பேரைக் கேட்டால் போதும் அந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றும். ஒரு சில நாட்களில் ஒரு சில வாரங்களில் அல்லது ஒரு சில மாதங்களிலாவது அங்கு சென்று விடுவேன். நடந்து சைக்கிளில் மோட்டாரில் பேருந்தில் ரயிலில் லாரியில் எப்படியாவது. சிதம்பரத்திலிருந்து ஒரு பேருந்தில் புத்தூர் வந்து அங்கிருந்து ஒரு டிராக்டரில் ஏறி உட்கார்ந்து புதுப்பட்டினம் வந்து கொள்ளிடம் ஆற்றைத் தோணியில் கடந்து அரும்பூருக்கு வந்தேன். கூட ஒரு நண்பரைக் கூட்டி வந்திருந்தேன். தன்னை ஏன் விதி இவ்வாறான ஒருவருடன் பிணைத்திருக்கிறது; அப்படி தான் செய்த அத்தனை அடாத செயல்கள் என்ன என்ற எண்ணத்துடனே என்னுடன் வந்தார். அவருக்கு என் ஆர்வங்கள் உவகையளிக்கவில்லை. நான் முறையான பயண ஏற்பாடுகள் செய்து கொள்வதில்லை என்பது அவரது மனத் தாங்கல். எங்காவது தனியாகச் சென்று விட்டு வந்து அனுபவங்களைக் கூறினால் என்னை ஏன் கூட்டிச் செல்லாமல் விட்டு விட்டு சென்றீர்கள் என்பார். 

படகோட்டி எங்களிடம் யார் வீட்டுக்கு செல்கிறீர்கள் என்று கேட்டு வழியைக் கூறிவிட்டார். வழி என்ன வழி. ஊரில் மூன்று தெருக்கள். அதில் நடுவில் இருக்கும் தெரு. பஜனை மடத்தை ஒட்டிய வீடு. 

நண்பர் கேட்டார். ’’சபா! இந்த ஊர்ல என்னப்பா ஒரே தென்னந்தோப்பா இருக்கு.’’

அந்த ஊரில் பாதி நாள் இருந்தோம். அப்போது காரணம் கேட்டோம். அவர்கள் ஒரு பெயரையும் ஊரையும் சொன்னார்கள். அனந்தராமன், மங்களாபுரம்.

***

உருளியின் நகர்வுகளுக்கு ஏற்ப கோலமாவு உருவாக்கியிருந்த வடிவங்கள் சிறிதும் பெரிதுமாக வீட்டு வாசல் முன் எல்லா வீடுகளிலும் அமர்ந்திருந்தன. செக்கச் சிவந்த அரளிப் பூக்கள் கிளைகளில் மெல்ல அசைந்தவாறிருந்தன. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் புரஃபசர் வீடு என்று கேட்டோம். அந்த குழாமின் தலைவன் நீலக்கலர் பெயிண்ட் அடிச்ச வீடு என்றான். குழுவின் ஆகச் சிறிய சிறுவன் நான் போய் காட்டிட்டு வரட்டுமா எனக் கேட்க தலைவன் பெருந்தன்மையுடன் தலையசைத்தான். 

சிறுவன் கற்பனையான ஒரு மோட்டார் வாகனத்தில் எங்களுக்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந்தான். நாங்கள் அவனைப் பின் தொடர்ந்தோம். 

ஒரு வீட்டினுள் நுழைந்து ‘’வெளியூர்ல இருந்து உங்க ஆத்துக்கு வந்திருக்கா’’ என்றான். 

ஒல்லியான உயரமான பெரியவர் ஒருவர் அங்கே இருந்தார். 

‘’வாங்கோ’’

‘’நமஸ்காரம். என்னோட பேர் சபாரத்னம். இவரு திருமலை. ரிடையர்டு கவர்மெண்டு எம்ப்ளாயி. நாங்க புரஃபசரை பாக்க வந்தோம்.’’

‘’ஒக்காருங்க’’

நாங்கள் கூடத்தின் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம். 

’’அகிலா’’

மாமி மெல்ல நடந்து அடுக்களையிலிருந்து கூடத்துக்கு வந்தார். 

‘’ராமனைப் பாக்க வந்திருக்கா. அவாளுக்கு மோர் குடு’’

அவர் அமர்ந்திருந்த தோரணை அவர் வேலை வாங்கத் தெரிந்தவர் என்று காட்டியது. 

‘’நீங்க என்ன ஊர்லேந்து வந்திருக்கேள்’’ 

‘’சிதம்பரம்’’

‘’ரொம்ப தூரம். அனந்தராமன் என் தம்பி தான். ஒரு கான்ஃபரன்ஸுக்கு அமெரிக்கா போயிருக்கான். வர்ர பத்து நாளாகும். ஒரு ஃபோன் பண்ணிட்டு வந்திருக்கலாமே. மாம்பலம் ஆர்ய கௌடா ரோட்-ல அனந்துவோட வீடு. நானும் மெட்ராஸ்ல தான் இருக்கேன். இந்த ஊர்தான் எங்களுக்குப் பூர்வீகம். பதினைஞ்சு நாளைக்கு ஒரு தடவையாவது இங்க வருவோம்.’’

’’ரெண்டு மாசம் முன்னாடி அரும்பூர் போயிருந்தோம். அங்க சார் பத்தி சொன்னாங்க’’

‘’ஓகோ’’

எங்களுக்கு மோர் வந்தது. 

‘’அரும்பூர் போய்ட்டு வந்தப்புறம் சாரோட ஆர்ட்டிக்கிள்ஸை பிரவுஸ் பண்ணி வாசிச்சேன். வெரி வெரி இம்ப்ரஸிவ். அதான் நேர்ல பாக்கலாம்ணு பிரியப்பட்டோம்.’’

’’நாங்க பிரதர்ஸ் அஞ்சு பேரு. அவன் கடைசி தம்பி. நான் ரெண்டாவது. எங்க மூத்த அண்ணா சின்ன வயசிலயே தவறிட்டார். நானே அவர பாத்ததில்லை.’’

‘’ஒரு கட்டுரைல அவரு தன்னோட ஃபேமிலி பத்தி சொல்லியிருக்கார். அப்பா சின்ன வயசில இறந்துட்டார். குடும்பப் பொறுப்பை அம்மா தான் முழுக்க முழுக்க ஏத்துகிட்டாங்க. குழந்தைகளைப் படிக்க வச்சது அம்மாதான். அவங்களைப் பெரிய ஜீனியஸ்னு சொல்றார். இந்தியப் பொருளாதாரத்துல பெண்களால பெரிய பங்களிப்பைத் தர முடியும்ங்கறது புரஃபசரோட நம்பிக்கை. நிறைய சாலைகள், ஏரிகள், நீர்ப்பாசனத் திட்டங்களைக் கொண்டு வந்தவங்க பெண் அரசிகள்னு சரித்திரத்திலயிருந்து ஆதாரம் காட்றார்.’’

அகிலா மாமி அடுக்களையிலிருந்து குரல் கொடுத்தார். 

‘’கூடத்துல இருக்கற ஃபோட்டாவல்லாம் அவாளுக்கு காட்டுங்க’’

ராமன் பட்டம் பெற்றது. பல கல்லூரி பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடம் உரையாற்றிய புகைப்படங்கள். வெளிநாட்டு உரைகள். ஆட்சியாளர்கள் அவரைச் சந்திக்கும் காட்சிகள். 

‘’சூழலியல் பற்றி கடந்த சில வருஷமா தீவிரமான கவனம் சமூகத்துல உருவாகியிருக்கு. புரஃபசர் பல வருஷம் முன்னாடியே அதைப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டார்.’’

‘’எப்போதும் ஏதாவது தீஸிஸ். ரிப்போர்ட். பிரசண்டேஷன். வாழ்க்கை முழுசுமே அவன் எங்காவது சுத்திட்டுத்தான் இருக்கான். அரும்பூர் பத்தி உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?’’

‘’என்னோட ஃபிரண்டு ஒருத்தன் அந்த ஊரோட பேரைச் சொன்னான். அங்க போயிருந்தோம். அந்த ஊரோட நில அமைப்பு காரணமா கொஞ்சம் தனியா இருக்கு. எண்ணி வச்ச மாதிரி நூத்து அம்பது குடும்பங்கள். மொத்தமா 400 ஏக்கர் நிலம். நெல்லை விளைவிக்கறதலயும் அதை வெளியூர் கொண்டு போய் விக்கறதலயும் நிறைய சிரமம். புரஃபசர் தற்செயலா அந்த ஊருக்குப் போறாரு. அந்த ஊரை கேஸ் ஸ்டடி பண்றாரு. அவங்க எல்லார்ட்டயும் பேசி தென்னை பயிரிடச் சொல்றாரு.’’

‘’உன்னோட ஏரியா எக்கனாமிக்ஸ். பிஸினஸ் மேனேஜ்மெண்ட். ஏன் அனாவசியமா அக்ரிகல்சர் உள்ள தலையிடறன்னு அவனோட கொலீக்ஸ் கேட்டாங்க’’ பெரியவர் நினைவு கூர்ந்தார்.

‘’இந்த மண்ணுக்குத் தென்னை நல்லா வரும்னு ஒவ்வொரு விவசாயிக்கும் புரிய வைக்கிறாரு. முழுக்க அந்த ஊரே தென்னந்தோப்பா மாறுது.’’

சிறிது நேரம் நாங்கள் மூவரும் அமைதியாக இருந்தோம். 

‘’அந்த கிராமத்துல ரெண்டு தலைமுறையா யாரும் கிராமத்தை விட்டு உத்யோகத்துக்காக வெளியூர் போகலைன்னு சொல்றாங்க. எல்லாரும் வசதியா இருக்காங்க.’’ பெரியவர் சொன்னார். 

‘’சபாரத்னம்! மகாபாரதத்துல யட்ச பிரசன்னம் கேட்டிருக்கீங்களோ?’’

‘’அதிர்ஷ்டசாலி யார்னு யட்சன் கேக்கற கேள்விக்கு பிழைப்புக்காக தன்னோட சொந்த ஊரை விட்டுப் போகாதவன்னு தருமன் பதில் சொல்றார்’’

‘’பரவாயில்லையே. நிறைய விஷயம் தெரிஞ்சுருக்கு உங்களுக்கு’’

‘’புரஃபசர் அங்க மூணு வருஷம் கேஸ் ஸ்டடி பண்ணியிருக்கார். அப்புறம் அகமதாபாத், டெல்லின்னு போயிடறார். ஊரே தென்னந்தோப்பா மாறி எல்லா குடும்பத்துக்கும் பயன் கிடைக்கறப்ப அந்த கிராமத்து ஜனங்க அரும்பூர் வரச் சொல்லி புரஃபசரைக் கூப்பிடுறாங்க. நாங்க உங்களுக்கு என்ன செய்யணும்னு கேக்கறாங்க.  புரஃபசர் ஒரு வாக்குறுதி மட்டும் கேக்கறார். அரும்பூர்ல யாரும் சாராயம் குடிக்கக் கூடாதுன்னு சொல்றார்.’’

‘’ரெண்டு தலைமுறையா ஒரு கிராமத்துல சாராயம் குடிக்காம இருக்கறது பெரிய விஷயம்’’

‘’அந்த ஊர்ல நிறைய குழந்தைகளுக்கு அனந்தராமன்னு பேரு இருக்கு.’’

அகிலா மாமி எளிய காய்கறிகளைக் கொண்டு பிரமாதமான விருந்து ஒன்றைத் தயாரித்திருந்தார். 

’’சபா! ஒரு விஷயம் தெரியுமா உனக்கு? அவனைப் பெரிய மேதைன்னு சொல்றாங்க. இப்பவும் ஒரு கிலோ பச்ச மிளகா என்ன விலைன்னு அவனுக்குத் தெரியாது,’’ பெரியவர் சொன்னார்.

நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

பெரியவரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டோம். 

அகிலா மாமி வாசல் வரைக்கும் வந்தார். 

‘’ராமன் அவங்க அம்மாவோட இருந்தது பத்து வயசு வரைக்கும். அப்புறம் படிப்பு முடிக்கற வரைக்கும் நான்தான் அவன பாத்துக்கிட்டன். அவன் எனக்கும் எப்பவும் குழந்தைதான்,’’ கூறியபோது அகிலா மாமியின் முகத்தில் பெருமிதம். கண்களில் நீர்த்திரை. 

இன்னொரு அன்னை என எண்ணிக்கொண்டேன். 

***

One Reply to “மாற்று”

  1. கொரானா காலகட்டத்தில் புலம்பெயர்தல் பற்றிய கதை அருமை. வேளாண்மைக்குத் தொடர்பே இல்லாமல் பட்டம் பெற்ற ஒருவர் கிராமத்துக்குப் பெரிய மாற்றத்தையே கொண்டு வருகிறார். ஊர் முழுக்கத் தென்னை மரங்கள்; எவரையும் குடிக்க வேண்டாம் என்று மாற்றியது மிகப்பெரிய சாதனை. யட்சனைக் கொண்டு வந்து அவன் மூலம் சொன்னபதில் அருமை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.