
அவள்
அவளை நான்
மீண்டும் பார்த்தேன்
கொந்தளித்தது கடல் மனம்
அக்காலத்திலிருந்த இளமை
நடந்து சென்றது வீதியில்
அவளை மறவாத காலம்
முன்னும் பின்னும்
நகர்ந்து என்னைச் சீண்டியது
அவள் எங்கிருந்தாலும்
நினைத்த நேரத்தில்
என் முன்னே தோன்றினாள்
எப்படிப் போக வேண்டும்
அங்கே என்றால்
என் வழியே போகலாம்
அல்லது அவள் வழியில்
சாட்சியாக இருந்தவர்கள்
சொல்வார்கள் நான் பெற்ற
தண்டனை அவளது ஏமாற்றமென
அது ஒரு விதிக்கப்பட்ட
காதல் போல்
அடுத்து அடுத்து நிகழ்ந்த
பார்வையாலும் விருப்பத்தாலும்
அவ்வாறே இறப்பதற்கு
முன் உதித்தது
***

அவன்
அவன் சொன்னான்
இப்பொழுது ஒன்றுமில்லை என்று
அவளும் சொன்னாள் ஒன்றுமில்லை
எல்லாம் சரியாகிவிடும் என்று
நான் இருந்தேன்
இவர்கள் இருக்கிறார்கள் என்று
பிறகு
நான் மட்டுமே இருந்தேன்
அதுதானே உண்மை என்பதை
நான் விரும்பவில்லை
என்றாலும்
மீண்டும் உயிர் வாழ்வது
பிணம் பிழைத்த கதை தான்
நாளடைவில் அது அடையாளமாக
தோல்வியுற்ற நான்
ஆடும் ஆட்டத்திலிருந்து
தள்ளி நின்றேன்
இடைவெளி என்பது மரணம்
அதை சொல்ல
நான் இல்லாதபோது
—-புஷ்பால ஜெயக்குமார்