பாசுரங்களில் கசியும் வாழ்க்கை

புள்ளரையன் கோவில்’- சிறுகதையை ஒட்டி

ராஜம் ரஞ்சனி

கதைக்குள் சிதறிக் கிடக்கும் கதைத்துண்டுகளின் வழி கதையைக் கண்டடையும் வகைமையைச் சார்ந்த கதைகள் நுணுக்கமானவை. அத்தகைய வகையைச் சேர்ந்த கதை எழுத்தாளர் பிரபு மயிலாடுதுறை அவர்களின் சொல்வனத்தில் வந்த புள்ளரையன் கோவில்.

கணிதப் படிப்பை முடித்த கதைசொல்லி இதழில் வேலை செய்கிறார். இதழ் நிறுவனத்தின் முதலாளியின் இளைய மகன் அமெரிக்காவில் படித்திருந்தாலும் இதழியல் மீதான ஆர்வத்தால் தந்தை எவ்விதத் தடையுமின்றி தமிழ் இதழ் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார். கதைசொல்லியின் நண்பன் ஆதித்யா காவல்துறையில் அதிகாரியாக பணிபுரிகின்றதால் அரசியல் கொலைகளின் அனுபவமும் கதையில் சிறுபகுதியாய் வருகின்றது. மற்றொரு நண்பனான விக்கியும் தன் ஊரைவிட்டு வெளியில் செல்லும் ஆர்வமில்லாதவன். இதழுக்காக புள்ளரையன் கோயிலுக்குச் செல்லும் கதைச்சொல்லி அக்கோயிலைப் பராமரித்து வரும் பெரியவரிடம் கோயிலைப் பற்றி வினவுகின்றார். புனைவாக வரும் புள்ளரையன் கோயில், திருப்பாவை வரிகளில் இருந்து தோற்றம் பெற்றிருக்கும் விதம் அருமை. கோயிலைச் சுற்றி வரும் பறவைகளின் வர்ணனைக் கோயிலைக் கண்முன் நிறுத்திவிடுகின்றது. பெரியவரின் மறைவுச் செய்தி கேட்டு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் கதைச்சொல்லி, கருடன் வந்து அவரது உடலைத் தாங்கிக் கொண்டிருக்கும் கண்ணாடிப் பெட்டியின் மீது அமர்ந்து மூன்று முறை கொத்தி விட்டு பறந்து சென்றதோடு கதை முற்றுப்பெறுகின்றது.

‘’கார் ஓட்டும் போது ஐரோப்பாவில் ஸ்டியரிங் இடது பக்கம். இந்தியாவில் வலது பக்கம். ஒரு விஷயத்தை இரண்டு விதமாகவும் அணுக முடியும். பழக்கம் காரணமா ஒண்ணு மட்டுமே எல்லாம்னு சொல்றது புத்திசாலித்தனம் இல்ல’’ என்ற வரிகள் வாழ்க்கையின் சாரங்களைக் கண்முன்னே பரவ செய்கின்றது. அண்மையில் பீடித்த கொரோனா நோய் இதற்கு எளிய எடுத்துக்காட்டாய் கொள்ளலாம். நடைமுறை பழக்க வழக்கங்கள் நோயிலிருந்து விடுபட சில மாற்றங்களைக் கொண்டு வந்து கைக்குலுக்கலின்றி கூப்பும் கரங்களும் மரியாதையின் அம்சம் எனும் புத்திசாலித்தனத்தைக் கற்பித்தது. தர்மநெறியை உணர்த்த கிருஷ்ணரும் நடைமுறை வழக்கங்களை மீறியபோது அவருக்குக் கிடைத்த பெயர் சூழ்ச்சிக்காரன் கிருஷ்ணன். ஆனால் ஆழ்ந்த சிந்தனைகள் மூலம் அவரது செயல்கள் தர்மத்தில் நிலைத்துள்ளதைக் காணலாம். நிறைந்த சபையில் திரௌபதியை மானபங்கபடுத்திய அசுரனான துரியோதனன் அஸ்தினாபுரத்து அரசனாக தலைமையேற்றால் மக்களின் கதி என்னாவாகும் என எண்ணியே அவன் தீட்டும் அதர்ம சதித்திட்டங்களுக்கு ஏற்றவாறே கிருஷ்ணரும் தர்மத்தின் வழி சதித்திட்டங்களைத் தீட்டும் நிலமை ஏற்பட்டது.

ஒரு நகர்வைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் அதே மதிப்பைக் கொண்ட விசை எதிர்புறமாக இருக்க வேண்டுமென சொல்கின்றது இயற்பியல். அந்த அறிவியலைத் தான் கிருஷ்ணர் அன்றே மேற்கோள் காட்டிவிட்டார் என்பதை உணர்ந்து இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். நியூட்டனின் மூன்றாம் விதியானது ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு என இக்கலியுகத்தில் தெரிவிக்கின்றது. ஆனால் கிருஷ்ணரின் செயல்கள் துவாபார யுகத்திலேயே இவ்விதியை ஆழமாய் வலியுறுத்திவிட்டன. கௌரவர்களின் தரப்பில் உருவான அதர்ம வினைகளுக்கு அதற்கு இணையான எதிர்வினைகள் தர்மமான வழியில் கிருஷ்ணரின் தரப்பிலிருந்து வெளிப்பட்டன.

இதைத்தவிர, கதை அடுக்கில் உலவும் மனிதர்களைச் சற்று உற்றுப் பார்த்தால் விதிப்பயனும் தென்படும். கணிதத்துறை பயின்ற கதைச்சொல்லிக்கு இதழில் வேலை; இராணுவத்தில் இருந்த பெரியவருக்கு அடைக்கலமாய் புள்ளரையன் கோயில். கதைச்சொல்லியின் நண்பன் ஆதித்யா கூறும் அனுபவத்திலும் விதி எவ்வாறு செயல்படுகின்றது என்பதை அறிய முடியும். விதியை வெல்லும் எவ்வித நுணுக்கத்தையும் இதுவரை எவ்வித அறிவியலும் சுட்டிக்காட்டவில்லை. விதியின்படி வாழ்க்கையை அழகாய் வடிவமைத்துத் திருப்தியடையும் வழியைப் புள்ளரையன் கோவிலில் தன் வாழ்நாளைக் கழித்த பெரியவர் எளிதாய் உணர்த்திவிட்டார் என்றே தோன்றுகின்றது. அது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி உருவெடுத்தால் ஆழ்வார்கள் பாசுரங்கள் பதில்களாய் நம் முன்னே விரியும். 

பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என திருமால் ஐந்து ரூபங்களில் வீற்றிருப்பதை, அதாவது

(1) பரம் – வைகுண்டத்தில் வீற்றிருக்கும் நாராயணன்

(2) வியூகம் – பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நாராயணன்

(3) விபவம் – இராம, கிருஷ்ண அவதாரங்கள் 

(4) அந்தர்யாமி – எங்கும் வியாபித்திருக்கும் தன்மை

(5) அர்ச்சை – அர்ச்சை மூர்த்தி வடிவம்

விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்!மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!
எண்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி,
உண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ?

(3543) 

எனும் நம்மாழ்வார் பாசுரத்தை மேற்கோளாக கொள்ளலாம். இறைவனே மக்களைப் பக்தி நெறிக்கு அழைத்து வரவும் கைங்கர்யங்களில் ஈடுபடுத்தி பரவசமடையவும் விக்ரகமாக பரிணாமிக்கின்றார். அதையே ஆழ்வார்களும் மெய்ப்பித்து பக்தியில் ஆழ்ந்து பெருமாளின் திருமேனி அழகில் பூரிப்படைவது பாசுரங்களில் கசிகின்றது. 

‘பச்சை மாமலைபோல் மேனி’ என தொண்டரடிபொழ்வார் பெருமாளின் அழகில் உருகி இந்திரலோக பதவியைக் கூட மறுத்துவிடுகின்றார். திருப்பாணாழ்வாரோ அமலனாதிபிரானில் பெருமாளின் திருமேனியை வர்ணித்து நெஞ்சை நிரப்பிக் கொண்டு, இறுதியாக திருமேனியைக் கண்ட கண்கள் வேறெதனையும் காணாது என்கிறார். 

“நாங்கூர் திவ்யதேசம் இங்க பக்கத்துல தான் இருக்கு. இந்த சின்ன சந்நிதி எப்படி இந்த இடத்துல வந்துதுன்னு தெரியல. எனக்குத் தெரிஞ்சு எங்க குடும்பம் ஆறு தலைமுறையா கோவிலுக்கு சேவை செஞ்சுகிட்டு இருக்கோம். அதுக்கு முன்னாடி வேற வேற குடும்பங்க சேவை செஞ்சுருப்பாங்க’’ 

எனக் கூறும் கதையில் வரும் பெரியவரும் புள்ளரையன் கோவிலில் இந்நிலையை அடைந்திருக்கக்கூடுமெனவும் கதையின் இறுதியில் கருடனின் செயல் அதற்கான ஆசியாகவும் கருத முடிகின்றது. 

எழுத்தாளர் சுஜாதா தேசிகன் எழுதிய ‘மேட்டழகிய சிங்கர்’ எனும் கதையிலும் மேட்டழகிய சிங்கரின் கருணையை அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார். ‘மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! மறுபிறவி தவிரத்திருத்தி’ என்ற பாசுர வரிகள் அங்கே நிதர்னமாகும் தருணம் அற்புதமாக இருக்கும்.

பறவைகளின் அரசனான கருடனை வாகனமாகக் கொண்ட பெருமாளின் கோவிலிருந்து வரும் வெள்ளைநிறச் சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா என்பதைப் பொருளாக கொண்ட ‘புள்ளும் சிலம்பின காண்; புள்ளரையன் கோவில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ’ என்ற வரிகளையை மூலதனமாக கொண்டு எழுப்பப்பட்ட புள்ளரையன் கோவிலின் நிழல் நம் மீதும் விழுகின்றது. 

பாசுர வரிகளின் வழி புனைவாக நெய்யப்பட்ட கதையாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த சுய வாழ்க்கையைச் சிறிதளவும் புறந்தள்ள முடியாது. பாசுரங்களின் வழி வாழ்க்கையைக் கண்டடையும் யுக்தியும் இங்கே தெளிவாகின்றது. தமிழ்த்தாத்தா என அன்பாய் அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யரின் ‘கும்மாயம்’ என்ற தொகுப்பை வாசித்தப்போது பாசுரங்களைப் பற்றிய சில சுவராஸ்யமான தகவல்கள் இருந்தன. உ.வே.சா இத்தொகுப்பில் சுவடியைத் தேடிய தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். 

‘பயிற்றுத் தன்மை கெடாது கும்மாயம், இயற்றி’ என்ற மணிமேகலையின் வரியில், ‘கும்மாயம்’ என்ற சொல் உ.வே.சா அவர்களுக்கு விளங்காமல் போக பலரைத் விசாரித்தும் தெரியவில்லை. பின்பொருநாள் கும்பகோணம் ஶ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில் பெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிவேதனங்களில் கும்மாயம் ஒன்றெனவும் கண்டறிந்து அகமகிழ்ந்து போகின்றார். 

‘கும்மா யத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்
இம்மா யம்வல்ல பிள்ளைநம் பீஉன்னை என்மக னேயென்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.’ (225)

பெரியாழ்வார் திருமொழியிலும் இச்சொல் அமைந்துள்ளது குறிப்பிட்டதக்கதாகும். ஒருமுறை இடையனொருவனோடு உரையாடும் வாய்ப்பு உ.வே.சா. அவருக்குக் கிட்ட, 

‘ஆடுமாடுகளை நாங்கள் காட்டுப்புறங்களுக்கு ஓட்டிக் கொண்டு போவோம். அங்கே மரங்களின் கிளைகளை எங்கள் வாளால் வெட்டுவோம். நாங்கள் வெட்டும்போது கிளை முழுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக் கொண்டு தழைகளைத் தின்னும். அந்தக் கிளை அடியோடு அறாமலும் மற்றக் கிளைகளைப்போல மரத்தோடு முழுவதும் சேராமலும் இருக்கும்’ என்ற இடையனின் வார்த்தைகள் அவரது சிந்தனையைத் தூண்டுகின்றன. இலக்கியங்களில் இடையர்களைப் பற்றி வரும் இடங்களில் ‘ஒடியெறிதல்’ என்பதன் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. ஆழ்வாரின்,

‘படைநின்ற பைந்தா மரையோடு அணிநீலம்
மடைநின் றலரும் வயலாலி மணாளா,
இடையன் எறிந்த மரமேயொத் திராமே,
அடைய அருளா யெனக்குன்ற னருளே.’ (2027)

– என்ற பாசுரத்தையும் குறிப்பிடுகின்றார். 

நானும் இப்பாசுரங்களைப் படிக்கும்போது, திருமங்கையாழ்வாரின் திருமொழி வரிசையில் தமிழ் நனைந்த உவமைகளாக ஆற்றங்கரைவாழ் மரம்போல (2022), காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல (2023), பாம்போ டொருகூரையிலே பயின்றாற்போல் (2024), இருபா டெரிகொள்ளியினுள் எறும்பேபோல் (2025), வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே (2026) ஆகியவற்றை கண்டு ஆச்சர்யமாக இருந்தது. இவற்றுள் பல உவமைகள் தற்போது வழக்கில் இல்லாமல் தமிழுக்கே சம்பந்தமில்லாத வாய்ச்சொற்கள் நிரம்பி வழியும் வழக்கத்தைக் கொண்டு பாசுரங்களின் தமிழ் மீது ஆர்வம் குறைவது வருத்தத்துக்குரியது.

கும்மாயம் போன்ற உன்னதமான நிவேதனங்கள், இடையனெறிந்த மரம் போன்ற சொல்லடைகள் காலப்போக்கில் மறக்கப்பட்டும் மறைந்து போகவும் சாத்தியமிருந்தாலும்  பாசுரங்களே அவற்றைத் தாங்கிப் பிடித்து உயிர் அளித்துக் கொண்டிருக்கின்றன. புள்ளரையன் கோயிலைப்போல பாசுரங்களும் வெறும் படிமங்கள் அல்ல; நாம் சுவாசிக்க வேண்டிய மூச்சுக்காற்று. ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.