- பருவம் – சகாப்தத்தின் குரல்கள்
- ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை
- அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
- ஒற்றன் – அசோகமித்திரன்
- நிறமாலை
- ரா. கிரிதரனின் “ராக மாலிகை”
- லஜ்ஜா: அவமானம்
- துருவன் மகன்
- கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை
- பாகீரதியின் மதியம் – விமர்சனம்
- புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி
- களியோடை
- தத்வமஸி: புத்தக அறிமுகம்
- பாமாவின் கருக்கு
- பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா
- கண்ணனை அழைத்தல்
- பாரதியின் இறுதிக்காலம்
- குவெம்புவின் படைப்புலகம்
- தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்
- “இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி
- புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
- இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி
- ஆகாரசமிதை
- உயர்ந்த உள்ளம்
- எல்லைகள் அற்ற வெளி
- மிருத்யுஞ்சய்
- ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு
- தப்பித்தல் நிமித்தம்
- ரணங்கள்: ஃ பிர்தவுஸ் ராஜகுமாரன்
- ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை
- சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி
- பசு, பால், பெண்
- தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
- வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்
- திருவரங்கன் உலா
- ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’
- அஃகம் சுருக்கேல்
- அறுபடலின் துயரம் – பூக்குழி
- ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்
- தீப்பொறியின் கனவு
- புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’
- மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்
- தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
- இரா. முருகனின் நளபாகம்
- பின்கட்டு
- யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்
- நீர்ப்பறவைகளின் தியானம்
- ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்
மணிகண்டன்

பாகீரதியின் மதியம் வாசித்து முடிக்கையில் , அவ்வளவுதானா முடிந்துவிட்டதா என்று நம்பமுடியாமல், திரும்பத் திரும்பக் கடைசி அத்தியாயத்தின் சில பக்கங்களை வாசித்தபடியே இருந்தேன். ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த நிகழ்வுகளின் சரத்தையும் , அந்த நிகழ்வுகளை சதா உந்திக் கொண்டே இருக்கும் கனவுகளின் வலியையும், வசீகரத்தையும் மனதில் பதிய வைக்க முயன்றபடி இருந்தேன்,நாவலின் மையச்சரடு என்ன ? நாவலின் முடிவு உணர்த்துவது என்ன ? நாவல் கூற விரும்பும் கருத்துக்கள் என்ன ? போன்ற டெம்ப்லேட் கேள்விகள் மனதில் எழுந்த வண்ணம் இருந்தன.
நாவலின் அசாதாரணமான கேன்வாஸ் ஒரு மையத்தில் நாவலைப் பற்றிய ஒற்றைக் கருத்தை அடையவிடாது அலைக்கழித்தபடியே இருந்தது., ஒரு பிராமணனுக்கும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவனுக்குமானா பெரியார் குறித்த ஒரு உரையாடல் (“இறை மற்றும் இறைமை என்பதன் விண்டு சொல்லமுடியாத அனுபவத்தை ஈவெராதெரிந்துதான் வைத்திருந்தார்… என்று இவனும் இறையனுபவம் என்று பிதற்றப்படுவதெல்லாமுமே சூழலால் திணிக்கப்பெறும் அறிவின்பாற்பட்டது என்று அவனும் …” ), ஒரு ஓவியனின் வாழ்நாள் படைப்புகளின் சாரத்தை அறியும் முயற்சி, காதலின் உன்மத்தத் தனிமையை நீடிக்க விரும்பும் உயிர்களின் அவஸ்தை, பெண் விடுதலை குறித்த ஒரு அறைகூவல், மனிதச் சமூகமாக நாம் தேர்ந்தெடுத்தப் பாதையை குறித்த ஒரு விசாரம், ( “சமவெளி மனிதர்கள் தந்திரசாலிகள்… வர்க்கங்களை ஒழிப்பதும் சாதிகளை ஒழிப்பதும் காடுகளை ஒழிக்கும் குற்றவுணர்விலிருந்து தங்களைத் தப்புவித்துக்கொள்ளும் பிரயத்தனமேயன்றி வேறொன்று என்பதாக நான் நினைக்கவில்லை “) அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலைகள் தனிமனித விருப்பு வெறுப்புகளுடன் இணைந்து உருவாக்கும் விளைவுகள், கலைவெற்றி Vs களச்செயல்பாடு என்கிற இரண்டும் விளிம்புநிலை மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஒரு பார்வை (“நம்பிக்கை களப்பணியென்றால் அவநம்பிக்கை கலையின் ஆதாரம்) (உலகத்தின் கண்களுக்குத் தன் மக்களின் எந்த முகத்தைக் காண்பிக்கவேண்டுமென்பதை தேர்ந்துகொள்ளும் சுதந்திரமும் அவனுக்கு தேவைப்படுகிறது. உண்மையான கலைஞன் தன் ஜனங்களை ஒருப்போதும் கைவிடுவதில்லை என்பதை ஜனங்கள் நம்பவேண்டும். அழகை மட்டும் தேர்ந்துக்கொண்டு அவலத்தை அவன் மறைக்கிறானென்பதல்ல அவனுடைய அழகியலின் அடிப்படை, மாறாக எந்த அவலத்தினுள்ளிலிருந்தும் மரணத்தின் விளிம்பிலிருந்தும் ஒரு மின்வெட்டைப்போல மின்னித்தெறிக்கும் அழகை இனங்கண்டு கொண்டுவிடும் நிதானம்தான் ஒரு கலைஞனுக்குரிய தகுதியாக அவனுக்குக் கடவுளால் அருளப்பட்டிருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம்”) கிளைக் கதைகள் கூறும் அற்புதமான கதையாடல்கள், நினைவுகள், என்று பலத் தரப்பட்ட கோணங்களில் இந்தப் புதினத்தை நாம் அணுக முடியும்.
நாவலின் நடை தாண்டவராயன் கதையைப்போலவே, நீண்ட நீண்ட வாக்கியங்கள் வழி பயணப்படுகிறது. வாசிக்கத் துவங்குகையில் முதலில் கொஞ்சம் தடுமாறி, இழுத்துப் பற்றுகையில், கடற்கரை குதிரைச் சவாரி போன்று மிதமான வேகத்தில் சென்றபடி துவங்கிய இடத்திற்கே திரும்பவந்து, மீண்டும் வெவ்வேறுப் பாதைகள் பற்றி முற்றிலும் புதியதோர் கனவினைக் கண்டு நீண்டுக்கொண்டே சென்ற ஒரு முடிவில்லாதப் பயணம்.
விவாதம் -நாவலின் நெடுக வரும் சரடு விவாதத்தன்மை.பல்வேறு இடங்களில், இரு கதாப்பாத்திரங்கள் தங்களுக்குள் உணர்ச்சிகரமான ஆழ்ந்த விவாதங்களில் ஈடுபடத் துவங்குகின்றனர் , நாவலின் விஸ்தாரமான கதைக்களத்தை இந்த உரையாடல்கள் வழி மேலும் நெருங்க முடிகிறது. வாசுதேவன் – உறங்காப்புலி பெரியாரைக் குறித்து விவாதித்தல் , வாசுதேவன் – ஹாலாஸ்யம் பெரியார் குறித்த விவாதம் (“சாதி- உணவு, உடை, வாழ்முறை, பாஷை, சிந்தனை அனைத்திலும் ஒரு தனித்துவத்தைக் கொடுத்திருக்கிறது, சாதியை இழக்கிறேனென்று ஏன் இத்தனையையும் இழந்து சரித்திரமற்றவனாக வேண்டும் “), வாசுதேவன் – பாகீரதி “பெண்” குறித்துப் பேசுமிடங்கள், (“திருட்டு எலியை பிடிக்கும் விளையாட்டாகத்தானே எப்போதுமே அமைவது வழக்கம்…. ஆனால்.. அது நேருக்கு நேராக ஒரு புலியை சந்திக்கும் சம்பவமாக இருக்கிறது, அது தைரியமாக அவன்முன் நின்று தன் இருப்பை அறிவிக்கிறது அதற்கான நியாயத்தை சொல்கிறது”)உறங்காப்புலி – சவிதா தேவி பகிர்ந்துக் கொள்ளும் காதல் நினைவுகள், உறங்காப்புலி – இங்களய்யா உரையாடல்கள் , விபின் பஸ்வான் உறங்காப்புலியிடம் சவிதா தேவி குறித்துக் கூறுவது , வாசுதேவன் ஓவியர் ஆதிமூலம் சந்திப்பு (“சுருக்கங்களினால் பிடிவாதத்தையும், நிழலினால் தப்பித்தலையும், சட்டையற்ற உடலினால் நினைவுகளோடான நெருக்கத்தையும், கோடுகளினால் மனிதநேயத்தையும், அந்த மனித உருவம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகக்கூறி.”.) எனக் குறிப்பிடும்படியான பல விவாதங்கள், நாவலை அதன் கட்டற்றக் கதைகளின் வண்ணங்களை ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்ள வாசகனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது, இல்லையென்றால் அந்தக் கட்டற்றக் கதைகளின் பாதைகளில் அவன் தொலைந்து விடக்கூடும்.
தருணங்கள்- இன்னவென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத உணர்வுகள் மற்றும் , பகுத்தறிவு இன்னதென்று வரையறுக்க முடியாத அபூர்வ உணர்வுகள் குறித்து இந்த நாவல் எண்ணிப் பார்க்கிறது, குறிப்பாக காதல். பகுத்தறிவு காதலை வரையறுக்க முயல்கையில் தோல்வியுறுவதாகவே ஆசிரியர் கூறுகிறார், ( “அதுவரை அவரால் ஆபாசம் என்று விமர்சிக்கப் பட்டுகொண்டிருந்த புராணங்களிலும் சரித்திரங்களிலும் நிகழ்ந்த எந்த ஒரு மாபெரும் நிகழ்வையும்போலவே திமுக என்கிற ஒரு பெரும் அரசியல் நிகழ்வுக்குக் காரணமாயிருந்த ஒரு மகத்தான காதலின் புதிர்….”) மேலும் அந்த காதல் கிளர்த்தும் , பகுத்தறிவால் பைத்தியக்காரத்தனம் என்று வரையறுக்கப்படும் அனைத்துச் செயல்களையும் அலைச்சல்களையும் மதிப்பான ஒரு இடத்தில வைக்கிறார், காரணக் காரியங்கள் தாண்டியும் சில விஷயங்கள் ஒருவருக்கு உயிராக இருக்க முடியும் என்றும் , அவ்விஷயங்களுக்காக எத்தகைய எல்லை வரையும் எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதன் செல்வான் என்பதையும் கதையின் போக்கில் நாம் உணர்கிறோம்.அந்தத் தருணங்கள் குறித்து ஒரு விதப் பயத்துடனும், அனுமானங்களுடனும் கதாபாத்திரங்கள் நினைவுக் கூறுகின்றன , “இப்படித் தான் நினைத்தேன்”, “என்னை மீறிய ஒரு உணர்வு என்றும்”, என்றோ நடந்த நிகழ்வுகளை, பல வருடங்கள் தாண்டி ஒரு சிறியத் தருணம் மீண்டும் கிளறுகையில் கதாபாத்திரங்கள் வார்த்தைகளில் புகலிடம் தேடுவது வியர்த்தம் என்ற முடிவுக்கு வந்து “அற்புதம்” என்றோ “பயங்கரம்” என்றோ நினைவுக் கூறுகின்றனர். ( “மதுபானி ஓவியங்கள் குறித்து- ” பார்த்தாயா ஜெமினி.. நாம் பொத்திப்பொத்தி பாதுகாத்து வைத்திருக்கும் கலை எத்தனை சாதாரணமாக சளியும் கரிப்புகையும் தீற்றிக்கொள்ளும் சுவர்களில் பெரிய பெரிய பூகம்பங்களைத் தாண்டித் தப்பித்து மூச்சுவிட்டு கொண்டிருக்கின்றன பார் என்றார் பில்துரை”),.. (ஜெமினி.. ஆயிரக்கணக்கான புத்தகங்களில் ஒன்றைக்கூட பிரதிபலிக்காத புத்தம் புதியதான சித்திரப் புதையலின்முன், சற்றும் எதிர்பாராத வெட்டவெளியில் திடீரென்று கண்கூச நின்றுவிட்ட திகைப்பிலிருந்து மீளமுடியாதவனாயிருந்தான்”), ( “துஸ்ஸாத் ஓவியங்கள்முன்”அவன் கண்முன் குட்டிசுவர்களில் கரித்துண்டுகளால் இழுக்கப்பட்டிருந்தவை நினைவுதெரிந்த நாளிலிருந்து தன் தகப்பன் முதுகில் வாங்கிய சவுக்கடி தழும்புகளுடன் உடல் நாறநாற மாடுகளை ஒட்டிக் கொண்டிருந்த வயல்வெளியின் வெறுப்பூட்டும் பச்சை விளைச்சலுக்கு நடுவிலும் வீட்டினுள் இறைந்துக் கிடைக்கும் உடைசல் மண்கலையங்களின் விளிம்புகளில் ஊர்ந்துகொண்டிருந்த புழுக்களின் எலும்பற்ற உடல்களிலும், சாணியை தெளித்துத் தெளித்துக் களிம்பேறிப் பிசுபிசுத்துக் கொண்டேயிருந்த மண்தரையின் பச்சை மணத்திலும் அவன் தேடிக்கொண்டேயிருந்த கோடுகளேதான்”)
இருமைவிளையாட்டு -விஷயங்களைப் புரிந்து கொள்ள நமக்கு என்றுமே இந்த இருமைக் கதையாடல்கள் அவசியமான ஒன்றாக இருக்கிறன. கிழக்கு – மேற்கு , பிராமண -பகுத்தறிவு , ஆண்- பெண் , ஆதிவாசி சமூகம் – வேளாள சமூகம், வேளாள சமூகம் – இயந்திர சமூகம், பகுப்பாய்வது – பூரணமாய் உணர்வது, காரணம்- விதி , காந்தி – பெரியார் (“அதேவேளையில் சத்தியாகிரகம், அஹிம்சை, கதர் என்று அந்தக் கிழவரின் புத்தியிலிருந்து ஒன்றன்பின்ஒன்றாகப் பிறந்து ப்ரவாகமெடுத்துக் கொண்டேயிருக்கும் கற்பனைகளின் நதியில் துரும்பைப்போல் விழுந்து கைநழுவி போய்க்கொண்டேயிருக்கும் புத்திரர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே கரையில் நின்று புலம்புவதைதவிர வேறெதுவும் செய்யவியலாதவர்களாயிருந்த லட்சக்கணக்கான இந்தியப் பெற்றோர்களைப் போலவே”) , காமம் – காதல் , யதார்த்தம் – கனவு , சிறு தெய்வம் – பெருந்தெய்வம் , மேட்டிமை – விளிம்பு நிலை , அஹிம்சை – ஆயுதம் , இயற்கை – வளர்ச்சி; கலைஞன் – களப்பணியாளன் என்று நீள்கிறது இதன் வரிசை. இவ்விரு எல்லைகளும் ஒரு மனிதனுக்குத் தேவைக்கேற்ப பயன்படும் கதையாடல்களாக இருந்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நாவலில், கதாபாத்திரங்கள் ஒரு எல்லையை மட்டும் தங்கள் பார்வையாய் கொண்டிருக்கையில், நிகழ்வகளின் தடம் மற்றும் அவர் தம் கனவுகளின் உந்துதல் கூடிய விரைவிலேயே அவர்களை மறு எல்லையில் மறுக்க இயலாத வண்ணத்தில் நிறுத்தி, அரற்ற வைத்து அழகுப் பார்க்கிறது. வாசுதேவனிடத்தில் சீறும் உறங்காப்புலி பாகீரதியினிடத்தில் தோற்கிறான், புகழேந்தியிடம் சவடால் விடும் வாசுதேவன் பிறிதொரு தருணத்தில் தனித்து இருக்கையில் தனது கீழ்மைக் குறித்து திடுக்கிடுகிறான், ஜமீன்தாரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத இங்கள்ளயா, பிறிதொரு காலத்தில் வேறொரு ஜமீன்தாரிடத்து செய்துக் கொள்ளும் ஒப்பந்தம், காலாதீதமாய் இருந்து வரும் கோடுகளின் வழி பிரபஞ்சம் அறியும் ஜெமினி என்னும் கலைஞன் குறிப்பிட்டக் காலத்தின் கேள்விக்கு பதிலளிக்க இயலாத மௌனம் என இரு எல்லைகளில் வாசகனும் தவிக்க விடப்படுகிறான். ( “ஜமீன்தாருடைய பேச்சே தன் மார்பில் தோட்டாவாய்ப் பாய்ந்துவிட்டதைபோல மயங்கி விழுந்த இங்கள்ளய்யா அதைபற்றி என்ன நினைக்கிறானென்று நம்மிடம் எதையுமே பகிர்ந்துகொள்ளவில்லை யென்பதை கவனித்தாயா, என்னுடைய தூரிகைக்கு அது முக்கியம், அந்த மௌனம் என்கித்தானில் ஒரு வண்ணமாக கரையவேண்டும்” )
கலைஞன் தன் நுண்ணுணர்வின் வழி வர இருக்கும் காலங்களைக் குறித்த அனுமானங்களை வைக்கிறான். ஜெமினியின் “மிதக்கும் வண்ணங்கள்” என்று அறியப்படும் அந்தக் கலை உச்சம் சமூகத்தின் சரிவை , கடந்து வந்த மனிதனின் பாதையின் அபாய விளைவைக் குறித்ததா? , பாவனைகளைச் சூடியபடி வெறிக்கூத்தாடிய உறங்காப்புலியின் உடம்பில் வாசுதேவன் கண்ட வண்ணக் கலவை ஒரு வேளை ” மிதக்கும் வண்ணங்களோ ?”, களப்பணியாளனின் வலிந்து சூடிய அந்தப் பாவனை என்றென்றும் உண்மையை நெருங்கவியலாத ஒரு வறட்டுத்தனத்தின் எல்லையை , குற்ற உணர்வை மட்டுமே தூண்டவல்ல ஒரு செயல்பாட்டைக் குறிக்கிறதோ? இங்கிருந்து நாம் உறங்காப்புலியின் கனவில் வரும் உருவகக் கதைக்கு செல்வோமென்றால் , ஆதி இயற்கையை அந்த மாசற்ற நாட்களை , நிலங்களை, போராபுடிமா என்னும் அந்த ஆதிக்கடவுளின் உருவத்தை இக்காலத்திலிருந்து நாம் பின்னோக்கி நமது பொந்திலிருந்து, நம்மை ஒரு பூச்சியாக நாமே பாவித்து காண்கையில் ஏற்படும் திடுக்கிடல் ஒரு களப்பணியாளனுக்குரியதா , கலைஞனுக்குரியதா ? (“அவையனைத்தும் நிஜமான ஓரறிவு ஈரறிவு ஜந்துக்களல்ல, எப்போதாவது படையல்களோடு தாக்குருக்குவந்து இருட்டுக்குள்ளிருக்கும் பெரியவளை சம்பிரதாயமாக உற்றுப் பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றுவிட எத்தனித்த மனிதர்கள்தான் அவை,..”)
பத்துக்கும் மேற்பட்டக் கிளைக்கதைகள் வழி மையக்கதை செல்கிறது, தனித்துப் பார்க்கையில் கூடஅந்தக் கிளைக்கதைகளின் வீச்சு தன்னளவில் முழுமை கொண்டுள்ளது, ஜெமினியின் இளமைக் கால ஓவியப் பயணம், ஜெமினி ஆதிமூலம் அவர்களின் ஓவியம் குறித்து ஸ்திரமான கருத்துக்களைக் கூறும் இடங்கள் (“ஜெமினியின் முகத்தை மட்டுமே கவனித்தபடி முன் அவர் (ஆதிமூலம்)கடைப்பிடித்துக் கொண்டிருந்த மௌனத்தில், ஒரு கலைஞனுக்கு இன்றியமையாத தேவை என்று ஜெமினி கருதிய பெண் தன்மையுடைய ஸ்ருஷ்டிபூர்வமான, கர்வமில்லாமல், சட்டென எதன்மேலும் வியப்படையத் தன்னை அனுமதித்துக்கொள்ளும் வெகுளித்தனமும் (அதுஅறியாமையல்ல) லஜ்ஜையற்ற அபத்தமான புரிதல்களால் வடிவங்களின் சாரத்தை நேரடியாகத் தொட்டுவிடும் தன்னுணர்வற்ற இயல்பான மேதைமையும் இருந்ததாக அவருக்குத் தோன்றியிருக்கிறது “) மதுரை இருப்புப்பாதை போராட்டம் குறித்த விசாரணை கதை, சுருளிநாதனின் மொழிப் போராட்ட கால காதல் கதை (“தனிப்பட்ட உணர்ச்சிகளின் துணையில்லாமல் ஒரு பொதுப்புரட்சியை நடத்திவிட முடியுமா, முடியும் என்று இப்போது தோன்றுகிறது, காந்தி அதை செய்தாரென்றும் நான் நம்புகிறேன்”), ஐராவதம் தனது மகள் பாகீரதி மேல் கொண்டிருந்த பாசம் குறித்த கதை, சாம்புவைய்யர் – அரங்கநாதன் நம்பி உரையாடல்கள்,உறங்காப்புலி – பிரமீளா பெயர் விளையாட்டு உறங்காப்புலியின் விசாரணை நாட்கள் ஆகியவை குறிப்பிடும்படியானதாக இருந்தன. இக்கதைகளின் பின்னணியில்1934 பீகார் பூகம்ப சூழல் , சாருமஜும்தார் கால வங்காளம் , திக திமுக பிரிவு காலங்கள், எமெர்ஜென்சி காலகட்டம் என வரலாற்று நிகழ்வுகள் திரைகளாக அமையப்பெற்று பல்வேறு வரலாற்றுச் சாத்தியங்கள் நம் கண் முன்னே எழுகின்றன. கட்டற்ற கதைவெளியை, உரையாடல் மற்றும் அற்புத, பயங்கர ,உணர்ச்சிமிகு தருணங்கள் வழி, வரலாறு என்னும் பின்னணி திரைக் கொண்டு இணைக்க முயன்று, குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறது “பாகீரதியின் மதியம்”. தற்சுட்டும் ஆன்மீகமும், இடுக்கண் களையும் கையும், பங்கிட்டாலும் குறையாத அன்பின் விடுதலை ஊற்றும் இணைந்த ஒரு புறப்பாடு நிகழ்ந்திருக்கிறது.