பழம்பெரும் மரம்

முஜ்ஜம்மில்

பல நாள்கள் கழித்து ரயில் நிலையத்திற்கு வந்தேன்.  வெகுநேரம் தனியனாக இந்த நீண்ட சாக்லேட் நிற பளிங்குக்கல்  நடைமேடையில் காத்திருந்தேன்.  மனித நடமாட்டமில்லாமல் இருப்பதால் தரை கண்ணாடியைப்போல் பிரகாசமாக இருந்தது.  தண்டவாள பகுதி எண்ணைசுவடுகளோ, குப்பைகளோ அற்று தூய்மையாக  இருந்தது. தனி தனி பிரிவுகளாக நீண்ட  நடைமேடைகள். . . .   புதிதாக அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிகள், மின் விசிறிகள், மேற்கூரைகள், இரும்பு ஷட்டர் போட்ட திறக்கப்படாத கடைகள்  புதிதாக காட்சியளித்தது.  தூரத்தில்  தண்டவாள புற்கள்  மேல் அழகான பாறைபோல் தண்ணீர் கூட்ஸ்.  மஞ்சள் ஒளியில் கண்ணாடியில் வைக்கப்பட்ட அருங்கட்சியக பொருள் போல் தோன்றியது.  சக்கர பெட்டியை அருகில் வைத்துவிட்டு முகம் கழுவ அருகிலிருந்த நீர் தொட்டிகுழாயை திறந்தபோது சுவையான இனிய நீர்.   மாறாத அதே சுவை.  . . . .  முகத்தில் தண்ணீரை தெளித்து கொண்டு தலையை தூக்கிப்பார்த்தபோது வெறுமையான கட்டிடம்.  தூசி நிறைந்திருக்கும் முன்புற முகப்பு கட்டிடம், கிளை பிரிந்து செல்லும் சிறு சிறு கட்டிடங்களை கொண்டிருக்கும் கோடிக்கணக்கான் நரம்புகளும், ரத்த நாளங்களும் பிணைந்து நிற்கும் ராஜ அரண்மனையின் சகல கம்பீரங்களும், கலைநயமும் மாறாமல் உறுதியோடு  நிற்பதைபார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.  சிறுபிராயத்தில்  பெற்றோர்களோடு வரும்போது வட்டமாக சுழன்று உள்ளிழுக்கும் ஆழமான கிணறுபோன்ற உட்புற கோபுரத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து பிரம்மித்துப் போயிருக்கிறேன்.  தங்க, வெள்ளி,  மரகத நிறங்களில் கவனமாக செதுக்கப்பட்ட இந்த கோட்டையில்  எத்தனை கலைஞர்களின் உழைப்பு சேர்ந்திருக்கிறது.  ஆயிரமாயிரம் கலைஞர்களின் மகிமையை  எண்ணிப்பார்ப்பேன்.  இந்த கற்கோட்டைக்குள் நுழையும்போது  விவரிக்கமுடியாத,  காரணங்களுக்கு அப்பாற்பட்ட ஒருவித குளிர்ச்சியும், அமைதியும் இறங்கும்.  உள்ளே நுழைந்தபின் ரயில்நிலைய பரபரப்பு மங்கிய சப்தமாக ஒலித்துகொண்டிருக்கும்.  காத்திருக்கும் பிரயாணிகளிடத்திலிருந்து வரும் சப்தங்கள் உற்சாகத்தோடும், கவலையோடும், எரிச்சலோடும், கோபத்தோடும் எழும் எண்ணற்ற சப்த கலவைகள்.  . . .  அவற்றில் கேள்விகள், குழப்பங்கள். . .    இதுதான் ரயில் நிலையமா? .  . . 

படியில் கால்வைத்து மெல்ல மெல்ல ஏறி வர  வர  காட்சிகள் வேறாக தெரியதொடங்கியது.  காட்சிகள் என்பதைவிட சப்தங்கள் எனலாம்.  யாரறிவார்கள்? .   மேலே ஏறி பாலத்திற்கு வந்தபிறகுதான் முழு ரயில்நிலையத்தின்  மொத்த காட்சியும் தெரிகிறது.   நான் நடந்த நடைமேடைப்போல் எண்ணற்ற நடைமேடைகள். லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்.   எத்தனை தண்டவாளங்கள் ! வேறு வேறு நிறங்கள் கொண்ட ரயில்கள் இருக்கின்றன என்று  பாலத்தில் ஏறிய பிறகுதான் தெரிந்தது.    கீழிருந்து  பார்க்கும்போது புயல் சுழலும் கடல் போன்று தெரிந்தது,  மேலிருந்து பார்க்கும்போது சலனமற்ற நீல கடல்  பரப்பாக தெரிகிறது.  .  எத்தனை வண்ணங்கள் நிறைந்த அழகிய ரயில்நிலையம் ! 

பயணிகள் பேசிக்கொள்ளும்  நிறைய பேச்சுகள்  காதில் விழும்.  ”எதற்கு ரயில்வேயில் இதனை துறைகள்.  மின்துறை, பாதுகாப்பு துறை, சுகாதார துறை, ஓட்டுனர், டிக்கெட் பரிசோதகர், தண்டவாள ஊழியர்கள், உணவுகூடங்கள், ரயில்வே பாதுகாவலர்கள்.  . . . இத்தனை லட்சம் மனித உழைப்பா?  

“எல்லாம் மனித சௌகரியத்திற்காகத்தான்.” 

“இந்த நெருக்கடிதான் சௌகரியமா?  உட்காரவோ, ஏன் நிற்கவே இடமில்லாமல் தொங்கிக்கொண்டோ பயணம் செய்கிறார்களே.  மிகச் சிலரே உணரும் சௌகரியத்திற்கு எதற்கு இவ்வளவு மனித உழைப்பு? .  . .  எப்போதும்  பயணச் சீட்டு எடுப்பவர் என்றாவது ஒருநாள் மறந்துவிட்டால் அல்லது பெட்டி வகுப்பு மாறி ஏறிவிட்டால் கூட உடனே அபராதம் விதிச்சு,  அடுத்தவர் பார்வையில் அவரை   குற்றவாளிபோல்  நிறுத்தப்படுகின்றார்.  இத்தனைநாட்கள் அவர் நேர்மையோடு பயணித்ததற்கு கிடைக்கும் அடையாளம்!    விதிமுறைகளை போதிப்பவரும்  என்றாவது அதை மீறிவிடுவது மனித இயல்புதான் என்ற எண்ணமற்று நோக்கும்  குரோதக் கண்கள்  .  . .  ம்ஹும்.  . . .  இந்த  சிரமங்களோடு பயனிக்கதான் இவ்வளவு மனித உழைப்புகள் “ 

“ ரயில் நிலையம் கட்டுப்பாட்டோடு இயங்கவேண்டும் அல்லவா? ”

“அசௌகரியத்தோடு பயணிக்கத்தான் இந்த  கட்டுப்பாடுகள் ”

இதுபோன்ற பேச்சுகள் தொடரும்.  ரயில்நிலையத்தில் வெள்ளையாடை  அணிந்த ஆபீசர்களை என் அப்பா மிகுந்த மரியாதையோடு நலம் விசாரிப்பார்.  ரயிலின் நேரம் பற்றி விசாரிப்பார்.  பிறகு  அங்கிருந்து சற்று தள்ளி நிற்கும்போது  ரயில் வரும்வரை அங்குமிங்கும் சுற்றி பார்ப்பேன்.  எதிரிலே தெரியும் நடைமேடைகள் சிலவற்றில் அதிக கூட்டம், சிலவற்றில் குறைந்த கூட்டம், சிலவற்றில் குறிப்பிட்ட அடையாளம் உள்ளவர்கள்  அல்லது குறிப்பிட்ட இடத்தை நோக்கி பயணிக்கும் நபர்கள் தனியாக  தெரிவார்கள்.  சிலசமயம் எங்கள்  நடைமேடையில்  மட்டும் அதிக கூட்டம் இருக்கும்போது நான்  “இங்கமட்டும் ஏம்ப்பா  இவ்வளவு கூட்டம்?“ என்று கேட்பேன்.

“இவங்கல்லாம் நம்ம போற ரயில்ல வருபவர்கள் “

“அங்க கொஞ்சபேர்தான நிற்கிறாங்க?”

“அவங்க வேறு இடத்திற்கு போறாங்க “

‘நாமளும் அங்க போய் நிற்கலாம்ப்பா ‘ என்று அடம்புடித்தால்  லேசான மிரட்டலோடு ‘சும்மா இரு,  அங்கல்லாம் போகக்கூடாது.  . . .  இதுதான் நல்ல இடம்,  பாரு எவ்வளவு கூட்டம் இங்க இருக்காங்க,’ என்று சமாதானம் சொல்வார்.  நான் மௌனமாக நிற்பேன்.   ‘அங்க கொஞ்சபேர்தான் நிக்கிறாங்க, கடை கூட ஒண்ணுதான் இருக்கு, இங்க நாலு கடைகள் இருக்கு,  அப்ப  நாமதானே பெஸ்ட்டு’ என்று அப்பா  சிரிப்பார்.  நான் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன்.   அப்போது மற்ற நடைமேடைகளில் இருப்பவர்கள் எனக்கு  விசித்திரமானவர்களாக தோன்றுவார்கள்.   ’ நாங்கள்தான் பெஸ்ட்டு. . ’ என்று எனக்குள் சிரித்துக்கொள்வேன்.   வெள்ளை சட்டை போட்ட ஆபிசர்தானே எங்களுக்கு வழிகாட்டினார், அதனால்  அவரும் நம்மகட்சிதான்  என்று பெருமிதம் ஏற்படும்.  ஆனால்  வளர்ந்து பெரியவனானபின்தான் தெரிந்தது எல்லா நடைமேடைகளில் உள்ளவர்களுக்கும் அவர்தான் வழிகாட்டுகிறார் என்று!  ரயில்நிலையம் அப்போதெல்லாம்  வியப்பாகவும், பயமூட்டுவதாகவும் இருக்கும்.  பெரியவர்களின் துணையோடுதான்  வரவேண்டும், தன்னிச்சையாகச் சென்றால் தொலைந்த்துவிடுவோம்  என்று பயம் இருக்கும்.  பிற்காலத்தில் வளர்ந்த பின் தனியாகவே பயணிக்க ஆரம்பித்தேன்.  சிறிது பயமிருந்தாலும்  எச்சரிக்கையுணர்வோடுதான இருந்தேன்.  சிலசமயம் ரயில்நிலையத்தின் இத்தனை பிரிவுகள்,  ரயில் நிலைய கெடுபிடிகள்,  பரிசோதகர்கள் இவையெல்லாம் சற்று எரிச்சலை ஏற்படுத்தும்.   அதுபோன்ற சமயத்தில்  அந்த பழைய பெருமரத்தைப்பார்ப்பேன்.  அதன்  சலனமற்ற அமைதியான தோற்றம் என்னுள் ஆழ்ந்த குளிர்ச்சியை தோற்றுவிக்கும்.  .  ஒருதடவை டிக்கெட் பரிசோதகரோடு  ஏற்பட்ட சச்சரவைத் தவிர  ரயில்நிலையத்தின்மேல் எனக்கு  கோபமே வந்ததில்லை.   தனியாக பயனிக்கதொடங்கிவிட்ட காலங்களில் ரயில்நிலையத்தொடு தனித்து விடப்பட்ட நான் அதனோடு நெருங்கிய தொடர்புடையவனாகிவிட்டேன்.  ரயிலுக்காகக் காத்திருக்கும் நேரங்கள் நீண்ட கற்பனையைப்போல் இருக்கும்.   அப்போது டீ விற்பவர்கள்,  ஆபிசர்கள், காவலர்கள், கடைகள், மேற்கூரைகள்,  பெரிய பிரகாசமான விளக்குகள், கடந்து செல்லும் பயணிகள்  என்று காட்சிகளை தினம் தினம் பார்த்து பழகிவிட்டதால் இவைகள் எல்லாம் வெறும் கற்பனைதானோ.  . . . . .  என்று தோன்றும்.  கற்பனைவெளியைப்  போன்று தோன்றத் துவங்கிய நேரத்தில்தான் பயணிகள் குறையத் தொடங்கினர் .   தாமதமாக வந்து கொண்டிருந்த ரயில்களும் நாட்கள் செல்ல செல்ல எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டது.    ரயில் நிலையம் ஜனசஞ்சாரமேயற்ற இடமாக உருவெடுத்துக்கொண்டிருந்தது.   

 ஒருநாள். ..   

நடைமேடையில் இங்கும் அங்கும்  நடந்துக்கொண்டிருந்தேன்.  ரயிலின் வருகையும் குறைந்துவிட்டதால், குறிக்கோளின்றி மெல்ல நடந்து நடைமேடை முடிந்து தண்டவாளத்தில் நடந்துக்கொண்டிருந்தேன்.  அதைகடந்தபின் பசும்புல்வெளி.   கோடிக்கணக்கான புற்களின் நடனம்.   ஈரம் நிரம்பிய புற்களின் தலைமேல் கதிரவன்  பகிர்ந்தளித்த தங்க விளக்குகள்  எரிந்தன.   ஈரப்பரப்பில் காலை வைத்து மெல்ல நடந்து கொண்டிருந்தேன்.   சிறு பூச்சிகளின் சப்தத்தைத் தவிர முற்றிலும் அமைதியாக இருந்தது.  பாதைகளற்ற பச்சைப் பரப்பு எல்லைகள் அற்று விரிந்து சென்றது.  முதலில் சிறுதடுமாற்றத்தை உணர்ந்து பிறகு தைரியத்தை வரவழைத்துகொண்டு கால்போன போக்கில் நடக்கத் தொடங்கினேன .   பலமான காற்று வீசத் தொடங்கியது.   காற்றடித்த வேகத்தில் புற்கள் சிதறி  முகத்தில்  தெறித்தது. அடர்த்தியான மரங்களடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்து கொண்டிருந்தபோது அந்த அருவியைப் பார்த்தேன்.  பசுமையின் வீட்டிற்குள் கொட்டும் பிரகாசமான  வெண்ணிற அருவி.   இதுபோன்ற இடத்தை இதுவரை யாராவது பார்த்திருப்பார்களா?  அல்லது நான்மட்டுமே கண்டுபிடித்திருக்கிறேனா என்று தெரியவில்லை.  அருவியில் நனைந்துவிட்டு மீண்டும் அதே  பக்கமாக நடந்து போனேன்.  மீண்டும் அதே பச்சைப்பரப்பு.  அதன் விளிம்பிற்கே வந்துவிட்டதாக உணர்த்தும் ஒருவித மணம் எழுந்தது.   ஏதோ பிஸ்கெட் மணம் போன்று இருந்தது.  அங்கு ஒரு சிறிய கிராமம் தெரிந்தது. .  அது முழுக்க  தங்க நிற பிஸ்கெட் மணத்தில் மணத்தது.  அங்கிருந்த சிறு சிறு வீடுகள், மரங்கள், கிணறுகள், மலைகள், வயல்வெளிகள்  எல்லாம் தங்கநிற பிஸ்கெட் மணமே வீசியது.   அங்கு மனிதர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை.  ஒருவேளை முன்பு இருந்திருக்கலாம்.  நாற்புறமும் நாசியைநிறைக்கும் சுவையான  மணம்.  தொலைவில் கடந்துவந்த பச்சைப்புல் பரப்பு நீளமான கோடுபோல்  காட்சியளித்தது.  அங்கு சீக்கிரம் இரவு கவிழ்வதும், சிறிது நேரத்திலே சூரியன் உதிப்பதுமாக இருந்தது.  அங்கிருந்த ஆற்றில் யாரோ கொட்டிய வண்ணங்கள் நிறைந்த நீர் ஓடியது.  அதுபார்ப்பதற்குத்  தரையைப்போல் தெரிந்தது.  நிறங்கள் மட்டும் பலவடிவங்களில் நகர்ந்துக்கொண்டிருந்தன.  அதில் கால் வைத்து இறங்கியபோது  ஆழமில்லை.   அதன் வண்ணநிற ஜொலிப்பு என் உடல்முழுவதும் எதிரொளித்தது.  அந்த ஆறு ஓடிக்கொண்டிருந்த திசையை நோக்கி நடந்துக்கொண்டே இருந்தபோது ஒரு பெரிய மதில் சுவர் தெரிந்தது.   நீலநிறமான அந்த சுவர்மேல்  ஏறிபார்த்தபோது  ஒரு அதிசயம் தெரிந்தது.  விசித்திரமான வண்ணங்கள் நிறைந்த பெரிய ரயில்நிலையம்.  இதுவரை கண்டிராத புதிய புதிய வண்ணங்களால் தீட்டப்பட்ட அந்த ரயில் நிலையத்தை தண்டவாளத்தை கடந்து முதல் நடைமேடைக்கு சென்றபோது கண்டேன்.  அடர்த்தியான ஆரஞ்சு கற்களால்  மின்னிய நடைமேடையில்  பல வண்ண  உடை அணிந்த மனிதர்கள்.  அதேபோன்று   எல்லா நடைமேடைகளிலும் காணப்பட்டார்கள்.  அங்கு என்னை குழப்பிய ஒரு  விஷயம்.  . . . ஆம் அதேதான்.  . . . .  எப்போதும் நான் காணும் அந்த பழைய பெருமரம். . . . . .  அந்த முகப்பு கட்டிடம்.  சந்தேகமே இல்லை ! வெள்ளை ஆடை அணிந்த மனிதரிடம் எனக்கான ரயிலை விசாரித்தேன்.  அவர் பாலத்தில் ஏறி மூன்றாவது நடைமேடைக்கு செல்லுமாறு கூறினார்.  அவரைப்போன்றே சாயல் உள்ள இன்னொரு மனிதர் வேகமாக அங்கு வந்து ‘பாலத்தில் எல்லாம் ஏறவேண்டியதில்லை, தண்டவாளத்தை கடந்தே செல்லலாம்’ என்றார்.  உடனே அவர்கள் இருவருக்கும் வாய்ச்சண்டை வந்துவிட்டது.   அவர்கள் சந்தர்ப்பத்திற்கு காத்திருந்து சண்டைபோடுவது போல் இருந்தது.  

“இப்படி பயணிகளுக்கு வழிகாட்ட வேண்டாம். “

“அவர்கள் விழிப்புணர்வோடுதான் உள்ளார்கள்.  சந்தேகிக்கவேண்டாம்.”

“பாலம் எதற்கு கட்டப்பட்டிருக்கு? ”

“பாலத்தால் சிரமம், அது பயணிகளை விழிப்புணர்வு அற்றவர்களாக ஆக்கிவிடுகிறது.“

அவர்கள் இப்படியே விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர்களை போன்ற சாயல் கொண்ட எண்ணற்றவர்கள் சேர்ந்துகொண்டார்கள்.  அவர்களின் விவாதம் முற்றிக்கொண்டே செல்லும்போது குதிரை நிற  ரயிலொன்று படுவேகமாக அவர்களின் சப்தத்தை அடக்கும் வகையில்  கடந்து சென்றது.  அது கடந்து சென்ற பின்பும், சிலர் தொடர்ந்து விவாதித்துகொண்டிருந்தனர்.  அக்கூட்டத்தில் பாசி நிறத்தில் அங்கியணிந்த அடர்த்தியான நீண்ட தாடிகொண்ட பழுத்த வயதான மனிதர் இடைமறித்து “ சிவப்பு கொடி காட்டாமல் விவாதித்துகொண்டிருப்பதால்தான் ரயில் நிற்காமல் சென்றுகொண்டிருக்கிறது,“ என்றார்.  ஆனால் அவர்கள் அவரை கண்டுகொள்ளாமல் கூச்சலிட்டுகொண்டிருந்தனர்.  பிறகு முதியவர் சோர்வாக, தான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு திரும்பிவிட்டார்.  இதனிடையே இரண்டு, மூன்று ரயில்கள் கடந்து விட்டன.  வெகுநேரம் கழித்து ஒரு ரயில் அதிசயமாக நின்றது.  அதுகூட எதோ பழுது காரணமாக நின்றது என்று பேசிகொண்டார்கள்.  உள்ளே நான் ஏறிக்கொண்டபோது அதே வண்ண உடைகள் அணிந்த பயணிகள் தென்பட்டார்கள்.  ரயில் ஊர்ந்து செல்லத்தொடங்கியது.  அதைக்கடந்து மின்னல்வேகத்தில் பல ரயில்கள் கடந்து சென்றன.  நான்மட்டுமின்றி சகபயணிகளும்கூட   பயந்துவிட்டனர்.  இவ்வளவு வேகத்தில் எங்கே செல்கின்றன ! அதை பயத்தோடு பார்த்தாலும் எங்கள் ரயில் ஊர்ந்து செல்வது பயணிகளுக்கு எரிச்சல் ஊட்டுவதாகவே இருந்தது.  அடுத்த ரயில் நிலையத்தில் வெளியே வந்தபோது சிலர் மேம்பாலத்திலும், பலர்  தண்டவாளத்திலும் இறங்கி வேறு நடைமேடைக்கு ஏறிக்கொண்டிருந்தனர். அந்த ரயில் நிலையத்தில் விசித்திரமான காட்சி தென்பட்டது.  ஒரு பிரயாணியை சுற்றி கருப்பு ஆடையணிந்த கூட்டம் நின்றது.  காரசாரமான பேச்சு சப்தம் கேட்டது.  நெருங்கிசென்றபோது கரிய ஆடைகளுக்கு மத்தியில் வெளிறிப்போன ஆட்டுக்குட்டியைப்போன்ற ஒரு மனிதர் நின்றுக்கொண்டிருந்தார்.  அவர்கள் பேச்சை கவனித்தேன்.  

முதலாமவர் : (பிரயாணியை பார்த்து ) “முதலில் ரயிலுக்குள் நீ ஏறிய பிறகுதான் பெட்டியை ஏற்றவேண்டும் “

இரண்டாமவர் : (பிரயாணியை பார்த்து ) “ இல்லை, பெட்டியை வைத்தபிறகுதான் நீ ஏறவேண்டும் “

முதலாமவர் : “முதல்ல அவர்தான் ஏறவேண்டும்.  ரயில் கிளம்பிவிட்டால் அவர் மட்டும் செல்லலாம் பெட்டியை விட அவர் செல்வதுதான்  முக்கியம். ”

இரண்டாமவர் : ( சற்று அழுத்தமாக ) ”இல்லை இல்லை முதலில் பெட்டியைத்தான் வைக்கவேண்டும்.  ஏனென்றால்  முதலில் அவர் ஏறி  பிறகு பெட்டியை எடுக்க கீழே குனியும்போது ரயில்  கிளம்பிவிட்டாள் ஆபத்தாகிவிடும்.  

இவர்களை தவிர்த்து இளவயது அதிகாரிகள் இருவர்  வந்து இவர்களை அவமதிப்பதுபோல் பேசினர்.  

இளவயது அதிகாரி 1 :  “எல்லாவற்றையும்விட முக்கியம் முதலில் வலது காலை வைக்கவேண்டும் .“ 

இளவயது நபர் 2 : “அதைவிட முக்கியம் ஏறும்போது இரும்புக் கைப்பிடியை  முதலில் பிடித்துக் கொள்ளவேண்டும்.  ”

இவர்களின் விவாதத்திற்கு நடுவே மாட்டிக்கொண்ட பயணி ஏறுவதற்குள் ரயில் கிளம்பிவிட்டது.  நான் ரயிலில் எறிக்கொண்டபோது அவன் ரயிலையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தான்.  அதிகாரிகளின் விவாதம் முடிவுக்கு வரவேயில்லை.   எங்கள் ரயில் மிதமான வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது முன்பு பார்த்த படுவேக ரயில்கள் பாதி வழியில் நின்றுக்கொண்டிருந்தன.  அவற்றில் பயணிகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர்.  ஏன் இப்படி வழியில் நிற்கின்றன என்று விசாரித்தபோது தான் தெரிந்தது அவை ரயில் நிலையங்களில் நிற்பதில்லையாம்.  பயணிகளை ஏற்றிக்கொள்வதும், இறக்குவதும் இடைவழியில்தான்.  ரயில் நிலையத்தோடு அவற்றிற்கு எந்த தொடர்புமில்லை.  நிலையத்தின் கட்டுப்பாடுகள், கட்டளைகளில் நம்பிக்கையில்லை.  அதனால் அவை சுயமாக இயங்குவது என்று முடிவெடுத்துவிட்டன.  விரும்பிய இடத்தில் நிற்கும், விரும்பிய இடத்தில் தொடரும்.  அதனால் வழியிலேயே சிலர்  உணவுகடைகளும்,  பழரச கடைகளும் திறந்துவிட்டனர்.  ரயில் சென்றுக்கொண்டிருக்கும்போது புதிதாக கட்டப்பட்டு முடிவுறாமல் பாதியிலேயே தகர்க்கப்பட்டுக் கொண்டிருந்த இரண்டுமூன்று  மேம்பாலங்கள் தென்பட்டன.  இவையும் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வராதவை.  இவற்றைக் கடந்து அடுத்தடுத்து ரயில் நிலையங்களில் நின்றபோது நிறைய விசித்திரங்கள் நடந்தன.  ரயில் நிலைய சட்டத்திட்டங்கள், ஒழுக்கங்கள், பயணிகளுக்கான அறிவுரைகள்  ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தது.  இன்னொரு நிலையத்தில் செடிகளில் இருக்கும் பூச்சிகளை போல் கரும்பச்சையுடை அணிந்த மனிதர்கள் உலாவிக்கொண்டிருந்தனர்.  அச்சடித்த ரயில் நிலைய சட்டதிட்டங்கள் அடங்கிய தடிமனான புத்தகங்களை பயணிகளுக்கு இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தனர்.  அவற்றில் பிரயாண வழிமுறைகள் மிக நுணுக்கமாகவும்  தெளிவாகவும் கொடுக்கப்பட்டிருந்தது .  உதாரணமாக ரயில்நிலையத்தின் நீரை எப்படி பிடிக்க வேண்டும், நடைமேடை  கடைகளில் எத்தனைமுறை பொருட்கள் வாங்கலாம், காத்திருப்பு இருக்கைகளில் யார் உட்காரலாம், பயணத்தில் எச்சில் எந்தப்பக்கம் துப்பவேண்டும்  போன்றவைகள்.   முன்பக்கத்தில் ஆசிரியர் குறிப்பும்  கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த தடிமனான புத்தகங்கள் சிலருக்கு அயர்ச்சியாகவும், சிலருக்கு வியப்பூட்டுவதுமாக  இருந்தது, சில பக்கங்களை திருப்புவதற்குள்  அடுத்த ரயில் நிலையம் வந்துவிட்டது.  அங்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சிரியமாக மஞ்சள்  ஆடை அணிந்த மனிதர்கள் நின்றார்கள்.  அவர்கள் கருப்பு நிற தடிமனான புத்தகத்தை எல்லோருக்கும்  கொடுத்துக்கொண்டிருந்தனர்.  முந்தயவர்களின் புத்தகத்தில் நிறைய தவறுகள், குளறுபடிகளும் இருப்பதாகவும் தங்களுடைய  புத்தகம் தான் சிறந்தது, ஆராய்ச்சிக்குழுவின் கடும்முயற்ச்சிக்கு பிறகுதான்  வெளிவந்தது என்றார்கள் .  அதை வாங்கி  புரட்டிப்பார்த்தபோது முந்தையதிற்கும் இதற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.   சிறு சிறு கருத்து வேறுபாடுகளை தவிர்த்து வேறொன்றுமில்லை.   கடைசி ரயில் ரயில்நிலையத்தை சேர்வதற்குள் 12 வேறு வேறு நிறங்களில் பல புத்தகங்கள் சேர்ந்துவிட்டன.  பல பயணிகள் இந்த புத்தக சுமைகளுக்கு பயந்து பாதி வழியிலேயே இறங்கிவிட்டனர்.  அவர்கள் விட்டுசென்ற புத்தகங்கள் பெட்டியில்  நூலகம் போல காட்சியளித்தது.  ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வந்தது.    ரயிலிலிருந்து வெளியேறிவிட நினைத்த  பயணிகளுக்கு இடைவழியில் பார்த்த வேக ரயில்கள் உற்சாகமூட்டுவதாக இருந்தது.  திருமண வீடுபோன்று உற்சாகம் வழிந்தோடும் கொண்டாட்டமாக அந்த ரயில் காணப்பட்டது.  பல பயணிகள் சட்டென்று கீழே குதித்து அந்த ரயிலில் ஏறிக்கொண்டனர்.  ரயில் மெதுவாக சென்றுக்கொண்டிருந்ததால்  யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்டியில்  என்னைத்தவிர ஒரு வயது முதிர்ந்த தம்பதிகள் அங்கு இருந்தோம்.  புத்தகங்களுக்கு பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.  அனைத்து புத்தகங்களையும் புரட்டிப்பார்க்கவேண்டும் என்று கடைசி ரயில்நிலையம் வரை நான் பயணித்தேன்.  இறங்குவதற்குள்  12,  13  கனமான புத்தகங்களை புரட்டிப்பார்த்துவிட்டேன்.  புத்தகங்களோடு கடைசி நிலையத்தில் இறங்கினேன்.  வயதான தம்பதிகள் இறங்குவதற்கு சிரமட்டுக்கொண்டிருந்தார்கள்.  அவர்களுடைய 24 புத்தகங்களையும் மெதுவாக இறக்கிவைத்தேன்.  முதியவர் லேசான  சங்கடத்தோடு ‘ ஏன் தம்பி. . . அதை அங்கயே வச்சிடலாமே.  . . இந்தவயசுல எல்லாத்தையும் படிக்கமுடியுமா. . . தூக்கிக்கொண்டுகூட போக முடியாது.  . . ’ எங்களை  2, 3  ரயில்கள் வேகமாக  கடந்து போனது.  பயணிகள் நிறைந்த குதூகலமான ரயில்.  . ! மனதில் அலையடித்துக்கொண்டிருந்த சிந்தனைகளோடு மெல்ல நடந்தபோது ஓரத்தில் அதே நபர் உட்கார்ந்திருந்தார்.   அதிர்ச்சியும்,  ஆச்சரியமும்.  முதல் ரயில்நிலையத்தில் பார்த்த அதே முதியவர்   உட்க்கார்ந்திருந்தார்.  உண்மையா அல்லது கணவா? .  அருகே சென்றுப்பார்த்தபோது உண்மையானது.  அதே நபர்தான் அதே நீள  தாடிகொண்ட பாசிநிற அங்கியணிந்த பெரியவர்.   மெளனமாக அமர்ந்திருந்தார்.  அவர் அருகில் இருந்த பசுமையான மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் அவர்மேல் தூறிக்கொண்டிருந்தது. குழம்பியிருந்த என்னைப்பார்ததும்  புன்னைகைத்தார்.  அவர் அருகில் சென்று நடந்த விசித்திரமான காட்சிகளை பற்றி கேட்டேன்.  லேசாக சிரித்துவிட்டு,  ‘ரயில்நிலையத்தை விட்டு ரயில்கள் தங்கள் தொடர்பை துண்டித்து வெகுநாட்கள் ஆகிவிட்டது.  வெகுகுறைவான ரயில்கள் மட்டுமே ரயில்நிலையத்தில் நிற்கின்றன.  ரயில்நிலைய அறிவிப்புகளின்படி, வழிக்காட்டுதல்களின்படி  நிற்கிறது,  செயல்படுகிறது’ என்றார் .   சற்று தலையை தூக்கிபார்த்து ‘ பயணிகள் குறைந்துவிட்ட போதும்கூட அதிகாரிகளின் விவாதங்கள் இன்னும் முடிவடையவில்லை !’ என்றார்.   

எதோ நினைவு வந்த வேகத்தில், ‘அந்த வேக ரயில்கள்.  . . . .  ரயில்நிலைய தொடர்பற்ற.  . . . ’ நான்  சொல்வதற்குள் அவரே புரிந்துக்கொண்டார்.  

‘ பல வேக ரயில்கள்  கடும்விபத்தில் சிக்கி   நிறைய  உயிரிழப்புகள் நடந்துவிட்டன. . . . . . .  கேள்விப்படவில்லையா? ’ என்றார்.  கடும் அதிர்ச்சியைத்தான் என்னால் பதிலாக தரமுடிந்தது.  

சற்று நிதானத்திற்கு வந்தபிறகு ‘ விபத்துகள் எப்படி நடந்தன?’ என்றேன்.  

‘கட்டுக்கடங்கா வேகத்தில் செல்லும் அந்த ரயில்களின் பாதைகள்  அவற்றிற்கு இன்னும் தெளிவில்லை.   ஒரு முறையற்று,  நினைத்த இடத்தில்  தன்னிச்சையாக நிற்பதும், செல்வதுமாக இருந்ததால் ஒன்றோடொன்று மோதி உயிர்சேதம் ஏற்ப்பட்டுவிடுகிறது.  அவற்றிற்கிடையே கட்டுப்பாடுகளோ,  ஒழுங்குமுறைகளோ இல்லாததால் நாளுக்குநாள் விபத்தும்  அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.’  மரத்தில் கத்திக்கொண்டிருந்த சிறு குருவியையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் .  அவர் சொன்னதைக் கேட்ட  அதிர்ச்சியில் சிந்தனையிலே ஆழ்ந்திருந்தேன் முதல் ரயில்நிலையத்திலிருந்த அவர் எப்படி இங்கு வந்தார் என்று கேட்க நினைத்திருந்ததைக் கூட மறந்தே விட்டேன்.  திரும்பிப் பார்த்தபோது அவர் எங்கோ தொலைவில் சிறு நட்சத்திரம்போன்று  மறைந்துக்கொண்டிருந்தார்.  

             .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .   

நீண்ட நேர காத்திருப்பிற்குபின் குறைந்த பெட்டிகள் மட்டுமே கொண்ட ஒரு ரயில் நின்றது.  விரல்விட்டு எண்ணக்கூடிய பயணிகள் மட்டுமே அமர்ந்திருந்தார்கள்.  நான் ஒருவன் மட்டுமே அந்த நடைமேடையில் நின்றுக்கொண்டிருந்ததால் நான் ஏறியதும் உடனே ரயில் மெல்ல நகரத்தொடங்கியது.  குகை போன்ற வளைவிற்குள் ரயில்  நுழையும்முன் தூரத்தில் கம்பீரமான அந்த பழைய பெருமரம்  என் கண்ணில் பட்டது .   .  வெள்ளையுடையணிந்த ஒருவர்  அதன் அருகில் நிற்பதும் தெரிந்தது.

***  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.