பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1

This entry is part 7 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

பகுதி – 1

அமில மழைப் பிரச்சினை, நகரங்களை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால், இன்று உலகெங்கும் பெரிய நகரங்களில், மக்கள் மிகவும் கண்கூடாகப் பார்க்கும் விஷயம் காற்று மாசுபடுவது. அதுவும், வாகன மற்றும் தொழிற்கூடங்கள் அதிகமுள்ள நகரங்களில் இது ஒரு கரும்புகை அல்லது செம்புகையாகவே காட்சியளிப்பது மறுக்க முடியாத உண்மை. பெரு நகரங்களை அடுத்துள்ள கிராமங்களும் இதன் விளைவை நேரடியாக அனுபவிக்கின்றன.

நவீன உலகில் இன்று, உலகெங்கும் இப்பிரச்சினை இருந்தாலும் லண்டன்வாசிகள், தொழிற்புரட்சிக் காலங்களிலிருந்தே இந்தப் பிரச்சினையைக் கவனித்து வருகிறார்கள். 1905 –ல் பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர் ஹென்ரி அன்டாயின் (Dr. Henry Antoinne) இவ்வகைக் காற்று மாசுக்குப் பனிப்புகை (smoke + fog = smog , பனி + புகை = பனிப்புகை) என்று பெயரிட்டார். முதலில் இதற்குக் காரணம், கரியை எரிக்கும் அனல் மின் நிலையங்கள் என்று நம்பப்பட்டாலும் படிப்படியாக இந்தப் பிரச்சினை எதனால் வருகிறது என்பதை விஞ்ஞான ஆராய்ச்சி தெளிவாக்கியுள்ளது. 

இடத்திற்குத் தகுந்தவாறு காரணங்கள் மாறுபட்டாலும் இவற்றில் முக்கியமானவை:

  1. கரியை எரிப்பது – சமையல், அனல் மின் நிலையங்கள், குளிர்காலச் சூட்டேற்ற மையங்கள் வெப்பத்திற்காக எரிக்கும் கரி.
  2. வாகன உமிழ் – லாரிகள் (அதுவும் டீசல் புகை), பேருந்துகள், கார்கள் மற்றும் தொல்லெச்ச எரிபெருளைப் (fossil fuel) பயன்படுத்தும் ஊர்த்திகள் உமிழும் கார்பன் மேனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, கந்தக ஆக்ஸைடு என்று ஒரு ரசாயன ராட்சசக் கலவை நம் வாழ்வை கடினமாக்குகிறது.
  3. விவசாயப் பயிர்த்தூர் – டில்லி போன்ற நகரங்களில் மேற்சொன்ன காரணங்கள் இருந்தாலும் குளிர்காலத்தில், அறுவடைக்குப்பின் நகரைச் சுற்றியுள்ள மாநிலங்களான அரியானா, பஞ்சாப் மற்றும் உ.பி. –யில் வயல்களில் எரிக்கப்படும் பயிர்த்தூர் (stub burning) ஒரு முக்கியக் காரணம். டில்லி, எத்தனை முயற்சித்தாலும் காற்றுத் தூய்மையில் முன்னேறாததற்கு இது முக்கியக் காரணம். ஒவ்வொரு வருடமும் பனிக்காலத்தில் 500 மில்லியன் டன் பயிர்தூர், வயல்களில் எரிக்கப்படுகிறது.
https://cdn.theatlantic.com/thumbor/_aBf4Qdv3xXiaaoAYngZAY5Cs2s=/900x527/media/img/photo/2019/11/photos-delhis-toxic-sky/d01_1179901363/original.jpg

இந்தப் பனிப்புகையின் பின்னுள்ள விஞ்ஞானத்தைக் கொஞ்சம் அலசுவோம். முதலில், பனிமூட்டமான புகை எப்படி உருவாகிறது (அதுவும் கோடைக் காலங்களில்) என்று பார்ப்போம். எந்த வகைப் பனிப்புகையானாலும் அதன் உருவாக்கம், சூரிய ஒளியுடன் கலக்கும் ரசாயனங்கள் மூலமே நடக்கிறது.

  1. இவ்வகைப் பனிப்புகைக்குக் காரணம், பிரதான மாசு ரசாயனங்கள் (primary polluting chemicals) சூரிய ஒளியுடன் கலந்து இரண்டாம் மாசு ரசாயனங்களை உருவாக்குகிறது. நாம் பெரும்பாலும் பார்ப்பது , இரண்டாம் மாசு ரசாயனங்களின் (secondary polluting chemicals) விளைவான பனிப்புகை.
  2. முதல் (பிரதான) மாசு ரசாயனங்கள், நைட்ரிக் ஆக்ஸைடு (nitric oxide), நைட்ரஜன் டையாக்ஸைடு (nitrogen dioxide) மற்றும் முழுவதும் எரியாத ஹைட்ரோ கார்பன்கள் – இதற்கு முக்கிய காரணம் ஊர்த்திகளின் உமிழ். தொல் எச்சங்களாலான எரிபொருளில் இயங்கும் ஊர்த்திகள் அதிகமாக ஆக, முதல் மாசு ரசாயனங்கள் காற்றில் அதிகமாகக் கலக்கின்றன.
  3. இரண்டாம் மாசு – ரசாயனங்களில் முக்கியமானது, ஓஸோன். நாம் முன்னே சொன்ன நைட்ரிக் ஆக்ஸைடு, எரியாத ஹைட்ரோ கார்பன்கள் சூரிய ஒளியோடு கலக்கையில் நைட்ரஜன் டையாக்ஸைடு மற்றும் ஓஸோன் உருவாகிறது. தரைக்குச் சற்று உயரே உருவாகும் இவ்வகை ஓஸோன், காற்றில் ஒரு சிவந்த புகைபோலக் காட்சியளிக்கிறது. ஒரு அளவிற்குமேல், இவ்வகை ரசாயனங்கள் காற்றில் கலந்தால் அமில மழை உருவாகிறது. கந்தக ஆக்ஸைடும் முழுவதும் எரியாத ஹைட்ரோ கார்பன்களும் சூரிய ஒளியுடன் கலந்தால், கந்தக அமிலமாக மழை உருவாக உதவுகிறது என்று முன்னரே பார்த்தோம்
  4. 1950 வரை, இந்த பனிப்புகையின் விஞ்ஞானம் முழுவதும் புரியாத புதிராகவே இருந்தது. விஞ்ஞானிகள் பல்வேறு சோதனைகள் மூலம் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் ஏன் இத்தனைப் பனிப்புகை உள்ளது என்பதை ஆராயத் தொடங்கியதில், கிடைத்த உண்மைகளை இங்கு சொல்லியுள்ளேன். நான் கடைசியாக லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குச் சுமார் 8 ஆண்டுகளுக்குமுன், கோடைக் காலத்தில் சென்றிருந்தேன். மதியம் 12 மணிவரை, அந்நகரில் பனிப்புகை அகலுவதே இல்லை. 24 மற்றும் 32 பாதைகள் உள்ள நெடுஞ்சாலைகளில் அங்கு பல்லாயிரம் ஊர்த்திகள் சென்ற வண்ணம் இருக்கும். இந்தப் பிரச்சினை இன்றுவரை தொடர்கிறது. கலிஃபோர்னியா மாநிலம் அமெரிக்காவில் கார் கம்பெனிகளுக்கு மிகவும் கறாரான மாநிலம் என்று பெயர் வாங்கியும், நிலைமையில் அதிக முன்னேற்றம் இல்லை.

விஞ்ஞானிகள் இவ்வகைக் காற்று மாசுபடுவதை பலவித அளவீடுகளோடு வெளியிட்டுள்ளார்கள். இவ்வகை அளவீடுகள் ஒரு சமீப முயற்சி. பொதுவாகச் சொல்வதானால், காற்று மாசுபடுவது மனித நடவடிக்கைகளால் என்பது உண்மை.

  1. பூமியில் உயிர்வாழத் தகுந்த சூழல் உருவாகியபின், மிகப் பெரிய காற்று மாசுபடும் நடவடிக்கைகள் என்று பார்த்தால் அவை, காடுகள் எரிவது, எரிமலையிலிருந்து உருவாகும் ஏராளமான சாம்பல் மற்றும் கந்தகம். முக்கியமாக, இவற்றின் பங்கு ஒரு குறிப்பிட்ட அளவில் பல நூறு ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது
  2. காற்றின் மீதான முதல் தாக்குதல், உணவு சமைப்பதற்கு மற்றும் குளிர்காலத்தில் வெப்பம் உண்டாக்க மனிதன் மரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்புதான்
  3. நாகரீகங்கள் வளர வளரப் பட்டறைகள் மற்றும் உலோக வேலைகள் என்று தொடங்கி கரியைப் பயன்படுத்த ஆரம்பித்தது, கடந்த ஒரு 1,500 ஆண்டுகளாக என்று சொல்லலாம். இது காற்றின்மேல் நடந்த இரண்டாம் தாக்குதல்
  4. முதல் இரண்டு தாக்குதல்களும் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அடுத்தபடியாக வந்த முன்னேற்றமான் நீராவியால் இயங்கும் எந்திரங்களை மனிதர்கள் 19 -ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தத் தொடங்கியது மூன்றாம் தாக்குதல். முதல் இரண்டு தாக்குதல்களைக் காட்டிலும் மிகவும் பலமான தாக்குதல். இந்தத் தொழிற்புரட்சிக்குப் பின்புதான், காற்று மாசுபடுவதை நாம் ஒரு பிரச்சினையாகப் பார்க்கத் தொடங்கினோம். அதுவரை காற்றை மாசுபடுத்தும் அனைத்துக் காரணங்களும் நகராத மூலங்கள்தாம் (stationary sources). தொழிற்புரட்சிக்குப்பின், மனித வரலாற்றில் முதன் முறையாக, இது ஒரு (நகரும்) ஊர்திப் பிரச்சினையாக மாறியது   
  5. நான்காம் தாக்குதல், 20-ஆம் நூற்றாண்டில் உருவாகிய கார், லாரி, பஸ், விமானம் போன்ற தொல்லெச்ச எரிபொருளைப் பயன்படுத்தும் ஊர்திகள் மற்றும் மிக வேகமாக வளர்ந்த தொழிற்சாலைகள் – குறிப்பாக, ரசாயன பெட்ரோலியத் தொழில்கள் காரணமாயின. இன்று வரை இந்தத் தாக்கம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தாக்குதலும் முந்தையதைவிட சில மடங்குகள் அதிகமாக இருந்தாலும் இந்த நான்காம் கட்டம், பல்லாயிரம் மடங்கு பெரிதாகி நம் சுகாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது
Air pollutant concentrations relative to the Canadian Ambient Air Quality Standards, Canada, 2002 to 2016 (see data tables below for the long description)

இன்றைய அளவீடுகளுக்கு வருவோம். 

  1. காற்றில் மாசு பற்றிய அளவீடுகள், 1850 முதல் உலகெங்கும் எடுக்கப்பட்டுள்ளன – முக்கியமாக மேற்குலகில். முதல் 50 வருடங்கள் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இந்த மாசு அதிகமாக இருந்தாலும் படிப்படியாக வட அமெரிக்கத் தொழிற்புரட்சிக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகளைவிட அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் பங்கு ஐரோப்பிய நாடுகளை விஞ்சிவிட்டது. கடந்த 40 ஆண்டுகளாக ஆசிய, குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவின் காற்று மாசின் அளவு ஏராளமாகப் பெருகியுள்ளது. ஒவ்வொரு நாடும் தொழில் சார்ந்த முன்னேற்றத்திற்குக் கொடுக்கும் விலை இந்த காற்று மாசு என்பது தெளிவாகிறது
  2. வட அமெரிக்கக் கந்தக உமிழ் 1970 –களில் உச்சத்தைத் தொட்டது. இதன்பின், பல தொழில்நுட்பங்களைக்கொண்டு, இந்த அளவு குறையத் தொடங்கியது. ஐரோப்பாவின் உச்சம் 1980 –களில். 2000 –ம் ஆண்டுக்குப் பிறகு ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் கந்தக அளவு பெருகிவருகிறது. இன்று உலகில் மிக அதிக உமிழ் ஆசியாவிலிருந்துதான்.
  3. ஆசிய நாடுகள் தொழில்நுட்பங்களை மேற்குலகிலிருந்து பெற்றாலும், மூன்று விஷயங்கள் இன்று மோசமான உமிழ் நிலைக்கு காரணமாக இருக்கின்றன. முதலாவதாக மேற்குலகு, தொழில்நுட்ப உதவிகளில் சுற்றுப்புறச் சூழல் நுட்பங்களைச் சேர்க்கவில்லை. இரண்டாவது, சுற்றுப்புற சூழல் தொழில்நுட்ப முதலீடுகள் செய்ய ஆசிய நாடுகள் தயங்கின. மூன்றாவதாக, சில ஆசிய மின் உற்பத்தியாளர்களிடம் முதலீடு செய்ய வழியும் இல்லை
  4. 1990 முதல் 2015 வரை காற்றில் மாசுத் தூள்கள் (particulate substances) மிகவும் அதிகமாக இருக்கும் நாடுகளில் அரபு நாடுகள் உச்சத்தில் உள்ளன. இந்தியாவின் பங்கு சீனாவைவிட அதிகம். சீனாவின் தொழில்சாலை உற்பத்தி இந்தியாவைவிட அதிகம் என்பதை நாம் அறிவோம். இந்தியாவின் சுற்றுச் சூழல் அணுகுமுறை சீனாவை விட மோசமானது என்பதையே இது காட்டுகிறது
  5. உதாரணத்திற்கு, 2016 –ம் ஆண்டில் காற்றில் மாசுத் தூள்களை (ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் எத்தனை மைக்ரோ கிராம் தூள்கள் இருக்கின்றன என்பதே அளவு) உலகெங்கும் அளந்ததில், இந்தியக் கதை மிகவும் மோசமாக உள்ளது. கனடாவின் அளவு – 7.52, ஜெர்மெனியின் அளவு – 13.45, சீனாவின் அளவு – 56.33, இந்தியாவின் அளவு – 75.80. இதைவிட மோசமான நாடுகள் மிகச் சில – பங்களாதேஷ், யு.ஏ.இ., குவெய்த், சவுதி அரேபியா, நைஜர். வளைகுடா நாடுகள் சகட்டுமேனிக்கு தொல்லெச்ச எரிபொருளை எல்லாவற்றிற்கும் பயன்படுத்துவதால் வந்த விளைவு இது. இதில் முக்கியமாக ஒரு விஷயத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். வளைகுடா நாடுகள் பாலைவனங்கள். அங்கு புழுதி என்பது எப்பொழுதும் உணடு. இந்நாடுகளின் காற்று மாசுத் துகள்கள் அதிகமாவதற்கு, இயற்கையில் உருவாகும் புழுதியுடன் ஏராளமான தொல்லெச்ச எரிபொருள் பயன்பாடும் காரணமாயிற்று
  6. இதே கணக்கின் இன்னோர் உண்மை – 2017 –ல் காற்றின் மாசுத் தூள்களால் லட்சம் மனிதர்களில் இறப்பு என்ற கணக்கிலும் இந்தியாவின் பங்கு மிகவும் மோசம். இந்தியா – 70.80, சீனா – 49.36, ஜெர்மனி – 17.59, கனடா – 9.11. இந்தியாவைவிட மோசமான நாடுகள், யு.ஏ.இ. (73.72) மற்றும் எகிப்து (109.61)
  7. மிக ஏழ்மையான நாடுகள் மற்றும் பணக்கார நாடுகளில், காற்று மாசுத் தூள்களால் அதிக இறப்பு இல்லை. நடுத்தர நாடுகளில் இது மேலோங்கியுள்ளது. இந்நாடுகள் ஏழ்மையிலிருந்து வெளியேற தொல்லெச்ச எரிபொருளை முக்கியமானதொரு வழியாகத் தேர்ந்தெடுத்ததன் விளைவே இது

பல்வேறு பெரிய நகரங்களிலும் காற்று மாசுபடுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. சுருக்கமாக, உலகின் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களை இங்கு ஆராய்வோம்:

  1. டில்லி, இந்தியா : உலகின் மிக மோசமான காற்றுத்தரம் உள்ள நகரங்களில் ஒன்று டில்லி. பல ஆண்டுகளாக டில்லி அரசாங்கம், டீசல் பஸ்களை இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி, காற்று மாசைக் குறைக்க முற்பட்டு வெற்றி பெறவில்லை. டில்லியின் மெட்ரோ ரயில் இந்த முயற்சியின் ஒரு பங்கு. டில்லியைப்போல இந்திய நகரங்களான மும்பய், கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னையின் கதையும் இதேதான். ஆனால், டில்லியின் முக்கிய தோல்விக்கான காரணம், குளிர்காலத்தில் சுற்றியுள்ள வயல்களில் எரிக்கப்படும் 500 மில்லியன் டன் பயிர்த்தூர். விவசாயிகளின் ஓட்டை நம்பும் அரசியல்வாதிகள் இதை மாற்றாதவரை, டில்லி உலக காற்று மாசு ராஜா.

    நவம்பர் 2019 – டில்லியின் காற்று மாசு அளவு 1000 –ஐத் தாண்டியதால் பள்ளிகள் மூடப்பட்டன. ஊழியர்கள் வீட்டிலிருந்தே சேலை செய்யும்படி பல நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன. அரசாங்கம், மாசு முகமுடிகளை (smoke masks) நகர்வாசிகளுக்கு வழங்கி, நிலைமையைச் சரிகட்ட முயற்சித்தது. டில்லியின் புகை மண்டலத்திற்குக் காரணங்கள் பல. தீபாவளி பட்டாசு, பயிர்த்தூர் எரிப்பு, வருடத்திற்கு 1 மில்லியன் புதிய ஊர்த்திகளைச் சேர்த்துவரும் தொல்லெச்ச எரி மாசு மற்றும் அனல் மின் நிலையங்கள். இவற்றில் தீபாவளி பட்டாசு, பயிர்த்தூர் எரிப்பு குளிர்காலத்தில் மட்டுமே நடக்கும் விஷயம். மற்றவை வருடம் முழுவதும் நடக்கும் விஷயங்கள். இந்த இரண்டு குளிர்கால விஷயங்களும் 700 அளவில் உலவும் டில்லியை (இதுவே ஒரு மிக மோசமான நிலை), 1000 –க்கும் மேலாகக் கொண்டுசென்று வாழ்க்கையே சிரமமாக்குகிறது.There is a sharp decline in air quality in most cities of north India Credit: Vikas Choudhary / CSE
  2. பெய்ஜிங், சீனா : சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ள  தொழிற்சாலைகளைப் பெய்ஜிங், அதனுடைய மோசமான காற்றுத் தரத்திற்குக் காரணம் என்று சொல்கிறது. பெய்ஜிங்கில் ஒலிம்பிக் பந்தயம் நடந்தபொழுது, சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் ஒரு மாதத்திற்கு உற்பத்தியை நிறுத்த அந்த அரசு ஆணையிட்டுத் தன்னுடைய இமேஜை தாற்காலிகமாகச் சமாளித்தது சீன அரசு. பிடிக்காவிட்டாலும், நெடுஞ்சாலைக் காமிரா மற்றும் நெரிசல் மேலாண்மை (traffic congestion management) தொழில்நுட்பத்தைக் கனடாவிடமிருந்து இறக்குமதி செய்ததுBEIJING, CHINA - DECEMBER 24 :  The vehicles move hardly due to air pollution in Beijing, China,on December 24,2013. Air poll
  3. லண்டன், இங்கிலாந்து : ஒரு நூற்றாண்டாக வெற்றியின்றி காற்றுத் தரத்துடன் போராடிவரும் நகரம் லண்டன். 1952 –ல் பனிப்புகைக்குப்பின் சுற்றியுள்ள அனல் மின் நிலையங்களை மூடியது. லண்டன் மையப்பகுதிக்குச் செல்லும் கார்களில் ஓட்டுனர் மட்டும் செல்ல இயலாது. அத்துடன், காற்று மாசு லண்டனுடைய முக்கியச் சுற்றுலாத் தளங்களைக் கருப்பாக்கியது. இவற்றைச் சீர்செய்து, பிரதம மந்திரியின் வீட்டைப் பெயிண்ட் அடித்து என்னென்னவோ செய்து பார்த்துவிட்டார்கள் பிரிடிஷ்காரர்கள். ஆனாலும் இன்றும் இந்தப் பிரச்சினை ஓயவில்லைhttps://chiswickherald.co.uk/clients/chiswickherald/1-19-2017-7-15-35-AM-8637444.jpg
  4. லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்கா: இந்த நகரத்தின் மிகப் பெரிய காற்றுத்தரப் பிரச்சினைக்குக் காரணம் வாகனங்கள் மற்றும் சுற்றியுள்ள தொழிற்சாலைகள். கலிஃபோர்னியாவின் பல்வேறு சட்டங்கள் இந்தப் பிரச்சினையைக் குறைக்க முடியவில்லை. அத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் அதிகப் பொது ரயில் மற்றும் பஸ் வசதிகள் இல்லாத நகரம். காருக்காகவே உருவாக்கப்பட்ட காற்று மாசு நகரம் இது. பனிப்புகை அகன்று தெளிவாக, ஒரு நாளில் 3 முதல் 5 மணி நேரந்தான் நீடிக்கிறது லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில். இந்தப் புகை மூட்டத்தால், மலையின்மீதுள்ள ஹாலிவுட் என்ற ராட்சச எழுத்தைப் படம்பிடிக்க முயற்சிசெய்து தோற்றவர்களில் நானும் ஒருவன்!
    1. !https://cdn1.sph.harvard.edu/wp-content/uploads/sites/21/2015/11/Air-pollution-Los-Angeles-release-11.15.jpg
  5. மெக்ஸிகோ நகரம், மெக்ஸிகோ : வெறும் இருபது ஆண்டுகளில், மிகத் தூய்மையிலிருந்து மாறி வட அமெரிக்காவின் காற்று மாசுத் தலைநகரமாக ஆகிவிட்டது இது. சுற்றியுள்ள தொழிற்சாலைகள், ஏராளமான ஊர்திகள் என்று இந்த மெக்ஸிகோ நகரம் கட்டுப்பாடின்றி மாசுபட்ட நிலையில் உள்ளது
  6. சாண்டியோகா, சிலே, சாவ் பாலோ, பிரேஸில்: மெக்ஸிகோ நகரத்தின் தென் அமெரிக்கச் சகோதரர்கள் இந்த இரண்டு பெரு நகரங்கள். சாண்டியோகா, மெக்ஸிகோ நகரத்தைப்போல ஒரு பள்ளத்தாக்கு நகரம். சாவ் பாலோ ஒரு கடலோர நகரம் (மும்பையைப்போல). இந்த இரண்டு நகரங்களும், வளர்ச்சிக்காகக் கொடுக்கும் மிகப் பெரிய விலை, காற்றுத் தரம்.

இப்படி உலகளாவிய பிரச்சினையாகக் காற்றுத் தரம் மாறிவிட்டது. பல அரசாங்கங்கள், வரிப் பணத்தை இறைத்து, பல்வேறு பொது ரயில், பஸ் திட்டங்கள் கொண்டுவந்தாலும், இந்தப் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. உலகெங்கும் ஊர்திகள் பெருகியும் வருகின்றன. 

Air pollution

1900 முதல் உள்ள ஒரு பிரச்சினை, இன்று வரை ஏன் தீர்க்கப்படவில்லை? விஞ்ஞானம் காரணங்களை அழகாக விளக்குவதோடு, புள்ளி விவரங்களையும் சேகரித்து யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கச் செய்துள்ளது. இதன் முக்கிய காரணம் என்ன என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்)

***

Series Navigation<< சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.