நீண்ட நேர உண்ணாமை

கடலூர் வாசு

சில வருடங்களுக்கு முன்னால்,  “வேகமாக  உண்! நீண்ட காலம்  வாழ்!”  எனும்  பிபிசியின்  ஆவணப்படத் தலைப்பைப் பார்த்து வியந்துபோனேன். பிறகுதான் தெரிந்தது,  நான் வேகமாகப் படித்ததில் உண் என்னும் சொல்லிற்குப் பிறகிருந்த காற்புள்ளியை கவனிக்கத் தவறிவிட்டேனென்பது.  அத்தலைப்பு வேகமாக உண்ணென்று கூறவில்லை.  மாறாக, உண்ணாமை என்னும் அர்த்தத்தில் உள்ளது. இனிமேலும் குழப்ப விரும்பவில்லை  ஆங்கிலத்தில் இப்படத்தின் தலைப்பு, “ Eat,  fast  and live longer”  என்பதே. பி.பி.சி.யின்  மருத்துவ  விமரிசகர்  மைக்கேல் மோஸ்லி   என்பவரால்  2012ல் தயாரிக்கப்பட்ட  ஆவணப்படம். ஒரு மணிக்கும்  குறைவான  இப்படத்தைப்  பலதடவை  பார்த்தேன்.

ஃபௌஜா சிங் எனும் 101 வயதான சீக்கியர்,  லண்டன்  மாநகர  மாரத்தான்  போட்டியில்  கலந்து கொண்டு  26 மைல்  தூரத்தை  71/2  மணிநேரத்தில்  கடப்பதிலிருந்து படம்  துவங்குகிறது. அமெரிக்காவின்  தலைசிறந்த  நான்கு  பல்கலைக்கழகங்களில்  உண்ணாமை   பற்றி  நடக்கும்  ஆராய்ச்சியையும்  ஆராய்ச்சியாளர்களுடன்  பேட்டி கண்டு  ஊர்  திரும்பியபின்  வாரத்தில்  5  நாள்கள்  வழக்கமான  உணவு,  2 நாள்கள்  தினமொன்றுக்கு  600  கலோரி  உணவு  என்ற  உணவுத்  திட்டத்தைத்  தனக்குத்தானே  வகுத்து கொள்கிறார். இரண்டே மாதங்களில்  இவரது  எடை  கணிசமாக  குறைவதோடு  மட்டுமல்லாமல்,   உடற்கொழுப்பு  19  சதவிகிதமாகவும்  ரத்தக்கொழுப்பும் IGF (Insulin Growth Factor) எனப்படும்  வளர்ச்சி இயக்குநீர் (Growth Hormone) அளவும் சரிநிலைக்குத்  திரும்பி   விட்டதாக அவர் அமெரிக்காவில் பேட்டிகண்ட ஓர் ஆராச்சியாளர்  அவரது  பரிசோதனைக்கூடத்திலிருந்து தொலைபேசியில் அறிவிப்பதுடன் படம் முடிவடைகிறது. 

இதன்பிறகு  இவரது 5:2 என்றழைக்கப்படும் உணவுத்திட்டம்,  நீண்ட  இடைவெளி  உண்ணாமை (Intermittent Fasting)யின்  முக்கிய  அங்கமாகிவிட்டது. நானும்  இப்படத்தை  பார்த்தபின்  3 வருடங்கள்,   வாரத்தில்  ஒரு நாள்  திட உணவை முழுவதும் தவிர்த்தேன். இரண்டே மாதங்களில் என் எடை பத்து பவுண்டு குறைந்தது, அதன் பின் எடை குறையவில்லை.  அதன்பிறகு  இவ்விஷயத்தில்  அக்கறை குறைந்துவிட்டது. இதய ரத்தக் குழாய்களைச் சேதப்படுத்தும் உணவு வகைகளைக் குறைத்துக்கொள்வதோடு  நின்றுவிட்டேன். சில மாதங்களுக்குமுன் மருத்துவ சஞ்சிகையில் உண்ணாமையைப் பற்றிய கட்டுரையில் பல புதிய ஆராய்ச்சித்  தகவல்கள்  அறிமுகமாகியுள்ளது  தெரியவந்தது.

உண்ணாமையின் வரலாறு

எல்லா மதங்களும் உண்ணாமையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன.  இந்து மதம் அமாவாசை, பௌர்ணமி கழிந்த ஏகாதசி என்று கூறப்படும் பதினோராவது நாளன்று  உண்ணாமையை வலியுறுத்துகிகிறது.  அது  மட்டுமல்லாமல்,  ஆடி  மாதம்  பௌர்ணமிக்கு  முன்வரும்  ஏகாதசியிலிருந்து,  கார்த்திகை  மாதப்  பௌர்ணமிக்கு  முன்வரும்  ஏகாதசிவரையுள்ள  நான்கு  மாதங்களுக்கு இந்து மதத்தினர் பலர் ஒரு வேளை  மட்டும்  உண்பதைக்  கடைபிடிக்கின்றனர்.  

கிறிஸ்துவ  மதம்   லெண்ட் என்று கூறப்படும் 40  நாள் உண்ணாமையும்   இஸ்லாமிய  மதம்   ரம்ஜான் என்று சொல்லப்படும் 30  நாள் உண்ணாமையையும் வலியுறுத்துகின்றன. 

உண்ணாமை  என்று   கூறுவதைவிட  உபவாசம்  என்ற  சொல்லே  இதற்குப் பொருந்தும். ஏனென்றால்,  எல்லா  மதங்களுமே  அடுத்த  வேளை   உணவு  நினைப்பைத் தவிர்த்துக்  கடவுளை  நினைவு  கூர்வதை  இக்காலங்களில்  அதிகரிக்கவேண்டும்  என்று சொல்வதால்  (கடவுள்) அருகில்  இருத்தல் என்ற பொருளுடைய  உபவாசம்  என்ற சொல்தான்  சரியானதாகப்படுகிறது. 

மேலும்,   மாரத்தான் போட்டியில்  கலந்துகொண்ட  101 வயது  சீக்கிய  இளைஞரின்  உணவு, எளிய  பஞ்சாபியரின்  உணவாகிய  ரொட்டி,  பழம்,  பருப்பு  ஆகியவையே என்றும்  ஒரு  சிறுவன்  சாப்பிடும்  அளவுதான்  என்றும்  அவரது  மகன்  சொன்னதை    இங்கு  நினைவு  கூர்கிறேன். மோஸ்லியின்  ஆவணப்படம்  வெளிவருவதற்குப்  15  வருடங்கள்  முன்பே  இதே  மருத்துவ  சஞ்சிகையில்  வெளியான ஒரு கட்டுரை,  உணவு அளவைக் குறைப்பதின்மூலம்  சுண்டெலிகள் மூப்பையும் ஆயுள் முடிவையும் வெகுகாலம் தள்ளிப் போடமுடிகிறது என்று அறிவித்தது. 

இதன் காரணம் பிராணவாயு அணுக்களினால் (Oxygen  radicals) ஏற்படும் சேதக்குறைவே என்ற கருத்தையும் முன்வைத்தனர். மேலும்,  1929-32ல்  ஏற்பட்ட  பொருளாதார  வீழ்ச்சியில்  பஞ்சத்தில் அடிபட்டவர்களின் உணவுப்  போதாமையினால் அவர்களது  ஆயுட்காலம்  குறையுமென்று  எதிர்பார்த்ததற்கு  மாறாக, ஆயுள்  பல  வருடங்கள்  நீடித்தது  தெரியவந்தது. 

ஆனால் இவ்வாராய்ச்சியாளர்கள்  அச்சமயம்  அறியாத  ஒன்று,  எலிகள் கிடைக்கும்  மொத்த  உணவையுமே நான்கு  மணி  நேரங்களுக்குள் உண்டுவிடும், மீதி  20  மணி  நேரத்திற்கு  எதையுமே  உண்ணாது என்பதுதான். இதைத்தான்  இப்போது  “நீண்ட  நேர  உண்ணாமை “ என்று  கூறுகிறோம். இது  பல  வகைப்பட்டது.  அதைப்  பிறகு  பார்க்கலாம். இதனால் கிடைக்கும் உடல்நலப்  பயன்கள் உடற்பளுக் குறைவினாலோ பிராணவாயு  அணுக்களின்  தாக்கக்  குறைவினாலோ  அல்ல. ஆதி கால மனிதர்கள் நம்மை போல் 3 வேளை  உண்டு வாழ்ந்தவர்கள் அல்லர். உணவு கிடைக்கும் நேரத்தைவிட உண்ணாமலிருந்த  நேரமே  அதிகம்.  அதனால் உயிரணுக்களிலும் அதன் மூலம் மற்ற உறுப்புகளிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பரிணாமத் தொடர்ச்சியே  தற்கால மனிதர்களிடையே நீண்ட நேர உண்ணாமையின் பயன்களுக்குக் காரணம் எனலாம்.  

இவை, சர்க்கரை அளவை  ஒழுங்குபடுத்தல் (Glucose regulation),  நோயெதிர்ப்புத் திறன்  அதிகரிப்பு (Stress Resistance),  வீக்கத்  தணிப்பு (Suppression of inflammation) ஆகியவையாகும்.  உண்ணாதிருக்கும்போது,   உயிரணுக்கள் தமக்குள்ளே ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுக்கும் வழிகளைப் பலப்படுத்துவதையும் ஏற்கெனவே  சேதமான மூலக்கூறுகளைச் (molecules)  சரிசெய்வதையும்  வெளியேற்றுவதையும்  மேற்கொள்கின்றன. உண்ணும்  சமயம்,  இவ்வுயிரணுக்கள் தம்  விருத்தியிலும்  வளர்ச்சியிலும்  கவனத்தைச்  செலுத்துகின்றன. மூன்று வேளை  உணவுக்கு இடையில் நொறுக்குத் தீனி என்று பழக்கப்படுத்திக்கொண்டபின்  நீண்ட நேர உண்ணாமை என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விட்டது. 

வளர்சிதை  திருப்பம்:

உணவு செரிமானம்  ஆனவுடன் குளுகோஸ் எனும் சர்க்கரை உடலின் ஆக்க சக்திக்கு எரிபொருளாகிறது.  கொழுப்புச்  சத்து,  ட்ரைகிளிசரைட்ஸ் (Triglycerides) எனும்  பொருளாக  கொழுப்புத்   திசுக்களில் ( Adipose tissue) சேமிக்கப்படுகிறது.  உண்ணாமையின்போது   இப்பொருள்  கொழுப்பமிலங்கள்  (Fatty acids) மற்றும் கிளிசரால்  என  இரண்டாக  உடைக்கப்பட்டுக்  கல்லீரலுக்குக்  கொண்டுசெல்லப்படுகிறது.  அங்கே,   இவையிரண்டும்  கீடோன்  பாடீஸ்  என்றழைக்கப்படும் வேதிமங்களாக  (Chemicals) மாற்றப்பட்டுத்   திசுக்களின்,   முக்கியமாக  மூளையின்   எரிசக்திக்கு மூலப்  பொருட்களாகின்றன.  குளுகோஸிலிருந்து  கீடோன்  பாடீஸ்  எரிபொருளாக   மாறுவதற்கு    வளர்சிதைத்  திருப்பம் (Metabolic Switch) எனப் பெயரிடப்பட்டுள்ளது. உண்ட நிலையில் (Fed state)  ரத்தத்தில் இதன்  அளவு  மிகக்  குறைவு . உண்ணாதிருக்கும் சமயம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்துக்குள் இதன்  அளவு வெகுவாக உயர்கின்றது.   

பரிசோதனை  முடிவுகள்:

எலிகளிடத்தும்   மற்ற  பிராணிகளிடத்தும்   நடத்திய  பரிசோதனைகளின்மூலம் நீண்டநேர  உண்ணாமை  உடற்கனம்,   சர்க்கரை,   இதய  ரத்தக்குழாய் அடைப்பு,   மூளை மற்றும் நரம்புச்சிதைவு ஆகிய நீண்ட கால வியாதிகளில்  நன்மை  பயக்கும் மாற்றங்கள்  ஏற்படுத்துவதைக் கண்டறியமுடிந்தது.  பின்னர்,  பிராணிகளிடமும்  மனிதர்களிடமும்  நடத்தப்பட்ட  பரிசோதனைகள்   நீண்டநேர  உண்ணாமை உடல்நலச் சுட்டிகளில் நற்பயன்களையும்  மூப்பையும்  நீண்டகால  நோய்களையும்  பின்தள்ளுவதையும்  அறியமுடிந்தது  பொதுவாக,   நீண்டநேர உண்ணாமை என்பது  மூவகைப்பட்டது; ஒருநாள்விட்டு ஒருநாள் உண்ணாமை,   5:2  உணவுத் திட்டம் (வாரத்தில் 5  நாள்கள் வழக்கம்போல உண்ணுதல், மீதி 2  நாள்கள் தினம் 600 – 800 கலோரி உணவு),   தினமும் குறைந்த நேரம் மட்டுமே உண்பது ஆகியவையாகும்.   

கீடோன் பாடிஸ் வெறும் எரிபொருள் மட்டுமல்ல,  அவை மூப்பிற்கும் உடல் நலத்திற்கும் காரணமாயுள்ள புரதங்களையும் மூலக்கூறுகளையும் (molecules) சீரமைக்கின்றன.  மேலும்,  Brain-derived Neurotrophic factor எனும்  புரதத்தின்  அளவை  அதிகப்படுத்தும்  மரபணுவைத்  தூண்டியெழுப்புவதின்மூலம்,   மூளை  நலத்தையும்  மன  நலத்தையும்  வலுப்படுத்துகின்றது.  நரம்புச்சிதைவு  நோய்கள்  ஏற்படுவதையும்  தவிர்க்கிறது.  ரத்த அழுத்தக்குறைவு,  இதயத்  துடிப்பெண்ணிக்கை (Heart rate) குறைவு, அயர்வுப் பயிற்சி (Endurance  training) பலன் அதிகரிப்பு,   ஆகியவற்றிற்கும்  காரணமாயுள்ளது.   

இந்நன்மைகள்,    உடற்பளு  குறைப்பிலிருந்து  தனிப்பட்டே  நிற்கின்றன.  நீண்டநேர  உண்ணாமையினால்,   உடலுறுப்புகள்  அனைத்துமே,   தனக்கேற்படும்  சவால்களைச்  சமாளிப்பதிலும்  உடல்நிலையை  முன்மாதிரியே   சமப்படுத்துவதிலும் (Homeostasis)  முன்னேற்றமடைகின்றன.  நீண்டநேர  உண்ணாமையைத்  தொடர்ந்து  கடைப்பிடிப்பதன்மூலம் பின்னே  வரக்கூடிய  சவால்களைத்  தடுத்து   நிறுத்தும்  எதிர்ப்புச்  சக்தியும்  இவ்வுறுப்புகளில்  ஏற்படுகின்றன. இவ்விளைவுகள்  மனிதர்களிடம் மட்டுமல்லாமல் எல்லா உயிர்வகைகளிடத்தும் காணப்படுகின்றன. மேலும், நீண்டநேரம்  உண்ணாதிருக்கும்  சமயத்தில்  உயிரணுக்கள்  பிராணவாயு  அணுக்களினால்  சிதிலமடைந்த  புரதங்களையும்  ஊன்குருத்துகளையும் (Mitochondria) வெளியேற்றும்  பணியை  செவ்வனே  செய்கின்றன.  

மூப்பும்  இறப்பும்:

சமீப  காலம்வரை   கலோரிக் குறைவு,    நீண்டநேர  உண்ணாமைப்  பரிசோதனைகள்  மூப்படைவதைப் பற்றியும் ஆயுட்காலத்தைப் பற்றியதுமாகவே இருந்துள்ளன.   நூறாண்டுப் பிராணி ஆராய்ச்சி,  கலோரி  மட்டுப்படுத்தப்பட்ட  உணவு  ஆயுளை  நீடிக்கும்   என்னும்  திட்டவட்டமான  முடிவுக்கு  வந்துள்ளது. ஒருநாள்விட்டு  ஒருநாள்  உண்ட  எலிகளின்  ஆயுள்  80 சதவீதம்வரை  அதிகரிப்பது  தெரியவந்துள்ளது.  ஆனால், ஆயுட்கால  நீடிப்பு  பால், உணவுத்திட்டம், வயது, மரபணுக்கள்  இவற்றைப்  பொறுத்துள்ளது.  உடற்கொழுப்பிற்கும் ஆயுள் நீடிப்பிற்கும்  உள்ள உறவு எதிர்மறையாக அமைந்துள்ளது.  கலோரிக்  குறைவினால் எடையை அதிகமாக  இழக்கும்  விலங்குகளின் ஆயுள் நீடிப்பதற்கு மாறாக குறைகிறது. குரங்குகளிடையே நடத்தப்பட்ட இரண்டு பரிசோதனைகளின் முடிவுகள் எதிரும் புதிருமாக அமைந்துள்ளன.   மனிதப்  பரிசோதனை  ஒன்றில், 16 நபர்கள்  3  வாரங்கள்  ஒருநாள்விட்டு ஒருநாள்  உண்ணாதிருந்ததில்,  எடை  2.5% ம்,  கொழுப்பின்  அளவு 4%ம்  இன்சுலின்  சுரப்பு  57%ம்  குறைந்தது. இன்னொரு  பரிசோதனையில்  எடை  அதிகமாயுள்ள  பெண்மணிகளில்   100 பேர்  5:2 உணவு  திட்டத்திலும்  மற்றுமொரு 100 பெண்கள்  25%  கலோரிக் குறைப்புத்  திட்டத்திலும்   6  மாதங்கள்  இருந்ததில், எடைக்குறைவு  இரண்டு  பிரிவுகளிலும்  சமமாக இருந்தாலும்  5:2 திட்டத்தில் இருந்த பெண்மணிகளின்  இன்சுலின் இரத்த  அளவும் வயிற்றுச் சுற்றளவும் அதிகஅளவு குறைந்தன.

உடல் வலிமை,   அறிவாற்றலில் நீண்டநேர உண்ணாமையின் விளைவுகள்:

நீண்டநேர  உண்ணாமை  மனிதர்களிடத்திலும்  பிராணிகளிடத்திலும்  உடலாற்றலை  அதிகப்படுத்துகின்றது. ஒருநாள்விட்டு  ஒருநாள்  உண்ணும்  சுண்டெலிகள்  தொடர்ந்து  ஓடும்  நேரம்,  தினம்  உண்ணும்  சுண்டெலிகள்  ஓடும்  நேரத்தைவிட அதிகமாகும். இளவயதினர்  தினம்   16  மணி  நேரம்  உண்ணாதிருத்தலுடன்  உடற்பயிற்சியையும் சேர்ந்துக்  கடைபிடித்தால்   கொழுப்பு  எடை குறையும்   ஆனால்,  சதைப்பற்று குறையாது.  பிராணிகளிடையே,  நீண்ட நேர உண்ணாமை  நினைவுகூர்தலை  அதிகரித்தது. வயதானவர்களிடையே சொற்களை  நினைவுகூரும்  ஆற்றல்  அதிகரிக்கிறது. அதிக  எடைகொண்ட  அறிவாற்றல் சற்றே மங்கியவர்களைப் 12 மாதங்கள் கலோரி  குறைந்த  உணவுக்  கட்டுப்பாட்டில்   வைத்திருந்தபோது  அவர்களுடைய அறிவாற்றல் அதிகரிப்பது தெரியவந்தது 2  வருட கலோரிக்  கட்டுப்பாடு தினசரி வேலைகளுக்குத் தேவைப்படும் நினைவாற்றலை அதிகரிப்பது மற்றொரு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

மருத்துவப்  பிரயோகங்கள்: 

உடற் பருமன்,  சர்க்கரை வியாதி: 

ஒகினாவா  தீவு  மக்கள்  இயற்கையாகவே  நீண்டநேர  உண்ணாமையைக்  கடைபிடிப்பதால்,   அவர்களிடையே  உடற்கொழுப்பு, சர்க்கரை  வியாதி  ஆகிய இரண்டுமே  குறைவாகவும்  ஆயுட்காலம்  நீண்டும்  உள்ளது. அவர்களுடைய   உணவு, மாவுச் சத்து குறைவானதாகவும் ஊட்டச் சத்து மிகுந்ததாக  உள்ளதும் மற்றொரு காரணம்.  க்ரோன் (Calorie Restriction with Optimal Nutrition)  சங்க  அங்கத்தினரிடையே  சர்க்கரை  வியாதி,  IGF-1,  வளர்ச்சி  ஊட்டநீர் (Growth Hormone),   வீக்கம் மற்றும் பிராணவாயு அணுக்கள் ஏற்படுத்தும் அயர்ச்சிச்  சுட்டிகள் (Inflammatory  & oxidative stress markers)  ஆகியவை  குறைந்த  அளவில்  உள்ளன. கலோரிக் குறைவான  உணவும்,  வாரத்தில்  3 நாள்கள்  உண்ணாமலிருத்தலும்  எடைக் குறைவுக்கும் இன்சுலின் சக்தியெதிர்ப்பு (Insulin  resistance) குறைவிற்கும்  சாதகமாக உள்ளன.  நீண்ட நேர உண்ணாமை, எடையை குறைப்பதற்கும் ஒரு சிறந்த வழியாய் அமைந்துள்ளது.

இதய இரத்தக் குழாய் அடைப்பு:

நீண்டநேர உண்ணாமை  இரத்த அழுத்தம்,  நாடித்  துடிப்பு,  இரத்தக் கொழுப்பு   ஆகியவற்றைச்  சரிசெய்வதன்மூலம்  இதய இரத்தக் குழாய்களை வளமூட்டுகிறது. ஒருநாள்விட்டு  ஒருநாள்  உண்ணாமை,  சாதாரண மற்றும்  எடை  கூடியவர்கள்  ஆகிய  இரு  வகையினரின்  இதயத்தையுமே போஷிக்கிறது. இதன் சுட்டிகளை  2-4 வாரங்களிலேயே இரத்தத்தில் காணலாம். . 

புற்று  நோய் : 

ஒருநாள்விட்டு ஒருநாள் உண்ணாமையும் கலோரிக்  குறைப்பும் எலிகளிடையே புற்று நோய்க் கட்டிகள் ஏற்படுவதைக் கணிசமாகக் குறைப்பதுடன், அதற்காகக் கொடுக்கப்படும் மருந்தின் தாக்கத்தையும் அதிகரிக்கின்றன.  உண்ணாமை, புற்று நோய் உயிரணுக்களின் சக்தியையும் வளர்ச்சியையும் குறைக்கிறது. சாதாரண உயிரணுக்களின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதின்மூலம் அவை புற்று நோய் உயிரணுக்களாக மாறுவதைத் தடுக்கிறது. நீண்டநேர  உண்ணாமை மனிதர்களின்  மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத்  தடைசெய்து ஆயுளை  நீடிக்கவும்  செய்கிறது.

நரம்புச் சிதைவு நோய்கள்:

நடு வயதினர் மாவுச் சத்துணவை அதிகரித்தால்  பக்கவாதம்,  நினைவிழப்பு,  பார்க்கின்சன் வியாதி போன்ற வியாதிகளால் தாக்கப்படும் அபாயம் அதிகமாகிறது.  ஒருநாள்விட்டு ஒருநாள் உண்ணாமை மூலம் பிராணிகளிடையே இவ்விதமான நரம்பு வியாதிகளை  ஒத்திப்போட முடிகிறது. சிதைவின் வேகத்தையும் குறைக்க முடிகிறது.  உண்ணாமை நேரத்தை நீடிப்பதின்மூலம் நரம்பணுக்களின் தடுப்புச் சக்தி அதிகரிக்கிறது.  உள்ளிருக்கும் மரபணுக்களைப் பழுதுபார்க்க முடிகிறது.  உயிரணுக்களை  ஊட்டமூட்டும் காரணியும் அதிகரிக்கிறது.  உண்ணாமையின் நல்விளைவுகளை மனிதர்களிடையே காணவேண்டும் என்றால், ஆராய்ச்சியைக் குறைந்தது ஒரு வருடமாவது தொடரவேண்டும் என்பதால்  நரம்புச் சிதைவினால் பாதிக்கப்பட்டவர்களிடையே  நீண்டநாள் ஆராய்ச்சிகள் நடத்தப்படவில்லை.  மல்டிபிள் ஸ்கெலிரோசிஸ் என்னும் நரம்புச்  சிதைவு  நோயால்  பாதிக்கப்பட்டவர்களிடையே 2  மாத நீண்ட நேர உண்ணாமைமூலம்  நோயின்  அறிகுறிகள்  குறைவது  தெரியவந்துள்ளது. 

இதர விளைவுகள்:

இளைப்பு நோயினால் அவதிப்படும் உடல் பெருத்தோர்,   2 மாதங்கள் ஒருநாள்விட்டு ஒருநாள் உண்ணாதிருந்தால் உடல் எடை குறைவதுடன் இளைப்பின் தாக்கமும் குறைகின்றது.  ரூமட்டாய்டு ஆர்தரைடிஸ்  போன்ற மூட்டு வியாதிகளின் தாக்கமும் நீண்டநேர உண்ணாமையைக் கடைபிடிப்பதின்மூலம்  குறைகிறது.   உடல் கொழுப்பைக்  குறைக்கும்  அறுவை  சிகிச்சைக்குமுன்  2  வாரம்  நீண்டநேர  உண்ணாமைக்  கட்டுப்பாடு  அறுவை  சிகிச்சையின்  பின்விளைவுகளைக்  கணிசமாகக்  குறைக்கின்றது. நீண்டநேர  உண்ணாமை  விளையாட்டு வீரர்களின் திறனை அதிகரிக்கிறது.  மூளை தண்டுவடக் காயங்களினால்  ஏற்படும் பாதிப்பையும் மரணத்தையும்  குறைக்கின்றது 

நடைமுறைச் சிக்கல்கள்: 

நீண்டநேர  உண்ணாமையின்  நல்விளைவுகள்  நூறு  வருடங்களுக்கும்  மேலாகத்  தெரிந்திருந்தபோதும்  சமூகத்திலோ  நோயாளிகளிடமோ  இதனை அறிமுகப்படுத்துவதும் தொடர்ந்து கடைபிடிக்கச் செய்வதும் கடினமான விஷயங்களாகவே  உள்ளன.  இதன் காரணம்  மூன்று வேளை உணவு, இடையிடையே   சிற்றுண்டி என்னும் வழக்கம் மக்களிடம்  ஆழ்ந்து பதிந்துவிட்டதே.  போதாதற்கு,  விதவிதமான உணவு வகைகளும் அதைப் பற்றிய விளம்பரங்களும்   நம்மைச் சதா  காலமும்  சூழ்ந்துள்ளன.   இவ்வாறு இருக்கும்போது 16லிருந்து 18  மணி நேரம் உண்ணாமை என்பதை மருத்துவர்களோ, நோயாளிகளோ சிந்திப்பதற்கே சந்தர்ப்பமில்லை.  இதையும்மீறி  ஒருவர் நீண்டநேர  உண்ணாமையைக் கடைபிடிப்போம்  என  நினைத்து ஆரம்பிக்கும்  காலத்தில் பசி,   எரிச்சல்,  கவனக்குறைவு போன்ற  வேண்டாத  விளைவுகள்  ஏன்  இதைத்  தொடரவேண்டும்  என்று  நிலைபிறழ  வைக்கும்.  இவ்விளைவுகள் ஒரு  மாதத்திற்குள்  மறைந்துவிடும்  என்பதை  மருத்துவர்கள்  முன்கூட்டியே சொல்லவேண்டும்.  மேலும்,  பொதுவாக  மருத்துவர்களுக்கே  16 – 18 மணிநேர உண்ணாமையை எவ்வாறு  செயல்படுத்தவேண்டும் என்பது சரியாகப் புரிபடுவதில்லை. ஆரம்பத்திலிருந்தே தினம் 16 முதல் 18  மணிநேரம் உண்ணாதிருப்பது என்பது பிரம்மப் பிரயத்தனம். உண்ணாமையின் நேரத்தை மெதுவாகக் கூட்டினால் ஒரு சில வாரங்களுக்குள் 16 முதல்  18 மணி நேரம் உண்ணாதிருப்பது பழகிவிடும்.  5:2  திட்டத்திலும்,   முதல் மாதம் வாரத்தில் ஒருநாள் 900 – 1000 கலோரி,  இரண்டாவது மாதம்,  வாரத்தில் இரண்டு நாள்கள் 900 – 1000 கலோரி,  மூன்றாவது மாதம் வாரத்தில் இரண்டு நாள் 750  கலோரியாகவும் நான்காவது மாதத்திலிருந்து  வாரம் இரண்டு நாள் 500 – 600 கலோரி என்றும்  செயல்படுத்தினால் மேற்கூறிய விளைவுகளையும் தவிர்க்கலாம். தொடர்ந்து கடைபிடிப்பதும் கடினமாயிராது.  மற்ற  திட்டங்களைப்போலவே,  இத்திட்டத்தின்  நன்மைகளை  அடிக்கடி  வற்புறுத்துவதும்,   இரத்தப்  பரிசோதனையில்  சர்க்கரை,  கொழுப்பு  போன்றவை  குறைந்தால்  அதை  எடுத்துக்கூறி   ஊக்கமூட்டுவதும்  நோயாளிகள்   இத்திட்டத்தைத் தொடர்வதற்குத்  தூண்டுகோலாக  அமையும். 

ஆதாரம்:  Effects of Intermittent Fasting on Health,  Aging,  and Disease; Rafael de Cabo, Ph.D.,  and Mark P. Mattson,  Ph.D.; NEJM 381;26; December 26,  2019

One Reply to “நீண்ட நேர உண்ணாமை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.