தையல் சாமியார்

சைலண்ட் மோடில் போட்டு வைத்திருந்த செல் விர் விர்ரென்று அதிர்ந்தது. அப்போதுதான் வரத் தொடங்கியிருந்த தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு போனை கையிலெடுத்தேன். ஞாயிறு மதியம் இரண்டரை மணிக்கு போன் செய்து கூப்பிடுபவர்கள் யார் என்ற எரிச்சலுடன் எடுத்துப் பார்த்ததும் சகல புலன்களும் உடனடியாக சுறுசுறுப்படைந்தன. ஏனென்றால் அழைப்பு ராமநாதனிடமிருந்து. அடிக்கடி அழைப்பவரல்ல, அழைத்தால் நிச்சயம் அதில் சில புது விஷயங்கள் இருக்கும்.

“சார் சொல்லுங்க,” என்றேன்.

“ரமேஷ் என்ன தூக்கமா?” என்றார்.

“தூங்கிருந்தா எடுத்திருக்க மாட்டேனே… சொல்லுங்க…”

“இல்ல உங்க காலனி என்ட்ரன்சில மெயின் ரோடுலதான் வண்டியோட இருக்கேன். கூட தேவாவும் இருக்காரு. கிளம்பி வாங்க போயிட்டே பேசுவோம்,” என்றார். வேறு வழியில்லை. கிளம்பித்தான் ஆகவேண்டும். எப்படியும் ஒரு முக்கியமான விஷயமாகத்தான் இருக்க வேண்டும். தேவாவும் கூட இருக்கிறாரென்றால் முக்கியத்துவம் கூடுகிறது என்று பொருள்.

பேண்ட் சர்ட்டுக்கு மாறிக்கொண்டு வெளியே போய்க் கொண்டே கதவருகில் உள்ளே திரும்பி, கொஞ்சம் வெளில போறேன் எப்படியும் ஒரு அஞ்சு மணிக்குள்ள வந்துருவேன், என்று குரல் கொடுத்தேன். ”ஏங்க, ஞாயிற்றுக் கிழமைகூட வீட்ல இருக்காம இப்படி வெளில… ஊருக்கு வர்றதே ரெண்டு நாளு அதுல பாதிக்கு மேல இப்படி வெளிலயே சுத்திக்கிட்டு இருங்க,” என்று சலிப்புடன் வந்தது மனைவியின் குரல். மகள்கள் இருவரும் ஏதோ தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு போய் விட்டார்கள். இல்லையென்றால் அவர்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டி வந்திருக்கும்.

ஆனால் அவள் சொல்வதும் உண்மைதான், சென்னைக்கு மாறுதலாகி பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. சனி ஞாயிறு கோவை வந்துவிடுகிறேன். முடிந்தால் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம். திங்கட்கிழமையும் சேர்த்து மூன்று நாட்கள் இங்கேதான் இருக்கிறேன் என்றாலும் சனிக்கிழமையன்று எப்படியும் ஒரு நான்கைந்து மணி நேரம் நண்பர்களுடன் போய்விடுகிறது. ஞாயிற்றுக்கிழமை நண்பர்களை போய்ப் பார்க்கும் வழக்கத்தை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன். அதாவது ஞாயிறு இரவு சென்னை பயணமென்றால் அதை முழுமையாக கட் பண்ணிவிட்டு சுத்தமாக வீட்டோடுதான். திங்கள் இரவு பயணமென்றால், ஞாயிறு முற்பகல் ஓரிரு மணி நேரம் நண்பர்களைப் பார்ப்பதுண்டு. எழுபத்து இரண்டு மணி நேரத்தில் ஆறேழு மணி நேரம்தான் நண்பர்களுடன் செலவழிகிறது. ஆனாலும் வீட்டிலிருப்பவர்கள் அதிலும் ஒரு குற்றவுணர்ச்சியை நமக்குள் உருவாக்குவதில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒரு நியாயமிருக்கிறது என்ற எண்ணமே குற்றவுணர்ச்சியை அதிகமாக்குகிறது.

அதற்காக ராமுவின் அழைப்பையும் தவிர்க்க முடியாது. என் நலனில் அக்கறை கொண்டவர். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் என் நிலையை எண்ணி அனுதாபப்படுபவர். அவரிடம் குடும்பத்தைப் பிரிந்து வாழ்வது உண்டாக்கும் பண மன உடல் ரீதியான சிரமங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுண்டு. ஆறு மாதம்தான், அதன் பின் மீண்டும் மாற்றல் வாங்கிக் கொண்டு கோவை வந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் சென்ற ஆண்டு சென்னை போனது இழுத்துக் கொண்டே போய் இப்போது பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டது பெரிய பிரச்னையாகவே போய்விட்டது. இப்போதைக்கு மாறுதல் கிடைக்கக்கூடும் என்பதற்கு எந்த சூசகமும் இல்லாமல் இருப்பது வேறு வீட்டை விட்டு பிரிந்து இருப்பதில் உள்ள சிரமங்கள் போதாது என்று அதைவிட மோசமான ஒரு மனநிலையை உருவாக்கி விட்டிருக்கிறது. மகள்கள் இருவரும் கல்லூரி இறுதியாண்டு, +2, இந்த சமயத்தில் நான் ஊரில் இருந்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும், எனக்கும் கவலைகள் குறையும். ஆனால் அது ஒன்றும் நடப்பது போல் தெரியவில்லை. எனக்கு சென்னைதான் என்று எழுதி வைத்திருக்கிறது போல.

ராமு, நான் மீண்டும் இங்கே மாறுதலாகி வர ஏதாவது வழி இருக்கிறதா என்றும் யோசிப்பவர், வழி சொல்பவர். அவர் சொல்லும் வழிகள் என்றால் அலுவலக ரீதியான நடவடிக்கைகள் அல்ல. அருள் ரீதியான நடவடிக்கைகள். அதாவது ஜோசியர்கள், அருள் வாக்கு சொல்பவர்கள் ஆகியோரைச் சந்தித்து இதற்கு என்ன வழி என்று கேட்பது. பெரும்பாலும் நான் இல்லாமல் அவரேதான் கேட்டுச் சொல்வார். இதுவரை ஒன்றும் பலிதமாகவில்லை. இப்படியெல்லாம் குருட்டுத்தனமாக யோசித்துக் கொண்டே நடந்தாலும், கால்கள் தாமாக போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு இழுத்துச் சென்று விட்டன. காலனியின் நுழைவாயிலில் மெயின் ரோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் ராமுவின் காரும் அதற்குள் ராமு, தேவாவின் தலைகளும் தெரிந்தன.

காரின் உள்ளே புகும்போதுதான் அவ்வளவு நேரம் இந்த கடும் வெயிலில் நடந்து வந்த சூடு உரைத்தது. ஆகஸ்ட்டில் எப்போதுமே வெப்பம் சற்று உயரும்தான். நேற்று மாதிரியே மாலையோ இரவோ மழையும் வரக்கூடும்.

“சீக்கிரம் உக்காருங்க போலாம், கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அவர் இருப்பாரா தெரியல,” என்றார் ராமு.

தேவாவைப் பார்த்து, யார், எங்கே, என்று குரலெழும்பாமல் கேட்டேன்.

“வாங்க அப்படி கொஞ்ச தூரம் மேக்கால போய் வருவோம்,” என்று சிரித்தார். சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். அனிச்சையாக மேற்கே பார்க்க மலை முகட்டில் மேகங்கள் திரளத் தொடங்கியிருந்தன.

கொஞ்ச தூரம் போனவுடனேயே கார் நின்றது. “ரமேஷ், அப்டி இறங்கி அந்தக் கடையில ஒரு நூல் கண்டும் இரண்டு ஊசியும் வாங்கிக்குங்க,” என்றார் ராமு. தேவாவைப் பார்த்தேன், ‘சொன்னதை செய்யுங்க,’ என்ற வார்த்தைகள் அவர் முகத்தில் தெரிந்தன. இறங்கி அவற்றை வாங்கிக் கொண்டு மீண்டும் காருக்குள் அமர்ந்தேன். இப்போது சற்று வேகம் எடுத்தே ஓடியது வண்டி. அவர்களாகவே ஏதாவது சொல்வார்கள் என்று நினைத்து அமைதியாக இருந்தேன். ஏசியின் குளிரும் மணமும் அளித்த சுகத்தில் கண்கள் தாமாகவே சொக்கின.

மீண்டும் கார் நின்று விழிப்பு கொடுத்தது. கூடவே ராமுவின் குரலும். “ஆனந்தாஸ் கிட்டத்தான் நிக்கறோம், உள்ள போய் ரெண்டு தயிர் சாதமும் பக்கோடா ஒரு நூறு கிராமும் பார்சல் வாங்கிக்கிங்க,” என்று கட்டளையாக வந்தது, தேவாவைப் பார்ப்பதில் பயன் ஒன்றும் இல்லை. உள்ளே போய் சொல்லியதை வாங்கி வந்து உள்ளே நுழைந்து கொண்டே கேட்டேன், “சரி இப்பவாவது எங்க போறோம் எதுக்கு இதெல்லாம்னு சொல்லுங்க,”. தேவா ராமு பக்கம் கைகாட்டிவிட்டு அமைதியானார்.

கார் இப்போது கல்வீரம்பாளையத்தைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. எங்கே போகிறார் என்று ஊகிக்க முடியவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் சென்று இடது புறம் திரும்பினால் தொண்டாமுத்தூர் பாதை, ஈஷா யோகா மையம் வரை போகலாம். நேரே போனால் மருதமலை. எங்கே போவார் என்று யோசித்துக் கொண்டே இருக்கும் வேளையில்,சற்றே இடதுபுறம் சாலையை விட்டு இறங்கி காரை நிறுத்தினார் ராமு. இறங்கச் சொல்லி சைகை காட்டினார். இறங்கி நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.

வலது பக்கம் சோமையம்பாளையம் பிரிவுக்கு சற்று முன்னே மாட்டு வண்டிகளும் லாரிகளும் தண்ணீர் பிடிக்கும் வாட்டர் டேங்க் எதிரே ஒரு டீக்கடையும் ஃபேன்சி ஸ்டோரும் இருந்தன. சற்று தள்ளி ஒரு மருந்தகம். ராமு தண்ணீர் பிடிக்கும் இடத்தைத் தாண்டி சற்று தொலைவில் இருந்த ஒரு ஆலமரத்துக்குக் கீழே யாரையோ தேடுவது போல பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தேடியவர் இல்லை என்பது போல் எனக்குப்பட்டது. அருகே சென்று, “என்ன ராமு, சொல்லுங்க,” என்றேன்.

“இங்க ஒரு சித்தர் இருப்பாரு. முந்தாநாள் கூட பார்த்தேன். இப்ப காணல,” என்றார்,.யோசனையாக. அந்தப் பக்கமாக இறங்கி வந்த தேவாவும், “ஆமா முந்தாநாள் பாத்தமே,” என்றார்.

“இங்கேயா, சித்தரா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டேன். “இங்க ஒரு கொட்டாய்கூட இல்லையே, எப்படி இங்க இருக்க முடியும?”.

“கொட்டாயெல்லாம் கிடையாது அதோ அந்த மரத்தடிலதான் இருப்பாரு, நீங்க இந்தப் பக்கம் வந்து எவ்ளோ நாளாச்சு?”

“பொண்ணுக பள்ளிக்கூடம் இந்த சோமையம்பாளையம் பிரிவுக்குள்ளேதான். ஃபீஸ் கட்ட போன சனிக்கிழமைகூட வந்தேனே?”

“நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க, அப்டியே பாத்திருந்தாலும் உங்களுக்கு அவரத் தெரியாது,” என்றார் தேவா. அப்ப இவரும் சித்தர் இருக்கார்ன்னு நம்பறாரா என்று யோசித்துக்கொண்டே ராமுவைப் பார்த்தேன்.

“ஆமா உங்களுக்கு தெரிஞ்சிருக்காது. அந்த மரத்தடில கையில சில துணிகளை வெச்சுத் தச்சுகிட்டே இருப்பார். அவர் பக்கத்துலயெல்லாம் யாரும் அதிகமா கூடி இருக்க மாட்டாங்க. அபூர்வமா சில பேர் அவரப் பாத்து பேசுவாங்க. அவருக்கு சாப்பிட வாங்கி கொடுத்துட்டு தைக்கறதுக்கு ஊசியும் நூல் கண்டும் வாங்கித் தருவாங்க. யாரும் வரலேன்னா இங்கருக்கற இந்தக் கடைக்காரங்க சாப்பாடு வாங்கித் தருவங்க. ஆனா அவரு அந்த ஊசி நூல் கண்டும் சரி சாப்பாடும் சரி எல்லார் கிட்டயும் வாங்கிக்க மாட்டார். யார்கிட்டயாவது வாங்கிக்கிட்டார்னா அவங்க அவரப் பாக்க வந்த காரியம் நிறைவேறும்னு நம்பிக்கை. என்னோட சில நண்பர்களுக்கு நடந்துருக்கு. அதான் உங்களுக்கு என்ன நடக்குது பாக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன். நேத்து மழை வந்ததால மரத்துக்கு கீழேயும் சேறாயிருக்கு… பக்கத்துல எங்கயாவது இருப்பாரு, கேக்கறேன்,” என்று டீக்கடைக்கு சென்றார் ராமு. நானும் தேவாவும் கூடவே போனோம். அங்கே இருந்த ஒருவர், ஆலமரத்தடியைப் பார்த்துவிட்டு, “ஆள் அங்க இல்லையா, ஆமா மழை ஈரத்துனால வேறெங்கேயாவது போயிருப்பாரு. அப்டி கொஞ்சம் பாரதியார் யூனிவர்சிட்டி பக்கம் போய் பாருங்க, அங்க ரெண்டு மரத்துக்கு கீழயும் உக்காருவாரு,” என்றார்.

மீண்டும் கார் புறப்பட்டது. “இன்னிக்கு உங்கள இவருகிட்ட கூட்டிட்டு வந்து உங்க கையால அவருக்கு ஊசி நூல்கண்டும் சாப்பாடும் வாங்கித் தந்துடலாம்னு நெனெச்சுத்தான் வீட்லருந்து கிளம்பினேன். அப்டியே தேவாவுக்கும் இந்தப் பக்கம் வேற ஒரு வேலையிருந்ததால அவரையும் கூட்டிட்டு வந்தேன். இப்ப இவரக் காணலியே,” என்று முனகலாய்ச் சொல்லிக்கொண்டே கார் நெருங்கிக் கொண்டிருந்த அந்த இரட்டை ஆலமரத்தை நோக்கி பார்வையை செலுத்தினார். நானும் அவர் வார்த்தைகளில் பரபரப்பாகி அந்தப் பக்கம் பார்த்தேன். யாரோ இரண்டு பேர் இருப்பது போல இருந்தது. உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே காரை ஒரு யு டர்ன் போட்டு நிறுத்தி இறங்கி எங்களையும் இறங்கச் சொன்னார் ராமு. இறங்கி அருகே சென்று பார்த்ததில் நாங்கள் தேடி வந்தவர் இல்லை என்று தெரிந்தது. வேறு யாரோ ஆணும் பெண்ணுமான வயதான பிச்சைக்காரர்கள். “சரி வாங்க, மருதமலை அடிவாரம் வரைக்கும் போய் பார்த்துட்டு, அப்படியும் கிடைக்கலேன்னா சாப்பாட்டுப் பொட்டலத்தை இவங்களுக்குக் கொடுத்துருவோம்,” என்றார் ராமு.

மீண்டும் துவங்கியது பயணம், ‘இந்த சித்தர் ஒரு ஆறு மாசமாத்தான் இங்க இருக்காரு, முன்னாடி பால மலைப் பக்கத்துல பாத்திருக்கறதா சொல்றாங்க. அங்கேயும் இதே மாதிரி, கையில் துணிகளை வெச்சு தச்சுட்டேதான் இருப்பாராம். அதனாலயே இவர் பேரே தையல் சித்தர்ன்னு சொல்றாங்க. ஒன்னு ரெண்டு வார்த்தைகளுக்கு மேல பேசி யாரும் கேட்டதேயில்லை. இன்னிக்கு எப்படியும் உங்க ரெண்டு பேரையும் சந்திக்க வச்சுரலாம்னு நெனெச்சு வந்தேன் முடியாது போல்ருக்கே,” என்று சொல்லிக் கொண்டே மருதமலை அடிவாரத்தை நெருங்கி மீண்டும் ஒரு யு டர்ன் எடுத்து நிறுத்தினார். வழியில் ஒருவரும் இல்லை..

”சரி போலாம்,” என்று காரைத் திருப்பி நேரே அந்த மரத்தடி பிச்சைக்காரர்கள் அருகே சென்று நிறுத்தினோம். தயிர்சாத பக்கோடா பொட்டலங்களை அவர்களிடம் தந்தோம். அரைத் தூக்கத்தில் இருந்த அந்தக் கிழவி சட்டென்று விழித்து கை நீட்டி வாங்கிக் கொண்டார். திரும்பும்போது திடீரென்று ஒரு ஆண் குரல், “என்ன செய்யறது… யாருக்கு குடுக்கணும்னு இருக்கோ அவங்களுக்குத்தான் குடுக்க முடியும்,” என்று ஒலித்தது. ஒரு கணம் முதுகுத் தண்டு சில்லிட திரும்பிப் பார்த்தேன். அந்தக் கிழவரின் தலை குனிந்தே இருந்தது. கிழவியின் பார்வை நேராக என் பார்வையை சந்தித்தது. சிரிப்பு மின்னியபின் விலகி தூரத்தில் வெறித்தது. பேசியது யார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. நண்பர்கள் இருவருமே கூட திகைத்துப் போயிருந்தனர்.

ராமு சட்டென்று, வாங்க போலாம், என்று காரில் ஏறினார். “ரமேஷ் நீங்க அந்த நூல் கண்டையும், ஊசிகளையும் பத்திரமா உங்க டூ வீலர் பொட்டிலேயே வெச்சுக்குங்க. வாரா வாரம் வர்றப்ப ஒரு ரவுண்டு இந்தப் பக்கம் வந்து பாத்துட்டு ஆள் இருந்தா அதைக் குடுத்துருங்க,” என்றார். நான் வாயெடுப்பதற்கு முன், ”அவரைக் கண்டு புடிக்கிறது ஈஸி.. தனியா உக்காந்திருப்பாரு, கையில் எப்பவும் ஊசியும் நூலும் இருக்கும். குனிஞ்ச தல நிமிராம கையில ஏதாவது துணிய வெச்சுட்டு தச்சிட்டே இருப்பாரு. மிஸ் பண்ண முடியாது. அப்பப்ப வந்து பாருங்க,” என்றார்.

அமைதியாக திரும்பினோம். ஆனந்தாசில் ஒரு காஃபி சாப்பிடலாமா என்ற யோசனையை தேவா நிராகரித்தார். அவருக்கு அன்னபூர்ணா காப்பிதான் பிடிக்கும். அவ்வளவு தூரம் ஆர்.எஸ். புரம் வரை போய் காப்பி சாப்பிட்டுவிட்டு வர எனக்கு சோம்பலாக இருந்தது. மனதிலும் ஏதோ ஒரு சின்ன கலவரம் வந்திருந்தது. “இல்ல நான் காலனி என்டரன்சிலேயே இறங்கிக்கிறேன். அடுத்த வாரம் பாப்போம்,” என்று சொல்லி விடைபெற்றேன்.

திரும்பி வீட்டுக்கு நடக்கையில் ஆயாசமாக இருந்தது. போகாமல் இருந்திருக்கலாம். ஏமாற்றமாவது ஆகாமல் இருந்திருக்கும். ராமுவுக்கு இது மாதிரி நடப்பதில் புதுமை ஏதுமில்லை. அவர் இம்மாதிரி சித்த புருஷர்களை எல்லாம் பரிபூரணமாக நம்புபவர். அவர்களின் உத்தரவு இல்லாமல் நாம் அவர்களைப் பார்க்க முடியாது என்பார். ஆனால் அதற்காக அவங்க நம்ம வீட்டுக்கு வந்து கூப்பிட மாட்டாங்க, நாம் அவங்க இருக்கும் இடத்துக்குப் போயிட்டே இருந்தா, என்னிக்கு விதிச்சிருக்கோ அன்னிக்கு கண்ல பட்டிருவாங்க, அது இன்னிக்கேவா கூட இருக்கலாம், என்பது அவர் கோட்பாடு.

என் நிலைமை சரியாக இருக்கும்போது இம்மாதிரி பேச்சுகளுக்கு கடுமையாக எதிர்வாதம் செய்திருக்கிறேன். இதெல்லாம் மூட நம்பிக்கை என்றும் மணிக்கணக்காக தர்க்கம் செய்திருக்கிறேன். ஆனால் இன்று இருக்கும் நிலைமையில், ஏதாவது சாதகமாக எப்படியாவது நடந்தால் பரவாயில்லை என்றிருக்கையில், வாதம் செய்ய மனமில்லை. மேலும் என் நலம் நாடி இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் எதிர் வாதம் செய்யாமல் இருப்பதுதான் குறைந்த பட்ச நன்றிக்கடன் என்றும் தோன்றியது.

உள்ளே நுழைந்தவுடனேயே, ‘என்னாச்சுங்க மூஞ்சியே சரியில்லை,” என்று ஒரு விசாரிப்பு. எப்படித்தான் தெரியுதோ… விஷயத்தைச் சொன்னேன். அவளுக்கு இம்மாதிரி விஷயத்தில் பரிபூரண நம்பிக்கை இருந்தாலும், எது எப்போ நடக்குமோ அப்போதான் நடக்கும் என்கிற தெளிவுமுண்டு. அதனால், ”அதெல்லாம் வர்ற போதுதான் வரும், அலட்டிக்காதீங்க. உங்களுக்குத்தான் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதே,” என்று ஒரு மெல்லிய குத்தும் வந்து விழுந்தது. நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஊசலாட்டம் இருக்கும் அவஸ்தை இருக்கே என்று நினைத்துக் கொண்டு மௌனமாக இருந்தேன்.

அந்த ஆகஸ்டு கழிந்து செப்டெம்பர் அக்டோபர் என்று இரண்டு மாதங்கள் சென்றன. ஒன்றும் வித்தியாசமாக நிகழவில்லை. வார இறுதிகளில் வழக்கம் போல் ஊருக்கு வரும்போது சித்தர் இருக்கும் பக்கம், அவரைப் பார்க்க என்று உறுதியாக சொல்லிக் கொள்ளாவிட்டாலும், போகும்போதெல்லாம் கண்கள் அந்த வாட்டர் டேங்க் அருகே இருக்கும் மரத்தடியை பார்க்காமல் இருக்கவில்லை. வண்டியின் பெட்டியில் ஊசியும் நூல்கண்டும் பத்திரமாகவே இருந்தன. ஆனால், அவர் கண்களில் படவேயில்லை. இடையில் ராமு போன் செய்து அந்தப் பக்கம் நாலைந்து முறை போனதாகவும் சித்தர் கண்ணில் படவேயில்லை என்றும் இம்மாதிரி ஆனதேயில்லை என்றும் சொன்னார். சரி நம்ம ராசி அவருக்கும் தொத்திக்கிச்சு போல, என்று நினைத்துக் கொண்டேன்.

நவம்பர் துவக்கத்தில் அலுவலகத்தில் ஏதோ சில அசைவுகள் தெரிந்தன. மாறுதல் பற்றி சில பேச்சுக்கள் காற்றுவாக்கில் வந்தன. நடக்கவே நடக்காது என்று தீர்மானமாக கைகழுவிவிட்ட விஷயம் திடீரென்று நடந்தேறியது. ஆமாம், விரும்பிக் கேட்டு ஒரு ஆண்டு காலமாக காத்திருந்த அந்த மாறுதல் வந்தே விட்டது. கோவையிலேயே ஒரு அலுவலகத்தில் டெபுடேஷனில் பணி புரிவதற்கான உத்தரவு வந்தது. கேள்விப்பட்ட உடனேயே மனம் அன்று பார்க்கவே முடியாது போன அந்தச் சித்தரைத்தான் நினைத்தது. அவரை என்னால் பார்க்க முடியாது போனாலும், அவர் என்னைப் பார்த்திருக்கிறார் போலிருக்கிறது என்று உடனடியாக மனம் சொல்லியது. மாலை வீட்டுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு வைத்த அடுத்த நிமிடமே ராமுவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். நான் நினைத்தவாறே அவரும் சொன்னார். “பாத்தீங்களா, நாம அவரப் பாக்கறது முக்கியமில்லீங்க. அவர் நம்மள பாத்திருக்காரு, அதான் முக்கியம். ஆனா அது நடக்கறதுக்கு நாம அவர் பக்கம் போகணும் இல்லீங்களா?” என்ற அவர் குரலில் உற்சாகம் கொப்பளித்தது. உடனடியாக ஒப்புக் கொண்டேன். என் மனமுமே அந்த வகையில்தான் நினைத்துக் கொண்டிருந்தது.

ஊருக்குத் திரும்பி புது வேலையில் கவனம் போய்க் கொண்டிருந்தாலும், வார இறுதி நாட்களில் கல்வீரம்பாளையம் வரை ஏதோ ஒரு காரணம் வைத்துக் கொண்டு போய் சித்தரை தேடிக் கொண்டேதான் இருந்தேன். அந்த ஆண்டும் கழிந்து புத்தாண்டும் வந்து ஜனவரி போய் பிப்ரவரி மார்ச் இறுதி என்று ஆனபோது, வேலைப்பளுவின் அழுத்தத்தில், சனி ஞாயிறும் ஆபிஸ் போகத் தொடங்கியதில் சித்தர் ஞாபகம் சற்று மங்கித்தான் போனது. அந்தப் பக்கம் போகவும் கூடவில்லை. ஆனால், வண்டியின் பெட்டியில் புத்தகங்களையோ வேறு ஏதாவது பொருட்களையோ வைத்தும் எடுக்கையிலும் அந்த நூல்கண்டும் ஊசியும் இருந்த பொட்டலமும், திரும்பக் கட்டாத ஒரு கடன் போல மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

ராமுவுக்கு போன் செய்து கேட்டதில், தானும் அந்தப் பக்கம் போய் சில மாதங்களாகிவிட்டது என்றார். கடைசியாக போனபோதும் சித்தர் அகப்படவில்லையென்றார். “அவர் இமயமலைக்குப் போயிருப்பாருங்க. சரி, இப்ப குருந்தமலைக்குப் பக்கத்துல வேறொரு ஆளு வந்திருக்காருங்க, அவரும் சித்தர் மாதிரிதான் தெரியுது. பௌர்ணமிக்கு பௌர்ணமி இருந்த இருப்புல சடார்ன்னு காணாம போயிடுவாராம், திருவண்ணாமலை கிரிவலம் போயிடறதா சொல்றாங்க. அவரை ஒருக்கா பாக்கலாம் வர்றீங்களா? அவங்களை எல்லாம் பாத்தாலே நல்லது, வர பிரச்சினையும் வராம போயிடும்,” என்றார். எனக்கு சுவாரசியப்படவில்லை நேரமும் இல்லை. இல்ல ராமு, இந்த மார்ச் ஏப்ரல் முடியட்டும் அப்புறம் வரேன், என்று சொல்லிவிட்டேன். “சரி ஆனா ,அந்த ஊசி நூல்கண்ட பத்திரமா வையுங்க, அந்தப் பக்கம் போகும்போது கண்ணுல பட்டா குடுத்துருங்க,” என்று சொல்லி ராமு பேச்சை முடித்தார்.

ஏப்ரல் மத்தியில் அலுவலக கெடுபிடிகள் கொஞ்சம் தளர்ந்து ரிலாக்ஸ்சாக இருந்தேன். அன்றாட வாழ்க்கையில் எல்லாம் மெல்ல மெல்ல அதனதன் இயல்பில் திரும்பி வந்து ஒழுங்கமைத்துக் கொண்டு விட்டிருந்தன. உள்ளூர் நண்பர்களிடமும் விட்ட இடத்திலிருந்து சந்திப்புகள் தொடர்வது என்று பழைய பாதையை வாழ்க்கை திரும்ப அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை கூடும் நண்பர்களில் ஒருவரான மகேந்திரனுக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வீடு திரும்பி ஒரு மாதம் ஆகியிருந்தது. வேலைப்பளுவில் அவரை மருத்துவமனை சென்று பார்க்க முடியாமல் போய்விட்டது. அவர் வீடும் சோமையம்பாளையம் செல்லும் வழியில்தான் இருந்தது. அதை நினைக்கும் போதே மீண்டும் சித்தரின் ஞாபகம் மனதில் எழுந்தது. சரி, அதான் அவருக்கான பொருள் பொட்டிலதானே இருக்கு கண்ணுல பட்டா கொடுப்போம். ஆனா இவ்ளோ நாள் கண்ல படாதவரு இப்பவா படப்போறாரு, என்று நினைத்துக் கொண்டே மகேந்திரனைப் பார்த்துவிட்டு வர கிளம்பினேன்.

ஞாயிற்றுக்கிழமை கூடுகைக்கு வந்திருந்த இளம் நண்பர் சூர்யாவும் கூடவே சேர்ந்து கொண்டார். போகும் வழியில், அந்தத் ஆலமரத்தடியை நோட்டம் விட்டதில் யாரும் இருந்த மாதிரி கண்ணில் படவில்லை. தவிர முந்தின இரவு பெய்திருந்த மழையால் கொஞ்சம் சேறும் இருந்தது அங்கே. சரி அவரப் பாக்கற விஷயத்துல நமக்கு குடுத்து வெச்சது அவ்வளவுதான், என்றெண்ணியவாறே மகேந்திரன் வீட்டுக்கு போனேன். மிகப் பலவீனமாக காட்சியளித்த அவரைப் பார்க்கவே அதிர்ச்சியாக இருந்ததது. ஏதோ பேசி அவரைத் தேற்றினோம். கிளம்பும் வேளையில், நேற்றுதான் ராமு போன் செய்து விசாரித்ததாகச் சொன்னார். அந்த சித்தர் பற்றி இவரிடமும் ஏதாவது சொல்லிருப்பாரோ என்று கேட்டேன். ஏதும் இல்லையே, என்றார். பின் நான் அவர் பற்றிச் சொன்னேன். “நான் இதுவரை அவரைப் பாக்க முடியல, ஆனா பார்க்க நெனச்ச காரியம் நல்லவிதமா முடிஞ்சது. நீங்களும் மெல்ல அந்தப் பக்கமா போனீங்கன்னா, பாக்க முயற்சி செய்யுங்க. ரெண்டு ஊசியும் ஒரு நூல் கண்டும் வாங்கிட்டுப் போய் குடுங்க,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

திரும்பும்போது வேறு ஏதோ பேசிக் கொண்டே அந்த இடத்தை கவனமில்லாமலேயே கடந்தோம். கடந்தோம் என்றுதான் நினைத்தேன், ஆனால், என்னுள் இருந்த வேறொன்று விழிப்புடன் அந்த மரத்தடியில் ஒரு இருப்பை அடையாளம் கண்டு கொண்டது போல. அதைத் தாண்டிச் சற்று போனவுடன் சட்டென்று ஒரு மின்னலடித்தது போல அதை உணர்ந்தேன். வண்டியை உடனே நிறுத்தினேன். பின்னாலிருந்த சூர்யா அலறி விட்டான். “சார் என்ன இப்படி சடன் பிரேக் போட்டுடீங்க. நல்ல வேளை பின்னால வந்த பஸ்ஸு தூரத்துலயே இருக்கு. இல்லேன்னா…” என்று சொல்லச் சொல்ல, “இறங்கு, இறங்கு,” என்று சொல்லி அவனை இறங்க வைத்து, பெட்டியைத் திறந்து ஊசி நூல்கண்டு பொட்டலத்தை எடுத்துக் கொண்டு, “இங்கயே இரு,” என்று அவனிடம் சொல்லிவிட்டு, மரத்தடிக்கு ஓடினேன். ஆம், அங்கே அவர் இருந்தார், குனிந்தவாறே, ஒரு துணியைக் கையில் வைத்து தைத்துக் கொண்டும் இருந்தார். அந்தச் சமயத்தில் அங்கே வேறு யாருமில்லை. என் காலடி ஓசை கேட்டிருக்க வேண்டும். ஆனால், தலை நிமிரவில்லை. “சேத்துல கால் வச்சுராம, சுத்தி வா,” என்று குரல் மட்டும் வேறு எங்கோ ஒலிப்பது போல கேட்டது. அவர்தான் பேசினார் என்பதை புரிந்து கொள்ளவே எனக்கு ஒரு ஐந்து பத்து கணங்கள் ஆகிவிட்டது. அருகில் சென்று நின்றேன்.

அவரைப் பணிய வேண்டுமா என்று தெரியவில்லை. அவரது தோற்றமும் இயல்பாக பொது இடத்தில் அவரைப் பணியத் தயங்க வைத்தது. அவரும் நிமிர்ந்தே பார்க்கவில்லை. அந்தத் தயக்கம் போகாமலேயே ஊசி நூல் கண்டு பொட்டலத்தை நீட்டினேன். எப்படி பார்த்தார் என்று தெரியவில்லை. சட்டென்று கையை நீட்டி வாங்கி இடப்பக்கத்தில் இருந்த ஒரு டப்பாவைத் திறந்து போட்டுக் கொண்டார். அப்படியே சட்டென்று கையில் இருந்த துணியை தோளில் போட்டுக் கொண்டு அந்த டப்பாவையும் ஒரு சிறு அழுக்கு மூட்டையையும் எடுத்துக் கொண்டு எழுந்து விறுவிறுவென நான் போக இருந்த பக்கத்துக்கு எதிர்ப்பக்கத்தில் நடந்து, சோமையம்பாளையம் பிரிவுக்குள் நுழைந்து மறைந்தார். கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்து விட்டது. தோளில் யாரோ கை வைக்க, திடுக்கிட்டு திரும்பினேன். சூர்யாதான். “சார், என்னாச்சு யார் இவரு? என்ன தந்தீங்க அவர்கிட்ட?” என்று கேட்டான்.

“வா, போய்க்கிட்டே பேசலாம்,” என்று வண்டியினருகே சென்று கிளப்பினேன். செல்லும் வழியில் சுருக்கமாக விவரங்களைச் சொன்னேன். அவனுக்கு அது சுவாரசியப்படவில்லை. “இதெல்லாம் நம்பாதீங்க சார்,” என்று இறங்கும்போது சொல்லிவிட்டு போய்விட்டான்.

என் மனம் நிலை கொள்ளவில்லை. வீட்டுக்கு சென்றதும் என் முகத்தில் அது தெரிந்திருக்க வேண்டும் அவளுக்கு. “என்னாச்சு உங்க பிரெண்ட் நல்லாத்தானே இருக்காரு,” என்றாள். விஷயத்தைச் சொன்னேன். அவளது முகமும் மாறியது. “பாத்தது குடுத்தது எல்லாம் சரி, ஏன் அவரு அப்படி உடனே எந்திரிச்சு போகணும்?” என்று சிந்தனையுடன் கேட்டாள். எனக்கு தெரிந்திருந்தால்தானே நானும் பதில் சொல்ல? பின்னர் ராமுவிடம் போனில் சொன்னேன். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. “எப்படியோ பாத்துட்டீங்க, கடனைத் தீர்த்துட்டீங்க இல்ல. அதோடு விடுங்க. அடுத்த ஞாயிறு நானும் வரேன் போயிப் பார்ப்போம்,” என்று சொன்னார். நடுவில் ஆறு நாட்கள்தானே, மீண்டும் போய்ப் பார்ப்போம், என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் அந்த ஞாயிறு வருவதற்கு முன்பே வெள்ளியன்று சென்னையிலிருந்த தலைமை அலுவலகத்திலிருந்து ஈமெயில் வந்தது. நான் மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், உடனடியாக அடுத்த திங்களன்றே சென்னை அலுவலகத்தில் சேருமாறும் ஆணை வந்துவிட்டது. அப்படியே நடந்து கொள்ள வேண்டியிருந்தது. இது நடந்து இப்போது இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. என் வார இறுதி பயணங்களும், அதில் முடிந்தபோது அவரைத் தேடுவதும் தொடர்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.